சனி, 6 ஏப்ரல், 2013


கற்றாளை முட் செருகலாய் 
குற்றங்கள் உறுத்தும் போது 
தொடர்பாடல் துக்கமுறுகிறது 
உண்மையோடு பேசுதல் 
அவசியமாகிற வேளை 
தடுக்கும் "நான்" கள் 
அவலப்பட்டு நிற்கின்றன
வெளிப்படைகள் தீந்து 
தீர்வுகள் பொசுங்கிப் போகின்றன 
அமுங்கியிருக்கும் பதங்கள் 
அலறலாய் வெடிக்கையில் 
கேள்விக் குறிகள் 
இடைவெளியை நிரப்புகின்றன
சோகத்தோடு.... 

வி.அல்விற்.
03.04.2013.

முரண்கள்


முரண்கள் முடிச்சிட்டுக் கொண்டே செல்கின்றன 
பேசாத் தருணங்கள் நலமாயுள்ளன 
பேசும் தருணங்கள் தரும் ரணம் 
வடுவாகிப் போகிறது 
நினைவிழந்து நிலைகுலையும் நிலை 
மாறித் திரும்பும் நாள் வரும்
அன்று நினைவுகள் கனமாகி 
கணங்கள் யுகமாகி 
நிதமும் கொல்லும் 
அது வரை...
புரியாத மனிதராய் சுகித்திருங்கள்

வி. அல்விற்.
02.04.2013.

பேசுதல்


வார்த்தைகளின் நழுவல்கள் 
தீட்டப்பட்ட கத்தியாய் 
கிழிக்கா திருக்க ஏந்தி 
இறுக்க வேண்டியுள்ளது 
உணர்ச்சிகளுக்கான சொற்களுக்கு 
கடிவாளம் தேவைப்படுகிறது 
இயல்பற்ற காலத்தில் 
இயல்பான உரையாடல் 
எத்துணை கடினமாயுள்ளது