செவ்வாய், 22 மே, 2012

ஊறணி


! என் தாய் மண்ணே!
ஒ என் பிறந்தகமே!
! எம் ஊரணியே!
என்னை ஏன் அழைக்கின்றாய்?

சத்தம் இன்றி
மணலேறும் வெண் நண்டு
சுத்திப் பார்த்து
வளை தேடிடுமே
தத்திக் கால்கள்
தொட்டோடுமலை
நித்தம் தாலாட்டும் ஆராரோ!
தத்தெடுத்து எம்மை
செல்வராக்கியே
எத் தகை வாழ்க்கை
தந்தாயே எமை
எத்துணை வாழ
வைத்த கடலம்மா (! எம் ......)

சிற்றூரின் நடுவிலே
காவலனாய்
ஒற்றுமை  தந்து
நின்ற புனிதரே
ஏற்றம் கண்ட
ஆனித் திருநாட்களும்
மாற்றம் காணும்
அலங்காரப் பவனியும்
சுற்றம் கூடி
திருத்தலம் அமைத்ததும்
சற்றும் மாறாத
நினைவலைகள்
பற்றுக் கூட்டி
வரும் எண்ணங்கள் (! எம் ......)

நிரந்தரம் என்றே நினைத்திருந்தோம்
வரம் தர காலம் மறுத்ததால்
தூர தேசம் தேடிப் போகையில்
காலத்தின் விடுதலைத் தேவையை
தாங்கித் தோள் தரச் சென்ற எம்
வீரப் புதல்வரை மறப்பதாகுமா? அவர்
நாடிச் சென்றது மீளக் கிடைக்குமா?
கண்ணீர் சொரிய அஞ்சலி
ஊரவர்களின் அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி
சொந்தங்களின் கண்ணீர் அஞ்சலி.  (! எம் ......)

மூன்றாம் மாடி


1997 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நாங்கள்  பரிஸ் புறநகர்ப்பகு ஒன்றில்  வசித்துக் கொண்டிருந்தோம். எனது மகன் பிறந்திருந்த சமையம் அதுநாங்கள் வீட்டின் நான்காவது மாடியில் குடியிருந்தோம். மிக விசாலமான நகர் அது. அதிகாலையில் எனது கணவர்  வேலைக்குப் போனதும் நானும் மகனுமாக மெதுவாக எழுந்து குளியல் முடித்து, சாப்பிட்டு, விளையாடி பின்னர் வெளியே சற்று உலாவி திரும்பி வந்து மீண்டும் மதியம் சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு மாலை நகர் வலம் காணப்  புறப்பட்டு விடுவோம். எமது வீட்டிலிருந்து ஐந்து நிமிட  நடை  தூரத்தில் ஒரு மிகப் பெரிய பூங்கா இருந்தது. (இன்னும் இருக்கிறது).

மாலையில் அநேகமாக அந்தப் பூங்காவுக்குப் போய் விடுவேன் எனது மகனுடன். வேலை முடிந்த பின்னர் எனது கணவர் நேராக பூங்காவுக்கு வந்து விடுவார். பின்னர் அங்கிருந்து எல்லோருமாக வீட்டுக்குத் திரும்புவோம். இப்படி கவலையில்லாமல் கழிந்த  மிக்க மகிழ்ச்சியான தருணங்கள் அவை.

இந்த நேரத்தில் எமது குடியிருப்பில் மூன்றாவது மாடியில் எமது வீட்டுக்கு கீழே ஒரு தமிழ்க் குடும்பம் வந்து சேர்ந்தது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று அழகான அளவான குடும்பம். அந்தப்  பெண் மிக இளமையாகவும் அழகாகவும் இருந்தாள். அந்தப் பெண்ணின் கணவன் கணவன் மிக இலகுவாக யாருடனும் பழகும் சுபாவமுடையவராய்த்  தெரிந்தார். கண்களின் சிவப்பும் வீக்கமும் அவருடைய பழக்க வழக்கங்களை அப்பட்டமாகக் காட்டினநான் இலகுவில் யாருடனும் பழகும் குணமுடையவள் அல்ல. முகத்தை நிமிர்ந்து பார்த்துச் சிரிப்பதுடன் சரிஅதற்கு மேலே என்றால் "எப்பிடி சுகமாக இருக்கிறீங்களா?"அவ்வளவுதான். அதற்கு மேலே பேச்சை வளர்க்க விரும்புவது இல்லை. எனக்கு அவர்களை இதற்கு முன்னர் எங்கேயும் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர்களுக்கு எங்களை நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்கள் நகரின் இன்னொரு பகுதியில்  வசித்துக் கொண்டிருந்து விட்டு இப்போது இங்கே வந்துள்ளார்கள் என்று அந்தப் பெண்ணின் பேச்சிலிருந்து தெரிய வந்தது.
நான் பெரிதாக அடுத்தவர் விடையங்களைக் கவனிப்பது கிடையாது என்கின்ற படியால் எனக்கு அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் எனது கணவர் ஒரு நாள் சொன்னார் அந்த ஆண் வேலை செய்வதில்லை என்று. "ம்ம்" என்று சொல்லித் தலையை ஆட்டி விட்டு இருந்து விட்டேன்.

நான் பெரிதாக அடுத்தவர் விடையங்களைக் கவனிப்பது கிடையாது என்கின்ற படியால் எனக்கு அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் எனது கணவர் ஒரு நாள் சொன்னார் அந்த ஆண் வேலை செய்வதில்லை என்று. "ம்ம்சொல்லித் தலையை ஆட்டி விட்டு இருந்து விட்டேன். அதன் பின்னர் அந்த ஆள்  காணும்போது கதைப்பதாக எனது கணவர் இடைக்கிடையே சொல்லுவார். அந்தப் பெண்ணும் என்னைக் காணும்போது சிரித்தபடியே ஏதாவது கேட்பாள் அல்லது சொல்லுவாள். என்னைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லாத சாதாரணமான குடும்பம் போலவே  தெரிந்தது. இது சில வாரங்களுக்கு மட்டுமே என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் ஏதோ பயங்கரமாக விழுந்து உடைவது போன்ற  சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்ப வைத்தது. நித்திரைக் கலக்கம் தெளிந்து என்ன நடந்தது என்று யோசிக்க கொஞ்ச நேரம் எடுத்தது. சத்தம் கீழ் வீட்டிலிருந்து வந்தது. எதோ அலுமாரி, கட்டில் போன்ற பாரமான பொருட்கள் விழுந்து உடையும் சத்தம் போன்றிருந்தது. வீட்டிலுள்ளவர்களின் குரல் எதுவும் கேட்கவில்லை. நான் தொட்டிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த எனது மகனை எட்டிப் பார்த்தேன். நல்ல வேலை நித்திரை குழம்பியிருக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் நாங்கள் திரும்பவும் படுத்து விட்டோம்.

அடுத்த நாள் இரவும் ஏறக்குறைய அதே நேரம் அதே சத்தம் எங்களைக் குழப்பியது. தொடர்ந்து வந்த அடுத்தடுத்த இரவுகள் எமது மகனது நித்திரையையும் குழப்ப  எங்களுக்கு யோசனையாக இருந்தது. இப்போது சத்தத்துடன் அந்தப் பெண்ணின் " ஐயோ " என்ற அலறலும் கேட்கத் தொடங்க நிலைமை ஓரளவு வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது. ஒரு நாள் இரவு அந்தப் பெண் நீண்ட நேரமாக "ஐயோ ஐயோ" என்று கத்திக் கொண்டே இருக்க நான் எனது கணவரை எழுப்பினேன். "பாவமப்பா, ஒருக்காப் போய் என்னெண்டு கேட்டுக் கொண்டு வாங்கோவன்; அந்தப்பிள்ளை அடி வாங்கியே சாகப் போகுது " என்று சொன்னேன். எனது கணவர் சொன்னார் "நீங்கள் பேசாமல் படுங்கோ, அவன் ஒரு உதவாத ஆள். நான் இப்ப அவன்ர வீட்டுக் கதவைத் தட்டினால் நீர் ஆர்? எண்டு என்னை அவன் கேட்பான். இது எங்களுக்குத் தேவையா?"
"அப்ப பொலிசில கம்ப்ளைன் செய்வோமே"? எனது கணவர் என்னை முறைத்துப் பார்த்தார். "நாளைக்கு நான் வேலைக்குப் போய் விடுவேன். நீங்கள் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வெளியிலை போகேக்குள்ள அவன் அவன்ர சிநேகிதங்களோடை நிண்டு ஏதாவது சொல்லுவான் பரவாயில்லையா?" நான் பதில் சொல்ல முடியாமல் படுத்து விட்டேன். எனது கணவர் அவனைப் பற்றி நன்றாக அறிந்து விட்டார் என்பது தெரிந்தது.

ஒரு நாள் நான் எனது மகனுடன் படியேறிக் கொண்டிருந்தேன். மூன்றாவது மாடியினைக் கடக்கும்போது அந்தத் தமிழ்க் குடும்பத்தின் வீட்டுக்கு வலது பக்க வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு அங்கு வசிக்கும் பிரெஞ்சு பெண்மணி வெளியே வந்து எனது கையைப் பிடித்துக் கொண்டார் . "இந்த வீட்டில் என்ன நடக்கிறது? அந்த ஆள் அவருடைய மனைவியை போட்டு அடித்துச் சித்திரவதை செய்கிறார்; உங்களுடைய ஆட்கள் தானே. நீங்கள் பேசக் கூடாதா?" என்று கேட்டார். தாங்கள்  காவல் துறைக்கு அறிவிக்கப் போவதாகச் சொன்னார். "அது உங்களுடைய விருப்பம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய கதவு திறபடும் சத்தம் கேட்டது. அந்தப் பிரெஞ்சு பெண்மணி பயத்தில் துள்ளிப் பாய்ந்து தன்னுடைய வீட்டுக்குள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள். எனக்கு சிரிப்பாக வந்தது. திரும்பிப் பார்த்த போது அந்தத் தமிழ்ப் பெண் வெளியே வந்தாள். முகம் வீங்கியிருந்தது. எனக்கு என்ன கதைப்பது என்று தெரியவில்லை. வணக்கம் சொன்னாள். நானும் வணக்கம் சொல்லி விட்டு மேலே ஏறிப் போய் விட்டேன்.  

அதற்கு அடுத்து வந்த சில நாட்களில் நான் பூங்காவுக்கு  மகனுடன் செல்லும் போது  அந்தப் பெண்ணும் தனது குழந்தைகளுடன் வந்தாள். தனது உள்ளங்கையை திறந்து காட்டினாள்பயந்து போனேன். வாயு அடுப்பின் நெருப்பிலே வெந்த உள்ளங்கை வட்டமாக பொங்கியிருந்தது. எனக்கு அடி வயிற்றிலிருந்து நோவு மேலெழுந்ததுபிள்ளைகளை விளையாட விட்டு விட்டு நாங்கள் ஒரு மர நிழலில் இருந்தோம். தன்னை பற்றிய சில விடையங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்தாள். நான் பேசாமல் அவள் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்அவள் தமிழ்ப் பெண் ;ஆனால் இலங்கைப் பெண் அல்ல. இதைக் கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது. அவன் முகவராக அவளுடைய நாட்டில் இருந்த போது, அவளுடைய ஏழ்மையைப் பயன்படுத்தி தன்னுடைய மிகைப்படுத்தப் பட்ட ஆடம்பர வாழ்க்கையைக் காட்டி அப்பெண்ணை இங்குவரை கூட்டி வந்து விட்டான். இங்கு வந்ததும் தான் தெரிந்தது அவனுடைய சுய ரூபம். அவனுடைய முதல் சிக்கல் குடி; இரண்டாவது மோசமான சிநேகிதர் கூட்டம்.

வாழ்க்கை அடி உதை ஏளனப் பேச்சு என்று நரகமாகப் போய்க் கொண்டிருக்கிறது . தனது ஊரிலுள்ளவர்களுடன் பேசவும் முடியாது; தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போகவும் முடியாது. இதை விட இங்குள்ளவர்களுடன் பேசக் கூட பயந்து கொண்டிருந்தாள். ஏனென்றால்  அவர்கள் தனது கணவன் சார்பாகவே பேசுவார்கள் என்று எண்ணி கொண்டாள். அவள் அப்படி எண்ணியதற்கு காரணம் அவனது மோசமான நண்பர்கள். தனது குடும்ப விடையங்கள் அனைத்தையும் அந்தரங்கங்கள் உட்பட தனது நண்பர்களுடன் அவன் தினமும் பகிர்ந்து  கொள்ள அவர்கள் குடும்பம் நடத்துவது எப்படி என்று அவனுக்கு ஆலோசனை சொல்ல எல்லாமே தாறுமாறாக நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் அவமானத்தில் குறுகிப் போய் நின்று கொண்டிருந்தாள்.

எனக்கோ என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று கேட்டேன். உங்களுக்கு தமிழ் ஆட்களின் உதவியில் நம்பிக்கை இல்லை என்றால்  சட்டப்படியான சமூக சேவை அமைப்புக்கள் இருக்கின்றன அங்கு உதவி பெறலாம் என்று சொன்னேன். அதற்குப் பின்னர் தான் சொன்னாள் தான் ஏற்கனவே நகரசபை உதவியுடன் தனது கணவனை விட்டு விட்டு அவர்கள் தங்கச் சொன்ன இடத்தில் தங்கியதாகவும் அந்த நேரத்தில் அவன் போய் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு திருப்பி அழைத்து வந்ததாகவும் சொன்னாள். ஆனால் அவன் திருந்தும் ஆளாகத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப அதே சிக்கல் தொடர்ந்தது. எனக்கு ஆலோசனை சொல்ல லேசாகப்  பயமாக இருந்தது. தவறான ஆலோசனைகளால் பாழாகிப் போனவர்களையும்  பார்த்திருக்கிறோமல்லவா? எது எப்படியாயினும் என்ன செய்வது என்று முடிவு எடுக்க வேண்டியது அந்தப் பெண் தான். அதன் பிறகு என்ன உதவி செய்யலாம் என்று பார்க்கலாம்  எண்ணிக் கொண்டேன். ஆனால் ஏற்கனவே அவளது சிக்கல் நகரசபைப் பதிவில் இருந்ததால் அதற்கும் தேவையில்லைப் போலிருந்தது.

நானும் அந்தப் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தபோது அவளது கணவன் வந்தான் அவர்களை அழைத்துப் போக. அந்தப் பெண்ணுக்கோ வீடு திரும்ப மனமில்லை. அவனுக்கோ அந்தப் பெண் என்னிடம் தன்னைப் பற்றி ஏதாவது சொல்லி விடுவாளோ என்ற யோசனை போல. இரண்டு தடவை "வாங்கோ நேரம் போய் விட்டது" என்று சொல்லி அந்தப் பெண்ணைக் கூப்பிட்டான். அவள் கேட்காதது போல்  இருக்க, என்னைப் பார்த்து  "நேரம் போய் விட்டுது நீங்க வீட்டை போங்கோவன் அக்கா" என்று சொன்னான். எனக்கு கோபம் சுர்ரென்று  உச்சி வரை ஏறியது. அவனைத் திரும்பிப் பார்த்துச் சொன்னேன் " நீர் விருப்பமெண்டால் உம்முடைய மனிசியைக் கூட்டிக் கொண்டு போம்! நான் எப்ப வீட்டை  போக வேணும் எண்டு எனக்குத் தெரியும்" என்று. எனக்கு ஆத்திரம் தாங்க முடியாமல் இருந்தது. எனது கணவர் என்னிடம்  "நீ" என்ற ஒரு வார்த்தையைக் கூடப் பாவிப்பதில்லை. எனவே என்னால் அவனுடைய வார்த்தைகளை ஏற்க முடியாமல் இருந்தது. அந்தப் பெண் சடாரென்று எழுந்து பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். பார்க்க கவலையாக இருந்தது. அவன் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். இன்று இரவு சத்தம் அமோகமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.

இது நடந்து அடுத்த சில நாட்களாக அந்தப் பெண்ணை வெளியே பார்க்க முடியவில்லை. ஒருநாள் மாலை  அந்தப் பெண் வந்து கதவைத் தட்டி வீட்டுத் திறப்பை என்னிடம் கொடுத்துச் சொன்னாள் "அக்காஇவர் திறப்பை மறந்து போய் வெளியே போய் விட்டார். நானும் அவசரமாக வெளியிலே போக வேணும் ஒருக்கா குறை நினைக்காமல் குடுத்து விடுவீங்களா? " என்று. என்னைக்குப்  பிழையாக நினைக்கத் தோன்றவில்லை. சரி என்று சொல்லி வாங்கிக் கொண்டேன். என்னுடைய கணவர் அந்த ஆள் திரும்பி வரும் வரை பார்த்திருந்து திறப்பைக் கொடுத்தார்அவன் அதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.
அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை நான் பார்க்கவில்லை. தன்னுடைய முடிவுடன் பிள்ளைகளுடன் வெளியேறி விட்டதாக பின்னர் அறிந்தேன். நகரசபை அவளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்திருந்தது. எனக்கு மனதுக்கு ஆறுதலாக இருந்தது. மனதாலும் உடலாலும் இனிக் காயப்பட மாட்டாள் என்று எண்ணிக் கொண்டேன். பெண் அடக்கியாளப்படவேண்டியவள் என்று நினைக்கும் முட்டாள்களுடன் முட்டிக் கொண்டிருப்பதை விட முறித்து குறைந்த பட்சம் அமைதியுடனாவது வாழ்வது மேல். காலம் கடத்தாமல் தனது வாழ்க்கையைத் திருத்திக் கொண்ட அந்தப் பெண்ணை மனதுக்குள் பாராட்டிக் கொண்டேன்.
அப்போதிலிருந்து நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறும் வரை மூன்றாம் மாடி சத்தம் ஓய்ந்திருந்தது.





புதன், 16 மே, 2012

நாசமாய்ப் போனதே

நாசமாய்ப் போனதே என் தாய் தேசம்
கண் முன்னே சிதறி
நாசமாய்ப் போனதே என் தாய் தேசம்

யார் எம்மை வென்றனர்
அருகிருந்த இனமா?
அண்டை நாடா ?
கூட்டுத் திட்டங்களா?
யார் எம்மை வென்றனர்?
எது எம்மை வென்றது?

கூடிக் கிடந்து
காட்டிக் கொடுத்தாயே
கூட்டமாய் நின்று
காட்டிக் கெடுத்தாயே
யாரென்றும் பாராது
எதுவென்றும் நினையாது
ஏகத்துக்கும் விரைவில்
விலை போனாயே

ஒற்றுமை பேசும்போது
வேற்றுமை தேடினாய்
குற்றங்கள் கண்டெடுத்தாய்
கொலை கொலை என்றாய்
சர்வாதிகாரி என்றாய்
சரளமாய் விமர்சித்தாய்
சந்தர்ப்பம் தேடினாய்
சரித்து வீழ்த்த

என்ன நினைத்தோம்
எதைக் கனாக் கண்டோம்
நம்பிக்கை ஒன்றையே
நட்டு வைத்திருந்தோம்
பலன் தரும் நேரத்தில்
கோடரி அதனடி வைத்தாயே
தன் விரல்களால் தன்னையே
குத்திக் கொண்டதே என் இனம்

ஒன்றா இரண்டா
எத்தனை காலக் கனவுகள்
நாமெல்லாம் தூர
தேச வாசிகளாக
நமக்காக காயம் பட்டு
அடிபட்டு தேகமெலாம்
நிறம்மாறி வழிய
சிரித்து மட்டும் சிலரால் -இது?
எப்படி முடிந்தது?

மாதங்கள் வாரங்களாகி
வாரங்கள் நாட்களாகி
நாட்கள் மணித்துளிகளாகி
இறுதிக் கணங்களில்
அடங்கும் வரை
நம்பிக்கொண்டே இருந்தோம்
எல்லாமே சரியாக நடக்கும் என
பிழைத்ததை அறியாது

தேசம் எரிந்தபோது -என்
உடலெல்லாம் எரிந்தது அதன்
அனல் வந்து புயலாய்
பலமாய்த் தாக்கியது
பிண வாடை கண்டம் கடந்து
மூச்சை அடைத்தது
குறுகியே போனேன்
குற்ற வுணர்ச்சியால்

குழந்தைகளின் கூக்குரல்
குடைகின்றது மண்டையை இன்னும்
குதறப்பட்ட உடலங்கள்
கேவலமாகப் பார்த்தன எம்மை
கோர முகங்கள் இளித்துக் கிடந்தன
நாசமாய்ப் போன என் தேசமே
தவிர்த்திருக்கலாமோ??? இதனை
ஒன்றாய் இருந்திருந்தால்!!!

என் இனமே இனிமேலாவது
விழித்துக் கொள்!
அடம்பன் கொடியாயிரு
காற்றில் அறுபடும்
பருத்தி நூலாயிருக்காதே

பிண வாடையையும்
எரியுண்ட சடலங்களையும்
வீரப் பெண்களின்
மான ஓலங்களையும்
குழந்தைகளின் அலறல்களையும்
என்றும் மறக்காதே
ஆணி கொண்டெழுதி விடு

மறுபடி உன்னை உலுப்பிக் கொள்

வெள்ளி, 11 மே, 2012

வலிகள்

குண்டுகள் பொழிந்த வரலாற்றுக் காலங்களைப் பற்றி நிறையவே எழுதிக் கொண்டு போகலாம். எத்தனையோ குட்டிக் கதைகள், சிறுகதைகள், முக்கிய பாத்திரக் கதைகள், கிளைக் கதைகள் என்று எண்ணிலடங்கா சம்பவங்களை விபரித்துக் காட்டலாம். ஆனால் சில நிகழ்வுகள் ஆணி அடித்தாற்போல் வலியோடு நெஞ்சில் ஏறிக்கொள்ளும். அதன் தாக்கம் உயிரோடு இருப்பவர்களை உலுப்பி எடுக்கும்அதன் வேதனையை அனுபவிப்பவர்களுக்கே அக்கொடுமையின் தாக்கம் புரியும். அவ்வளவு உச்சத்திலிருக்கும் அந்தச் சம்பவம். அப்பேர்ப்பட்ட வலிகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்ட பூமி எம் தேசம்.

தாய் மண்ணின் வாசனையைச் சுமந்து, தூர தேசப் பெயர்வை வெறுத்து இதோ காலடியில் அல்லது கண்ணுக்கெட்டிய  தூரத்தில் கனவுகள் நினைவாகும் நாள் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தது  செந்தமிழன் குடும்பம். செல்வமாய் வாய்த்திருந்த அழகான மனைவி செல்வி, அவர்களுக்குக் கிடைத்திருந்த இரண்டு சிறு புலிக்குட்டிகள் வயது மூன்றும் ஐந்தும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கனவு செல்விக்கு  இருந்தது. அவர்களது கல்விக்காக இப்பொழுதே திட்டமிடத் தொடங்கி விட்டாள். நீண்ட நேரம் அவர்களுடன் செலவிட்டாள், அழகாக ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை நதிவன்னி மண் அவர்களை வளமாகப் பார்த்துக் கொண்டது. வெளி நாடுகளிலிருந்து எம்மக்கள் சமையம் கிடைத்த போது அங்கு சென்று தலை நகர் சிறப்புக் கண்டு களித்த காலம் அது. வாரி வழங்கினார்கள். அங்கு வாழ்ந்தவர்கள் அனைவருமே வீர குலத்தவராகப் பார்க்கப்பட்டனர். ஒரு அரசுக்குரிய அத்தனை உள்ளடக்கங்களையும் கொண்டல்லவா இருந்தார்கள்! எனவே எல்லாமே சிறப்பாகவும் பெருமையாகவும் காணப்பட்டது; புகழப்பட்டது.

செந்தமிழனும் செல்வியும் தங்களுக்குள்ளே பேசிக் கொள்ளுவார்கள் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று. அன்றாட வாழ்க்கை சீரானதாக இருந்தாலும் எதிர்மறையான விளைவுகளையும் எதிர்நோக்கத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போல அந்த நாட்கள் மிக விரைவிலேயே வந்து சேர்ந்தன. வானத்தை அழகுபடுத்திய தாரகைகளைப் பார்க்க நிமிர்ந்த கண்கள் எல்லாம் அதற்குப் பதில் வேவு பார்ப்பவர்களும் குண்டு பொழிபவர்களும் பரந்து நிற்கக் கண்டு மிரளத் தொடங்கின.

குழந்தைகள் அலறத் தொடங்கின; பெற்றவர்கள் அவர்களைப் பாதுகாக்க இடம் தேடினர்; பெரியவர்கள் எங்கே ஓடுவது என்று தெரியாது திகைத்துப் போய் நின்றனர்; நடமாட முடியாத நிலையிலுள்ளவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை; குண்டுகள் மழையாய்ப் பொழிந்தன; மருத்துவமனை காயப்பட்டோரால் நிறையத் தொடங்கியது. வன்னியின் எல்லா மக்களையும் போலவே செந்தமிழனும் செல்வியும் அவலப் படத் தொடங்கினர்.நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களுடைய வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாதுகாப்புப் பதுங்கு குழியை அமைத்திருந்தார்கள்.

வெடியோசைகள் காதைப் பிளக்க கூக்குரல்கள் அவலமாய் எழுந்தன. யார் யாரைப் பார்ப்பது என்று தெரியாத ஓர் அவல நிலை தோன்றி அச்சமூட்டியதுஇரசாயனப் புகை மூட்டங்கள் மூச்சு முட்ட வைத்தன.

நிலப் பரப்புக் குறுகிக் கொண்டே வந்தது. செந்தமிழனும் செல்வியும் இருந்த இடத்தை நோக்கி வேறும் சிலர் வந்து சேர்ந்தனர். வீட்டிலே இருந்த உணவுப் பொருட்களும் ஏறக் குறைய முடிந்த நிலையில் இருந்தது. அவர்கள் பட்டினி கிடப்பது முதல் தடவையல்ல; ஆனால் குழந்தைகளை என்ன செய்ய? அவர்களால் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்? செல்வி குழந்தைகளை மட்டுமே கவனிக்கத் தொடங்கினாள்பயம் மனதை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. மரணத்தை அண்மித்து விட்டதாகத் தோன்றியது.

மூத்தவன் நேசன் அப்பாவைப் போல கொஞ்சம் துணிச்சலானவன். ஆனாலும் சிறுவன்தானே. இளையவன்  குமரனோ தகப்பனைக் கட்டிப் பிடித்துக்  கொண்டிருந்தான்; தகப்பனிடம் பாதுகாப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தானோ  என்னவோ,

பத்தாம்  திகதி வைகாசித் திங்கள் இனி என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தூங்காத இரவு விடிந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. இரவு பகல் தெரியாத கோர நாட்களாயிருந்தன அப் பொழுதுகள் வன்னி மக்களுக்கு. செல்வி வீட்டின் முன்புறமிருந்த மரத்தின் கீழ் மகன் நேசனை மடியில் வைத்திருந்தபடி இருந்தாள். நேற்று இரவில் இருந்து குழந்தைகளுக்குக் கூட  சாப்பாடு  இல்லாமலிருந்தது. மிக அருகில் குண்டுச் சத்தத்துடன் "ஐயோ" என்ற ஓலம் எழ பயந்து போய் மகனைத் தூக்கிக் கொண்டு எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடத் தொடங்கினாள்.

பின்னாலே செந்தமிழனின் குரல் கேட்டது "இஞ்ச ஓடி வாங்கோ ! பங்கருக்குள்ள வாங்கோ !" ஓடிய செல்வி அவனுடைய  குரலைக் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தாள். அவன் மகன் குமரனை நெஞ்சோடு சேர்த்துக் கட்டிப் பிடித்தபடியே பங்கருக்குள் குதிப்பது தெரிந்தது. செத்தாலும் ஒன்றாகவே சாக வேண்டும் என்று நினைக்கத் தூண்டியது அந்தக் கணம். மகனையும் கொண்டு பங்கரை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

அவர்கள் நெருங்க முதல் எந்தப் பதட்டமுமின்றி ஒரு குண்டு பங்கருக்கு மேலேயே  வீழ்ந்து புகை எழுப்பியது. ஓடிய செல்விக்கு  கண்முன் நடப்பதை விளங்கிக் கொள்ள சில நிமிடங்கள் எடுத்தது. " ஐயோ என்ர அம்மா" என்று கத்திக் கொண்டே பாய்ந்து ஓடிப்போய் பார்த்தவளுக்கு பேச்சே வரவில்லை. உள்ளே சிதறல்களாகவே கிடந்தன. உள்ளே பாயப் போனவளை அருகில் நின்றிருந்த ஒரு பெண் இழுத்துப் பிடித்தாள்.

இரண்டொரு தெரிந்த இளைஞர்கள் சிதறல்களுக்கிடையே உ யிருடன் யாராவது இருக்கிறார்களா  என்று தேடினர். குமரன் உயிருடன் மீட்கப்பட்டான். செல்வி பாய்ந்து போய் இரத்தம் தோய்ந்த நிலையில் இருந்த மகனை அள்ளிக் கொண்டாள். ஆனால் குழந்தையால் தாயைப் பார்த்து பேச முடியவில்லை. செந்தமிழன் குழந்தையைக் கட்டிப் பிடித்தபடியே இருந்தபடியால் அவன் சிதறிப் போனான். அதிர்வினாலும் தந்தையை அந்நிலையிலே பார்த்ததினாலும் குமரன் முழுமையாகப் பேச்சையே இழந்து போனான்.

கணவனின் இழப்புக்கு அழுவதா அல்லது குழந்தையின் நிலைமைக்கு அழுவதா? குழந்தை முற்றிலுமாக தன்னிலை இழந்து போயிற்று. "அப்பு! என்ர செல்லம் கதை அப்பு! அம்மாவோடை கதை அப்பு அண்ணாவோடை கதை அப்பு"! செல்வி திரும்பத் திரும்ப மகனை பேசச் செய்ய முயற்சித்தாள்.  நேசனும் தம்பியின் கையைப் பிடித்து அழத் தொடங்கினான். ஆனால் குழந்தையின் கண்கள் நிலை குத்தி உலகம் அவனுக்கு வெளியே இருந்தது,

"பிள்ளை இனி இப்பிடியே இருந்து என்ன செய்யிறது? எங்களோடை வா பிள்ளை! எங்கையாவது ஒரு இடத்தில எல்லாரையும் போல போய் சேரப் பார்ப்போம்" பக்கத்தில் அவளது தாய் வயதில் இருந்த ஓர் பெண் சொன்னாள்.
"ஐயோ நான் இனி நான் எங்கை போறது? நானும் இஞ்சையே எங்கையாவது கிடந்து பிள்ளைகளோட சாகிறான். என்ர பிள்ளையின்ர நிலைமையைப்  பாத்தீங்களோ! ஏனப்பா என்னை விட்டிட்டு நீங்கள் மட்டும் தனியப் போயிட்டீங்கள்? எல்லாருமா சேந்தே  செத்திருக்கலாமே" ஆற முடியாமல் கத்தினாள் செல்வி.
"பிள்ளை சுத்திப் பார் பிள்ளை, உன்னை மாதிரி எத்தினை பேர் கத்திக் கொண்டிருக்கினம் பார்! இனியும் இதில நிண்டு பிரயோசனம்  இல்லப் பிள்ளை, சொல்லுறதை கேள்  வா எங்களோடை" பெரியவனைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள் அந்தப் பெண். செல்வி அழுதழுதே நடக்கத் தொடங்கினாள்.

பாதைகள் எங்கிலும் கிடந்த பிணங்களையும், உடல் அவயவயங்களை இழந்தவர்களையும் அவர்களின் ஓலங்களையும் முனகல்களையும் ஒப்பாரிகளையும் தாண்டித் தாண்டி இறுதிக் கணங்களையும் தாண்டி முகாமுக்குள் அடங்கியபோது அவளுடைய பாதங்களில் இரத்தம் இன்னும் காய்ந்திருக்கவில்லை ; ஆனால் கண்களில் நீர் வற்றியிருந்தது,


(அதன் பின்னர் ஒரு சில நல்லவர்களால் வெளியேறி தன்னுடைய சகோதரி இருந்த இடம் நோக்கிப் பயணித்தாள்.
உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையை விட்டு விட்டு வேறு ஒரு வேலைக்குக் கூடப் போக முடியாத நிலையில்  இன்று இன்னொருவரிடம் கையேந்தி வாழ நேர்ந்த நிலைமையை நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் செல்வி. அவளுடைய இப்போதைய குறிக்கோள் குழந்தையைக்  குணப்படுத்துவதும் அவர்களுடைய கல்வியும் மட்டுமே)

ஞாயிறு, 6 மே, 2012

முதற்பிரிவு

அன்று இரவு முழுவதும் எனக்கு நித்திரை வரவே இல்லை. இரவு முழுக்க எனக்கு பலவிதமான கனவுகள். சில குழப்பமான சிந்தனைகளும் கூடவே வந்தன. ஆனாலும் புதிய ஓர் இடத்தில் வாழப் போவதை எண்ணி ஒரு விதமான சொல்ல முடியாத விசித்திரமான உணர்வு. அம்மாவும் குடும்பத்தாரும் ஏற்கனவே என்னுடன் நீண்ட நாட்களாக பேசி எடுத்த முடிவுதான். எனது உடுப்புக்கள், மற்றும் தேவையான பொருட்கள் எல்லாம் ஆயத்தப் படுத்தி வைத்தாகி விட்டது, இருந்தாலும் இறுதி நேரத்தில் மனம் இறுக்கம் கண்டது. எனக்கு அப்போது பதினொரு வயது இருக்கும். அம்மாவுடன் மனம் விட்டுப் பேச முடியவில்லை. எனது எண்ணங்களை சொல்ல முடியவில்லை. அதற்கு வேறு பல காரணங்கள் இருந்தன. ஏன் இப்போதும் கூட அம்மா எனக்கு ஒரு மாதிரி. அன்றும் இன்றும் என்றும். ஒளி தந்து தன்னை உருக்கும் மெழுகுவர்த்தியுடன் பேச முடியுமா? ஆனால் அந்தப்  பக்குவம் அந்த வயதிலேயே என்னிடம் தோன்றியிருந்ததை நினைத்து இன்றும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளுவேன். இனிப் புறப்படுவதுதான் மிச்சம்.

இரவு நீண்டாலும் விடியலை யாராலும் தடுக்க முடியுமா? வழமையான காலைப்போழுது எல்லோருக்குமாய் விடியத் தொடங்கியதுஆனாலும் அன்றைய காலை எனக்கு விசேடமானது. அதிகாலை நான்கு மணிக்கே புறப்பட்டு நடக்கத் தொடக்கி விட்டோம்.
வானத்தை அண்ணாந்து பார்த்தேன். முழு நிலவு பிரகாசம் பூமியை நிறைத்துக் கொண்டிருந்தது. எமது ஊர்களில சில பெண்கள் குங்குமப் போட்டு வைத்திருக்கும்போது அது அவர்களது முகத்தை விடப் பெரிதாக இருக்கின்றதாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன் அந்த நாட்களிலேஅது போலவே இந்தச் சந்திரனை நினைக்கத் தோன்றியது. வானம் பரந்திருந்தாலும்  எம் கண்களில் முதலில் படுவது நிலவு தானே, கழுத்தைத் இடதுபுறம் திருப்பி  தலையைத்தூக்கி அண்ணார்ந்தபடி வலப்புறமாக கண்களால் வானத்தை மெதுவாக அளவிட்டுக் கொண்டு வரும்போது அத்தனை அழகும் எனக்குத்தானோ என்று எண்ணும்படி தோன்றும். இனிப்பை மொய்க்கும் எறும்புக் கூட்டங்கள் போல முழு நிலவைச் சுற்றி நிற்கும் தாரகைகள் கண்சிமிட்டும் அழகும், அவற்றை நான் உருவங்களாக்கி மகிழ்ந்ததும் சிறுவயதிலிருந்தே  தொடர்கின்றது.

எமது கிராமத்துக்கும் மயிலிட்டிக்கும் மூன்று கிலோ  மீற்றர் தூரம் இருக்கும் என்று நினைக்கின்றேன். அந்த அதிகாலைப்  பொழுதில் தெரு நடமாட்டமற்றுக் கிடந்தது. எமது கால் நடைச் சத்தம் கேட்டு நாய்கள் மட்டும் வளவுகளுக்குள்ளால் இருந்து  குரைத்து விட்டுத் திரும்பின. எத்தனையோ தடவை அமது ஊரிலிருந்து மயிலிட்டிக்கு கால் நடையாகவே போயிருந்தாலும் இந்த அதிகாலை விசேட பயணம் எனக்கு அன்று அதிசயமாகவிருந்தது.

நான்கு நாற்பத்தைந்து மணியளவில் மயிலிட்டி கன்னியர் மடப் பாடசாலையை வந்து சேர்ந்திருந்தோம். அந்த நேரம் யார் வீட்டுக் கதவைத் திறந்திருப்பார்கள்? மடம் பூட்டியிருந்தது. காத்திருக்க வேண்டியதுதான். இந்த நேரத்துக்கு அம்மா ஏன் கூட்டிக் கொண்டு வந்தார் என்று எனக்கு விளங்கவில்லை. (என்னால் கேட்க முடியாது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்) வெளியில்  நின்றபடியே காணிக்கை மாதாவிடம் அம்மாவும் நானும் வேண்டிக் கொண்டோம். கண்களால் வானத்தை மீண்டும் அளக்கத் தொடங்கினேன். இப்போது நிலவு மேகக் கூட்டங்களுக்கிடையிலே ஒழிந்து விளையாடிக்கொண்டிருந்தது. சில நட்சத்திரங்கள் எரிந்து விழுந்தன. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்கியது.

ஆறு மணியளவில் ஒரு கன்னியாஸ்திரி வந்து வெளிக் கதவைத் திறந்ததும் ஆச்சரியப்பட்டு, மனம் வருந்தி வரவேற்றார். என்னையும் அம்மாவையும் அழைத்துச் சென்று நான் தங்குமிடத்தை இன்னொரு பெண் மூலம் காண்பித்தார். தேநீரும் காலை உணவும் தந்தார்கள். அம்மா எனக்கு நிறையப் புத்திமதிகள் சொன்னார்; பின்னர் விடை பெற்றுச் சென்று விட்டார். அம்மா விடை பெறும் போது எனக்கு தொண்டைக்குள் ஏதோ அடைத்தது; அழுகை வருமாப் போல் இருந்தது.

சிறிது நேரத்தில் பாடசாலைக்கு நேரமாக பாடசாலைக்குச் சென்று விட்டேன். மயிலிட்டிக் கிராமத்தின் சிறப்புக்களில் ஒன்று அந்த ஆலய வளவுக்குள்ளேயே கன்னியர் மடம், பாடசாலை, குருவானவர் தங்குமிடம் அனைத்தும் சேர்ந்தாற்போல் அமைந்திருப்பது. அதிலும் கன்னியர் மடமும் பாடசாலையும் சேர்ந்தே இருந்தது. பாடசாலை நாட்களில் ஆலயத்தையும் அதன் கிணற்றடியையும் சுற்றியே விளையாடிக் கொண்டிருப்போம். அன்றைய பொழுது இடைக்கிடையில் அம்மாவின் ஞாபகம் வந்தாலும் சிக்கலின்றிக்  கழிந்தது.

மாலையில் மடத்துக்குத் திரும்பியபோது வீட்டு யோசனை வரத் தொடங்கியது. அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அக்காமாரின் நினைவு வந்தது. நான் எங்கோ ஒரு காட்டில் தனித்து விடப்பட்டது போல இருந்தது. "பாசம்" என்பதன் வரைவிலக்கணம் புரியாத வயதில் அந்த உணர்வு மட்டும் அழுகையை உண்டுபண்ணியது. அங்கே இருந்தவர்கள் எல்லோருமே அன்பாக இருந்தார்கள். ஆனால் சிறைப்பட்டிருந்தாற் போல ஓர் உணர்வு தென்பட்டது. வீட்டில் இருக்கும் சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது புரிந்தது. இரவு உணவு இறங்கவில்லை. படுக்கையில் அழுகை வெடித்தது யாருக்கும் காட்டிக் கொள்ளாமலே. ஏனென்றால் அங்கே இரண்டு வேறு எனது அக்காமாரின் வயதை ஒத்த பெண்கள் தங்கியிருந்தார்கள். அடுத்த நாள் காலை எனக்கு அழுகையோடுதான் விடிந்தது.

பாடசாலையில்  பாடங்களில் கவனம் செல்லவில்லை. வீட்டு யோசனையே தலை முழுக்க நின்றது. இப்படியே சில நாட்கள் கண்ணீருடன் கழிந்தன. அங்கே தங்கியிருப்பது சாத்தியமில்லை என்பது தெரிந்தாலும் என்ன செய்வது என்று தெரியவில்லை. (இப்போது போல தொலைபேசி, குறுஞ்செய்தி, இணையத்தள  வசதிகள் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்) கன்னியாஸ்திரிகள் சில நாட்களில் பழகிப் போய் விடும்  என்று நினைத்தார்களோ என்னவோ என்னை வழிப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் நாளாக ஆக எனக்கு வீட்டு யோசனை கூடிக் கொண்டே வந்தது. எனது சிநேகிதி ஒருத்தி எமது ஊரிலிருந்து பாடசாலைக்கு தினமும் வந்து போவாள். அவளிடம் ஒரு நாள் துணிந்து சொல்லி விட்டேன் எனது அம்மாவை வந்து என்னைக் கூட்டிச் செல்லும்படி. எனக்குத் தெரியும் அம்மா கோபப்படுவார்  என்று. நான் என்ன செய்ய? என்னால் அம்மாவைப் பிரிந்து இருக்க முடியவில்லையே!

அம்மா விடையம் கேள்விப்பட்டு கோபத்துடன் வந்து சேர்ந்தார். என்னைக் கூட்டிக் கொண்டு வீடு திரும்பினார்.

காலம் நிற்கவேயில்லை. எத்தனையோ பெயர்வுகளைத் தந்து இன்று ஒரு நிரந்தரப் பிரிவைத் தந்து நிற்கின்றது. இன்று என்னால் அழ முடியவில்லை. காலம் மாற்றங்களையும், பிளவுகளையும் தந்து நிற்கின்றது. மனம் மாற்றங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கின்றேன். என் அம்மாவைப் பார்த்து இருபத்தொரு வருடங்களாகி விட்டது என்றால் நம்ப முடியாமல் இருக்கிறது. அந்த முதல் பிரிவும் முழு நிலவும் மறக்கவே முடியாது. முழு நிலவை எங்கே கண்டாலும் என் மனம் பதினொரு வயதிற்குப் போய் விடும்.

புதன், 2 மே, 2012

திசை மாறி

செந்தூரன் இங்கு வந்து நான்கு வருடங்கள் இருக்கும். ஐரோப்பாவிலே உள்ள மற்றைய எம்மினத்தவர்கள் போலவே நேரம், காலம் பாராமல் வேலை செய்து கொண்டிருந்தான். மனைவி பிள்ளைகள் இன்னும் ஊரிலேயே இருக்கிறார்கள். இதுவரை அவனது மனைவி எழுதிய கடிதங்கள் முழுவதுமே அவர்களுடைய மூத்த மகனைப் பற்றியதாகவே இருந்தது. அவர்களுடைய மகனுக்கு பதினாறு வயது. அடிக்கடி நடை பெற்ற இடப்பயர்வுகளால் கல்வியைத் தொலைத்து விட்டிருந்தான். "அவனை இங்கே  வைத்திருக்கப் பயமாக இருக்கிறது. குளப்படியாயிருக்கிறது. அங்கே  கூப்பிட்டுக் கொள்ளுங்கோ. "என்று ஒரே புலம்பலாயிருக்கும். அவனோ என்ன செய்வான் வந்து இரண்டு வருடங்களில் வந்து சேர்ந்த கடன் முடிக்க வேண்டும்; குடும்பத்துக்குப் பணம் அனுப்ப வேண்டும்; தன்னுடைய செலவு பார்க்க வேண்டும்...இப்படி எல்லாவற்றுக்கும் மாதக் கடைசியை எதிர்பார்த்திருப்பான். இதற்குள் மகனைக் கூப்பிட வேண்டும் என்றால் இலகுவான விடயமா? ஆனாலும் என்ன கூப்பிட்டே ஆக வேண்டும், வேறு வழி இல்லை.

இங்கே தானே "தனியார் நடமாடும் வங்கிகள்" உலா வருகின்றன. அறா வட்டிக்கு கடன் வாங்கி மகன் வினோவைக்  கூப்பிடும் ஒழுங்குகளைச் செய்து  முடித்து விட்டாயிற்று. இனி வந்து சேரு மட்டும் நெஞ்சிடிதான். ஏற்கனவே உள்ள சிக்கல்களுடன் இதுவும் சேர்ந்து அவனை செக்கு மாடக்கியதுமகன் வந்து சேர்ந்தவுடன் படிக்க அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான். . இளம் வயதானதால் இலகுவில் இந்நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ள முடியும் என்று தனக்குளே கணக்குப் போட்டுக் கொண்டான். கொண்டான். காலம் வினோவை கொண்டு வந்து சேர்த்தது. செந்தூரனுக்கு அவன் வந்துசேர்ந்ததே மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஆனால் மகன் வந்து சேர்ந்து இறங்கிய கோலம் கொஞ்சம் யோசிக்க  வைத்தது. தான் குடும்பத்தைப் பிரிந்திருந்த இரண்டு வருடங்களும் ஏற்படுத்தயிருந்த மாற்றங்கள் மகனில் காணக் கூடியதாக இருந்தது. மனைவி எழுதிய கடிதங்கள் சரியாகத் தெரிந்தது.

உடனடியாக அவனுடைய பதிவுகள் அனைத்தையும் முடித்து பாடசாலையில் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கினான். முதல் வருடம் மொழியில் சிக்கலுள்ள ஒரு வகுப்பில் கற்க விடப்பட்டான்அவனுடைய வயதில் வந்த எத்தனையோ பிள்ளைகள் அந்த நிலையைக் கடந்து தமது வயதுக்குரிய வகுப்புக்களில் பின்னர் சேர்க்கப்பட்டனர். கரை சேர்ந்துமுள்ளனர். ஆனால் வினோ ஊரிலேயே "படிப்பு" என்பதை மூட்டை கட்டி விட்டிருந்ததால் அவனால் சமாளிக்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது. அது தண்டனையாகப் பட்டது. தகப்பனுக்குத் தெரியாமலேயே   பாடசாலைக்குப் போவதை தவிர்த்துக் கொள்ளத்  தொடங்கினான். தகப்பன் பல முறை பாடசாலை நிர்வாகத்தினால் அழைக்கப்பட்டிருந்தான். இறுதியில் பாடசாலை அவனை வைத்திருக்க முடியாத நிலையே தோன்றி விட்டது. சரி ஒரு தொழில் கல்வியாவது கற்றுக் கொள்ளட்டும் என்று ஆலோசனை சொல்லத் தொடங்கினான் செந்தூரன்.

"ஏதாவது ஒரு தொழில் கல்வியாவது செய்யலாம் தானே, இங்கை தான் எவ்வளவோ செய்ய இருக்குதுவினோ பதில் பேசவில்லை. "உன்னோடைதான் கதைக்கிறன். வந்து இரண்டு வருசமாகுது; படிக்கவும் மாட்டேன்  என்டுறாய் ஏதாவது தொழில் பழகினாலாவது  உனக்குப் பிறகு பிரயோசனைப்படும்".  "ம்ம்ம்  பாப்பம்". "என்ன பாப்பம் , ஏதாவது ஒரு முடிவுக்கு வர வேணும் தம்பி." "ஓம் சும்மா கத்தாதயுங்கோ". "என்ன நான் கத்துறேனோ? உன்னை இஞ்சை நான் கூப்பிட்டது என்ர பிழை".  "ஏன் நானோ என்னைக் கூப்பிடச் சொன்னனான்". செந்தூரன் கட்டு மீறி வந்த  கோபத்தை அடக்கிக் கொண்டு " நீ என்ன செய்வியோ தெரியாது எங்கயாவது பதிஞ்சு முதல் ஏதாவது செய்" சொல்லி விட்டு வேலைக்குக் கிளம்பி விட்டான்.

காலம் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் வினோவுக்கு சில நண்பர்கள் சேர்ந்து விட்டிருப்பதும் அவர்களுடன் அடிக்கடி வெளியே செல்வதும் தொடங்கியிருந்தது. செந்தூரன் மகனுடன் பேச முற்பட்டபோதெல்லாம் ஒரு முறுகலான நிலைமை தோன்றத் தொடங்கியிருந்தது. "வினோ எங்கை தம்பி போயிருந்தாய் , அந்தப் பிள்ளைகள் ஆர்?"
"அவை எனக்குத் தெரிஞ்ச ஆக்கள்"...
"அதுதான் ஆர் எண்டு கேக்கிறன், வாழ்க்கைக்குத் தேவையான ஏதாவது ஒண்டை செய்யிறதை விட்டிட்டு இப்பிடி சுத்தித்  திரிஞ்சால் சரி வராது தம்பி"....
"! அப்ப நான் இஞ்ச உங்களோடை இருக்கிறது உங்களுக்குக் கரைச்சலா இருக்குது போல" வினோவின் பேச்சு வயதுக்கு மீறியதாய் இருந்ததுசெந்தூரனுக்கு அவனைப் பிடித்து நாலு சாத்துச் சாத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் அதனால் பயன் இல்லை என்று விளங்கியதால் அத்தோடு விட்டு விட்டான். மகனின் பிரச்சனை அவனுக்குத் தீராத தலையிடியாக இருந்தது. அடுத்த நாள் அவனுடன் சேர்ந்து சுற்றும் நண்பர்களின் தகவல்களை சேகரிக்க முற்பட்டான். அவர்கள் யாருமே "ஒழுக்கமான" வட்டத்துக்குள் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாட்டு நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்குமாப் போல் ஒரு எண்ணம் எல்லோருடைய மனதிலும் தோன்றத் தொடங்கியிருந்த நேரம் அதுஇரவு பகலாக உலகத் தமிழ் மக்கள் கண்விழித்திருந்து உலக நாடுகளை விழித்தெழ வைக்க முடியும் என்று எண்ணியிருந்த காலம் அது. செந்தூரனுக்கும் பங்கு பற்ற வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அவனுடைய வீட்டுப் பிரச்சனையால் ஒரு நாள் வேலை முடியப் போய் தலை காட்டி விட்டு வந்ததோடு சரி அதற்குப் பிறகு போக முடியவில்லை.
அன்று இரவு அவன் வேலையால் வந்து சமையல் செய்து விட்டு மகனோடு சேர்ந்து சாப்பிடுவதற்காகக் காத்திருந்தான். காத்திருந்து களைத்துப் போய் அடுத்த நாள் வேலையை எண்ணி படுத்து விட்டான். வினோ விடியற்காலை மூன்று மணியளவில் வந்து படுத்தது தகப்பனுக்குத் தெரிந்திருக்கவில்லை. காலையில் வேலைக்கு எழுந்திருந்தபோது தான் அவன் படுத்திருந்ததைப் பார்த்தான். இன்று இரவு இவனுடன் அமைதியாகப் பேச வேண்டும். இவனை ஒரு வேலைக்காவது அனுப்பினால்தான் தேவையில்லாத சகவாசத்தையாவது விட்டு விடப் பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டே வேலைக்குப் போனான்.

அன்று வேலையிடத்தில் செந்தூரனுடன் வேலை செய்பவர்கள்  நாட்டுப் பிரச்சனையின் உக்கிரத்தைப் பற்றிப் பேசி கொண்டிருந்தார்கள். எல்லோரும் வேலை முடிய ஒன்றுகூடும் இடத்துக்குப்  போகப் போவதாகப் பேசிக் கொண்டார்கள். இரவு ஒரு ஒன்பது மணி வரைக்குமாவது அந்த இடத்தில் நின்று  விட்டுப் பிறகு வீட்டுக்குப் போகலாம் என்று எண்ணிக் கொண்டான்.
ஒன்று கூடும் இடத்தை அடைந்தவுடன் பலருடைய முகங்கள் இறுக்கமடைந்திருந்ததைப்  பார்க்க வேதனையாகவிருந்தது. இளைஞர்கள் கத்திக் கத்தி குரலிழந்துகொண்டிருந்தார்கள்உறவுகள் கொடிகளைப் பிடித்தபடி உருகிக் கொண்டிருந்தன. காவற்படையினர் சுற்றி நின்றிருந்தனர்.
திடீரென்று நின்றிருந்த இடத்திற்குக் கொஞ்சத் தூரத்தில் ஏதோ குழப்பம் ஏற்படுவது தெரிந்தது. காவற்படையினர் அந்த இடத்தை சுற்றி வளைப்பதும் தெரிந்தது. சிலர் அந்த இடத்தை நோக்கி ஓடினர். என்னதான் நடக்கின்றது என்று பார்க்க செந்தூரனும் முன்னே நடந்தான். காவற்படையினர் சிலரை இழுத்துச் செல்வது தெரிய, கூர்ந்து பார்த்தவன், வினோவும் அதில் ஒருவன் என்று தெரியவும். "தம்பி வினோ" என்று காத்த வாயைத் திறந்தவனை அருகில் கேட்ட வார்த்தைகள் தடுத்தன. "அவங்கள் காசைக் குடுத்து எங்கடை ஆக்களைக் கொண்டே குழப்ப நிக்கிறாங்கள்; இதுகள் எங்கடையள் திருந்தாதுகள்".
அன்று விடியுமட்டும் செந்தூரன் அங்கிருந்தவர்களுடன் நின்றிருந்தான்.

அம்மா

சுயநலம் என்பது  இங்கே வளர்ச்சியடைந்த நாடுகளில் நன்றாக வெவ்வேறு  பெயர்களில் வளர்க்கப்படுகிறது. இதனால் வளர்கிறவர்கள் பலரை அழித்து வாழ்கின்றார்கள் என்பது உண்மை. அது எமது உறவுகளை சிதைக்கும் வகையில் வளர்ந்திருப்பது கொடுமை.

இப்படித்தான் அன்று ஒரு சிநேகிதியின் தாயின் மரணச் செய்தி கேட்டு பார்த்து வரச் சென்றிருந்தேன். என்நண்பி என்னைக் கண்டதும் "ஐயோ " என்றபடி என்னைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். ஒப்பாரியில் அவளுடைய அம்மா செய்த எல்லாச் செயல்களுமே மிகச் சிறந்ததாகப் புகழப்பட்டுக் கொண்டிருந்தது

எனக்கும் அவளைப் பார்க்க என்னையறியாமலே கண்ணீர் துளிர்த்தது. ஆனால் அதை விட  வேறு பல சிந்தனைகள் வந்து என்னைக் கொன்று கொண்டிருந்தன. இந்த ஒப்பாரியின் பின்னால் இருக்கும் வெளியே தெரியாத பல சிறுகதைகள், உறவுகளின் உண்மைகள் பற்றி யோசிக்கத் தூண்டின. உண்மையான விடயங்கள் என்று எம்மால் வரையறுக்கப்பட்ட விடையங்கள் உண்மைத்  தன்மையாக இல்லாத  சந்தர்ப்பங்களில் அல்லது உண்மையாக நடைமுறைப்படுத்தப்படாது போய் விடின் அங்கே "உண்மை" என்பது கேள்விக்குறியாகி விடுகின்றது. சந்தேகங்கள் தோன்றுகின்றன; எதிர்மறைப்  பேச்சுக்கள் உருவாகின்றன; முரண்பாடுகள் உருவாகின்றன; உறவுகள் தொங்குகின்றன.

இன்று உயிரிழந்து வெறும் உடலமாகக் கிடக்கும் இந்தத் "தாய்" ஒரு காலத்தில் எம்மூரிலே எல்லாப் பெண்களையும் போலே ஒரு அழகிய கதாநாயகி. இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒரு ஆண் பிள்ளையையும் பெற்று "நல்லதோர் குடும்பமாக" வாழ்ந்தவர்கள். பல  குடும்பங்களில் நடந்தது போல் இவர்கள் யாரையும் இழக்கவில்லை; எதையும் இழக்கவில்லை. இருப்பதை விட இன்னும் கொஞ்சம் வசதியாக வாழ ஆசைப்பட்டார்கள். அவ்வளவுதான். அதற்குத்தான் ஆண்பிள்ளை ஒன்று இருக்கிறதே! யாழ்ப்பாணத்தில் உணவுப்பொட்டலங்கள் வான தூதுவர்களால் பொழியப்பட்ட பொற்  காலத்தில்  ஆண்பிள்ளை ஐரோப்பிய நாடொன்றிற்கு வந்து சேர்ந்தார். குடும்பம் குதூகலாமாயிற்று. பணம் சேரத் தொடங்கியது; பெண் பிள்ளைகள் ஆளுக்கொரு நாட்டைத் தேர்ந்தெடுத்து  "சிறப்பாகக்" கரை சேர்ந்தார்கள்.

எல்லாமே நினைத்தபடி நடந்த மகிழ்ச்சியிலேயோ என்னவோ  அப்பா திடீரென்று மாரடைப்பென்று விடை பெற்று விட்டார். அம்மாவைத் தனியே தவிக்க விடாமல் மகன் அம்மாவைத் தன்னுடனே சேர்த்துக் கொண்டான். நீண்ட நாட்களின் ஓட்டத்தின் பின்  அம்மாவின் அன்பும், அரவணைப்பும் மகனுக்குத் தேவையாயிருந்தது. ஆனால் பிள்ளைகளின் தேவையறிந்து நடப்பதல்லவா தாய் மனம்! மகனின் விருப்பறிந்து  தேடி ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுத்தார்கள்.
காலம் உருளத் தொடங்கியது. "அம்மா சாப்பாடு போடுங்கோ", "அம்மா தேத்தண்ணீ  போடுங்கோ", "இண்டைக்கு பின்னேரம் வெளியில கொஞ்சம் நடக்கப் போவம்" என்ற பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அம்மா இங்கிதம் தெரிந்தவர். இளம் பிள்ளைகளை இடைஞ்சல் பண்ணுவதைத் தவிர்க்க தானாகவே ஒதுங்கிக் கொண்டார். ஆனால் மருமகளோ  ஒரு சிறிய விடயத்தைக் கூட பெரிதுபடுத்தி கணவன் வேலையிலிருந்து வந்ததுமே கூப்பாடு போடுவதை வழக்கமாகக் கொண்டு வரத் தொடங்கினாள். அவனுமோ தன்னால் முடிந்தவரை மாமியார் மருமகள் பிரச்சனைகளை காதில் வாங்காதது போல நடிக்கப் பார்த்தான். ஆனால் நாளடைவில் "அம்மாவுக்கு வயது போய் விட்டுதோ? அல்லது தனது மனைவியைப் பிடிக்காமல் நடந்து கொள்ளுகின்றாவோ" என்று நினைத்து ஒரு நாள் "அம்மா நீங்கள் எண்டாலும் பேசாமல் சாப்பிட்டு விட்டு ஒரு இடத்தில பேசாமல் இருங்கோவன்" என்றபோது உண்மையிலேயே உடைந்து போனாள்.

அன்று இரவு அந்தத் தாயின் அழுகையிலே சுமந்த பொழுதிலிருந்து அன்றுவரை இருந்த தாய் மகன் உறவு ஒருதலைப் பட்சமாயிற்று. அடுத்த நாள் காலையில் எழுந்தபோது தாய் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். மகனைப் பார்த்து "தம்பி! உன்னோட கதைக்க வேணும்... என்னைத் தங்கச்சி வீட்டை அனுப்பி விடு தம்பி; என்னால உங்களுக்குள்ள பிரச்சனை வேண்டாம்". மகனுக்கு ஒரே அதிசயம் "நானும் அதைத்தான் நினைச்சுக் கொண்டிருந்தனான் அம்மா; நீங்கள் இஞ்ச இருந்தாலும் ஒண்டுதான் தங்கச்சி வீட்டை இருந்தாலும் ஒண்டுதான்" தாய் மனதுக்குள் அழுதது மகனுக்கு விளங்கியதோ தெரியவில்லை. மளமளவென்று பயணச்சீட்டு வாங்க புறப்பட்டான். தாய் தனது இரண்டாவது பறப்புக்கு ஆயத்தப் படுத்தத் தொடங்கினாள்.

அம்மா வருவது மகள் காவியாவுக்கு நல்ல மகிழ்ச்சி. இரண்டு பிள்ளைகளுடன் வேலைக்குப் போய் வருவது பெரிய அக்கப் பாடாய் இருந்தது அவளுக்கு. அம்மா வந்தால் பிள்ளைகளைப் பார்ப்பதற்குக் கொடுக்கும் காசு மிச்சம். அம்மா சமையலும் செய்து, வீட்டையும் கவனிப்பா பெரிய உதவியாக இருக்கும். நானும் முழு நேரம் வேலை செய்யலாம். இப்படி அந்த மகளின் சுயநலம் தன்னைச் சுற்றியே வந்தது. தாயின் மனநிலை பற்றியோ உட நிலை பற்றியோ  யாருக்குமே அக்கறை இருக்கவில்லை. குளிர் காலம் காற்றோடு உடல் எலும்புகளைப் பதம் பார்க்கும் காலத்தில் அம்மா காவியாவுடன் வந்து சேர்ந்தார். வந்து சேரும்போதே லேசான காய்ச்சல்  தொடங்கி இருந்தது. மனம் உற்சாகமாக இருக்கும்போது உடல் நலம் நன்றாக இல்லா விட்டாலும் சோர்ந்திருக்க விடாது; மனம் சோர்ந்திருக்கும் போதோ  உடலும் கூட ஒத்துழைக்க மறுத்து அடம் பிடிக்கிறது.

இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நாட்கள் நகர்ந்தன. காலையில் எழுந்து காவியாவும் மருமகனும் வேலைக்குப் போய் விடுவார்கள். பிள்ளைகள் எழுந்து விடுவதற்கு முன்பே  சமைத்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைகள் எழும்பினால் சமைக்க முடியாது. அவ்வளவு சுட்டிகள். பிள்ளைகள் சுட்டிகளாய்  இருப்பது தவறில்லை, ஆனால் அம்மாவால் அவர்களை சமாளிக்க முடியாத நிலையில் இருப்பது தான் உண்மை. அவர்கள் ஏறிப் பாய்ந்து குதிக்கும் போது அம்மாவுக்கு பயமாக இருக்கும். பயத்திலேயே மூச்சிரைக்கும்.

ஆரம்பத்தில் "அம்மா, அம்மா" என்று இருந்த காவியா இப்போதெல்லாம் அம்மாவின் வேலைகளிலே குறை கண்டு பிடிக்கத் தொடங்கினாள். "கறிக்கு உப்புப் பத்தாது, பாத்ரூமில தலைமயிர் இருக்கு சரியா மப் பண்ணேல்ல எண்டு " என்று தொடரத் தொடங்கியது. அம்மாவுக்கு மருமகனுக்கு முன்னால் இப்படிப் பேசும் போது அவமானமாக இருக்கும். மகளிடம் தனியே பேசினாள் அம்மா "இப்பிடி கதைக்காதை பிள்ளை, அம்மா செய்யிறது ஏதாவது சரியில்லை எண்டால் என்னோட தனியாகக் கதை" மகள் அதை மருமகனிடமேயே சொன்னாள்இது மட்டுமா? தொலைபேசியிலும் அம்மாவின் குறைகளை எல்லோரிடமும் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டாள்.

அந்நிய தேசத்தில் சொந்தப் பிள்ளைகளிடம் அந்நியப் பட்டு நிற்பதை, அண்டி நிற்கும் நிலையை எண்ணி தனக்குள்ளேயே நொந்து கொண்டாள். மனம் நொந்து போக உடல் நலிவடையத் தொடங்கியது. குளிரும் ஆஸ்துமாவும் ஒட்டியுள்ள தேசத்தில் அது வாட்டிஎடுக்கத் தொடங்கியது. அம்மா எதுவும் செய்ய முடியாத நிலையில் சுருண்டு கொண்டார். காவியா தொலைபேசியில் தமையனுடன் சண்டை பிடிப்பது கேட்டது "நீ அம்மாக்கு வருத்தம், அங்கை வைச்சிருக்கேலாது எண்டுதான் இஞ்சை அனுப்பினனீ என்ன? இப்ப எனக்கு பிள்ளைகளோட, என்ர வேலையோட, இவவையும் பாக்க வேண்டியதாய்க் கிடக்கு" அம்மாவுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

மருமகன் மகளைக் கூப்பிட்டு இரகசியமாய் அறைக்குள் ஏதோ பேசுவது தெரிகிறது. என்னவென்று விளங்கவில்லை. தன்னுடைய பிள்ளைகளில தான் வைத்திருக்கும் உண்மையான அன்பிற்கு எதிர்  வினை சுயநலம் மட்டுமே என்று தெரிந்தபோது மூச்சு விடுவது மிகச்சிரமமாயிருந்தது.
..............
"ஐயோ அம்மா "! எங்கடை அம்மாவை பாருங்கோ அண்ணி"! திரும்பிப் பார்த்தேன். அண்ணி நாகரீகமாக  விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். அண்ணா கண்ணீருடன் தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.
நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன் ,எல்லாருமாகச் சேர்ந்து சரியான முறையில் கவனித்திருந்தால் அந்தத் தாய் மகிழ்ச்சியாக இன்னும் நீண்ட காலம் பிள்ளைகளோட வாழ்ந்திருப்பார். இது இறப்பு அல்ல ஒரு வகைக் கொலை.