புதன், 3 டிசம்பர், 2014

கண்ணீர்த்துளி

மௌன நீட்டத்தில்
மூழ்கி
பேச முடியாது
திணறிய
அத்தனை வார்த்தைகளையும்
ஒரு கண்ணீர்த்துளி
பேசி வீழ்கிறது
தானும் மௌனமாக.

வி. அல்விற்.
28.11.2014.

இன்னும்

நாட்களின் பதகளிப்பில்
கனமாய் ஊர்கின்றன
வினாடி முட்கள்
பேரொலியுடன்.
இடியுடனான மழையிலும்
பேய்ச்சுழற்சிக் காற்றிலும்
நனைந்தும் அலையுண்டும்
உதறலுடன் நிற்கையில்
மீந்தொலிக்கின்றது
வினாடி முள்
முன்னே நகர விடாது.
இந்த அலைச்சலும் கூட
சுகமானது போல
சமாதானப்படும் தன்னிரக்கத்துடன்
இன்னும் நின்றபடியே.......

வி. அல்விற்.
25.11.2014.

கல்லறைக் காதைகள்.

கல்லறைகள்
கனம் இறக்க
கதவகற்றிச் சில
காதோடு தம்
காதை பல
பேசி விடின்
சில்லறைகள்
சிதறி விடும்
சொல்லியங்கள்
தடம் புரளும்
பல்லக்கில் ஏறியோர்
பாதங்களும் துவண்டுவிழும்
உள்ளேயே வாழ்ந்திடுங்கள்
உள்ளங்கையில் மலரேந்தி
உள்ளத்தில் உமையேந்தி
உண்மையாய் நினைப்போர்
உள்ளனர் இன்னுமென்றெண்ணி.

வி. அல்விற்.
27.11.2014.

உண்மைகள்

மறுக்க முனைந்தும்
எங்கோ ஒரு
திரும்ப முடியா
ஏதோவொரு
சந்தில் 
நழுவியுடையும்
மட்பாண்டமாய்
சிதறித்தெறிக்கின்றன
தடுக்க முடியாத
உண்மைகள்.

வி. அல்விற்.
20.11.2014.

எழுகை.

இடிப்பது கட்டுவதற்கும்
குலைப்பது ஒழுங்கமைக்கவும்
கொத்துவது பண்படுத்தவும்
புதைப்பது மீள் உரமாயும்
மாறுகையில்....
சிதைவில்லா பெறுமதி
பெருஞ்சுவராய் எழுகிறதே!

இடித்துக்கொண்டே இருங்கள்
தனித்தனிச் சுவர்கள்
பெருங்கோட்டையாய்
எழட்டும்.

வி. அல்விற்.
03.11.2014.

கணக் கனவுகள்.

துளிர்ப்புக்கு இரங்கும்
மொட்டை மரத்தின்
தனிமைத் துயர் போல
அமிழ்ந்திருக்கும்
மீளப் பெறமுடியாத 
நினைவுப் பெட்டகத்திலிருந்து
அடித்தெழுப்புகின்றன

கணக் கனவுகள்.

வி. அல்விற்.
27.10.2014.

பறப்பவை.

கவனமாய்ப் பார்த்து
முற்றிலும் மூடி வைத்த
கதவுத் துவாரங்களினூடே
பலவண்ணச் சிறகுகளுடன்
ரம்மியமாய்ப் பறக்கின்றன 
தடங்கலின்றி
பேணப்படவேண்டிய
இரகசியங்கள்.

வி. அல்விற்.
21.10.2014.