வெள்ளி, 11 செப்டம்பர், 2015

சுற்றம் சூழவந்து வாழ்த்தி.........

இப்பதிவானது "யாரையோ தனிப்பட மனமிருத்தி வரையப்படுகிறது" என்ற எண்ணத்தை (அப்படி வந்தால்) தூக்கியெறிந்து விட்டுப் படித்து முடித்துக் கருத்திடும்படி பணிவாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சுற்றம் சூழ வந்து வாழ்த்தி..........

முன்பெல்லாம்  எங்களூர்களில் "திருமண விழா" என்றாலே சில மாதங்களுக்கு முன்னாலிருந்தே திருமண வீடும், சுற்றங்களும் கலகலக்கத் தொடங்கி விடும். மறந்து போன உறவுகளும், நேரிலே சென்று அழைப்பு விடுக்காத உறவுகளும் உரிமையாகச் சண்டை போட்டுக் கொண்ட காலம் அது. ஊரே கூடி நின்று பலகாரங்கள் சமையல்கள் செய்தும், களைக்காமல் விடிய விடியக் கதை பேசி மகிழ்ந்திருந்த காலம் அது.
அவற்றையெல்லாம் இப்போது எதிர்பார்க்க முடியாது இயந்திரமயமாகிப் போன இந்தக் காலத்தில். மிக இலகுவாக "இப்படியெல்லாம் நடந்தது" என்று மட்டுமே நமது குழந்தைகளுக்குச் சொன்னால்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. 
இது இன்றைய இளைஞர்களின் கனவுகளுடனான காலம். பெற்றோர் கலந்து நடாத்தும்  திருமணமாயினும் சரி, காதல் திருமணமாயினும் சரி, அங்கே திருமணப் பெண்ணும் ஆணுமே திருமண நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களாக ஆகி விடுகிறார்கள். அவர்களுடைய  இந்தியச் சினிமாக்களின் பாதிப்புக்களுடனான கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும், அதன் வழியான வெளிப்பாடுகளின்  மகிழ்ச்சிக்கும் பெரியவர்கள் தடையாக இருத்தல் இயலாததாகி விடுகிறது. ஏனென்றால் அன்றைய தினமானது அவர்களது வாழ்வின் மிகமுக்கிய தினமாகும். அத்தினத்தை முடிந்தளவு உச்ச திறனுடன்  மகிழ்வான விழாவாக ஆக்க முயற்சி செய்கிறார்கள் இக்கால இளைஞர்கள் என்பதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பல திருமண நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. 
மணமக்களை "ஆடம்பர மகழுந்தில் ஏற்றி வருதல்",  "குழு நடனங்களுடன் வரவேற்றல்",   "பல்லக்கில் ஏற்றிவருதல்", மணமக்களே "ஆடியபடி மண்டபத்தினுள் நுழைதல்" என்று இப்படி இன்னும் பலவற்றைத் திட்டமிட்டு தங்களைத் தாங்களே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள காலமெடுத்துக் கொள்ளுகின்றார்கள். இவற்றை விட இப்பொழுது அதிகமாக இரவு நேரக் கொண்டாட்டத்துக்காக மண்டபங்களை எடுத்து விழா நேரத்தை விடியும்வரை நீடிப்பது என்பது புதிதாகத் தொடங்கியிருக்கிற ஒரு விடயம்.
இவை எவற்றிலுமே திருமண விழாவுக்குச் செல்பவர்கள் குறை கூற முடியாது. ஏனென்றால் இது அவர்களுக்கான சிறப்பான நாள்.

ஆனால் சில விடயங்களைக் கவனத்தில் கொள்ளுவது பயன்தரும் என்று நினைக்கிறேன். 

ஒரு திருமணத்துக்கு செல்வது என்பது தனியே போய் சாப்பிட்டு விட்டு 'மொய்' எழுதி விட்டு வருவதற்காக மட்டுமல்ல. அங்கே செல்வதன் முக்கிய நோக்கம் "மணமக்களை வாழ்த்தி" வருதலே. இந்த வாழ்த்துதல் என்பது தற்போது மணவீட்டார் செய்யும் மேற்படி கூறிய 'மீச்சிறப்புக்களால்' செய்ய முடியாமலேயே போய் விடுகிறது. சில திருமணங்களில் மணமகனுக்கும் மணமகளுக்கும் தமது திருமணத்துக்கு யார் வந்தார்கள் என்று கூடத் தெரியாமல் போய் விடுகிறது. ஏனென்றால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நிற்க முடியாதவர்கள் மணமக்களின் பெற்றோரின் கைகளிலேயே பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டுத் திரும்புகின்றனர். 
ஒரு சில இடங்களில் 'உண்டியல்' போன்ற ஒன்றை வைத்து பணத்தை அதனுள் போட்டுச் செல்லுமாறும் கேட்கப்பட்டிருப்பதை அறிகிறோம். 
இதை விட, உணவுகளை உறவுகளே நின்று கவனித்துப் பரிமாறிய இடத்தில், இப்போது எங்கு பார்த்தாலும் உணவுப் பரிமாறல்களையும் பணத்தைக் கொடுத்துச் செய்விப்பதால் ஏதோ ஒரு கடைக்குள் இருந்து சாப்பிடும் உணர்வையும் தவிர்க்க முடியாது போகிறது.
ஆக, " குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்தி ஏகுமாறு அழைக்கிறோம்" என்ற திருமண அழைப்பிதழுக்கும், அதை நினைத்து வாழ்த்த வந்தவர்களுக்கும் தொடர்பில்லாத தூரத்தில் நின்று விட்டே பலர் பல விமரிசனங்களுடன் வீடு திரும்புவதை அவதானிக்க முடிகிறது. 
திருமணம் என்பது சுற்றம் கூடி மனமார நல்வாழ்த்துக்கள் கூற, வார்த்தைகளால் அன்பையும் உறவுகளையும் உறுதிப்படுத்தும் நிகழ்வாக இருந்து வந்தது ஒரு காலத்தில்.
இன்றைக்கு, கால மாற்றத்தால் இது வெறும் இளைஞர்களின் கொண்டாட்ட நிகழ்வாக மட்டுமே மாறி விடுமோ என்ற ஐயம் தோன்றுகிறது.

வி. அல்விற்.

11.09.2015.

புதன், 9 செப்டம்பர், 2015

என் பிரிய சிசுவே!

கழுவித் துடைத்த வானம் போல
தெளிவாயிருந்தது உன் வரவு
வானவில்லின் வண்ணக் கோலத்தையும்
வாண வேடிக்கையின் அட்டகாசத்தையும்
சுமந்திருந்ததாக எண்ணியிருந்தேன் 
எதுவோ வந்து 
குலைத்துப் போட்டிருக்கிறது
உன் அழகனைத்தையும்

வெடிச்சரங்களை கொழுத்திப் போட்டுள்ளாய்
என் தலைக்குள் 
அவற்றின் ஒவ்வொரு சிதறல்களிலும்
தினமும் கருகிக் கொண்டிருக்கிறேன் 

சரியானவை என்றெண்ணியவை
கேள்விகளாகி உருக் கொண்டாடுகின்றன
சரிகளை வரையறுப்பதும்
பிழைகளை முறைப்படுத்துவதும் எது?

காலம் சரிவதற்குள் 
முறைப்படுத்திவிட நினைக்கிறேன் 

பிரியமான என் சிசுவே!

உன்னை கைகளில் மீண்டும் தாங்கி
உன் பேரழகை மீட்டுவிட வேண்டும் 

சுயநலமுள்ள ஓர் அன்னையாக
சுயநலமுள்ள ஒரு குழந்தையாக
நீயும் நானும் மீளப் பிறந்திட வேண்டும்.


வி. அல்விற்.

விடுவதாயில்லை.

நனைத்துச் சுமக்க வேண்டாமென
நினைத்து மனம் வேண்டியும்
பாரமழுத்தி பாதம் வைக்க
காலைச்சுற்றியே 
பாம்பு படமெடுக்க முனைகிறது
விடுவதாயில்லை நானும் 
வாழ்வின் 
விடம் முறித்து வாழாமல்.


11.08.2015.
இரவுத்தூக்கத்தை விற்று
பகற்பொழுதைக் கையில் 
வாங்கியாயிற்று

ஒளியெறியும் மகிழ்வு 
பெருக்க
தனிமையில் காத்திருப்பதான
உணர்வு 

ஆனாலும்,

பகலும் இரவாகிறது

இப்போதெல்லாம்.

வி. அல்விற்.

மனம்.

மனம்.

தொலைந்து போயுள்ளது மனம் 
நெடுங்காட்டு உள்வழியில்
அலைகிறது விழிகள் சுழன்று
ஆதரவொன்று தேடுவதாய்

எங்கே தொலைந்தது?
எப்படித் தொலைந்தது?

தெரியவில்லை

பிரளயங்களின் சுழற்சியில்
தனிமையின் பயமூட்டலில்
கனவுகளின் கொடுமையில்
எனக்கே தெரியாமல் 
நழுவியிருக்கிறது மனம்

ஆறாயின் ஓடிக் கலந்து விடும் 
இங்கே
குளமாகி நிற்கிறது.

வி. அல்விற்.

04.09.2015.

அரங்கேற்றம்.

அரங்கேற்றம்.

ஐரோப்பிய நாடுகளில் கலை வளர்க்க ஆர்வம் கொண்டு பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடும் பெற்றோர் அதிகமுண்டு. பள்ளிப்படிப்பு, விளையாட்டுக்கள், தமிழ்ப் பாடசாலை, கலை என்று  பிள்ளைகளும் ஆர்வத்துடன் தான் ஓடி ஓடிக் கற்றுக்கொள்ளுகிறார்கள். இதனைத்தவறு என்று சொல்ல முடியாது. நாங்கள் மட்டுமல்ல, ஐரோப்பியர்களும் இந்த மாதிரியான ஓய்வு நேர கலை அல்லது பொழுது போக்கு விடயங்களைப் பின்பற்றுவதுண்டு விருப்படிப்படையில். ஆனால் இரட்டைக் கலாச்சாரப் பின்னணிக்குள் இருக்கும் நமக்கு இவை கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.
கலையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலப் படிப்பின், கற்பவரின் திறனை மதிப்பிடும் ஆசிரியர், தனது    இத்தனை காலக் கற்பித்தலில், கற்றவர் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்துள்ளார் என்று உரைக்க, அந்நேரம் எழுகிறது 'அரங்கேற்றம்' எனும் (குறிப்பாக நடனத்துக்கு) நிகழ்வுக்கான ஆரம்பம்.
மறுக்க முடியாத பல உண்மைகளை இது தாங்கி நிற்கிறது. மிகுந்த கற்பனைகளையும், போட்டிகளையும், தாங்க முடியாத வீண் செலவுகளையும் இந்த அரங்கேற்றங்களில் காணலாம்.
சரி, இவை அனைத்தையும் ஏற்றுச் செய்கிறோமே, கற்றுக்கொண்டவர் ஏதாவது தான் கற்றதைப் பயன் படுத்துகிறாரா? என்றால் அதுவும் கேள்விக் குறியே. மிகச் சிலரே பயன் கொடுக்கிறார்கள்.கும

அப்படியாயின் இத்தனை ஆடம்பரங்களும் செலவுகளும் ஏன்?

அண்மையில் நோர்வேயில் ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களது மகளின் நடன அரங்கேற்ற நிழற்படத் தொகுப்பைக் காட்டினார்கள். அழகாகவும் பார்க்க மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆறு மாணவிகளை ஒரே மேடையில் அரங்கேற்றியிருக்கும் அவர்களுடயை ஆசிரியையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒத்துழைத்த பெற்றோரும்  மாணவிகளும் பாராட்டுக்குரியவர்களே!

இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால் என்ன? செலவு குறைவு என்பது மட்டுமல்ல, இது ஒரு கூட்டு முயற்சிக்கும் எடுத்துக்காட்டாகும்.
ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் இது பற்றி சிந்திக்க வேண்டும்.