வெள்ளி, 4 நவம்பர், 2016

இளவரசிகள்.

இளவரசிகள்.


‘அத்தான்’ என்று லீலா தனது கணவனை அழைத்தால் உண்மையாகவே அந்த வார்த்தையில் குழைந்திருக்கும் தேன். லீலாவுக்குப் பொய் பேசத் தெரியாது. கணவன் பிள்ளைகள் என்று  தனது குடும்பத்துக்காக முழுமையாகத் தன்னைக் கொடுத்த ஓருயிர்தான் லீலா.

யாழ் மாவட்டத்தில் வரமாராட்சிப் பகுதியில் சிரிப்பும் செல்வமும் நிறைந்த குடும்பத்தில் நான்கு ஆண் மக்களுக்கிடையே ஒரு குட்டி இளவரசியாகப் பிறந்தவள் லீலா. அவள் கேட்டது இல்லை என்றிருந்ததில்லை. நான்கு அண்ணாக்களும் பெற்றோரும் அவளை உள்ளங்கைகளிலேயே தாங்கியிருந்தனர் என்றால் அது வெறும் சொல்லுக்காகவல்ல. அவள் சிரித்தால் அந்தக் குடும்பம் சிரிக்கும், அவள் அழுதால் கலங்கும். லீலாவும் தனது பெரிய விழிகளை உருட்டி உருட்டிப் பேசி எல்லோரையும் மயக்கியபடியே வளர்ந்து பெரியவளாகி விட்டாள்.

லீலாவின் மூத்த அண்ணாவுக்குப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தபோது, அவள் கல்வி உயர்தரத்தில் அப்போதுதான் நுழைந்திருந்தாள். அண்ணாவுக்கு தனது தங்கையின் திருமணத்தை முடித்து விட்டே தான் திருமணம் செய்வதில் விருப்பிருந்தது. ஆனாலும் பெற்றோர் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவரைச் சம்மதிக்க வைத்துத் திருமணத்தை நடாத்தி முடித்தனர். லீலாவுக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. வரப்போகும் அண்ணி எப்படி இருப்பாரோ என்று. ஆனால் எந்தக் குறையுமற்ற ஒரு சகோதரி போலவே அண்ணியாரும் அவளுக்கு வாய்த்திருந்திருந்தாள். எல்லோருமே முழுத் திருப்தியோடிருக்க, உள்ளூர் நிலைமை சீரற்றுக் கொண்டிருந்தது. மூத்த இரண்டு அண்ணன்மார்களும் நாட்டு நிலைமையைக் கருத்தில் கொண்டு தமது இரண்டு தம்பிகளான சாந்தனையும், கண்ணனையும் லண்டன் நோக்கி அனுப்பிவிட்டனர். தாங்கள் பெற்றோரிடமிருந்து எப்போதுமே விலகுவதில்லையென தீர்மானம் கொண்டிருந்தனர்.
 காலம் உருண்டோடி லீலா கல்வி உயர்தரத் தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெற்றுத் தேர்ந்து பல்கலைக் கழகம் போக எண்ணுகையில் யுத்தம் இறுக்கத் தொடங்கியது.
பெற்றோருக்கோ தமது குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டும் என்கின்ற தவிப்பு. அண்ணன்மாருக்கோ தங்கையின் திருமணத்தை முடித்து அவளை வேறெங்காவது அனுப்பி வைத்து விட வேண்டுமென்ற ஆதங்கம். லண்டனிலிருக்கும் தம்பிகள் “லீலாவுக்குத் திருமணத்தை முடியுங்கோ! நாங்கள் குடும்பமாக அவர்களை லண்டனுக்கு எடுக்கிறோம்” என்றனர். லீலாவைப் பொன்னாக வைத்துப் பார்க்கக் கூடிய மாப்பிள்ளையைத் தேடினர். அதிகம் அலைச்சலை வைக்காமலேயே பக்கத்தூரிலேயே குமணன் கிடைத்தான். வீட்டிற்கு இரண்டாவது பிள்ளை. மூத்தவள் திருமணமாகி கனடாவிலே வசித்துக் கொண்டிருந்தாள். நல்ல வசதி வாய்ப்புகளோடு கூடியதும் அதைவிட முக்கியமாக அன்பான அமைதியான குடும்பமாகவும் அந்தக் குடும்பம் இருந்தது லீலா வீட்டினருக்குப் பிடித்திருந்தது. தமது இளவரசியை மகாராணியாக வைத்திருக்கக்கூடிய குடும்பமல்லவா அவர்களுக்குத் தேவையாக இருந்தது? அது அங்கே இருந்ததாக அவர்களுக்குப் பட்டது. லீலாவுக்கும் குமணனைப் பிடித்திருந்தது. ஆனால் அம்மா, அப்பா, அண்ணன்மார், அண்ணியை விட்டு விட்டுப் போவது என்பது உயிரை விடுவது போலிருந்தது. இரவு பகலாக அழுது வடிந்தாள். எல்லோரும் அழுதனர்.
அம்மா அழுதழுது சொன்னா.
“ நீ எங்கையெண்டாலும் நல்லா, பாதுகாப்பா இருந்தா அதுதானே பிள்ளை எங்கட நிம்மதி” என்று.
சாய்மனைக் கதிரையில் அமைதியாகச் சாய்ந்திருக்க முடியாமல் இரண்டு பக்கங்களிலும் நீண்டிருந்த கைபிடிகளைப் பிடித்தபடி இருந்த அப்பா  சொன்னார்,
“அங்க சாந்தனும் கண்ணனும் உன்னை வந்து அடிக்கடி கவனிச்சுக் கொள்ளுவாங்கள் தானே”.
அவரது குரல் சுருதி தப்பிக் கரகரத்தது மூத்தண்ணாவுக்குக் கண்களில் நீர் முட்டச் செய்தது. ஆனாலும் அவர்களுக்கு வேறு தெரிவிக்கவில்லை.
 அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிய, அவசர அவசரமாக உறவுகளுக்குப் பிரியாவிடை சொல்லி, லண்டன் மாநகரத்தைப் புகார் சூழ்ந்திருந்த ஒரு அதிகாலைப் பொழுதில் வந்து சேர்ந்தனர் லீலாவும் குமணனும். விமான நிலையதில் அண்ணன்மாரைக் கண்டதும் இன்னொரு பாட்டம் அழுது தீர்த்தாள் லீலா. ஆனாலும் தான் தனியே இல்லையென்ற எண்ணம் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்து.
சாந்தனும் கண்ணனும் சேர்ந்து கண்ணனின் பெயரில் ஒரு வீட்டை எடுத்திருந்தனர். அதிலே லீலாவின் குடும்பம் குடியேறியது. லீலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவளது அண்ணன்மார் அவளுடன் தங்க மறுத்து விட்டனர். “பக்கத்திலேதானே இருக்கிறோம், உனக்கு எதேனும் அவசரமெண்டால் உடனடியாக இஞ்ச நிப்போம்” என்று சொல்லி அவளை ஆறுதற்படுத்தினர். குமணனுக்கு லண்டனில் தூரத்து உறவுகள் என்று சொல்லிக் கொள்ள இருக்கும் ஒருசிலரைத் தவிர நெருக்கமான உறவுகள் என்று யாருமில்லை. வந்தவுடன் லீலாவின் சகோதரர்கள் செய்த உதவிகள் அவனுக்கு அலைச்சல் என்று எதையும் வைக்காததில் அவனுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் அவனுக்குள்ளே ஒரு குமைச்சல் இருந்து கொண்டேயிருந்தது. குமணன் யாருடனும் அதிகமாகப் பேச்சுக் கொடுப்பவனல்ல. ஆனால் தலையைக் குனிந்தபடியே அதிகமாக எல்லாவற்றையும் கவனித்துக் குறிப்பெடுத்துக் கொண்டேயிருப்பான். கவனித்ததற்கும் அதிகமாக மண்டையைக் குழப்பிக் கொள்ளுவான். ஆரம்பத்தில் லீலாவாலும் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. “அத்தான், அத்தான்” என்று அன்பைப் பொழிந்தாள். பெற்றோரைத் திடீரென்று பிரிந்து வந்தவளுக்கு அதை ஈடுகட்டும் ஒரு அருகாமை தேவைப்பட்டதில் அதைத் தனது கணவனிடமிருந்தே எதிர்பார்த்து அன்பைக் கொட்டினாள். கணவனுக்குத் தேவையானதை அறிந்து செய்தாள். அம்மா கற்றுக் கொடுத்ததை விடத் தனது கற்பனையையும் கலந்து விதவிதமாகச் சமைத்தாள். வேலையிலிருந்து சரியான நேரத்துக்குத் திரும்பாவிட்டால் பயந்துபோய்  நாலைந்து முறை தொலைபேசி எடுத்து நிலைமையை அறிந்து கொள்ளுவாள். இப்படியே அவளது வாழ்க்கை அவனைச் சுற்றியே இருந்தது. மூத்தவள் பிரபா பிறந்தபோது, லீலாவைவிட அவளது அண்ணன்மார் அடைந்த மகிழ்வுக்கு அளவில்லை. தங்கை தாயாகிப் போனாள். மருமகளுக்கு பொருட்களாக வாங்கிக் குவித்தனர் மாமன்மார்.
அப்போது குமணனுக்குள்ளிருந்த பேய் மெல்ல வெளியேறத் தொடங்கியது. தன்னை இவர்கள் யாரும் மதிக்கவில்லை என்கிற எண்ணம் உருப்பெற்றுக் கொண்டிருந்தது. லீலாவின் மீது அவளது குடும்பம் கொண்டிருந்த பேரன்பும் அவர்கள் அவளைத் தாங்குவதும் ஒருவித எரிச்சலையூட்ட, தன்னை அவர்கள் இயலாதவனாகக் காட்டுவதாக எண்ணிக் கொண்டான். இவையெல்லாம் சேர்ந்து  லீலாவின் மீது வார்த்தைகளாக வீழ்ந்து உடைந்தன. எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழத்தொடங்கினான்.
“ உம்மை ஒருநாளைக்குப் பாக்கா விட்டால் உம்மட அண்ணன்மாருக்கு உயிர் போய் விடுமோ? கண்டறியாத ஒரு பொம்பிளை நீர்….உம்மட அண்ணன்மார் இஞ்ச ஏன் ஒரே வந்து கரைச்சல்படுத்துகினம்? ஒரு யோசினை வேண்டாமோ?” என்றான்.
அவள் “எனக்கு அவையளை விட்டா வேற ஆர் இருக்கினம்? அவையளுக்கும் என்னை விட்டிட்டு இருக்க ஏலாது எண்டு உங்களுக்குத் தெரியாதே? என்றாள் அப்பாவியாக.
“ஓம், நீர் ஒராள்தான் இந்த உலகத்தில ஒரு பொம்பிளை எண்ட நினைப்பு உமக்கும் உம்முடைய வீட்டுக்காரருக்கும்” என்றான் நக்கலாக. லீலாவுக்கு இந்தச் சொற்களால்  என்றைக்குமில்லாமல் ஒரு வேதனை ஏற்பட முகம் சோர்ந்து கொண்டது. நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளது வேதனையைக் குரூரமாக அவன் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை அவன் மறைக்க முயலவில்லை. லீலாவைப் பயம் சூழ்ந்து கொண்டது. நான் என்ன தவறு செய்தேன்? எங்கே குறையிருக்கிறது? என்று சிந்திக்கத் தொடங்கினாள். முன்னரெல்லாம் அவன் பகடியாகச் சொல்லுகிறான் என்று தான் எண்ணியவைகள் அனைத்தும் அவன் வேண்டுமென்றே தன்னை மட்டம் தட்டச் சொல்லியிருக்கிறான் என்பது இப்போதுதான் அவளுக்குப் புரியத் தொடங்கியது.
கொண்டாட்டங்களில் பலர் கூடியிருந்து கதைக்கும்போது, “இவ ஒரு வானலோகத்துத் தேவதை, ஒரு தேத்தண்ணி கூட சரியாப் போடத் தெரியாது” என்று இவன் நக்கலாகச் சொல்லும்போது சிலர் சிரிப்பர், சிலர் சங்கடமாக நெளிவர், ஒருசிலரே முகச்சுழிப்பை வெளிப்படுத்துவர். அவள் தலைகுனிந்து கொள்ளுவாள். அப்போதெல்லாம் அதைப் பெரிதுபடுத்த விரும்பியதில்லை.
சில சமயங்களில் அவள் பேச்சுக்களில் கலந்துகொள்ள முயலும்போது, “நீர் பேசாமலிரும். இது உம்முடைய வீடில்லை நீர் சொல்லுறதை எல்லாரும் கேக்கிறதுக்கு” என்று எரிச்சலோடு அவளைப் புறக்கணித்து விட்டு கடைக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
காலம் நெருக்கடிகளைக் கொடுத்துக் கடந்தாலும் அவ்வப்போது குமணனுக்கு தன்னிச்சை தீர்க்க லீலா தேவைப்பட்டாள். மனம் வெறுத்து உடல் மட்டும் கிடந்தது அந்த நாட்களில். அந்த நேரங்களின் பயனாக இரண்டாவதாக விதுரன் பிறந்தான். மகள் பிரபாவையும் கையிலே பிடித்துக் கொண்டு விதுரனையும் சுமந்து கொண்டு அண்மையில் இருக்கும் கோயில்களுக்குத் தனியே செல்லுவாள் கொஞ்சம் நிம்மதி தேடி. வீட்டிலே இருந்தால் எதையாவது சொல்லிக் குத்திக் காட்டிக் கொண்டிருப்பானே குமணன்! ஒரு சிறு தப்பித்தல்தான். அதற்கும் ஆயிரம் கதை சொல்லுவான். “பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஆரைப் பாக்கப் போறாய் அங்க?”. ‘நீர்’ என்ற அழைப்பு ‘நீ’ யாகிப் பலநாட்களாகி விட்டிருந்தன.
கண்ணீர் முட்ட மௌனமாக நிற்பாள். இவனுக்கு ஏதோ மனப்பிறழ்வு இருக்கிறது என்று எண்ணிக் கொள்ளுவாள்.
தங்கையின் கண்ணசைவை வைத்தே எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் அண்ணன்மாருக்கு ஏதோ சிக்கல் என்று புரிய, அவளைப் பலமுறை பலவிதங்களிலும் கேட்டுப் பார்த்துக் களைத்து விட்டனர். அவளோ பிடிவாதமாக எதுவுமில்லை என்று சமாளித்து அவர்களை அனுப்புவதிலேயே எப்போதும் குறியாக இருப்பாள். இது தவிர அவர்கள் வீட்டுக்கு வரும் சமயங்களையும் கூடியவரை தவிர்த்தே வந்தாள். அப்படித் தவிர்க்க முடியாமல் அவர்கள் தங்கள் மருமக்களைப் பார்க்க வரும் நேரங்களில் எல்லாம், அவர்களுக்கு முன்னாலே “அத்தான், அத்தான்” என்று கணவனைச் சுற்றி வருவாள். இந்த நாடகங்கள் பல நாட்களுக்கு நீடிக்காது என்றும் அவளுக்குத் தெரிந்தேயிருந்தது. இருந்தாலும் தனது சிக்கல்களை வெளியே காட்டி குடும்பத்தை சிதைவுறச் செய்து விடுவேனோ என்ற பயம் அவளை ஆட்டிப் படைத்தது.
ஊரிலே அம்மா தகவலறிந்து அழுது புரண்டாள். “ஐயோ! என்ர செல்வத்தை நான் என்னோட வைச்சிருந்திருப்பேனே! என்று அரற்றினாள்.
பெரியண்ணா தொலைபேசியில் பக்குவமாகப் பேசினார். “பிள்ள, எல்லாத்தையும் சமாளிச்சுக் கொண்டு போ பிள்ள! …..
தொலைபேசி கைமாற, அப்பா, “பிள்ள! சுகமா இருக்கிறியே ராசாத்தி?”....குரலுடைந்து கண்ணீருக்குள் சிக்குண்டு கொண்டது. அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை.
லீலாவுக்குக் கோபம் வந்தது இங்குள்ள அண்ணாமார் மேல். என்னுடைய சிக்கலை அங்க இருக்கிற ஆக்களுக்குச் சொல்லி என்ன பிரயோசனம்? எனக்கு வாய்ச்ச வாழ்க்கையை நான்தானே வாழ்ந்து முடிக்க வேணும்? ஏன் எல்லாரையும் வேதனைப்படுத்த வேணும்? என்று எண்ணிக் கொண்டாள்.
மனவுளைச்சல்களுடன் வாழ நேரிடும் போது உடல் தானாக சிக்கல்களைக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றது. லீலாவுக்கு இப்போதெல்லாம் ஏனென்றறியாத ஒரு களைப்புத் தோன்றி விடுகின்றது. அதிக நேரம் நடக்க முடிவதில்லை. பசி குறைந்துகொண்டே போக, ஏற்கனவே மெலிந்த அவளது உடல் மேலும் கொஞ்சம் கொஞ்சமாக நிறைகுறைய அப்படியே ஒடுங்கிப் போனாள். ஆனால் அவளால் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. பிள்ளைகளைப் பற்றிய கவலையே அவளைச் சூழ்ந்திருந்தது.
அன்றைக்குப் பிரபாவின் பத்தாவது பிறந்தநாள். குமணன் தனது நண்பர்கள் சிலரை அழைத்திருந்தான். லீலாவின் அண்ணன்மாரை அழைப்பதற்கு அனுமதிக்கவில்லை. இருந்தாலும் மாமன்மார் இருவரும் கைநிறையப் பொருட்களோடு வந்து வாசலில் அழைப்பு மணியை அழுத்தியபோது, யாரோ என்று எண்ணிக் கதவைத் திறந்த குமணன் முகத்தைச் சடாரென்று திருப்பிக் கொண்டு உள்ளே போனான். லீலா வெளியே வந்தபோது இரண்டுபேருமே அதிர்ந்து போனார்கள் அவளது கோலத்தைப் பார்த்து.
“என்ன இது உன்ர கோலம்? என்னெண்டாலும் சுகமில்லையே?” என்றான் சாந்தன். இதை உள்ளேயிருந்து கேட்ட குமணன் சடாரென்று வெளியே வந்து,
“ ஏன்? உங்கட செல்லத் தங்கச்சிக்கு நான் சாப்பாடு போடுறேல்லை எண்டு சொல்லுறீங்களோ? உங்கட செல்லப்பிள்ளையை எனக்குக் கட்டிக் குடுத்திட்டு பின்னாலயும் முன்னாலயும் திரியுறீங்கள். இதைவிட நீங்கள் உங்கட செல்லத்துக்கு கலியாணம் செய்து வைக்காமலேயே இருந்திருக்கலாம்” என்று முகத்தில் அறைந்தால்போலப் பேசினான்.
சாந்தனுக்கு அவனை நாலு சாத்துச் சாத்தினால் என்ன என்ற கோபம் வந்தது. கண்ணன் தமையனைப் பிடித்துக் கொண்டான். லீலா அண்ணன்மாரைக் கண்களாலேயே கெஞ்சினாள். கொண்டுவந்த பொருட்களைப் பிரபாவிடம் கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர் நிம்மதியற்ற மனத்துடன்.
நாட்கள் அவர்களுக்கு ஊமையாகக் கடக்க, ஒருநாள் லீலாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு பெண்ணினூடாக இடியென ஒரு செய்தி வந்திறங்கியது அவர்கள் மேல். லீலாவுக்குப் ’புற்றுநோய்’. அண்ணன்மார் ஊருக்குத் தகவல் சொன்னார்கள். லீலாவைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனார்கள். நோய் அவளை முழுமையாக மூடிக் கொண்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். குமணன் லீலாவின் அண்ணாக்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. சாந்தனும் கண்ணனும்,
“ நாங்கள் எவ்வளவெண்டாலும் செலவளிச்சுப் பாக்கிறோம், வேற இடத்துக்கு கொண்டு போவோம்” என்று கெஞ்சினார்கள். குமணன் சம்மதிக்கவில்லை. “அதெல்லாம் நான் பாக்கிறன்” என்றான். லீலா படுக்கையிலிருந்தபடியே வாசலில் அண்ணாக்களை எதிர்பார்த்திருந்தாள்.  பிள்ளைகளை ஒருதடவை குமணன் கூட்டிக் கொண்டு வந்தான். அவ்வளவுதான். அவள் தன்மீதே நம்பிக்கையற்றுப் போயிருந்தாள்.
நாட்கள் மாதங்களாகி ஐந்தைக் கடத்தியிருந்தன. மருந்துகளின் வீரியத்தில் முடிகள் உதிர்ந்து, எலும்புகள் துருத்தியபடி தெரியும் தனதுருவத்தை கழிவறைக்குப் போய்வரும் போது பார்க்கையில் அவளுக்கே பயமாக இருக்கும். இப்போதெல்லாம் கழிவறைக்கு எழுந்து போவதே இயலாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. தனது பிள்ளைகள் அனாதைகளாகி விடுவார்களோ என்ற பயம் நோயின் வேதனையைவிடப் பெரிதாகவிருந்தது. தன்னுணர்வு மங்குவதற்குள் அண்ணன்மாரிடம் தனது குழந்தைகளைக் கொடுத்துவிட வேண்டுமென விரும்பினாள். அதற்கான வசதியை குமணன் ஏற்படுத்தித் தரப் போவதில்லை என்றும் அவளுக்குத் தெரியும். எனவே வேறுவழி தேட முடிவெடுத்துக் கொண்டாள். காலைப்பார்வைக்கு வரும் மருத்துவர் ஒரு பெண். மிகவும் அன்பாகப் பேசுவார். இவள் சொல்லுவதைக் கூர்ந்து கேட்டுப் புரிந்து கொள்ளுவாள்.
லீலா அன்றுமாலை கணவன் வந்தபோது, “டொக்ரர் என்ன சொன்னவர்?” என்று தெரியாதது போலக் கேட்டாள். அவன் வெறுப்போடு, “அவை என்னத்தைச் சொல்லுறது? அவங்களாலை ஏலக் கூடியதைச் செய்யுறாங்கள், இனிக் கடவுள் விட்ட வழி” என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமல். அவள் எதுவும் பேசவில்லை.
அடுத்தநாள் காலையில் அந்த மருத்துவர் வந்தபோது, லீலா அவளது கையைப் பிடித்துக் கொண்டாள். தனது தமையன்களின் முகவரியைக் கொடுத்து அவர்களைப் பார்க்க விரும்புவதாகவும், அதுவே தனது இறுதி ஆசையாகும் என்றும், கணவன் அவர்களை வர விடாமல் தடுப்பதாகவும் கூறினாள். மருத்துவருக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை. அவளது கணவன் குமணனிடம் லீலாவின் வாழ்நாட்கள் மிகச் சொற்பமே என்று சில நாட்களுக்கு முன்னரே அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் லீலா அவளைக் கெஞ்சியது வியப்பளிக்க, அவர்களது குடும்ப நிலைமை புரிந்து போனது.
லீலாவுக்கு ஆறுதலும் உறுதியும் அளித்துவிட்டு வெளியே வந்து அவள் கொடுத்த இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு நிலைமையைத் தெரியப்படுத்தினாள். சாந்தனும் கண்ணனும் கலங்கிப் போய் ஓடிவந்தபோது, அங்கே லீலா என்ற பெயரில் ஓரெலும்புக்கூடே கண்களில் கொஞ்சம் நம்பிக்கையைத் தேக்கி வைத்துக் கட்டிலில் கிடந்தது. அண்ணன்மார் வாய்விட்டு அழுதனர். லீலாவுக்கோ தான் கடைசியாகவேனும் அண்ணன்மாரைப் பார்க்க முடிந்ததே என்ற மகிழ்ச்சி.
“என்ர பிள்ளையளைக் கை விட்டிடாதையுங்கோ அண்ணா! அதுகளைக் கவனமாகப் பாருங்கோ! என்று கலங்கினாள்.
கண்ணன், “உனக்கு ஒண்டும் நடக்காது, எல்லாம் சரிவரும்” என்று அவளைத் தேற்ற எண்ணித் தோற்றுப் போய் அழத்தொடங்கினான்.
அதற்கடுத்த நான்கு நாட்களில் எல்லாமே முடிந்து போனது. லீலா என்ற இளவரசி சாம்பலாகிப் போனாள்.
வீடுதேடி வந்தவர்கள் அண்ணன்மாருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் மாமன்களின் கைகளில் இருந்தனர்.
குமணன் மௌனமாகச் சுற்றிக் கொண்டிருந்தான் எல்லாவற்றையும் கொஞ்சம் ஆறப்போட்டு விட்டு, தனது நீண்ட நாள் காதலியுடன் புதுவாழ்க்கையைத் தொடங்கும் சிந்தனையுடன்.


நன்றி ‘காற்றுவெளி’ சஞ்சிகை.


வி. அல்விற்.
12.09.2016.