புதன், 3 டிசம்பர், 2014

கண்ணீர்த்துளி

மௌன நீட்டத்தில்
மூழ்கி
பேச முடியாது
திணறிய
அத்தனை வார்த்தைகளையும்
ஒரு கண்ணீர்த்துளி
பேசி வீழ்கிறது
தானும் மௌனமாக.

வி. அல்விற்.
28.11.2014.

இன்னும்

நாட்களின் பதகளிப்பில்
கனமாய் ஊர்கின்றன
வினாடி முட்கள்
பேரொலியுடன்.
இடியுடனான மழையிலும்
பேய்ச்சுழற்சிக் காற்றிலும்
நனைந்தும் அலையுண்டும்
உதறலுடன் நிற்கையில்
மீந்தொலிக்கின்றது
வினாடி முள்
முன்னே நகர விடாது.
இந்த அலைச்சலும் கூட
சுகமானது போல
சமாதானப்படும் தன்னிரக்கத்துடன்
இன்னும் நின்றபடியே.......

வி. அல்விற்.
25.11.2014.

கல்லறைக் காதைகள்.

கல்லறைகள்
கனம் இறக்க
கதவகற்றிச் சில
காதோடு தம்
காதை பல
பேசி விடின்
சில்லறைகள்
சிதறி விடும்
சொல்லியங்கள்
தடம் புரளும்
பல்லக்கில் ஏறியோர்
பாதங்களும் துவண்டுவிழும்
உள்ளேயே வாழ்ந்திடுங்கள்
உள்ளங்கையில் மலரேந்தி
உள்ளத்தில் உமையேந்தி
உண்மையாய் நினைப்போர்
உள்ளனர் இன்னுமென்றெண்ணி.

வி. அல்விற்.
27.11.2014.

உண்மைகள்

மறுக்க முனைந்தும்
எங்கோ ஒரு
திரும்ப முடியா
ஏதோவொரு
சந்தில் 
நழுவியுடையும்
மட்பாண்டமாய்
சிதறித்தெறிக்கின்றன
தடுக்க முடியாத
உண்மைகள்.

வி. அல்விற்.
20.11.2014.

எழுகை.

இடிப்பது கட்டுவதற்கும்
குலைப்பது ஒழுங்கமைக்கவும்
கொத்துவது பண்படுத்தவும்
புதைப்பது மீள் உரமாயும்
மாறுகையில்....
சிதைவில்லா பெறுமதி
பெருஞ்சுவராய் எழுகிறதே!

இடித்துக்கொண்டே இருங்கள்
தனித்தனிச் சுவர்கள்
பெருங்கோட்டையாய்
எழட்டும்.

வி. அல்விற்.
03.11.2014.

கணக் கனவுகள்.

துளிர்ப்புக்கு இரங்கும்
மொட்டை மரத்தின்
தனிமைத் துயர் போல
அமிழ்ந்திருக்கும்
மீளப் பெறமுடியாத 
நினைவுப் பெட்டகத்திலிருந்து
அடித்தெழுப்புகின்றன

கணக் கனவுகள்.

வி. அல்விற்.
27.10.2014.

பறப்பவை.

கவனமாய்ப் பார்த்து
முற்றிலும் மூடி வைத்த
கதவுத் துவாரங்களினூடே
பலவண்ணச் சிறகுகளுடன்
ரம்மியமாய்ப் பறக்கின்றன 
தடங்கலின்றி
பேணப்படவேண்டிய
இரகசியங்கள்.

வி. அல்விற்.
21.10.2014.

புதன், 29 அக்டோபர், 2014

இன்றைய உலகம்.

மனித இனம் தோன்றி அவ்வப்போது பல மாற்றங்களையடைந்து இன்று இருபத்தோராம் நூற்றாண்டில் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை வேண்டி நிற்கின்றது.
பொதுவாகவே இன்றைய இளைஞர்களின் கல்வி முறையானது ஒரு நிறுவனம் சார்ந்து ஒரு உயர் பதவியினை நோக்கியதானதாக அமைந்திருக்கின்றது. அந்த உயர் பதவியானது, இளம் சமுதாயத்தின் வாழ்க்கைத் தேவைகளை ஓரளவு நிறைவு செய்வதாக அமைந்து விடுகிறது. ஆனால் அவர்களது அகம் ( சிந்தனை) முழுவதையும் நிறுவனமே தனதாக்கிக் கொள்ளுகின்றது. சமூக நலன் சார்ந்து நோக்கும் போது இது எவ்வளவுதூரம் ஆரோக்கியமானது என்று நோக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
முதலாவதாக, சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறார். அதாவது குடும்பம், உறவுகள் என்கின்ற பாசப் பிணைப்புகளுக்கு நேரத்தை செலவிட முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
இரண்டாவதாக, தனது தேவைகளுக்கான பணத் தேவை காரணமாக, தனது பெரும்பகுதி நேரத்தை நிறுவன வளர்ச்சிக்காகச் செலவிடுவதால் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடியாத நிலை ஏற்படுகையில் , குடும்ப உறவுகள் சிதைந்து, அறுபட்டுப் போகின்றது.
மூன்றாவதாக, இவ்வாறு அறுபட்டுப் போன உறவுகளின் பின்னால் அவனது உணர்வுகளான, அன்பு, பாசம், இரக்கம் நேர்மை, மனிதாபிமானம் போன்ற உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன.
இதன் இறுதிப் படியாக, அவனுடைய சிந்தனை முழுவதும் தனது பதவியைத் தக்க வைக்கும் முகமாக, அந்நிறுவனம் சார்ந்ததாக அமைந்து விடுகின்றது.
அப்படியாயின், இந்தக் கல்வித் திட்டமானது என்ன சொல்லுகிறது? இதன் நோக்கம் என்ன என்பது பற்றிக் கொஞ்சம் ஆராய வேண்டியுள்ளது. உதாரணமாக, மட்பாண்டங்கள் வனையும் குயவனை எடுத்துப் பார்ப்போம். குயவனிடம் முதலில் வந்து சேர்வது மண்தான்; பின்னர் அதில் நீர் விட்டுப் பிசைந்து களிப்பதத்துக்கு ஆக்கப்படுகிறது. அதன் பின்னரே தேவைக்கேற்ப பானையாகவோ அல்லது சட்டியாகவோ வனையப்படுகிறது. இதுபோலவே தற்போதைய கல்வித் திட்டமானது, கல்வி முடித்து வெளியேறும் இளைஞர்களை, வேலை வாய்ப்புக் கொடுக்கும் தொழில் நிறுவனங்கள், கல்வித் திட்டத்தின் மேல் ஒருவித அழுத்தத்தினைக் கொடுக்கின்றன. மண்ணாகவும் வேண்டாம், பானையாகவும் வேண்டாம்; களிமண்ணாகக் கொடுக்கும்படி கேட்கப்படுகிறது. அதாவது கல்வித் திட்டத்தின் கீழ் உருவாக்கித் தரப்படும் இளைஞர்களை, நிறுவனங்கள் தமது தேவைக்கேற்ப உருமாற்றிக் கொள்ளும் வசதியை அக்கல்வித் திட்டமானது செய்து கொடுக்கப் பணிக்கப்படுகிறார்கள். இதனால் அங்கே நிறுவனத்தின் தேவை உருமாற்றம் செய்து பெறப்படுகிறது. இளைஞர்கள் தன்னிச்சையாகச் சிந்திப்பதும், செயல்படுவதும் தடை செய்யப்படுகிறது.
இந்நடைமுறையானது, சமூகம் சார்ந்து ஆரோக்கியமானதா? இந்த நடைமுறையை நெறிப்படுத்துபவர்கள் யார்? இவைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
நாளாந்த செய்திகளைக் கொஞ்சம் ஆழ்ந்து படிப்பவர்களாயிருந்தால் " உலக மயமாக்கம்", "திறந்தவெளிப்பொருளாதாரம்", போன்ற பல புதிய சொல்லாடல்கள் வழக்கத்துக்கு வந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். மேற் குறிப்பிட்ட இந்தத் திட்ட வரைவுகள் எல்லாமே பொருளாதாரத்தில் நலிந்துபோன நாடுகளின் மீது உலக வங்கியின் ஊடாக ஒரு சாரார் திணிக்க முற்படுவதை அவதானிக்கலாம்.
திறந்த வெளிப் பொருளாதாரம் என்றால் என்ன?
ஒரு நாட்டுக்குள் யாரும் முதலீடு செய்யலாம். செய்யும் முதலீட்டுக்கு மட்டுமே வரி அறவிட அந்நாட்டுக்கு அனுமதி உண்டு. இலாபத்துக்கு வரி இல்லை.
உதாரணமாக, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் பாரம்பரிய விவசாயக் கிராமங்களான ஏறக்குறைய பத்திலிருந்து பதினைந்து கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பில், ஐம்பது வருட குத்தகை அடிப்படையில் கொக்கோ கோலா நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டது. அந்நிலப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புக்களும் வழங்கப்பட்டு, கொஞ்சக் காலத்துக்கு வாழ்க்கை வளமாகவும் இருந்தது. ஆனால் குத்தகைக் காலம் நிறைவடைந்து கொக்கோ கோலா நிறுவனம் அப்பகுதியை விட்டு நீங்கிய பொழுது, அப்பகுதி மக்களின் நிலப்பகுதி, மக்கள் குடிப்பதற்கே நீரின்றி நிலத்தடி நீரை முற்றாக உறிஞ்சி எடுத்து விட்டிருந்தது அந்நிறுவனம்.
இந்தியாவில் பருத்திச் சாகுபடி.
உலகத்தில் தரமான பருத்திப் பஞ்சில் இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்திப் பஞ்சும் ஒன்று. இதன் சாதாரண உற்பத்தித் திறன் ஒரு கிலோவுக்கு நான்கு அல்லது ஐந்து மடங்காகும். இது இந்திய விவசாயிகளால் காலம் காலமாக சாகுபடி செய்து பலன் பெற்று வரப்படுகிறது.
அமெரிக்க நிறுவனம் ஒன்று உள்ளூர் முகவர்கள் ஊடாக இந்திய விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு ஒரு கிலோவுக்கு பத்து மடங்கு பலன் தரக் கூடிய விதைகளை அறிமுகம் செய்து வைத்தது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமான இது, அவர்கள் கூறியபடியே ஒன்றுக்கு பத்து மடங்கு இலாபத்தைக் கொடுத்தது உண்மை. ஆனால் விதைப்பிலிருந்து அறுவடை செய்யும் வரையில் கிருமிக் கொல்லி மருந்து வரையிலான அத்தனைக்கும் அந்த நிறுவனத்தையே நம்பி இருக்க வேண்டியதாய் இருந்தது. அவற்றுக்கான விலை விதிப்பும் அந்த நிறுவனத்துடையதே. அவ்வகை விதைகள் "மலட்டு விதைகள்" ஆதலால் அறுவடையின் பின்னர் கிடைக்கும் விதைகளில் இருந்து மீண்டும் பயனடைய முடியாது. இதனை விட இன்னொன்று மிகப் பாரதூரமான விளைவாக இருந்தது. ஒருமுறை அந்நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட விதையை விதைத்தால் அந்நிலத்திலே மறுமுறை உள்நாட்டு மரபு ரீதியான விதைகளை விதைக்க முடியாதவாறு நிலம் பயனற்றுப் போய் விடுகிறது. இது மாத்திரமல்ல அதன் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் மரபு ரீதியான பருத்தி சாகுபடியாகின் அவ்விதைகளையும் நஞ்சாக்கி உற்பத்தியைத் தடுத்து விடுகிறது.
முதலாம் உலக நாடுகளின் பல்தேசிய நிறுவனங்களால் அறிமுகமாகும் அநேகமான நோக்கங்கள் எல்லாமே இப்படியானைவயாகத் தான் இருக்கின்றன. அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவின் நிலங்களில் உற்பத்தியாகும் பொருட்களைத் தாங்களே கையகப்படுத்துவதே இதன் நோக்கம். இது ஒரு நவ காலனித்துவத் திட்டம்.
கைத் தொலைபேசி
இன்றைய உலகப் பெரு வணிகத்தில் கைத் தொலைபேசியின் தரவரிசை அல்லது பங்கு என்பது என்னவென்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நோக்கியா, பிளாக்பெர்ரி, போன் என்று இப்படி நீண்டு செல்லும் இத் தொலைபேசிகளின் தயாரிப்புக்களுக்குப் பின்னால் உள்ள சோகக் கதையும் குருதியும் நமக்குத் தெரியுமா? போன் கொண்டு உலாவுபவர்களாயின் (ஆர்வமுள்ளவராயின் ) இக்கதையை நீங்கள் உடனடியாகவே அறியலாம். ஆனால் என்னுடைய வட்டத்தில் யாரும் எனக்கு இக்கதையை அதாவது Coltan கதையை சொல்லவில்லை. ஆட்டா மாவில் ரொட்டி சுடுவது எப்படி என்றும், சின்ன வெங்காயத்தின் மகிமை, தலை, விஜய் பட விமரிசனம், பாம்புருவில் வாழும் பெண், மயிர் இழையில் உயிர் தப்பும் காட்சிகள் இவை பற்றித்தான் பேசியுள்ளார்கள். இது பற்றித் திரு, தராக்கி சிவராம் அவர்கள் தமது கட்டுரையில் விளக்கியுள்ளார்.
"1999​- 2002 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நாற்பது இலட்சம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். இது நடந்தேறியது மூன்றாம் உலக நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில். Coltan என்பது Colombium- Tantalum என்பதன் சுருக்கமாகும். இந்தக் கனிமம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாயினும், செல்லிடத் தொலைபேசியின் வளர்ச்சிக்குப் பிறகே இதற்கான கடும் கேள்வி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பொருள் செல்லிடத்தொலைபேசி உற்பத்திக்குப் பின்பு ஒரு கட்டத்தில் ஒரு கிலோ அறுநூறு அமெரிக்க டொலர்களுக்கு உலகச் சந்தையில் விலை போயிற்று.
உலகில் அறியப்பட்ட Coltan வளங்களில் என்பது சத வீதமானவை கொங்கோவில் காணப்படுகிறது. 1996இல் கொங்கோவில் லோரன்ஸ் கபீலாவின் தலைமையின் கீழ் கிளர்ச்சிப் படைகள் அங்கிருந்த அரசாங்கத்துக்கு எதிராக முன்னேறிக் கொண்டிருந்த போது, ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்கும் பல்தேசிய நிறுவனங்கள் அவருடன் Coltan அகழ்வு சம்பந்தமாக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன. உள்நாட்டு போர் காரணமாக Coltan மலிவாகவும் சிலவேளைகளில் இனாமாகவும் கொள்ளை அடித்துச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்க பல்தேசிய நிறுவனங்கள் கிளர்ச்சியாளர்களுடன் பல்வேறு வகைகளில் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு கொள்ளை அடித்துச் செல்வதிலேயே குறியாக இருந்தனர்.
அமெரிக்காவின் இரு முக்கிய கனிம உற்பத்தி நிறுவனங்களான American Mineral Fields, Bechtel corporation போன்றன கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க செய்மதிப் படங்களை வழங்கி அவர்களுடைய போர் மூலோபாயத்துக்கு உதவின. அதற்குக் கைமாறாக Coltan அபகரிப்பதற்கான உடன்பாடுகளை செய்து கொண்டன. காலப்போக்கில் கபிலா தான் விடுவித்த பகுதிகளில் இறையாண்மையை நிறுவ முயன்றபோது அவருக்கு எதிராக மேற்படி பல்தேசிய நிறுவனங்கள் பல கூலிப் படைகளை உருவாக்கி தூண்டி விடலாயின. இதன் விளைவாக Coltan விளையும் பகுதிகளில் பயங்கரமான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. விடுவித்த பகுதிகளில் இறைமையை கபிலா நிறுவ முயற்சி எடுத்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்."
உலக மயமாக்கல்
"உலக மயமாக்கல்" என்பது ஆங்கிலத்தில் "Globalization" எனப்படுகிறது. உலகமயமாதல் தானாக நிகழும் ஒரு செயற்பாடு. உலக மயமாக்கல் என்பது யாரோ பின்னால் இருந்து ஆக்குவதாக பொருள் தொனிக்கும். தகவல் தொழில் நுட்பம், போக்குவரத்து, அரசியல், பண்பாடு ஆகிய துறைகளின் முன்னேற்றத்தால் உந்தப்பட்டு உலக நாடுகள் சமூகங்களுக்கு இடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையையும் "உலக மயமாக்கல்" எனலாம். வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளின் மேல் இக்கொள்கையைத் திணிக்கின்றன. இதுவும் ஒரு வகையில் பொருளாதார சுரண்டலுடன் சம்பந்தப்பட்டதே. சமூக, குடும்ப உறவுகளைச் சிதைத்து சமூகக் கூட்டுறவைச் சாகடிக்கிறது. மனிதர்களைத் தனித் தனி மனிதனாக்கி தனிமைப்படுத்துகின்றது.
மேற்கூறியவற்றினைப் பார்க்கும் போது, உலகில் தற்போது கண்ணுக்குத் தெரியாத "போர்" ஒன்று நடை பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அது, "வரையறுக்கப்பட்ட கனி வளத்துக்கான போர்" என அழைக்கப்படுகிறது. இப்போரானது, உலக வங்கியினூடாக கனிவளம் உள்ள நலிவடைந்த நாடுகளின் மேல் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. உலகில் இதைவிடப் பெரும் கொள்ளை வேறேதும் இருக்க முடியாது. ஒரு தனிமனிதனையோ, ஒரு இனத்தையோ, அல்லது ஒரு நாட்டையோ வீழ்த்த வேண்டுமாயின், அவர்களின் பூர்வீகச் சொத்தை அழிக்க வேண்டும். அது நடக்குமாயின், அம்மக்களின் வாழ்க்கையானது "பசி" பற்றிய சிந்தனையுடனேயே முடிந்து விடும். இதில் தமிழர்களாகிய நமது கதையுமுண்டு. போர் முடிவடைந்த பின்னர், பெரிய செல்வந்தர்கள் பலவித போர்வைகளுடன் நம் நாட்டுக்குள் நுழைந்திருப்பது அனைவரும் அறிந்ததே.
இவர்களை வழி நடத்துபவர்கள் யார் என்று பார்ப்போம்.
"புதிய உலக ஒழுங்கமைப்பு " (THE NEW WORLD ORDER") என்ற ஓர் அமைப்பு உண்டு. இதன் நோக்கம், "ஒரே உலகம், ஒரே பணம், ஒரே வங்கி" என்பதாகும். இதனுடைய இயக்குனர்கள் யார் என்று பார்த்தால், FREE MASON என்கின்ற அமைப்பினரே இவர்கள். இந்த அமைப்பின் அங்கத்தினர் masonic என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் யார்? இவர்கள் எங்கிருக்கிறார்கள்? இவர்களின் கோட்பாடுகள் என்ன என்று ஆராய்ந்து கொண்டு போனால், ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுவோம்.
அமெரிக்கத் தலைவர்களில் ஆபிரகாம் இலிங்கன், ஜோன் கென்னடி தவிர்ந்த ஏனைய அமெரிக்க அதிபர்களும், அமெரிக்க, ஐரோப்பிய தனவந்தர்களுமே இதனை வழி நடத்துகிறார்கள். இவர்கள் கடவுள் போல ஏற்றுக் கொண்டிருப்பதை "LUCIFERIEN", அதாவது வெளிச்சத்தின் கடவுள் என்று சொல்லுகின்றார்கள்.
"LUCIFERIEN" என்பது வெளிச்சத்தின் கடவுள் என்று ஏன் அழைக்கப்படுகிறது என்பதற்கு ஒரு கதையுண்டு.
விவிலியத்தில் ஒரு கதையுண்டு. கடவுள் ஆதாமைப் படை த்துப் பின் ஆதாமிலிருந்து ஏவாளை உருவாக்கி, பிறந்த மேனிகளாக எல்லா வளங்களும் மிக்க ஒரு வனத்தில் விட்டு, ஒரு நிபந்தனையையும் போட்டு விடுகின்றார்.உணவுக்காக எல்லாக் கனிகளையும் உண்ணலாம் ஒரு மரத்தின் கனியைத் தவிர. ஒரு நிபந்தனை "தவிர்த்தல்" என்பதுடன் போடப்படும்போது தவிர்க்கப்பட்டதை செய்யத் தூண்டுவதே இயல்பு. அதற்கேற்றாற்போல பாம்பு (சாத்தான், பேய்) வருகிறது. பலவீனமாகக் கருதப்பட்ட பெண்ணைத் தெரிவு செய்கிறது; ஆசை காட்டுகின்றது; உலக மாயையை விளக்குகின்றது: மயங்கச் செய்கின்றது; பழத்தை உண்ண வைத்து ஆதாம், ஏவாள் இருவரையும் விழுத்தாட்டிப் போகின்றது. அதன் பின்னர் அவர்கள் தமது கண்கள் திறபட, தங்கள் நிர்வாணமுணர்ந்து, உலகத்தில் மனிதனுக்குண்டான துன்பமனைத்தையும் ஏற்று வாழ, கடவுளால் சபிக்கப்பட்டு வனத்தை விட்டுத் துரத்தப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.
இக்கதையில் MASONIC என்பவர்களின் வாதம் என்னவென்றால், தவிர்க்கப்பட்ட பழத்தை உண்டதினால்தான் இந்த உலகத்தை அறியக் கூடியதாக இருந்தது என்பதும், இந்த பண, சுக வாழ்வு நிறைந்த உலகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பாம்பு உருவில் வந்த LUCIFERIEN என்பதே தமது கடவுள் என்பதுமே ஆகும். இவ்வகையான சிந்தனையின் அடிப்படையிலேயே இவர்களுக்கு பாம்பு (LUCIFERIEN) வெளிச்சத்தின் கடவுளானார்.
(தற்போதும் பேச்சு வழக்கிலே அளவுக்கதிகமாகப் பணத்தாசை கொள்வோரை காசுப் பிசாசு, அல்லது பணப்பேய் என்று சொல்வதைக் காணலாம்).
வரலாற்று ஆய்வாளர்கள் இதுவரையில் உலகத்தில் நான்கு புரட்சிகள் தோன்றியுள்ளதாகக் கூறுகிறார்கள்.
அவை:
விவசாயப் புரட்சி,
கைத்தொழிற் புரட்சி,
மின்சாரப் புரட்சி,
தகவல் தொழில் நுட்பப் புரட்சி என்பனவாகும்.
விவசாயப் புரட்சி
மனிதன் நாடோடியாக இருந்த காலத்தில் மிருகங்களை வேட்டையாடி தனது உணவுத் தேவையினை நிறைவேற்றக் கற்றுக் கொண்டான். காட்டிலே பழங்கள், கிழங்குகள், தேன் போன்றவற்றை உண்டும், சேமித்து வாழ்ந்தும், தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப தனது வாழ்விடத்தை மாற்றி அமைத்துக் கொண்டும் வாழ்ந்திருந்தான். மனித இனம் பெருக வேட்டை நிலங்கள் அதாவது அவனது உணவு தேடும் நிலப்பகுதியை விரிவாக்க வேண்டியிருந்தது. பரிவாரங்களை இடம் மாற்றுவதன் கடினமும் சனத்தொகைப் பெருக்கத்தால் ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையும் தலைமை தாங்குபவர்களுக்கு நெருக்கடிகளையும் சிந்தனையையும் ஏற்படுத்தியது.
சிந்தனையானது அவதானமாக மாறும்போது நிலத்தில் சிந்துண்ட தானியங்கள் முளைப்பதைக் காண்கின்றான். நிலத்தில் விதைகளைப் போட்டு முளைக்க வைத்து பலன் பெறக் கற்றுக் கொள்கிறான். அத்தோடு மேலதிகமாகத் தானியங்களைச் சேமித்து வைத்துக் கொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்தவும் கற்றுக் கொள்ளுகின்றான். காட்டில் வேட்டைக்குச் செல்லும்போது பிடிக்கும் மிருகங்களை வளர்க்கவும் தொடங்குகின்றான். விதைப்பும் அறுவடையும் உணவுக் கையிருப்பும் அவனுக்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது. காலையில் எழுந்து ஆண்களும் பெண்களுமாய் வேட்டைக்குப் போய் வேட்டைப் பொருள் கிடைக்கும்வரை அலைந்து திரிதல் வேண்டும். அதுவும் கிடைக்காத நிலை ஏற்படின், பட்டினிதான் என்று இருந்த நிலை மாறி பத்துப் பேர் உழைத்து நூறு பேர் சாப்பிடக் கூடிய நிலை கிடைத்தவுடன் மனிதன் ஒரே இடத்தில் தங்கி வாழ்பவனாக மாறுகிறான். அத்துடன் போதியளவு நேரமும் கிடைக்கிறது. இந்நிலையிலிருந்து கொண்டு மனிதன் பேசவும் எழுதவும் பழகுகிறான். கருத்துருவாக்கத்தை உருவாக்குகின்றான். தான் கண்டு கொண்ட விவசாயத் தொழிலில் வளர்ச்சி காணுகிறான். வளர்ப்பு மிருகத்தைக் கொண்டு நிலத்தை உழவும், பயிரை அறுவடை செய்ய கருவிகளையும் உருவாக்கிக் கொள்ளுகிறான். மொத்தத்தில் சத்தமின்றி, மாசின்றி உலகில் ஒரு புரட்சி நடந்தது.
இதன் பிறகு பரிவாரங்களுக்குப் பொறுப்பானவர்களே நிலங்களுக்குச் சொந்தமானவர்களாயும், சாதாரண நிலையிலிருந்த மக்கள் நிலங்களில் உழைப்பவர்களையும் மாறினார். இவ்விடைவெளியானது ஒரு புதிய சமநிலைக்குத் தோற்றுவாயானது. நிலத்துக்குச் சொந்தமானவன் நில உடமையாளனாகவும், நிலத்தில் வேலை செய்பவன் கூலியாளாகவும் பார்க்கப்பட்டான். இச் சமுதாயம் "நிலவுடமைச் சமுதாயம்" என அழைக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட முரண்பாடுகளும் முட்டி மோதல்களும் மானிடத்தின் இன்னோர் படிநிலை வளர்ச்சிக்கும் பரிமாணத்துக்குமான வேறோர் புரட்சிக்கு வித்திட்டது.
தொழிற்புரட்சி
மனிதப் பெருக்கமும், கொள்ளல் கொடுக்கல்களில் ஏற்பட்ட பிணக்குகளும் மானிடத்தின் இடப் பெயர்வுகளுக்கு வழிகோலியது. இப்படியாக இடம் பெயர்ந்த மனிதன், வாழ்வதற்கு வளங்களற்ற நிலங்களில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆறு மாத காலங்கள் வேளாண்மையும், மிகுதி ஆறுமாத காலங்கள் பயிர்கள் எதுவுமே வளர முடியாத குளிர் அதிகமான ஒரு காலநிலையுள்ள பகுதியில், ஒரு சமூகம் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறது. இயற்கைச் சீற்றம் அதிகமானால் பயிர் விளைவிக்க முடியாத மிகுதிக் காலங்கள் பட்டினியுடன் கழிந்தன. அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் என்றுமே நிறைந்திருந்தன. இத்தகைய சூழ்நிலையில் அவர்களின் சிந்தனை இந்த நிலையற்ற காலநிலையை உடைய நிலத்தில் எப்படி தாங்கள் வாழ்வது என்பதாகவே இருந்தது. யுத்தத்திற்குப் பாவித்த கப்பல்களைக் கொண்டு கடலோடிகளின் உதவியுடன் நாடு விட்டு நாடுகள் உணவுக்காக பயணப்பட்டவர்கள், முதற் பயணங்களில் தங்கம், வெள்ளி, முத்து, வாசனைத் திரவியங்கள் என்பவற்றைக் கொண்டு வந்து குவித்தனர்.
இச் சமகாலத்தில், நிலப் பிரபுத்துவச் சமூகமானது மேனோக்கிச் சிந்திக்கத் தொடங்கியது. எப்படி விவசாயத்தைப் பெருக்கி சந்தைப்படுத்தி அதிக இலாபம் பெறலாம், குடிசைக் கைத்தொழில்களின், அதாவது ஆடை நூற்பது, இரும்பு, தாமிரம் போன்ற உலோகங்களில் இருந்து செய்யப்படும் சிறு பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்பது போன்ற சிந்தனையின் குவிவு மையமாக அப்போது பிரித்தானியா அமைந்திருந்தது.
(1750- 1850) காலனித்துவ ஆதிக்கமும், கடல் மார்க்கமான போக்குவரத்தும் கனிவளமும் கைவினைஞரும், செல்வந்தரும் ஒருங்கே அமைய பிரித்தானியா தொழிற்புரட்சியின் நாடாக மாறியது. நூல் நூற்கும் ஆலைகள், ஆடைகள் தயாரிக்கும் ஆலைகள், இரயில், கப்பற் போக்குவரத்துக்கள் போன்றவை உருவாகின. கால்வாய்கள் வெட்டப்பட்டு மூலதனப் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிகளும், சந்தைப்படுத்தலும் இலகுவாயின. விவசாயம் மேம்பட்டது. உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. கிராமங்கள் நகரங்களாயின. மனித வாழ்வு மேம்படத் தொடங்கியது. நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. நிலப்பிரபுக்கள் பணப்பிரபுக்களாகினர். சமூகக் கல்வியானது தொழில் நுட்பக் கல்வியானது; மரபு வழி வைத்தியங்கள் நவீன வைத்தியமாகின; மனிதனின் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறின; "சேவை" என்பது "தொழில்" ஆக மாற்றம் பெற்றது. சுதந்திரமாகவும் இயற்கையோடும் ஒன்றிச் செய்த வேலைகள் மாறிப்போய், இயந்திரங்களோடு போட்டி போட்டு வேலை செய்து மனிதம் இயந்திரமானது. மன அழுத்தங்கள் அதிகரித்தன; குடும்ப அலகுகள் உடைக்கப்பட்டன; ஒவ்வொரு மனிதனும் தனிமைப்படுத்தப்பட்டான்.
மேற்கூறப்பட்ட புரட்சிகளை உற்று நோக்கினால் விவசாயப் புரட்சியில் இனக் குழுக்களின் தலைவர்கள்தான் நிலவுடமையாளர்கள் ஆகிறார்கள். இவர்களின் வாரிசுகளும், இவர்களைப் போல எண்ணம் கொண்டவர்களும் பொருள் முதல் வாதத்துக்கு முன்னுரிமை கொடுத்து கைத்தொழில் புரட்சியில் முதலாளிகள் ஆகிறார்கள்.
சமூக அந்தஸ்தும், சமூகத்தை ஒடுக்குகிற பலமும் கை கூடி வரும்போது தங்களைத் தாங்களே பெரியவர்களாக எண்ணும் எண்ணமும், மனிதனின் இருப்பும், பணமுதல்வாதமாகி உலக இயங்குதலே பணம்தான் என்னும் கோட்பாட்டுக்கு உட்பட்டு மிகுதி இரண்டு புரட்சிகளும் மின்சார, தொழில் நுட்பப் புரட்சிகளின் மூலம் பெரு வணிக நிறுவனங்களின் உதவியுடன் பெரு முதலாளிகளாயுள்ளார்கள்.இவர்கள் முன்பு தங்களை "FREE MASAN" என்ற அமைப்பின் மூலம் ஒருங்கமைத்திருந்தனர். தற்போது "புதிய உலக ஒழுங்கமைப்பு" என்ற அமைப்பின் ஊடாக உலகம் பூராகவும் தொடர்பை ஏற்படுத்தி பணபலத்தின் மூலம் பொருளாதார வல்லுனர்களை வாங்கி, உலக வங்கியை கையகப்படுத்தி, உலகமயமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற முனைகிறார்கள். அண்மையில் நடந்த கிரீஸ் நாட்டின் பொருளாதார சிக்கலில் உலகவங்கி இரண்டு கோரிக்கையை முன்வைத்தது.
முதலாவது, ஓய்வூதிய வயது எல்லையின் நீடிப்பு.
இரண்டாவது, உலகவங்கியின் செயல் திட்டத்துக்கு அமைய இறையாண்மையுள்ள கிரீஸ் நாட்டை இசைந்து நடக்கச் சொல்லப்பட்டது.
சரி, இவற்றுக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு?
ஆரம்பத்தில் சொல்லியுள்ளபடி, உலக ஒழுங்கமைப்பின் கீழ், திட்டமிடப்பட்ட கல்வி முறை மூலம், களிமண் போல உருவாக்கித் தரும்படி கேட்கப்படும் கற்கும் சமூகத்தின் கல்வி முறை எப்படி உள்ளது என்று நோக்கலாம்.
UNESCO நிறுவனமானது 1945 ஆம் ஆண்டு நவம்பர் பதினாறாம் திகதி உருவானது. இந்நிறுவனமானது, கல்வி பற்றி என்ன பேசுகிறது. கல்வி அறிவு, பண்பாடு, தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள் மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான நோக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது . இதனால் உலகில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி அதன்மூலம் இனம், மதம், மொழி, பால் வேறுபாடுகளின்றி உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகளைப் பெற்றுக் கொள்வதே UNESCO வின் நோக்கமாக இருந்தது.
சமூக வழக்கில் வேதங்களும், கல்வியாளர்களும் சாதாரண மக்களை விட மேம்பட்டவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும், சிக்கல் பிணக்குகளுக்கு குரல் கொடுப்பவர்களாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தக் கல்விமான்களும் கல்வி வகுப்பாளர்களும் பெருந்தனவந்தர்களும் கூட்டுச் சேர்ந்து பெரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். சமூகத்தின் சொத்துக்கள் எல்லாம் ஒரு சில தனி மனிதர்களிடத்தில் போய்ச் சேருகின்றது. மக்கள் வேலையில்லாப் பிரச்சனையால் பசி, பட்டினி, மனவுளைச்சல்,என சிக்கித் தவிக்கிறார்கள். ஒரு மகப்பேற்றுக்குத் தயாராகும் தாய் வலியில் தவிப்பதுபோலத் தான் தற்போதுள்ள இந்தச் சிக்கலைப் பார்க்க வேண்டியுள்ளது.இது இன்னொரு அடுத்த கட்டப் புரட்சிக்கான காலம் என்று கூறலாம். கல்வியானது சிந்தனையாளர்களை உருவாக்கட்டும்; சமூகத் தேவைகளை நிறைவு செய்யட்டும்; அறத்தை மேம்படுத்தட்டும்; மனிதத்தைத் துளிர்க்க வைக்கட்டும்; மனித நேயத்தை வளர்க்கட்டும்.
கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகளூடாக இதனை இலகுவாகப் புரிய வைக்கலாம்.
"அறிஞனாய் இரு கலைஞனாய் இரு
அற்புதம் செய்யும் சிற்பியாய் இரு
அரசனாய் இரு புருசனாய் இரு
ஆயிரம் கோடிக்கு அதிபனாய் இரு
வீரனாய் இரு சூரனாய் இரு
வித்தக தத்துவ ஞானியாய் இரு
எல்லாவற்றுக்கும் மேலாய்
மனிதனாய் இரு".

உழவன்.