புதன், 6 பிப்ரவரி, 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை???


சாமத்தியச் சடங்குக் கொண்டாட்டங்களுக்குப் போவது என்றால் கொதித்துக் கொண்டிருப்பான் சிறி. மண்டபங்களில் நடக்கும் எடுப்புக்கள் அவனுக்கு ஆத்திரத்தை மூட்டும். "இந்த மணிரத்தினம் எண்டவன் எப்ப பம்பாய் படமேடுத்தானோ அப்ப பிடிச்சது எங்கட சனத்துக்கு விசர்" என்று தொடங்கி விடுவான். நேரம் பன்னிரண்டு என்று அழைப்பிதழில் போட்டிருந்தது. மனைவி சுமதி பத்தரைக்கே வெளிக்கிடத் தொடங்கினவள், இன்னும் அலங்காரம் முடியவில்லை. எப்பிடியும் சாப்பாடு மூன்று மணிக்குப் பிறகுதான் கொடுக்கப்படும் என்ற பலமான ஊகம் இருந்ததால் லேசாக சாப்பிட்டு விட்டால் நல்லது என்று நினைத்து சாப்பிடத் தொடங்கினான். அவர்கள் போகும் கொண்டாட்டத்துக்கான பிள்ளை வயதுக்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. சிறப்பாகச் செய்வதற்கு காலமெடுத்து இப்போது செய்கிறார்கள். சுமதி இன்னும் சாரிக்கு பொருத்தமாக நகைகளை மாறி மாறிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் விடயம் விளங்கியபடியால் இரண்டுபேரும் தயாராகி பிளேய் ஸ்டேஷன் 3 இல் ஒன்றியிருந்தார்கள். சிறி சாப்பிட்டு முடித்து, மறக்காமல் என்வலப்பில் காசையும் எடுத்து வைக்க நேரம் பன்னிரண்டு நாற்பத்தைந்து என்றது. "என்னப்பா சாமத்திய வீடு இண்டைக்கோ நாளைக்கோ" என்றான். "முடிஞ்சுதப்பா வாறன்" குரல் மட்டும் வந்தது. காத்திருந்து ஒரு மாதிரி ஒன்று பதினைந்துக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு மணிக்குள் மண்டபத்தை அடைந்து விட்டார்கள்.

போய்ச் சேர்ந்த நேரம் பாதியாவது முடிந்திருக்கும் என்று நினைத்து மண்டபத்துக்குள் நுழைந்த சிறிக்கு மனதுக்குள் மீண்டும் மணிரத்தினம் வந்து போனார். குத்துவிளக்குகளுடன் ஏறக்குறைய ஒரே வயதான பிள்ளைகள் ஒரே நிற புடவையுடன் பளபளத்தபடி வரிசையில் காத்திருந்தனர்.வேறு சில பெண்கள் பட்டணிந்து ஆராத்திப் பொருட்களுடன் வரிசை கட்டி நின்றனர்.  கொண்டாட்டத்துக்குரிய பிள்ளையை அலங்காரம் செய்து காருக்குள் வெளியே வைத்திருந்தனர். எதிர்பார்த்தளவு சனம் வந்த பிறகுதான் பிள்ளையைக் கூட்டி வருவினமாம். பிள்ளையின் பெற்றோர் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தனர். மண்டபத்துக்குள் இருந்த சனம் புறுபுறுக்கத் தொடங்கியது காதில் விழுந்ததோ என்னவோ ஒரு மாதிரி இரண்டு முப்பதுக்கு குத்து விளக்குகள் சூழவர பட்டுப் புடவைகள் தொடர்ந்து வர தேவதை மாதிரி கொண்டாட்டத்துக்குரிய பிள்ளையை அழைத்து வந்தனர்.

பிறகு ஆராத்தி, மாலை போடுதல், ஊஞ்சலாட்டுதல் என்று தொடர்ந்து வர படப்பிடிப்பாளர்கள் தமது திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். நிற்க வைத்து, இருக்க வைத்து, சாய வைத்து, நடக்க விட்டு, வளையல்களை ஆட்ட வைத்து, காதணியை ஆட்ட வைத்து, புடவைத் தலைப்பைப் பிடித்து தூக்கி வைத்து இப்படி என்ன எல்லாம் செய்ய முடியுமோ செய்து கொண்டிருந்தார்கள். சிறிக்கு அந்தப் பிள்ளையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவன் மெதுவாக சுமதியிடம் "அந்தப் பிள்ளையைப் பார்க்கப் பாவமாயிருக்கு" என்றான். ஆனால் சுமதியோ " இல்லையப்பா, அந்தப் பிள்ளையின்ர கண்ணைப் பாருங்கோ! இப்ப இந்த உலகத்து அழகி தான் தான் எண்ட ஒரு எண்ணம் தெரியேல்லை? இஞ்ச உள்ள கனக்கப் பிள்ளையள் நல்ல விவரமானதுகள்; இந்த வயதில நாங்கள் இப்பிடி நாட்டில இருக்கேல்லை" என்றாள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூன்றாவது உடுப்பு மாற்றுவதற்காக பிள்ளையை அழைத்துச் சென்றார்கள். அத்தோடு சாப்பாட்டுக்கும் அழைத்தார்கள் . சிறி  நேரத்தைப் பார்த்தான். மூன்று நாற்பத்தைந்தைக் காட்டியது. சாப்பாடு முடிந்த கையோடு கேக் வெட்டி முடிய வரிசையில் நின்று, கொண்டுபோன காசைக் கொடுத்து வெளியில் வரும் வரைக்கும்அந்தப் படப் பிடிப்பாளர் காட்டிய அட்டகாசத்துக்கு அளவே இல்லை. வெளியே வந்ததும் சிறி சொன்னான் "என்ர  பிள்ளையாய் இருந்தால் அவன் இப்பிடி எல்லாம் படமெடுக்க விட மாட்டேன்". சுமதி "நீங்கள் ஏன் இப்ப சும்மா கொதிக்கிறியள்" என்று சிரித்தாள்.

தீரன் வீடு வந்து சேர எட்டு மணிக்கு மேலாகி விட்டது. அன்றைய சாமத்திய வீட்டுக்கு படம் எடுப்பவர்களுக்கு உதவிக்கு என்று  காலை ஏழு மணிக்குப் போனவன் இப்போதுதான் வந்து சேர்ந்துள்ளான். பூனைக் கண்களால் சிரிக்கும் அவனுடைய அழகிய மனைவியும் இரண்டு வயதுப் பெண் குழந்தையும் அவனுக்குக் கிடைத்த பெரிய சொத்துக்கள். மகிழ்வான நிறைவான வாழ்க்கை. முன்பெல்லாம் அவன் வரப் பிந்தினால்  மனைவி தான் தொலைபேசியில் சிணுங்குவாள். இப்போது மகள் கொஞ்சுவாள்.

தீரன் எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் கொண்ட துடிப்பானவன். அவனைப் பார்ப்போருக்கு சில நிமிடங்களிலேயே பிடித்துப் போகும். அவ்வளவு வசீகரம் கொண்டவன். சில மாதங்களுக்குள் யாரிடமிருந்து என்று தெரியாமல் ஒரு  தொலைபேசி அழைப்பு வரத் தொடங்கியது. ஆரம்பத்தில் திட்டித் தீர்த்தான். ஆரெண்டு சொல்லாமல் கரைச்சல் படுத்துதுகள் என்று எரிச்சல்பட்டான். மனைவியோ கபடமில்லாமல் யாரோ மாறி தெரியாமல் அடிக்கினமாக்கும் என்றாள். எடுப்பார்கள். ஹலோ என்றால் துண்டித்து விடுவார்கள். இப்படியே கொஞ்சக் காலம் கடந்தது. பிறகு அமைதியாயிருந்தது கொஞ்சக் காலம். இப்ப அந்த டெலிபோன் வாறேல்லையோ என்றாள்  மனைவி. "இல்லை" என்றான் முகம் திருப்பி.

கொஞ்ச நாட்களில் தீரனின் மனைவியின் சித்தி முறையானவள் வீட்டுக்கு வந்து, "கவனமாயிரு" என்றாள். "என்ன" என்றாள் தீரனின் மனைவி. "ஆரோ ஒரு சின்னப் பெட்டையோட இவன் அடிக்கடி வெளியில திரியிறதைக் கனபேர் கண்டிருக்கினம்" .... ம்ம்.. நான் பாக்கிறன் என்றாள் தீரனின் மனைவி உள்ளுக்குள் உடைந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல். ஏதேன் பிரச்சனை எண்டால் எங்களைக் கூப்பிடு என்றாள் சித்தி. 

தீரனைக் கவனிக்கத் தொடங்கினாள் மனைவி. அவளைத் தவிர ஊரெங்கும் கதை பரவியிருந்தது. அந்தக் குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகிக் கொண்டிருந்தான் தீரன். அந்தக் குடும்பத்துப் பெற்றோர் தம்முடைய மகள் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர். அதை சாதகமாக்கி விளையாடிக் கொண்டிருந்தாள் மகள்.

தீரனின் மனைவி அவனிடம்  நேரிடையாகவே கேட்டு விட்டாள். தலை குனிந்தான் மனைவி முன்னும்  உறவினர் முன்னும். "அந்தப் பிள்ளைதான் சின்னப் பிள்ளை, நீ குடும்பக்காரன் உனக்கு எங்க அறிவு போச்சு" என்றனர் உறவினர். விடையம் சிக்கலாகவே அந்தப் பெண்ணைத் தவிர்க்கத் தொடக்கி விட்டான். ஆனால் அந்தப் பெண் வீட்டுக்கே தொலைபேசியில் தீரனின் மனைவியுடன் பேசினாள். "உனக்கு இப்ப எத்தின வயது பிள்ளை" என்றாள்  தீரனின் மனைவி. "வயதென்ன வயது, லவ் தான் முக்கியம்; நான் தீரனைத்தான் லவ் பண்ணுறன்" என்றாள் அதிரடியாக. தீரனின் மனைவி மேலே பேசாமல் தொலைபேசியை வைத்து விட்டாள்.உறவினர் சிலர்  அடுத்தநாள் காலையில் அந்தப் பெண்ணின் பெற்றோருடன் பேசிப் பார்த்தனர். அடங்காத பெண்ணாயிருந்தாள் அப் பெண். இனி இருப்பது ஒரே தெரிவுதான் என்று எண்ணிக் கொண்டாள் தீரனின் மனைவி. இவ்வளவு காலமும் ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்க வேண்டாம் என்று எண்ணியிருந்தவளுக்கு இனித் தன்  வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிந்தது. 


சுமதி தன்னுடைய கணவன் சிறி எப்போது வேலையால் வருவான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வந்து ஏறியதுமே "இஞ்சரப்பா புதினம் கேட்டியளே!" " நான் இப்பதான் வாறன் புதினம் தெரியுமோ எண்டு கேட்டால் எனக்கென்ன தெரியும்?" என்றான் சிறி. "நானும் இப்பதான் வந்தனான் ; நான் வரேக்கை வழமை மாதிரி தீரன்ர வீட்டடியாலதான் வந்தனான், நாலு பெம்பிளைப் பிள்ளையள் றோட்டில நிண்டு சத்தம் போட்டுக் கொண்டு நிண்டதுகள், நான் நினைச்சன் ஆரோ கறுவல் அடை எண்டு கிட்ட அவையைக் கடக்கேக்குள்ள பாத்தால் எங்கட அந்தத் தமிழ் பிள்ளையும் நிக்குது. நான் விறைச்சுப் போனன். அது சும்மா நிண்டதே! தீரன்ர வீட்டு கேற்றுக்கு முன்னால நிண்டு " ஓம், நான் உன்ர மனுசனைத்தான் கட்டுவன்" எண்டு கத்திக் கொண்டு நிக்கிறாள். அவளுக்கு என்னைக் கண்டது எண்ட ஒரு கூச்சம் கூட இல்லை. கத்தி அட்டகாசம் பண்ணிக் கொண்டு நிக்கிறாள். 

"அண்டைக்கே நான் யோசிச்சனான், சரி விடு எங்களுக்கும் பிள்ளையள்  இருக்குதுகள். ஆனால் நான் ஒண்டு சொல்லுறன் பிழை பிள்ளையளில மட்டும் இல்லை, பாவம் அறியாத வயதில என்ன செய்யிறேன் எண்டு தெரியாமல் தனக்குத் தானே மண்ணை வாரிப் போடுது" என்றான் சிறி.

1 கருத்து:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

வாழ்க்கையில் அடுத்தவர்கள் நரகம் என்றார் சார்த்ர்...