சனி, 20 ஜூன், 2015

நம்முடன் நாமே.



கொடுப்பதும் நாம் 
பெறுவதும் நாம் 

முகமறிந்த மனிதரிடையே
முகம் மறைப்பதும் நாம் 

வரவை கணக்கு வைப்பதற்குள்
செலவை வைப்பதும் நாம் 

எல்லையற்ற தியாகங்களிடையே
ஏளனப்பட்டு நிற்பதும் நாம் 

எகத்தாளமாய் நின்று கொண்டு
ஏமாந்து தொலைப்பதும் நாம் 

ஓ!!!!!
பரம பிதாவே!

எத்தனை காலம்தான் 
நாம் அறியாமல் தவறுவது?
:(

வி. அல்விற்.

19.06.2015.

வெள்ளி, 19 ஜூன், 2015

இளைய பாதை.

பாரமேற்றியாக ஆக்கியுள்ளது 
இந்த சமூகமுன்னை.

சுருங்கியுள்ள நெற்றிக் கோடுகள் 
சிந்தனைகளை சுருட்டியுள்ளனவோ 
உனக்கான அளவீடுகளை
மட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
இப்பொருளுலகம்.

ஆழ்ந்து மூச்செறியவும்
அமைதியாய்ச் சிந்திக்கவும்
அவகாசமற்ற பெருஞ்சந்தையில்
உன் குரலடங்கிக் கிடக்கின்றது
வாதிட மனமின்றி.

அழுத்தங்களினாலான துக்கங்கள்
கடுஞ்சிறைப்பட்டிருக்கின்றன
விடுபட வழியின்றி.

பொறு!
பூட்டுகள் திறக்கப்படும் 
அதுவும் உன்னாலேயே.

சிந்தனைகளைக் கிளறிக் கொண்டேயிரு!

குப்பைகளின் நாற்றமும்
பூக்களின் நறுமணமுமாயிருக்கும்
நீ கால் வைத்துள்ள பூமியைக் 
கிளறிக் கொண்டேயிரு!

உனக்கான பாதை கிடைக்கும்.

வி.அல்விற்.

19.06.2015.

அலைவு.

இருந்ததென்றான இருத்தலில்
இல்லாதிருந்தன கேள்விகள் 
இருத்தலினாலான கேள்விகளில்
இல்லாதவை இழிந்தலைகின்றன.

வி. அல்விற்.

18.06.2015.

முரண்.

நிதானமாக நினைப்பதும் 
நேர்மாறாய் வாழ்வதுமாய்
நிலைமாறிப் போவதில்


காலம் மிதிபட்டுப் போகிறது.