ஞாயிறு, 18 ஜனவரி, 2015

அன்பு.

நிழலாகத் தொடர்கிறது 
நாம் கேட்காமலேயே 
முடிவிலியாக.

இனிப்பேச ஏதுமில்லாப்
பிறப்புடன்

வார்த்தைகளற்ற 
வெளிப்பரப்பில் 
கைகோர்த்து நடக்கின்றது
அண்டம் நிரப்பிய
நிறைவில்

நம் அன்பு.

வி. அல்விற்.
18.01.2015.



அன்பு.

உணவாக
உடையாக
உறையுளாக
உயர்தரம் தேடி
உலகெங்கும் அலைகிறாய்

உணர்வெனும்
உயிர்க்குஞ்சை
உதறிப் போவதறியாது.

உள்ளம் குமைந்து ஓர் 
உடல் சேர்ந்த பயணம் 
உறவென்று 
ஊர்கிறது.

வி. அல்விற்.

18.01.2015.

சனி, 17 ஜனவரி, 2015

அன்பு

அன்பு 

இல்லை என்கிறாய் 
எனக்காக
இருக்கிறது என்கிறேன் 
உனக்காக

இருத்தலிலும்
இல்லாமையிலும்

மிஞ்சி நிற்கிறது 
நம் அன்பு.

வி. அல்விற்.

16.01.2015.

அன்பு

அன்பு.

கூர்மையானது 
உன் வார்த்தைகள் 
மட்டுமே என்பேன் 
அதன் குறியும் ஆழமும் 
அறியாது 
நீ எறிவதால்

அன்பெனும்
கவசம் மட்டும் 
இல்லாதிருந்திருந்தால்
இறந்து 
இறக்க வைத்திருந்திருப்பேன்
எப்போதோ.

வி.அல்விற்.

18.01.2015.

புதன், 14 ஜனவரி, 2015

பலங்கள்.

எனது மௌனத்தின்
வார்த்தையை
பலவீனம் என்றெடுத்த
பார்வையில் 
நீ உதறிப் போவாயாயின்

இரண்டு பலங்கள் 
வாழ் வளத்தை 
பலவீனப்படுத்தி விடும்.

வி. அல்விற்.

14.01.2015.

அமைதி இழந்தபோது...

அமைதி கலைத்து.

விவாதங்களில் மாடி கட்டி
கூடியிருந்தனர் குதூகலமாக
தாம் விரும்பிய நிலங்களில்.
நியாயங்கள் அங்கே 
கோலோச்சியிருந்தன
அவர்கள் சட்டப்படி.

வேண்டுமட்டும் 
வாரியேற்றியவை போக
வியாக்கியானம் 
பேசிக்கொண்டு 
குந்தியிருக்கின்றனர்
மிகுதிக் காலத்தையும் 
ஓட்டி விட.

இவர்கள் 
தெரிந்தே கொட்டிய
குப்பைக் குவியல்கள் 
வீதிகளை மூடி 
நாற்றம் அடையச் செய்துள்ளன.

இவர்களின்
மேலைத்தேய மூளைகள்
வெண்ணிறப் பூச்சுடன்
மிளிர நினைக்கின்றன
மதிப்புடன்.

வளர்த்தார்கள் 
நெய்யூற்றித் தீ வளர்த்தார்கள்
தங்கள் 
யாகங்களுக்காய்.

தீ வந்து
முகத்தில் அறைகையில்
இன்று
ஓலமிட்டழுகிறார்கள்
தீ காற்றில் பரவியதென்று 
உரக்கக் கூவியபடி.

சொர்க்க பூமிகளில்
ஆனந்தம் தேடி
ஆண்டு அனுபவித்து
பிய்த்துப் போட்ட
பூமிகள் பல 
இன்று 
சன்னதமாடிக் கொண்டிருக்கின்றன
இவர்கள் ஆசைப்படி.

யாருமற்ற தெருக்களில் 
கிடந்த 
நிறமிழந்த சாட்சிகள் 
செய்தித் துணுக்குகளாகிப்
போயின இவர்களுக்கு.

தெரிந்த நியாயங்களையும்
அறிந்த சாட்சிகளையும்
கண்மூடி பார்க்க மறுத்து
செவிடராய் கடந்தவர்கள்

இன்று அவலங்கள் 
நேர் நோக்கிப் பாய்கையில்

இங்கே

அமைதி கலைந்த தெருக்களில்
வெண்தாய்
ஊர்வலம் போகிறாள்
அமைதியும்
சுதந்திரமும் வேண்டி.

வி. அல்விற்.

12.01.2015.௯

புதன், 7 ஜனவரி, 2015

பேரன்பு

எண்ணற்ற பேரன்பு
உன் கண் வழியே
பெருகி நிற்கிறது
இரங்கலுடன்.
இருவழிச் சந்திப்பில்
இருந்து உரையாட
நேரம்தான்
இல்லாமல் இருக்கிறது
இதுவரை.

வி. அல்விற்.
07.01.2015.

திங்கள், 5 ஜனவரி, 2015

என்னோடு கனன்றிரு

பனி இறுக்கியிருக்கும்
இந்த உறை தேசம் 
என்னை மூடி விடாதபடி
செழுந்தமிழ் மொழியாள்
இதமாய் என் நுதல் வருடி 
தன் இளஞ்சூட்டில் 
துயில் கொள வைத்து 
காலச்சிறகடிப்பில் 
நொந்து விடாவண்ணம் 
தூக்கி நிறுத்தினாளே

என்னடி செய்வேன் 
நின் துணையன்றி
என் விரல்கள் அசையுமோ
நின் கண்ணசைவின்றி 
என் காலம் நிற்குமோ

தருவாய் நலம் பெற யாவும் 
அருள்வாய் அகிலம் வாழ
கருவாய் எழுத்தில் கனிவாய் 
உருவாய் உள்ளத்தில் நிறைவாய்

நின்னடி போற்றி வணங்குகிறேன்
என்னைக் காத்தருள்வாய்

காலத் துவழ்ப்பின்
குறை களைந்து மீண்டுன்
தாயாய் சேயாய் 
சதிபதியாய் 
பிரிந்திணையும் காதலராய்
உற்ற ஞெலுவராய்
அவர் பால் 
நின் புகழ் ஏற்றிட
காலக்கணக்கின்றி 
என்னோடு கனன்றிரு.

வி. அல்விற்.

01.01.2015.
உட்பெட்டி குசலங்கள்.

இரவு இனிமையானதுதான்
இனிமை இரசிப்பதற்குத்தான்
இடையறாது வீழும் தாரகைகளும்
இணை தேடியுலவும் நிலவும் 
இன்பம் பயிப்பன தான் 

ஆனாலும் 
கொதிப்பூட்டும் தண்மதி மேல்
கோபம் கொண்டு தகித்திருந்து
தலையணை அணைத்திருக்கும்
தனிக்கிளி இதுவென்று

கூர் நாக்கை மெதுவாய் 
கூர்ந்து உள்நீட்டி
நஞ்சு பாய்ச்சி விட வெண்ண
இவைகள் ஒன்றும்
கூண்டுக்கிளிகள் அல்ல.

வி. அல்விற்.

02.01.2015.
தற்காலிகங்கள்.

நீங்களாகவே இருந்து கொள்ளுங்கள் 
வானத்துக்கு ஏணி கட்ட
உங்களால் முடியவே முடியாது

ஏனென்றால் 
இலகு வியாபாரிகள் நீங்கள் 

ஒரு மரம் நட்டு 
நீரூற்ற முடியாதவர்கள் 

ஏனென்றால் 
பிறர்நலன் சிந்திக்க நேரமற்ற 
உழைப்பாளிகள் நீங்கள் 

ஒரு நேரம் ஒரு வேலை
முடிக்க முடியா வீரர்க்ள் நீங்கள் 

ஏனென்றால் 
திட்டமிடல்
உங்களைத் திட்டித் தீர்க்கிறது.

நீங்கள் நிற்குமிடம்
குழிந்து கொண்டே இருக்கின்றது
சீரின்றி.

படிகளின் உச்சத்தில்
சிம்மாசனமிட்டிருக்கும் வேந்தர்களாய்
எக்களிப்பில் நீங்கள்
செங்கோலின் நிரந்தர கற்பனையுடன்.

தற்காலிக சுகங்கள் 
தரை தட்டிப் போகும் ஒருநாள் 

அதுவரை
நீங்களும் உங்கள் குழந்தைகளும் 
அனுபவித்துப் போங்கள் 

கேள்விகளுள் அடங்காத
விதிவிலக்குகளின் பெயர்களால்.

வி. அல்விற்.

02.01.2015.