செவ்வாய், 21 மே, 2013

அந்த நாள்

மீண்டு வரும் இந்த நாளில் 
நம்பிக்கைகளும் பிடிப்புக்களும் 
உதிர்ந்து முடிந்தன 
தண்ணீர் காணா பாலை நிலமாயிற்று
வெறு வெளியில் 
ஈரமில்லா மனிதர்கள் 
தடிப்பான கால்களால் மிதித்து 
தமக்குள் மகிழ்ந்து கொண்டனர் 
ஆகாய வெளியெங்கும்
மோதி எழுந்த குரல்கள்
எந்தச் செவிப்பறையையும்
சென்றடையவேயில்லை
எழுதப்பட்ட மனித உரிமைச் சாசனங்கள்
மூடியபடியே கிடந்தன
உரிமைகளும் சுதந்திரமும்
வாழ்வும் வளமும்
பலமுள்ளவனுக்கே யென
கன்னத்திலறைந்து
சொல்லிப் போன நாளிது
நாகரிக உலகின் நிர்வாணம்
பிரபலப் படுத்தப்பட்ட நாளிது

வி.அல்விற்.

திங்கள், 13 மே, 2013

ஏரிதழல்


எரிதழலில் வெந்து அழிந்த 
எரியாக் கனவுத் தேசம் 
எத்தனை முகம் கொண்டு
பகுத்தின்று எறிந்திட்டதே 
அத்தனையும் சிரம் கொளாது 
பித்தராய்ப் பிதற்றுகின்றதே

குற்ற மெங்கணும் காணில் 
சுற்றமது போய்விடுமே 
பத்தோடு பதினொன்றாய் 
வீழ்வதில் என்ன பலன் 
பற்றோடு ஏற்றம் பெற 
பெற்றிடுவீர் பெரு வீச்சம் 

பட்ட மரமாச்சே பூமி 
பட்டினியில் அழுந்துகிறதே
கத்து கடல் நந்தவனம் 
கத்திப் பரிதவிக்கிறதே
விட்டகலாக் காட்சிகளே 
வெஞ்சினத்தின் வேராயிற்றே  

சித்தமெலாம் கலங்கி மீதி 
செத்தவராய் திரிகின் றனரே 
புத்தன் வந்து புத்தி சொல்லுவனோ 
பெற்றவர் தொலைத்ததை 
பெற்றுக் கொடுப்பானோ 
பற்றும் வளைக்கரம் காத்திடுவானோ 

எத்தகை பாவம் செய்த தென் மண் 
இத்தனை உடலம் வீழ்வதற்கு
மந்தையாய் போகாதீர் மாண்புடையீர்  
எந்தையும் தாயும் சேர்ந்த நம்மண் 
சிந்தை தெளிவோடு கூர்வன செய்வீர் 
மெத்தனம் பண்ணாது வித்தகம் செய்வீர் 

புதன், 1 மே, 2013

உழைப்புக்குத் தலை சாய்த்தல்


தேநீருக்குள் கண்ணீர்


ஒளி


உயர் வலயம்


நம்பிக்கை


எதிர்காலம்?

மடி வந்த நாள் முதல் 
இடைவிடாக் கனவுகள் 
கொடியாய் தொடர்ந்திடும் நலம் நாடி 
பிடி விரலுள் ஓடும் நம்பிக்கையில் 
பிடிபடும் வாழ்வில் வெற்றிக்கனி 
தொடு வானம் எட்டிடும் புகழொடு 
வலம் வரும் வீறு நடை காண 
உடலுருக்கி அகமுருக்கி
வாரியிறைத்து மகிழ்வித்து 
கூடவே மந்திரியாய் 
ஆக்கம் விளை சொல் கொடுத்து
பாதை போட்டும்
விடை தெரியாக் கேள்வியே
பல அன்னையர் முன்
பயமுறுத்தி நிற்கின்றது