புதன், 22 ஜூலை, 2015

உள்ளே..

உள்ளே...

நான் ஒரு செக்குமாடு
நான் ஒரு வேட்டை நாய் 
நான் ஒரு கூண்டுப்பறவை
நான் ஒரு பந்தயக் குதிரை

என்னை நானாக
கண்டு கொள்ளாத உலகம் 
விந்தையாக இருக்கிறது

வேதனை மூட்டைகளுடன்
நான் என்னும் உடலம்
நடமாடுவதை
புரிந்து கொள்ள
இங்கே யாருமில்லை

பாலைவனத்தில் தாகத்தோடு
நான் உலா வருவதை
நோக்குவார் எவருமில்லை

பொருளுலகம் தனக்குள் 
சுழன்று கொண்டிருக்கிறது
முதலாமிடத்தைப் பெற

என்னைப் பொம்மையாகச்
சுழல விட்டு
தங்களை அழகாக
நோக்க வைக்க
நான் முடுக்கி
விடப்பட்டுள்ளேன்

வியாபாரக் கல்விக்
காட்சியறையில்.

வி. அல்விற்.

19.07.2015.

பயம்.

ஆழிக்குள் அமிழ்ந்த நிலையில் 
தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் 

குரலை உயர்த்துகின்றேன்
எனது குரலை அறிந்து கொள்ளுவது
எனக்கே கடினமாயுள்ளது

உப்பு நீர் உள்ளே போய்க்கொண்டே
இருக்கிறது
நான் விரும்பாமலேயே

எனக்கு நீச்சல் தெரியும் 
ஆனாலும் 
இக்கணம் அது மறந்து போய் விட்டது

உடல் மேலெழுந்து
பிராண வாயு தரும்படி
யாரையோ கெஞ்சுகிறது
கேட்க யாருமேயில்ல

பற்றிக் கொள்ள
துருப்பைத் தேடுகிறது
ஆனாலும் அதற்கான வலு
என்னிடமில்லை

எனது முடிவிடம் 
இதுவாயிருக்க எனக்கு விருப்பில்லை
அகால மரணங்கள்
கண்களில் தெரிகின்றன
குறுக்கும் நெடுக்குமாக
வேண்டாத நினைவுகள் 
இப்போது மட்டுமேன்?

மீண்டுவர
உயிர் துடிக்கிறது உணர்வுகளுடன்

இப்போது 
கைகளை  உயர்த்த வேண்டும் 
என்பதும் 
மறந்து போயிற்று

கீழே! கீழே!
இன்னும் கீழே!

என்னை 
உள்ளே இழுத்து அழுத்துகிறது

பயம்.

வி. அல்விற்.
22.07.2015.


இது திரு. முல்லை அமுதனின் "இலக்கியப்பூக்கள்" வானொலி நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டது. மிக்க நன்றி திரு. முல்லை அமுதன் அவர்களுக்கு.

வெள்ளி, 17 ஜூலை, 2015

மொட்டவிழ.

கட்டிக் கரும்பேயென
கன்னமிட்டவனே
கண்ணின் மணியேயென
கன்னம் சேர்த்தவனே
கண்ணில் காணாமல் 
கலைந்து போனதேன்
கட்டுண்டு கிடக்கிறாள் இவள் 
கனவிலேனும் மொட்டவிழ.

வி. அல்விற்.

17.07.2015.

விந்தை பெருகுதடி.

செம்மை படர்ந்தோடிய
சின்ன விரல்களோ 
இல்லை
செக்கச் சிவந்த 
கன்னச் செழிப்போ! 
சென்று திரும்பியுன்
செவ்வண்ணம் நோக்க
சிந்தை குளிருதடி
விந்தை பெருகுதடி!

வி. அல்விற்.

16.07.2015.
மெச்சும் அழகினில் 
மேனி குளிர்ந்திருக்க
மெத்தை போலொரு
மொட்டை அவிழ்த்து 
மெத்தென காற்றினில்
மோகித்து நின்றாயே!

 வி. அல்விற்.

15.07.2015.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

ஓற்றையிலே!

ஒற்றையடிப் பாதையிலே
ஓரக்கண் பார்வையுடன் 
ஒதுங்கி நின்றனையோ
ஓர் வரவையெதிர் பார்த்து.
:)


வி.அல்விற்.

நாணமோ?

கொள்ளையழகே குவிந்திருக்க
கிள்ளியெடுக்க கடுகியோடி வர
கள்ளச் சிரிப்போடி கன்னச் சிவப்பாகி
காண வகையின்றி நாணி நின்றனையோ


வி. அல்விற்.

இதழ்விரித்து..

எத்தனை நாளோ தனை மறந்து
பித்தமே கொண்டு மடிந்திருந்து
நித்தமுன் நினைப்பில் நொந்திருக்க
அத்தனை முத்துக்கள் கைநிறைய
சொத்துக்களாக சேர்த்துவர
சித்தமும் தெளிந்து சிங்காரித்து
மொத்தமாய் மஞ்சள் பூசிக்கொண்டு
கைத்தலம் பற்றும் சேதி சொல்ல
காத்திருக்கிறாயோ இதழ்விரித்து?

வி. அல்விற்.
10.07.2015.