சனி, 4 பிப்ரவரி, 2017

ஒரேயொரு நாள்.

ஒரு நாள்...
ஒரேயொரு நாள்..
நாம் ஒன்றுகூட மாட்டோமா
ஒற்றை ரோஜாவுடன்
அகாலமான நமது நண்பனுக்காக?

வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டாற் போலவும்
கால்கள் பிணைந்து கொண்டன போலும்
தடுமாறி நிற்கிறீர்கள்.

தினமும் கூட நடந்தவன்,
பள்ளியில் சத்தமிடாமல் சிரிக்கச் சொல்லும்
பகிடிகளுக்குச் சொந்தக்காரன்,
மாலை மங்கிய நேரங்களில்
மிதியுந்துடன் எங்களைத் தேடி வந்தவன்,
உள்ளகத்துச் சோகங்களை மட்டும்
பகிர்ந்து கொள்ள மறுத்து
தனித்தே மூச்சடங்கிப் போனவன்.

ஒற்றை ரோஜாவைத்து
அவனது பிறந்தநாளை நினைவுகள் கூட்டி
மறவாதிருக்க விழைகிறேன்.

ஓ!
உங்களது விருப்ப மறுதலிப்புப் புரிகிறது.

நான் உணர்வுகளோடு வாழுகின்றேன்;

நீங்கள் அறிவின்பால் வாழ முற்படுகிறீர்கள்.

நான் அனுபவித்து வாழுகின்றேன்;

நீங்கள் கடந்து போய்க்கொண்டேயிருக்கிறீர்கள்.

வி. அல்விற்.
12.12.2016.

* (எனது மகனின் ஆதங்கமொன்றை எனதெழுத்தில் வடித்திருக்கிறேன். இதை அவரால் மட்டுமே முழுமைப்படுத்த முடியும்)

கருத்துகள் இல்லை: