சனி, 30 மே, 2015

எமது திருமணநாள் (28 மே).

இளைய சமுதாயம் அழகாகச் சிந்திக்கிறது.

"இன்னும் நிறைய சண்டைகள் போட்டு, 
இன்னும் நிறைய வருடங்கள் வாழ வாழ்த்துகிறேன்"

(எமது திருமண நாளான நேற்று எமது மகனின் எமக்கான வாழ்த்து இது).


இன்று போல தெரிகிறது 
    அந்த நாள் 
இன்று வரை மாற்றமில்லை
    அந்த நாள் 
அன்று தொடங்கியதாகவே
    சந்து பொந்துகளினூடே
சென்று கடக்கின்றது
    விந்தையான மணவாழ்வு 
மென்று முழுங்கிய நாட்களும் 
    கந்தலாகி விடவில்லை
கொன்று போட்டும் விடவில்லை
    எந்தை தாய் நினைந்து
வென்று கொண்டிருக்கிறோம் 
    வந்த வாழ்வை வரமாய்.


வி. அல்விற்.

அம்மா!

எனது கோபங்களையும்
எனது அகங்காரத்தையும்
எனது வார்த்தைப் பிழைகளையும் 
காலம் கடத்தி கலங்க வைக்கின்றன
தினமும் உன் நினைவுகள் 


அம்மா!

வி. அல்விற்
மே. 2015.

கிளைக்கதைகள்.

மயானங்களற்ற வெளிகளிலிருந்து 
வெடித்தெழுந்து கொண்டிருக்கின்றன
ஓராயிரம் கிளைக் கதைகள்
மூடப்பட முடியாமல்.


வி. அல்விற்.

மன்னிப்பு.

மன்னிப்பு.

எதையிட்டாக இருக்க வேண்டும் 
உங்கள் மீதான
எனது மன்னிப்பு 
என்று எதிர்பார்க்கிறீர்கள்.

கொடுவதை புரியும்
உங்கள் வார்த்தை மீதா
வார்த்தைகள் தரும் 
கசப்பின் மீதா
அவை கிழிக்கும் 
கோடுகள் மீதா

எதுவென்று சொல்ல

நாகரீகத்தின் உச்சியில் நின்றபடி 
அசிங்கமாக காறி உமிழ்கிறீர்கள்
மறைக்க முடியாத 
உங்கள் உள் முகங்களை
உள்ளிழுத்தபடியே.

ஓடவெழும் என் கால்களை 
அழுத்தமாக தரைபதித்து
நிமிர்கிறேன்
உங்கள் நாற்றமெடுத்த சிந்தனைகள் 
நாணம் கொள்ளும்படி.

பச்சையிரை தின்ன அவாவுறும்
உங்கள் வாய்களை
மன்னித்து இரையாகும்படி
கேட்க விரும்புகிறீர்களா

எனது வார்த்தைகளுக்கு 
விலங்கிட்டு 
வெளியே வராத 
ஆயுள் கைதியாய்
மறைத்துவிடும் 
உங்கள் களவாணித்தனங்களுக்கு
மன்னிப்பளித்து மாண்டு விட 
இன்னும் முடியாதிருக்கிறது

உங்கள் பலங்களெனும்
சீரறுப்புக்களை
இறக்கி வைப்பதற்கான 
பேரிடம் எனதுடலென
கையெழுத்திடப்படாத சட்டம் 
எழுதி வைத்தது யார்

மன்னிப்புக்களை 
மாறாட்டத்துடன் மிதித்து விட்டு
மதத்துக் கிடப்போரே
மந்தாரம் விலக்கி 
மனிதராய் பாருங்கள் 

எதையிட்டு 
உங்களை மன்னிக்க முடியும்?

வி.அல்விற்.
29.03.2015.


(இது மார்ச் மாதம் ஒரு சிற்றிதழுக்காக எழுதி அனுப்பாதது).
என்றைக்கும்.

அடர்வனத்தில் 
இல்லையெனாத 
பசிய மர நெருக்கம் போல 
நெருங்கியுள்ள
கடந்த கால கசப்புக்கள்
இன்னும் 
இன்னும் 
துளிர்த்தபடியே.

இங்கே பழுத்தல்
நிகழ்வதில்லை 
வீழ்ந்தொழிய.

எப்போதும் கூடவே
பேச்சொலிகள்
தோள் பற்றித் 
தொடருகின்றன

எங்கும் நிறைந்திருப்பதான 
தெருக்களும் 
அடையாளங்கள் உணர்த்தும் 
தடங்களும் 
கனவிலும்
கைபற்றிச் செல்லுகின்றன

நினைவுகள் 
வழி தொலைத்த 
காட்டின் வழி 
ஏதிலியென
பலமுறை தடுமாறியபடியே
பயணிக்கின்றன.

அறியவும் 
அறியப்படவுமாயுள்ள
பிரார்த்தனைகளின் பட்டியல் 
நீளமானதொன்றாயிருக்கிறது

பிரார்த்தனைகளை 
நிறைவேற்றவும் 
நாளைக்கான மணித்துளிகளை
எண்ணவுமென

சமுத்திரமளவுள்ள நம்பிக்கைகள்
இன்னுமிருக்கின்றன.

வி. அல்விற்.

25.05.2015.

சனி, 9 மே, 2015

வெற்றஞ்சல்.

வெற்றஞ்சல்.

சேர்த்து வைத்திருக்கிறேன்

சொற்புணர்ச்சிகளையும்
சொற்பிரிப்புக்களையும்
முன்னாலே பரத்தி வைத்தபடி

காலம் பார்த்து
ஒழுங்கமைத்துவிட.

அடிக்கடி வழுகி விழும்
ஈரம் காய்ந்த
நிழல் நாட்களை
அள்ளிப் போட வேண்டியிருக்கிறது
பெரும் பிரயத்தனத்துடன்.

உச்சி முகர்ந்த அம்மாவின்
கடைசி முத்தத்தையும்

கனவுகளில் தொலைந்து போகும்
தெருக்களையும்

தூக்கம் கலைத்து
அடிக்கடி பேசிப் போகும்
இல்லா உறவுகளையும்

உணர்வறுந்த உறவுகளின்
பிறழ் நிலையையும்

வழியெங்கும் புல் விதைக்கும்
பேதமைகளையும்

வரம் வாங்கி வந்த
வாழ்வு தரும் அபத்தங்களையும்

உயிர்ப்பாக வரைந்து
கைகளில் சேர்த்து விட

கையெழுத்திட்ட
வெற்றஞ்சலை வைத்துக்
காத்திருக்கிறேன்

வி. அல்விற்.

06.05.2015.