புதன், 22 ஜூலை, 2015

பயம்.

ஆழிக்குள் அமிழ்ந்த நிலையில் 
தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் 

குரலை உயர்த்துகின்றேன்
எனது குரலை அறிந்து கொள்ளுவது
எனக்கே கடினமாயுள்ளது

உப்பு நீர் உள்ளே போய்க்கொண்டே
இருக்கிறது
நான் விரும்பாமலேயே

எனக்கு நீச்சல் தெரியும் 
ஆனாலும் 
இக்கணம் அது மறந்து போய் விட்டது

உடல் மேலெழுந்து
பிராண வாயு தரும்படி
யாரையோ கெஞ்சுகிறது
கேட்க யாருமேயில்ல

பற்றிக் கொள்ள
துருப்பைத் தேடுகிறது
ஆனாலும் அதற்கான வலு
என்னிடமில்லை

எனது முடிவிடம் 
இதுவாயிருக்க எனக்கு விருப்பில்லை
அகால மரணங்கள்
கண்களில் தெரிகின்றன
குறுக்கும் நெடுக்குமாக
வேண்டாத நினைவுகள் 
இப்போது மட்டுமேன்?

மீண்டுவர
உயிர் துடிக்கிறது உணர்வுகளுடன்

இப்போது 
கைகளை  உயர்த்த வேண்டும் 
என்பதும் 
மறந்து போயிற்று

கீழே! கீழே!
இன்னும் கீழே!

என்னை 
உள்ளே இழுத்து அழுத்துகிறது

பயம்.

வி. அல்விற்.
22.07.2015.


இது திரு. முல்லை அமுதனின் "இலக்கியப்பூக்கள்" வானொலி நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டது. மிக்க நன்றி திரு. முல்லை அமுதன் அவர்களுக்கு.

கருத்துகள் இல்லை: