செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

அம்மா


உன் வலிகளில் என்னுயிர் கொடுத்தவளே!
என்னுயிர் பின் நீ பறிக்கினும்
மீண்டும் உன்சேயாய்ப் பிறந்து 
சமூகப் பழிக் கடன் தீர்த்து 
உன் சிரிப்பில் மகிழ்வேன்!

புதன், 20 பிப்ரவரி, 2013

எழுவோம்

மீண்டும் புண்படுவது நாமே 
எதுவுமே எங்களுக்காய் 
இயங்காமல் நின்றதில்லை
எழுதப்படாத சட்டங்கள் 
அமுல்படுத்தப்படுகின்றன 
நீதி கண்களைக் கட்டிக் கொண்டு 
வாளாதிருக்கின்றது
ஈரமில்லா வியாபாரிகளிடம் 
நியாயம் கேட்கின்றோம் 
கூக்குரல்கள் யாரையும் 
சலனப்படுத்தவில்லை
உணர்வுகள் இல்லா உலகம்
கடந்து போகப் பார்க்கிறது
புரட்டிப் போடும் மாற்றம்
எங்கிருந்து வரும்
எப்படி வரும்
ஒன்றாய் ஆயிரமாய் இலட்சமாய்
பலமாய்ப் பெருகின்
சத்தியம் சாத்தியமே
வீழ்ந்து கிடக்கிறோம்
வட்டம் போட்டு ஆணியடித்து
உட்கார்ந்து இருக்கிறோம்
அதற்குள் தனித்தனியாய்
சம்பந்தமில்லா மனிதர்களாய்
பழி வாங்குகின்றோம்
எங்களை நாங்களே
துக்க விசாரிப்புகளுடன்
நாமும் கடந்து போகப் பார்க்கிறோம் 

அவர்களைப் போல...









தவறு

பாலுக்கழுத பிள்ளைக்கு முலைகொடுத்த உமையாள்
இங்கு இற ங்கி வர வேண்டும்உயிர் கொடுக்க
பாற்கடல் கண்ணன் சேர்ந்து வர வேண்டும்
ஓர் இறுதிக் குரல் கேட்டு 
கொடும் வதை தடுக்க 
திரௌபதி அலறலுக்கு செவிமடுத்த கிருஷ்ணன் 
இறங்கி வந்து புடவையல்ல 
உயிர்க்காற்றளிக்க வேண்டும் 
கேளுங்கள் தரப்படும் என்ற யேசு 
இக்கணம் தன் வாக்கை செயலாற்ற வேண்டும் 
கொல்லாமை புகட்டிய அமைதிப் புத்தர்
இந் நிமிடம் தன் சொல் அமுல்படுத்தி
இவ்வுயிர் காத்திட வேண்டும்
இது எதுவுமே நடை பெறவில்லையே
இவர்களுக்கே உயிர்ப் பெறுமதி தெரியவில்லை
படைப்பின் பொறுப்பாளன்
என்று சொல்லிக் கொள்பவனே
குலைத்துப் போடு உன் படைப்பை
உன் படைப்பில் மனிதன் தவறாயுள்ளான்
பிரித்துப் போடு அனைத்தையும்
முடிந்தால் நீதியும் நியாயமும் உள்ள
ஓர் உலகைப் படைத்துப் போடு

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

இருப்புக்களின் உறுதி!


எவருடைய இருப்புக்கள்

இங்கே உறுதிப்படுத்தப் பட்டுள்ளன

அதீத தாகத்தோடிருக்கும் ஒருவனுக்குக் 

கொடுக்கப்படும் ஒரு மிடறு நீர்போல்

கேள்விகள் விக்கலெடுத்து நிற்கின்றன

பறவையின் பறப்புக்களும் 

மொட்டுக்களின் விரிதலும்

இலைகளின் உதிர்வும்  

யாரிடமும் அனுமதி கேட்கவில்லை 

ஆனால் இயல்பு நிலையில் 

தம் கடன் செய்கின்றன 

இங்கோ இறுக்கப்பட்ட இயலாமைகள் 

உட்கார வைக்கப்பட்டிருக்கின்றன 

வியாபாரம் தவிர்ந்த எதற்கும் அனுமதியின்றி 

இருக்கையொன்று அசைந்தபோது 

அதிலிருந்தொரு துர்நாற்றம் கிளம்பியது 

தூரத்திலிருந்து ஓர் ஒப்பாரிச் சத்தம் 

இந்த ஓலம் நாளை யாருக்கோ 


எதுவுமே கைவசமில்லாததுபோல

எவருடைய இருப்புக்களும் இங்கே 
உறுதிப்படுத்தப்படவில்லை

உறங்குநிலை


இந்த உறங்குநிலை பிடிக்கவில்லை 

ஆமை ஓட்டுக்குள் ஒடுங்கினாற்போல்

மரங்களின் இலையுதிர்கால உதிர்ப்பில் 

வழியெங்கும் இறைந்து கிடக்கும்  

சருகுகளின் சரசரப்பு 

காலடிகளுடன் கடந்து போகின்றது 

தெருவைக் கடக்க தலைதூக்கும்

ஒவ்வொரு தருணமும் 

வெவ்வேறு ஒலிகள் 

அச்சத்துடன் உள்ளிழுக்க வைக்கின்றன 

காற்றில் அலையும் தாள்களை

குழந்தைகள் ஓடிஓடிப் பொறுக்கும் ஒலி 

இரைச்சலாய்க் கேட்கிறது

இக்கணம் நகராது தரித்துள்ளது 

எல்லாமே தாண்டிப் போகின்றன 

உலகைத் தரிசிக்க முடியாது போய் விடுமோ

வெளிவந்து கடந்திடாவிடில் 

கடந்தவை பல தெரியாமலே போய்விடும் 

பின்னர் இலைதுளிர் காலம் வரும் 

தொடர்ந்து வசந்தம் வரும் 

கோடையும் கழிந்து 

மீண்டும் இலையுதிர் காலம் வரும்

அதற்குள் தனியே 

காலடிகள் மட்டுமே  மாறிச் செல்லாது! 

என் ஆத்மா


தெருவைக் கடந்து செல்லும் 
நிர்மலமான இரவில்
நாங்கள்  பிரிந்து போனோம்
நீ சென்ற பாதையை நான் நோக்க 
உனது மென்நீல வானத்தில்  
அள்ளி வீசப்பட்ட நட்சத்திரங்களின் கதிரொளி 
எனது கண்களைக் கூசச் செய்கிறது.

ஆயிரம் விளக்குகள் சேர்ந்து ஒன்றாய்  
சுடர்விட்டு எரிந்து பிரகாசித்து 
தகிக்க வைக்கும் நேரம் 
நட்சத்திரங்களும் ஆத்மாக்களும் 
தமக்குள் ஆழமாக பார்வையை 
மாற்றிக் கொள்ளுகின்றன 

உன் திசை நோக்கி
உன் முடிவிடம் பார்க்க முயற்சிக்கிறேன் 
மேகங்களூடாக இறங்கி என் நினைவாகிறாய் 
மேலிருந்து என் சிந்தைனை ஆகிறாய் 
உன் ஆவியை எனக்குள் சிறை வைத்து 
உன் அதிசயங்களை அதில் வைத்துள்ளாய்!

புதன், 6 பிப்ரவரி, 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை???


சாமத்தியச் சடங்குக் கொண்டாட்டங்களுக்குப் போவது என்றால் கொதித்துக் கொண்டிருப்பான் சிறி. மண்டபங்களில் நடக்கும் எடுப்புக்கள் அவனுக்கு ஆத்திரத்தை மூட்டும். "இந்த மணிரத்தினம் எண்டவன் எப்ப பம்பாய் படமேடுத்தானோ அப்ப பிடிச்சது எங்கட சனத்துக்கு விசர்" என்று தொடங்கி விடுவான். நேரம் பன்னிரண்டு என்று அழைப்பிதழில் போட்டிருந்தது. மனைவி சுமதி பத்தரைக்கே வெளிக்கிடத் தொடங்கினவள், இன்னும் அலங்காரம் முடியவில்லை. எப்பிடியும் சாப்பாடு மூன்று மணிக்குப் பிறகுதான் கொடுக்கப்படும் என்ற பலமான ஊகம் இருந்ததால் லேசாக சாப்பிட்டு விட்டால் நல்லது என்று நினைத்து சாப்பிடத் தொடங்கினான். அவர்கள் போகும் கொண்டாட்டத்துக்கான பிள்ளை வயதுக்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. சிறப்பாகச் செய்வதற்கு காலமெடுத்து இப்போது செய்கிறார்கள். சுமதி இன்னும் சாரிக்கு பொருத்தமாக நகைகளை மாறி மாறிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் விடயம் விளங்கியபடியால் இரண்டுபேரும் தயாராகி பிளேய் ஸ்டேஷன் 3 இல் ஒன்றியிருந்தார்கள். சிறி சாப்பிட்டு முடித்து, மறக்காமல் என்வலப்பில் காசையும் எடுத்து வைக்க நேரம் பன்னிரண்டு நாற்பத்தைந்து என்றது. "என்னப்பா சாமத்திய வீடு இண்டைக்கோ நாளைக்கோ" என்றான். "முடிஞ்சுதப்பா வாறன்" குரல் மட்டும் வந்தது. காத்திருந்து ஒரு மாதிரி ஒன்று பதினைந்துக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு மணிக்குள் மண்டபத்தை அடைந்து விட்டார்கள்.

போய்ச் சேர்ந்த நேரம் பாதியாவது முடிந்திருக்கும் என்று நினைத்து மண்டபத்துக்குள் நுழைந்த சிறிக்கு மனதுக்குள் மீண்டும் மணிரத்தினம் வந்து போனார். குத்துவிளக்குகளுடன் ஏறக்குறைய ஒரே வயதான பிள்ளைகள் ஒரே நிற புடவையுடன் பளபளத்தபடி வரிசையில் காத்திருந்தனர்.வேறு சில பெண்கள் பட்டணிந்து ஆராத்திப் பொருட்களுடன் வரிசை கட்டி நின்றனர்.  கொண்டாட்டத்துக்குரிய பிள்ளையை அலங்காரம் செய்து காருக்குள் வெளியே வைத்திருந்தனர். எதிர்பார்த்தளவு சனம் வந்த பிறகுதான் பிள்ளையைக் கூட்டி வருவினமாம். பிள்ளையின் பெற்றோர் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தனர். மண்டபத்துக்குள் இருந்த சனம் புறுபுறுக்கத் தொடங்கியது காதில் விழுந்ததோ என்னவோ ஒரு மாதிரி இரண்டு முப்பதுக்கு குத்து விளக்குகள் சூழவர பட்டுப் புடவைகள் தொடர்ந்து வர தேவதை மாதிரி கொண்டாட்டத்துக்குரிய பிள்ளையை அழைத்து வந்தனர்.

பிறகு ஆராத்தி, மாலை போடுதல், ஊஞ்சலாட்டுதல் என்று தொடர்ந்து வர படப்பிடிப்பாளர்கள் தமது திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். நிற்க வைத்து, இருக்க வைத்து, சாய வைத்து, நடக்க விட்டு, வளையல்களை ஆட்ட வைத்து, காதணியை ஆட்ட வைத்து, புடவைத் தலைப்பைப் பிடித்து தூக்கி வைத்து இப்படி என்ன எல்லாம் செய்ய முடியுமோ செய்து கொண்டிருந்தார்கள். சிறிக்கு அந்தப் பிள்ளையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவன் மெதுவாக சுமதியிடம் "அந்தப் பிள்ளையைப் பார்க்கப் பாவமாயிருக்கு" என்றான். ஆனால் சுமதியோ " இல்லையப்பா, அந்தப் பிள்ளையின்ர கண்ணைப் பாருங்கோ! இப்ப இந்த உலகத்து அழகி தான் தான் எண்ட ஒரு எண்ணம் தெரியேல்லை? இஞ்ச உள்ள கனக்கப் பிள்ளையள் நல்ல விவரமானதுகள்; இந்த வயதில நாங்கள் இப்பிடி நாட்டில இருக்கேல்லை" என்றாள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூன்றாவது உடுப்பு மாற்றுவதற்காக பிள்ளையை அழைத்துச் சென்றார்கள். அத்தோடு சாப்பாட்டுக்கும் அழைத்தார்கள் . சிறி  நேரத்தைப் பார்த்தான். மூன்று நாற்பத்தைந்தைக் காட்டியது. சாப்பாடு முடிந்த கையோடு கேக் வெட்டி முடிய வரிசையில் நின்று, கொண்டுபோன காசைக் கொடுத்து வெளியில் வரும் வரைக்கும்அந்தப் படப் பிடிப்பாளர் காட்டிய அட்டகாசத்துக்கு அளவே இல்லை. வெளியே வந்ததும் சிறி சொன்னான் "என்ர  பிள்ளையாய் இருந்தால் அவன் இப்பிடி எல்லாம் படமெடுக்க விட மாட்டேன்". சுமதி "நீங்கள் ஏன் இப்ப சும்மா கொதிக்கிறியள்" என்று சிரித்தாள்.

தீரன் வீடு வந்து சேர எட்டு மணிக்கு மேலாகி விட்டது. அன்றைய சாமத்திய வீட்டுக்கு படம் எடுப்பவர்களுக்கு உதவிக்கு என்று  காலை ஏழு மணிக்குப் போனவன் இப்போதுதான் வந்து சேர்ந்துள்ளான். பூனைக் கண்களால் சிரிக்கும் அவனுடைய அழகிய மனைவியும் இரண்டு வயதுப் பெண் குழந்தையும் அவனுக்குக் கிடைத்த பெரிய சொத்துக்கள். மகிழ்வான நிறைவான வாழ்க்கை. முன்பெல்லாம் அவன் வரப் பிந்தினால்  மனைவி தான் தொலைபேசியில் சிணுங்குவாள். இப்போது மகள் கொஞ்சுவாள்.

தீரன் எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் கொண்ட துடிப்பானவன். அவனைப் பார்ப்போருக்கு சில நிமிடங்களிலேயே பிடித்துப் போகும். அவ்வளவு வசீகரம் கொண்டவன். சில மாதங்களுக்குள் யாரிடமிருந்து என்று தெரியாமல் ஒரு  தொலைபேசி அழைப்பு வரத் தொடங்கியது. ஆரம்பத்தில் திட்டித் தீர்த்தான். ஆரெண்டு சொல்லாமல் கரைச்சல் படுத்துதுகள் என்று எரிச்சல்பட்டான். மனைவியோ கபடமில்லாமல் யாரோ மாறி தெரியாமல் அடிக்கினமாக்கும் என்றாள். எடுப்பார்கள். ஹலோ என்றால் துண்டித்து விடுவார்கள். இப்படியே கொஞ்சக் காலம் கடந்தது. பிறகு அமைதியாயிருந்தது கொஞ்சக் காலம். இப்ப அந்த டெலிபோன் வாறேல்லையோ என்றாள்  மனைவி. "இல்லை" என்றான் முகம் திருப்பி.

கொஞ்ச நாட்களில் தீரனின் மனைவியின் சித்தி முறையானவள் வீட்டுக்கு வந்து, "கவனமாயிரு" என்றாள். "என்ன" என்றாள் தீரனின் மனைவி. "ஆரோ ஒரு சின்னப் பெட்டையோட இவன் அடிக்கடி வெளியில திரியிறதைக் கனபேர் கண்டிருக்கினம்" .... ம்ம்.. நான் பாக்கிறன் என்றாள் தீரனின் மனைவி உள்ளுக்குள் உடைந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல். ஏதேன் பிரச்சனை எண்டால் எங்களைக் கூப்பிடு என்றாள் சித்தி. 

தீரனைக் கவனிக்கத் தொடங்கினாள் மனைவி. அவளைத் தவிர ஊரெங்கும் கதை பரவியிருந்தது. அந்தக் குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகிக் கொண்டிருந்தான் தீரன். அந்தக் குடும்பத்துப் பெற்றோர் தம்முடைய மகள் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர். அதை சாதகமாக்கி விளையாடிக் கொண்டிருந்தாள் மகள்.

தீரனின் மனைவி அவனிடம்  நேரிடையாகவே கேட்டு விட்டாள். தலை குனிந்தான் மனைவி முன்னும்  உறவினர் முன்னும். "அந்தப் பிள்ளைதான் சின்னப் பிள்ளை, நீ குடும்பக்காரன் உனக்கு எங்க அறிவு போச்சு" என்றனர் உறவினர். விடையம் சிக்கலாகவே அந்தப் பெண்ணைத் தவிர்க்கத் தொடக்கி விட்டான். ஆனால் அந்தப் பெண் வீட்டுக்கே தொலைபேசியில் தீரனின் மனைவியுடன் பேசினாள். "உனக்கு இப்ப எத்தின வயது பிள்ளை" என்றாள்  தீரனின் மனைவி. "வயதென்ன வயது, லவ் தான் முக்கியம்; நான் தீரனைத்தான் லவ் பண்ணுறன்" என்றாள் அதிரடியாக. தீரனின் மனைவி மேலே பேசாமல் தொலைபேசியை வைத்து விட்டாள்.உறவினர் சிலர்  அடுத்தநாள் காலையில் அந்தப் பெண்ணின் பெற்றோருடன் பேசிப் பார்த்தனர். அடங்காத பெண்ணாயிருந்தாள் அப் பெண். இனி இருப்பது ஒரே தெரிவுதான் என்று எண்ணிக் கொண்டாள் தீரனின் மனைவி. இவ்வளவு காலமும் ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்க வேண்டாம் என்று எண்ணியிருந்தவளுக்கு இனித் தன்  வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிந்தது. 


சுமதி தன்னுடைய கணவன் சிறி எப்போது வேலையால் வருவான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வந்து ஏறியதுமே "இஞ்சரப்பா புதினம் கேட்டியளே!" " நான் இப்பதான் வாறன் புதினம் தெரியுமோ எண்டு கேட்டால் எனக்கென்ன தெரியும்?" என்றான் சிறி. "நானும் இப்பதான் வந்தனான் ; நான் வரேக்கை வழமை மாதிரி தீரன்ர வீட்டடியாலதான் வந்தனான், நாலு பெம்பிளைப் பிள்ளையள் றோட்டில நிண்டு சத்தம் போட்டுக் கொண்டு நிண்டதுகள், நான் நினைச்சன் ஆரோ கறுவல் அடை எண்டு கிட்ட அவையைக் கடக்கேக்குள்ள பாத்தால் எங்கட அந்தத் தமிழ் பிள்ளையும் நிக்குது. நான் விறைச்சுப் போனன். அது சும்மா நிண்டதே! தீரன்ர வீட்டு கேற்றுக்கு முன்னால நிண்டு " ஓம், நான் உன்ர மனுசனைத்தான் கட்டுவன்" எண்டு கத்திக் கொண்டு நிக்கிறாள். அவளுக்கு என்னைக் கண்டது எண்ட ஒரு கூச்சம் கூட இல்லை. கத்தி அட்டகாசம் பண்ணிக் கொண்டு நிக்கிறாள். 

"அண்டைக்கே நான் யோசிச்சனான், சரி விடு எங்களுக்கும் பிள்ளையள்  இருக்குதுகள். ஆனால் நான் ஒண்டு சொல்லுறன் பிழை பிள்ளையளில மட்டும் இல்லை, பாவம் அறியாத வயதில என்ன செய்யிறேன் எண்டு தெரியாமல் தனக்குத் தானே மண்ணை வாரிப் போடுது" என்றான் சிறி.

நான் நானாய்


இன்றைய விடியல் எனக்கு நலமாயிருந்தது 
நேர எழுப்பியின் அலறலில் 
அரக்கப் பறக்க பாதி நித்திரை முறித்ததை 
முறைத்து  தலையில் தட்டி 
அதிகாலையை நான்தான் பிரசவிப்பதுபோல 
யன்னல் திரை விலக்கி கண்களால் 
காலநிலை அளந்து 
அடங்கியிருக்கும் தெரு கிழித்து ஓடி 
பலநிற முகமூடிகளுடன் 
இயல்பாயிருக்க கடினப்படும் 
இயல்பற்ற நிலையிலிருந்து 
இன்று  விடுமுறை
நான் நானாய் 
என் சிந்தனைகளுடன்..... 

சுதந்திரம்


இதுபோல்....
என் வீட்டு முற்றத்தில்
பணக்கார வெளிச்சமில்லா 
சிறு ஒளியில் 
அள்ளித் தெளிக்கப்பட்ட
நட்சத்திரங்களுக்குள் ஒளித்தபடி 
சாம்பல்நிற முகிலாடை போர்த்தி
தேவதையாய் பவனிவரும்
நிலா வொளியில்..
இப்படிக் கதிரை போட்டு 
இரகசிய வார்த்தைகளாலல்ல..  
முற்றத்தில் சஞ்சலமின்றி 
சுற்றியிருந்து அம்மாவின்  
குழையல் சோறு பகிர்ந்துண்டு
யாருமெம்மை சீண்டாமல்  
நேரம் பார்க்காமல் விழித்திருந்து 
மனம் விட்டுச் சிரிக்கும் 
நாளொன் றெனக்கமைந்தால்.....
அன்று
என் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்படும்!

கணக்கு

அன்று....
வீதிக்கு வீதி 
கைப்பையிலிருந்து சப்பாத்து வரை 
அலசல்கள் அதிர்ந்திருந்தது
காணும் கண்களில் 
கனத்திருந்தது பதட்டம் 

பின்னொருநாள் 
எல்லோரும் பிதற்றியிருந்து 
கைபிசைந்த நேரம்
சுழன்ற ஒர் புயலில்
கழன்றன கள்ளத்தனமாய்

பதுங்கின புற்றுக்குள்
வேறொரு நாள் பார்த்து
தன் மீள் வருகைக்காய்
எத்தனை வரவுகள்!!

வரவும் செலவுமாய்
கூட்டிக் கழித்ததில்
மிஞ்சியிருப்பது
மனிதமில்லா நாகரீக உலகின்
வரவு மட்டுமே

இன்றிரவு இருட்டுள்
எதுவுமே நடக்கும்
இன்னொரு செலவாய்ப் போகும்
வழமைபோல் அவர்களுக்கு

இவர்கள் இன்னும்
வரவுக் கணக்கு
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!!









என் ஊருக்கு வழி கேட்டு....

என் ஊருக்கு வழி கேட்டு 
தொலைந்திருக்கிறேன் 
ஒரு பக்கம் வயல் வெளி 
மழைத் தொடர்கள் இன்னொரு புறம் 
மறுபுறம் பரந்திருக்கும் கடல் 
வேறொரு பக்கம் பாலைவனம் 
வாய் பிளந்து பயமுறுத்துகின்றன 
சத்தங்கள் காதடைத்து 
முணுமுணுத்து பின் 
அடங்கியே விட்டது 
எதுவுமே இல்லா தனிமையில்
உடல் விறைத்திருக்க
இடையிடையே ஏதேதோ முனகல்கள்...
பெரிதாய் எழுமாப்போலில்லை
அதைக் கண்டு கொள்ளவும் எவருமில்லை
எதைக் கடந்தால்
எதைக் கொடுத்தாவது
என் ஊர் போய்ச் சேரலாம்
சில பாதைகள் அடைபட்டிருக்குமோ
தடை தாண்ட முடியாது
விலக்க வேண்டும்
கருக்கலுக்குள்
ஊர் போய் சேர வேண்டும்!

சனி, 2 பிப்ரவரி, 2013

காத்திருக்கிறேன்!


குளிர்காலம் கழிக்க
உன் இனம் தழைக்க
வலசம் போன புட்களே
என்போலில்லை நீ 
என்னூர் ஏதுவாயிருக்கும்
என்றுதானே எண்ணிப் போனாய்
நலம் எங்கும் கண்டாயா இல்லை 
நலிந்த என் இனம் பார்த்தாயா 
என்தாயின் கண்ணில் 
என்வருகை கண்டாயா 
என்சகோதரர் இடம் கண்டு 
தலை சாய்த்து மௌனித்தாயா 
சகோதரியர் அலறல் காற்றில் 
கோரமாய் கலந்திருந்தனவா
எத்தனை இருப்பிடங்கள் 
ஆவிகள் நிறைந்து கிடக்கின்றன  
காணாமல் போன சொந்தங்களுக்காய் 
கால்களால் கிளறி 
ஆறுதல் சொன்னாயா
அலைக்கழியும் உறவுகளுக்கு
குளிர்தேசத்தின் தடிப்பான 
போர்வை எடுத்துச் சென்றாயா 
தேவையில்லை என்றிருப்பார்களே
தன்னம்பிக்கையுள்ளவர்கள்
பொங்கலும் முடித்து வருகிறாய்
எத்தனை வீடுகளில் 
எரியவில்லை அடுப்புக்கள் 
ஒவ்வொன்றாய் கவனி
பொய்பேச முடியாது உன்னால்
உடல்  மெலிந்து வருவாய் 
தெரியுமெனக்கு
கண்டதை மட்டும் சொல்!
கசப்பானாலும் கேட்டு
என்னை நானே வருத்துவேன்
என் சொந்தங்களுக்காய் 
கண்டதை மட்டும் சொல்
வசந்தம் அண்மிக்கிறது 
உன்வருகைக்காய் காத்திருக்கிறேன்! 


வெள்ளி, 1 பிப்ரவரி, 2013


கொட்டி முடித்த மழையில்
உடைந்திருந்த பள்ளங்களில்
நிறைந்திருக்கும் மிச்சங்களில்
கால் பதித்து துள்ளி விளையாடி
சேறுபூசிய அழுக்காகிய
காலங்கள் அழியவில்லை
இன்னும் என்னால்
முடியும் அப்படி.....
என்தேசம் வாவென்றென்னைக்
கை நீட்டி
என்வாசல் தந்து
வாடைக் காற்றில் அறையும்
என் அறையன்னலூடாய்
என் கடலை இரசிக்க விடுமானால்..
அதுவரை...
இரவல் தேசத்தின்
இரவல் மழையில்
இழந்தவற்றுடன் இருட்டில்
குடைக்குள் தனியே
நனையாமல் ந(க)டக்கிறேன்!

வி.அல்விற்.
01.02.2013


சலங்கை மணிச் சிதறல் நகை 
மெல்லிசை இளங் காற்றுடன் 
எனைத் தழுவி கடக்க 
எட்டிப் பிடித்ததை 
எனக்குள் வைத்திருக்க
எண்ணித் துணியுமுன் 
உன் இமை மூடித்திறந்து 
ஆணியடித் தறைந் தென்னை
புயலாய் சுழன்றடித்துக் 
கடந்து போகிறாய்

உள்ளத்தை ஊடறுத்துக்
கள்ளத்தனம் செய்கிறாய்
உயிருடன் உறைய விட்டு
உரக்கச் சிரிக்கிறாய்
எதிலுமில்லை அசைவு என்போல்
என் னிதயத் துடிப்பு
உன் காதில் தூது வந்தும்
தூரத்தி லின்னும் கண் சிமிட்டுகிறாய்
கை கொடுத்துத் தூக்கிவிடு
எனக்காக வல்ல
உலகம் இயங்குவதற்காய்!

வி. அல்விற்.
31.01.2013.