சனி, 28 ஏப்ரல், 2012

நலன்கள்



வி.பு. முன்:

2008 ஆம் ஆண்டு நான் அந்த வீட்டில் கொஞ்ச நாட்களாக  ஒரு அலுவல் காரணமாகத் தங்கியிருக்க வேண்டியிருந்தது.
அப்போது நான் கண்ட காட்சி அது.  வீடு  ஒரே அமளிப்பட்டுக் கொண்டிருந்தது. பிள்ளைகள்  ஆளுக்கொரு மூலையாக இருந்து மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தனர். தாய் சாந்தினி இடைக்கிடையிலே பிள்ளைகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள். "பிள்ளை உச்சரிப்பை கொஞ்சம்  கவனி, அந்த குமாரி எப்பிடி அண்டைக்கு பேசினது பார்த்த நீங்கள்  தானே .பிள்ளை கொஞ்சம் ஜூஸ் தரட்டே? தொண்டை காஞ்ச மாதிரி இருக்கு". "வேண்டாம் அம்மா"  இது மூத்தவள் டிலானி. தாய் பிள்ளைகளின் போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பா கனகவேலுவுக்கு உள்ளங்காலிலிருந்து உச்சி வரை எரிச்சல் பத்திக் கொண்டு பரவியது. " அந்தப் பிள்ளைகளைச் சும்மா விடப்பா; அதுகள் தங்களாலை முடிஞ்சதைச் செய்யுங்கள் தானே". சாந்தினிக்கு கோபம் எகிறியது. "ஓமோம் ஏன் சொல்ல மாட்டீங்கள் இந்தப் பிள்ளைகளோட நானெல்லோ கஷ்டப்படுறன், திங்களில இருந்து வெள்ளிக்கிழமை வரை பள்ளிக்கூடம் விட்டு எடுக்கிறது; சனிக்கிழமை மியூசிக் வகுப்புகளுக்கு ஆள் மாறி ஆளை விட்டு எடுக்கிறது; ஞாயிற்றுக்கிழமைகளில இந்தத் தமிழ் வகுப்பு. இது எல்லாத்துக்கும் பிள்ளைகளோட அலையுறது நான் எல்லோ! நீங்கள் ஏன் சலிக்கிறீங்கள்? வேலையாலை வாறதும் செய்தி பாத்து டெலிபோனிலை வியாக்கியானம் செய்யுறதும் தானே உங்கட வேலை?" கனகவேலுவுக்கு ஏன்தான் வாயை விட்டோமோ என்றிருந்தது. சாந்தினி தொடர்ந்தாள் "ஒவ்வொரு வருஷமும் இந்த மாவீரர் பேச்சுப் போட்டியிலை முதலாம் இடமாய் வாற என்ற பிள்ளைகள் இந்த வருசமும் அதைதான் பிடிக்க வேணும்". "சூழுரைத்தல்" என்பதை நேரடியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு அன்று  கிடைத்தது.

 நான் அவேர்களுடனேயே  தங்கியிருந்ததால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பேச்சுப்போட்டி சூடேறிக்கொண்டே இருந்தது. போட்டி குழந்தைகளுக்கான பேச்சில் மட்டுமா? அதைத்  தொட்டு இதைத் தொட்டு அம்மாமார்களுக்கிடையிலேயும் (அப்பாமார்கள் இவற்றில் தலையிடுவது மிகக் குறைவு என்பதை கனகவேலுவின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்) குடும்பங்களுக்கிடையிலேயும் "நீயா நானா" நடை பெற்றுக் கொண்டிருந்தது. குழந்தைகளின் திறமைகளை வளர்த்தல், எம் வரலாற்றையும் எம் வீரர்களையும் இளம் சமுதாயம் புரிந்து கொள்ளுதல் என்பதை விட்டு விலகி  பெற்றோரின் நோக்கம் எங்கோ செல்வதை உணரக்கூடியதாக இருந்தது.

போட்டி இறுதி நாளும் வந்தது. சாந்தினி காலையிலேயே எழுந்து பிள்ளைகளையும் எழுப்பி இறுதி ஒத்திகை பார்க்கப் பட்டது. நிற்கும் நிலை, கண்ணசைவுகள், கை கால் அசைவுகள், குரல் ஏற்ற இறக்கங்கள், தொனி, உச்சரிப்பு, சபையோரைக் கவரும் விதம், (முக்கியமாக நடுவர்களை) அனைத்தும் கடந்த வருடங்களின் அனுபவ அடிப்படையில் சரி  பார்க்கப்பட்டு சாந்தினியும் கனகவேலுவும் திருப்தியாயினர். இன்று சமையல் இல்லை. "தம்பி  குறை நினைக்காமல் இண்டைக்கு மட்டும் வெளியிலை சாப்பிட்டுக் கொள்ளுகிறீரா?"  "ஓமக்கா நான் பாத்துக் கொள்ளுறன், நீங்கள் யோசிக்காதையுங்கோ, நானும் உங்களோட உதவிக்கு வரவா அக்கா?" ( போட்டி நடக்குமிட விடுப்பை அறியத்தான்). "கார்ல இடமில்ல; நீர் வேணுமெண்டால் மெத்ரோவில வாருமன்.விலாசம் எழுதித் தாறேன்". விலாசத்தை எழுதி என்னுடைய கைகளுக்குள் தந்து விட்டு எல்லோருமாக வெளியேறினர். கனகவேலுவைப் பார்க்க நான் ஆறு வயதில் அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு  பின்னாலேயே திரிந்த ஞாபகம் வந்தது.


அன்று போட்டி நடக்குமிடத்துக்குப் போக வேண்டும் என்று நினைத்தும் இன்னொருவரை அவசியமாக சந்திக்க வேண்டியிருந்ததால் முடியாமல் போய் விட்டது. நான் மதியம் வெளியே சாப்பாட்டை முடித்து பின் எனது அலுவல்களையும் முடித்து வர மாலை ஏழு மணியாகி விட்டது. நான் வந்து கொஞ்ச நேரத்துக்குள் அவர்களும் திரும்பினர். சாந்தினி அக்காவின் முகம் பளீர் சிரிப்புடனிருந்தது. "தம்பி நீர் வந்திருக்க வேணும் எப்பிடி பிள்ளைகள் பேசினதுகள் தெரியுமா? வழமை போல மூத்தவை இரண்டு பேரும் முதலாவது தான். எனக்குத் தெரியும் என்ர பிள்ளையளை வெல்லேலாது எண்டு". சாந்தினி அக்காவின் பெருமை தொடர்ந்து கொண்டிருந்தது. நான் பிள்ளைகளுக்கு எனது பாராட்டுக்களைச் சொல்லி விட்டு படுக்கப் போய் விட்டேன். சாந்தினி அக்காவின் பேச்சு தொலைபேசியில் தொடர்ந்து கொண்டிருந்தது நீண்ட நேரம் வரை கேட்டது.

வி.பு. பின்:

2010 இல் அதே காலப் பகுதியில் அந்த வீட்டுக்குப் போக வேண்டியிருந்தது. பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வர அந்த வீடு களை கட்டியிருக்கும் என்று நினைத்தபடி படியேறினேன். வீடு அமைதியாயிருந்தது. பிள்ளைகளை வெளியே காணவில்லை. வந்த களைப்புத்தீர குளித்து முடித்ததும் சாந்தி அக்கா உணவு பரிமாறினார். மெதுவாக கேட்டேன் " என்ன பிள்ளைகளைக் காணேல்லை அக்கா"? " அவையளை என்ர தங்கச்சி வந்து சினிமாவுக்கு கூட்டிக் கொண்டு போயிட்டா தம்பி" சாந்தினி அக்கா இயல்பாகப் பதில் சொன்னார். "இந்த முறை மாவீரர் போட்டிகள் எல்லாம் எப்பிடிப் போகுது"?  "ஆ ஆ  அது எல்லாம் நடக்குது. ஆனால் நான் எங்கட பிள்ளைகளை விடேல்லை" இழுத்துக்கொண்டு பதில் வந்தது. "ஏனக்கா என்ன பிரச்சனை?" 
"இல்லைத் தம்பி ஏன் சும்மா பிரச்சனைகளை? இவ்வளவு நாளும் இவை பலமா இருந்தவை. எல்லாம் பெரிசா நல்லா நடந்தது. இப்ப  எல்லாம் முடிஞ்சுது
இனி இதுக்குள்ள இருந்து ஒரு பலனுமில்லை. அதோட நாட்டுக்கும் போக வேணும். பிறகு எல்லாம் சிக்கலாப் போயிடும்; அதுதான் நாங்கள் ஒண்டுக்கும் பிள்ளைகளைப் பங்குபற்ற  விடேல்லை". எனக்கு சாப்பாடு தொண்டைக்குள் இறுகி உள்ளிறங்க மறுத்தது. பாரதியின் கவிவரிகள் ஏனோ ஞாபகத்துக்கு வந்தன.
" நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி"...
கை கழுவ எழுந்த பொது சாந்தினி அக்கா கேட்டார் "ஏன் தம்பி சரியாச் சாப்பிடேல்லை"? "இல்லையக்கா வரேக்க ரெயினுக்குள்ள சாப்பிட்டதால பசியில்லை" சொல்லும்போதே எம்மாவீரர் ரத்தமும் சதையும், கருகலுமாய் கிடந்த காட்சிகள் வந்து போயின.


வெள்ளி, 27 ஏப்ரல், 2012

என் மண்

என்னுயிர் மண்ணே! என் முதல் பிறந்தநாளின்போது கருஞ்சிவப்பு நிற சட்டையுடன் தோழியருடன் விளையாடி கிணற்றுக்குள் விழுந்து ஊரவர்  தூக்கி என் உயிர் காத்த மண்ணே!
காலை எழுந்து  சமையலறைப் பக்க கதவைத்திறந்தவுடன் பாதியான வானத்தில் கிழக்குத் திசையில் இளஞ்சூரியன் தகதகத்தெழ கரை தொட்டுச் செல்லும் அலைகள் காலப் பிரமாணத்துடன் செவிவந்து தழுவ எனை எழுப்பிய மண்ணே!
நான் பார்த்திருந்த போதே மெதுமெதுவாய்  மேலெழுந்ததும்  மாலை  மேற்கிலே மறுபாதிக் கடலில் அமிழ்ந்ததும் என்றினிப் பார்ப்பேன்?
முற்றத்தில் தென்னை! ஒவ்வொன்றுக்கும் எம்  ஒவ்வொருவரின் பெயர்; அக்கா ஆசையாய் நட்ட அழகான மாதுழை; இரு பெரிய வேம்புகள்; மாலையானால் ஊரைக்கூட்டும் மல்லிகைப் பந்தல்; முல்லைப்பந்தல்; வித விதமான அழகு நிறச் செடிகள்; பெரிய செவ்வரத்தை, தூங்கு  செவ்வரத்தைகள்; இப்படி பசுமையனைத்தையும் கொட்டிக் கொடுத்த என் மண்ணே!
வீட்டுக்கு வெளியே கோவிலின் வெட்டையில் ஈருந்து பழகுகையில் விழுந்தெழுந்து காயம் தந்த என் மண்ணே!
வெட்டையின் வலப்புறத்தில் என் (எம்) அறிவை வளர்த்த வாசிகசாலையும் மகிழ்வும் தந்த மண்ணே!
மாமரங்கள் சூழ நிமிர்ந்து நின்ற ஆலயமும் அதை சுற்றி நாம் செய்த விளையாட்டுக்களும் நீ மறக்க மாட்டாய்; சதி செய்தோர் துரத்தியதால் தூர தேசம் நாம் ஓடினோம்; எமைப் பழி வாங்கத்தானோ நீ ஒழியிழந்து, களையிழந்து, காடாகிப் போனாய். என் பிறப்பிலும், வளர்ப்பிலும், மகிழ்விலும், துக்கத்திலும் பங்கு போட்ட என் மண்ணே!
என் மனமின்று வலிக்கிறது.

எண்ணம்


களங்கமில்லா நெஞ்சம் வேண்டும்
காண்பன நலமாகவும்  வேண்டும்  
 
கனவுகள் விரிய வேண்டும்
புதியனவதில் பிறக்க வேண்டும் 
 
நேரிய சிந்தனையும் வேண்டும்
செயலில் நிதானம் வேண்டும்- அதை 
 
செய்வதற்கோர்  திடமும் வேண்டும்
மனமதில் ஆழ வேண்டும் 
 
மனிதர் ஓர் வசப்படவும் வேண்டும்
புவி எம் கைப்பட வேண்டும்

வெற்றி வாசல் தொடவும்  வேண்டும்
அகிலம் சுற்றி அறியவும் வேண்டும்
அதில் திளைத்து மகிழ வேண்டும்

புதன், 25 ஏப்ரல், 2012

புலம்பல்

கரம் கொடுத்தோம் வடம் பிடிக்க

தோள் கொடுத்தோம் தூக்கிவிட

ஊண் உடை கொடுத்தோம்

பொருளும் கொடுத்தோம்

பெருமிதம் அடைந்தோம்

ஆர்ப்பரிப்பும் செய்தோம்

சுற்றுலாவும் சென்றோம்

தலைநகர் சிறப்புக் கண்டு வியந்தோம்

இறுமாப்பும் அடைந்தோம்

உலகினில் இவருக்கிணயில்லை என்றோம்

இத்தனையும் செய்தோம் அவருக்காய்

யாவும் இழந்தோம் - இன்று

ஆளுக்கொரு விதி செய்கிறோம்

இதுவும் நாமேதான் அவரின்மையால்

யாருக்கிங்கே அக்கறை எவரினி எழுவர் நல் வழி செய்ய

புலம்பத்தான் முடிகிறது

புரியவில்லை ஏதும்
நித்திலம் சதிராடும் நெற்றியும் 
வான விற் புருவமும் கீழ்
துறு துறுத்த வண்டுகளும் 
அளவெடுத்த அதரங்களும் 
பெண்ணே போ- நான் 
பெண்ணே உன்னை வியக்கிறேன்
பாவம் இந்த ஆண்கள்- நீ
பேசாமல் கொல்வாய் அவர்களை