ஞாயிறு, 10 ஜனவரி, 2016

அம்மா!

சொற்களைப் பொறுக்கியெடுக்கிறேன்
உன்னை ஆறுதற்படுத்த;
என்னையும்தான்.
நீயும் நானும்
எத்தனை காலம் சேர்ந்திருந்தோம்?
நான்காம் பிறை போலவேயிருக்கிறது
நான் உன்னோடிருந்த காலம்.

தாரகைகள் கூடியிருந்த நாட்களாகவும்
முற்றத்து மல்லிகையின் மணங்களாகவும்
அமாவாசை இருட்டுக் காலங்களாகவும்
மகிழ்ந்தும் இறுகுண்டும் இருந்த காலங்களை
மீட்டிக்கொண்டே இருக்கிறேன்.

எனது பிரிவு உன்னை வாட்டியிருக்கிறது
என்னைப் போலவே.
உன்னை அண்மித்திருக்கும் பயம்
வார்த்தைகளாக அவ்வப்போது
வழுகிக் கொண்டே இருக்கின்றன

என் செய்வேன் அம்மா!

என்னைப் பெற்று மகிழ்ந்தவளே
நீ என்னையும் நான் உன்னையும் தொலைத்து
வெகு நாட்களாகி விட்டன.

கடன் தீர்க்கவாவது
இன்னொரு பிறவி வேண்டும்
ஒரு யுத்தமில்லாத பூமியில்.

வி. அல்விற்.
09.01.2016.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

உயிர்


உனது உயிர்ப்பறவை
இன்று
என்மீது அமர்ந்திருக்கிறது
நம்பிக்கை கொண்டு.

வெளிறி விழித்திருந்த
நீண்ட இரவுகளுடனான
இப்பயணத்தின் பின்
களைத்திருக்குமதை
இரு கைகளில் தாங்கி
நெஞ்சோடு
அணைத்துக் கொள்ளுகின்றேன்.

என் உயிரே!

உனது தூக்கத்தை
நான் வாங்கியிருக்கிறேன்
நீ சற்று ஓய்வெடுக்கும்படியாக

உனது துக்கங்களை
வழித்தெறிந்து விட
சபதம் செய்துள்ளேன்

இன்னுமென்ன?

உன் நுதலில் நீண்டதொரு
முத்தமிட்டு
என்னோடு
உன்னுயிர் தங்கி விடும்படியாக
சத்தமிட்டுச் சொல்லுகின்றேன்.

வி. அல்விற்.
06.12.2015.













உனது உயிர்ப்பறவை
இன்று
என்மீது அமர்ந்திருக்கிறது
நம்பிக்கை கொண்டு.

வெளிறி விழித்திருந்த
நீண்ட இரவுகளுடனான
இப்பயணத்தின் பின்
களைத்திருக்குமதை
இரு கைகளில் தாங்கி
நெஞ்சோடு
அணைத்துக் கொள்ளுகின்றேன்.

என் உயிரே!

உனது தூக்கத்தை
நான் வாங்கியிருக்கிறேன்
நீ சற்று ஓய்வெடுக்கும்படியாக

உனது துக்கங்களை
வழித்தெறிந்து விட
சபதம் செய்துள்ளேன்

என்னோடு
உன்னுயிர் தங்கி விடும்படி.

வி. அல்விற்.
06.12.2015.







வரம்.

மீண்டுமொருமுறை.

கடந்து போன புன்னகையொன்று
மீள வராதது போல

கொடுக்க மறந்த செல்வத்தை
கொடுக்க முடியாதிழந்தது போல

போன செலவொன்றை
மீட்க முடியாதது போல

துண்டாடிய மனங்களை
வெல்ல முடியாதது போல

தாய் தந்த கடைசி முத்தத்தை
மீளப் பெற முடியாதது போல

அத்தாய் வயிற்றில் மீளவும்
புக முடியாதது போல

இப்பிறவி எனக்கொரு
வரம் தந்துள்ளது.

தீர்க்க முடியாக் கடன்களை
சுகமாய்ச் சுமக்கும்படி.

தாங்குகின்றேன்...

மீண்டுமொருமுறை
ஓர் குழந்தையாய்ப் பிறந்து
கடனின்றி வாழும் வரம் கேட்டபடி.

வி. அல்விற்.
04.12.2016.

புலமும் பலமும்.

புலமும் பலமும்.

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும். இந்த வருட நத்தார் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்துக் கொண்டு பணத்தையும் அனுப்பி விட்டு, ஓடோடி வீட்டுக்கு வந்து தொலைபேசியில் அழைக்க, அவர்கள் யாழ்ப்பாண நேரப்படி அரைச்சாம நித்திரையிலிருந்து எழுந்து ‘ஹலோ!’ என்று தூங்கி வழிய, பணம் அனுப்பியிருக்கும் விடயத்தை மட்டும் சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் வேலையை முடித்து கொஞ்சம் நேரத்தோடு வீட்டுக்கு வந்து பணம் கிடைத்ததா என்று உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொண்டால், வழமையான விசாரிப்புக்களின் பின்னர்,
 “அப்ப பிள்ளை! என்ன பலகாரங்கள் செய்தனீங்கள்?”
என்ற கேள்வியில், ஏற்கனவே முழங்காலில் இரண்டு ஊசிகள் ஏற்றப்பட்டும் அறுவைசிகிச்சை செய்யலாமா வேண்டாமா? என்ற கேள்விகளோடும் வேலைக்குச் சென்று நிற்க முடியாமல் தள்ளாடி வந்த எனக்கு, சுரீர் என்று கோபம் தலைக்கேறப் பார்த்தது. கட்டுப்படுத்தி, “ ஒண்டும் செய்யேல்லை, இப்பதான் வேலையால வந்தனான்” என்று என்னைக் கட்டுப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சியே.
நமது ஊரில் நத்தார் தினத்தன்று கொழுக்கட்டை அவிப்பார்கள். இந்தப் பழக்கம் எப்படி எங்கிருந்து வந்தது என்று இன்றுவரை தெரியவில்லை. ‘கட்டிகை’  (Cake) யும் செய்வார்கள். ஆலயத்தில் இரவு வழிபாடுகள் நடக்கும். எமது ஆலயத்திற்குள் செய்யப்படும் பாலன் குடிலில், வெளியே நிலத்திலிருந்து பாளம் பாளமாக வெட்டி எடுக்கப்பட்ட மண்ணுடன் சேர்ந்த புற்கள் இயற்கையான அலங்காரமாக அழகாக இருக்கும். ‘பாலன்’ கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு எப்போதும் போலச் சிரித்துக்கொண்டிருப்பார். வழிபாடுகள் முடிய விழுந்தடித்துக் கொண்டு பாலனை விழுந்து கும்பிடுவோம்.
அத்தோடு நத்தார் விழா முடிவடைந்து விடும்.
ஆனால், அந்த இருபத்தைந்தாம் திகதியிலிருந்து முதலாம் திகதிக்கான ஆர்ப்பாட்டங்கள் அதிகமாக இருக்கும். புது ஆடைகள் வாங்குவதிலிருந்து, என்னென்ன பலகாரங்கள் செய்வது?, யார் யாருடைய வீடுகளுக்குப் போவது? என்பது வரையான ஆயத்தங்கள் அமளியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
எங்கள் ஊரில் அனேகருடைய வீட்டுப் பொருட்களும் புதுவருடத்துக்கு முந்தைய நாட்களில் வீட்டு முற்றத்தில் கிடக்கும். வீடு முழுமையாகத் துடைக்கப்பட்டுக், கழுவப்பட்டு, அலசப்பட்ட பின்னர் புது வீடு போல மாற்றம் பெறும்.
அதைவிட, சீனி அரியதரம், முறுக்கு, அச்சுப்பலகாரம், பயற்றம் பணியாரம், காசா, (இதுவும் அச்சுப்பலகாரம் போலவே இருக்கும் நீள்சதுர வடிவத்தில்; ஆனால் பொங்கி வரும்.), லட்டு, இவற்றுடன் இறுதியாகச் சேர்ந்து கொண்ட ‘கட்டிகை’ என இப்படிப் பலவகையான பலகாரங்கள் கடகங்களை நிரப்பும். புதுவருடத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எமது வீட்டுக்கு வாழைப்பழக்குலை ஒன்று கட்டாயம் வந்து சேர்ந்து விடும்.
இவ்வாறான ஆயத்தங்களோடு புதுவருடம் பிறக்கும் போது, மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
உறவுகள் அனைத்து உறவுகளின் வீடுகளுக்கும் சென்று உண்டு மகிழ்வார்கள்.
நண்பர்களும் அவ்வாறே.
குறைகளை மனங்களில் சுமந்தவர்களும், அற்ப காரணங்களுக்காக முகங்களைத் திருப்பிக் கொண்டவர்களும் கூட,  அன்றைய தினம்  வீடுகளுக்குப் போய் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டதுண்டு.
இவ்வாறாக, புதுவருடமானது, எதிர்வரும் காலத்திற்கான எதிர்பார்ப்புகளுடனும், மாற்றங்களுக்கான ஆயத்தங்களுடனுமாக மலர்கின்றது.
இங்கே, புலம் பெயர் தேசங்களில் இவற்றில் பல வாய்ப்பதில்லை. வேலைகளும், தூரங்களும் இவற்றைப் பல வேளைகளில் அனுபவிக்க முடியாமல் செய்து விடுகின்றன. இந்த இடையூறுகள் சிலவேளைகளில் ஒரு குடும்பம் சேர்ந்து ஒரு நாளை அனுபவிக்க முடியாமல் கூடச் செய்து விடுகின்றன.
ஆனாலும் முழுமையாக இந்நாட்களை அனுபவிக்க, முடிந்தவரை பலர் முயற்சி செய்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இன்று கிடைத்த கொஞ்ச நேரத்தில்,
இசை ஞானி இளையராஜாவின் மலேசிய இசை நிகழ்ச்சியுடன் இரண்டுவகைப் பலகாரங்களைச் செய்து முடித்தேன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துண்ணும் உணவினூடாகவும் பகிர முடியும் என்னும் நோக்கத்துடன்.

நாளைக்கும் நாளை மறுநாள் புதுவருடத்தன்றும் வேலை.
வேலையிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாவுடன் தொடர்பு கொண்டால், “பிள்ளை! என்ன பலகாரங்கள் செய்தனீங்கள்?” என்று கேள்வி மீண்டும் வரும். 'செய்திருக்கிறேன்' என்று சொல்ல ஆசை.

புதுவருடம் மகிழ்ச்சியைத் தரட்டும் அனைவருக்கும்.
முயல்வோம்!
முடிந்தவரை தளராது செயற்பட முயல்வோம்!

வி. அல்விற்.
30.12.2015.

புரிதல்.

புரியும் மொழியில்
பேசிப் பார்க்கிறேன்
புரியாத விடயத்தைப்
புரிந்து கொள்ளும்படி.

தாவும் மனதை
தரையிறக்க இயலாமையால்
தவறவிட்டு நொந்து கொள்ளுகிறாய்
தனித்து நின்றபடி.

யாசித்து நிற்கிறேன்
அமைதியில் தெளிவுற்று
மீண்டு வரும்படி.

என் செய்வேன்?
எனதுயிரே!

எனக்கும் வலிக்கிறது.

நெற்றி நோவெடுக்க
உச்சி பிளந்து கொள்ளும்படி
சிந்தித்துக் களைக்கிறேன்

எவ்வழி தவறென்று
இன்னும் புரியவில்லை!

வி. அல்விற்.
27.12.2015.

புதிய நாள்.

உள் வந்து என்னை உந்தும்
இந்த பெருஞ்சுமைகள்
நீங்குவதாயில்லை.

மேன்மைக்காலத்து மகிழ்வுகளும்
தடுமாறிப் போகும் அனுபவங்களுமாக
காலமாற்றம் போல
அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
சம்பவப் பொதிகள்.

வரவுகள் பார்த்தென்ன
கணக்குகள் போட்டென்ன
நிதானமாவதற்குள்
இன்னொரு அனுபவம்
வாய்திறந்து நிற்கிறது
தீர்வுக்காக.

இதோ!
இந்த இரவு நல்லிரவாகட்டும்.

நாளையும்
நேர்நின்று பேசும் நாளொன்று
புதிதாகப் பிறக்கட்டும்.

வி. அல்விற்.
23.12.2015.

தெரிந்து பேசுதல்.

மரமும் பயனும்.

காலம் எத்தனை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது! அது யாருக்காகவும் அல்லது எதற்காகவும் காத்திருப்பதில்லை. ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்கும்போது இந்தக் காலப் பாய்ச்சலை உணரக் கூடியதாக இருக்கும்.
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே உணவுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் பெண்ணுக்கும் பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும் உடைமை கொண்டாட அவாக் கொண்டதால் ஏற்படும் அழிவுகள் நிறுத்தப்படுவதாயில்லை.
இயற்கை சீறியோ அல்லது மனிதன் அதனைச் சீற்றம் கொள்ள வைத்தோ,  மக்கள் அழிகின்றனர். அல்லது தமக்குள் தாமே யுத்தம் புரிந்து மாண்டு போகின்றனர்.
மனிதன் என்பவன் உணர்வுகளும் அறிவுக்குமிடையில் நின்று உலாவிக் கொண்டிருப்பதால், சில சம்பவங்கள் மனித நேயத்தைத் தூரத்தூக்கிப்போட்டு தங்களது போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த பலரை, அவர்களது வாழ்க்கைப்போக்கை மாற்றிப் போட்டு விடுகின்றது. வாழ்க்கையின் நிலையாமை பளிச்சென்று அச்சந்தர்ப்பங்களில் புலப்பட்டு விட, உலக வாழ்வின் முடிவுக்குள், தன்னால் முடிந்த நல்லவற்றைச் செய்ய உந்துவதே இதன் காரணமாகிறது.
ஆனால் சிலரது வாழ்க்கை நாய் வாலாகவே இருந்து விடுகிறது.
எரிமலையா? கடற்கோளா? வெள்ளப் பெருக்கா? யுத்தமா?
எதுவென்றாலும் நடக்கட்டும்! தங்களது தலையில் மட்டும் இவை எதுவும் விழாமலிருக்க தங்கள் தங்கள் கடவுள்களை கண்ணீர் பெருக்கி வேண்டிக் கொள்ளுவார்கள். அப்படியே வேண்டிக் கொண்டு வெளியே வந்து யாராவது தவித்துப்போய் நிற்பவர்களைப் பிடித்து அறா வட்டிக்குப் பணம் கொடுப்பார்கள்.
யாராவது முன்னிலையில் இருக்கிறார்களா? அவர்களோடு ஒட்டிக்கொண்டு தமது அலுவல்களை முடித்துக் கொள்ளுவார்கள். அதே மனிதர் நொந்து போனார்கள் என்றால் அப்படியே ‘தொப்’பென்று போட்டு விட்டு அடுத்த பலமான இடத்தைத் தேடத் தொடங்கி விடுவார்கள்.
தாங்களே கேள்விகளைக் கேட்பார்கள், அடுத்தவர்கள் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் தாங்களே தீர்மானித்து, தங்களுக்கேற்றவாறு அடுத்தவரது நிலையில் இருந்து பதில் சொல்லிக் கொள்ளுவார்கள்.
எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு, அப்பாவிகள் மாதிரி யாராவது ஏமாந்தவர்களைப் பார்த்து உதவி கேட்பார்கள். அடுத்தவனும் தன்னைப் போல யோசிக்கத் தெரிந்தவன் என்பதை மறந்து அல்லது மறுத்து, முட்டாள்களாக்கி மாட்டி விட்டு விட்டுத் தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டே போவார்கள். எங்கே எப்படிக் காசைப் பெருக்குவது என்பதும் மனிதரைத் தமது சார்பாக வளைத்துக் கொள்ளுவதுமே இவர்களது மூளையை நிறைத்திருக்கும்.
இவை எல்லாவற்றையும் செய்து கொண்டு, யாராவது திருப்பிக் கேள்வி கேட்டால், “இப்பிடித்தான் தந்திரமாக வாழப் பழக வேணும்” என்று தத்துவ முத்துக்களை உதிர்ப்பார்கள்.
ஒருவர் தமது வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதை அவர்களது கெட்டித்தனம் என்று சொல்லலாம்.
ஆனால் அடுத்தவரை முட்டாளாக்கி விழுத்தி விட்டு மேலேறிச் செல்லுவதை சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

யாரோ மரம் நடுகிறார்கள்; அவ்வழி போகும் வேறு யாரோ அதன் பயனை அனுபவிக்கிறார்கள்.
நாம் இன்று செய்பவற்றுக்கு நமது வழி வருபவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

மரணம் என்பது நமக்கு நிச்சயிக்கப்பட்டதொன்று.

வி. அல்விற்.
16.12.2015.

வாழ்தல்.

ஆறெனப்
பாய்ந்து கொண்டேயிருக்கின்றன நினைவுகள்
அமிழ்ந்து போகாதபடியும்
அழிந்து விடாதபடியும்
எதையாவது பற்றிக் கொண்டு
வெளியேற வேண்டியிருக்கிறது
வாழ்தலுக்காக.

வி. அல்விற்.
14.12.2015.

என் பிரிய சிசுவே!

எனது கண்கள் உனை விட்டு அகலாதிருக்கின்றன
பயிற்சி பெற்ற உளவாளியை மிஞ்சியிருக்கிறது
உனைத் தொடரும் எனதாத்மாவின் விருப்பு
ஆனாலும் நான் ஓருளவாளியல்ல
அன்னையென்ற ஒளிப்பிரவாகத்தில்
நீ பிரகாசிக்கும்படி விரும்பும் உனதூட்டம்

என்னோடிருக்கும் உன் பொழுதுகள்
வானவில் வண்ணங்களையொத்த
அழகைப் பொழிந்து கொண்டிருக்கின்றன
தகதகத்து விழும் கதிரவனைப் போலிருக்கிறது
என்னை உயிர்ப்பிக்கும்
கலகலத்தெழும் உனது சிரிப்பு

ஓ! என் பிரிய சிசுவே!

எனக்கேதும் கலக்கமில்லை

உனது தூக்கத்தின் இராகங்களையும்
பிரித்தறியப் பயின்றிருக்கிறேன்
அண்மையிலும் சேய்மையிலும்
உனை விட்டு அகலாதிருக்கின்றன என் கண்கள்

என்னுயிரை உறுதிப்படுத்தியபடி.

வி. அல்விற்.
13.12.2015.

வேலையும் தகைமையும்.

வேலையும் தேடலும்.

இங்கே பிரான்சுக்கு வந்து சேர்ந்த பலர், தமது கல்வித் தகைமைகளைக் கவனத்தில் கொள்ள முடியாமல் கிடைத்த வேலையைச் செய்யத் தொடங்கி அதன் பின்னர் தாம் கற்ற கல்வியையும், தமக்குள்ள திறமைகளையும் சிந்திக்கத் தொடங்குவதுண்டு. விரும்பிய வேலையைத் தேட முடியாதபடி பொருளாதார நிலை, மொழி, குழந்தைகள் என்று பல காரணங்கள் முன்னால் எழுந்து தடுத்தும் விடுகின்றன. எனவே எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு கிடைத்த வேலையைப் பல வருடங்களாகச் செய்து தேய்வதுண்டு.
ஆனாலும் இங்கே முன்னேற முயற்சிப்பவர்களுக்கான வழிவகைகள் தாராளமாக உள்ளன. உதாரணமாக நிரந்தர வேலை ஒப்பந்தத்துடன் இருப்பவர்கள் தமது வேலையிடத்திலிருந்து கொண்டு தமக்குத் தேவையான வேலை சம்பந்தப்பட்ட பயிற்சிகளையும், (Internships) மேலதிகக் கல்வித் தகைமைகளையும் சேர்த்துக் கொண்டு முன்னேற இடமுண்டு. இதை இலவசமாகவே (?) செய்ய முடியும். அதாவது இத்தகைய பயிற்சிகளுக்கென்று எமது மாத சம்பளத்திலொரு பகுதியை எடுத்துக் கொள்ளுவார்கள். ஒருவர் ஒரு நிறுவனத்தில் ஒரு வருடத்துக்குமேல் வேலை செய்தால்தான் (சில இடங்களில் ஆறு மாதம்) இத்தகைய வசதியைப் பெற முடியும். (அனேகமாக ஏனைய சலுகைகளும் அவ்வாறே). ஒவ்வொரு வருடமும் இருபது மணித்தியாலங்கள் ஒதுக்கப்படும் இத்தகைய பயிற்சிகளைப் பெறுவதற்கு. தொடர்ந்து ஐந்து வருடங்கள் நமக்கான இந்தக் காலத்தை சேர்த்துக் கொள்ளலாம். அதாவது தொடர்ந்து ஐந்து வருடங்கள் இத்தகைய பயிற்சிகளைச் செய்யாது விட்டால், நூறு மணித்தியாலங்கள் சேர்ந்து விடும். அவற்றை மொத்தமாகவோ அல்லது பகுதிகளாகவோ நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த ஐந்து வருடங்களைத் தாண்டி விட்டால், ( அதாவது அதற்குள் எமக்கு ஒதுக்கப்பட்ட மணித்தியாலங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால்)  அதன் பிறகு வரும் காலங்கள் சேர்க்கப்பட மாட்டாதவையாகி விடும். எனவே இக்காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவதே புத்திசாலித்தனம். குறைந்தபட்சம் மொழி கற்கவாவது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை CPF அதாவது Compte personnel formation என்று சொல்லுவார்கள்.
இதை விட, கூடிய காலக் பயிற்சிக் கல்வியையும் உங்களது வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதியுடன் (ஆறு மாதம் அல்லது ஒரு வருடம்) செய்து முன்னேற வழியுண்டு.
முன்னரெல்லாம் இவற்றைச் செய்வதற்கு இங்கே வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி கேட்டு கடிதம் எழுதி, (பல மேலாளர்கள் மறுப்பதுமுண்டு) பல நாட்கள் காத்திருந்து இவற்றைப் பெறுவதுண்டு. டிசம்பர் மாதம் 2014இலிருந்து பிரெஞ்சு அரசாங்கம் இணையத்தளத்தில் பதிவு செய்யும் வசதியைச் செய்திருக்கிறது. http://www.cpf-compte-formation.fr/salarie/cpf-pour-salaries.htm
இந்தத் தளத்தில் சென்று நமக்கான கணக்கு ஒன்றினைத் திறந்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான பயிற்சிகளைத் தெரிவு செய்து விண்ணப்பிக்க முடியும்.
நமக்கு இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் பயன்படுத்த உண்டு என்பது நினைவில் இல்லாவிட்டால் டிசம்பர் மாத சம்பள விபரத் துண்டைப் பாருங்கள். அதிலே உங்களது இந்தப் பயிற்சிக்கான மணித்தியால விபரம் போடப்பட்டிருக்கும். இல்லாவிட்டால் உங்களது வேலையிடத்துக் கணக்காளரைக் கேட்கலாம்.
இதை விடப் பலர் நமது நாட்டிலிருந்து பட்டப்படிப்புகளோடு வந்திருப்பார்கள். உங்களது கல்வித் தகமைச் சான்றிதழ்களை இங்கே நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள Académie யில் கொடுத்து சமப்படுத்தப்பட்ட அத்தாட்சிப் பத்திரத்தை (இலவசமாகவே) பெற்றுக் கொள்ள முடியும். வேலை தேடுவதற்கு இது மிகப் பெரிய அளவில் உதவும்.

இவற்றையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்கிறீர்களா?
முதலாவது, இப்பொழுதும் நம்மவர்கள் பலரை நம்மவர்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கவலை.
இரண்டாவது, யாராவது ஒருவருக்காவது இந்தத் தகவல்கள் பயன்பட்டாலும் மகிழ்ச்சியே.
மூன்றாவது, எனக்கு வேலை செய்வது பிடிக்கும். சும்மா இருந்து அரசாங்கப் பணத்திலேயோ அல்லது யாரையாவது வருத்தியோ வாழ்வது பிடிக்காது. நான் பிரான்சுக்கு வந்த புதிதில், நமது ஒரு புகழ்பெற்ற, பலரால் மதிக்கப்பட்ட கலைஞரைச் சந்தித்தப் பேச நேர்ந்தபோது அவர் சொன்ன பொன்மொழிகள் இதோ! “ எங்கட உடம்பை வளைச்சு, எங்கட மூளையை இவர்களுக்காச் செலவு செய்து கொண்டிருக்க முடியாது.”
இவர் இப்பவும் அப்படியே திரிசங்கு நிலையில்தான் நின்று கொண்டிருக்கிறார் என்பது இன்னும் வேதனை. இவர்களை இப்படியே விட்டு விடுவது நல்லது.

ஆக, எனது நிலை என்னவென்றால், இப்பொழுது செய்யும் வேலையை மாற்றிக் கொஞ்சம் இதைத் தாண்டலாம் என்ற யோசனை தோன்ற, ஒரு பயிற்சி தொடங்கியுள்ளேன். இதை பிரெஞ்சு மொழியிலே (Bilan de compétence) என்று சொல்லுவார்கள். அதாவது நமது கல்வி, இதுவரை செய்து வந்த வேலை அனுபவங்கள், விருப்பு வெறுப்புக்கள் போன்ற அனைத்தையும் தூக்கி முன்னாலே போட்டுவிட்டுக் கொஞ்சம் அதிகமாகவே அவற்றைக் கிளறி அவற்றிலிருந்து நமக்குப் பொருத்தமானவற்றைப் பொறுக்கி
எடுத்து அது தொடர்பான வேலை ஒன்றைத் தெரிவு செய்வது.

:)
http://www.cpf-compte-formation.fr/salarie/cpf-pour-salaries.htm

காலம்.

பெண்ணே! 
உனது புன்னகை எங்கே போயிற்று?
கண்களின் ஒளி எப்படி மறைந்தது?
தெரு நிறைந்த மக்களிடையே
நீ மட்டும் ஏன் கரும்புள்ளியாகத் தெரிகிறாய்?

இதோ!
உனது பாதை அடைபட்ட தெருவாயுள்ளது
வழியறியாது திணறுகிறாய்.
ஒரு சிறு குழந்தையைப் போல
நீயாகவே தொலைந்து போனாயே!
சிந்திக்கக் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை
சிறையாக்கி உன்னையே பூட்டிக் கொண்டு விட்டாயே

முன்னொரு பொழுது மகாராணிக்குரிய
அனைத்து செல்வாக்குகளும் உன்னைச் சேர்ந்திருந்தது 
பெருமிதம் மிக்க வார்த்தைகளும் 
வியத்தகு பார்வைகளும் உன்னைச் சூழ்ந்திருந்தன
சாமரம் வீசுவதற்குப் பலர் காத்திருந்தனர்
உனதருகில் அமர்வதைப் பெரும் பேறாக எண்ணியிருந்தனர்
பச்சோந்திகளை ஒத்தவர்கள்.
தெளிவற்றிருந்து விட்டாய் போதையிலிருப்பவர் போல.
ஓ! பெரும் போதையல்லவா அந்தப் பெருமிதத் திமிர்.
கண்களைச் சற்று மூடி விட்டாய் 

உனது ஆடை ஆபரணங்கள் பறித்தெடுக்கப்பட்டுள்ளன
உனது தலைமேல் தெரிந்த ஒளிவட்டம் நீங்கியுள்ளது
உனது வார்த்தைகள் புலம்பல்களாக வடிக்கப்படுகின்றன
இங்கே  ‘நீ’ வெறும் சுட்டெழுத்தாகி நிற்கிறாய் 

என் செய்வேன்?
தனிமையுற்றிருக்கும் உனதிந்தக் கொடு காலம் 
என்னையும் வருத்துகின்றது.
ஆனாலும் 
திருத்தப்பட முடியாதபடி
காலம் காத்திருக்காமல் கடந்திருக்கிறது.

வி. அல்விற்.

02.12.2015.