வெள்ளி, 11 மே, 2012

வலிகள்

குண்டுகள் பொழிந்த வரலாற்றுக் காலங்களைப் பற்றி நிறையவே எழுதிக் கொண்டு போகலாம். எத்தனையோ குட்டிக் கதைகள், சிறுகதைகள், முக்கிய பாத்திரக் கதைகள், கிளைக் கதைகள் என்று எண்ணிலடங்கா சம்பவங்களை விபரித்துக் காட்டலாம். ஆனால் சில நிகழ்வுகள் ஆணி அடித்தாற்போல் வலியோடு நெஞ்சில் ஏறிக்கொள்ளும். அதன் தாக்கம் உயிரோடு இருப்பவர்களை உலுப்பி எடுக்கும்அதன் வேதனையை அனுபவிப்பவர்களுக்கே அக்கொடுமையின் தாக்கம் புரியும். அவ்வளவு உச்சத்திலிருக்கும் அந்தச் சம்பவம். அப்பேர்ப்பட்ட வலிகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்ட பூமி எம் தேசம்.

தாய் மண்ணின் வாசனையைச் சுமந்து, தூர தேசப் பெயர்வை வெறுத்து இதோ காலடியில் அல்லது கண்ணுக்கெட்டிய  தூரத்தில் கனவுகள் நினைவாகும் நாள் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தது  செந்தமிழன் குடும்பம். செல்வமாய் வாய்த்திருந்த அழகான மனைவி செல்வி, அவர்களுக்குக் கிடைத்திருந்த இரண்டு சிறு புலிக்குட்டிகள் வயது மூன்றும் ஐந்தும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கனவு செல்விக்கு  இருந்தது. அவர்களது கல்விக்காக இப்பொழுதே திட்டமிடத் தொடங்கி விட்டாள். நீண்ட நேரம் அவர்களுடன் செலவிட்டாள், அழகாக ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை நதிவன்னி மண் அவர்களை வளமாகப் பார்த்துக் கொண்டது. வெளி நாடுகளிலிருந்து எம்மக்கள் சமையம் கிடைத்த போது அங்கு சென்று தலை நகர் சிறப்புக் கண்டு களித்த காலம் அது. வாரி வழங்கினார்கள். அங்கு வாழ்ந்தவர்கள் அனைவருமே வீர குலத்தவராகப் பார்க்கப்பட்டனர். ஒரு அரசுக்குரிய அத்தனை உள்ளடக்கங்களையும் கொண்டல்லவா இருந்தார்கள்! எனவே எல்லாமே சிறப்பாகவும் பெருமையாகவும் காணப்பட்டது; புகழப்பட்டது.

செந்தமிழனும் செல்வியும் தங்களுக்குள்ளே பேசிக் கொள்ளுவார்கள் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று. அன்றாட வாழ்க்கை சீரானதாக இருந்தாலும் எதிர்மறையான விளைவுகளையும் எதிர்நோக்கத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போல அந்த நாட்கள் மிக விரைவிலேயே வந்து சேர்ந்தன. வானத்தை அழகுபடுத்திய தாரகைகளைப் பார்க்க நிமிர்ந்த கண்கள் எல்லாம் அதற்குப் பதில் வேவு பார்ப்பவர்களும் குண்டு பொழிபவர்களும் பரந்து நிற்கக் கண்டு மிரளத் தொடங்கின.

குழந்தைகள் அலறத் தொடங்கின; பெற்றவர்கள் அவர்களைப் பாதுகாக்க இடம் தேடினர்; பெரியவர்கள் எங்கே ஓடுவது என்று தெரியாது திகைத்துப் போய் நின்றனர்; நடமாட முடியாத நிலையிலுள்ளவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை; குண்டுகள் மழையாய்ப் பொழிந்தன; மருத்துவமனை காயப்பட்டோரால் நிறையத் தொடங்கியது. வன்னியின் எல்லா மக்களையும் போலவே செந்தமிழனும் செல்வியும் அவலப் படத் தொடங்கினர்.நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களுடைய வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாதுகாப்புப் பதுங்கு குழியை அமைத்திருந்தார்கள்.

வெடியோசைகள் காதைப் பிளக்க கூக்குரல்கள் அவலமாய் எழுந்தன. யார் யாரைப் பார்ப்பது என்று தெரியாத ஓர் அவல நிலை தோன்றி அச்சமூட்டியதுஇரசாயனப் புகை மூட்டங்கள் மூச்சு முட்ட வைத்தன.

நிலப் பரப்புக் குறுகிக் கொண்டே வந்தது. செந்தமிழனும் செல்வியும் இருந்த இடத்தை நோக்கி வேறும் சிலர் வந்து சேர்ந்தனர். வீட்டிலே இருந்த உணவுப் பொருட்களும் ஏறக் குறைய முடிந்த நிலையில் இருந்தது. அவர்கள் பட்டினி கிடப்பது முதல் தடவையல்ல; ஆனால் குழந்தைகளை என்ன செய்ய? அவர்களால் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்? செல்வி குழந்தைகளை மட்டுமே கவனிக்கத் தொடங்கினாள்பயம் மனதை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. மரணத்தை அண்மித்து விட்டதாகத் தோன்றியது.

மூத்தவன் நேசன் அப்பாவைப் போல கொஞ்சம் துணிச்சலானவன். ஆனாலும் சிறுவன்தானே. இளையவன்  குமரனோ தகப்பனைக் கட்டிப் பிடித்துக்  கொண்டிருந்தான்; தகப்பனிடம் பாதுகாப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தானோ  என்னவோ,

பத்தாம்  திகதி வைகாசித் திங்கள் இனி என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தூங்காத இரவு விடிந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. இரவு பகல் தெரியாத கோர நாட்களாயிருந்தன அப் பொழுதுகள் வன்னி மக்களுக்கு. செல்வி வீட்டின் முன்புறமிருந்த மரத்தின் கீழ் மகன் நேசனை மடியில் வைத்திருந்தபடி இருந்தாள். நேற்று இரவில் இருந்து குழந்தைகளுக்குக் கூட  சாப்பாடு  இல்லாமலிருந்தது. மிக அருகில் குண்டுச் சத்தத்துடன் "ஐயோ" என்ற ஓலம் எழ பயந்து போய் மகனைத் தூக்கிக் கொண்டு எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடத் தொடங்கினாள்.

பின்னாலே செந்தமிழனின் குரல் கேட்டது "இஞ்ச ஓடி வாங்கோ ! பங்கருக்குள்ள வாங்கோ !" ஓடிய செல்வி அவனுடைய  குரலைக் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தாள். அவன் மகன் குமரனை நெஞ்சோடு சேர்த்துக் கட்டிப் பிடித்தபடியே பங்கருக்குள் குதிப்பது தெரிந்தது. செத்தாலும் ஒன்றாகவே சாக வேண்டும் என்று நினைக்கத் தூண்டியது அந்தக் கணம். மகனையும் கொண்டு பங்கரை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

அவர்கள் நெருங்க முதல் எந்தப் பதட்டமுமின்றி ஒரு குண்டு பங்கருக்கு மேலேயே  வீழ்ந்து புகை எழுப்பியது. ஓடிய செல்விக்கு  கண்முன் நடப்பதை விளங்கிக் கொள்ள சில நிமிடங்கள் எடுத்தது. " ஐயோ என்ர அம்மா" என்று கத்திக் கொண்டே பாய்ந்து ஓடிப்போய் பார்த்தவளுக்கு பேச்சே வரவில்லை. உள்ளே சிதறல்களாகவே கிடந்தன. உள்ளே பாயப் போனவளை அருகில் நின்றிருந்த ஒரு பெண் இழுத்துப் பிடித்தாள்.

இரண்டொரு தெரிந்த இளைஞர்கள் சிதறல்களுக்கிடையே உ யிருடன் யாராவது இருக்கிறார்களா  என்று தேடினர். குமரன் உயிருடன் மீட்கப்பட்டான். செல்வி பாய்ந்து போய் இரத்தம் தோய்ந்த நிலையில் இருந்த மகனை அள்ளிக் கொண்டாள். ஆனால் குழந்தையால் தாயைப் பார்த்து பேச முடியவில்லை. செந்தமிழன் குழந்தையைக் கட்டிப் பிடித்தபடியே இருந்தபடியால் அவன் சிதறிப் போனான். அதிர்வினாலும் தந்தையை அந்நிலையிலே பார்த்ததினாலும் குமரன் முழுமையாகப் பேச்சையே இழந்து போனான்.

கணவனின் இழப்புக்கு அழுவதா அல்லது குழந்தையின் நிலைமைக்கு அழுவதா? குழந்தை முற்றிலுமாக தன்னிலை இழந்து போயிற்று. "அப்பு! என்ர செல்லம் கதை அப்பு! அம்மாவோடை கதை அப்பு அண்ணாவோடை கதை அப்பு"! செல்வி திரும்பத் திரும்ப மகனை பேசச் செய்ய முயற்சித்தாள்.  நேசனும் தம்பியின் கையைப் பிடித்து அழத் தொடங்கினான். ஆனால் குழந்தையின் கண்கள் நிலை குத்தி உலகம் அவனுக்கு வெளியே இருந்தது,

"பிள்ளை இனி இப்பிடியே இருந்து என்ன செய்யிறது? எங்களோடை வா பிள்ளை! எங்கையாவது ஒரு இடத்தில எல்லாரையும் போல போய் சேரப் பார்ப்போம்" பக்கத்தில் அவளது தாய் வயதில் இருந்த ஓர் பெண் சொன்னாள்.
"ஐயோ நான் இனி நான் எங்கை போறது? நானும் இஞ்சையே எங்கையாவது கிடந்து பிள்ளைகளோட சாகிறான். என்ர பிள்ளையின்ர நிலைமையைப்  பாத்தீங்களோ! ஏனப்பா என்னை விட்டிட்டு நீங்கள் மட்டும் தனியப் போயிட்டீங்கள்? எல்லாருமா சேந்தே  செத்திருக்கலாமே" ஆற முடியாமல் கத்தினாள் செல்வி.
"பிள்ளை சுத்திப் பார் பிள்ளை, உன்னை மாதிரி எத்தினை பேர் கத்திக் கொண்டிருக்கினம் பார்! இனியும் இதில நிண்டு பிரயோசனம்  இல்லப் பிள்ளை, சொல்லுறதை கேள்  வா எங்களோடை" பெரியவனைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள் அந்தப் பெண். செல்வி அழுதழுதே நடக்கத் தொடங்கினாள்.

பாதைகள் எங்கிலும் கிடந்த பிணங்களையும், உடல் அவயவயங்களை இழந்தவர்களையும் அவர்களின் ஓலங்களையும் முனகல்களையும் ஒப்பாரிகளையும் தாண்டித் தாண்டி இறுதிக் கணங்களையும் தாண்டி முகாமுக்குள் அடங்கியபோது அவளுடைய பாதங்களில் இரத்தம் இன்னும் காய்ந்திருக்கவில்லை ; ஆனால் கண்களில் நீர் வற்றியிருந்தது,


(அதன் பின்னர் ஒரு சில நல்லவர்களால் வெளியேறி தன்னுடைய சகோதரி இருந்த இடம் நோக்கிப் பயணித்தாள்.
உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையை விட்டு விட்டு வேறு ஒரு வேலைக்குக் கூடப் போக முடியாத நிலையில்  இன்று இன்னொருவரிடம் கையேந்தி வாழ நேர்ந்த நிலைமையை நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் செல்வி. அவளுடைய இப்போதைய குறிக்கோள் குழந்தையைக்  குணப்படுத்துவதும் அவர்களுடைய கல்வியும் மட்டுமே)

கருத்துகள் இல்லை: