செவ்வாய், 5 ஜனவரி, 2016

தெரிந்து பேசுதல்.

மரமும் பயனும்.

காலம் எத்தனை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது! அது யாருக்காகவும் அல்லது எதற்காகவும் காத்திருப்பதில்லை. ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்கும்போது இந்தக் காலப் பாய்ச்சலை உணரக் கூடியதாக இருக்கும்.
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே உணவுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் பெண்ணுக்கும் பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும் உடைமை கொண்டாட அவாக் கொண்டதால் ஏற்படும் அழிவுகள் நிறுத்தப்படுவதாயில்லை.
இயற்கை சீறியோ அல்லது மனிதன் அதனைச் சீற்றம் கொள்ள வைத்தோ,  மக்கள் அழிகின்றனர். அல்லது தமக்குள் தாமே யுத்தம் புரிந்து மாண்டு போகின்றனர்.
மனிதன் என்பவன் உணர்வுகளும் அறிவுக்குமிடையில் நின்று உலாவிக் கொண்டிருப்பதால், சில சம்பவங்கள் மனித நேயத்தைத் தூரத்தூக்கிப்போட்டு தங்களது போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த பலரை, அவர்களது வாழ்க்கைப்போக்கை மாற்றிப் போட்டு விடுகின்றது. வாழ்க்கையின் நிலையாமை பளிச்சென்று அச்சந்தர்ப்பங்களில் புலப்பட்டு விட, உலக வாழ்வின் முடிவுக்குள், தன்னால் முடிந்த நல்லவற்றைச் செய்ய உந்துவதே இதன் காரணமாகிறது.
ஆனால் சிலரது வாழ்க்கை நாய் வாலாகவே இருந்து விடுகிறது.
எரிமலையா? கடற்கோளா? வெள்ளப் பெருக்கா? யுத்தமா?
எதுவென்றாலும் நடக்கட்டும்! தங்களது தலையில் மட்டும் இவை எதுவும் விழாமலிருக்க தங்கள் தங்கள் கடவுள்களை கண்ணீர் பெருக்கி வேண்டிக் கொள்ளுவார்கள். அப்படியே வேண்டிக் கொண்டு வெளியே வந்து யாராவது தவித்துப்போய் நிற்பவர்களைப் பிடித்து அறா வட்டிக்குப் பணம் கொடுப்பார்கள்.
யாராவது முன்னிலையில் இருக்கிறார்களா? அவர்களோடு ஒட்டிக்கொண்டு தமது அலுவல்களை முடித்துக் கொள்ளுவார்கள். அதே மனிதர் நொந்து போனார்கள் என்றால் அப்படியே ‘தொப்’பென்று போட்டு விட்டு அடுத்த பலமான இடத்தைத் தேடத் தொடங்கி விடுவார்கள்.
தாங்களே கேள்விகளைக் கேட்பார்கள், அடுத்தவர்கள் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் தாங்களே தீர்மானித்து, தங்களுக்கேற்றவாறு அடுத்தவரது நிலையில் இருந்து பதில் சொல்லிக் கொள்ளுவார்கள்.
எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு, அப்பாவிகள் மாதிரி யாராவது ஏமாந்தவர்களைப் பார்த்து உதவி கேட்பார்கள். அடுத்தவனும் தன்னைப் போல யோசிக்கத் தெரிந்தவன் என்பதை மறந்து அல்லது மறுத்து, முட்டாள்களாக்கி மாட்டி விட்டு விட்டுத் தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டே போவார்கள். எங்கே எப்படிக் காசைப் பெருக்குவது என்பதும் மனிதரைத் தமது சார்பாக வளைத்துக் கொள்ளுவதுமே இவர்களது மூளையை நிறைத்திருக்கும்.
இவை எல்லாவற்றையும் செய்து கொண்டு, யாராவது திருப்பிக் கேள்வி கேட்டால், “இப்பிடித்தான் தந்திரமாக வாழப் பழக வேணும்” என்று தத்துவ முத்துக்களை உதிர்ப்பார்கள்.
ஒருவர் தமது வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதை அவர்களது கெட்டித்தனம் என்று சொல்லலாம்.
ஆனால் அடுத்தவரை முட்டாளாக்கி விழுத்தி விட்டு மேலேறிச் செல்லுவதை சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

யாரோ மரம் நடுகிறார்கள்; அவ்வழி போகும் வேறு யாரோ அதன் பயனை அனுபவிக்கிறார்கள்.
நாம் இன்று செய்பவற்றுக்கு நமது வழி வருபவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

மரணம் என்பது நமக்கு நிச்சயிக்கப்பட்டதொன்று.

வி. அல்விற்.
16.12.2015.

கருத்துகள் இல்லை: