வெள்ளி, 4 நவம்பர், 2016

இளவரசிகள்.

இளவரசிகள்.


‘அத்தான்’ என்று லீலா தனது கணவனை அழைத்தால் உண்மையாகவே அந்த வார்த்தையில் குழைந்திருக்கும் தேன். லீலாவுக்குப் பொய் பேசத் தெரியாது. கணவன் பிள்ளைகள் என்று  தனது குடும்பத்துக்காக முழுமையாகத் தன்னைக் கொடுத்த ஓருயிர்தான் லீலா.

யாழ் மாவட்டத்தில் வரமாராட்சிப் பகுதியில் சிரிப்பும் செல்வமும் நிறைந்த குடும்பத்தில் நான்கு ஆண் மக்களுக்கிடையே ஒரு குட்டி இளவரசியாகப் பிறந்தவள் லீலா. அவள் கேட்டது இல்லை என்றிருந்ததில்லை. நான்கு அண்ணாக்களும் பெற்றோரும் அவளை உள்ளங்கைகளிலேயே தாங்கியிருந்தனர் என்றால் அது வெறும் சொல்லுக்காகவல்ல. அவள் சிரித்தால் அந்தக் குடும்பம் சிரிக்கும், அவள் அழுதால் கலங்கும். லீலாவும் தனது பெரிய விழிகளை உருட்டி உருட்டிப் பேசி எல்லோரையும் மயக்கியபடியே வளர்ந்து பெரியவளாகி விட்டாள்.

லீலாவின் மூத்த அண்ணாவுக்குப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தபோது, அவள் கல்வி உயர்தரத்தில் அப்போதுதான் நுழைந்திருந்தாள். அண்ணாவுக்கு தனது தங்கையின் திருமணத்தை முடித்து விட்டே தான் திருமணம் செய்வதில் விருப்பிருந்தது. ஆனாலும் பெற்றோர் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவரைச் சம்மதிக்க வைத்துத் திருமணத்தை நடாத்தி முடித்தனர். லீலாவுக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. வரப்போகும் அண்ணி எப்படி இருப்பாரோ என்று. ஆனால் எந்தக் குறையுமற்ற ஒரு சகோதரி போலவே அண்ணியாரும் அவளுக்கு வாய்த்திருந்திருந்தாள். எல்லோருமே முழுத் திருப்தியோடிருக்க, உள்ளூர் நிலைமை சீரற்றுக் கொண்டிருந்தது. மூத்த இரண்டு அண்ணன்மார்களும் நாட்டு நிலைமையைக் கருத்தில் கொண்டு தமது இரண்டு தம்பிகளான சாந்தனையும், கண்ணனையும் லண்டன் நோக்கி அனுப்பிவிட்டனர். தாங்கள் பெற்றோரிடமிருந்து எப்போதுமே விலகுவதில்லையென தீர்மானம் கொண்டிருந்தனர்.
 காலம் உருண்டோடி லீலா கல்வி உயர்தரத் தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெற்றுத் தேர்ந்து பல்கலைக் கழகம் போக எண்ணுகையில் யுத்தம் இறுக்கத் தொடங்கியது.
பெற்றோருக்கோ தமது குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டும் என்கின்ற தவிப்பு. அண்ணன்மாருக்கோ தங்கையின் திருமணத்தை முடித்து அவளை வேறெங்காவது அனுப்பி வைத்து விட வேண்டுமென்ற ஆதங்கம். லண்டனிலிருக்கும் தம்பிகள் “லீலாவுக்குத் திருமணத்தை முடியுங்கோ! நாங்கள் குடும்பமாக அவர்களை லண்டனுக்கு எடுக்கிறோம்” என்றனர். லீலாவைப் பொன்னாக வைத்துப் பார்க்கக் கூடிய மாப்பிள்ளையைத் தேடினர். அதிகம் அலைச்சலை வைக்காமலேயே பக்கத்தூரிலேயே குமணன் கிடைத்தான். வீட்டிற்கு இரண்டாவது பிள்ளை. மூத்தவள் திருமணமாகி கனடாவிலே வசித்துக் கொண்டிருந்தாள். நல்ல வசதி வாய்ப்புகளோடு கூடியதும் அதைவிட முக்கியமாக அன்பான அமைதியான குடும்பமாகவும் அந்தக் குடும்பம் இருந்தது லீலா வீட்டினருக்குப் பிடித்திருந்தது. தமது இளவரசியை மகாராணியாக வைத்திருக்கக்கூடிய குடும்பமல்லவா அவர்களுக்குத் தேவையாக இருந்தது? அது அங்கே இருந்ததாக அவர்களுக்குப் பட்டது. லீலாவுக்கும் குமணனைப் பிடித்திருந்தது. ஆனால் அம்மா, அப்பா, அண்ணன்மார், அண்ணியை விட்டு விட்டுப் போவது என்பது உயிரை விடுவது போலிருந்தது. இரவு பகலாக அழுது வடிந்தாள். எல்லோரும் அழுதனர்.
அம்மா அழுதழுது சொன்னா.
“ நீ எங்கையெண்டாலும் நல்லா, பாதுகாப்பா இருந்தா அதுதானே பிள்ளை எங்கட நிம்மதி” என்று.
சாய்மனைக் கதிரையில் அமைதியாகச் சாய்ந்திருக்க முடியாமல் இரண்டு பக்கங்களிலும் நீண்டிருந்த கைபிடிகளைப் பிடித்தபடி இருந்த அப்பா  சொன்னார்,
“அங்க சாந்தனும் கண்ணனும் உன்னை வந்து அடிக்கடி கவனிச்சுக் கொள்ளுவாங்கள் தானே”.
அவரது குரல் சுருதி தப்பிக் கரகரத்தது மூத்தண்ணாவுக்குக் கண்களில் நீர் முட்டச் செய்தது. ஆனாலும் அவர்களுக்கு வேறு தெரிவிக்கவில்லை.
 அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிய, அவசர அவசரமாக உறவுகளுக்குப் பிரியாவிடை சொல்லி, லண்டன் மாநகரத்தைப் புகார் சூழ்ந்திருந்த ஒரு அதிகாலைப் பொழுதில் வந்து சேர்ந்தனர் லீலாவும் குமணனும். விமான நிலையதில் அண்ணன்மாரைக் கண்டதும் இன்னொரு பாட்டம் அழுது தீர்த்தாள் லீலா. ஆனாலும் தான் தனியே இல்லையென்ற எண்ணம் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்து.
சாந்தனும் கண்ணனும் சேர்ந்து கண்ணனின் பெயரில் ஒரு வீட்டை எடுத்திருந்தனர். அதிலே லீலாவின் குடும்பம் குடியேறியது. லீலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவளது அண்ணன்மார் அவளுடன் தங்க மறுத்து விட்டனர். “பக்கத்திலேதானே இருக்கிறோம், உனக்கு எதேனும் அவசரமெண்டால் உடனடியாக இஞ்ச நிப்போம்” என்று சொல்லி அவளை ஆறுதற்படுத்தினர். குமணனுக்கு லண்டனில் தூரத்து உறவுகள் என்று சொல்லிக் கொள்ள இருக்கும் ஒருசிலரைத் தவிர நெருக்கமான உறவுகள் என்று யாருமில்லை. வந்தவுடன் லீலாவின் சகோதரர்கள் செய்த உதவிகள் அவனுக்கு அலைச்சல் என்று எதையும் வைக்காததில் அவனுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் அவனுக்குள்ளே ஒரு குமைச்சல் இருந்து கொண்டேயிருந்தது. குமணன் யாருடனும் அதிகமாகப் பேச்சுக் கொடுப்பவனல்ல. ஆனால் தலையைக் குனிந்தபடியே அதிகமாக எல்லாவற்றையும் கவனித்துக் குறிப்பெடுத்துக் கொண்டேயிருப்பான். கவனித்ததற்கும் அதிகமாக மண்டையைக் குழப்பிக் கொள்ளுவான். ஆரம்பத்தில் லீலாவாலும் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. “அத்தான், அத்தான்” என்று அன்பைப் பொழிந்தாள். பெற்றோரைத் திடீரென்று பிரிந்து வந்தவளுக்கு அதை ஈடுகட்டும் ஒரு அருகாமை தேவைப்பட்டதில் அதைத் தனது கணவனிடமிருந்தே எதிர்பார்த்து அன்பைக் கொட்டினாள். கணவனுக்குத் தேவையானதை அறிந்து செய்தாள். அம்மா கற்றுக் கொடுத்ததை விடத் தனது கற்பனையையும் கலந்து விதவிதமாகச் சமைத்தாள். வேலையிலிருந்து சரியான நேரத்துக்குத் திரும்பாவிட்டால் பயந்துபோய்  நாலைந்து முறை தொலைபேசி எடுத்து நிலைமையை அறிந்து கொள்ளுவாள். இப்படியே அவளது வாழ்க்கை அவனைச் சுற்றியே இருந்தது. மூத்தவள் பிரபா பிறந்தபோது, லீலாவைவிட அவளது அண்ணன்மார் அடைந்த மகிழ்வுக்கு அளவில்லை. தங்கை தாயாகிப் போனாள். மருமகளுக்கு பொருட்களாக வாங்கிக் குவித்தனர் மாமன்மார்.
அப்போது குமணனுக்குள்ளிருந்த பேய் மெல்ல வெளியேறத் தொடங்கியது. தன்னை இவர்கள் யாரும் மதிக்கவில்லை என்கிற எண்ணம் உருப்பெற்றுக் கொண்டிருந்தது. லீலாவின் மீது அவளது குடும்பம் கொண்டிருந்த பேரன்பும் அவர்கள் அவளைத் தாங்குவதும் ஒருவித எரிச்சலையூட்ட, தன்னை அவர்கள் இயலாதவனாகக் காட்டுவதாக எண்ணிக் கொண்டான். இவையெல்லாம் சேர்ந்து  லீலாவின் மீது வார்த்தைகளாக வீழ்ந்து உடைந்தன. எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழத்தொடங்கினான்.
“ உம்மை ஒருநாளைக்குப் பாக்கா விட்டால் உம்மட அண்ணன்மாருக்கு உயிர் போய் விடுமோ? கண்டறியாத ஒரு பொம்பிளை நீர்….உம்மட அண்ணன்மார் இஞ்ச ஏன் ஒரே வந்து கரைச்சல்படுத்துகினம்? ஒரு யோசினை வேண்டாமோ?” என்றான்.
அவள் “எனக்கு அவையளை விட்டா வேற ஆர் இருக்கினம்? அவையளுக்கும் என்னை விட்டிட்டு இருக்க ஏலாது எண்டு உங்களுக்குத் தெரியாதே? என்றாள் அப்பாவியாக.
“ஓம், நீர் ஒராள்தான் இந்த உலகத்தில ஒரு பொம்பிளை எண்ட நினைப்பு உமக்கும் உம்முடைய வீட்டுக்காரருக்கும்” என்றான் நக்கலாக. லீலாவுக்கு இந்தச் சொற்களால்  என்றைக்குமில்லாமல் ஒரு வேதனை ஏற்பட முகம் சோர்ந்து கொண்டது. நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளது வேதனையைக் குரூரமாக அவன் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை அவன் மறைக்க முயலவில்லை. லீலாவைப் பயம் சூழ்ந்து கொண்டது. நான் என்ன தவறு செய்தேன்? எங்கே குறையிருக்கிறது? என்று சிந்திக்கத் தொடங்கினாள். முன்னரெல்லாம் அவன் பகடியாகச் சொல்லுகிறான் என்று தான் எண்ணியவைகள் அனைத்தும் அவன் வேண்டுமென்றே தன்னை மட்டம் தட்டச் சொல்லியிருக்கிறான் என்பது இப்போதுதான் அவளுக்குப் புரியத் தொடங்கியது.
கொண்டாட்டங்களில் பலர் கூடியிருந்து கதைக்கும்போது, “இவ ஒரு வானலோகத்துத் தேவதை, ஒரு தேத்தண்ணி கூட சரியாப் போடத் தெரியாது” என்று இவன் நக்கலாகச் சொல்லும்போது சிலர் சிரிப்பர், சிலர் சங்கடமாக நெளிவர், ஒருசிலரே முகச்சுழிப்பை வெளிப்படுத்துவர். அவள் தலைகுனிந்து கொள்ளுவாள். அப்போதெல்லாம் அதைப் பெரிதுபடுத்த விரும்பியதில்லை.
சில சமயங்களில் அவள் பேச்சுக்களில் கலந்துகொள்ள முயலும்போது, “நீர் பேசாமலிரும். இது உம்முடைய வீடில்லை நீர் சொல்லுறதை எல்லாரும் கேக்கிறதுக்கு” என்று எரிச்சலோடு அவளைப் புறக்கணித்து விட்டு கடைக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
காலம் நெருக்கடிகளைக் கொடுத்துக் கடந்தாலும் அவ்வப்போது குமணனுக்கு தன்னிச்சை தீர்க்க லீலா தேவைப்பட்டாள். மனம் வெறுத்து உடல் மட்டும் கிடந்தது அந்த நாட்களில். அந்த நேரங்களின் பயனாக இரண்டாவதாக விதுரன் பிறந்தான். மகள் பிரபாவையும் கையிலே பிடித்துக் கொண்டு விதுரனையும் சுமந்து கொண்டு அண்மையில் இருக்கும் கோயில்களுக்குத் தனியே செல்லுவாள் கொஞ்சம் நிம்மதி தேடி. வீட்டிலே இருந்தால் எதையாவது சொல்லிக் குத்திக் காட்டிக் கொண்டிருப்பானே குமணன்! ஒரு சிறு தப்பித்தல்தான். அதற்கும் ஆயிரம் கதை சொல்லுவான். “பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஆரைப் பாக்கப் போறாய் அங்க?”. ‘நீர்’ என்ற அழைப்பு ‘நீ’ யாகிப் பலநாட்களாகி விட்டிருந்தன.
கண்ணீர் முட்ட மௌனமாக நிற்பாள். இவனுக்கு ஏதோ மனப்பிறழ்வு இருக்கிறது என்று எண்ணிக் கொள்ளுவாள்.
தங்கையின் கண்ணசைவை வைத்தே எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் அண்ணன்மாருக்கு ஏதோ சிக்கல் என்று புரிய, அவளைப் பலமுறை பலவிதங்களிலும் கேட்டுப் பார்த்துக் களைத்து விட்டனர். அவளோ பிடிவாதமாக எதுவுமில்லை என்று சமாளித்து அவர்களை அனுப்புவதிலேயே எப்போதும் குறியாக இருப்பாள். இது தவிர அவர்கள் வீட்டுக்கு வரும் சமயங்களையும் கூடியவரை தவிர்த்தே வந்தாள். அப்படித் தவிர்க்க முடியாமல் அவர்கள் தங்கள் மருமக்களைப் பார்க்க வரும் நேரங்களில் எல்லாம், அவர்களுக்கு முன்னாலே “அத்தான், அத்தான்” என்று கணவனைச் சுற்றி வருவாள். இந்த நாடகங்கள் பல நாட்களுக்கு நீடிக்காது என்றும் அவளுக்குத் தெரிந்தேயிருந்தது. இருந்தாலும் தனது சிக்கல்களை வெளியே காட்டி குடும்பத்தை சிதைவுறச் செய்து விடுவேனோ என்ற பயம் அவளை ஆட்டிப் படைத்தது.
ஊரிலே அம்மா தகவலறிந்து அழுது புரண்டாள். “ஐயோ! என்ர செல்வத்தை நான் என்னோட வைச்சிருந்திருப்பேனே! என்று அரற்றினாள்.
பெரியண்ணா தொலைபேசியில் பக்குவமாகப் பேசினார். “பிள்ள, எல்லாத்தையும் சமாளிச்சுக் கொண்டு போ பிள்ள! …..
தொலைபேசி கைமாற, அப்பா, “பிள்ள! சுகமா இருக்கிறியே ராசாத்தி?”....குரலுடைந்து கண்ணீருக்குள் சிக்குண்டு கொண்டது. அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை.
லீலாவுக்குக் கோபம் வந்தது இங்குள்ள அண்ணாமார் மேல். என்னுடைய சிக்கலை அங்க இருக்கிற ஆக்களுக்குச் சொல்லி என்ன பிரயோசனம்? எனக்கு வாய்ச்ச வாழ்க்கையை நான்தானே வாழ்ந்து முடிக்க வேணும்? ஏன் எல்லாரையும் வேதனைப்படுத்த வேணும்? என்று எண்ணிக் கொண்டாள்.
மனவுளைச்சல்களுடன் வாழ நேரிடும் போது உடல் தானாக சிக்கல்களைக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றது. லீலாவுக்கு இப்போதெல்லாம் ஏனென்றறியாத ஒரு களைப்புத் தோன்றி விடுகின்றது. அதிக நேரம் நடக்க முடிவதில்லை. பசி குறைந்துகொண்டே போக, ஏற்கனவே மெலிந்த அவளது உடல் மேலும் கொஞ்சம் கொஞ்சமாக நிறைகுறைய அப்படியே ஒடுங்கிப் போனாள். ஆனால் அவளால் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. பிள்ளைகளைப் பற்றிய கவலையே அவளைச் சூழ்ந்திருந்தது.
அன்றைக்குப் பிரபாவின் பத்தாவது பிறந்தநாள். குமணன் தனது நண்பர்கள் சிலரை அழைத்திருந்தான். லீலாவின் அண்ணன்மாரை அழைப்பதற்கு அனுமதிக்கவில்லை. இருந்தாலும் மாமன்மார் இருவரும் கைநிறையப் பொருட்களோடு வந்து வாசலில் அழைப்பு மணியை அழுத்தியபோது, யாரோ என்று எண்ணிக் கதவைத் திறந்த குமணன் முகத்தைச் சடாரென்று திருப்பிக் கொண்டு உள்ளே போனான். லீலா வெளியே வந்தபோது இரண்டுபேருமே அதிர்ந்து போனார்கள் அவளது கோலத்தைப் பார்த்து.
“என்ன இது உன்ர கோலம்? என்னெண்டாலும் சுகமில்லையே?” என்றான் சாந்தன். இதை உள்ளேயிருந்து கேட்ட குமணன் சடாரென்று வெளியே வந்து,
“ ஏன்? உங்கட செல்லத் தங்கச்சிக்கு நான் சாப்பாடு போடுறேல்லை எண்டு சொல்லுறீங்களோ? உங்கட செல்லப்பிள்ளையை எனக்குக் கட்டிக் குடுத்திட்டு பின்னாலயும் முன்னாலயும் திரியுறீங்கள். இதைவிட நீங்கள் உங்கட செல்லத்துக்கு கலியாணம் செய்து வைக்காமலேயே இருந்திருக்கலாம்” என்று முகத்தில் அறைந்தால்போலப் பேசினான்.
சாந்தனுக்கு அவனை நாலு சாத்துச் சாத்தினால் என்ன என்ற கோபம் வந்தது. கண்ணன் தமையனைப் பிடித்துக் கொண்டான். லீலா அண்ணன்மாரைக் கண்களாலேயே கெஞ்சினாள். கொண்டுவந்த பொருட்களைப் பிரபாவிடம் கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர் நிம்மதியற்ற மனத்துடன்.
நாட்கள் அவர்களுக்கு ஊமையாகக் கடக்க, ஒருநாள் லீலாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு பெண்ணினூடாக இடியென ஒரு செய்தி வந்திறங்கியது அவர்கள் மேல். லீலாவுக்குப் ’புற்றுநோய்’. அண்ணன்மார் ஊருக்குத் தகவல் சொன்னார்கள். லீலாவைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனார்கள். நோய் அவளை முழுமையாக மூடிக் கொண்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். குமணன் லீலாவின் அண்ணாக்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. சாந்தனும் கண்ணனும்,
“ நாங்கள் எவ்வளவெண்டாலும் செலவளிச்சுப் பாக்கிறோம், வேற இடத்துக்கு கொண்டு போவோம்” என்று கெஞ்சினார்கள். குமணன் சம்மதிக்கவில்லை. “அதெல்லாம் நான் பாக்கிறன்” என்றான். லீலா படுக்கையிலிருந்தபடியே வாசலில் அண்ணாக்களை எதிர்பார்த்திருந்தாள்.  பிள்ளைகளை ஒருதடவை குமணன் கூட்டிக் கொண்டு வந்தான். அவ்வளவுதான். அவள் தன்மீதே நம்பிக்கையற்றுப் போயிருந்தாள்.
நாட்கள் மாதங்களாகி ஐந்தைக் கடத்தியிருந்தன. மருந்துகளின் வீரியத்தில் முடிகள் உதிர்ந்து, எலும்புகள் துருத்தியபடி தெரியும் தனதுருவத்தை கழிவறைக்குப் போய்வரும் போது பார்க்கையில் அவளுக்கே பயமாக இருக்கும். இப்போதெல்லாம் கழிவறைக்கு எழுந்து போவதே இயலாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. தனது பிள்ளைகள் அனாதைகளாகி விடுவார்களோ என்ற பயம் நோயின் வேதனையைவிடப் பெரிதாகவிருந்தது. தன்னுணர்வு மங்குவதற்குள் அண்ணன்மாரிடம் தனது குழந்தைகளைக் கொடுத்துவிட வேண்டுமென விரும்பினாள். அதற்கான வசதியை குமணன் ஏற்படுத்தித் தரப் போவதில்லை என்றும் அவளுக்குத் தெரியும். எனவே வேறுவழி தேட முடிவெடுத்துக் கொண்டாள். காலைப்பார்வைக்கு வரும் மருத்துவர் ஒரு பெண். மிகவும் அன்பாகப் பேசுவார். இவள் சொல்லுவதைக் கூர்ந்து கேட்டுப் புரிந்து கொள்ளுவாள்.
லீலா அன்றுமாலை கணவன் வந்தபோது, “டொக்ரர் என்ன சொன்னவர்?” என்று தெரியாதது போலக் கேட்டாள். அவன் வெறுப்போடு, “அவை என்னத்தைச் சொல்லுறது? அவங்களாலை ஏலக் கூடியதைச் செய்யுறாங்கள், இனிக் கடவுள் விட்ட வழி” என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமல். அவள் எதுவும் பேசவில்லை.
அடுத்தநாள் காலையில் அந்த மருத்துவர் வந்தபோது, லீலா அவளது கையைப் பிடித்துக் கொண்டாள். தனது தமையன்களின் முகவரியைக் கொடுத்து அவர்களைப் பார்க்க விரும்புவதாகவும், அதுவே தனது இறுதி ஆசையாகும் என்றும், கணவன் அவர்களை வர விடாமல் தடுப்பதாகவும் கூறினாள். மருத்துவருக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை. அவளது கணவன் குமணனிடம் லீலாவின் வாழ்நாட்கள் மிகச் சொற்பமே என்று சில நாட்களுக்கு முன்னரே அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் லீலா அவளைக் கெஞ்சியது வியப்பளிக்க, அவர்களது குடும்ப நிலைமை புரிந்து போனது.
லீலாவுக்கு ஆறுதலும் உறுதியும் அளித்துவிட்டு வெளியே வந்து அவள் கொடுத்த இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு நிலைமையைத் தெரியப்படுத்தினாள். சாந்தனும் கண்ணனும் கலங்கிப் போய் ஓடிவந்தபோது, அங்கே லீலா என்ற பெயரில் ஓரெலும்புக்கூடே கண்களில் கொஞ்சம் நம்பிக்கையைத் தேக்கி வைத்துக் கட்டிலில் கிடந்தது. அண்ணன்மார் வாய்விட்டு அழுதனர். லீலாவுக்கோ தான் கடைசியாகவேனும் அண்ணன்மாரைப் பார்க்க முடிந்ததே என்ற மகிழ்ச்சி.
“என்ர பிள்ளையளைக் கை விட்டிடாதையுங்கோ அண்ணா! அதுகளைக் கவனமாகப் பாருங்கோ! என்று கலங்கினாள்.
கண்ணன், “உனக்கு ஒண்டும் நடக்காது, எல்லாம் சரிவரும்” என்று அவளைத் தேற்ற எண்ணித் தோற்றுப் போய் அழத்தொடங்கினான்.
அதற்கடுத்த நான்கு நாட்களில் எல்லாமே முடிந்து போனது. லீலா என்ற இளவரசி சாம்பலாகிப் போனாள்.
வீடுதேடி வந்தவர்கள் அண்ணன்மாருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் மாமன்களின் கைகளில் இருந்தனர்.
குமணன் மௌனமாகச் சுற்றிக் கொண்டிருந்தான் எல்லாவற்றையும் கொஞ்சம் ஆறப்போட்டு விட்டு, தனது நீண்ட நாள் காதலியுடன் புதுவாழ்க்கையைத் தொடங்கும் சிந்தனையுடன்.


நன்றி ‘காற்றுவெளி’ சஞ்சிகை.


வி. அல்விற்.
12.09.2016.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

அழிதல் நலம்.

இறுகியிருக்கும் இந்த வாழ்க்கை
எனக்கும் உவப்பானதாயில்லை.
செம்மஞ்சள் பூசிவரும்
அதிகாலை வானம் போல
அள்ளித் தெளிக்கவே
மனங்கொள்ளுகிறேன்
மகிழ்ச்சியை.
பிரகாசம் தெறிக்கும்
உனது கண்களின் சிரிப்பையும்
சொற்களில் பொங்கும்
நம்பிக்கை நுரைகளையும்
நெஞ்சில் பதிந்துவிட
முன்னாலே அமர்ந்திருக்கிறேன்.
புதைத்தவற்றை வெளியெடு!
எரிக்க வேண்டும்,
அல்லது அழிக்க வேண்டும்.
இல்லையேல் கரைத்துவிட வேண்டும்
அவை
மீண்டும் புதைபடாமலிருக்க.

வி. அல்விற்.
22.08.2016.

சனி, 20 ஆகஸ்ட், 2016

எரிதல்.

இவ்விரவும்
மறுபடியும் முரணுறுகிறது
சாட்சியங்களற்ற வழக்குகளும்
பேசப்பட்ட சத்தியங்களும்
ஆவணங்களற்ற ஒப்பந்தங்களும்
முறிநிலையலுள்ள உறவுகளும்
முடிவுறாத பிணக்குகளும்
நானெனும் எதிர்வுகூறல்களும்
நீளுமிவ்விரவில்
நெருப்பிட்டுக் கொள்ளுகின்றன.
நிலவு முகிலுக்குள் ஒளிந்து கொள்ளுகின்றது
சாட்சியளிக்க விரும்பாதது போல.

மனிதர்கள்
எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வி. அல்விற்.
18.08.2016.

கைத்தடிகளின் பயணம்.

தலைமுறை இழந்த
கைத்தடிகளை
மரணம் கொண்டு போகும்
அடர் இருட்டில்
கொள்ளி வைக்க வேண்டியவர்கள்
வரிசையாக  மின்னுகிறார்கள்
வானத்தில் விண்மீன்களாக.

வி. அல்விற்.
16.08.2017.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நம்பிக்கை.

வெட்டி விடப்பட்டதாயும்
பட்டு விட்டதாயும்
துளிர்க்க முடியாததாயும்
தோற்றம் கொண்டு
மயக்குகின்றது
நமக்கிடையிலான
இந்த உறவு.
மிகைப்படுத்தப்பட்ட சொற்களும்
குறுகிய வினைகளுமென
கலங்கிக் கிடக்கின்றது
தெளிவற்றது போன்ற தோற்றத்துடன்.
வீசப்பட்ட விதையின் மேல்
விழும் ஒரு மழைத் துளியில்
துளிர்க்கும் மெல்லரும்பு போல
காத்திருக்கிறது
காலம்
நம்பிக்கை மழையின்
பொழிவுக்காக.

வாழ்க்கை.

எது வாழ்க்கை?
புரிந்திருக்கிறாயா அவளை?
அங்கிருந்து ஆரம்பிக்கின்றது
படரும் கொடி போன்ற அன்பு.
அது,
இன்பத்தில் சேர்ந்து களிக்கவும்
துன்பத்தில் தாங்கி நிற்பதற்குமான
ஒரு தெரிவு.
நீ மரமாயிருப்பாய் எனும்
நம்பிக்கையின் உறவு.
மரங்கள் தறிபடாது என்னும் நம்பிக்கை.
வேர்கள் பரப்பி,
கிளைகள் பெருக்கி
காலத்துக்கும் இளைப்பாறலாம் இருவரும்
என்கின்ற துணிவு கொண்ட உறவிது.
உனது செயல்களை
தனது விட்டுக் கொடுப்புக்களால்
நிரப்பிக் கொள்ளும்
அவளது அன்பைப் புரிந்தாயா?
உன்னையவள் முழுமையாக்க எண்ணுவதை
உணர்ந்தாயா?
உனது உதாசீனங்கள் வேர்களை அறுத்து விடும்.
உனது நேர்மையீனங்கள் கிளைகளை முறித்து விடும்.
உனது பொய்கள் தூரத் துரத்தி விடும்.
வாழ்க்கை அவ்வளவே!
முழுமையிலல்ல;
புரிந்து வினையாற்றுவதிலுள்ளது.

வி. அல்விற்.
05.08.2016.

இலக்கியச் சிதிலங்கள்.

வெட்கமற்றவர்களே!
பேசிவிட்டுப் போங்கள்.
உங்கள் நிர்வாணம் மறந்த
போதைக்குள் தலைவைத்துறங்கும் உங்களுக்கு
நமது தேசத்துக் கூக்குரல்களின் அவலங்கள்
புரியப் போவதில்லை.

வெட்கமற்றவர்களே!
பேசிவிட்டுப் போங்கள்
உங்கள் தேசத்தின் சார்பில்
சத்தியம் செய்து,
உங்கள் அன்னையரின்
மார்பு கிழித்து
இரத்தத் திலகமிடுங்கள்.
நமது குழந்தைகள்
சீரழிக்கப்படவில்லையென.

எதுவுமற்றவர்களே!
பேசிவிட்டுப் போங்கள்.
நமது புதைகுழிகளில் இருப்பவை
கனவுகள் நிறைந்த
இருப்பிடங்களென
அறிய மறுக்கும் பிண்டங்களே!
எடுத்துச் செல்லுங்கள்
உங்களது உழுத்துப் போன
இலக்கியச் சிதிலங்களை.

(இது பேசத் தெரியாத இலக்கியக் கொம்புகளுக்கு)

வி. அல்விற்.
01.07.2016.

பிரதிபலிப்பு.

மனமூட்டங்களைப் போலவே
கனத்திருக்கும் வானத்திலிருந்து
அள்ளித் தெளிக்கப்படுகின்றன மழைத்துளிகள்.
தூறலின் நனைவில்
இறுக்கம் விலக்கி
குளிர்ந்து போகின்றது மனமும்.
காற்றுக் கலந்து இசையும் முழங்க
நடனமாடிக் களிக்கிறாள் மழைக்கன்னி
இரவுபகலாக ஓய்வின்றி.
மாமழையே!
ஒருசமயம்
சோர்வின்றிப் பொழிந்து நெகிழ்த்துகிறாய்.
மறுசமயம்
ஓவென்றழும் குழந்தையை ஒத்திருக்கிறாய்.
இதோ!
இந்தச் சாளரத்தின் ஒருபக்கம் நான்
மறுபக்கம் நீ!
நீ என்னைப் பிரதிபலிக்கிறாயா?
அல்லது நான் உன்னைப் பிரதிபலிக்கிறேனா?

வி. அல்விற்.
23.06.2016.

நீண்ட இரவுகள்.

தூக்கம் துக்கித்தபடி
விழிகளுள் விழுந்து கனக்க மறுக்கின்றது.
ஆழ்மனம் விழித்தபடியேயிருக்கின்றது
எதையோ முடிவு செய்து காத்திருப்பதுபோல.
பாம்புகள் ஊர்ந்து பயமுறுத்துகின்றன.
நிழல்கள் நிற்காமல் துரத்தியும்
மரங்கள் நடனமாடியபடியும் நெருங்க
முடிவடையாத தெருக்களில்
ஓடிக்கொண்டேயிருக்க
தப்பிக்கவியலா தடுப்புக்கள் திகைப்பூட்டி
கத்தவும் ஒலி பிறக்காததுமான
இந்தக் கொடும் இரவுகள்
மிக நீளமானவை.
செக்குமாட்டின் நிலையையொத்து
நினைவுகள் ஒரே வட்டத்தில்…..
இவை எங்கிருந்து பிறப்பெடுத்திருக்கும்?

நம் முதுசங்களை
காலம் அள்ளிக் கொண்டு போனவேளையிலோ?

வி. அல்விற்.
13.06.2016.

சொற்கள்.

மிதக்கும் நீரில்
கலங்கி வீழ்ந்த
முழுநிலவு போல
வீசப்பட்ட வார்த்தை
உருவமிழந்து அலைகிறது.

வி. அல்விற்.
09.06.2016.

பிம்பம்

பொய் சொல்லியுள்ளாய்
அதுவும்
மனமறிந்து.
உனது பிம்பம்
இப்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது
.................
.................
முழு நிர்வாணமாக.

வி. அல்விற்.
08.06.2016.

பிரிய சிசுவே!

காற்றில் அலையுண்டும் 
நீரில் மூழ்கித் திணறியும்
அழிவுறும் இப்பூமியில்
நேற்றைய துக்கங்களும்
நாளையின் கலக்கங்களும் 
நிரந்தரமென ஏதுமில்லை.
பிரகாசிக்கும் சுடரெனவோர் அமைதி
இக்கணம் பிறந்திருக்கிறது.
உயிர்த்திருக்கிறேன் நான்!
கொடுவாள்களும்
கடுங்கனவுகளும்
எரிநட்சத்திரங்களாய் வீழ்ந்து போகட்டும்
என் பிரிய சிசுவே!
என்னோடு உயிர்த்திரு
பகிர்ந்தெடு மகிழ்ச்சியை.

வி. அல்விற்.
04.06.2016.

புதன், 3 ஆகஸ்ட், 2016

பசுமையின் மணத்தை ஒத்திருக்கின்றது
உனதருகாமையின் பிடிப்பு.
இடறிக் கொண்ட காலங்கள்
நேர்வழிப்பட்டுக் கொண்டிருப்பதான உணர்வு.
நமது துக்கங்களின் கருமை
சற்றேவிலகி தெளிவடைகின்றன
எதுவாயிருக்கும் நமதெதிர் காலம்?
நம்பிக்கையின் நூலான
மீள்பிறப்பொன்று போலவா?
அல்லது,
இக்கண மகிழ்வில் திளைத்தலில் மட்டுமே
நிறைவாகிப் போவமா?
எதுவாயினும்
எத்தனங்களுக்குட்பட்டவுன் மறத்தல்களில்
நான் ஆறுதலுற்றிருக்கிறேன்.
அவை மீளாதிருக்கட்டும்!
உனதருகாமையின் இனிமையில்
பசுமை கொண்டிருக்கின்றதெனது மனம்.

வி. அல்விற்.
03.06.2016.
வார்த்தைகளால் போர்த்தினாள்
பயத்தை விலக்கினாள்

கண்களால் கட்டளையிட்டாள்
பணிவைக் கற்றுத்தந்தாள்

அன்பை உணர்த்தினாள்
பகிரச் சொன்னாள்

உலகத்தைக் காட்டினாள்
வாழப் பணித்தாள்

தனித்தே நின்றவள்
போராடச் சொல்லித் தந்தாள்

ஓ! என் தாயே!
எனைச் சுமந்த உன்னை
சுமந்தபடியே செல்லுவேன்
இன்னும் இன்னும்
தொலைதூரம்வரை….

வி. அல்விற்.
29.05.2016.
வெற்றோசைகள்.

வெளியேறி விடுங்கள்!
உங்களது கூக்குரல்கள்
பெயரற்றுப் போயிருக்கின்றன.

ஒருபோதும் அறிந்திராததொரு மொழிபோல
வெற்றோசைகளே காற்றில் வந்து
மோதி அலைகின்றன.

நீங்களாகவே மூடிக் கொண்டுள்ள கதவுகளை
உள்ளிருந்து திறக்காவிடின்
எங்ஙனம் சாத்தியமாகும் உங்களது விடுதலை?

மூச்சு நிறைக்கும் நச்சு வாயு
நிறைந்திருக்கும் உள்ளே
மரணத்துள் ஆழ்ந்து விடாதிருக்க
அகலத்திறந்து கொள்ளுங்கள் சாளரங்களையும்

அதனுடன் சேர்த்து மனங்களையும்.

உங்களது மொழிகளைப் புரிந்து கொள்ளவும்
நம்பிக்கை கொடுக்கவும் வளர்க்கவும்
அநேகருண்டு இந்தப்பூமியில்.

உங்களை விடுவிப்பதற்காகவேனும்
தாழ்ப்பாள்களைத் திறந்து விட்டு
வெளியேறி விடுங்கள்!

வி. அல்விற்.
25.05.2016.
எவையென்றறியாத
அல்லது
பகுத்தறியவியலாத
இருட் குகைக்குள்
தேடிக் கொண்டேயிருக்கிறோம்
இருக்கும்
என்றெண்ணிய பதில்களுக்காக.

எங்கே தொலைந்து போனோம்?

வழியானவர்கள் வாழ்விழக்க நாமே
வழியாகப் போனோமா?

அன்றேல்
(நா)மொழி புரள
நமக்கே யெதிராகிப் போனோமா?

என்று கடக்குமிந்தக் கொதிகாலம்?
எத்தனை விலை கேட்கும்
இன்னும் இன்னுமென...

வி. அல்விற்.
13.05.1016.
விக்கித்து நின்றோம்.

தொண்டைக்குள் நீரிறங்க
மறுத்தடம் பிடித்தது.
அடுப்படிகள் எரியாமல்
மூடியே கிடந்தன.

கனவினில் காட்சிகள்
பேயாட்டம் போட்டன.

இறுதிக் குரல்களை
இறுகியபடியே கேட்டிருந்தோம்.

ஆம்,
எமதுடல்கள் மட்டுமே பெயர்ந்திருந்தன.

வி. அல்விற்.
14.05.1015.


போதை.

உனது வார்த்தைகள்
பழரசத்தில் தோய்ந்து
தேனில் மூழ்கியெழுந்து
நழுவி வீழ்கின்றன.

நாவென்னும் சுழற்கருவியால்
வல்லமை மிகு செய்திகள்
சுடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

அமோக விற்பனையில் உனது மனம்
வெகுவாகத் திளைத்திருப்பதைப்
பெருமை சாற்றுகிறது
அறிந்தும் அறியா இவ்வுலகம்.

உனது விரல்கள் உயிர்ப்பூட்டுகின்றன
மறந்துவிட்ட இசைகளை.
கால்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன
கொஞ்சம் கலைகளுக்குமாக
மிச்சமதன் விலைகளுக்குமாக.

இதோ!
இந்த வசந்தத்தின் மரத்தை நிறைத்திருக்கும்
‘லிலா’ மொட்டுக்களைப் போல
நிறைந்திருக்கின்றன
உனது சாகசங்கள்
மிகுந்த அழகுடன்.

இப்போதே வருந்துகின்றேன்
அவற்றின் மலர்வுக்கும்
வீழ்ச்சிக்குமாக.

வசந்தங்கள் மகிழ்ச்சிதான்
மறுகாலம் வரும் வரை.

வி. அல்விற்.
03.05.2016.

நடிகர்

முந்தியும் பிந்தியுமான
மலட்டு விதைகளின்
விதைப்புக்களிலிருந்து
சிதைவடையும் நிலங்கள் போல
மாறிக் கொண்டேயிருக்கின்றன
அவர்களது முகங்கள்.

சிதைவடைகின்றன தொடர்ந்தும்...
அவர்களது விதைச்சல்களுக்கும்
அறுவடைகளுக்குமான
இடைக்காலங்களில் பொழியும்
வெள்ளத்தில் சிக்குண்ட பயிர்கள் போல.

பொய்யாகச் சிரித்தும்
மெய்யாக நடித்தும்
மெய்யாகிலுமே
ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளுகிறார்கள்
பொய்யிலும் பொய்யாக.

கூத்துக்கள் ஆடப்படுகின்றன
உச்சக் கட்ட ஆட்டமோ?
பாய் போட்டுத் தூர இருப்பவர்கள்
முகங்களின் பிரகாசிப்பில்
இலயித்துப் பிரமித்திருக்கின்றார்கள்

பூச்சுக்கள் கழன்று
சிதைவடையும் முகங்களை
நினைத்தும் பார்க்க விரும்பாமல்.

இருந்தாலும்....
கூத்துக்களும் முடியும்
ஒருநாள் நாயகர்களின்
பூச்சுக்களும் கழன்று போகும்.

மிஞ்சுவதோ....

விதைத்ததில் எஞ்சுபவை.

வி. அல்விற்.
28.04.2016.

திமிர்

அவர்கள் ஆண்களாயிருக்கிறார்கள்.

நீ
கொடியெனவும் செடியெனவும்
முல்லையிலும் சிறந்த மலரெனவும்
கருநாகம் போலவுன்னை
வருணிக்கின்றார்கள்.

உனது தனிமையும்
கண்ணீரும்
ஆறுதல் தேடும் கரங்களும்
இன்னும் இன்னும்…..
உனது பலவீனங்கள்
அவர்களது பலங்களாகவிருக்கின்றன.

காமப் பற்களை அழுத்தி
உன்னைச் சீரழிக்கப்
பேயாக அலைகிறார்கள்.

பெண்ணே!

உனக்கேன் புரியவில்லை
உனது பலங்கள்?

வேர் கொண்டுள்ள அன்பும்
காத்து நிற்கும் உறவுகளும்
வாள் போலறுக்கும் உனது விழிகளும்
நாவென்னும் கணையும் கொண்டு
உன் பலம் பெருக்கும் துணிவை
எங்கே ஒழித்து வைத்தாய்?

எடு பயமறுத்து! வெட்டி விடு!
கழுத்தைச் சுற்ற வருவதை.

நீ
பெண்ணாக நிமிருவாய்!

அன்றேல்,

மிதித்து நகர்ந்து போவார்கள்

ஆண் திமிருடன்.

வி. அல்விற்.
24.04.2015.

நடிகன்

அவர்கள் நடிகைகளாயிருக்கிறார்கள்
உன்னைப் போலவே.

நளினமாகச் சிரிக்கவும்
தலைசரித்துச் சிரித்து மயக்கவுமான
திறமைகளை அதிகமாகவே
கொண்டுள்ளார்கள்
தேர்ந்த நடிப்பாளிகளைப்போல.

நீ
ஆரசனாகும் போது
மகாராணிகளாகவும்
நீ
குலுங்கி அழும்போது
கண் கலங்கவும்
நீ
அகங்காரமாகச் சிரிக்கும்போது
துணைவிபோலெண்ணிப் பெருமிதமடையவும்
அறிவிழந்தவர்களாக ஆக்கியிருக்கிறது
உனது மதிப்பேயற்ற
வெறும் பிம்பம்.

நீ
தினமும்
ஊதிக்கொண்டிருப்பது
வெறும் நீர்க்குமிழிகளே

அவை உடைபடுகையில்
அந்தப் பேதைகள் புதைந்து போவார்கள்.

வி. அல்விற்.
24.04.2016.

அனைத்துமாகி.

நீ
மலரல்ல
தென்றலுமல்ல
நிலவாயும்
நிலமாயும்
நீராயும்
நீண்டவளுமல்ல,

புதிராய்,
தினமும் புதிதாய்ப் பிறந்து
நமக்கெதுவோ
அதுவாகும்
அனைத்துமான
அன்னையாக ஆகிறாய்.

வி. அல்விற்.
16.04.2016.

உயிர்

பேசிக்கொண்டேயிருக்கிறோம்
வாழ்க்கை முழுக்க
நிலையாமை பற்றி.

ஆனாலும்,

திடுக்குற்று நிற்கிறோம்

உயிர் உடல்விட்டகலும் வேளை ...

வி. அல்விற்.

அங்கீகாரம்

எனது தூக்கத்தை மட்டுமே கலைக்கிறாய்
துக்கங்களைக் களைந்துவிட முயலாமல்
இருளுக்குள் நான் தொலைந்து கொண்டிருப்பதை
மழைக்குமுன்னரான மேகமென
உணர்த்திக் கொண்டிருப்பதை
மறுதலித்துக் கொண்டேயிருக்கிறாய்
கள்ளத்தனமாக.

வானுடைந்து நிலம் பெருக்கெடுக்கும் போது
நானதில் கரைந்து போவேன்.

ஓ!
அதன் பின்னரும் நீ வாழ்ந்திருப்பாயோ?

சமூகம் உனக்கு அங்கீகாரமளித்திருக்கிறது
எனதின்மை பற்றிய விளக்கமளிப்பதற்கு.

வி. அல்விற்.
02.03.2016.

வெளி.

இதுவோரேகாந்த உணர்வு
காற்றிலே கலப்பது போலவும்
பறவைகளுடன் பேசிக் கொண்டே
பறப்பது போலவும்
மேகங்களின் மேலே படுக்கையமைத்து
மெய்மறந்து தூங்குவது போலவும்
வான் வெளியின் கீழே
தனித்தமர்ந்திருப்பதும் போன்றதுமானதிது.

மிக நன்றாக இருக்குமோ!

இடைஞ்சல்களுள்ள
மனிதரற்ற வெளி நன்றாக இருக்குமோ!

சாத்தியங்களை நோக்கிய
நம்பிக்கைகளை கொண்டபடி
இன்னும் இப்பூமிப் பந்தின்மேலே
நாங்கள்....

வி. அல்விற்.
28.03.2016.
பொய்களைப் புதைத்து விட்டு
உண்மைகளை உயிர்ப்பித்தால்
மானிடம் எத்தனை மேன்மையுறும்!

ஓ! சாத்தான்களே!
வண்ணமயமான
மாயபூமியைக் காட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்
தப்பிக்க முடியாதவர்கள்
வீழ்ந்து கொண்டேயிருக்க,

உயிர்த்தெழுதலுக்கான காலம்
நீண்டு கொண்டேயிருக்கிறது.

வி. அல்விற்.
27.03.2016.
அழகான கனவுகளை
ஊடறுத்துக் கலைக்கின்றன
அழிந்த வீடுகளும்
திரிபடைந்த ஊரும்.

இனியென்ன?

இதுதான் எமதென்பதா?
அதையே சரியென்பதா?

காலப்பதிவில்
ஆங்காங்கே அறுந்து தொங்குகின்றன
நினைவுகள்
துண்டிக்கப்பட்ட கனவுகள் போல.

வி. அல்விற்.
22.03.2016.

எதிர்.

மிகைப்படுத்தப்படாத
கவிதை போல
இதமூட்டுகிறது
விழிவழி வரும் செய்தி.

ஒப்பனைக்குள் மாறிவிடாத
முகம் போல
தெளிவாக அமர்ந்திருக்கிறது
உனதன்பு.

அன்று
ஒற்றை வார்த்தைகளில்
தத்திய கெஞ்சல்கள்
இன்று
எதிர்ப்பாட்டுக்களால்
இறுக்கிக் கோர்க்கப்பட்டுள்ளன.

வி. அல்விற்.
21.03.2016.

கரம் தா.

வானம் உனக்குப் பிரமிப்பாயிருக்கிறதா?
அதன் எல்லையற்ற பரப்பளவும்
தொட்டுவிட முடியாத நிறக் கலவைகளும்
அலையலையாக மிதந்து கொண்டிருக்கும்
மேகத் திரள்களும்
அதனூடே பிரகாசிக்கும் முழு நிலவும்
உன்னை மெய்மறக்கச் செய்கின்றனவா?

லயித்திரு!
உன்னை மகிழ்விக்கும்
சிந்தனைக்குள் மிதக்கவைக்கும்
தெரிவொன்றில் கலந்திரு!

என் பிரிய சிசுவே!

உனது கற்பனைகளை
மொழி பெயர்க்க முயல்கிறேன்
உனது கனவுகளை மெய்ப்படுத்த விழைகிறேன்

எனக்கொரு கரம் தா!
என்னையும் தாங்கி
நீ பற்றி எழுந்துவிட.

வி. அல்விற்.
30.01.2016.

இலக்கணம்

அன்பு நிலைத்திருக்குமா?
எப்படி?
நகமும் சதையும் போல?
கடலும் ஆழமும் போல?
மரமும் வேரும் போல?

எங்கேயோ அறுபட்டுப் போகிறதே
சுயநலத் தாக்குதலில்.

நான் மட்டுமே இங்கே
தனித்துக் குந்தியிருக்கிறது
இறுமாப்பாக.

வி. அல்விற்.
28.01.2016.
மறந்திருக்கிறேன் பல கீறல்களை
நினைவுபடுத்திக் கொண்டே.
இந்தக் காலம் போதாதிருக்கிறது
மீள்திருத்தம் செய்வதற்கு.
மீண்டும் மீண்டும்
நமக்குள் நாமே முரணாகியபடி...

என்ன செய்வது?

நிமிர்ந்து நிற்கும் மரத்தையொத்த
உறவுகளிலிருந்து
வேர்களாகிப் பிரிந்து
படர்ந்தோடுகின்றன
வேற்றுமைகள்.

நமது சந்திப்புக்கள்
நான் என்னையும்
நீ உன்னையுமான
‘எங்களை’ மட்டுமே மௌனமாக விட்டிருக்கின்றன

அந்த மரத்தைப் போல.

வி. அல்விற்.
23.01.2016.

வாழ்தல்.

விடலைப் பருவத்தினர் போல
முடிவெடுக்க முடியாது திணறும்
இந்தப் பனித் துகள்கள்
விழுந்தும் விழாதவையுமாக
அந்தரிக்கின்றன.

இறுக்கமாக மூடியிருக்கும்
பனியாடையை ஏமாற்றிக் கொண்டு
உட்புகுந்து உறைய வைக்கும்
இந்தக் குளிர்
இருக்கும் என்னை உலுப்பிவிடப் பார்க்கிறது

எழுகிறேன் வாழ்தலுக்காக.
அனைத்தும் உதிர்ந்து போய் விடுகின்றதான உணர்வு!

வி. அல்விற்.
22.01.2016.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சிதைவுகள்.

அண்மைக் காலமாக புலிகளை வன்மையாகவும் மென்மையாகவும் விமரிசிப்பவர்கள் பெருகி வருகிறார்கள். சொல்கைம்மிலிருந்து இவர்கள்வரை யார் எப்படி  விமர்சனம் செய்தாலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஓடியகுதிரைகளில் புலிகள்தான் முதலாவது என்பது உலகறிந்த உண்மை. மற்றப்  போராட்டக் குழுக்களை வடகரும், ஏனைய பலநாடுகளும் கரைத்தார்கள்; புலிகளை அழித்தார்கள். பின்னர் பல இலக்கியவாதிகள் புலிகளை இழிவுபடுத்துவதே இலக்கியம்போல் புலி எதிர்ப்பு இலக்கியம்  எழுதுகிறார்கள்.
இவர்கள் யார்? இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பதை, ஓர் வரலாற்றை விளக்கி இவர்கள் பின்னால் மறைந்து இருப்பவர்களை வெளிக்கொண்டு வருவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.
கொஞ்சநாட்களுக்கு முன்பு என் நண்பரின் சகோதரர் மறைந்து போனது அறிந்து, துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தேன். அங்கு இன்னொரு பெண்மணியும் வந்திருந்தாள். அவளுடன் உரையாடும்போது ஓர் விடயத்தை விளங்கப்படுத்தினாள். தங்கள் ஊரில் சுமங்கலிப்பெண்களைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லும்போது கூறைப்புடவை உடுத்தித்தான் கொண்டு செல்வார்கள் என்றும் அவ்வுடலை எரிப்பதற்கு
முன்னர் புடவையை எடுத்து  கட்டாடியாருக்கு கொடுப்பது வழக்கு என்றார். இவ்விடையம் என் சிந்தனையை தூண்டிவிட்டது.
நாவிதர், கட்டாடியார், பறையர் என்று பகுக்கப்பட்டிருக்கும் சாதியம் நீண்டு செல்லும் இவர்கள் யார்?
இவர்களைப் பற்றி ஆராய முற்படுகையில், சொல்லடை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
“பார்ப்பனர் குலத்திலும் பறைக்குலம் மேற்குலம்
கேட்போர் இல்லாமல் கீழ்குலமானது”
இச்சொல்லடைக்கும் அவர்கள் வாழ்வியலுக்கும் தொடர்பு இல்லையே!
பறையர் என்றால், பறைபவர்கள், பேசுபவர்கள் என்றுதானே பொருள்படும்! ஆனால் சமூகம் அவர்களுக்குக்  கொடுக்கும் பெயர் துப்பரவுத்தொழிலார்கள்! எங்கோ இடிக்கிறது.
மேற்சொன்ன கோணத்தில் பார்த்தால் பாரிசிலுள்ள அத்தனை பேரும் பறையராகத்தான் இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் எழுதிய  திருக்குறளைப் படித்துப் பார்த்தால் இதைத் தனியொருவரால் எழுதியிருக்க முடியுமா என்ற கேள்வி எழும். இதை எழுதிய வள்ளுவரும்  ஓர் பறையர் குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுபவர்களுமுண்டு. யார் இந்த  வள்ளுவர் என்று கேள்வி கேட்டால் இவர் ஒரு கணியர் என்றுதான் பதில் கூறலாம். அதாவது வள்ளுவக்கணியர் எனப்பட்டவரே இவர்.
வள்ளுவக்கணியர்கள் என்போர்,வேளான் தொழிலைச் சார்ந்த மருதவாழ்க்கைக்கு வேண்டிய பருவங்களின் வருகையை நாள், கோள்  பார்த்துச் சொன்னவர்கள். கடல்வணிகம் பெருகவும், நிலைபெறவும், நல்வழி பெறவும், நல்வழிகாட்டிகளாகவும் இருந்தனர். வானியலை கணிப்பவர்கள்
இவர்கள். இயற்கையை நம்புவதால் பிற்காலத்தில் வந்த பார்ப்பனியர் இவர்களை ‘ஆசிவகர்’ என்று அழைத்தனர். இவர்கள் காலத்தில் இவர்கள் இயற்றித்தந்தவை ஏராளம் எனலாம். இவர்கள் வாழ்ந்த
காலம் தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. பக்குடுக்கை கணியர், மார்க்கலி, பூரணர் போன்றோர்
அணுக்கொள்கையையும், மருத்துவ அறிவின் அடிப்படையையும், பொருண்மியத்தையும், மெய்யியலையும், இயங்கியலையும் ஆக்கித்தந்த பெருமைகளுக்குரியவர்கள்.
‘வள்’ என்ற வேர்ச்சொல்லுக்கு கூர்மை, பெருமை, வலிமை, வன்மை என்றெல்லாம் பொருளுண்டு.
கூர்மதியன், அமைச்சன், உள்படுகருமத்தலைவன், வள்ளியோன் என்றெல்லாம் ‘வள்ளுவன்’ என்னும்
பெயர்ச்சொல்லுக்குப் பொருள்படும். வள்ளுவன் அறிவன் என்பதையே அவை யாவும் காட்டுகின்றன.
இப்படியான அறிவுநிலையில் இருந்தவர்கள் கீழ்நிலைக்கு வரக்காரணமானவர்கள் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படும் ஆரியரே.
வள்ளுவம் எப்படி வீழ்த்தப்பட்டது என்றால் பக்திக்கோள்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணம் எனலாம்.
உதாரணமாக பார்ப்பனர்கள், ஆசிவகரையும் சைனரையும் பாகண்டர் என்றோ, பாசாண்டர் என்றோ தூற்றி வந்தனர். இதற்குக் காரணம் பார்ப்பனியத்தையும் வர்ணமுறையையும் அவர்கள் எதிர்த்து வந்தமையே.  வாயுபுராணம் என்னும் நூல் ஆசிவகர் எல்லாம் உழைப்பவர்களாகவும், கைவினைஞர்களாகவும் இருந்து வந்திருக்கின்றனர் எனக்கூறியுள்ளது.
அடுத்து வர்ணமுறையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்போமானால், தொல்காப்பியத்தின் வழியாக தமிழ் பார்ப்பனர்  முன்மொழிந்த வர்ண மாதிரியானது பார்ப்பார்,(கணிப்பவர்கள்) அரசர், வணிகர், வேளாளர் என்று வரும். அம்மாதிரியில் வேளாளன் சூத்திரனாக பரத்தையின் மகனாக இழிவுபடுத்தப்படவில்லை. இவ்வேளாளன் வருணத்தார்க்குப் படையும், கண்ணியும் கூட உரிமைகளாகவும் தேரும் மாவும் கூட அவர்கள் பெறத்தக்கனவாகவும் வழிசமைத்தான் என தொல்காப்பியம் கூறுகிறது . ஆனால்
ஆரியப்பார்பனியம் வகுத்த வரணமுறையானது பார்ப்பனர், அரசன், வைசியர், சூத்திரர் என்று வரும். இங்கு வேளாளர்களை சூத்திரர்களாக்கி வேளான் தொழிலை இகழ்ந்துரைக்கிறது.
பார்ப்பனராட்சிக்கு முதலடிமைப்பட்டது சேரநாடுதான். அறுபத்தி நான்கு ஊர்களை வைத்துப் பரசுராமன்
சேரநாட்டிலமைத்த பார்ப்பனராட்சியில் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பன்னிரண்டு  ஆண்டுகளுக்கு  ஒருமுறை நம்பூதிரி பார்ப்பனர்கள் எல்லோரும் கூடிசேரமான் பெருமானைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அந்தப் பார்ப்பனர் மகாநாடுகளுக்கு, ‘வள்ளுவக்கோன்’ என்னும் வள்ளுவரே தலமைதாங்குவது மரபாம். ஐம்பேராயம் என்னும் குழுவிலிருந்து அதில் அரசனுக்கு மிகவும் நெருக்கமான முதலிடத்தைப் பெற்றிருந்த ஆசான் பெரும்கணி எனும் பட்டத்திற்குரியவனாகவிருந்த வள்ளுவனையே ‘வள்ளுவக்கோன்’ என்றனர்.
அரசர்க்குக் கருமத்தலைவராய் உயர்பதவி வகித்தவர்க்கு வள்ளுவன், சாக்கை என்னும் சிறப்பு பெயர்கள்
இருந்தனவென்பது,

“வள்ளுவன் சாக்கையெனும் பெயர் மன்னர்க்கு
உள்படுகருமத்தலைவர்க்கொன்றும்”

என திவாகர  நூற்பாவால் அறியப்படும்.
அரசர்க்கு கீழ் செயல் தலைமை வகிக்கும் அதிகாரிகளாகவும் , அரசர்களாகவும், படைத்தலைவர்களாகவும் (புறநானூற்றில் வரும் நாஞ்சில்வள்ளுவன் சேரனின் படைத்தலைவன்) சேரநாட்டின் சில சிற்றரசுகளிலும் ஆசான் பெருங்கணிகளாகவும் இருந்தனர். இப்படியாக அரசனுக்கு அடுத்தநிலையை வகித்துவந்த ‘வள்ளுவக்கணியர்’ அந்தநிலையை பார்ப்பனப் பூசாரிகளிடம் இழந்து போயினர்.
பாவலரேறு பெரும்சித்திரனார் விளம்புவார்; பண்டய தமிழ் இலக்கியத்தில் எங்குமில்லாத”சிற்றினம் சேராமை” என்னும் கருத்தும் அதிகாரமும் திருக்குறளில் மட்டும் வருவதை அவர் கோடிட்டு காட்டுவார். தமிழ்மக்கள் தொகையில் அன்று மிகச்சிறுபான்மையினராக இருந்துவரும் ஆரியப்பார்ப்பனராகிய சிற்றினத்தாரிடம் இணங்கியும் அடங்கியும் போகும்போக்கு தமிழினத்திற்கு கேடுபயக்கக்கூடியது என்னும் எச்சரிக்கையே “சிற்றினம் சேராமை” என்னும் திருக்குறள்  அதிகாரமாக இலங்குவதை அவர் சுட்டிக்காட்டுவார்.(இன்றைய அரசியல் நிலையும்இப்படிதான்)

வள்ளுவர்கள் பழந்தமிழில் ஒரு பிரிவினர் தொல்காப்பியத்தின் காலத்தில்  நிகழ்ந்தகாலத்தின் மாற்றம்                                                                      தான் வள்ளுவத்தின் வீழ்ச்சியும், பார்ப்பனர் வளர்ச்சியும் ஆகும்.  ஆசான் பெருங்கணிப் பதவியை
பறித்த பார்ப்பனர், வள்ளுவர்களை அரசகட்டளையை அறிவிப்பவர்களாக ஆக்குகின்றனர். இதன்
பின்னர் தமிழகத்தை பிடித்தாண்ட கன்னடத் தெலுங்கு அரசுக்களோடு சேர்ந்துகொண்ட பார்ப்பனர்கள்,
வள்ளுவர்களை தீண்டப்படாத சாதியினராக்கினர். (இத்தனை காலமும் அரண்மனைக்குள்ளேயே, அரசு செலவிலேயே வாழப்பழகியவருக்கு நிலமும் இல்லை, உழுதுண்ணவும் தெரியாது.   உடையவன்தான் உடையார்; உடமையில்லாதவனை யாரும் மதிப்பதுமில்லை. சமூகம் திரும்பிப்
பார்ப்பதுமில்லை.  இதனால் தீண்டத்தகாதவர்களாகினர்).  தொன்றுதொட்டு வந்த வள்ளுவம் ஆக்கித்தந்த வாழ்வியல் நெறிமுறைகளை மட்டும் ஒழித்துக்கட்டிவிட்டு அவ்வள்ளுவர்களின் கணிய,
கணக்கியல், அறிவியல் புலமையை மட்டும் மெல்லத் தம்மயமாக்கிக்கொண்ட பார்ப்பனியம் வள்ளுவ அறிவுமரபை இருந்த இடம் தெரியாமல் இருட்டடிப்புச் செய்துவிட்டது.

பார்ப்பனர்  (ஆரியர்) என்ற சொல் வடஇந்தியரைக் குறிக்கிறது.
ஆர்+இயர்= ஆரியர்.
‘ஆர்’ என்றால் நிறைந்த என்ற பொருள்படும். இயர் என்றால் இயல்புடையவர்கள் எனப்பொருள்படும்.
எல்லாச் சிறப்பியல்புகளும் நிறைந்தவர்கள். இவர்கள் இரசியாவின் வடபகுதியிலிருந்து கி.மு
மூவாயிரம் ஆண்டளவில் புறப்பட்டு கி.மு. ஆயிரத்து ஐந்நூறளவில் ஆப்கானிஸ்தானின் கைபர் கணவாய்
ஊடாக இந்தியாவினுள் நுழைந்தார்கள். மந்தைகளை மேய்ப்பதற்கான மேச்சல் நிலங்களைத்தேடி நாடோடிகளாகத் திரிந்தவர்கள். எழுத்துமொழி அற்றவர்கள். வடதிராவிடமொழியுடன் தமது பேச்சுவழக்கையும் கலந்து ,பிராகிருதத்தை உருவாக்கினர். காலம் செல்லச்செல்ல சமஸ்கிருதமொழியை உருவாக்கினர். வியாபாரிகளாக, பணம் பட்டுவாடா செய்பவர்களாக தமிழர் இடங்களுக்கு வந்து, அரசிற்கு நெருக்கமாகி சமயத்தைக் கொண்டு அரசர்களின் மனங்களை மாற்றிப், பூசாரிகளாகி அரசிற்கும் மக்களிற்கும் இடையில் நின்று கொண்டு, முன்னர் வள்ளுவர் வகித்த பதவிகளையெல்லாம் பறித்ததுமல்லாமல், அப்பதவிகளில் தாங்களே அமர்ந்துகொண்டு அழகு பார்த்தார்கள். வள்ளுவக்கணியரை முரசறையும் நிலைக்கும், சாதியின்கடைநிலைக்கும் தள்ளி
விட்டனர். காலம் செல்லச்செல்ல சமயத்தை வளர்ப்பதாக அரசிற்கு பூஞ்சாண்டி காட்டிப் பெரிய நிலப்பரப்புகளைக் கையகப்படுத்தி கோயில்களைகட்டி, கோயில் நிர்வாகங்களையும் அதிகாரங்களையும், வருமானங்களையும்  கையில் எடுத்ததுமல்லாமல், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் புகுந்து புரோக்கர் தொழில் செய்யத்தொடங்கினர். வருணமுறையில் தமிழர்களை சூத்திரர்களாக்கி அடிமைகள்போல் ஆளவும் வழி சமைத்துக்கொண்டார்கள். இதை ஏற்றுக்கொள்ளாத வேளாளர் சமூகத்தாரிடம் சமரசம்பேசி ‘தற்சூத்திரர்’ என்னும் வருணத்தைக் கொடுத்துச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.( ‘தற்சூத்திரர்’ என்பது சூத்திரரில் பெரியவர் என சொல்லப்பட்டனர்).
தற்சூத்திரரில் ஓர் பெரியதலை எப்படி பார்ப்பனர் வசப்பட்டது என்று இங்கே உதாரணத்துக்கு எடுத்துச் சொல்லலாம். இவரதுசாதனைகள் பற்றி நிறையச் சொல்லலாம். இவர் தமிழுக்கும், சைவத்திற்கும் நிறையத் தொண்டாற்றினார். சைவசமயப் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தவர். பன்னிரண்டாவது   வயதில் தமிழ், சமஸ்கிரதம் ஆகியமொழிகளில் புலமை பெற்றார். மெதடிஸ் ஆங்கிலபாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார் . நிறைய நூல்களை எழுதினார், சிலவற்றுக்கு உரைநடை எழுதினார்.
இவைகளுக்காக அடிக்கடி மொட்டையும், பட்டையும், மாலையுமாக இந்தியா போய்வந்தார். பின்னர் இந்துவாக மாறிவிட்டார். அவர் வேறுயாருமல்ல,  நமது ஆறுமுக நாவலர்தான். சாதிப்பிரச்சாரங்களையும், வர்ணச்சிரமத்தையும் வலியுறுத்தினார். தாழ்ந்த சாதியரிடம், போசனம் பண்ணலாகாது என்ற தீண்டாமைக் கருத்துக்களை தனது முதலாம்  சைவ்வினா விடை என்னும் நூலில் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பிலிருந்து, புத்தளம்வரையுள்ள கண்ணகி கோயில்களை இடிப்பித்து, அக்கோயில்கள் இருந்த இடத்தில் இந்துக்கோயில்களை கட்டுவித்தார். இந்துக்களின் தெய்வவழிபாடுகளை ஊக்குவித்தார். இப்படியாக இவரின் வரலாறு நீண்டுசெல்கின்றது. சைவசமயத்திலுள்ள எல்லா உயிர்களையும் நேசி என்பதிற்குப் பதிலாக, எதிர்மறையாக இந்துக்கோட்பாட்டிலுள்ள, வரணச்சிரமத்தை வலியுறுத்தியதால் சைவம் என்ற மதக்கோட்பாட்டிலிருந்து சறுக்கினார். தன்சாதிசனத்திற்கும் துரோகமிழைத்தார். பார்ப்பனர் தெய்வங்களைவணங்கி, கொள்கைகளைக் கடைப்பிடித்தமையால் தன்னை ஓர் தமிழர் என்று காட்டுவதைவிட இந்துவாகக்காட்டி இவ்வுலகை விட்டுப்பிரிந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த மெத்தப்படித்த விவேகமுள்ள  இக்கல்விமான் எப்படிப் பார்ப்பனியரிடம் வீழ்ந்தாரோ, அதேபோலத்தான் தற்கால இலக்க்கியவாதிகள், நவகாலணித்துவப் பார்ப்பனிய அரசிடம் பண
கயிற்றால் கட்டுண்டு போயுள்ளார்கள். இவ்விலக்கியவாதிகளில், சிலர் முன்னாள் போராளிகள். இவர்களுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தனிப்பட்ட முரண்பாடுகளுள்ளன. இவர்களை
பார்ப்பனியம் தன்வசப்படுத்தி இவர்களின் ஆக்கங்களான கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றை ஊக்கப்படுத்தி (இவர்கள் எழுதுவதெல்லாம் புலிகளை காட்டுமிராண்டிகள் போல்தான் எழுதுவார்கள்) எழுதுவித்து அச்சேற்றுவதுமல்லாமல், விற்பனைவரையான சரீர,பொருள் உதவிகளை எல்லாம் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறது.  வன்னியிலிருந்து சிலர் மாதம் ஒரு புத்தம் என்று வெளியிடுகின்றார்கள். இதன் நோக்கம் வருங்கால தமிழ்சந்ததியினரின் மனங்களில் புலிகளைப் பற்றிய நஞ்சுவிதையை விதைத்தல். இன்னொரு பக்கம் புனர்வாழ்வு பெற்று வீடுதிரும்பிய முன்னாள் புலிகளில் வசதிவாய்ப்புகளுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு வந்துசேந்துள்ளார்கள். வெளிநாட்டு தொடர்புகள் இல்லாத ஒருபகுதியினர் இலங்கைப் புலனாய்வுத் துறையினரோடு சேர்ந்து, கைக்கூலிகளாகி, தமிழ்தேசியத்தைச் சிதைக்கிறார்கள். தமிழ் ஈழத்திற்காக போராடியவர்களே, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், தமிழர்களை அழிப்பவர்களாக மாறியுள்ளார்கள். இன்னொருசாரார் உள்நாட்டிலேயே தொழில்வாய்ப்பின்மை, குடும்பச்சுமை, மனவழுத்தம் எல்லாம் சேர்ந்து வறுமையின் கீழ்நிலைக்கு வந்திருக்கின்றனர். இத்தோடு யாழ்பாணச்சமூகத்தின் சாதிய, சமய, பெண் அடிமைத்தனமும் சேர்ந்து வாழ்வற்றவராக்கி அவர்கள் தற்கொலை செய்யுமளவுக்குக் கொண்டுபோய் விட்டுள்ளது.
வன்னிமண் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் இருந்தபோது அங்கு பிச்சைகாரனில்லை, விபச்சாரமில்லை, சாதியமில்லை. எம்மதமும் சம்மதமாக இருந்தது. மேலே கூறியதுபோல வள்ளுவத்தை
வாழ்வொழிக்கும்போது எவையெல்லாம் தமிழருக்கு நடந்ததோ, அதுவெல்லாம்  முள்ளிவாய்க்காலின்
பின்னர் நடந்து கொண்டு இருக்கின்றன. ஒருபக்கத்தில் தாயகத்தில் வாழும் புலி மறவர்கள் உழைக்க வழியற்றவர்களாகி (யாரும்வேலை கொடுப்பதில்லை சிங்கள அரசால் தங்களிற்கு அழுத்தம் வரும் என்பதற்காக)  பிச்சைக்காரர்களாக, விபச்சாரிகளாக, சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பவர்களாக மாறியுள்ளார்கள்.  இவை பிழை என்று உணர்பவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கான மேம்பாடான திட்டங்களைத் தீட்டவேண்டிய படித்த நிலையிலுள்ளவர்களும், சமூகத்தில் முற்போக்குச்சிந்தனைகளை முன்வைக்க வேண்டிய, இலக்கியவாதிகளும் பார்ப்பனியத்தின் கைகளில் வீழ்ந்து தன் இனத்தையே அழிக்கிற
வேலையைச் செய்துகொண்டு இருக்கின்றனர்.
வள்ளுவத்திற்குப் பின்னர் மிகவும் எழுச்சியோடு வளர்ந்திருந்த படை தமிழர்புலிப்படைஇப்படையுடன் பார்ப்பனியமும், சிங்களமும் மோதமுடியாமல் அமெரிக்காவையும், இரசியாவையும், இன்னும்பல நாடுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு புலிகளை அழித்தபின்னர், அடுத்தவேலையாக தமிழர்களின் அடுத்ததலைமுறையின் சிந்தனை, எண்ணங்களில் உள்ள விடுதலை தீயை அணைப்பதற்குப் பிஞ்சு மனங்களில் நச்சுசெடியை வளர்க்கவும், மேலே குறிப்பிட்ட இலக்கியவாதிகளை பார்ப்பனியம் அமர்த்தியுள்ளது.
தூரதிஸ்தவசமாக தமிழினியின் இலக்கியங்களும் இச்சிக்கலுக்குள்  மாட்டிக் கொண்டது மனவேதனைக்குரியது.


நன்றி.
உழவன்.

( ஒரு நண்பரின் தளத்திலிருந்து).

     




                                                   
                                                                             

                                                     
                                                 


ஞாயிறு, 10 ஜனவரி, 2016

அம்மா!

சொற்களைப் பொறுக்கியெடுக்கிறேன்
உன்னை ஆறுதற்படுத்த;
என்னையும்தான்.
நீயும் நானும்
எத்தனை காலம் சேர்ந்திருந்தோம்?
நான்காம் பிறை போலவேயிருக்கிறது
நான் உன்னோடிருந்த காலம்.

தாரகைகள் கூடியிருந்த நாட்களாகவும்
முற்றத்து மல்லிகையின் மணங்களாகவும்
அமாவாசை இருட்டுக் காலங்களாகவும்
மகிழ்ந்தும் இறுகுண்டும் இருந்த காலங்களை
மீட்டிக்கொண்டே இருக்கிறேன்.

எனது பிரிவு உன்னை வாட்டியிருக்கிறது
என்னைப் போலவே.
உன்னை அண்மித்திருக்கும் பயம்
வார்த்தைகளாக அவ்வப்போது
வழுகிக் கொண்டே இருக்கின்றன

என் செய்வேன் அம்மா!

என்னைப் பெற்று மகிழ்ந்தவளே
நீ என்னையும் நான் உன்னையும் தொலைத்து
வெகு நாட்களாகி விட்டன.

கடன் தீர்க்கவாவது
இன்னொரு பிறவி வேண்டும்
ஒரு யுத்தமில்லாத பூமியில்.

வி. அல்விற்.
09.01.2016.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

உயிர்


உனது உயிர்ப்பறவை
இன்று
என்மீது அமர்ந்திருக்கிறது
நம்பிக்கை கொண்டு.

வெளிறி விழித்திருந்த
நீண்ட இரவுகளுடனான
இப்பயணத்தின் பின்
களைத்திருக்குமதை
இரு கைகளில் தாங்கி
நெஞ்சோடு
அணைத்துக் கொள்ளுகின்றேன்.

என் உயிரே!

உனது தூக்கத்தை
நான் வாங்கியிருக்கிறேன்
நீ சற்று ஓய்வெடுக்கும்படியாக

உனது துக்கங்களை
வழித்தெறிந்து விட
சபதம் செய்துள்ளேன்

இன்னுமென்ன?

உன் நுதலில் நீண்டதொரு
முத்தமிட்டு
என்னோடு
உன்னுயிர் தங்கி விடும்படியாக
சத்தமிட்டுச் சொல்லுகின்றேன்.

வி. அல்விற்.
06.12.2015.













உனது உயிர்ப்பறவை
இன்று
என்மீது அமர்ந்திருக்கிறது
நம்பிக்கை கொண்டு.

வெளிறி விழித்திருந்த
நீண்ட இரவுகளுடனான
இப்பயணத்தின் பின்
களைத்திருக்குமதை
இரு கைகளில் தாங்கி
நெஞ்சோடு
அணைத்துக் கொள்ளுகின்றேன்.

என் உயிரே!

உனது தூக்கத்தை
நான் வாங்கியிருக்கிறேன்
நீ சற்று ஓய்வெடுக்கும்படியாக

உனது துக்கங்களை
வழித்தெறிந்து விட
சபதம் செய்துள்ளேன்

என்னோடு
உன்னுயிர் தங்கி விடும்படி.

வி. அல்விற்.
06.12.2015.







வரம்.

மீண்டுமொருமுறை.

கடந்து போன புன்னகையொன்று
மீள வராதது போல

கொடுக்க மறந்த செல்வத்தை
கொடுக்க முடியாதிழந்தது போல

போன செலவொன்றை
மீட்க முடியாதது போல

துண்டாடிய மனங்களை
வெல்ல முடியாதது போல

தாய் தந்த கடைசி முத்தத்தை
மீளப் பெற முடியாதது போல

அத்தாய் வயிற்றில் மீளவும்
புக முடியாதது போல

இப்பிறவி எனக்கொரு
வரம் தந்துள்ளது.

தீர்க்க முடியாக் கடன்களை
சுகமாய்ச் சுமக்கும்படி.

தாங்குகின்றேன்...

மீண்டுமொருமுறை
ஓர் குழந்தையாய்ப் பிறந்து
கடனின்றி வாழும் வரம் கேட்டபடி.

வி. அல்விற்.
04.12.2016.

புலமும் பலமும்.

புலமும் பலமும்.

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும். இந்த வருட நத்தார் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்துக் கொண்டு பணத்தையும் அனுப்பி விட்டு, ஓடோடி வீட்டுக்கு வந்து தொலைபேசியில் அழைக்க, அவர்கள் யாழ்ப்பாண நேரப்படி அரைச்சாம நித்திரையிலிருந்து எழுந்து ‘ஹலோ!’ என்று தூங்கி வழிய, பணம் அனுப்பியிருக்கும் விடயத்தை மட்டும் சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் வேலையை முடித்து கொஞ்சம் நேரத்தோடு வீட்டுக்கு வந்து பணம் கிடைத்ததா என்று உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொண்டால், வழமையான விசாரிப்புக்களின் பின்னர்,
 “அப்ப பிள்ளை! என்ன பலகாரங்கள் செய்தனீங்கள்?”
என்ற கேள்வியில், ஏற்கனவே முழங்காலில் இரண்டு ஊசிகள் ஏற்றப்பட்டும் அறுவைசிகிச்சை செய்யலாமா வேண்டாமா? என்ற கேள்விகளோடும் வேலைக்குச் சென்று நிற்க முடியாமல் தள்ளாடி வந்த எனக்கு, சுரீர் என்று கோபம் தலைக்கேறப் பார்த்தது. கட்டுப்படுத்தி, “ ஒண்டும் செய்யேல்லை, இப்பதான் வேலையால வந்தனான்” என்று என்னைக் கட்டுப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சியே.
நமது ஊரில் நத்தார் தினத்தன்று கொழுக்கட்டை அவிப்பார்கள். இந்தப் பழக்கம் எப்படி எங்கிருந்து வந்தது என்று இன்றுவரை தெரியவில்லை. ‘கட்டிகை’  (Cake) யும் செய்வார்கள். ஆலயத்தில் இரவு வழிபாடுகள் நடக்கும். எமது ஆலயத்திற்குள் செய்யப்படும் பாலன் குடிலில், வெளியே நிலத்திலிருந்து பாளம் பாளமாக வெட்டி எடுக்கப்பட்ட மண்ணுடன் சேர்ந்த புற்கள் இயற்கையான அலங்காரமாக அழகாக இருக்கும். ‘பாலன்’ கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு எப்போதும் போலச் சிரித்துக்கொண்டிருப்பார். வழிபாடுகள் முடிய விழுந்தடித்துக் கொண்டு பாலனை விழுந்து கும்பிடுவோம்.
அத்தோடு நத்தார் விழா முடிவடைந்து விடும்.
ஆனால், அந்த இருபத்தைந்தாம் திகதியிலிருந்து முதலாம் திகதிக்கான ஆர்ப்பாட்டங்கள் அதிகமாக இருக்கும். புது ஆடைகள் வாங்குவதிலிருந்து, என்னென்ன பலகாரங்கள் செய்வது?, யார் யாருடைய வீடுகளுக்குப் போவது? என்பது வரையான ஆயத்தங்கள் அமளியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
எங்கள் ஊரில் அனேகருடைய வீட்டுப் பொருட்களும் புதுவருடத்துக்கு முந்தைய நாட்களில் வீட்டு முற்றத்தில் கிடக்கும். வீடு முழுமையாகத் துடைக்கப்பட்டுக், கழுவப்பட்டு, அலசப்பட்ட பின்னர் புது வீடு போல மாற்றம் பெறும்.
அதைவிட, சீனி அரியதரம், முறுக்கு, அச்சுப்பலகாரம், பயற்றம் பணியாரம், காசா, (இதுவும் அச்சுப்பலகாரம் போலவே இருக்கும் நீள்சதுர வடிவத்தில்; ஆனால் பொங்கி வரும்.), லட்டு, இவற்றுடன் இறுதியாகச் சேர்ந்து கொண்ட ‘கட்டிகை’ என இப்படிப் பலவகையான பலகாரங்கள் கடகங்களை நிரப்பும். புதுவருடத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எமது வீட்டுக்கு வாழைப்பழக்குலை ஒன்று கட்டாயம் வந்து சேர்ந்து விடும்.
இவ்வாறான ஆயத்தங்களோடு புதுவருடம் பிறக்கும் போது, மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
உறவுகள் அனைத்து உறவுகளின் வீடுகளுக்கும் சென்று உண்டு மகிழ்வார்கள்.
நண்பர்களும் அவ்வாறே.
குறைகளை மனங்களில் சுமந்தவர்களும், அற்ப காரணங்களுக்காக முகங்களைத் திருப்பிக் கொண்டவர்களும் கூட,  அன்றைய தினம்  வீடுகளுக்குப் போய் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டதுண்டு.
இவ்வாறாக, புதுவருடமானது, எதிர்வரும் காலத்திற்கான எதிர்பார்ப்புகளுடனும், மாற்றங்களுக்கான ஆயத்தங்களுடனுமாக மலர்கின்றது.
இங்கே, புலம் பெயர் தேசங்களில் இவற்றில் பல வாய்ப்பதில்லை. வேலைகளும், தூரங்களும் இவற்றைப் பல வேளைகளில் அனுபவிக்க முடியாமல் செய்து விடுகின்றன. இந்த இடையூறுகள் சிலவேளைகளில் ஒரு குடும்பம் சேர்ந்து ஒரு நாளை அனுபவிக்க முடியாமல் கூடச் செய்து விடுகின்றன.
ஆனாலும் முழுமையாக இந்நாட்களை அனுபவிக்க, முடிந்தவரை பலர் முயற்சி செய்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இன்று கிடைத்த கொஞ்ச நேரத்தில்,
இசை ஞானி இளையராஜாவின் மலேசிய இசை நிகழ்ச்சியுடன் இரண்டுவகைப் பலகாரங்களைச் செய்து முடித்தேன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துண்ணும் உணவினூடாகவும் பகிர முடியும் என்னும் நோக்கத்துடன்.

நாளைக்கும் நாளை மறுநாள் புதுவருடத்தன்றும் வேலை.
வேலையிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாவுடன் தொடர்பு கொண்டால், “பிள்ளை! என்ன பலகாரங்கள் செய்தனீங்கள்?” என்று கேள்வி மீண்டும் வரும். 'செய்திருக்கிறேன்' என்று சொல்ல ஆசை.

புதுவருடம் மகிழ்ச்சியைத் தரட்டும் அனைவருக்கும்.
முயல்வோம்!
முடிந்தவரை தளராது செயற்பட முயல்வோம்!

வி. அல்விற்.
30.12.2015.

புரிதல்.

புரியும் மொழியில்
பேசிப் பார்க்கிறேன்
புரியாத விடயத்தைப்
புரிந்து கொள்ளும்படி.

தாவும் மனதை
தரையிறக்க இயலாமையால்
தவறவிட்டு நொந்து கொள்ளுகிறாய்
தனித்து நின்றபடி.

யாசித்து நிற்கிறேன்
அமைதியில் தெளிவுற்று
மீண்டு வரும்படி.

என் செய்வேன்?
எனதுயிரே!

எனக்கும் வலிக்கிறது.

நெற்றி நோவெடுக்க
உச்சி பிளந்து கொள்ளும்படி
சிந்தித்துக் களைக்கிறேன்

எவ்வழி தவறென்று
இன்னும் புரியவில்லை!

வி. அல்விற்.
27.12.2015.

புதிய நாள்.

உள் வந்து என்னை உந்தும்
இந்த பெருஞ்சுமைகள்
நீங்குவதாயில்லை.

மேன்மைக்காலத்து மகிழ்வுகளும்
தடுமாறிப் போகும் அனுபவங்களுமாக
காலமாற்றம் போல
அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
சம்பவப் பொதிகள்.

வரவுகள் பார்த்தென்ன
கணக்குகள் போட்டென்ன
நிதானமாவதற்குள்
இன்னொரு அனுபவம்
வாய்திறந்து நிற்கிறது
தீர்வுக்காக.

இதோ!
இந்த இரவு நல்லிரவாகட்டும்.

நாளையும்
நேர்நின்று பேசும் நாளொன்று
புதிதாகப் பிறக்கட்டும்.

வி. அல்விற்.
23.12.2015.

தெரிந்து பேசுதல்.

மரமும் பயனும்.

காலம் எத்தனை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது! அது யாருக்காகவும் அல்லது எதற்காகவும் காத்திருப்பதில்லை. ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்கும்போது இந்தக் காலப் பாய்ச்சலை உணரக் கூடியதாக இருக்கும்.
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே உணவுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் பெண்ணுக்கும் பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும் உடைமை கொண்டாட அவாக் கொண்டதால் ஏற்படும் அழிவுகள் நிறுத்தப்படுவதாயில்லை.
இயற்கை சீறியோ அல்லது மனிதன் அதனைச் சீற்றம் கொள்ள வைத்தோ,  மக்கள் அழிகின்றனர். அல்லது தமக்குள் தாமே யுத்தம் புரிந்து மாண்டு போகின்றனர்.
மனிதன் என்பவன் உணர்வுகளும் அறிவுக்குமிடையில் நின்று உலாவிக் கொண்டிருப்பதால், சில சம்பவங்கள் மனித நேயத்தைத் தூரத்தூக்கிப்போட்டு தங்களது போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த பலரை, அவர்களது வாழ்க்கைப்போக்கை மாற்றிப் போட்டு விடுகின்றது. வாழ்க்கையின் நிலையாமை பளிச்சென்று அச்சந்தர்ப்பங்களில் புலப்பட்டு விட, உலக வாழ்வின் முடிவுக்குள், தன்னால் முடிந்த நல்லவற்றைச் செய்ய உந்துவதே இதன் காரணமாகிறது.
ஆனால் சிலரது வாழ்க்கை நாய் வாலாகவே இருந்து விடுகிறது.
எரிமலையா? கடற்கோளா? வெள்ளப் பெருக்கா? யுத்தமா?
எதுவென்றாலும் நடக்கட்டும்! தங்களது தலையில் மட்டும் இவை எதுவும் விழாமலிருக்க தங்கள் தங்கள் கடவுள்களை கண்ணீர் பெருக்கி வேண்டிக் கொள்ளுவார்கள். அப்படியே வேண்டிக் கொண்டு வெளியே வந்து யாராவது தவித்துப்போய் நிற்பவர்களைப் பிடித்து அறா வட்டிக்குப் பணம் கொடுப்பார்கள்.
யாராவது முன்னிலையில் இருக்கிறார்களா? அவர்களோடு ஒட்டிக்கொண்டு தமது அலுவல்களை முடித்துக் கொள்ளுவார்கள். அதே மனிதர் நொந்து போனார்கள் என்றால் அப்படியே ‘தொப்’பென்று போட்டு விட்டு அடுத்த பலமான இடத்தைத் தேடத் தொடங்கி விடுவார்கள்.
தாங்களே கேள்விகளைக் கேட்பார்கள், அடுத்தவர்கள் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் தாங்களே தீர்மானித்து, தங்களுக்கேற்றவாறு அடுத்தவரது நிலையில் இருந்து பதில் சொல்லிக் கொள்ளுவார்கள்.
எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு, அப்பாவிகள் மாதிரி யாராவது ஏமாந்தவர்களைப் பார்த்து உதவி கேட்பார்கள். அடுத்தவனும் தன்னைப் போல யோசிக்கத் தெரிந்தவன் என்பதை மறந்து அல்லது மறுத்து, முட்டாள்களாக்கி மாட்டி விட்டு விட்டுத் தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டே போவார்கள். எங்கே எப்படிக் காசைப் பெருக்குவது என்பதும் மனிதரைத் தமது சார்பாக வளைத்துக் கொள்ளுவதுமே இவர்களது மூளையை நிறைத்திருக்கும்.
இவை எல்லாவற்றையும் செய்து கொண்டு, யாராவது திருப்பிக் கேள்வி கேட்டால், “இப்பிடித்தான் தந்திரமாக வாழப் பழக வேணும்” என்று தத்துவ முத்துக்களை உதிர்ப்பார்கள்.
ஒருவர் தமது வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதை அவர்களது கெட்டித்தனம் என்று சொல்லலாம்.
ஆனால் அடுத்தவரை முட்டாளாக்கி விழுத்தி விட்டு மேலேறிச் செல்லுவதை சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

யாரோ மரம் நடுகிறார்கள்; அவ்வழி போகும் வேறு யாரோ அதன் பயனை அனுபவிக்கிறார்கள்.
நாம் இன்று செய்பவற்றுக்கு நமது வழி வருபவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

மரணம் என்பது நமக்கு நிச்சயிக்கப்பட்டதொன்று.

வி. அல்விற்.
16.12.2015.

வாழ்தல்.

ஆறெனப்
பாய்ந்து கொண்டேயிருக்கின்றன நினைவுகள்
அமிழ்ந்து போகாதபடியும்
அழிந்து விடாதபடியும்
எதையாவது பற்றிக் கொண்டு
வெளியேற வேண்டியிருக்கிறது
வாழ்தலுக்காக.

வி. அல்விற்.
14.12.2015.

என் பிரிய சிசுவே!

எனது கண்கள் உனை விட்டு அகலாதிருக்கின்றன
பயிற்சி பெற்ற உளவாளியை மிஞ்சியிருக்கிறது
உனைத் தொடரும் எனதாத்மாவின் விருப்பு
ஆனாலும் நான் ஓருளவாளியல்ல
அன்னையென்ற ஒளிப்பிரவாகத்தில்
நீ பிரகாசிக்கும்படி விரும்பும் உனதூட்டம்

என்னோடிருக்கும் உன் பொழுதுகள்
வானவில் வண்ணங்களையொத்த
அழகைப் பொழிந்து கொண்டிருக்கின்றன
தகதகத்து விழும் கதிரவனைப் போலிருக்கிறது
என்னை உயிர்ப்பிக்கும்
கலகலத்தெழும் உனது சிரிப்பு

ஓ! என் பிரிய சிசுவே!

எனக்கேதும் கலக்கமில்லை

உனது தூக்கத்தின் இராகங்களையும்
பிரித்தறியப் பயின்றிருக்கிறேன்
அண்மையிலும் சேய்மையிலும்
உனை விட்டு அகலாதிருக்கின்றன என் கண்கள்

என்னுயிரை உறுதிப்படுத்தியபடி.

வி. அல்விற்.
13.12.2015.

வேலையும் தகைமையும்.

வேலையும் தேடலும்.

இங்கே பிரான்சுக்கு வந்து சேர்ந்த பலர், தமது கல்வித் தகைமைகளைக் கவனத்தில் கொள்ள முடியாமல் கிடைத்த வேலையைச் செய்யத் தொடங்கி அதன் பின்னர் தாம் கற்ற கல்வியையும், தமக்குள்ள திறமைகளையும் சிந்திக்கத் தொடங்குவதுண்டு. விரும்பிய வேலையைத் தேட முடியாதபடி பொருளாதார நிலை, மொழி, குழந்தைகள் என்று பல காரணங்கள் முன்னால் எழுந்து தடுத்தும் விடுகின்றன. எனவே எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு கிடைத்த வேலையைப் பல வருடங்களாகச் செய்து தேய்வதுண்டு.
ஆனாலும் இங்கே முன்னேற முயற்சிப்பவர்களுக்கான வழிவகைகள் தாராளமாக உள்ளன. உதாரணமாக நிரந்தர வேலை ஒப்பந்தத்துடன் இருப்பவர்கள் தமது வேலையிடத்திலிருந்து கொண்டு தமக்குத் தேவையான வேலை சம்பந்தப்பட்ட பயிற்சிகளையும், (Internships) மேலதிகக் கல்வித் தகைமைகளையும் சேர்த்துக் கொண்டு முன்னேற இடமுண்டு. இதை இலவசமாகவே (?) செய்ய முடியும். அதாவது இத்தகைய பயிற்சிகளுக்கென்று எமது மாத சம்பளத்திலொரு பகுதியை எடுத்துக் கொள்ளுவார்கள். ஒருவர் ஒரு நிறுவனத்தில் ஒரு வருடத்துக்குமேல் வேலை செய்தால்தான் (சில இடங்களில் ஆறு மாதம்) இத்தகைய வசதியைப் பெற முடியும். (அனேகமாக ஏனைய சலுகைகளும் அவ்வாறே). ஒவ்வொரு வருடமும் இருபது மணித்தியாலங்கள் ஒதுக்கப்படும் இத்தகைய பயிற்சிகளைப் பெறுவதற்கு. தொடர்ந்து ஐந்து வருடங்கள் நமக்கான இந்தக் காலத்தை சேர்த்துக் கொள்ளலாம். அதாவது தொடர்ந்து ஐந்து வருடங்கள் இத்தகைய பயிற்சிகளைச் செய்யாது விட்டால், நூறு மணித்தியாலங்கள் சேர்ந்து விடும். அவற்றை மொத்தமாகவோ அல்லது பகுதிகளாகவோ நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த ஐந்து வருடங்களைத் தாண்டி விட்டால், ( அதாவது அதற்குள் எமக்கு ஒதுக்கப்பட்ட மணித்தியாலங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால்)  அதன் பிறகு வரும் காலங்கள் சேர்க்கப்பட மாட்டாதவையாகி விடும். எனவே இக்காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவதே புத்திசாலித்தனம். குறைந்தபட்சம் மொழி கற்கவாவது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை CPF அதாவது Compte personnel formation என்று சொல்லுவார்கள்.
இதை விட, கூடிய காலக் பயிற்சிக் கல்வியையும் உங்களது வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதியுடன் (ஆறு மாதம் அல்லது ஒரு வருடம்) செய்து முன்னேற வழியுண்டு.
முன்னரெல்லாம் இவற்றைச் செய்வதற்கு இங்கே வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி கேட்டு கடிதம் எழுதி, (பல மேலாளர்கள் மறுப்பதுமுண்டு) பல நாட்கள் காத்திருந்து இவற்றைப் பெறுவதுண்டு. டிசம்பர் மாதம் 2014இலிருந்து பிரெஞ்சு அரசாங்கம் இணையத்தளத்தில் பதிவு செய்யும் வசதியைச் செய்திருக்கிறது. http://www.cpf-compte-formation.fr/salarie/cpf-pour-salaries.htm
இந்தத் தளத்தில் சென்று நமக்கான கணக்கு ஒன்றினைத் திறந்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான பயிற்சிகளைத் தெரிவு செய்து விண்ணப்பிக்க முடியும்.
நமக்கு இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் பயன்படுத்த உண்டு என்பது நினைவில் இல்லாவிட்டால் டிசம்பர் மாத சம்பள விபரத் துண்டைப் பாருங்கள். அதிலே உங்களது இந்தப் பயிற்சிக்கான மணித்தியால விபரம் போடப்பட்டிருக்கும். இல்லாவிட்டால் உங்களது வேலையிடத்துக் கணக்காளரைக் கேட்கலாம்.
இதை விடப் பலர் நமது நாட்டிலிருந்து பட்டப்படிப்புகளோடு வந்திருப்பார்கள். உங்களது கல்வித் தகமைச் சான்றிதழ்களை இங்கே நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள Académie யில் கொடுத்து சமப்படுத்தப்பட்ட அத்தாட்சிப் பத்திரத்தை (இலவசமாகவே) பெற்றுக் கொள்ள முடியும். வேலை தேடுவதற்கு இது மிகப் பெரிய அளவில் உதவும்.

இவற்றையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்கிறீர்களா?
முதலாவது, இப்பொழுதும் நம்மவர்கள் பலரை நம்மவர்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கவலை.
இரண்டாவது, யாராவது ஒருவருக்காவது இந்தத் தகவல்கள் பயன்பட்டாலும் மகிழ்ச்சியே.
மூன்றாவது, எனக்கு வேலை செய்வது பிடிக்கும். சும்மா இருந்து அரசாங்கப் பணத்திலேயோ அல்லது யாரையாவது வருத்தியோ வாழ்வது பிடிக்காது. நான் பிரான்சுக்கு வந்த புதிதில், நமது ஒரு புகழ்பெற்ற, பலரால் மதிக்கப்பட்ட கலைஞரைச் சந்தித்தப் பேச நேர்ந்தபோது அவர் சொன்ன பொன்மொழிகள் இதோ! “ எங்கட உடம்பை வளைச்சு, எங்கட மூளையை இவர்களுக்காச் செலவு செய்து கொண்டிருக்க முடியாது.”
இவர் இப்பவும் அப்படியே திரிசங்கு நிலையில்தான் நின்று கொண்டிருக்கிறார் என்பது இன்னும் வேதனை. இவர்களை இப்படியே விட்டு விடுவது நல்லது.

ஆக, எனது நிலை என்னவென்றால், இப்பொழுது செய்யும் வேலையை மாற்றிக் கொஞ்சம் இதைத் தாண்டலாம் என்ற யோசனை தோன்ற, ஒரு பயிற்சி தொடங்கியுள்ளேன். இதை பிரெஞ்சு மொழியிலே (Bilan de compétence) என்று சொல்லுவார்கள். அதாவது நமது கல்வி, இதுவரை செய்து வந்த வேலை அனுபவங்கள், விருப்பு வெறுப்புக்கள் போன்ற அனைத்தையும் தூக்கி முன்னாலே போட்டுவிட்டுக் கொஞ்சம் அதிகமாகவே அவற்றைக் கிளறி அவற்றிலிருந்து நமக்குப் பொருத்தமானவற்றைப் பொறுக்கி
எடுத்து அது தொடர்பான வேலை ஒன்றைத் தெரிவு செய்வது.

:)
http://www.cpf-compte-formation.fr/salarie/cpf-pour-salaries.htm

காலம்.

பெண்ணே! 
உனது புன்னகை எங்கே போயிற்று?
கண்களின் ஒளி எப்படி மறைந்தது?
தெரு நிறைந்த மக்களிடையே
நீ மட்டும் ஏன் கரும்புள்ளியாகத் தெரிகிறாய்?

இதோ!
உனது பாதை அடைபட்ட தெருவாயுள்ளது
வழியறியாது திணறுகிறாய்.
ஒரு சிறு குழந்தையைப் போல
நீயாகவே தொலைந்து போனாயே!
சிந்திக்கக் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை
சிறையாக்கி உன்னையே பூட்டிக் கொண்டு விட்டாயே

முன்னொரு பொழுது மகாராணிக்குரிய
அனைத்து செல்வாக்குகளும் உன்னைச் சேர்ந்திருந்தது 
பெருமிதம் மிக்க வார்த்தைகளும் 
வியத்தகு பார்வைகளும் உன்னைச் சூழ்ந்திருந்தன
சாமரம் வீசுவதற்குப் பலர் காத்திருந்தனர்
உனதருகில் அமர்வதைப் பெரும் பேறாக எண்ணியிருந்தனர்
பச்சோந்திகளை ஒத்தவர்கள்.
தெளிவற்றிருந்து விட்டாய் போதையிலிருப்பவர் போல.
ஓ! பெரும் போதையல்லவா அந்தப் பெருமிதத் திமிர்.
கண்களைச் சற்று மூடி விட்டாய் 

உனது ஆடை ஆபரணங்கள் பறித்தெடுக்கப்பட்டுள்ளன
உனது தலைமேல் தெரிந்த ஒளிவட்டம் நீங்கியுள்ளது
உனது வார்த்தைகள் புலம்பல்களாக வடிக்கப்படுகின்றன
இங்கே  ‘நீ’ வெறும் சுட்டெழுத்தாகி நிற்கிறாய் 

என் செய்வேன்?
தனிமையுற்றிருக்கும் உனதிந்தக் கொடு காலம் 
என்னையும் வருத்துகின்றது.
ஆனாலும் 
திருத்தப்பட முடியாதபடி
காலம் காத்திருக்காமல் கடந்திருக்கிறது.

வி. அல்விற்.

02.12.2015.