வெள்ளி, 21 டிசம்பர், 2012

தொலைநோக்கு??

நேர எழுப்பி சிணுங்க நித்திரை கலைந்த பரிமளத்துக்கு காலையா, மாலையா,வேலைநாளா, அல்லது விடுமுறைநாளா என்று சில கணங்கள் குழப்பமாயிருந்தது. இயந்திர வாழ்க்கைக்குள் பழக்கப்பட்டு விட்ட மூளையின் செயல்பாடு அதனையே சுற்றி வருவது இயல்பாயிருக்கிறது. மெதுவாக கைகளால் தடவி மின்விளக்கைப் போட்டு திகதியையும் நாளையும் பார்த்து விட்டு,  இரவு படுக்குமுன் நேர எழுப்பியை நிறுத்தாமல் விட்டதற்காக தன்னைத்தானே நொந்து கொண்டாள். கட்டிலுக்கு நேரே இருந்த நாட்காட்டி சனிக்கிழமையை சுட்டியது. விளக்கை அணைத்து விட்டு போர்வையைத் தலை வரை இழுத்துப் போர்த்துவிட்டு, விட்ட தூக்கத்திலிருந்து தொடர முயற்சித்தாள். சரிந்தும், புரண்டும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு நித்திரையை வரவழைக்க முயற்சித்தும் பயனின்றிப் போனது. கோபத்தோடு போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தாள். அம்மா சமையலறையில் சத்தமின்றித் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். இவளைக் கண்டதும் ஏன் பிள்ளை நேரத்தோடை எழும்பிட்டாய் கொஞ்ச நேரம் படுத்திருந்திருக்கலாமே என்றாள். இல்லை அம்மா, அலார்ம் நிப்பாட்ட மறந்திட்டன்; அது வழமை போல எழுப்பிட்டிது என்றாள். சரி தேத்தண்ணீர் போடுறன் வா குடிப்பம்  பிள்ளை என்றாள் தாய் திலகம். காலைச்சாப்பாட்டுக்கு மற்றவர்கள் எழும்பும் வரை காத்திருக்க வேண்டும். விடுமுறை நாட்களில் எல்லோரும் சேர்ந்து உணவருந்துதல் அந்த வீட்டு எழுதாச் சட்டம்.பல் விளக்கி முகம் கழுவி விட்டு வந்து தாயும் மகளும் தேநீர்  சேர்ந்து குடிக்கத் தொடங்கினார்கள். திலகத்துக்கு மகளைப் பார்க்க யோசனையாக இருந்தது. பரிமளத்துக்கு இருபத்தேழு வயதாகிறது. ஆரம்பத்தில் படிப்பு, பிறகு வேலை  என்று அவளே தட்டிக் கழித்து வந்ததில் தகப்பனும் பிள்ளைகளின் விருப்பம் என்று திலகத்தைப் பேச விடாமல் தடுத்து விட்டார். ஆனால் இப்போது திருமணம் பேச முற்படும் போது ஏனோ சப்பைக் காரணங்களுடன் தடைபட்டுப் போகின்றது.
பரிமளம் ஒரு தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக இருக்கிறாள். மனதுக்குப் பிடித்த வேலை, கை நிறைய சம்பளம். இப்போது திருமணத்துக்கும்  பெற்றோருக்கும் தடை சொல்லவில்லை. கடந்த மாதம் ஒரு நல்ல இடம் இருக்கிறது என்று வந்தது.ஆனால் இடையில் ஏனோ எந்தவித பதிலுமின்றி கைவிட்டுப் போனது. ராசன் மும்முரமாக மகளுக்கு மாப்பிள்ளை தேடி கொண்டிருந்தான். அம்மா தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, என்னம்மா என்னையே பாத்துக் கொண்டிருக்கிறீங்கள்? தேத்தண்ணியைக் குடியுங்கோ ஆறிப் போகுது என்றாள் பரிமளம். பெற்றோருடைய கவலை நன்றாகவே புரிந்தது. அவளுக்குப் படிக்கும் போதோ அல்லது வேலை செய்யும்போதோ தனக்கொரு துணையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. மாற்றுக் கலாச்சாரத்துக்குள் கலப்பதையும்  விரும்பவில்லை.  பெற்றோர்  தனக்கோர் நல்ல வாழ்வு  அமைப்பார்கள் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது.அம்மா எல்லாம் நடக்கிற நேரம் தானாக நடக்கும் நீங்கள் தலையைப் போட்டுப் பிக்காதேயுங்கோ என்று சிரித்தாள் மகள். உனக்குப் பகிடியாக இருக்குது எங்களுக்கெல்லோ தெரியும் எங்கட பிரச்சனை. இப்ப எத்தினை கலியாணம் வந்து போயிட்டுது. உண்டை வடிவிலயும் குறையில்லை, படிப்பிலையும் குறைவில்லை, நாங்கள் குடுக்கிறதிலையும் குறை வைக்கயில்லை. ஆனாலும் ஏன் இப்பிடி தட்டுப்படுது எண்டு தெரியேல்லை.
திலகம் தனக்குள் முனகிக் கொண்டிருக்கும்போதே ராசன் சமையலறைக்குள் வந்து, என்ன எல்லாருக்கும் முதல் எழும்பி தாயும் மகளும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீங்கள் என்று கேட்கவும், தகப்பனைத் தொடர்ந்து குமுதினியும், இளையவள் வித்தியாவும் வந்தார்கள். கடைக்குட்டியான எல்லோருக்கும் பிரியமான அன்புத்தம்பி வர்ணனை எல்லோரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி எழுப்பினால்தான் உண்டு. அப்படி ஒரு செல்லப் பிள்ளை. ஆனால் வயதோ பதின்மூன்று. வித்தியா இருங்கோ வாறன் அவனை எழுப்பிக் கொண்டு என்று அவனுடைய அறைக்குள் எட்டிப் பார்த்தாள். ஆள் தெரியாமல் தலையிலிருந்து கால் வரை மூடிக் கொண்டு படுத்திருந்தான். உள்ளே வந்து ஒரு பக்கத்தால் போர்வையை  இழுக்க கால்கள் தட்டுப்பட்ட, மற்றப் பக்கத்தால் வந்து, நாங்கள் எல்லாரும் சாப்பிடப் போறம்  எழும்பி வா என்றாள். போர்வைக்குள்ளால் இருந்து  நீ போ நான் வாறன் என்று குரல் மட்டும் வந்தது. கெதியாய்  எழும்பு இல்லாட்டி அக்கா தண்ணியோட வருவா என்று சொல்லவும், பாய்ந்தடித்து எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
வீட்டிலே என்ன நடந்தாலும் அதை சாப்பிடும் நேரம் பகிர்ந்து கொள்ளுவது அங்கு வழக்கம். அன்றைக்கு குமுதினியே பேச்சை தொடங்கினாள். "போனமுறை அக்காவுக்குப் பேசி வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்னவாம்? ஒரு பதிலும் சொல்லாமல் இருந்தால் நாங்கள் என்னெண்டு விளங்கிறது?" "அதுதானே எங்களுக்கும் விளங்காமல் கிடக்கு, வாய் திறந்து என்ன சிக்கல் எண்டு சொன்னால்தானே நாங்களும் அதைப் பற்றி யோசிக்கலாம்" இது திலகம். ராசனுக்கு அவனுடைய தூரத்து உறவான வாணன் இது பற்றி கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கதைத்தது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. பிள்ளைகளுக்கு முன்னால் அதுபற்றிப் பேச விரும்பவில்லை. திலகத்தோடு கதைக்கவும் யோசனையாக இருந்தது. அவள் ஏற்கனவே  கலியாணம் சரிவருகுதில்லை எண்டு யோசித்துக் கொண்டிருந்தாள்.கணவனின் முகம் பாறிச் சிந்தனைக்குள் போனதைக் கண்டுகொண்ட திலகம், என்னப்பா யோசிச்சுக் கொண்டிருக்கிறியள் என்று உலுப்பினாள். அவன் தன்னிலைக்கு வந்து இப்ப என்ன இந்தக் கலியாணம் இல்லாட்டில் இன்னொண்டு சரி வரும்தானே! சும்மா இதுகளைத் திரும்பத் திரும்பக் கதைச்சுக் கொண்டிருக்காமல் உங்கடை அலுவல்களைப் பாருங்கோ! என்றான். திலகம் கணவனை உற்றுப் பார்த்தாள். அவன் ஏதோ மறைக்கிறான் என்று தோன்றியது. பிள்ளைகளுக்கு முன்னால்  காட்டிக் கொடுக்காமல் தனியே கதைக்கலாம் என்று அப்போதைக்குப் பேசாமல் இருந்தாள்.  அக்காவுக்கு இப்பவே இருபத்தேழு வயதாயிட்டுது. ரெண்டு வருசமா நீங்களும் மாப்பிள்ளை பாக்கிறியள் அக்காவுக்கு வயதுதான் கூடிக் கொண்டு போகுது மாப்பிள்ளை வாற   மாதிரித் தெரியேல்லை என்றாள் குமுதினி. வர்ணன் அவளைப் பார்த்து சிரித்து விட்டு மூத்த தமக்கை பரிமளத்தைப் பார்த்து, "ஏனக்கா உங்களுக்கு உங்களோடை வேலை செய்யிற ஒருவரையும் பிடிக்கேல்லையோ?" என்று சொல்ல அவள் கையை ஓங்கி அவனை அடிக்குமாப் போல் வந்தாள். அன்றைய  பகல் கலகலப்பாய்க் கழிந்தது.
எப்ப இரவு வரும் என்று பார்த்துக் கொண்டிருந்த திலகம், சாப்பாட்டை முடித்து பிள்ளைகள் எல்லாரும் நித்திரைக்குப் போன பின்னர் ராசனைப் பிடித்துக் கொண்டாள். என்னப்பா யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்? என்னெண்டு சொல்லுங்கோ என்று கேட்க, முதலில் ஒன்றுமில்லை என்று மறுத்துப் பார்த்தவன், பிறகு அவளுக்கும் தெரிந்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டு உண்மையைச் சொன்னான். இஞ்சை எங்கடை ஆக்களுக்கு கொழுப்பு நல்லா ஏறிப் போச்சு. நானும் முதல்ல சும்மா ஏதோ சில்லறை காரணங்களால  தான் கலியாணம் தட்டுப் படுகுது எண்டு நினைச்சுக் கொண்டிருந்தனான். ஆனால் விசாரிச்சுப் பாத்தாப் பிறகுதான் தெரியுது இதுக்குப் பின்னால வேற ஒரு தூர நோக்குப் பார்வை மாப்பிள்ளை பகுதிக் ஆக்களட்டை இருக்கு எண்டு; மூத்தவள் பரிமளத்தைக் கட்டினால் வாற மாப்பிள்ளயின்ர தலையில மற்ற இருக்கிற ரெண்டு பெம்பிளப் பிள்ளயளின்ர பொறுப்பும் விழுந்திடுமாம், எங்களுக்கும் வயசாச்செல்லோ! தற்செயலா எங்களுக்கு ஒண்டு நடந்திட்டால் எங்கடை குடும்பப் பொறுப்பெல்லாம் மூத்தவளைக் கட்டுகிற மாப்பிள்ளைக்கே வந்து சேந்திடுமாம். அதால இப்ப கலியாணத்துக்குப் பெம்பிளை தேடுகிற அநேகமான புத்திரனைப் பெத்தவையள் பெம்பிளைப் பிள்ளையள் இல்லாத பொறுப்புகள் வந்து சேராத இடமா பாத்து விவரமாத் தேடுகினம்.
ராசன் சொல்லச் சொல்ல கண்களை விரித்துக் கேட்டுக் கொண்டிருந்த திலகத்துக்கு சிரிப்புத்தான் வந்தது. நானும் என்னவோ ஏதோ எங்கட பிள்ளையில ஏதேனும்  குற்றம் பிடிச்சவையோ எண்டு பயந்திட்டனப்பா; இதுதானே இப்ப எங்கட சனத்தின்ர பிரச்சனை? பட்டும் பட்டும் திருந்தாதுகள்  எங்கட சனம். காசோட காசு சேக்கிறதுக்கு ஒரு பிள்ளையாயிருந்தால் முழுசா வறுகலாமெல்லோ! உப்பிடியான இடத்தில குடுத்துப் போட்டு வாழிற நிம்மதியில்லாத வாழ்க்கை அவளுக்கு வேண்டாம். சரி விடுங்கோ! எங்கட குடும்பமறிஞ்சு, பிள்ளையின்ர குணமறிஞ்சு கட்டாயம் நல்ல ஒரு இடம் வரும்.
அதுவரை பெற்றோரின் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த வித்தியா, அக்காவின் அறையை நோக்கி ஓடிப் போனாள். கொஞ்ச நேரத்தில் நாலு பேருமாகச் சேர்ந்து தமிழர் மனோநிலையைப் பற்றிப் பேசி  சிரிக்கப் போகிறார்கள்.

வரம் ஒன்று வேண்டி....

வரம் ஒன்று வேண்டி தவமிருக்கிறேன்
கோடி கொட்டிக் கொடுக்க வேண்டிலேன்
பொன்னை குவித்துத் தரவும் வேண்டிலேன்
சாமரம் வீசும் வாழ்க்கையும் வேண்டிலேன்
பதவிக்கால் வேண்டியும் வேண்டிலேன்
புகழ் முடி தலைமேல் என்றுமே வேண்டிலேன்
உள்ளபடி தலை சாய்த்தால் உறங்கிப்போகும்
மன அமைதி ஒன்று வேண்டி
தவமிருக்கிறேன்...

இனி ஏதுமில்லை!

மேனிதனில் ஏறி
பவனிவர களித்திருந்தாய்
ஏலேலோ பாட்டுவர
மலர்ந்து சிலிர்த்திருந்தாய்

கதிரவனின் இளஞ்சூட்டில்
தகதகத்தாய் குமரியாய்
திங்களது பட்டொளியில்
குளிர்ந்து மனமகிழ்ந்தாய்

பாய் விரித்து வந்து நிலம்
கவர்ந்தவரை சுமந்தாய்
மேவி நின்ற அவாவில் உன்
மேலேறி சென்றவர்
குற்றங்கள் சகித்தாய்

அடிமைகள் பயணிக்கையில்
அவர் கண்ணீரை ஏந்தினாய்
வீரத்துக்கும் இடம்கொடுத்து
வில்லங்கத்துக்கும் துணைபோய்
மௌனித்திருந்தாய்!

தாங்கும் வரை தாங்கி
தரை பார்த்து நின்றவளை
உலுப்பியது யாரங்கே
நளினச் சிரிப்பலை அன்று
பேயாய் வெறி கொண்டதேன்

கால் தொட்டுச் சிலுசிலுத்தவள்
பொங்கி உயர்ந்ததேன் 
கொட்டிக் கொடுத்து
குதூகலமாய் வாழ வைத்தவள்
கொடூரமாய் வாரி
விழுங்கிக் கொண்டதேன்

உன்மேனியில் மயங்கியோர் அன்றுன்
கோரமுகம் கண்டு ஒலமிட்டதை
கண்டும் கணக்கிடாமல்
அமிழ்த்தி அடக்கிட்டாய்
அடுக்குமா உனக்கிது
தாய் என்றுனை அழைக்க
இரக்கமில்லா இதயத்தவளாய்
முழுதாய் விழுங்கிட்டாய்

உன் வாசல் மண்ணில்
சாய்ந்திருந்து கதை பேசினோர்
பைத்தியமாய் தம் உறவுதேடி
அதே வாசலில் அலைகின்றனர்
தகவல் ஏதும் தருவாயோவென
ஏங்கித் திரிகின்றனர்

நடந்து களைத்து
ஓடித் துவண்டு
ஏதிலியாய்த்  திரிந்தவரில்
நீயும் உன் பங்கை
வாரிக் கொண்டாயோ 

ஏக்கமும் மாறா நினைவுச்சுழியும்
மீழவொண்ணா வாழ்க்கையும்
எமக்கென்றே விதிக்கப்பட்ட ஒன்றா
இன்னொருதரம் பொங்காதே!-நீ
தந்ததை சரிசெய்ய.....
இன்னுமே முடியவில்லை

புண்பட இனி இடமேயில்லை
வாரிக் கொள்ளவும் இனி
எதுவுமேயில்லை!!

பொங்கிச் சீறியதேன்?

அள்ளி அள்ளிக் கொடுத்தாய்
அண்டியோரை வாழ வைத்தாய் 
அரவணைத்துக் காத்தாய்
துள்ளி விளையாட இடமளித்தாய்

உன் மடியில்
மூச்சடைத்து மூழ்கி
மேலெழுந்து மகிழ
செல்லச் சிணுங்கலுடன்
தள்ளி விட்டுக் கலகலத்தாய்

மல்லாக்காய் மிதந்திருந்து
நிர்மலமாய் .....
நிலாப் போகும் வழியை
இரசிக்க விட்டாய்

கால் நனைத்து தரையிருக்க
சிற்றலையாய் நுரையுடன்
குமரியின் நளினத்தோடு
ஓடிவந்து தொட்டு விட்டு
கண்சிமிட்டித் திரும்புவாய்

தேர்களெல்லாம்- உன்
மேனியில் பவனி வர
வழி விட்டாய்
உலாவர உல்லாசமாய்
சிரித்திருந்தாய்
நல்லதையும் சுமந்தாய்
கெட்டதையும் தாங்கினாய்

தாயன்பு மட்டுமுனக்குண்டு
என்றெண்ணியிருக்க
பொங்கியதேன் நீ!
மடி கனக்க சுமந்து தாலாட்டிய நீ
வாரி விழுங்கி கொண்டதேன்

குமரிச் சிணுங்கல்  மறந்து
பேயாய் ஆடியதேன்
அன்னையாய் கட்டியனைத்தவள்- பல
அன்னையரை சுருட்டிக் கொண்டதேன்
தந்தையரைக் காவு கொண்டதேன்

கண் முன்னே குடும்பமாய்
வெறி கொண்டு அமுக்கியதேன்
உறவுகளைப் பிரித்து
மகிழ்ந்ததேன்

அகதியாய் அலையும் உன்
குழந்தைகள் நிலை கண்டும்
நீயுமா சேர்ந்து கொண்டாய்
எமை அழிக்க
என்ன செய்தோமுனக்கு

பார்  இன்றுன்  நிலையை......
உனைப் பார்த்து ......
இரசிக்க முடியவில்லை
கால் நனைக்க
நெஞ்சு தயங்குகிறது
அருகில் வர பயமாயிருக்கிறது

நீ சேர்த்துக் கொண்டவர் உறவுகள்
நிறை வலியுடன்
பிணமாய் வலம் வருகின்றனர்
உன் கரை மணல் வாரி
திட்டி  ஆறுகின்றனர்

வெறித்தபடி தூரத்தே நின்று
உறவு தேடி அலையும்
உனைக் காதல் கொண்ட மனிதர் பார்!
நீ வாரிக் கொண்டதை
திருப்பித் தருவாயோவென
மனம் கலங்கி தவிக்கின்றனர்

இனியொரு தரம் குமுறாதே
தாங்க முடியாது
நொந்தது போதும்
அன்னை யுனக்கிது அடுக்காது
அமைதியாய் இருந்து கொள்
வாழ விடு எம்மையும்!
இல்லையேல்  தனித்திருப்பாய்!

வியாழன், 13 டிசம்பர், 2012

தெரிவு.

மீண்டும் மீண்டும்..
எத்தனை தடவை...
விழ விழ எழுந்தோம்
வீறு கொண்டெழுந்தோம்
விழுப்புண் ஆறுமுன்
வீச்சமாய்  எழுந்தோம்
சுருக்கிட்டு அழுத்தியும்
திமிறியெழுந்தோம்
அடக்க இது காளையல்ல
உணர்வு!!
நீதி கேட்கும்  உணர்வு!
பரம்பரை தேடும் உணர்வு!
நிலம் காக்கும் உணர்வு!
இனம் காக்கும் உணர்வு!
மொழி காக்கும் உணர்வு!
இருப்பும் அடையாளமும்
தொலைய விடா உணர்வு!
குட்டியை மாடியிலிறுக்கும்
பாதுகாப்புணர்வு
விலங்குக்கே  இருக்குமென்றால்....
அறிவெனும் கோலால்
போர் நடத்தும் மனிதா!
தடுப்பதும் பெறுவதும்
உன் உரிமை
உன் கடமையும்...
எத்தனை தடவை
இன்னும் விழுவாய்....
நரிகள் ஊளையிடும்
நாய்கள் குரைக்கும்
ஓலங்கள் காதடைக்கும்
அவலங்கள் நெஞ்சடைக்கும்
விழுவாயா??
அது நடந்தால்...
நீ அடிமை
தாண்டினால் வரலாறுனக்கு

புதன், 12 டிசம்பர், 2012

பூனை!!

சின்னதும் பெரிதுமாய்
தொல்லைகள்.....
காலடிக்கிடையில் இடறுகின்றன
மேலே விழுந்து புரள்கின்றன 
கண்டதைக் கடித்து விஷமேற்றுகின்றன
தலைமேல் பாய்ந்து வெறுப்பேற்றுகின்றன
கிடைத்த சந்துக்குள் புகுந்து கொள்கின்றன
புகுந்த ஓட்டைகளைப் பெரிதாக்க முனைகின்றன
சிறிது சிறிதாக தெரிந்து சேமிக்கின்றன 
அசிங்கம் செய்து அசுத்தப் படுத்துகின்றன
பார்வையில் அருவெருப்பூட்டுகின்றன 
கிட்டே வந்தால் குதிக்க வைக்கின்றன
தாங்க முடியவில்லை....
என்ன ஒரு துணிச்சல்!!
மென்மைத் துரத்தல்கள்
"கீச் கீச்" ஒலியுடன்
எள்ளி நகையாடப்படுகின்றன
மீண்டு வந்து அலைக்கழிக்கின்றன
பாஷாணங்கள் பழக்கப்பட்டு விட்டன
என்ன செய்யலாம்
கை பிசைய முடியாது
எல்லாவற்றையும் அரித்து (ஆடையின்றி)
அம்மணமாகும் நிலை வரும் வரை
கை பிசைந்து நிற்க முடியாது

பூனைதான் வேண்டும் - இந்த
எலித் தொல்லை நீக்க

செவ்வாய், 11 டிசம்பர், 2012

வாய் வீச்சில் வீரரடி



வாய் வீச்சில் வீரரடி - இவர்
நெஞ்செங்கும் வஞ்சமடி

வான் திறந்து பால் பொழிகின்றது என்பர்
பூகம்பத்தில் பன்னீர் கொப்புளிக்கின்றதென்பர்
தேனூற்று தெருவில் பாயுதென்பர்
தெவிட்டாதது தம் சொல்லுரை  என்பர் ( வாய் வீச்சில் வீரரடி...)

பொய்யுரைத்து சிறு நெருப்பூட்டுவர்
தந்திரக் கதையால் தடுமாற்றம் வரவைப்பர்
தெள்ளமுதில் நஞ்சைக் கலந்தூற்றுவர்
தெரியாமல் சிறு நெருப்பூட்டுவர் (வாய் வீச்சில் வீரரடி...)

வீரம்செறி  பரம்பரைக்கோர் வினை வைப்போர்
சிறுபிள்ளை விளையாட்டாய்க்  குழி வைப்போர்
பிணக் குவியல் நடுவிலும் பேரம் பேசுவர்
மனக் கதவைக் கொஞ்சமும் திறப்பிலர்  ( வாய் வீச்சில் வீரரடி...)

வரலாறு மறந்தெமக்கு வதை செய்வர்
வழி மறித்தெமக்கு பகை செய்வர்
கோடிகள் வைக்காக் கோடிக்குள்
நாலடித் துண்டை சிந்திக்கார்! ( வாய் வீச்சில் வீரரடி...)

இரு கையைக் கண்ணுக்குள் குறிவைப்பர்
இனமானம் இழந்தொரு விதி முனைவர்
வளமான வாழ்வுக்கு தணல் வைப்பர்
இழிவாக வரலாற்றில் பதிபடுவர்  ( வாய் வீச்சில் வீரரடி...)

மிதிபட இனமொன்றும் புல்லல்ல கேட்பீர்
வழிகாட்டும் விடிவெள்ளி மறந்திடிலர் -எம்
மதி கண்டு ஏனோ பயந்திட்டார்
தலைகீழாய் தப்புகள் கீறுகின்றார் ( வாய் வீச்சில் வீரரடி...)

வெள்ளி, 30 நவம்பர், 2012

அழிந்து போகட்டும்!

படு பாவி உன்னைப் பெற்றவள்
மலடாயிருந்திருக்கலாம்!!
பூமித்தாய் மகிழ்ந்திருப்பாள்
உன் கால் பட்ட இடமெல்லாம்
கருகிக் கிடக்கும்
உன் வாய் அழுகிப் போகட்டும்
உன் நா பேச்செழாமல்
செத்துக் கிடக்கட்டும்
உன் காதுகள் அடைத்துப் போகட்டும்
கண்ணிரண்டும் குருடாகி

இருட்டிலே கிடக்கட்டும்
கையிரண்டு இழந்து நீ
அலைந்து திரிய வேண்டும்
காலிரண்டும் இழந்து
வெறும் சதைப் பிண்டமாய்
உருள வேண்டும்
நீ சாகும் நேரம்
தாகத்தால் தவித்துச் சாவாய்
தனியே யாருமின்றி
ஏங்கிச் சாவாய்
உன் உடல் விலங்கும் வேண்டாது
உருக்குலைந்து போகட்டும்
உன் சந்ததி இத்தோடு
வேரறு படட்டும்!
உன்னைச் சார்ந்த அனைத்தும்
அழிந்து போகட்டும்!
வயிறெரிந்து சொல்லுகிறேன்
உன் சந்ததி இத்தோடு நிற்கும்!

குருதி படிந்த முகங்கள்

வீரத்திலும், பொருளாண்மையிலும்
வெற்றிக் கொடி பறக்க வாழ்ந்தவோர் இனம்
உலகப் பந்தின் ஓர் இருண்ட மூலையில்
வலி தாங்கி நிற்கும்
ஓர் அவலப்பட்ட இனம்

விடுதலைக்காய் எதையும் விடாது
வீழ்ந்தும் மீண்டும்
மிடுக்குடன் எழும் இனம்
உலக முறைமைக்குள்

சுழன்றிடாததால்
அடித்து வீழ்த்தப் பட்டும்
அசையா நம்பிக்கைத் தூண்
பற்றி நிற்கும் இனம்

மீதித் தூரம் கொஞ்சமெனும்
ஆசை பற்றிக் கொண்ட இனம்
ஒவ்வொன்றாய்க் கொடுத்தும்
கொத்துக் கொத்தாய்க் கொடுத்தும்
இடிதாங்கியாய் ஏற்று
நகரும் இனம்

எத்தனை தாங்கியும்
மாறா வினம்
இன்று...
தனக்குள் மறுதலித்து மருகுவதேன்?
வேரோடு பிடுங்க இடமளிப்பதேன்?
குருடராய் தடுமாறி வீழ்வதேன்?

கண்மூடிக் கேளுங்கள்!
உங்கள் இதயத் துடிப்பை
அங்கே...
எங்களுக்காய்....
கண்மூடிய
குருதி படிந்த முகங்கள்
கண்ணீருடன் கேள்விகள் கேட்கும்.

எண்ணியது என்ன?

எண்ணியது என்ன?
நீங்கள் எண்ணியது என்ன?

என்னைத் தேட வேண்டாம் என்ற
ஒற்றைத் துண்டுக் குறிப்புடன்
உறவுகள் இழந்து
பாசங்கள் துறந்து
தேச நேசம் தேடிப் போன
கணங்களில் நீங்கள் எண்ணியது என்ன?

நோயினில் அம்மா நினைவு வந்ததா?
சோற்றினில் அக்கா நினைவு வந்ததா?
முதற் களத்தினில் அப்பா முகம் தெரிந்ததா?
கள விழுப்புண்ணில்
தலைவன் நெறி தெரிந்ததா?

களம் தந்த வாகை பெருமை தந்ததா?
பலம் தந்த கைகள் உறவு தந்ததா?
விரைந்திங்கு முடியும் எனவெண்ணி னீரா?
இல்லை முடிவோடு
மீழுவோம் எனவெண்ணி னீரா?

பாய்ந்தன்று தலை சாய்த்த நண்பன்
முகம் தோன்றி தூக்கம் இழந்தாயா?
தனிமையில் இரவோடு கரைந்தழுதாயா?
இல்லை வெறியோடு
மீண்டெழ உரம் கொண்டாயா?

விழி மூடும் தருணம் உங்கள்
எண்ணங்கள் தான் என்ன?
உறவுகள் இதயம் வருடிச் சென்றனரா?
இல்லை கண்களில் தாய்மண் முன்னின்றதா?
இல்லை உம்மை விதைக்கிறீர்கள்
என்பதை
எண்ணிக் கொண்டீரா?

மலர் வைத்து
உம்மை மனதேற்றும் நேரம்
மனம் கனக்க
கேட்கின்றோம்
எதை எண்ணிச் சென்றீர் எம் செல்வங்களே?
வெறுமை.......
பார்வையில்
செய்கையில்
சிந்தனையில்
நீழும் கணங்கள் ஒவ்வொன்றும்
நிசப்த வேதனை...
பேசினால் நன்றாயிருக்கும்
பேச்சு குளறலாயில்லாதவரை..
அதைவிட
மௌனம் சிறந்தது
என்னை இறுக்கிக்
கொல்லாதவரை...

வெள்ளி, 16 நவம்பர், 2012

மீழுதல்

மீழுதல் எத்துணை கடினமானது?
ஆசையிலிருந்து மீழுதல்
அன்பிலிருந்து மீழுதல்
பாசத்திலிருந்து மீழுதல்
பிடித்தாட்டும் அத்தனை
கண்காணும் கண்காணா அத்தனை
வதைகளிலு மிருந்து மீழ்வதை விட
அழுத்தி அலைக்கழிக்கும்
நினைவுச் சுமைகளிலிருந்து மீண்டெழுவது
எத்தனை கொடியது!

என்னினமே!

தேகம் பற்றி எரிகிறது
அனல் காற்று பேயாய் வந்து
சூழ்ந்து கொழுத்துகின்றது
பிணந்தின்னிகள் எழுந்து
கைநீட்டி இளிக்கின்றன

ஒ! என்னினமே!
சபிக்கப்பட்ட இனமாய்
ஈனப்பட்டு நிற்கின்றாயே!
இரக்கமில்லா அரக்கத்தனம்

எப்படி உன்னுள் புகுந்து கொண்டது?

நிம்மதி உனக்கில்லை
வாழ்வு உனக்கில்லை
விடிவு முனக்கில்லை
இரத்தவாடை முகர்ந்தபடி
காட்டுமிராண்டியாய்
இப்படியே நீ இருந்து விடு!

அறிவாளி என்று கூறாதே!
அதற்கும் உனக்கும் வெகுதூரம்
காட்டுமிராண்டித்தனம்
மிக நன்றாகப் பொருந்துகின்றது
அதையே போர்வையாக்கிக் கொள்!

ஞாயிறு, 4 நவம்பர், 2012

வேடம்

மரணத்தை நேசித்த
மண்ணை நேசித்தவர்
விட்ட குறைகள்
காலைச் சுற்ற பாம்பாய்
உயிர் மூச்சுக்காய்
ஏங்கும் நேரம்.......
மனிதமிழந்த மானிடம்
மௌனமாய் விரல்களால்
குறி வைத்து
வேடமிட்டு
சிதிலமாக்கி
வெருட்ட முனைகின்றது

உள்ளபடி வாழவிடு!

நாற்புறமும் வெந்த
பிணங்களின் வாடை
நாசிக்குள்ளின்னும் அடைத்திருக்க
நலிந்தொடிந்து நாயாய்
நடுத்ததெருவில் அலையும் நேரம்
ஆழப் புதைந்திருக்கும்
உடலங்களை தோண்டி எடுத்து
குதறாதே!
உயிரோடிருக்கும் பிணங்களை
உள்ளபடி வாழவிடு!
ஆத்மாக்கள் ஆசி கூறும்.

புதன், 31 அக்டோபர், 2012

வேரற விடோம்!

ஒரு குழந்தையை எல்லோரும் விரும்பும் நற்பிரஜையாக உருவாக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது? குழந்தை தாயின் வயிற்றிலிருந்தே கற்கத் தொடக்கி பின் குடும்ப உறுப்பினரிடமிருந்து கற்றுப் பின் சமூகத்துள் நுழைகின்றது. ஆக தனது ஆரம்பக் கல்வியை அது வீட்டிலேயே தொடங்கி விடுகின்றது. பெற்றோரிடமிருந்து முதற் சொற்களைப் பெற்றுக் கொள்ளுகின்றது.ஆக பெற்றோரின் பங்கு இங்கே மிக முக்கியமாகின்றது. பின் முறைசார் கல்வியை பாடசாலையில் தொடங்கும்போது ஆசிரியர், பெற்றோர், மாணவன் (மாணவி) என்ற மூன்று பகுதியினரும் சேர்ந்து செயல்பட வேண்டிய பகுதி தொடங்குகின்றது.
தமிழ் கற்பித்தல் என்னும் பகுதியை நாங்கள் எடுத்துக் கொண்டால், இங்கே "தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை" குழந்தைகளின் வயது, தேவை, கவரும் தன்மை, மொழியினூடாக எம் பண்பாட்டு விழுமியங்களை சேர்த்தளித்தல் போன்ற சிறந்த நோக்கங்களை முன்வைத்து, சிறப்பான முறையில் பாடத்திட்டங்களை அமைத்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது உலகம் முழுவதிலுமே. தனியே கேள்விக்கு விடை எழுதி அடுத்த வகுப்புக்கு ஏறுவது என்கின்ற நிலையை விடுத்து, ஒரு குழந்தை ஒரு கருத்தைக் காதால்   கேட்டு விளங்கி, அதுபற்றிய தனது கருத்தை கலந்து உரையாடி, பின் அது பற்றிய விபரத்தை தானாகவே வாசித்துப் விளங்கிக் கொண்டு பதில் எழுதுதலும் அதன் பின் பகுதியாக தன் கருத்தை தானே எழுத்தின் மூலமாக வெளிக் கொணர்தலையுமே நோக்காகக் கொண்டு கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்று நான்கு பகுதியாகப் பிரித்து கற்பிக்கப் படுகின்றது. பரீட்சை என்று வருட இறுதியில் வரும்போது எழுத்துமுறைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு என்று இரண்டு பகுதியாக குழந்தை வருடம் முழுவதும் செய்த வேலையை மதிப்பிடுகின்றார்கள்.இதிலே யாருடைய மேதாவித்தனமும் கிடையாது. அத்துடன் ஆசிரியர்களும் அடிக்கடி பயிற்சிப் பட்டறைகள் மூலம் புடம் போடப்பட்டு கற்பித்தலுக்கு அனுப்பப் படுகின்றார்கள் என்பது மிக முக்கியமான விடையம்.
இது தவிர மொழி என்பது மாற்றத்துக்குள்ளாகி வரும் ஒன்று. ஐரோப்பிய மொழிகளிலே அகராதிகள் புதிய சொற்களுடன் பதிப்பித்து வருதல் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல தமிழிலே கலந்துள்ள வேற்று மொழிச் சொற்களைக் களைந்து தனித் தமிழ் சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து பாட நூல்கள் இங்கே புதுப்பிக்கப் படவும் செய்கின்றன.
ஒரு இனத்தின் வெளிப்பாடே அதன் மொழியில் தான் தங்கியுள்ளது. இன்றைய நிலையில் நாங்கள் எமது வாழ்வையும், வரலாற்றையும் எமது குழந்தைகளுக்குக் கடத்துவது அவசியமான ஒன்று. அதுவும் நாங்கள் வீட்டிலே பேசுவது தமிழாயிருந்தால், குழந்தைக்குக் கடினம் என்றோ அல்லது முடியாது என்றோ சொல்ல முடியாது. பெரியவர்கள் நாங்கள் தான் கடினம் என்று ஒரு சாட்டை எமது சார்பிலிருந்து வைக்கப் பார்ப்போம். "ரதி" என்பவர் கூறிய கருத்துப் போல, உலக மொழிகள் அனைத்திலேயும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பயன் படுகின்றார்கள். நாங்கள் இரண்டு திருக்குறள் மனனம் செய்யச் சொன்னால் "உந்தத் திருக்குறள் இப்ப என்னத்துக்கு" என்று பெரியவர்கள் தான் கேட்பார்கள். மனனம் செய்யிறதே பிழை என்று சொல்ல வருபவர்களுக்கு ஒரு செய்தி; மனனம் என்பது ஞாபக சக்தியைத் தூண்டும் ஒரு செயல்பாடு. அந்த முறை எல்லா மொழிகளிலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. அண்மையில் இங்கு நடந்த ஒரு திருக்குறள் போட்டிக்கு நடுவராக சென்றிருந்தேன். பிள்ளைகள் திருக்குறள்களை மனனம் செய்திருந்தார்கள்; ஆனால் அதன் பொருளை தங்களது வார்த்தைகளில் விளக்கியதைக் கேட்டபோது எம்மினம் வீழாது என்ற ஒரு பெருமிதம் எனக்குள் தோன்றியது.
இதை விட பிரான்சில் தமிழ் மொழியை ஒரு மேலதிக பாடமாக உயர்தரப் பரீட்சைக்கு எடுக்கலாம் அதில் வரும் பத்திற்கு மேற்பட்ட புள்ளிகள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுடன் சேர்க்கப்படும்.எனவே இது ஒரு மேலதிக நன்மை.
உண்மையிலேயே எத்தனையோ ஆசிரிய ஆசிரியைகள் சனி, ஞாயிறு என்பதை விடுமுறையற்ற தொடர் நாட்களாகவே அர்ப்பணிப்புடன் பிள்ளைகளுடன் கழிக்கின்றார்கள். இப்படி அவர்கள் அலைவதன் நோக்கம் என்ன? வீட்டிலே படுத்து ஓய்வெடுக்க முடியாதா?
இதுவும் ஒரு எதிர்கால எதிர்பார்ப்பில் உள்ள நம்பிக்கைதான்.
குழந்தைகள் தெளிவாக உள்ளார்கள்.
நாங்கள் தெளிவாவோம்.
குற்றம் களைவோம்.
நல்லன நோக்குவோம்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

எதுவரை??

சோறு வடித்துக் கொண்டிருந்த தாரிணி வீட்டு முற்றத்திலிருந்த தனது மகனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கைகளால் மண்ணை அளைந்து கொண்டிருந்தான். கைகள்தான் செயல்பட்டதே தவிர தான் செய்யும் செயலுக்கான தெளிவு கண்களில் தெரியவில்லை. உடல் மெலிந்து  தலையை ஒரு பக்கம் சாய்த்து வைத்தபடி கால்கள் இரண்டையும் நீட்டி வைத்துக் கொண்டிருந்தான். பார்த்த  மாத்திரத்திலேயே அவனுடைய குறைபாடு புரியக் கூடியதாய் இருந்தது. எட்டு வயதுச் சிறுவனுக்குரிய செயல்பாடு எதுவும் அவனில் இல்லை. தாரிணிக்கு அவள் விரும்பாமலேயே கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வந்தது. சொல்லி அழ யாருமில்லை; அழுதும் பயனில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு கோப்பையில் சாப்பாட்டைப் போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். மகனைத் தூக்கி கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு சாப்பாட்டை ஊட்டி விடத் தொடங்கினாள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்த தன்னுடைய கைகளுக்குள் அடங்காமல் ஓடித்திரிந்த சுட்டிப் பையன், இன்று தான் தூக்கி வைத்து உணவு ஊட்டும் நிலைக்கு ஆளாகிப் போன கொடுமையை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் நொந்து கொண்டிருக்கிறாள். பரந்து பட்ட நோக்கத்தைக் கொண்டிருந்த அவள், இன்று தன்னிரண்டு பிள்ளைகளை நோக்கியே உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். சுவரில் எறியப்பட்ட பந்தாய் காவு கொள்ளப்பட்ட தேசத்திலிருந்து கணவனையும் பறி கொடுத்து விட்டு திரும்பி வந்தபோது, அண்ணா சொன்னார்: " தங்கச்சிக்குக் கலியாணம் இன்னும் ஆகேல்லை நீ இப்ப வந்தால் நாங்கள் என்ன செய்யிறது? எங்களுக்குக் கிட்ட ஒரு காணியிலை கொட்டில் போட்டுத் தாறன். இப்போதைக்கு அதில இரு பிறகு பாப்பம்".
 அவள் தனது ஒன்பது வயதான மூத்தவன் குட்டியுடனும் உடலும் மனதும் பாதிக்கப்பட்ட சின்னவனுடனும் அந்தக் கொட்டிலுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.
அவள் அவர்களிலிருந்து ஒதுங்கினாளே தவிர தன் நோக்கத்தில் இருந்து ஒதுங்கவில்லை. பிள்ளைகளோடு தன் முழு நேரத்தையுமே செலவிட்டாள். மூத்தவன் குட்டி படிப்பில் சுட்டியாயிருந்தான். தாயின் கண்ணீரைப் புரிந்திருந்தான். நல்லவர்கள் பூமியில் இன்னும் இருக்கிறார்கள் என்று உணர்த்தும் வகையில், தாராள மனம் படைத்தோர் அவளது நிலைக்கு உதவியது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. இருந்தாலும் வாய்விட்டு  உதவி கேட்க ஏதோ தடுத்தது. கிடைத்ததை வைத்து சமாளித்துக்  கொண்டிருந்தாள். ஆனால் சின்னவனுடைய மருத்துவச் செலவு எகிறியது. பெரியவன் குட்டியை அவள் இவ்வளவு சிரமத்துக்கிடையிலேயும் ஒரு தனி ஆசிரியரிடம் பாடசாலைக்குப் பிறகு படிக்க அனுப்பிக் கொண்டிருந்தாள். பாடசாலைக்கும் வீட்டுக்கும் அதற்குப்  பிறகு டியுசனுக்கும் என்று அவன் அலைவதும் அவனுடன் பயத்தில் அவளும் சின்னவனைத்  தூக்கிக் கொண்டு அலைவதும் சிரமமாக இருந்தது. அவள் சின்னவனையும் தூக்கிக் கொண்டு அலைய அவனுக்க அடிக்கடி காய்ச்சல்  வரத் தொடங்கியது.
ஒரு நாள் மாலை பாடசாலையிலிருந்து குட்டி  திரும்பியபோது, முகம் அவ்வளவு நன்றாக இல்லாமலிருந்தது. தாய் விபரம் அறிய முற்பட்டாள்.
"என்னப்பு? சுகமில்லையா?"......
"ஒண்டுமில்லை"......
தாரிணி கிட்ட வந்து நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். சுடவில்லை.வேறேன்னவாயிருக்கும்?.....
"என்னெண்டு சொன்னாத்தானே எனக்குத் தெரியும்?"
"நாங்கள் இஞ்ச வந்து நாலு வருஷமாகிது. நடந்து நடந்து நான் களைச்சுப் போட்டேன் அம்மா. எனக்கு ஒரு சயிக்கில் உங்களால வாங்கித் தர ஏலுமோ?....
 அப்பா இருந்திருந்தால் எனக்கு வாங்கித் தந்திருப்பார்.....
தாரிணிக்கு உண்மையாகவே நெஞ்சு வலித்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேச முடியாமல் இருந்தது.
"ம்ம்.... அப்பா இருந்திருந்தால் கட்டாயம் வாங்கித் தந்திருப்பார்."
"எல்லாப் பிள்ளையளும் பள்ளிக்கூடத்தாலை நேரத்தோடை வீட்டை வந்து, விளையாடி பிறகு படிக்க நேரம் இருக்கு, நான் மட்டும்தான் நடந்து வீட்டை வாறதுக்கிடையிலேயே களைச்சுப் போடுறன், ஒரு சயிக்கில் இருந்தால் நானும் கெதியிலை வீட்டை வந்திடுவன் ; டியுசனுக்கும் போய்வர வசதியா இருக்கும்".
குட்டி கள்ளமில்லாமல் தன்னுடைய ஆதங்கத்தை விளக்கினான். ஆனால் தாரிணி என்ன செய்வாள்? யாரிடம் கேட்பாள்? மகனுக்குக் கிட்ட வந்து முதுகைத் தடவிக் கொடுத்தாள்.
"பாப்பம்" என்றாள்.
மகன் அம்மாவை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவநம்பிக்கை தெரிந்தது. தாரிணி தலையைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டாள். அன்று இரவு முழுவதும் காலக் கொடுமையை நினைத்து ஆத்திரம் தீர திட்டித் தீர்த்து அழுது முடித்தாள்.
அடுத்த நாள் காலை தலையிடியுடன் தொடங்கியது. நேற்றிரவு சம்பவம் தாரிணி, மகன் இருவரையும் வெகுவாகப் பாதித்திருந்தது. மகனுக்கு சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பி விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசியவர்களிடம் சயிக்கிளுக்கான பணம் கேட்க வாய் துடித்தது. ஆனால் வார்த்தைகள் வெளி வர மறுத்தன.இன்னொருவரிடம் தன்னிலை சொல்லிக் கையேந்துவது கடினமாயிருந்தது.
இன்று மாலையிலும் குட்டி களைப்புடன் பாடசாலையிலிருந்து திரும்புவான்.......
அவனுக்கு யார் சயிக்கில் வாங்கிக் கொடுப்பார்கள்?

புதன், 24 அக்டோபர், 2012

தேடி....தேடி.....
தெளிந்து
வேகம் கொண்டெழுந்து
வாகை கண்டு
சலித்து
சுருண்டு...
மருண்டு...
கலங்கி
இன்னும் ஆழம் தேடி 
முன் தெளிந்தது
தெளியாததால்
வெளிக்கிளம்பும்
வாய் வார்த்தைகள்!
கொல்லும் பார்வை வீச்சு
சுட்டெரிக்கும் வார்த்தைகள்
புகைந்தெழும் பொறாமை
விரல் சுட்டும் வீண்கள்
அர்த்தமில்லா நகை
இவற்றுடன் சேர்த்து
உன்னையும்
விட்டெறிந்து பார்!
இப்போது
நீ ஒரு மனிதன்!
ஒன்று ஊர்ந்து வந்து
அமிழ்ந்து...
அதுவே பலவாய்
பலவும் ஒன்றாய்
விருட்சமாய்
நிமிர....
சுடுகாடே
சொந்தமாய்ப் போனது!!
பெற்ற தாய் கலங்கி நிற்க உடன்
பிறந்தவர் மௌனித்திருக்க
பொற்றமிழ் பேண நீ
பொறியாய்க் கிளம்பினாயே!
பெறு நல் செய்திக்காய்
பொறுமையாய்க் காத்து நிற்க
பெற்றதோவும் வித்துடல்
பொறுக்கவில்லையே!!!
பொறி கலங்கியுனைப்
பெற்றவள் இன்று
போக்கற்று நிற்கிறாளே!!
ஆசைக் கனவுகள்
ஆடிவரக் கண்ணிரண்டில்
ஆனந்தக் கூத்து
அற்புதமாய் கூடிவர
ஆங்கொரு
அனல்காற்று சுழன்றடித்து
அழித்தொழித்து வழித்தெடுத்து
ஆயிரம் காவியங்கள்
அள்ளித் தெளித்துப் போனதோ!!!!
ஆறாக் காயங்கள் வலியெடுக்க
மீண்டும் கிளறி ரணமாக்கி
குருதியோடும் நினைவுகள்
எம்மை விட்டகலா
காலமும்ஆற்றா
கண்ணீரும் ஆறா
நினைவுச் சுழிக்குள் அமிழ்ந்து
ஒவ்வொன்றாய் மேலெழும் தருணங்கள்
ஒவ்வொரு மீள் பிரசவங்கள்!
உயிர் கொடுத்து மீண்டெழுவதே...

குறிக்கோள்!
சோகங்கள் என்றும்
தொட்டதில்லை முகத்தில்
சொல்லில் வலிமை செயலைப் போலே
எம்பி மிதித்து மிதியுந்தில் மறைந்து பின்
காற்றாய் பறந்து ஈருருளியில்
ஈற்றில் வானம் தொட்டதிர்ந்த நேரம்
என் கண்களின் ஓரம் சிறு வெள்ளம்
எரியுண்டு பிளவுண்டு
துளையுண்டு அறுபட்டுப்
போனவை

உம் உடலங்களல்ல;
எம் மனங்கள்!
வீணா!
உம் ஈகம் என்றும் வீணா!
பரந்திருக்கும் பூமிப் பந்தின்
பசுமை நிறையோர் புள்ளிக்குள்
படபடத்துச் சிறகடித்து
பரவசமூட்டும் சிறுபுள்ளாய்
பவனி வந்த காலமது
பாழ் பட்ட யார் கண்ணோ
பட்டு நிலம் வீழ்ந்தொடிய
பகை சூழ்ந்து நகையெழுப்பி
பலியெடுத்த வெஞ்சினம்
பார்த்திருந்த விழி மடல்கள்

பதறிப் பரிதவித்து
பாரமாய் மூட மறுத்து
பாதியிரவில் இன்றும்
பீதியில் திறக்கும்

வியாழன், 18 அக்டோபர், 2012

ஊருக்குப் போக வேணும்!

தனராஜா! பெயருக்கேற்றாற்போல் ஊரிலேயே செல்வமும் செல்வாக்காயும் வாழ்ந்தது அவரது  குடும்பம். ஊரிலேயும் அருகிலேயும் பல நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம். நேரம் காலம் பார்க்காமல் சுழன்று உழைப்பவர்; உழைப்பின் பலன் தனமாய்க் கொட்டிக்  கொடுத்தது. அவர் கொஞ்சம் நியாயமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்.உதவி தேவைப்பட்டவர்களுக்குப் பார்த்துப் பாராமல் வழங்கினார்; காணிகள் இல்லாமல் தன்னுடைய காணிகளிலேயே வாழ்விடம் அமைக்க இடம் கொடுத்தார். இப்படி நல்ல விடையங்களை செய்தபடியால் தனராஜா ஊரிலே ஒரு மரியாதைக்குரிய ஆளாகிப் போனார். வெள்ளை வேட்டியும் அரைக்கைச் சட்டையுமே அவரது வழைமையான ஆடை. மெலிந்த உயரமான தோற்றம் கையில் ஒரு சுருட்டோடு காலை ஒன்பது மணியளவில் ஊரை ஒரு வலம் வருமாப்போல் கண்களால் அளந்தபடி தெருவில் நடக்கத் தொடங்கும்போது  முன்னால் வருபவர்கள் மரியாதையாக வழி விடுமாப்போல் சற்று விலகுவார்கள். ஆனால் அவரோ நின்று குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரித்துவிட்டே திரும்பவும் நடக்கத் தொடங்குவார்.  எப்போதுமே ஊர் நன்மை, முன்னேற்றம் இவற்றில் உண்மையான அக்கறையோடு செயல்படுபவர் தனராஜா.
 காலச் சுழற்சியில் இடப் பெயர்வுகள் தொடங்கியபோது கண் கலங்கிப் போனார். ஒவ்வொரு குடும்பமாக கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடியபோதும் அவர் சுருட்டுடன் ஊரை வலம் வந்தார். பெற்ற ஆறு பிள்ளைகளில் இரண்டு பேரே அவரோடு இருந்தனர். கடைசியில் அவரை கட்டாயப் படுத்தியே ஊரை விட்டுக் கூட்டிச் சென்றனர். மகள் வேணி வாழ்க்கைப் பட்ட ஊருக்கு வந்து சேர்ந்து,  ஒரு வெளிநாட்டில் வாழும் தமிழரின் வாடகை வீட்டில், ஒட்டாத நாட்களை எண்ணத் தொடங்கினர். அவருக்கு மருமகனுடைய வீட்டில் இருக்க விருப்பமில்லை. மகளாயிருந்தாலும் தள்ளி இருந்தால் சிக்கல்களையும் தூரவே வைத்துக் கொள்ளலாம் என்று அனுபவ ரீதியாகக் கண்டு கொண்டவர் அவர். வேணிக்கு  கவலையாக இருந்தது; ஆனாலும் அப்பாவின் பிடிவாதத்தை மாற்ற முடியாது என்று தெரிந்த படியால் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாட்டை செய்து எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டு வருவாள்.
வேணியின்  ஊரும் ஒரு நாள் பெயர்ந்தது. அப்பா அம்மாவுடன் வேணியின்  குடும்பமும் இன்னொரு இரவல் வீட்டில் குடி அமர்ந்தனர். இப்போது அப்பாவால் மகளைத் தனியே இருக்கச் சொல்ல முடியாத நிலைமை. நாட்கள் வெறுமனே கரையக் கரைய அப்பாவின் நிமிர்ந்த நேர் நடையில் மாற்றம் தெரிந்தது. நடையில் தள்ளாட்டமும் பேச்சில் தடுமாற்றமும் தெரிந்தது. அம்மாவுக்குப் பயமாக இருந்தது. மகளுக்கும் பயம் தொற்றிக் கொள்ள அப்பாவோடு பேச முயற்சி செய்தாள். ஆனால் அப்பா வார்த்தைகளை மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தார். நிலைமையின் தீவிரத்தன்மையை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
ஒரு நாள் இரவு அம்மா "ஐயோ பிள்ளை" என்று கத்திய சத்தத்தில் வேணியும்  மருமகனும் பாய்ந்தோடிப் போய்ப் பார்த்தபோது, அப்பா நிலத்தில் வாய் ஒரு பக்கம் கோணி இழுத்தபடி கிடந்தார். வேணி அம்மாவோடு சேர்ந்து கத்தினாள். மருமகன் வெளியே ஓடிப் போய் ஏதாவது வாகனம் கிடைக்குமா என்று தேடியலைந்து ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு வானோடு வந்து சேர்ந்த போது, அப்பாவுக்கு  முழுமையாக ஒரு பக்கம் செயலிழந்து விட்டிருந்தது தெரிந்தது. இருந்தாலும் தூக்கிக் கொண்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேர்த்தார்கள். எல்லாரும் வந்து பரிசோதித்து, ஒரு கிழமை வெறும் வைத்தியத்துக்குப் பிறகு  "நீங்கள் வீட்டில கொண்டுபோய் வைச்சுப் பாக்கிறது நல்லது" என்று சொல்லி விட்டுப் போய் விட, அப்பாவை வீட்டிலே கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அப்பா இப்போதெல்லாம் ஏதோ பேச முயற்சி செய்வது தெரிந்தது; ஆனால் விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது. அம்மா சில வேளைகளில் காதைக் கிட்ட வைத்து கேட்க முயற்சி செய்வா; ஆனால் அப்பாவின் உதடுகள் மட்டும்தான் அசையும். சத்தம் அனுங்கலாகக் கேட்கும். எதுவுமே விளங்காது. களைத்துப் போய் அம்மாவின் கையை கோபத்தில் தட்டி விட்டுக் கண்களை மூடிக் கொள்ளுவார். அம்மா சோர்ந்து போய் அழத் தொடங்குவா. யாழ்ப்பாணம் அமுக்கப்பட, அடுத்த புறப்பாடு தொடங்கியது. எல்லாரும் வெளிக்கிட, அப்பா ஏதோ சொல்ல கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மகள் அப்பாவுக்குக் கிட்டப் போனாள். "என்ன அப்பா?" அப்பா ஒரு கையைத் தூக்கி  தூரக்  காட்டினார். "போ...போ ஏ.... என்று வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் திணறினார். "நாங்கள் எங்கயாவது போக வேணும் இஞ்ச இருக்கேலாது" என்றாள் வேணி . அப்பா தான் வரவில்லை என்பது போல சைகை காட்டினார். "அப்பா நாங்கள் போற இடத்தில தம்பியையும் பாக்கலாம்" என்றாள் வேணி . அப்பா மகளை உற்றுப் பார்த்தார். "ஓமப்பா தம்பியை வந்து ஏலுமெண்டால் பாக்கச் சொல்லி சொல்லி அனுப்பியிருக்கிறன்". அப்பாவுக்குக் கண்களில் நீர் துளிர்த்ததை மகள் முதல் தடவையாகப் பார்த்தாள். அப்பா திரும்பவும் பேச வாயெடுத்து முடியாமல் கண்களை மூடிக் கொண்டார்.
  அடங்காப் பற்றை அடைந்தபோது தான் அங்கேயுள்ள கஷ்டம் தெரியத் தொடங்கியது. சூழலும், தொடர் காய்ச்சலும் வாட்டிஎடுக்க அப்பாவுக்கு உகந்த இடம் இதுவல்ல என்று முடிவெடுத்து மீட்டும் யாழ்ப்பாணம் திரும்ப முடிவெடுத்திருந்த ஒரு  நாளில் செந்தூரன் திடீரென்று வந்தான். அம்மா ஓவென்று அழுதா. அவன் அப்பாவுக்குக் கிட்டப் போய் இருந்து அவருடைய கையைப் பிடித்தான்.  அப்பா அந்தரப் பட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தார். அவன் இன்னும் நெருங்கிப் போய் அப்பா சொல்ல வருவதை விளங்க முயற்சித்தான். அப்பா கஷ்டப்பட்டு "ஒ...ஊ...ரூ....கக்கு......போ....வெ...னும்." என்றார். அவனுக்கு இப்போது அப்பா சொல்வது விளங்கியது. அப்பாவின் கைகளை இறுகப் பிடித்தபடி  "ஓமப்பா நாங்கள் கட்டாயம் ஊருக்குப் போவம், நான் வந்து கூட்டிக் கொண்டு போறன்" என்றான். அப்பாவின் கண்களில் ஒரு நிம்மதி வந்தது.

திங்கள், 8 அக்டோபர், 2012

நளாயினி

நளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு துணைக்கு இருந்து அம்மாவை ஒரு வேலையும் செய்ய விடாமல் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அத்தோடு சில சிறிய வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டின் ஒரு பகுதியிலே பின்னேரங்களில் படிப்பித்தும்  கொண்டிருந்தாள். அவளை ஒரு தடவை பார்த்தால் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் போல ஒரு ஆவலைத் தூண்டும் கொள்ளை அழகு அவளுடையது. எத்தனையோ பேர் கண்ணடித்துப் பார்த்தார்கள்; கடிதம் கொடுத்துப் பார்த்தார்கள். நளாயினியின் கவனத்துக்கு எதுவுமே வரவில்லை.வலிகாமம் வடக்கு அகதியானபோது மிகச் சிறுமியாயிருந்தவள், பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, வன்னி, மீண்டும் யாழ்ப்பாணம் என்று திரும்பியபோது திருமண வயதை எட்டியிருந்தாள். திருமணம் என்றால் சும்மாவா? எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார்கள் பெற்றோர். சில இடங்கள்  மாப்பிள்ளை "படிக்கவில்லை", சில இடங்கள் "பெருத்த குடும்பம்", சில இடங்கள் "அவை எங்களை விடக் கொஞ்சம் குறைவு", என்று நிறைய இடங்கள் தட்டுப் பட்டுக் கொண்டே போனதில் நளாயினிக்கு இன்னும் இரண்டு வயது ஏறிப் போனது.  
இந்தக் கால கட்டத்தில் லண்டனில் இருக்கும் சித்தப்பா "என்ன எவ்வளவு காலமா  மாப்பிள்ளை தேடுறியள்? விடுங்கோ நான் இஞ்சை அவளுக்கு மாப்பிள்ளை  பாக்கிறன்" என்று வீராப்பாக தான் ஒரு பக்கத்தால் தேடத் தொடங்கினார். இவரால மட்டும்தான் மாப்பிள்ளை தேட முடியுமோ நான் மாப்பிள்ளை எடுத்துக் காட்டுறன்  என்று  பிரான்சில இருக்கிற மாமா, மாமியின்ர தங்கச்சி குடும்பம் என்று எல்லாரும் ஒவ்வொரு பக்கத்தால மும்முரமாகத்  தேடத் தொடங்கினர். ஆனால் எல்லாரும் நினைத்தது போல அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை மாப்பிள்ளை தேடுவது. சரியாய் வரும் என்ற நோக்கத்தில் அணுகினவர்கள் நாட்டிலே இருந்து பெண் எடுப்பதை விரும்பவில்லை. தாங்கள் படித்த படிப்புக்கு அங்கேயிருந்து பெண் வந்து மொழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. இங்கேயே படித்த பிடித்த பெண்ணைத் திருமணம் செய்வதை விரும்பினார்கள்.
ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து லண்டன் சித்தப்பாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தது. சித்தப்பாவுக்கு ஒரே புழுகம் தான் முதலில் மாப்பிள்ளை தேடியதையிட்டு. அதுக்கும் சும்மா இல்லை இஞ்சினியர் மாப்பிள்ளை. மாப்பிள்ளையைப் பற்றி சரியாக விசாரிக்கும் படி நளாயினியின் அம்மா திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டாள். வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் பழக்க வழக்கங்களில் அவளுக்கு ஒரே சந்தேகம்.ஒரே ஒரு மகளை சிக்கலில்லாத இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டாத கடவுளில்லை. சித்தப்பா விசாரித்ததில் குடும்பத்தைப் பற்றி எல்லோருமே நன்றாகச் சொன்னார்கள். மகனைப் பற்றி சில தவறான தகவல்களும் வந்தன. சித்தப்பா விடாமல் எட்டத்தால் விசாரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இந்தச் சம்பந்தத்தை விட விருப்பமேயில்லை. இஞ்சினியர் மாப்பிள்ளை எல்லோ!
பிரான்சில இருக்கிற மாமாவுக்கு தனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்ற கவலையோடு, சித்தப்பா பார்த்த மாப்பிள்ளை அவ்வளவு சரியில்லை என்ற பேச்சும் வந்து சேர, அவர் உடனேயே சித்தப்பாவுடன் தொடர்பு கொண்டார். "நீ பாத்திருக்கிற மாப்பிள்ளை ஆரோ ஒரு பெட்டையோட சுத்துறானாம்; தெரிஞ்சு கொண்டு என்னெண்டு எங்கடை பிள்ளையைக் குடுக்கிறது?" என்று குதித்தார். "இஞ்ச பெடியள் எண்டா ஒரு வயசில அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்கள்; பிறகு கலியாணம் கட்டினாப் பிறகு ஒரு ஒழுங்குக்கு வந்திடுவாங்கள். அந்த தாய் தகப்பன் நல்ல ஆக்கள்; அதுகள் சீதனம் கூட ஒண்டுமே வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டுதுகள். இத விட நல்ல சம்பந்தம் எங்களுக்குக் கிடைக்காது" என்று சொல்லி முடித்தார் சித்தப்பா. "அப்பா அந்தப் பெட்டை என்னெண்டாலும் பிரச்சனை செய்தால்?.... " "அந்தத் தாய் தகப்பனுக்கு அந்தப் பெட்டையைப் பிடிச்சிருந்தால் ஏன் கட்டி வைக்காமல் இருக்கினம்? அதுகள் அவனை அதுக்குளால வெளியாலை எடுக்கிறதுக்குத்தான் இப்ப கலியாணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கினம்; இப்பிடி ஒரு இஞ்சினியர் மாப்பிள்ளை எங்கடை பிள்ளைக்கு  ஊரில கிடைக்குமோ?" என்று தனது வாதத்தை சளைக்காமல் முன் வைத்தார் சித்தப்பா. மாமாவுக்கு பிடிக்கவில்லை "இதுகளாலை பிறகு பிரச்சனை வந்தா எங்கடை பிள்ளைக்குத்தான்  கஷ்டம்" என்று சொல்லி விட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.
சித்தப்பா அசரவில்லை. காலத்தைக் கடத்தாமல் நளாயினியை முகவர் மூலமாக  விரைவிலேயே லண்டனுக்கு அழைப்பித்துக் கொண்டார். பலர் எச்சரித்திருந்தும் தட்டி விட்டு விட்டு சித்தப்பா திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தார். நளாயினிக்குக் கூடப் பெருமையாக இருந்தது. இவ்வளவு ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அதை விட அழகான படித்த கணவன்! "நான் அதிர்ஷ்டசாலி" என்று எண்ணிக் கொண்டாள்.
திருமண நாளன்று எல்லாமே மகிழ்ச்சியாக இருந்தன. எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தனர். கொண்டாட்டக் களைப்பு போகவே கொஞ்ச நாள் எடுக்கும் போல இருந்தது. இந்த அமளிகளுக்குள் நளாயினி எதையுமே கவனிக்கவில்லை. கணவன் பிரேம் விரைவிலேயே வேலையைத் தொடங்கியிருந்தான். ஆனால் வீட்டுக்குத் தாமதமாக வந்து கொண்டிருந்தான். முதல் சில நாட்கள் அவளுக்கு அதைப் பற்றிக் கேட்கவே பயமாக இருந்தது. ஆனால் தொடர்ந்தும் அவன் வீட்டில் இருக்கும் நேரம் அருகிப் போகவே அது பற்றி கேட்க முற்பட்டபோதுதான் தான் எப்படிப்பட்ட பயங்கரத்துக்குள் வந்து மாட்டிக் கொண்டுள்ளேன் என்பது புரிந்தது.
 "நீ நினச்சனியா நான் உன்ர வடிவில மயங்கிக் கலியாணம் செய்தனான் எண்டு?" என்று அவன் கேட்டபோது அவளுடைய பேரழகு அவளைப் பார்த்துச் சிரித்தது.
 "இந்த வயது போனதுகளின்ர ஆக்கினைக்காகத்தான் நான் ஓம் எண்டனான்" என்றபோது எங்களுடைய குடும்ப உறவுகள் என்னவென்றாகிப் போனது.
 "நான் என்ர  கேர்ல் பிரெண்ட் ஓட இருக்கிறனான் எண்டு தெரிஞ்சுதானே என்னைக் கட்ட ஓமெண்டு சொன்னனீ " என்று அவன் வார்த்தைகளால் விளாசியபோது திருமணத்தில் எதிர்பார்க்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யாருமற்ற பூமியில் தன்னந்தனியே தான் மட்டும் நின்று கொண்டிருக்கும் உணர்வு தோன்ற பயத்தில் உடம்பு சோர்ந்து நடுங்குமாப்போல் இருந்தது.   இனி என்ன செய்வது என்ற கேள்வி முன்னாலே பெரிதாக எழுந்தது. உண்மையிலேயே அவளுக்கு இந்த விடையம் மறைக்கப் பட்டிருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து தன்னைப் பாழுங்கிணற்றில்  தள்ளி விட்டார்களே என்று கோபம் வந்தது.
மாமா, மாமியார் தனக்காகப் பரிந்துரைப்பார்கள் என்று அவர்களைப் பார்த்தாள்; அவர்களால் எதுவுமே செய்ய முடியாதிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்து யோசித்துப் பார்த்தாள். பிறகு எழுந்து சித்தப்பாவுக்கு தொலைபேசி எண்களை அழுத்தினாள். சித்தப்பா தொடர்பில் வர "என்னை இப்ப வந்து கூட்டிக் கொண்டு போங்கோ, இஞ்சை என்னால இருக்கேலாது" என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டுத் திரும்ப மாமி முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போனார். நளாயினி போட்டிருந்த நகைகள் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு ஊரிலேயிருந்து வந்தபோது போட்டிருந்த சின்னக் கல்லுத்  தோட்டையும்,  சங்கிலியையும், இரண்டு சோடிக் காப்புக்களையும் போட்டுக் கொண்டு தன்னுடைய உடுப்புக்களை மாத்திரமே அடுக்கி எடுத்தாள்.

சனி, 6 அக்டோபர், 2012

நிகழ்காலம்


பயணம் நீண்டதாயிருக்கிறது; மிக மிக நீண்டதாயிருக்கிறது. சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலிருக்கிறது . உண்மையிலேயே வெகு தூரத்திலிருக்கிறது என்று தெரிந்தே தொடங்கப் பட்டது இந்தப் பயணம். நம் பார்த்திராத இடர்க் காலங்கள் அடங்கலாக இந்தப் பயணத்தின் துன்பச் சுமை நீண்டு செல்வது வரலாற்று துரதிர்ஷ்டம். ஆனால் சேரிடம் பற்றிய கருத்தில் மாற்றுக் கருத்துக்கள்  இல்லை. பயணம் பற்றிய தெளிவு இல்லாதிருந்திருந்தால் அதிர்ச்சியாய் இருந்திருக்கக் கூடும்; ஆனால் எவ்வழியிலும் எதையும் எதிர்பார்த்ததே!
வழிகள் பலவிருந்தும் சரியானதென்று தென்பட்டதை தேர்ந்து கொண்டு அதில் பயணிப்பது உலக வழமை. ஒன்று தோன்றுவதும் அதன் வீரியம் குறைந்து இன்னொன்று அதை விடச் சிறந்ததாகத் தோன்றி பின் அதில் பயணிப்பதும், அல்லது ஒன்று இன்னொன்றை  வீழ்த்திப்பலம் கொண்டெழ அதனுடன்  தொடர்ந்து பயணிப்பதும் வரலாற்று நிகழ்வுகள்.
ஆனால் மிகப் பலமாய், முன்பை விடப் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய ஒரு காலப் பகுதியில் ஒருவர் நெஞ்சிலும் முதுகிலும்  ஒருவர் குத்திக் கொள்வதிலேயே காலத்தைக் கழிப்பது சரியா?  சுயநலன்களைப் பேணுவதிலேயும், பொறாமைப் போட்டியில் வெந்து சாவதிலேயும், பெரியவன் யார்? என்று முன் பின் தள்ளுவதிலேயும் கண்டு கொண்டிருக்கும் பயன் என்ன?
"மனித நாகரிகம்" பற்றிப் பேசுகின்றோம். "மனித நேயம்" பற்றிப் பேசுகிறோம். இவற்றிலே மேம்பாட்டு  நிற்கின்ற இனம் என்றும் பேசிக் கொள்ளுகின்றோம். ஆனால் செயலளவில் இவையனைத்தும் எங்கே போயிற்று? ஒருவர் இல்லாத இடத்திலே அவரைப் பற்றிப் பேசக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏனென்றால் அதே அவர்கள் சேர்ந்து சிறிது நேரத்தில் எம்மைப் பற்றி பேசத் தொடங்கக் கூடும். பிழையான புரிந்துணர்வுடன் இருப்பதை விட நேரிலே பேசிப் புரிந்து கொள்ளுதல் ஆரோக்கியமான விடையம் என்பதுடன் கருத்துப் பகிர்வு என்பதற்கும் அங்கே இடமிருக்கும்.
அதை விடுத்து மாறி மாறிச் சேறள்ளிப் பூசுவதால் எதிர் விளைவுகள் அனைவரையும் பாதிப்பதாகவே அமைந்து விடுகின்றது. கடந்த காலம் என்பது நிகழ்ந்து முடிந்த ஒன்று. கசப்பான ஒன்றைக் கடந்து இப்போது நின்று கொண்டிருப்பது நிகழ்காலம். நின்று கொண்டிருக்கும் காலத்திலிருந்து  நேற்று இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், இது இவர்  பிழை, அது அவர் பிழை என்று விவாதிப்பதினால் மாண்டவர் மீண்டு விளக்கம் கொடுக்கப் போவதுமில்லை; வரலாறு மீழப் போவதுமில்லை. இப்போதைய தேவை என்ன என்ற கேள்வியே இங்கே முக்கியப்படுத்தப் பட வேண்டிய ஒன்று. அதன் செயற்பாடுகளே தேவைக்குரியவையாகி  நிற்கின்றன. இது ஒரு மிகப் பெரிய பழு; எல்லோரும் சேர்ந்து தூக்க வேண்டிய பழு. தூக்கியே ஆக வேண்டிய கடமைப் பழு. இதை அலட்சியப் படுத்தினால் வரலாறு மன்னிக்காது எம்மை. சாகும்வரை குற்றவுணர்வு சூழ்ந்து மெது மெதுவாகக் கொல்லும்.
இதில் "சேர்ந்து" என்கின்ற பதம்தான் இப்போதைய சிக்கல். இந்த விடையத்தை சிறுவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய உதாரணம் இதற்குச் சொல்லலாம். ஒரு தடவை நான் கற்பித்த மாணவ, மாணவியரிடம் "இந்தத் தடவை நான் எதுவுமே எழுதித் தர மாட்டேன், நீங்களாகவே ஒரு கருவை உருவாக்கி அதை நாடகமாக்கி ஒரு நிகழ்வில் செய்ய வேண்டும் " என்றேன். தாங்களாகவே உருவாக்கி, பாத்திரப் படைப்புக்களையும் தங்களுக்குள்ளேயே பிரித்து சிறப்பாக நடித்திருந்தார்கள். எந்தவிதமான முணுமுணுப்புக்களோ, குற்றச்சாட்டுக்களோ எதுவுமே எழாமல் இணைந்திருந்தனர். பெற்றோர் வாயடைத்துப் பார்த்திருந்தனர். இதனை பெரியவர்களிடம் எதிர்பார்ப்பது கடினமாயிருக்கிறது. சேர்ந்திருந்தோம் ஒரு காலத்தில்; ஆனால் இப்போது எப்படி இப்படி ஆயிற்று?எமக்கு ஆதாயம் வரும்போது மட்டும் சேர்வோம்; இல்லையென்றால் ஆயிரம் காரணங்களை கூடவே வைத்திருப்போம் கேட்டால் எடுத்துவிட. மாறி மாறி அம்பாய்ப் பாய்ச்சக் கூடிய  குற்றச்சாட்டுக்களை  கைவசம் வைத்திருக்கிறோம். விளைவு?  மனக் கசப்புக்கள், சோர்வு, விரக்தி இவற்றுடன் சிறிய விரிசல்கள் மிகப் பெரிதாகி இன்று பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கின்றன பயனின்றி. சிதறிக் கிடப்பதால் பயனில்லை என்று தெரிந்தும் ஓட்ட வைக்க முயற்சிப்பாரின்றி இருப்பது வேதனையான விடையம்.
நிற்பதுவோ நிகழ்காலம்; தேவையோ பணிக்காலம்.

தனியாய் நின்றால் மரம், அதுவே சேர்ந்து நின்றால் தோப்பு. பயன்களும் அதற்கேற்றபடியே கிடைக்கும்.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"

திங்கள், 1 அக்டோபர், 2012

ஆச்சி

ஆச்சி (அப்பம்மா) என்றால் சீலனுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மெலிந்த தோற்றமுடையவர் ஆச்சி. ஆனால் குரல் கம்பீரமாயிருக்கும். ஊரிலேயே அதிக காலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆச்சி மட்டும் தான். அந்தக் காலத்திலே ஆறாம் வகுப்புப் படித்தவர். தமிழ் இலக்கணச் சூத்திரங்களும், திருக்குறள்களும் மற்றும் பல நூல்கள் பற்றியும் அந்த வயதிலேயும் ஒரு பிழையும் இல்லாமல் ஞாபகமாகச் சொல்லிக் காட்டுவார். பழைய கதைகள் நிறையச் சொல்லுவார். சீலனுக்கும் மற்றும் அவனது நண்பர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். தன்னுடைய ஆச்சியைப் பற்றிப் பெருமையாக எண்ணிக் கொள்ளுவான். தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ளுவார். தனக்குப் பிடிக்காத விடையங்கள் ஏதாவது வீட்டிலே நடந்தால் புறுபுறுத்துக் கொண்டு அங்கேயும் இங்கேயுமாகத் திரிவார். பிறகு வாசல் படியிலே வந்து குந்தியிருந்து விடுவார். வீட்டிலே அண்ணா அக்காமார் இருந்தும் இவன் கடைக்குட்டி என்பதாலேயோ என்னவோ ஆச்சிக்கும் இவனைப் பிடிக்கும். சாப்பாடுகளை இவனுக்கு மட்டுமே ஒழித்து வைத்துக் கொடுப்பார் ஆச்சி. சீலன் இரவிலே ஆச்சியைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் படுப்பான்; அம்மாவைத் தேட மாட்டான். ஐயாவுக்கும் (அப்பாவை இப்படித்தான் கூப்பிடுவான்) அம்மாவுக்கும் கூட ஆச்சியிலே நல்ல விருப்பம். ஆனால் ஆச்சி தொணதொணக்கும் சமயங்களில் "சும்மா பேசாமல் இரணை" என்ற ஐயாவின் உறுக்கலில் ஆச்சி பெட்டிப் பாம்பாக அடங்கிப் போவார். அப்போது பார்க்க பாவமாக இருக்கும் அவனுக்கு.
 அம்மா எப்போதாவது தான் மிகவும் அவசரமாக வெளியே செல்லும் தருணங்களில் ஆச்சியைச் சமைக்கச் சொல்லும்போது மிகச் சந்தோஷமாகச் சமையல் செய்வா. எங்களுக்கும் ஆச்சியின் சமையல் நல்ல விருப்பம். எல்லாக் கறி வகைகளையும் நல்ல பிரட்டல் கறிகளாக வைப்பா ஆச்சி. ஆறு பேர் உள்ள சீலனின் குடும்பத்தில் மூன்று பேருக்கான கறிதான் ஆச்சி சமைத்த கறிச் சட்டிக்குள் இருக்கும். பிறகென்ன அதற்கும் வந்து அம்மா "ஆம்பிளையள் இருக்கிற வீட்டில கொஞ்சம்  உண்டனக்  கறி வைக்கப் படாதோ" என்று தொடங்குவா.
காலங்கள் உருண்டோடிக் கொண்டிருக்க சீலன் இளைஞனாகி ஐரோப்பிய நாடொன்றுக்குள் தஞ்சமடைந்து கொண்டான். இடப் பெயர்வுகள் தொடங்கின. அண்ணா, சீலன், அக்கா என்று எல்லோருமே நாட்டை விட்டு வெளியேறி விட, அங்கே இருந்த ஒரு அண்ணாவுடன் ஐயா, அம்மா, ஆச்சி சேர்ந்து இருந்தார்கள். ஆச்சிக்கு இப்போது கண்கள் மங்கி தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அம்மாவுடைய உதவியுடனேயே எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தா என்று அறிந்த போது சீலனுடைய மனம் ஆச்சிக்காக அழுதது. ஆச்சியின் தொண தொணப்பு குறைந்து போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
 எங்களுடைய இடப்பெயர்வு ஒன்றா இரண்டா? ஓரிடத்தில் போய் இருப்பதும், பிறகு தூக்கிக் கொண்டு மற்ற இடத்துக்கு ஓடுவதும், பிறகு அங்கேயிருந்து கிளம்புவதுமாக ஓட்டமே வாழ்க்கையாகி எல்லோரையுமே நலிய வைத்து விட்டது. ஓடும் போது அண்ணன் தன்னுடைய பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் மட்டுமே கவனிக்கக் கூடியதாக இருந்தது. ஐயாவும், அம்மாவும், ஆச்சியும் அவர்களுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர். ஆச்சியால் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டபோது ஐயா தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார். இதைக் கேள்விப் பட்ட சீலனுக்கு துக்கம் தாள முடியவில்லை. ஏனென்றால் ஐயாவுக்கே 72  வயதைத் தாண்டியிருந்தது. அம்மாவுக்கு நீரிழிவு நோய் என்று சிக்கல்கள் புதிது புதிதாகத் தோன்றியிருந்தன.
சீலன் தன்னால் முடிந்த அளவுக்கு பணத்தை மட்டுமே அனுப்ப முடிந்தது. இடையில் ஒரு தடவை அம்மாவுடன் தொலை பேசியில் பேசும் போது, "அம்மா உங்களுக்கு உதவிக்கு யாரையாவது ஒழுங்கு செய்யட்டுமா?" என்று கேட்டான். ஒரு சில வினாடி மவுனத்திற்குப் பிறகு "உனக்கு மட்டும்தான் ஆச்சியோ? அவ எங்களுக்கும் ஆச்சிதான், கடைசி மட்டும் நாங்கள் தூக்கிக் கொண்டு ஓடுவம்" என்று பதில் சொன்ன போது, எல்லோரும் ஆச்சி மேல் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து கண்ணீரே வந்தது. ஆச்சியோடு தொலை பேசியில் கதைக்கவும் முடியவில்லை. அவவுக்கு இவன் கதைப்பதை கேட்கவே முடியாத நிலைமை ஏற்பட்டு இருந்தது. சில நாட்களில் ஆச்சி படுத்த படுக்கையாகி அதிகம் அழுந்தாமல் போய் சேர்ந்து விட்டார். சீலன் கண்ணீர் விட்டு அழுதான். மூப்பும், இறப்பும் இயற்கைதான்; ஆனால் உறவுகளைப் பிரிந்து  நாடோடிகளாக அலைந்து சோர்வுண்டு, அதனாலேயே நோய்வாய்ப் பட்டு இறப்பது  இயற்கைக்கு முரணாகப் பட்டது சீலனுக்கு. எல்லோரையும் விட்டுப் பிரிந்து வந்தது பிழையோ என்ற குற்றவுணர்வு குத்தியது. ஆச்சி இறந்த கொஞ்சக் காலத்திற்குள் ஐயாவும் நோய் தாக்கி இறந்து போனார். இப்போது இருப்பது சீலனுக்கு அம்மா மட்டுமே!

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

தங்கமக்கா!!

மணி அண்ணன் பிரான்சுக்கு வந்ததிலிருந்து அவரது பொழுதுபோக்கே வேலை செய்வதுதான். ஓடி ஓடி காலை, மதியம், இரவு என்று கிடைத்த நேரம் எல்லாம் பகுதி  பகுதியாய் வேலை செய்துகொண்டேயிருப்பார். இடையில் வக்கன்ஸ் எடுப்பார்; ஆனால் அந்த நேரத்திலேயும் வேரை யாராவது வக்கன்ஸ் எடுத்த ஆட்களின் வேலையை செய்து கொடுப்பார். இப்பிடியே ஓடிக் கொண்டேயிருப்பார். ஆனால்  ஞாயிற்றுக் கிழமை மட்டும் வேலை செய்ய மாட்டார். அந்த நாள் அவருக்கு நல்ல பங்கு இறைச்சி வாங்கி மனைவி தங்கம்  சமைத்துக் கொடுக்க ஒரு பிடி பிடித்து விட்டு ஏப்பம் விட்டுப் பிறகு தண்ணிப் பாட்டியோட முடிக்க வேண்டும். இது தவிர  ஒரு நாளைக்கு ஒரு பக்கெற் ஊதுபத்தி. அவருக்கு சாப்பாட்டில் ஒரு குறையும் இருக்கக் கூடாது; மாமிச வகையில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் வகை வகையாகச் செய்து சாப்பிட  முடியுமோ அவ்வளவும் தங்கம் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுப்பாள். கஷ்டப்பட்டு உழைக்கிறவர் நல்லாச் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளுவாள்.
தங்கம்  எப்போதுமே வேலைக்குப் போனதில்லை; ஏன் வெளி வேலைகள் எதுவுமே செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை. இரண்டு பிள்ளைகள் ; மூத்தவனுக்குப் பன்னிரண்டு வயது, மகளுக்கு எட்டு வயது. மணி அண்ணன் வேலை முடிந்து வரும் போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார். வீட்டிலே தங்கத்துக்கு சமைப்பதும் பிள்ளைகளைக் கவனிப்பதும் கூட்டித் துடைப்பதும் தான் பொழுதுபோக்கு. யாராவது தெரிந்தவர்கள் ஏன் மனிசியை வேலைக்கு அனுப்பலாம்தானே என்று கேட்டால், "மனிசிமாரை வேலைக்கு அனுப்புறவங்கள் எல்லாம் ஆம்பிளையளே.... என்று அவரது விளக்கம் நீடிக்கும். கேட்பவர்களுக்கு ஏன்தான் வாயைத் திறந்தோம் என்று இருக்கும். இவ்வளவுதான் மணி அண்ணனின் வாழ்க்கை.
 தபால் நிலையம் தெரியாது, வங்கி தெரியாது, வங்கி அட்டை பாவிக்கத் தெரியாது, தனியே கடைக்குப் போகத் தெரியாது, வாகனம் ஓட்டத் தெரியாது,பிள்ளைகளின் ஆசிரியர்களைத் தெரியாது.  இப்படி நிறையத் தெரியாதவற்றோடு தங்கம்  ஒரு குழந்தையின் வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டிருந்தாள். அதுவே பழக்கப் பட்டு இலகுவாயும் போனது அவளுக்கு.
காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லைதானே. ஓடிய வேகத்தில் மணி அண்ணனுக்கு இப்போதெல்லாம் மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தது. "டொக்டரிட்டைப் போயிட்டு வாங்கோவன்" என்றாள் தங்கம் . "இல்லை இது இந்தக் கிளைமேற்றுக்கு; ஒரு நல்ல சூப்  போட்டுக் குடிச்சால் சரியாயிடும்; நாளைக்கு நான் வேலையால வரேக்க எல்லாம் வாங்கிக் கொண்டு வாறன் சூப்புக்கு" என்றார் மணி அண்ணன். ஆனால் அவருடைய அந்த சூப்பு  வைத்தியம் சரிப்படாமல் போகவே அவருக்கு லேசாக யோசனை தட்டியது. அத்தோடு அன்றிரவு லேசாக நெஞ்ச நோவும் தொடங்க "நாளைக்கு ஒருக்கா டொக்டரிட்டைப் போகத்தான் வேணும்" என்று சொல்லி படுத்தவர் அடுத்தநாள் காலையில் எழுந்திருக்கவே இல்லை.
இருக்கும் வரைக்கும் எதையுமே  மனைவியோடு பகிர்ந்தும் கொள்ளாமல், செய்யவும் விடாமல் தனியாக தானே எல்லாவற்றையும் செய்து முடித்துக் கண்களை மூடிய போது தங்கத்துக்கு கண்களைக் கட்டிக் காட்டில் விட்டால் போல் இருந்தது. கணவனை இழந்ததை  நினைத்து அவள் அழுததை விட, தான் இனி என்ன செய்யப் போகிறேன் என்பதை நினைத்தே கதறி அழுதாள் என்பதுவே உண்மை. சுற்றங்கள் எத்தனை நாட்களுக்கு சுற்றி நிற்பார் இங்கே? அவரவர்களுக்கு அவரவர் வேலை. உதவி செய்ய முடிந்தவற்றுக்கு உதவி செய்யலாம். மிகுதியை அவளே தானே செய்ய வேண்டும். உதவி செய்ய வந்தவர்கள் கூட மணி அண்ணனைத் திட்டிக் கொண்டே செய்து கொடுத்தார்கள். அது அவளுக்கு இன்னும் மன வேதனையைக் கொடுத்தது.
கணவனின் இழப்பிலிருந்து மீழ முடியாமலேயே இருந்த அந்த நாட்களில் ஒரு நாள் ஒரு கடிதம் வந்திருந்தது. அதை எடுத்து மகனிடம் கொடுத்து வாசித்து விளங்கப் படுத்தச் சொல்லிக் கேட்டாள். நாங்கள் வீட்டு வரி கட்ட வேண்டும் எண்டு எழுதியிருக்கு என்று சொன்னான். விலாசத்தை எழுதி எடுத்துக் கொண்டு அடுத்த நாள் காலையில் தனியே வெளியே சென்று பேருந்து நிலையத்தை அடைவதற்குள் அவளுக்கு தலை சுற்றுமாப்  போல் இருந்தது. கணவன் இருந்த போது வீட்டு வாசலில் காருக்குள் ஏறினால் போக வேண்டிய இடத்தில் போய் இறங்குவதும் திரும்ப ஏறி வீட்டு  வாசலில் வந்து இறங்குவதுமாய் இருந்தது அவளது வாழ்க்கை.  அவளது வாழ்க்கையில்  எப்போதுமே பேருந்திலோ  தொடருந்திலோ  ஏறியதில்லை. இந்த நிலையில் பேருந்து தரிப்பு இடத்துக்கு வந்து நின்றவளுக்கு அடுத்த பிரச்சனை வந்தது. மற்ற ஆக்களை உதவிக்கு கூப்பிடக் கூடாது என்று நினைத்து வந்தவளுக்கு எந்த இலக்க பேருந்து எடுப்பது என்றே தெரியவில்லை. பேருந்துகள் ஒன்றுக்குப் பின்னால் அவளைத் தாண்டிப் ஒன்று  போய்க் கொண்டிருந்தன. தன்னிரக்கம் பெருக அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவளைக் கடந்து சென்றவர்கள் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுச் சென்றார்கள். யாரிடமாவது கேட்கலாம் என்றால் என்ன மொழியில் கேட்பது? சுற்றிப் பார்த்தாள் எல்லோருமே அவசர அவசரமாக தங்கள் தங்கள் வேலையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். தான் மட்டுமே வீட்டுக்குள்ளே முடமாய் இருந்தது முதல் தடவையாக நெருப்பாய் சுட்டது. அழுகை ஆத்திரமாகி தன்னையே திட்டிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கடைசியாக, கணவரின் அக்காவின் மகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவன் கத்தினான் "எந்த பஸ் எடுக்கிறதெண்டு  தெரியாமல் ஏன் வெளியில போனனீங்கள்? இப்ப நீங்கள் வீட்டை போங்கோ நான் அடுத்த கிழமை வந்து கூட்டிக் கொண்டு போறன்".
இயலாமையால் வார்த்தைகள் வெளிவர மறுக்க தொடர்பைத் துண்டித்து விட்டு திரும்பி வீட்டை  நோக்கி நடக்கத் தொடங்கியவளுக்கு தலைலேசாக சுற்றுமாப்போல் தோன்ற அருகிலிருந்த கம்பத்தை பற்றிக் கொள்ள, கைகள் வழுக்கிக் கொண்டு தான் கீழே சரிவதை உணரும்போது, யாரோ சத்தமிட்டுக் கொண்டு அவளருகில் ஓடி வரும் ஒலி மிகத் தொலைவில் கேட்டது.

வியாழன், 27 செப்டம்பர், 2012

அருட் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்




"மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அது இப்போதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்"
லூக்கா 12 :49 . 




ஓடு மீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடி
ஒற்றைக் காலில் நின்ற கொக்காய் மக்கள்
ஒருமித்து  வரவேற்ற ஒப்பற்ற செல்வம் நீர்
ஒளியாய் வந்த தூதன் நீர்

ஒரு சில ஆண்டுகளே!! நீளாதொவென
ஓடியே போயிற்று
ஒன்றா இரண்டா என்  நினைவுச் சுழலில்
ஓராயிரம் கதைகள் ஆழக் கிடக்கின்றன

ஒடுங்கிய சேவைகளுக்கு
ஓர் அகலப் பாதை போட்டவர் நீர்
ஓர் இளம் தலைமுறைக்கு
ஒப்பற்ற மாதிரி  நீர்

சிந்தனைச் சிதறல்களுக்கு
சிறப்பு வடிவம் கொடுத்தவர் நீர்
சிற்பியாய் எமைப் பார்த்துச் 
செதுக்கி வடித்தவர் நீர்

செல்லும் முன் புத்தாலயம்
செம்மையாய் எழுப்பியவர் நீர்
செழுமையாய் உறைந்து விட்டீர்
செல்ல முடியாமல் பூட்டி வைத்துள்ளோம்

செயற்கரிய சேவைக்காய் நாற்பானாண்டுகள்
சென்றோடிய இந்நாளில்
செய்பணி செவ்வனே சிறந்தோங்க
செயல் புரிய நலமளிக்க

புனிதர் அருள் வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன்

வாழ்க! நலமுடன் நீடூழி நீர் வாழ்க!
 

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தளம்பல்.

கல்யாணிக்குக் கலியாணம் ஆனதே ஒரு தனிக் கதை. சொந்த மாமி மகன் அத்தான் அனந்தன் இவளைக் கண்டால் சுத்திச் சுத்தி வருவான். சின்ன வயதிலே காற்றென்ன மழையென்ன குளிரென்ன வெயிலென்ன இவளுக்கு என்ன தேவை என்றாலும் தேடிக் கொண்டு வந்து முன்னால் நிற்பான். அவளும் என்னவென்றாலும் அத்தான் ஆனந்தனிடம்தான் கேட்பாள் கிடைக்குமென்று தெரிந்து. அவளுக்காகப் பள்ளிக்கூடத்தில் சண்டை போட்டு, அடி வாங்கி, சின்ன வயதுச் சிநேகிதர்களைப் பிரிந்து என்று இப்படிப் பல; அதற்குள் அம்மாவிடம் "கண்டறியாத ஒரு மச்சாள்" என்ற திட்டும் அடக்கம். கொஞ்சம் வளர கல்யாணி வீட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அடைபட்டுக் கொண்டாள். பொம்பிளைப் பிள்ளை அடக்கம் வேணுமாம்.ஆனந்தனுக்கு சரியான ஆத்திரம்; வீட்டுக்குப் போனால் மாமியும் "தம்பி பெம்பிளைப் பிள்ளை இருக்கிற வீட்டுக்கு அடிக்கடி வராத, அயலட்டையிலை வேற மாதிரிக் கதைக்கப் பாப்பினம்" என்றா. அவனுக்கு அதைக் கேக்க இன்னும் ஆத்திரம். அம்மாவிடம் முறையிட்டான். அம்மா " கல்யாணி உனக்குத் தான், ஆனால் நீ அவளைத் தேடாமல் இப்ப படிக்கிற வழியைப் பார்" என்றா. அவனுக்கு வெட்கமாகப் போய் விட்டது.
உயர்தரம் படிக்கும் போது அம்மாவிடம் காசு வாங்கி நல்லூர் திருவிழாவில் ஐஸ்  கிறீமும் காப்புகளும்  வாங்கி தோழி மூலம் கொடுத்தனுப்ப காப்புகளைப் போட்டுக் கொண்டு  ஐஸ்கிறீமை வழிய வழிய சாப்பிட்ட படியே கைகளை லேசாக குலுக்கிக் காட்டியபடியே அவனைத் தள்ளுமாற்போல் கிட்ட வந்து போனாள். அவனுக்கு அன்றிரவு நித்திரை பறந்து போனது; வீடு முழுக்க காப்புச் சத்தம் கேட்டது.
காலம் பறந்தோட கல்யாணி கண்ணும் கருத்துமாய்ப்  படித்து பல்கலைக் கழகம் ஏற, கனவு கண்டு கொண்டிருந்த ஆனந்தன் கோட்டை விட்டு விட்டு வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டான். கல்யாணி சொன்னாள் "பரவாயில்லை அடுத்த முறை ட்ரை பண்ணுங்கோ" என்று. அவனுக்கு ரோசம் வந்தது. ஆனாலும் கல்யாணி சொன்னதற்காக பரீட்சை எடுத்தான்.ஆனால் அடுத்த முறையும் அதே நிலைதான். அம்மாவும் அப்பாவும் அவனுக்குப் புத்திமதி சொல்லி லண்டனில் உள்ள சித்தப்பாவிடம் அவனை அனுப்பி விட்டார்கள். அவனுக்கும் முடியாது என்று சொல்ல முடியாத நிலை; அவள் கம்பசுக்குப் போக அவன் வீட்டிலே இருக்க அவமானமாக இருந்தது. லண்டனுக்கு வந்து சேர்ந்து விட்டான்.
கல்யாணியிடமிருந்து ஆரம்பத்தில் கடிதங்கள் வந்தன. பிறகு குறையத் தொடங்கியது. அம்மாவிடம் கேட்டு எழுதினான். அம்மா நாசூக்காக சில விடையங்களைத் தவிர்த்தது போலத் தோன்றியது. இவன் வற்புறுத்திக் கேட்டதில் கல்யாணி அவளோடு படிக்கும் ஒரு பெடியனோடு திரியிறாள், அவனைத்தான் கட்டுவாளாம்  எண்டு கதைக்கினம் என்றும் சொல்லி முடித்தாள். அவன் இதை உறுதிப் படுத்த கல்யாணிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றுக்கும் பதில் வரவில்லை. லண்டன் வீதிகளில் விசரன்  மாதிரித் திரிந்தான். ஆனால் ஊரிலோ நிலைமை வேறு மாதிரி இருந்தது. மாமா (கல்யாணியின் அப்பா) நாலு சாத்துச் சாத்தி வீட்டுக்குள்ள அவளை இருத்தினார். "அவன் அங்கை நீ வருவாய், அல்லது இஞ்சை எண்டாலும் வந்து கட்டுவான் எண்டு நாங்கள் நினைச்சுக் கொண்டிருக்கிறம், நீ சேட்டை விட்டுக் கொண்டிருக்கிறாய்; அவன் வாங்கித் தந்ததை எல்லாம் வாங்கி அனுபவிச்சுப் போட்டு இப்ப வேற மாப்பிள்ளை பாக்கிறியோ" என்று திட்டித் தள்ளி விட்டு, தாமதிக்காமல் காசைக் கட்டி, விமானம் ஏத்தி விட்டார் செல்ல மகளை.
சித்தப்பா தலைமையில் கல்யாணிக்கும் ஆனந்தனுக்கும் திருமணம் நடந்தேறியது. அனந்தன் மிகக் கவனமாக அவளுடன் பேசிக் கொண்டான். கடந்த காலங்களை மீட்பதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. காலம் கரைந்தோட இரண்டு குழந்தைகளும் பிறந்து, பத்தும், எட்டும்  வயதாகியிருந்தனர். ஆனந்தன் அவளை பூ மாதிரிப் பார்த்தான் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிலேயே இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாள்.
வேக வேகமான தொழில் நுட்ப வளர்ச்சி அவளுக்கு பயனாய் இருந்தது. அவளுக்கு வீட்டுக்குளே இருந்த  பொழுது போக்குகள் தொலைக் காட்சியும், இணையத் தளமும்தான். அம்மாவோடு அடிக்கடி  ஸ்கைப்பில் பேசிக் கொள்ளுவாள். ஆரம்பத்தில் இணையத்தை திரைப் படங்களைப் பார்க்கவும், பாடல்களைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும் என்று பயன் படுத்தியவள், மிக விரைவில் சமூகத் தளமான முக பக்கத்துக்குள்  புகுந்து கொண்டாள். ஒருவர் மூலம் ஒருவராக நண்பர்கள் சேரத் தொடங்கினர். சிறு வயதுத் தோழிகள் பலர் தற்செயலாகக் கிடைத்தனர். பல்கலைக் கழக நண்பிகள் சிலரும் கிடைத்தனர்.  அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காலையில் எழுந்து பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பியவுடன் கணினியைத் திறந்தால் இரவு வரை தொடரும். பின்னூட்டங்களை வாசிப்பதும்  இடுவதும், தெரிந்தவர்களுடன் அரட்டை அடிப்பதுமாக நாளின் பெரும் பகுதியை முகப் பக்கம் விழுங்கத் தொடங்கியது. ஒரு நாள் அதனைத் திறந்து பார்க்காவிட்டாலும் எத்தனையோ இழந்த மாதிரித் தெரிந்தது. ஏறக் குறைய ஒரு வித போதையாய்த் தெரிந்தது.
ஒருநாள் காலையில் முகப் பக்கத்தைத் திறந்தவுடன் இருவர் நண்பர்களாகக் கேட்டிருந்தனர். கல்யாணி நண்பர்களாக இணைக்க முன்னர் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டே இணைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் இணைக்கக் கேட்டிருந்த ஒருவருடைய விபரத்தைப் பார்த்தபோது நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. உடனேயே எல்லாவற்றையும் துண்டித்து விட்டு வந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். ஆனால் வேலையில் கவனம் சென்றால் தானே. கணினி வா வா என்று இழுக்க திரும்ப முகப் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள். இந்தத் தடவை ஒரு செய்தி வந்திருந்தது அவளுடன் பேச மிக ஆவலாய் இருப்பதாக அவளுடைய பழைய காதலன். அவள் அந்த அழைப்பை மறுத்து விட்டு வேறு விடையங்களைப் பார்க்கத் தொடங்கினாள். ஆனால் அவனோ விடாமல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தான்.நாட்கள் கடந்து கொண்டு போக, அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல அவன் பொறுக்கியெடுத்து வார்த்தைகளைத் தொடுத்து அனுப்ப என்னதான் சொல்லுகிறான் எண்டு கேப்பம்   என்று எண்ணிக் கொண்டு அவனை இணைத்துக் கொண்டாள். அவன் மரியாதையாகவே பேசினான்; அவளது வாழ்க்கை எப்பிடிப் போகிறது என்று கேட்டான். இவள் தனது அழகான குடும்பத்தைப் பற்றிச் சொல்ல சில நிமிடம் மவுனமாக இருந்து விட்டு, தனது நொந்து போன வாழ்க்கைச் சொல்லி அழத் தொடங்கினான். பிடிக்காத மனைவியைப் பற்றியும், கஷ்டமான வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றியும் புலம்பினான்; வீட்டிலே நிம்மதி இல்லை என்றான். கல்யாணிக்குக் கேட்கக் கஷ்டமாக இருந்தது.என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. என்ன செய்யிறது ஏற்றுக் கொண்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முயற்சி செய்ய வேணும் என்று சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்து விட்டாள். அவன் எனக்கு ஏன் இதெல்லாவற்றையும்  சொல்லுகிறான் என்று அவளுக்கு விளங்கவில்லை. இவனுடன் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.  நினைத்தது  மட்டும்தான்;அடுத்த நாளும் உரையாடல் தொடர்ந்தது. அதற்கடுத்தநாளும் தொடர்ந்தது. பேச்சு கடந்த காலத்தை நோக்கித் திரும்பி  மீட்கத் தொடங்கியது. கல்யாணி அவளை அறியாமலேயே அவன் விரித்த வலைக்குள் வீழத் தொடங்கியிருந்தாள்.
இப்போதெல்லாம் கணினி திறப்பதே அவனுடன் பேசுவதற்கு மட்டும்தான் என்றாகியிருந்தது. மற்ற நண்பர்கள் இணைக்கும் விடையங்களும் செய்திகளும் வீணாகத் தெரிந்தன. மணித்தியாலக் கணக்காகப் பேசிக் கொண்டேயிருந்தார்கள் கருத்தில்லாமல். நாங்கள் சேர்ந்து இருந்திருந்தால் எப்படி எல்லாம் வாழ்ந்திருந்திருப்போம் என்றான். பாவம் அவனை தான் கஷ்டப்பட வைத்து விட்டேன் என்று எண்ணிக் கொண்டாள் அந்தப் பேதைப் பெண்.
அன்று காலை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி விட்டு சில உடுப்புக்களை எடுத்து பையில் வைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் கல்யாணி.

கணவன் அனந்தன் அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டுப் போய்  விட்டான் அன்று மாலையில் வரவிருக்கும் அதிர்ச்சி தெரியாமலேயே.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

சுத்துமாத்து.


கொஞ்சக் காலமாக அம்மாவினதும் அக்காமாரினதும் நச்சரிப்புத் தாங்க முடியாமல் தொடர, கடைசியாக அரை குறை மனதாக  ஒரு மாதிரி ஓம் என்று சொல்லி விட்டான்  வரதன். இப்போதைக்கு பிரச்சனையில்லாத வேலையாய் இருந்தாலும் அதிலே இன்னும் கொஞ்சம் மேலே போக வேண்டும் என்ற ஆசை. அதை விட பொறுப்புக்கள் என்று ஒன்றும் வேறு  இல்லை. அம்மாவும் அப்பாவும்  ஊரிலே.  வரதன் பிரான்சிலே தன்னுடைய ஒரு  அக்காவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அக்காவும் அத்தானும் அவனை தங்களுடைய  மகனாகவே பார்க்கின்றனர். இன்னொரு அக்கா கொஞ்சம் தொலைவிலே வாழ்கின்றாள். அவனுடைய வயதை உடையவர்கள் எல்லோரும் அநேகமாக திருமணமாகி  விட, அக்காமாருக்கு  அவனுக்கும் விரைவில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்கின்ற ஆவல். ஆக மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து அவனை சம்மதிக்க வைத்தாகி விட்டது. கொஞ்சம் கறுப்பு, கொஞ்சம் பொது நிறம், கொஞ்சம் கட்டை, சரியான உயரம் அப்படி இப்படி என்று  கொஞ்சப் பெண்கள் தட்டுப் பட்டுக் கொண்டு போனார்கள். வரதனுக்கு ஊரிலேயே ஒரு படித்த பெண்ணைப் பார்த்தால் நல்லது என்று தோன்ற இறுதியாக ஊரிலேயிருந்து வந்த ஒரு சம்பந்தம் ( பெண்) எல்லாருக்கும் பிடித்துப் போனது. வரதனும் படத்தைப் பார்த்தான். எதிர்பார்த்ததை விட பெண் அழகாகவே இருந்தாள். அக்காவுக்கு மகா சந்தோசம்! அம்மாவுக்குத் தொலைபேசியில் முடிவைச் சொன்னார்கள். அம்மா "எல்லாரும் வடிவா யோசிச்சு முடிவைச் சொல்லுங்கோ" என்று சொன்னார். அக்கா "இஞ்சை எல்லாருக்கும் பிடிச்சிட்டிது உங்களுக்கும் பிடிச்சால் சரி" என்றாள். அம்மா "தம்பிக்கும் உங்களுக்கும் சரி எண்டால் எனக்குச் சரி" என்றாள். வரதன் இந்தியாவுக்குப் போய் திருமணத்தை முடித்து விட்டு வரத் தீர்மானித்தான். அக்காமாரும் அவனுடன் கூடப் புறப்பட்டனர். அம்மாவும் அப்பாவும் இந்தியாவில்  தெரிந்தவர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்து விட்டார்கள். பெண் வீட்டார் தாங்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் தங்கும்  ஏற்பாட்டைத்  தாங்களே செய்து கொண்டார்கள். வரதனுக்கு வேலையிடத்தில் இரண்டு வார விடுவிப்பே கிடைத்தது. அதற்குள்ளே எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்து முடிக்க வேண்டுமாதலால் முடிந்தவரை தொலைபேசியூடாக அநேகமான ஒழுங்குகளைச் செய்து முடித்திருந்தார்கள். இந்தியாவுக்குப் போய் கூறை எடுக்கலாம் என்று சொல்லி விட்டார்கள் அக்காமார். வரதன் அக்காமார் சூழ இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்தான்.தன்னுடைய மனைவியாக வரப் போகிறவளுக்கு ஆசையாக நிறையப் பொருட்களை வாங்கிச் சென்றிருந்தான் வரதன். போய்ச் சேர்ந்ததும் தனது வருங்கால மனைவியைப் பார்த்துப் பேசி பொருட்களைக் கொடுத்து அவளுடைய மகிழ்ச்சியைக் காண அவனுக்கு ஆசை.
போய்ச் சேர்ந்த நான்காம் நாள் அவன் வந்தனாவைச் (அதுதான் அவனது வருங்கால மனைவியின் பெயர்) சந்திக்க அவர்களுடைய வீட்டுக்குச் சென்றான். சின்னக்காவுக்கு அவனுடன் போய்ப் பார்க்க ஆசை. ஆனாலும் அவர்களுக்கிடையே தான் இடைஞ்சலாய் இருப்பேன் என்று எண்ணி அவனைத் தனியே விட்டாள். தாய் வந்து வரவேற்று பயணங்கள் பற்றி விசாரித்தாள். சில நிமிடங்களில் ஒரு பெண் சிரித்தபடியே தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நேரம் கடந்து கொண்டே இருந்தது. வந்தனாவைக் காணவில்லை. தாயும் எதுவும் அதைப் பற்றிப் பேசுமாப்போல் தெரியவில்லை. அவன் கடைசியாக "வந்தனா இல்லையோ? நான் கொஞ்சப் பொருட்கள் கொண்டு வந்தனான், அவவிட்டை நேர குடுத்தால் நல்லது எண்டு நினைக்கிறான்" என்றான். தாய் கொஞ்சம் கலவரப்பட்ட மாதிரித் தெரிந்தது. "இருங்கோ வாறன் தம்பி" என்றவள், உள்ளே போய் சில நிமிடங்களில் திரும்பி வந்து, "வாறா  தம்பி " என்று சொல்லி விட்டு, "நான் உள்ள சமைச்சுக் கொண்டிருக்கிறன், கட்டாயம் நீங்கள் சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும், ஏதேன் தேவை எண்டால் கூப்பிடுங்கோ" என்று சொல்லி விட்டு உள்ளே போக, முதலில் தேநீர் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போன பெண் திரும்பி வந்தாள். வரதன் அவளைப்  பார்த்து மெல்லிதாகச் சிரித்தான் மனதுக்குள் எரிச்சலை மறைத்தபடி. கொஞ்ச நிமிடங்கள் மௌனத்தை விழுங்க,...... "ப்ளீஸ், வந்தனாவைக்  கூப்பிடுறீங்களா? எனக்கு வேறை நிறைய வேலையளும்  இருக்கு" என்றான். அந்தப் பெண்ணின் முகம் பயங்கரத்துக்கு மாறியது. "நான்... நான்தான் வந்தனா"........என்றாள் அழுகைக்கு மாறிய குரலுடன். வரதனுக்கு தலைக்குள் கிண்ணென்று ஏதோ சுழர, என்னவோ பிழை என்று உறைத்தது. "என்ன விழையாடுறீங்களா?" என்று ஆத்திரத்தை மறைத்தபடியே  கேட்டுக் கொண்டு இருக்கையை விட்டு எழும்பினாள். அந்தப் பெண் "அம்மா" என்று கத்தி அழுதபடியே உள்ளே ஓடிப் போய் விட்டாள். தாய் வெளியே தயக்கத்துடன் மெதுவாக வந்தாள். வரதன் "என்ன நடக்குது இஞ்ச?" என்றான். " ஏன் தம்பி என்ன பிரச்சனை?"  "நாங்கள் போட்டோவில பாத்த வந்தனா இவவில்ல" என்றான் கோபம் இதற்கிடையில் உச்சத்துக்குப் போயிருந்தது. "இல்லைத்தம்பி, இவவின்ர போட்டோதானே அனுப்பினனாங்கள்? என்றாள் தாய். அவனுக்கு அதற்கு மேல் அங்கே நின்று அந்தப் பெண்களிடம் பேச  விருப்பமில்லாமல் முறைத்துப் பார்த்து விட்டு வெளியே வந்து விட்டான். ஆசையாகக் கொண்டு போன பொருட்கள் அப்படியே கிடந்தன.
அம்மாவும் அக்காமாரும் அவனை ஆவலுடன் பார்த்திருந்தனர். சின்னக்கா "பெம்பிளை நேரிலை எப்பிடி தம்பி"? என்றாள். அவன் நேரே தன்னுடைய அறைக்குள் சென்று வந்தனாவின் படத்தை எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டி " சொல்லுங்கோ அம்மா! இது நீங்கள் பாத்த பெம்பிளைதானே?" அம்மா படத்தைப் பார்த்ததும் "ஐயோ கடவுளே! இந்தப் படத்தைப் பாத்தே நீங்கள் எல்லாரும் ஓமெண்டு சொன்ன நீங்கள்?" என்று எல்லாரையும் திருப்பிக் கேட்டா. எல்லாரும் விறைத்து நிற்க "இது நாங்க பாத்த பெம்பிளையின்ர தங்கச்சி" என்று போட்டுடைத்தா. "அப்ப என்னெண்டு எங்களுக்கு இந்தப் போட்டோ வந்தது " என்றான் வரதன். "அப்பாவாலை சுழிபரத்தில இருந்த சாவகச்சேரிக்கு போக ஏலாமல் போனதால, பெம்பிளை பகுதி ஆக்கள் தான் பிரச்சனை இல்லை நீங்கள் விலாசத்தைத் தாங்கோ நாங்கள் போட்டோவை அனுப்பி விடுறம் எண்டு சொல்லி நாங்கள் உன்ர விலாசத்தை குடுத்தனாங்கள்" என்றா அம்மா. "அதுதான் நான் உங்களைத் திரும்பத் திரும்பக் கேட்டனான் பிடிச்சிருக்கோ, வடிவா யோசிச்சு முடிவைச் சொல்லுங்கோ எண்டு, ஆனால் கடவுளே! ஆருக்குத் தெரியும் இப்பிடி போட்டோவை வைச்சு சுத்து மாத்துச் செய்யிற ஆக்கள் எண்டு? பாத்தா நல்ல படிச்ச மனிசரா இருக்கினம் எண்டு தானே நாங்களும் நம்பினாங்கள்" அம்மா புலம்பத் தொடக்கி விட்டா. அக்காமார் என்ன செய்வது  என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றனர். அத்தான் இரு நான் போய் கேட்டுக் கொண்டு வாறன் என்ன கேவலமான வேலை இது? இப்பிடி எல்லாம் மனிசர் இருப்பினமோ? என்று கொதித்துக் கொண்டு வெளிக்கிட்டார்.
வரதன் தடுத்து நிறுத்தினான். "இனிமேல் இதப் பற்றிக் கதைச்சுப் பிரயோசனமில்லை; ஆனால் அவை நினைக்கிற மாதிரி இந்தக் கலியாணம் நடக்கப் போறதுமில்லை. எல்லாரும் வந்த மாதிரி திரும்பிப் போவம்" என்றான் நிதானமாக. அம்மா அவனைப் பாத்து "ஐயோ ஒரு பெம்பிளப் பிள்ளையின்ர பாவம் எங்களுக்கு வேண்டாம் தம்பி, தாய் தகப்பன் செய்த பிழைக்கு அந்தப் பிள்ளை என்ன செய்யும்? என்ர ராசா நீ அந்தப் பிள்ளைய செய்" என்றாள் கலக்கமாக. வரதன் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "அம்மா இது ரெண்டு பேரின்ர வாழ்க்கை அம்மா; உங்கடை சொல்லுக்காக நான் இப்ப அந்தப் பிள்ளையை செய்தால் வாழ்க்கை முழுக்க ரெண்டு பேருக்குமே நரகமாத்தான் இருக்கும். நீங்கள் கவலைப்படதயுங்கோ! அந்தப் பிள்ளைக்கும் ஒரு நல்ல விரும்புற வாழ்க்கை கிடைக்கும், எனக்கும் ஒரு நான் விரும்புற வாழ்க்கை கிடைக்கும்" என்ற போது அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

சனி, 1 செப்டம்பர், 2012

ஊருக்குபதேசம்!

வீடு ஒரே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. சங்கரி கத்திக் கொண்டிருந்தாள். "இவளுக்குப் படிச்சுப் படிச்சுச் சொன்னனான்; கவனமாயிரு இப்பிடியான பிரச்சனைகள் எல்லாம் வரப் பாக்கும் எண்டு. பார் இப்ப என்ன மாதிரியான வில்லங்கத்தை வாங்கிக் கொண்டு வந்து நிக்கிறாள்; நாங்கள் சொன்னதெல்லாத்தையும் ஒரு காதால கேட்டு மற்றக் காதால விட்டிட்டு இப்ப முழிசிக் கொண்டு நிக்கிறாள்" கோபத்தில் கழுவிக் கொண்டிருந்த பாத்திரத்தை ஓங்கி அடித்து வைத்தாள். மகள் வேணி ஒன்றும் பேசாமல் விரல் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள். திரும்பிப் பார்த்த சங்கரிக்கு கோபம் உச்சிவரை ஏறியது. "உதில மரம் மாதிரி நிண்டு என்ர கோபத்தைக் கிளறாமல் எங்களுக்கு இண்டைக்கு ஒரு முடிவு சொல்ல வேணும்; நீ என்ன சொல்லுறது நாங்கள் சொல்லுறதை நீ கேக்க வேணும், அவ்வளவுதான்"
வேணி தாயை நிமிர்ந்து பார்த்தாள். "என்னடி முறைக்கிறாய்? இதெல்லாம் என்னட்டைச் சரி வராது, சொல்லிப் போட்டன்......
"ஏன் சும்மா பாக்கவும் கூடாதோ?"
" சும்மா பாக்கிற மாதிரியே கிடக்குது? எத்தினை வருஷமா இதுக்குள்ளை கிடந்தது சேவை(???) செய்து மாயுறம்; எங்களுக்கென்ன விசரே இப்பிடியெல்லாம் செய்ய? எங்கட செல்வாக்கால உன்னையும் அதுக்குள்ளால வளத்து விடலாம் எண்டு நாங்கள் நினைச்சுக் கொண்டு இருக்க நீ என்ன வேலை பாத்துக் கொண்டு நிக்கிறாய்? சரி லவ் பண்ணினதுதான் பண்ணினாய் ஒரு தராதரம் பாத்துச் செய்திருக்கக் கூடாதோ?"....
"உங்கடை தராதரம் எண்டா என்ன எண்டு சொல்லுங்கோ முதல்ல. உங்கட தராதரம், உயரம், நீளம், அகலம் எல்லாம் பாத்து அது வாறேல்லை"
மகளின் பேச்சைக் கேட்டு சங்கரி திகைத்து நிற்க, கணவன் மனோ அறைக்குள்ளிருந்து வெளியே பாய்ந்து வந்து கைகளால் மகளுக்கு விளாசத் தொடங்கினான். திகைத்துப் போய் நின்றிருந்த சங்கரி நிலைமையை உணர்ந்து ஓடி வந்து கணவனைப் பிடித்து இழுத்துப் பிரித்தாள். அவனுக்கு மூச்சு வாங்கியது. அடி வாங்கின மகளோ கண்கள் கலங்கினதே தவிர நின்ற இடத்தை விட்டு அசையாமல் நின்றாள். " பார் அவளை அடி வாங்கியும் கல்லு மாதிரி நிக்கிறாள். கொழுப்பு.. நாங்கள் பாத்துப் பாத்து வளத்துவிட ஆரோ ஊர் பேர் தெரியாதவனை எங்களுக்கு காட்டுறாள்... உன்ர படிப்பை எண்டாலும் நினைச்சனியே! படிப்பு முடிச்சு வேலைக்குப் போகப் போறாய் நீ அவன் அங்கை பத்தாம் வகுப்புப் படிச்சுப் போட்டு இஞ்சை வந்து விசாவுக்குப் பாத்துக் கொண்டிருக்கிறான். உது சரி வருமே? கொஞ்சமெண்டாலும் உன்ரை எதிர்காலம் எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தனியே? வார கோவத்துக்கு உன்னை வெட்டிப் போடா வேணும் போல கிடக்கு. செய்யிறதையும் செய்து போட்டுக் கதைக்கிறாள் கதை......
"நீங்க உள்ளுக்க போங்கோப்பா நான் அவளோட கதைக்கிறன்என்ற சங்கரிக்கு அவன் திரும்பவும் மகளை அடித்து விடுவானோ என்று பயமாக இருந்தது. அதனால் வேணியின் வைராக்கியம் கூடி விடக் கூடிய நிலைமையையும் உணர்ந்திருந்ததால் கணவனை மகளை நெருங்க விடாமல் இடையில் நின்று கொண்டாள்.
மனோவுக்கும் சங்கரிக்கும் ஒரே மகள் வேணி. எல்லாமே தங்கள் சார்பாக இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் கணவனுக்கேற்ற மனைவி மனைவிக்கேற்ற கணவன். சுயநலத்துக்காய் பொதுநலத்துக்குள் ஓடித்திரிபவர்கள். இலவச ஆலோசனைகளை அள்ளி அள்ளித் தேவைப்படுவோருக்கு வழங்குபவர்கள். ஆனால் வீட்டுக்குள்ளே சிக்கல் வந்த பொது "ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி பெண்ணே" என்றதை மகளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
வேணிக்கு பொதுப் பணியிலே தன்னை இணைத்துக் கொண்ட யுவன்சனை ஏனோ பிடித்துப் போய் விட்டது.காதலுக்கு மனம் மட்டும் போதுமே! கலியானத்துக்குத்தானே மண்டையைப் போட்டுப் பிய்க்க வேண்டி உள்ளது. எதையும் (எதிர்) பாராது மனங்கள் விரும்பி, பேசி, நெருக்கமாக முதலில் வெளியே புகைந்து பின் அனலாகி வீட்டுக்குள்ளே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. வெட்டிப் பிரித்து மகளைக் கட்டிப் போட்டனர்.கூட இருந்து துணை போனவர்களெல்லாம் வசவுகளுக்கு உள்ளானார்கள். யுவன்சனுக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை. விசா வேறு இல்லை. காலம் நல்ல பதில் சொல்லும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தான். ஆனால் ஆனால் மறுபக்கத்தில் வேணியை எப்படியெல்லாம் சொல்லி மனம் மாற்ற முடியுமோ அப்படி மாற்றிக் கொண்டிருந்தனர் அவளுடைய பெற்றோர். இரண்டு மாதங்களில் அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளையை லண்டனில் பொறுக்கி எடுத்தனர். படத்தைக் காட்டினர்;
அவள் "நான் செத்துப் போவேன்" என்றாள்.
 " நாங்கள் முதல் செத்துப் போறோம், அதுக்குப் பிறகு நீ ஆரோடஎண்டாலும் ஓடிப்போ" என்றார் தந்தை.  
அவள் தலையில் அடித்துக் கொண்டு நாள் முழுக்க அழுதாள். யாரும் கண்டு கொள்ளவில்லை.அதற்கு மேல் அவளிடமிருந்து ஒன்றும் கேட்காமல் திருமண நாள் குறித்து பொறுக்கி எடுத்த மாப்பிள்ளையைக் கொண்டு சகல பாதுகாப்போடு தாலி கட்டுவித்தார்கள். தங்கள் தராதரத்தோடு கூடிய லண்டன் இன்ஜினியர் மாப்பிள்ளையோடு லண்டனில் வாழ மகளை அனுப்பி விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
 வேணிக்கு மனம் எதிலும் ஒட்டவில்லை; மாமியார் அன்பாயிருந்தார்; கணவன் சாதாரணமாய்ப் பேசினான். அவர்களுக்கு தனது பிரச்சனை தெரியுமா தெரியாதா என்று கூட அவளுக்கு விளங்கவில்லை. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. இரண்டு கிழமைகள் இப்படியே யுகமாய்க் கழிந்தன. ஒரு நாள் கணவன் வீட்டுக்கு வர நேரமாகி விட்டது. பார்த்துப் பார்த்து இருந்தவள் கண்கள் கனக்க அப்படியே நித்திரையாகிப் போனவள் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழும்ப கணவன் வந்து விட்டிருந்தான்இரவு பத்தரையைத் தாண்டியிருந்தது. "என்ன நல்ல கனவைக் குழப்பீட்டன் போல இருக்கு"...... என்றான். "இல்லை உங்களைப் பாத்துக் கொண்டிருந்தனான் அப்பிடியே நித்திரையாப் போனன்" என்றாள் அப்பாவியாக. "ஓமோம்! நித்திரை வரும் நல்லா. அங்கை இரவு பகலா நீங்கள் போட்ட ஆட்டத்துக்குப் பிறகு இப்ப நல்ல நித்திரை வரும் தானே" என்று நக்கலாகச் சொன்னவன், "எல்லாரும் நித்திரை கொள்ள எனக்கெல்லோ இப்ப நித்திரை துலைஞ்சிட்டுது" என்று சொல்லியபடியே குளிக்கப் போய் விட்டான். வேணி பேசாமல் சாப்பாட்டை எடுத்துச் சூடு பண்ணத் தொடங்கினாள். தனது வாழ்வின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கப் போவது தெரிந்தது.

தாய்க்கு தொலைபேசி எடுப்பதில்லை என்ற முடிவோடு இருந்தவள் மனச் சஞ்சலத்தில் தொலைபேசி எடுத்தாள். எடுத்தது அம்மாதான் "பிள்ளையே! நான் எடுக்க வேணும் எண்டு இருக்க நீ எடுக்கிறாய்; எப்பிடி இருக்கிறாய் பிள்ளை? அரும் பொட்டிலை தப்பினாய், இப்ப பாத்தியே எப்பிடி ஒரு அருமையான வாழ்க்கை உனக்குக் கிடைச்சிருக்கு? நான் கும்பிட்ட தெய்வங்கள் என்னைக் கை விடேல்லை. கொஞ்சம் பொறு பிள்ளை அப்பாட்டைக் குடுக்கிறன், கதை. நான் பிறகு உனக்கு எடுத்துக் கதைக்கிறன். இஞ்ச எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பம் ஒரு சிக்கலில இருக்குது, ஒருக்கா அதைப் பாக்க வேணும் வந்திருக்கினம் வீட்டு தேடி பாவங்கள் ......மகளைப் பேச விடாமல் தானே கதைத்துக் கொண்டிருந்தவள் கணவனைக் கூப்பிட்டு "அப்பா இந்தாங்கோப்பா  பிள்ளை லைனில நிக்கிறாள் கதையுங்கோ..."என்று தொலைபேசியை கொடுத்தபோது வேணி தொடர்பைத் துண்டித்தாள்.


 

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

நிலவுக்கொழித்து..........

எது நடக்கக் கூடாது என்று கொஞ்ச நாளாக பாமினி நினைத்துப் பயந்து கொண்டிருந்தாளோ அது நடந்து விட்டது. இறுக்கமான சப்பாத்துக்களை அணிந்து கர்ச்சித்துக் கொண்டு அலைந்தவர்களைப் பார்த்துப் பயந்து லண்டனுக்கு வந்து சேர்ந்திருந்தாள் பாமினி. இங்கே வந்து சேர்ந்ததும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் போல் இருந்தது. நாட்டில் இருந்து புறப்படும்போது இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொண்டிருந்தபடியால் இங்கே வந்து வேகமாக முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இங்கே வந்து ஆங்கிலேயருடன் பேசத் தொடங்கியபோது தான் தெரிந்தது தன்னுடைய ஆங்கிலப் புலமையின் அளவீடு. எப்படியும் ஆங்கிலத்தைப் பிடிக்காமல் விடுவதில்லை என்று கங்கணங் கட்டிக் கொண்டு வயது வந்தோருக்கான பள்ளியில் (college ) சேர்ந்து கற்கத் தொடங்கினாள். அது மட்டுமல்ல ஒரு அரச உத்தியோகம் எடுத்து விடுவது என்பதுவும் ஒரு கனவு. கனவுகளைக் கலைக்க திருமணமும் இரண்டு பிள்ளைகளும் வந்து சேர்ந்தார்கள். குழந்தைகளைக் கவனிக்க வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. கணவன் மணிவண்ணன் விட்ட குறை தொட்ட குறையாய் சமூகப் பொறுப்புக்களிலே அக்கறை காட்டிக் கொண்டிருந்தான். கிடைக்கும் நேரம் முழுவதுமே நாடு, மக்கள், உதவி என்று போய்க் கொண்டிருந்தது. பாமினி கணவனைத் தடுக்கவில்லை; ஆனால் ஏற்படக் கூடிய விளைவுகளைச் சுட்டிக் காட்டினாள். வாழ்க்கையிலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேராவல் இருக்கும். சிலருக்கு உணவிலே, சிலருக்குப் பொன்னிலே பணத்திலே, சிலருக்குப் புகழிலே, சிலருக்குப் பதவியிலே, சிலருக்கு அறிவியலிலே (சிலருக்கு அடுத்தவருக்குக் குழி பறிப்பதிலே கூடஒரு சிலருக்கு தன் இனம், சமூகம் சார்ந்த சிந்தனை என்று இந்தப் பட்டியல் நீண்டு போகும்இதிலே கடைசி வகைக்குள் மணிவண்ணன் அடக்கம். இந்தச் சிந்தனை அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. புலம் பெயர்ந்த நாடுகளிலே "ஒழுங்கு முறையாக" (?) இருக்க வேண்டும் என்று நினைப்பவள் பாமினி. அதாவது எதிர்  விளைவுகள் எதுவும்  குடும்பத்தைப் பாதித்து விடக்கூடாது என்று எண்ணுபவள். ஆனால் அவனோ எதிர்மாறான எது நடந்தாலும் நடக்கட்டும் எனும் போர்க் குணம் கொண்டவன்.

அந்த அதிகாலைப் பொழுது உலக நாடுகள் சில ஓர் இன விடுதலைக்கெதிராய் கைகளைக் கோர்த்துக் கொண்டு திட்டமிட்டு நேருக்க ஆரம்பித்த நாட்களின் தொடக்கமாய் இருந்திருக்க வேண்டும். இளவேனிற்காலத் தொடக்க விடியல் நேரம் ஏறக்குறைய ஐந்து மணி.
வீட்டுக் கதவு பட பட வென்று தட்டப்படும் பயங்கரச் சத்தத்துடன் வீடே திடுக்கிட்டெழுந்தது. வீட்டுக் கதவு பட பட வென்று தட்டப்படும் பயங்கரச் சத்தத்துடன் வீடே திடுக்கிட்டெழுந்தது. பிள்ளைகள் அறைக்குள் இருந்து  அம்மா என்று கத்தியபடியே வெளியே ஓடி வந்தார்கள். மணிவண்ணன் நித்திரை கலைந்து முழுமையான  நிதானத்துக்கு வந்தான். என்னவென்று விளங்கியது. பிள்ளைகளைப் பார்த்து "ஒண்டுமில்லை அழாதையுங்கோ" என்றான்.மனைவி பிள்ளைகளை  ஆயத்தப் படுத்துமுன் வெளியே நின்றவர்கள் "நாங்கள் போலீஸ் கதவைத் திறவுங்கள் இல்லாவிடின் உடைப்போம்" என்று குரல் கொடுத்தபடியே கதவை பலமாக தொடர்ந்து தட்டினர். மணிவண்ணன் "நாங்கள் கதவைத் திறக்கிறோம்" என்று கூறியபடியே கதவைத் திறந்தான். அதே இறுக்கமான சப்பாத்துக்கள் ஐந்து சோடி உள்ளே வேகமாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய அதிலொருவன் மணிவண்ணனைப் பிடித்துத் தள்ளி கைகள் இரண்டையும் பின்னால் சேர்த்து விலங்கை மாட்டினார். பாமினியை அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் பயந்து போய் அப்பாவையும் அப்பாவின் கைகளையும் வந்திருந்தவர்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாமினி அவர்களை இரண்டு கைகளாலும் சேர்த்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். வந்தவர்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரையும் அழைத்து வந்திருந்தனர். அவனுடைய முகத்தில் காந்தி சிரித்துக் கொண்டிருப்பதாக பாமினிக்கு ஏனோ பட்டது.

வந்த குழுவுக்குத் தலைமை தாங்கியவன் பாமினியையும் பிள்ளைகளையும் அசையாமல் ஓரிடத்தில் இருக்கும்படி சொல்லி விட்டு வீட்டைக் கவிழ்த்துப் போடத்  தொடங்கினர். மூத்த மகன் கிருஷாந்தனுக்குப் பத்து வயது. அம்மாவின் வலது பக்கத்தில் இருந்து கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.சின்னவன் அனுஷனுக்கு ஆறு வயது. அம்மாவின் இடது பக்கம் அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான்.கிருஷாந்த இப்படியான சம்பவங்களை சினிமாக்களிலே பார்த்திருக்கிறான். அவைகள் சாகசமாகத் தெரிந்திருந்தன. ஆனால் நேரிலே அவை முரண்பாடாயிருந்தன. இது அப்பாஇவர்கள் அப்பாவை ஏதோ செய்யப் போகிறார்கள் என்ற பயத்திலே அழுகை வந்தது. பயத்தில் அவனுடைய கால்கள் லேசாக நடுங்குவது தெரிய பாமினி அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்து "பயப்பிடாதையுங்கோ தம்பி ஒரு பிரச்சனையுமில்லை. அப்பாவை விட்டிடுவினம்" என்றாள்.
அப்பாவுக்கு கைகளில் நோகுமே! அவனுக்கு அப்பாவிலே அதிக மரியாதையுடனான நம்பிக்கை இருக்கிறது. அப்பா எப்போதும் மனிதருக்குப் பயப்படும் ஆள் இல்லை. எதையும் அறிந்து சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் மனிதர். அடுத்தவரை மதிக்கத் தெரிந்தவர். அப்படிப் பட்ட அப்பாவின்  கைகளைக் கட்டி வைத்து பேச்சிழக்க வைத்திருப்பது சரியில்லை என்று சொல்ல விரும்பினான். ஆனால் அப்பாவே மௌனமாக இருக்கிறாரே. என்னுடைய அப்பா பிழையாக ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் அம்மாவும் அப்பாவும் பேசாமல் இருக்க வந்தவர்கள் ஏதோ தேடிக் கொண்டிருந்தனர். மூலை முடுக்கெல்லாம் தேடித் தேடி ஒவ்வொன்றாக பிரித்துப் போட்டுக் கொண்டிருக்க கிருஷாந்தன் பாடசாலைக்குப் போக வேண்டிய நேரம் நெருங்கியது. அவன் குளியலறையிலிருந்து உடுப்புப் போடும் வரை ஒருவன் பக்கத்திலேயே இருந்தான். (அந்த இடை வெளிக்குள் பாமினியும் பிள்ளைகளும் ஏதாவது செய்து விடுவார்களாம்). அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
காலை ஏழு மணியளவில் எதுவுமே கிடைக்காமல் ( சமூகப் பணி செய்பவர்களிடமிருந்து வேறு என்ன கிடைக்கும்?) களைத்துப் போய் மணிவண்ணனை தங்களுடைய வாகனத்தில் ஏற்றினார்கள். பாமினி நப்பாசையுடன் "இவரை எப்ப விடுவீங்கள்"? என்று கேட்க நக்கலான சிரிப்புடன்,  "நாட்கள் எடுக்கும் இப்ப வருவார் என்று எதிர் பார்க்க வேண்டாம்" என்று சொல்லி தங்களுக்குள் சிரித்துக் கொண்டே ஏறினார்கள். இவங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இவங்களின்ர குணங்கள் ஒண்டுதான் என்று மனதுக்குள் எரிச்சலடைந்தாள்.

மணிவண்ணன் போயிட்டு வாறன் என்றான் அவள் தலையாட்டினாள். கிருஷாந்தனுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. சின்னாவன் இப்போதுதான் ஏதோ விளங்கின மாதிரி அப்பா என்று கத்தத் தொடங்கினான். பாமினி அக்கம் பக்கம் பார்த்தாள் யாராவது பார்க்கிறார்களா என்று. நல்ல வேலை யாரும் இருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து விரைவில் போனால் நல்லது என்றிருந்தது விடுப்புப் பார்க்கும் கூட்டம் சேரும் முன்.

பிள்ளைகள் இருவரையும் இறுகப் பிடித்து வாகனம் போவதைப் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கே அழுகை வருமாப்போல் இருந்தது. அவனை நினைத்து அல்ல: பிள்ளைகளையும் வரப் போகும் நாட்களையும் நினைத்து.


மணிவண்ணன் கண்ணாடி வழியாகத் திரும்பி பிள்ளைகளைப் பார்த்தான். கிருஷாந்தனிடமிருந்து விம்மல் வெடித்துக் கிளம்பியது. தாயின் கைகளை விடுவித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடிப் போய் தன்னுடைய தோள் பையை எடுத்துக் கொண்டு மீண்டும் தெருவுக்கு வந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். பாமினி சின்னவனைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் ஓடினாள். "தம்பி நான் பள்ளிக் கூடத்துக்கு கொண்டு போய் விடுகிறேன் வாங்கோ, அழுது கொண்டு போகாதயுங்கோஇல்லாவிட்டால் இண்டைக்கு வீட்டை நிண்டு விட்டு நாளைக்குப் போகலாம்" என்றாள். அவனோ "இல்லை நான் தனிய பஸ்சில  போறன்" என்று சொல்லிக் கொண்டு கண்களை இரண்டு கைகளாலும் அழுத்தித் துடைத்தான். அவனுடைய முகத்தில் கோபம், ஏக்கம், ஏமாற்றம், கவலை ஒருங்கிணைந்திருந்தன. பாமினி மகனை நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள். "அப்பா குற்றம் செய்து போகவில்லை, நாட்டுக்காக அவர் செய்த சேவைக்காகப் போயிருக்கிறார்; கெதியிலை வந்திடுவார். நீங்கள் கவலையாக இருப்பது அப்பாவுக்குப் பிடிக்காது எண்டு உங்களுக்குத் தெரியும், அழாமல் நல்லாகப் படிக்கிறதை மட்டும் நினையுங்க".....கதைத்தபடி அவனைத் திருப்பி வீட்டுக்குக் கூட்டி வந்து காரிலே கொண்டு போய் பாடசாலைக்கு விட்டு விட்டு வந்தாள். மகன் உள்ளே போய் சேருமட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எவ்வளவோ சொல்லியும் அவனுடைய முகத்தில் கலவரம் அப்பி இறுகிக் கிடந்தது. அந்தச் சிறுவனால் அப்பாவைப் பார்த்த கோலமும் அவர்கள் நடந்து கொண்ட விதமும் ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையை உண்டாக்கியிருந்ததை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவனுடைய நாள் மிக நீண்டதாயிருக்கும்; எதிலேயுமே கவனம் செல்லாது; தனியே யோசித்துக் கொண்டிருப்பான்; அழுது காட்டிக் கொடுத்து விடுவானோ என்றெல்லாம் எண்ணிக் குழம்பியே அவளுடைய நாள் யுகமாகியிருந்ததுவீட்டிலே வைத்திருந்திருக்கலாம்; ஆனால் எத்தனை நாட்களுக்குஅனுப்பாமலும் விட்டால் காரணம் சொல்ல வேண்டும். அதை விட அங்கே பிள்ளைகளோடு சேர்ந்து இருந்தாலாவது கொஞ்சம் சிந்தனை மாறுபடும் என்று பாமினி நினைத்தாள். வீட்டில் இருக்க முடியாமல் பாடசாலை முடிவடைவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னரே வாசலில் போய் நின்று கொண்டாள். பாடசாலை முடிந்து எல்லாப் பிள்ளைகளும் வந்து கொண்டிருக்க கடைசியாக தனியே தலையைக் குனிந்து கொண்டு வந்தான். அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பேசாமல் வந்து காருக்குள் ஏறிக் கொண்டான். வீட்டுக்கு வந்து பேச்சுக் கொடுத்தாள். ஆனால் அவனோ பேச விருப்பமின்றி தன்னுடைய அறைக்குள் போய் இருந்து கொண்டான். அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. யோசித்துக் கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று தன்னுடைய மருத்துவரின் ஞாபகம் வந்தது. மிக நீண்ட காலத் தொடர்புடையவர்; நம்பிக்கைக்குரியவர்; அன்பாகப் பேசக் கூடியவர். அவரிடம் போய் வந்தால் மகனுக்கு நன்மை ஏற்படும் என்று எண்ணினாள். உடனேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரம் என்று சொல்லி அடுத்த நாளுக்கே பதிவு செய்து கொண்டு விட்டு மகனைக் கூப்பிட்டாள். அவனைத் தனிமையில் விடவும் பயமாக இருந்தது.
இந்த நிலையில் சின்னவனைப் பாடசாலைக்கு கொஞ்ச நாளைக்கு அனுப்புவதில்லை என்று முடிவெடுத்தாள். கிருஷாந்தையும் அப்பா எப்ப வருவார் என்று ஒரு பதினைந்து தடவையாவது இதுவரை கேட்டு விட்ட சின்னவனையும் தனியே சமாளிக்கும் நிலைக்குத் தன்னை ஆயத்தப் படுத்தத் தொடங்கினாள். அவளையறியாமலே அவளுடைய அம்மாவை அடிக்கடி நீங்கள் இங்கே வாங்கோ அம்மா என்று கூப்பிடும் போதெல்லாம் "நிலவுக்கொழித்துப் பரதேசம் போறதோ" என்று பதில் சொல்லும் அம்மாவின் ஞாபகம் வந்தது.