வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

விடுவிக்கப்படும் ஊர்.


மனிதர்களை வாழ மறுத்த அந்த
மூடப்பட்ட பாதை திறக்கப்படுகின்றது.

பார்வைகளைத் திரும்பப் பெற்ற
கண்கள் ஆவலில் அலைகின்றன.

அடைக்கப்பட்ட காற்றும்
மூடப்பட்ட கடலும்
பெருமூச்சு விட்டெழுகின்றன.

ஊரசைகிறது;
உறவுகள் பேசுகின்றன.

இன்னதென்றில்லாத வார்த்தைகள்
கடந்தகால
வெற்றிடங்களை நிரப்புகின்றன.

மகிழ்ச்சி நடனமிடுகின்றது;
சீர் வரிசைகள் தயாராகின்றன.

இதோ!
ஊர் நடக்கத் தொடங்குகின்றது
புதிய புடவை கட்டிக்கொண்டு.

வி. அல்விற்.
11.02.2017.






காலம்.

காலம்.

இதை எங்ஙனம் எடுத்தியம்பவியலும்?

மௌனங்கள் வாடைக்காற்றின் வேகமெடுத்து
மேடைகளில் முழங்கிய காலங்கள்
மூச்சடைத்து முடிய,
வேகமும் வீரமும் மேலெழுந்து
தோளுயர்த்தி பலமேந்தி உச்சம் தொட்டிருந்தது
பிற்காலம்.

மலைகளிலும் காடுகளிலும்
படுத்துறங்கிக் கற்றுவந்த வீரர்களை
யாரிவர்கள் என்னும் வண்ணம்
புருவமுயர்த்தி உலகு வியப்பேந்தியது
அக்காலம்.

இழப்புகளை விழுங்கியபடியான வெற்றிகளை
குவித்தபடியான ஏறுகாலத்தில்…

யாருமே தப்பிவிடாதபடியாக
வானத்தைப் பிளந்தாற்போல
பெருமழையைப் பொழிவித்தார்கள்.

நீண்ட…..
மிக நீண்டகால வெள்ளப்பெருக்கு
அனைத்தையும் அழித்துப் போட்டது.

தனிக் கூரைகளும் தனிக்கிணறுகளும்
தமக்கென்றேயிருந்தவர்களின் கண்முன்னே
யாவுமே சமதரையாக்கப்பட்டன.

வானமே கூரையான
எங்கென்றில்லாத நிலங்களில்
உயிர்களை ஒட்டிக்கொண்டனர் மிச்சமிருந்தவர்.

செத்தவருக்குச் சமமாய் எத்தனை நாட்கள்தான்
நடிக்கவியலும்?
இதோ!
விதைகளிலிருந்து முளைத்தவை நிமிரத் தொடங்குகின்றன.

இன்னொரு காலம் இயல்பாயெழுகிறது.

* (கேப்பாப்புலவுச் சிறுவனின் பேச்சைக் கேட்டபொழுதில்).....

வி. அல்விற்.
09.02.2017.

இது www.ilctamil.com வானொலிக்காக வழங்கப்பட்ட கவிதை.
நன்றி. திரு. முல்லை அமுதன்.

சுதந்திரம்

எது சுதந்திரம்?

வாய்களைக் கட்டி
அங்கங்களை வெட்டியெறிந்து
நடைப்பிணங்களாக
உலாவ விட்டிருக்கும் உங்களுக்கு
எது சுதந்திரமாகத் தெரிகிறது?

பாட்டன் முப்பாட்டன்
காலத்துச் சொந்த நிலங்களை
பறித்தெடுத்துக்கொண்டு நம்மை
அலைய விடும் உங்களுக்கு
எது சுதந்திரமாகத் தெரிகிறது?

எமது சுதந்திரங்களை
நீங்களே வரையறுத்துக் கொள்ளுகிறீர்கள்

எமது இருப்புக்களையும்
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுகிறீர்கள்

பேசவும் அருகதையற்றவர்களே!

உங்களது அம்மணங்களே
உங்களது சுதந்திரமாக இருக்கிறது என்பதைப்
பறையறிவித்துக் கொள்ளுங்கள்!

அதுவே மிகப்பொருத்தமாயிருக்கும்.

வி. அல்விற்.
04.02.2017.

நின் சகி.

நிறமற்றோடும்
இந்நதியின் ஓட்டமென இருக்கிறாள்
நின் பிரிய சகி.

சுதந்திரமான அவள் பயணம்
வானத்தை அளந்துவரும்
ஒரு பறவைக்கொப்பானது.

மகிழ்தலும் மகிழ்வித்தலுமான
மெய்யுணர்வின் பாலுற்ற
ஒரு ஆடலுக்கிணையானது.

யாருக்கும் இடைஞ்சலற்ற
இவ்வமைதியான நெடுவழி
எங்ஙனமுன் பார்வைக்குள் சிக்கியது?

துக்கிக்காதே!
அவற்றை நின்றாய்ந்து வயலினிசைக்க
விருப்பற்றிருக்கிறாள்.

தனித்தலையவில்லை நின் சகி!
மௌனித்திருக்கிறாள்;
தன்னோடும் நினைவுகளோடும்.

வி. அல்விற்.
07.02.2017.

இது ilctamil.com வானொலிக்காக வழங்கப்பட்ட கவிதை.
நன்றி. திரு. முல்லை அமுதன்.

சனி, 4 பிப்ரவரி, 2017

ஒரேயொரு நாள்.

ஒரு நாள்...
ஒரேயொரு நாள்..
நாம் ஒன்றுகூட மாட்டோமா
ஒற்றை ரோஜாவுடன்
அகாலமான நமது நண்பனுக்காக?

வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டாற் போலவும்
கால்கள் பிணைந்து கொண்டன போலும்
தடுமாறி நிற்கிறீர்கள்.

தினமும் கூட நடந்தவன்,
பள்ளியில் சத்தமிடாமல் சிரிக்கச் சொல்லும்
பகிடிகளுக்குச் சொந்தக்காரன்,
மாலை மங்கிய நேரங்களில்
மிதியுந்துடன் எங்களைத் தேடி வந்தவன்,
உள்ளகத்துச் சோகங்களை மட்டும்
பகிர்ந்து கொள்ள மறுத்து
தனித்தே மூச்சடங்கிப் போனவன்.

ஒற்றை ரோஜாவைத்து
அவனது பிறந்தநாளை நினைவுகள் கூட்டி
மறவாதிருக்க விழைகிறேன்.

ஓ!
உங்களது விருப்ப மறுதலிப்புப் புரிகிறது.

நான் உணர்வுகளோடு வாழுகின்றேன்;

நீங்கள் அறிவின்பால் வாழ முற்படுகிறீர்கள்.

நான் அனுபவித்து வாழுகின்றேன்;

நீங்கள் கடந்து போய்க்கொண்டேயிருக்கிறீர்கள்.

வி. அல்விற்.
12.12.2016.

* (எனது மகனின் ஆதங்கமொன்றை எனதெழுத்தில் வடித்திருக்கிறேன். இதை அவரால் மட்டுமே முழுமைப்படுத்த முடியும்)

தொடுகை.

பூக்களாகத் தூவிக்கொண்டிருக்கும்
இந்தப் பனித்துளிகளைப்போல
மகிழ்ச்சிகளை விசிறிவிடச் சித்தமாயுள்ளேன்
இத்தினத்தில்.
மன்னித்தல்களும்
அவற்றைப் பெறுதல்களுக்குமான
இன்றொரு பொழுதின் நீட்சி குறையாதிருக்கட்டும்
சாளரத்தின்வழி தோன்றும்
அந்த வானத்தின் தொடுகைபோல.

வி. அல்விற்.
01.01.2017.

முதிர் கன்னி.

நான் முதிர்ந்து கொண்டிருக்கிறேன்
பனிப்பிரதேசமொன்றில் அச்சமுற்றிருக்கும்
இலையுதிர்கால மரமொன்றுபோல.

யாரெல்லாமோ வந்து போகின்றார்கள்.
ஆமென்று தலையசைக்க
பணம் பிடித்திருக்கிறது.
தூரதேசத்தின் பணத்தில்
உயர்ந்திருக்கும் வீடு பிடித்திருக்கிறது.
கிலோக்களில் இருக்கும் தகதகப்பும் பிடித்திருக்கிறது

ஆனாலும்…..
ஆமென்று தலையாட்ட இன்னும் ஒருவராவது வருவாரில்லை.

புறோக்கரும் சலிக்கிறார்.
பக்கத்து வீடுகள் என்னைப்பார்த்து பெருமிதமாக நகைக்கின்றன.
நண்பிகளின் குழந்தைகள் என்னை விளையாட அழைக்கின்றன.

இப்போதெல்லாம்
முன்பையும் விட அதிகமாகத் தலைகுனியப் பழகியுள்ளேன்.

சே!
நான் கொஞ்சம் மஞ்சள் பூசினாற் போலப் பிறந்திருக்கலாம்.
இடை இன்னும் கொஞ்சம் சிறுத்திருக்கலாம்.
மூக்கு கொஞ்சம் கூர்மையாக அமைந்திருக்கலாம்.

என் செய்வேன்?

என்னைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமே
கண்ணாடியில் தம்மைப்பார்க்காத
பேரழகர்களெல்லோ!

அம்மா சொல்லுகின்றா கடவுள் அழைத்து வருவார் என்று.

காத்திருக்கிறேன்….
இந்தத் தையிலாவது ஒரு ஆணழகன் வருவானென்று.

வி. அல்விற்.
15.11.2016.

ஒரு கோப்பை தேநீர்.

ஒரு கோப்பை தேநீர்.

இப்பனிக்கால உறைதல் போல
நீங்களும் உறைந்திருக்கிறீர்கள்
என்னுடனான முரணுறுதலிலிருந்து
இளகிவிட மறுக்கும் மனதுடன்.

எங்கிருந்து இவ்விதைகள்
முளைவிடத் தொடங்குகின்றன?
பொறாமையுள் வீழ்ந்து
போட்டியில் வெடித்து
சுயநலத்தில் மேலெழுந்து
சகிப்புகளை அமுக்கி
நானாகி வேரோடி
திமிர்த்தெழுந்து நிற்கின்றோம்.

ஓ!
முரணுற்று மறுதலிப்பவர்களே!
உண்மைகளை ஏற்பதிலுள்ள
உங்களிறுக்கம் தளரும்படிக்கு
ஒருகோப்பை தேநீர் உதவுமாயின்....

வாருங்கள்!
மிதமான இக்குளிரில் இதமான சூட்டுடன்
ஒருகோப்பை தேநீர் பருகலாம்
மெல்லப் பேசிக்கொண்டே.

வி. அல்விற்.
02.01.2017.

உறவுகள்.

அன்னைமடி மறுத்ததுண்டோ?
முலையூட்ட பேதம் பார்த்ததுண்டோ?
மூத்தவரைப் பொத்தி வைத்து
இளையவரை யொதுக்கினளோ?

கண்டவரும் கண்ணுவைக்கா(து)
கண்ணயரா தருகிருந்தவளே!
பொன்னுமணி போலவெல்லோ
பொன்னூஞ்சலில் தாலாட்டினளே!

கானமிசைத்திருந்த காலமும் போனதங்கே.
வானமளந்திருந்த வனப்பும் மறைந்ததங்கே.
மீந்து சுமந்துவந்த மென்னுடலும் சோர்ந்ததிங்கே!
மௌனத்தை மூடிக்கொண்டு மூலையிலே சாய்ந்ததிங்கே!

வேரறுந்து போனதெங்கே?
வெறுமனது வேகுதிங்கே!
பேரறிந்த உறவுகளேயிங்கே
பெருமரமாய் வீழ்ந்திருக்கே!

என்ன தான் விதைத்து வைத்தோம்?
எதைக்காத்து வளர்த்து விட்டோம்?
என்னவோ மதர்த்து நிற்க - முன்னால்
அறுவடைக்கு முடியவில்லை…….

வி. அல்விற்.
05.01.2017.

உடன்படிக்கை

நமது உறவுக்கான உடன்படிக்கையானது
இரத்தம் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

இம்மாபெரும்
உடன்படிக்கையின் நிமித்தம்
அனைத்தையும் பொறுத்திருக்கிறேன்
இந்தக் குளிர் விலகி துளிர்த்தலுக்காகக்
காத்திருக்கும் மரம் போல.

வார்த்தைகளின் செருகல்களிலும்
செயல்களின்  கிழித்தல்களிலும்
அது இரத்துச்செய்யப்பட முடியாததென்று
முன்னோர்களின் பெயரால்
இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

அவர்களின் காற்சுவடுகள் அழியாதிருக்கட்டும்.
அவர்களின் பேரரசுகள் மறைக்கப்படாதிருக்கட்டும்.
அவர்களின் கண்களிலிருந்தெழும்
ஒளிவீச்சுக்கள் நம்மீது முழுமையாகப் பரவட்டும்.

இதோ!
நாம் மீண்டும் திருமுழுக்குப் பெறும் காலம் வந்து விட்டது!

வி. அல்விற்.
06.01.2017.

முதிர் கன்னி.

முதிர்கன்னி.

அவளது கண்கள்
ஏக்கங்களை விழுங்கி
குழிவடைந்து கொண்டிருக்கின்றன.

அவளது கன்னக்கதுப்புகள்
சற்றே உள்வளைகின்றன
காயத்தொடங்கும் பழுப்பேறிய
இலைகள் போல.

அவளது மனம் குதியாட்டமிடுவதை நிறுத்தி
நீண்ட காலமாகி விட்டதை
தளர்நடையின் மௌனம்
பேசிக்கொண்டிருக்கிறது.

அவளது தூக்கமிழந்த இரவுகளின்
விடியல்கள் கருமை சூழ்ந்தபடியேயிருக்கின்றன.

அவள் வீணாவதையிட்டு
அவர்களுக்கு கவலையில்லை.

அவர்கள் இன்னமும்...

முட்டையில் மயிர் பிடுங்கிக்கொண்டேயிருக்கிறார்கள்.

வி. அல்விற்.
10.01.2017.

சுமை.

தொலைத்தவர்களைச் சுமந்து கொண்டு
கனத்தபடி அலைகிறது நம்மினம்.

உணவிழந்த வயிறுகளின் கூக்குரலும்
பலமிழந்த குரல்களின் கேவல்களும்
முடிவுறாத பயணங்களுக்குள் சிக்கித் தவிக்கின்றன.

இன்னமும் எத்தனை காலம்தான் ஆண்டவனே!

பிள்ளை பெறாத வயிறுகள் பாக்கியம் பெற்றனவோ?

வி. அல்விற்.
25.01.2017.

சுதந்திரம்

எது சுதந்திரம்?

வாய்களைக் கட்டி
அங்கங்களை வெட்டியெறிந்து
நடைப்பிணங்களாக
உலாவ விட்டிருக்கும் உங்களுக்கு
எது சுதந்திரமாகத் தெரிகிறது?

பாட்டன் முப்பாட்டன்
காலத்துச் சொந்த நிலங்களை
பறித்தெடுத்துக்கொண்டு நம்மை
அலைய விடும் உங்களுக்கு
எது சுதந்திரமாகத் தெரிகிறது?

எமது சுதந்திரங்களை
நீங்களே வரையறுத்துக் கொள்ளுகிறீர்கள்

எமது இருப்புக்களையும்
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுகிறீர்கள்

பேசவும் அருகதையற்றவர்களே!

உங்களது அம்மணங்களே
உங்களது சுதந்திரமாக இருக்கிறது என்பதைப்
பறையறிவித்துக் கொள்ளுங்கள்!

அதுவே மிகப்பொருத்தமாயிருக்கும்.

வி. அல்விற்.
04.02.2017.