புதன், 2 மே, 2012

அம்மா

சுயநலம் என்பது  இங்கே வளர்ச்சியடைந்த நாடுகளில் நன்றாக வெவ்வேறு  பெயர்களில் வளர்க்கப்படுகிறது. இதனால் வளர்கிறவர்கள் பலரை அழித்து வாழ்கின்றார்கள் என்பது உண்மை. அது எமது உறவுகளை சிதைக்கும் வகையில் வளர்ந்திருப்பது கொடுமை.

இப்படித்தான் அன்று ஒரு சிநேகிதியின் தாயின் மரணச் செய்தி கேட்டு பார்த்து வரச் சென்றிருந்தேன். என்நண்பி என்னைக் கண்டதும் "ஐயோ " என்றபடி என்னைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். ஒப்பாரியில் அவளுடைய அம்மா செய்த எல்லாச் செயல்களுமே மிகச் சிறந்ததாகப் புகழப்பட்டுக் கொண்டிருந்தது

எனக்கும் அவளைப் பார்க்க என்னையறியாமலே கண்ணீர் துளிர்த்தது. ஆனால் அதை விட  வேறு பல சிந்தனைகள் வந்து என்னைக் கொன்று கொண்டிருந்தன. இந்த ஒப்பாரியின் பின்னால் இருக்கும் வெளியே தெரியாத பல சிறுகதைகள், உறவுகளின் உண்மைகள் பற்றி யோசிக்கத் தூண்டின. உண்மையான விடயங்கள் என்று எம்மால் வரையறுக்கப்பட்ட விடையங்கள் உண்மைத்  தன்மையாக இல்லாத  சந்தர்ப்பங்களில் அல்லது உண்மையாக நடைமுறைப்படுத்தப்படாது போய் விடின் அங்கே "உண்மை" என்பது கேள்விக்குறியாகி விடுகின்றது. சந்தேகங்கள் தோன்றுகின்றன; எதிர்மறைப்  பேச்சுக்கள் உருவாகின்றன; முரண்பாடுகள் உருவாகின்றன; உறவுகள் தொங்குகின்றன.

இன்று உயிரிழந்து வெறும் உடலமாகக் கிடக்கும் இந்தத் "தாய்" ஒரு காலத்தில் எம்மூரிலே எல்லாப் பெண்களையும் போலே ஒரு அழகிய கதாநாயகி. இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒரு ஆண் பிள்ளையையும் பெற்று "நல்லதோர் குடும்பமாக" வாழ்ந்தவர்கள். பல  குடும்பங்களில் நடந்தது போல் இவர்கள் யாரையும் இழக்கவில்லை; எதையும் இழக்கவில்லை. இருப்பதை விட இன்னும் கொஞ்சம் வசதியாக வாழ ஆசைப்பட்டார்கள். அவ்வளவுதான். அதற்குத்தான் ஆண்பிள்ளை ஒன்று இருக்கிறதே! யாழ்ப்பாணத்தில் உணவுப்பொட்டலங்கள் வான தூதுவர்களால் பொழியப்பட்ட பொற்  காலத்தில்  ஆண்பிள்ளை ஐரோப்பிய நாடொன்றிற்கு வந்து சேர்ந்தார். குடும்பம் குதூகலாமாயிற்று. பணம் சேரத் தொடங்கியது; பெண் பிள்ளைகள் ஆளுக்கொரு நாட்டைத் தேர்ந்தெடுத்து  "சிறப்பாகக்" கரை சேர்ந்தார்கள்.

எல்லாமே நினைத்தபடி நடந்த மகிழ்ச்சியிலேயோ என்னவோ  அப்பா திடீரென்று மாரடைப்பென்று விடை பெற்று விட்டார். அம்மாவைத் தனியே தவிக்க விடாமல் மகன் அம்மாவைத் தன்னுடனே சேர்த்துக் கொண்டான். நீண்ட நாட்களின் ஓட்டத்தின் பின்  அம்மாவின் அன்பும், அரவணைப்பும் மகனுக்குத் தேவையாயிருந்தது. ஆனால் பிள்ளைகளின் தேவையறிந்து நடப்பதல்லவா தாய் மனம்! மகனின் விருப்பறிந்து  தேடி ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுத்தார்கள்.
காலம் உருளத் தொடங்கியது. "அம்மா சாப்பாடு போடுங்கோ", "அம்மா தேத்தண்ணீ  போடுங்கோ", "இண்டைக்கு பின்னேரம் வெளியில கொஞ்சம் நடக்கப் போவம்" என்ற பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அம்மா இங்கிதம் தெரிந்தவர். இளம் பிள்ளைகளை இடைஞ்சல் பண்ணுவதைத் தவிர்க்க தானாகவே ஒதுங்கிக் கொண்டார். ஆனால் மருமகளோ  ஒரு சிறிய விடயத்தைக் கூட பெரிதுபடுத்தி கணவன் வேலையிலிருந்து வந்ததுமே கூப்பாடு போடுவதை வழக்கமாகக் கொண்டு வரத் தொடங்கினாள். அவனுமோ தன்னால் முடிந்தவரை மாமியார் மருமகள் பிரச்சனைகளை காதில் வாங்காதது போல நடிக்கப் பார்த்தான். ஆனால் நாளடைவில் "அம்மாவுக்கு வயது போய் விட்டுதோ? அல்லது தனது மனைவியைப் பிடிக்காமல் நடந்து கொள்ளுகின்றாவோ" என்று நினைத்து ஒரு நாள் "அம்மா நீங்கள் எண்டாலும் பேசாமல் சாப்பிட்டு விட்டு ஒரு இடத்தில பேசாமல் இருங்கோவன்" என்றபோது உண்மையிலேயே உடைந்து போனாள்.

அன்று இரவு அந்தத் தாயின் அழுகையிலே சுமந்த பொழுதிலிருந்து அன்றுவரை இருந்த தாய் மகன் உறவு ஒருதலைப் பட்சமாயிற்று. அடுத்த நாள் காலையில் எழுந்தபோது தாய் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். மகனைப் பார்த்து "தம்பி! உன்னோட கதைக்க வேணும்... என்னைத் தங்கச்சி வீட்டை அனுப்பி விடு தம்பி; என்னால உங்களுக்குள்ள பிரச்சனை வேண்டாம்". மகனுக்கு ஒரே அதிசயம் "நானும் அதைத்தான் நினைச்சுக் கொண்டிருந்தனான் அம்மா; நீங்கள் இஞ்ச இருந்தாலும் ஒண்டுதான் தங்கச்சி வீட்டை இருந்தாலும் ஒண்டுதான்" தாய் மனதுக்குள் அழுதது மகனுக்கு விளங்கியதோ தெரியவில்லை. மளமளவென்று பயணச்சீட்டு வாங்க புறப்பட்டான். தாய் தனது இரண்டாவது பறப்புக்கு ஆயத்தப் படுத்தத் தொடங்கினாள்.

அம்மா வருவது மகள் காவியாவுக்கு நல்ல மகிழ்ச்சி. இரண்டு பிள்ளைகளுடன் வேலைக்குப் போய் வருவது பெரிய அக்கப் பாடாய் இருந்தது அவளுக்கு. அம்மா வந்தால் பிள்ளைகளைப் பார்ப்பதற்குக் கொடுக்கும் காசு மிச்சம். அம்மா சமையலும் செய்து, வீட்டையும் கவனிப்பா பெரிய உதவியாக இருக்கும். நானும் முழு நேரம் வேலை செய்யலாம். இப்படி அந்த மகளின் சுயநலம் தன்னைச் சுற்றியே வந்தது. தாயின் மனநிலை பற்றியோ உட நிலை பற்றியோ  யாருக்குமே அக்கறை இருக்கவில்லை. குளிர் காலம் காற்றோடு உடல் எலும்புகளைப் பதம் பார்க்கும் காலத்தில் அம்மா காவியாவுடன் வந்து சேர்ந்தார். வந்து சேரும்போதே லேசான காய்ச்சல்  தொடங்கி இருந்தது. மனம் உற்சாகமாக இருக்கும்போது உடல் நலம் நன்றாக இல்லா விட்டாலும் சோர்ந்திருக்க விடாது; மனம் சோர்ந்திருக்கும் போதோ  உடலும் கூட ஒத்துழைக்க மறுத்து அடம் பிடிக்கிறது.

இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நாட்கள் நகர்ந்தன. காலையில் எழுந்து காவியாவும் மருமகனும் வேலைக்குப் போய் விடுவார்கள். பிள்ளைகள் எழுந்து விடுவதற்கு முன்பே  சமைத்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைகள் எழும்பினால் சமைக்க முடியாது. அவ்வளவு சுட்டிகள். பிள்ளைகள் சுட்டிகளாய்  இருப்பது தவறில்லை, ஆனால் அம்மாவால் அவர்களை சமாளிக்க முடியாத நிலையில் இருப்பது தான் உண்மை. அவர்கள் ஏறிப் பாய்ந்து குதிக்கும் போது அம்மாவுக்கு பயமாக இருக்கும். பயத்திலேயே மூச்சிரைக்கும்.

ஆரம்பத்தில் "அம்மா, அம்மா" என்று இருந்த காவியா இப்போதெல்லாம் அம்மாவின் வேலைகளிலே குறை கண்டு பிடிக்கத் தொடங்கினாள். "கறிக்கு உப்புப் பத்தாது, பாத்ரூமில தலைமயிர் இருக்கு சரியா மப் பண்ணேல்ல எண்டு " என்று தொடரத் தொடங்கியது. அம்மாவுக்கு மருமகனுக்கு முன்னால் இப்படிப் பேசும் போது அவமானமாக இருக்கும். மகளிடம் தனியே பேசினாள் அம்மா "இப்பிடி கதைக்காதை பிள்ளை, அம்மா செய்யிறது ஏதாவது சரியில்லை எண்டால் என்னோட தனியாகக் கதை" மகள் அதை மருமகனிடமேயே சொன்னாள்இது மட்டுமா? தொலைபேசியிலும் அம்மாவின் குறைகளை எல்லோரிடமும் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டாள்.

அந்நிய தேசத்தில் சொந்தப் பிள்ளைகளிடம் அந்நியப் பட்டு நிற்பதை, அண்டி நிற்கும் நிலையை எண்ணி தனக்குள்ளேயே நொந்து கொண்டாள். மனம் நொந்து போக உடல் நலிவடையத் தொடங்கியது. குளிரும் ஆஸ்துமாவும் ஒட்டியுள்ள தேசத்தில் அது வாட்டிஎடுக்கத் தொடங்கியது. அம்மா எதுவும் செய்ய முடியாத நிலையில் சுருண்டு கொண்டார். காவியா தொலைபேசியில் தமையனுடன் சண்டை பிடிப்பது கேட்டது "நீ அம்மாக்கு வருத்தம், அங்கை வைச்சிருக்கேலாது எண்டுதான் இஞ்சை அனுப்பினனீ என்ன? இப்ப எனக்கு பிள்ளைகளோட, என்ர வேலையோட, இவவையும் பாக்க வேண்டியதாய்க் கிடக்கு" அம்மாவுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

மருமகன் மகளைக் கூப்பிட்டு இரகசியமாய் அறைக்குள் ஏதோ பேசுவது தெரிகிறது. என்னவென்று விளங்கவில்லை. தன்னுடைய பிள்ளைகளில தான் வைத்திருக்கும் உண்மையான அன்பிற்கு எதிர்  வினை சுயநலம் மட்டுமே என்று தெரிந்தபோது மூச்சு விடுவது மிகச்சிரமமாயிருந்தது.
..............
"ஐயோ அம்மா "! எங்கடை அம்மாவை பாருங்கோ அண்ணி"! திரும்பிப் பார்த்தேன். அண்ணி நாகரீகமாக  விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். அண்ணா கண்ணீருடன் தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.
நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன் ,எல்லாருமாகச் சேர்ந்து சரியான முறையில் கவனித்திருந்தால் அந்தத் தாய் மகிழ்ச்சியாக இன்னும் நீண்ட காலம் பிள்ளைகளோட வாழ்ந்திருப்பார். இது இறப்பு அல்ல ஒரு வகைக் கொலை.

கருத்துகள் இல்லை: