புதன், 14 ஜனவரி, 2015

அமைதி இழந்தபோது...

அமைதி கலைத்து.

விவாதங்களில் மாடி கட்டி
கூடியிருந்தனர் குதூகலமாக
தாம் விரும்பிய நிலங்களில்.
நியாயங்கள் அங்கே 
கோலோச்சியிருந்தன
அவர்கள் சட்டப்படி.

வேண்டுமட்டும் 
வாரியேற்றியவை போக
வியாக்கியானம் 
பேசிக்கொண்டு 
குந்தியிருக்கின்றனர்
மிகுதிக் காலத்தையும் 
ஓட்டி விட.

இவர்கள் 
தெரிந்தே கொட்டிய
குப்பைக் குவியல்கள் 
வீதிகளை மூடி 
நாற்றம் அடையச் செய்துள்ளன.

இவர்களின்
மேலைத்தேய மூளைகள்
வெண்ணிறப் பூச்சுடன்
மிளிர நினைக்கின்றன
மதிப்புடன்.

வளர்த்தார்கள் 
நெய்யூற்றித் தீ வளர்த்தார்கள்
தங்கள் 
யாகங்களுக்காய்.

தீ வந்து
முகத்தில் அறைகையில்
இன்று
ஓலமிட்டழுகிறார்கள்
தீ காற்றில் பரவியதென்று 
உரக்கக் கூவியபடி.

சொர்க்க பூமிகளில்
ஆனந்தம் தேடி
ஆண்டு அனுபவித்து
பிய்த்துப் போட்ட
பூமிகள் பல 
இன்று 
சன்னதமாடிக் கொண்டிருக்கின்றன
இவர்கள் ஆசைப்படி.

யாருமற்ற தெருக்களில் 
கிடந்த 
நிறமிழந்த சாட்சிகள் 
செய்தித் துணுக்குகளாகிப்
போயின இவர்களுக்கு.

தெரிந்த நியாயங்களையும்
அறிந்த சாட்சிகளையும்
கண்மூடி பார்க்க மறுத்து
செவிடராய் கடந்தவர்கள்

இன்று அவலங்கள் 
நேர் நோக்கிப் பாய்கையில்

இங்கே

அமைதி கலைந்த தெருக்களில்
வெண்தாய்
ஊர்வலம் போகிறாள்
அமைதியும்
சுதந்திரமும் வேண்டி.

வி. அல்விற்.

12.01.2015.௯

கருத்துகள் இல்லை: