புதன், 31 அக்டோபர், 2012

வேரற விடோம்!

ஒரு குழந்தையை எல்லோரும் விரும்பும் நற்பிரஜையாக உருவாக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது? குழந்தை தாயின் வயிற்றிலிருந்தே கற்கத் தொடக்கி பின் குடும்ப உறுப்பினரிடமிருந்து கற்றுப் பின் சமூகத்துள் நுழைகின்றது. ஆக தனது ஆரம்பக் கல்வியை அது வீட்டிலேயே தொடங்கி விடுகின்றது. பெற்றோரிடமிருந்து முதற் சொற்களைப் பெற்றுக் கொள்ளுகின்றது.ஆக பெற்றோரின் பங்கு இங்கே மிக முக்கியமாகின்றது. பின் முறைசார் கல்வியை பாடசாலையில் தொடங்கும்போது ஆசிரியர், பெற்றோர், மாணவன் (மாணவி) என்ற மூன்று பகுதியினரும் சேர்ந்து செயல்பட வேண்டிய பகுதி தொடங்குகின்றது.
தமிழ் கற்பித்தல் என்னும் பகுதியை நாங்கள் எடுத்துக் கொண்டால், இங்கே "தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை" குழந்தைகளின் வயது, தேவை, கவரும் தன்மை, மொழியினூடாக எம் பண்பாட்டு விழுமியங்களை சேர்த்தளித்தல் போன்ற சிறந்த நோக்கங்களை முன்வைத்து, சிறப்பான முறையில் பாடத்திட்டங்களை அமைத்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது உலகம் முழுவதிலுமே. தனியே கேள்விக்கு விடை எழுதி அடுத்த வகுப்புக்கு ஏறுவது என்கின்ற நிலையை விடுத்து, ஒரு குழந்தை ஒரு கருத்தைக் காதால்   கேட்டு விளங்கி, அதுபற்றிய தனது கருத்தை கலந்து உரையாடி, பின் அது பற்றிய விபரத்தை தானாகவே வாசித்துப் விளங்கிக் கொண்டு பதில் எழுதுதலும் அதன் பின் பகுதியாக தன் கருத்தை தானே எழுத்தின் மூலமாக வெளிக் கொணர்தலையுமே நோக்காகக் கொண்டு கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்று நான்கு பகுதியாகப் பிரித்து கற்பிக்கப் படுகின்றது. பரீட்சை என்று வருட இறுதியில் வரும்போது எழுத்துமுறைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு என்று இரண்டு பகுதியாக குழந்தை வருடம் முழுவதும் செய்த வேலையை மதிப்பிடுகின்றார்கள்.இதிலே யாருடைய மேதாவித்தனமும் கிடையாது. அத்துடன் ஆசிரியர்களும் அடிக்கடி பயிற்சிப் பட்டறைகள் மூலம் புடம் போடப்பட்டு கற்பித்தலுக்கு அனுப்பப் படுகின்றார்கள் என்பது மிக முக்கியமான விடையம்.
இது தவிர மொழி என்பது மாற்றத்துக்குள்ளாகி வரும் ஒன்று. ஐரோப்பிய மொழிகளிலே அகராதிகள் புதிய சொற்களுடன் பதிப்பித்து வருதல் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல தமிழிலே கலந்துள்ள வேற்று மொழிச் சொற்களைக் களைந்து தனித் தமிழ் சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து பாட நூல்கள் இங்கே புதுப்பிக்கப் படவும் செய்கின்றன.
ஒரு இனத்தின் வெளிப்பாடே அதன் மொழியில் தான் தங்கியுள்ளது. இன்றைய நிலையில் நாங்கள் எமது வாழ்வையும், வரலாற்றையும் எமது குழந்தைகளுக்குக் கடத்துவது அவசியமான ஒன்று. அதுவும் நாங்கள் வீட்டிலே பேசுவது தமிழாயிருந்தால், குழந்தைக்குக் கடினம் என்றோ அல்லது முடியாது என்றோ சொல்ல முடியாது. பெரியவர்கள் நாங்கள் தான் கடினம் என்று ஒரு சாட்டை எமது சார்பிலிருந்து வைக்கப் பார்ப்போம். "ரதி" என்பவர் கூறிய கருத்துப் போல, உலக மொழிகள் அனைத்திலேயும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பயன் படுகின்றார்கள். நாங்கள் இரண்டு திருக்குறள் மனனம் செய்யச் சொன்னால் "உந்தத் திருக்குறள் இப்ப என்னத்துக்கு" என்று பெரியவர்கள் தான் கேட்பார்கள். மனனம் செய்யிறதே பிழை என்று சொல்ல வருபவர்களுக்கு ஒரு செய்தி; மனனம் என்பது ஞாபக சக்தியைத் தூண்டும் ஒரு செயல்பாடு. அந்த முறை எல்லா மொழிகளிலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. அண்மையில் இங்கு நடந்த ஒரு திருக்குறள் போட்டிக்கு நடுவராக சென்றிருந்தேன். பிள்ளைகள் திருக்குறள்களை மனனம் செய்திருந்தார்கள்; ஆனால் அதன் பொருளை தங்களது வார்த்தைகளில் விளக்கியதைக் கேட்டபோது எம்மினம் வீழாது என்ற ஒரு பெருமிதம் எனக்குள் தோன்றியது.
இதை விட பிரான்சில் தமிழ் மொழியை ஒரு மேலதிக பாடமாக உயர்தரப் பரீட்சைக்கு எடுக்கலாம் அதில் வரும் பத்திற்கு மேற்பட்ட புள்ளிகள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுடன் சேர்க்கப்படும்.எனவே இது ஒரு மேலதிக நன்மை.
உண்மையிலேயே எத்தனையோ ஆசிரிய ஆசிரியைகள் சனி, ஞாயிறு என்பதை விடுமுறையற்ற தொடர் நாட்களாகவே அர்ப்பணிப்புடன் பிள்ளைகளுடன் கழிக்கின்றார்கள். இப்படி அவர்கள் அலைவதன் நோக்கம் என்ன? வீட்டிலே படுத்து ஓய்வெடுக்க முடியாதா?
இதுவும் ஒரு எதிர்கால எதிர்பார்ப்பில் உள்ள நம்பிக்கைதான்.
குழந்தைகள் தெளிவாக உள்ளார்கள்.
நாங்கள் தெளிவாவோம்.
குற்றம் களைவோம்.
நல்லன நோக்குவோம்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

எதுவரை??

சோறு வடித்துக் கொண்டிருந்த தாரிணி வீட்டு முற்றத்திலிருந்த தனது மகனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கைகளால் மண்ணை அளைந்து கொண்டிருந்தான். கைகள்தான் செயல்பட்டதே தவிர தான் செய்யும் செயலுக்கான தெளிவு கண்களில் தெரியவில்லை. உடல் மெலிந்து  தலையை ஒரு பக்கம் சாய்த்து வைத்தபடி கால்கள் இரண்டையும் நீட்டி வைத்துக் கொண்டிருந்தான். பார்த்த  மாத்திரத்திலேயே அவனுடைய குறைபாடு புரியக் கூடியதாய் இருந்தது. எட்டு வயதுச் சிறுவனுக்குரிய செயல்பாடு எதுவும் அவனில் இல்லை. தாரிணிக்கு அவள் விரும்பாமலேயே கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வந்தது. சொல்லி அழ யாருமில்லை; அழுதும் பயனில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு கோப்பையில் சாப்பாட்டைப் போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். மகனைத் தூக்கி கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு சாப்பாட்டை ஊட்டி விடத் தொடங்கினாள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்த தன்னுடைய கைகளுக்குள் அடங்காமல் ஓடித்திரிந்த சுட்டிப் பையன், இன்று தான் தூக்கி வைத்து உணவு ஊட்டும் நிலைக்கு ஆளாகிப் போன கொடுமையை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் நொந்து கொண்டிருக்கிறாள். பரந்து பட்ட நோக்கத்தைக் கொண்டிருந்த அவள், இன்று தன்னிரண்டு பிள்ளைகளை நோக்கியே உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். சுவரில் எறியப்பட்ட பந்தாய் காவு கொள்ளப்பட்ட தேசத்திலிருந்து கணவனையும் பறி கொடுத்து விட்டு திரும்பி வந்தபோது, அண்ணா சொன்னார்: " தங்கச்சிக்குக் கலியாணம் இன்னும் ஆகேல்லை நீ இப்ப வந்தால் நாங்கள் என்ன செய்யிறது? எங்களுக்குக் கிட்ட ஒரு காணியிலை கொட்டில் போட்டுத் தாறன். இப்போதைக்கு அதில இரு பிறகு பாப்பம்".
 அவள் தனது ஒன்பது வயதான மூத்தவன் குட்டியுடனும் உடலும் மனதும் பாதிக்கப்பட்ட சின்னவனுடனும் அந்தக் கொட்டிலுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.
அவள் அவர்களிலிருந்து ஒதுங்கினாளே தவிர தன் நோக்கத்தில் இருந்து ஒதுங்கவில்லை. பிள்ளைகளோடு தன் முழு நேரத்தையுமே செலவிட்டாள். மூத்தவன் குட்டி படிப்பில் சுட்டியாயிருந்தான். தாயின் கண்ணீரைப் புரிந்திருந்தான். நல்லவர்கள் பூமியில் இன்னும் இருக்கிறார்கள் என்று உணர்த்தும் வகையில், தாராள மனம் படைத்தோர் அவளது நிலைக்கு உதவியது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. இருந்தாலும் வாய்விட்டு  உதவி கேட்க ஏதோ தடுத்தது. கிடைத்ததை வைத்து சமாளித்துக்  கொண்டிருந்தாள். ஆனால் சின்னவனுடைய மருத்துவச் செலவு எகிறியது. பெரியவன் குட்டியை அவள் இவ்வளவு சிரமத்துக்கிடையிலேயும் ஒரு தனி ஆசிரியரிடம் பாடசாலைக்குப் பிறகு படிக்க அனுப்பிக் கொண்டிருந்தாள். பாடசாலைக்கும் வீட்டுக்கும் அதற்குப்  பிறகு டியுசனுக்கும் என்று அவன் அலைவதும் அவனுடன் பயத்தில் அவளும் சின்னவனைத்  தூக்கிக் கொண்டு அலைவதும் சிரமமாக இருந்தது. அவள் சின்னவனையும் தூக்கிக் கொண்டு அலைய அவனுக்க அடிக்கடி காய்ச்சல்  வரத் தொடங்கியது.
ஒரு நாள் மாலை பாடசாலையிலிருந்து குட்டி  திரும்பியபோது, முகம் அவ்வளவு நன்றாக இல்லாமலிருந்தது. தாய் விபரம் அறிய முற்பட்டாள்.
"என்னப்பு? சுகமில்லையா?"......
"ஒண்டுமில்லை"......
தாரிணி கிட்ட வந்து நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். சுடவில்லை.வேறேன்னவாயிருக்கும்?.....
"என்னெண்டு சொன்னாத்தானே எனக்குத் தெரியும்?"
"நாங்கள் இஞ்ச வந்து நாலு வருஷமாகிது. நடந்து நடந்து நான் களைச்சுப் போட்டேன் அம்மா. எனக்கு ஒரு சயிக்கில் உங்களால வாங்கித் தர ஏலுமோ?....
 அப்பா இருந்திருந்தால் எனக்கு வாங்கித் தந்திருப்பார்.....
தாரிணிக்கு உண்மையாகவே நெஞ்சு வலித்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேச முடியாமல் இருந்தது.
"ம்ம்.... அப்பா இருந்திருந்தால் கட்டாயம் வாங்கித் தந்திருப்பார்."
"எல்லாப் பிள்ளையளும் பள்ளிக்கூடத்தாலை நேரத்தோடை வீட்டை வந்து, விளையாடி பிறகு படிக்க நேரம் இருக்கு, நான் மட்டும்தான் நடந்து வீட்டை வாறதுக்கிடையிலேயே களைச்சுப் போடுறன், ஒரு சயிக்கில் இருந்தால் நானும் கெதியிலை வீட்டை வந்திடுவன் ; டியுசனுக்கும் போய்வர வசதியா இருக்கும்".
குட்டி கள்ளமில்லாமல் தன்னுடைய ஆதங்கத்தை விளக்கினான். ஆனால் தாரிணி என்ன செய்வாள்? யாரிடம் கேட்பாள்? மகனுக்குக் கிட்ட வந்து முதுகைத் தடவிக் கொடுத்தாள்.
"பாப்பம்" என்றாள்.
மகன் அம்மாவை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவநம்பிக்கை தெரிந்தது. தாரிணி தலையைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டாள். அன்று இரவு முழுவதும் காலக் கொடுமையை நினைத்து ஆத்திரம் தீர திட்டித் தீர்த்து அழுது முடித்தாள்.
அடுத்த நாள் காலை தலையிடியுடன் தொடங்கியது. நேற்றிரவு சம்பவம் தாரிணி, மகன் இருவரையும் வெகுவாகப் பாதித்திருந்தது. மகனுக்கு சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பி விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசியவர்களிடம் சயிக்கிளுக்கான பணம் கேட்க வாய் துடித்தது. ஆனால் வார்த்தைகள் வெளி வர மறுத்தன.இன்னொருவரிடம் தன்னிலை சொல்லிக் கையேந்துவது கடினமாயிருந்தது.
இன்று மாலையிலும் குட்டி களைப்புடன் பாடசாலையிலிருந்து திரும்புவான்.......
அவனுக்கு யார் சயிக்கில் வாங்கிக் கொடுப்பார்கள்?

புதன், 24 அக்டோபர், 2012

தேடி....தேடி.....
தெளிந்து
வேகம் கொண்டெழுந்து
வாகை கண்டு
சலித்து
சுருண்டு...
மருண்டு...
கலங்கி
இன்னும் ஆழம் தேடி 
முன் தெளிந்தது
தெளியாததால்
வெளிக்கிளம்பும்
வாய் வார்த்தைகள்!
கொல்லும் பார்வை வீச்சு
சுட்டெரிக்கும் வார்த்தைகள்
புகைந்தெழும் பொறாமை
விரல் சுட்டும் வீண்கள்
அர்த்தமில்லா நகை
இவற்றுடன் சேர்த்து
உன்னையும்
விட்டெறிந்து பார்!
இப்போது
நீ ஒரு மனிதன்!
ஒன்று ஊர்ந்து வந்து
அமிழ்ந்து...
அதுவே பலவாய்
பலவும் ஒன்றாய்
விருட்சமாய்
நிமிர....
சுடுகாடே
சொந்தமாய்ப் போனது!!
பெற்ற தாய் கலங்கி நிற்க உடன்
பிறந்தவர் மௌனித்திருக்க
பொற்றமிழ் பேண நீ
பொறியாய்க் கிளம்பினாயே!
பெறு நல் செய்திக்காய்
பொறுமையாய்க் காத்து நிற்க
பெற்றதோவும் வித்துடல்
பொறுக்கவில்லையே!!!
பொறி கலங்கியுனைப்
பெற்றவள் இன்று
போக்கற்று நிற்கிறாளே!!
ஆசைக் கனவுகள்
ஆடிவரக் கண்ணிரண்டில்
ஆனந்தக் கூத்து
அற்புதமாய் கூடிவர
ஆங்கொரு
அனல்காற்று சுழன்றடித்து
அழித்தொழித்து வழித்தெடுத்து
ஆயிரம் காவியங்கள்
அள்ளித் தெளித்துப் போனதோ!!!!
ஆறாக் காயங்கள் வலியெடுக்க
மீண்டும் கிளறி ரணமாக்கி
குருதியோடும் நினைவுகள்
எம்மை விட்டகலா
காலமும்ஆற்றா
கண்ணீரும் ஆறா
நினைவுச் சுழிக்குள் அமிழ்ந்து
ஒவ்வொன்றாய் மேலெழும் தருணங்கள்
ஒவ்வொரு மீள் பிரசவங்கள்!
உயிர் கொடுத்து மீண்டெழுவதே...

குறிக்கோள்!
சோகங்கள் என்றும்
தொட்டதில்லை முகத்தில்
சொல்லில் வலிமை செயலைப் போலே
எம்பி மிதித்து மிதியுந்தில் மறைந்து பின்
காற்றாய் பறந்து ஈருருளியில்
ஈற்றில் வானம் தொட்டதிர்ந்த நேரம்
என் கண்களின் ஓரம் சிறு வெள்ளம்
எரியுண்டு பிளவுண்டு
துளையுண்டு அறுபட்டுப்
போனவை

உம் உடலங்களல்ல;
எம் மனங்கள்!
வீணா!
உம் ஈகம் என்றும் வீணா!
பரந்திருக்கும் பூமிப் பந்தின்
பசுமை நிறையோர் புள்ளிக்குள்
படபடத்துச் சிறகடித்து
பரவசமூட்டும் சிறுபுள்ளாய்
பவனி வந்த காலமது
பாழ் பட்ட யார் கண்ணோ
பட்டு நிலம் வீழ்ந்தொடிய
பகை சூழ்ந்து நகையெழுப்பி
பலியெடுத்த வெஞ்சினம்
பார்த்திருந்த விழி மடல்கள்

பதறிப் பரிதவித்து
பாரமாய் மூட மறுத்து
பாதியிரவில் இன்றும்
பீதியில் திறக்கும்

வியாழன், 18 அக்டோபர், 2012

ஊருக்குப் போக வேணும்!

தனராஜா! பெயருக்கேற்றாற்போல் ஊரிலேயே செல்வமும் செல்வாக்காயும் வாழ்ந்தது அவரது  குடும்பம். ஊரிலேயும் அருகிலேயும் பல நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம். நேரம் காலம் பார்க்காமல் சுழன்று உழைப்பவர்; உழைப்பின் பலன் தனமாய்க் கொட்டிக்  கொடுத்தது. அவர் கொஞ்சம் நியாயமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்.உதவி தேவைப்பட்டவர்களுக்குப் பார்த்துப் பாராமல் வழங்கினார்; காணிகள் இல்லாமல் தன்னுடைய காணிகளிலேயே வாழ்விடம் அமைக்க இடம் கொடுத்தார். இப்படி நல்ல விடையங்களை செய்தபடியால் தனராஜா ஊரிலே ஒரு மரியாதைக்குரிய ஆளாகிப் போனார். வெள்ளை வேட்டியும் அரைக்கைச் சட்டையுமே அவரது வழைமையான ஆடை. மெலிந்த உயரமான தோற்றம் கையில் ஒரு சுருட்டோடு காலை ஒன்பது மணியளவில் ஊரை ஒரு வலம் வருமாப்போல் கண்களால் அளந்தபடி தெருவில் நடக்கத் தொடங்கும்போது  முன்னால் வருபவர்கள் மரியாதையாக வழி விடுமாப்போல் சற்று விலகுவார்கள். ஆனால் அவரோ நின்று குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரித்துவிட்டே திரும்பவும் நடக்கத் தொடங்குவார்.  எப்போதுமே ஊர் நன்மை, முன்னேற்றம் இவற்றில் உண்மையான அக்கறையோடு செயல்படுபவர் தனராஜா.
 காலச் சுழற்சியில் இடப் பெயர்வுகள் தொடங்கியபோது கண் கலங்கிப் போனார். ஒவ்வொரு குடும்பமாக கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடியபோதும் அவர் சுருட்டுடன் ஊரை வலம் வந்தார். பெற்ற ஆறு பிள்ளைகளில் இரண்டு பேரே அவரோடு இருந்தனர். கடைசியில் அவரை கட்டாயப் படுத்தியே ஊரை விட்டுக் கூட்டிச் சென்றனர். மகள் வேணி வாழ்க்கைப் பட்ட ஊருக்கு வந்து சேர்ந்து,  ஒரு வெளிநாட்டில் வாழும் தமிழரின் வாடகை வீட்டில், ஒட்டாத நாட்களை எண்ணத் தொடங்கினர். அவருக்கு மருமகனுடைய வீட்டில் இருக்க விருப்பமில்லை. மகளாயிருந்தாலும் தள்ளி இருந்தால் சிக்கல்களையும் தூரவே வைத்துக் கொள்ளலாம் என்று அனுபவ ரீதியாகக் கண்டு கொண்டவர் அவர். வேணிக்கு  கவலையாக இருந்தது; ஆனாலும் அப்பாவின் பிடிவாதத்தை மாற்ற முடியாது என்று தெரிந்த படியால் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாட்டை செய்து எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டு வருவாள்.
வேணியின்  ஊரும் ஒரு நாள் பெயர்ந்தது. அப்பா அம்மாவுடன் வேணியின்  குடும்பமும் இன்னொரு இரவல் வீட்டில் குடி அமர்ந்தனர். இப்போது அப்பாவால் மகளைத் தனியே இருக்கச் சொல்ல முடியாத நிலைமை. நாட்கள் வெறுமனே கரையக் கரைய அப்பாவின் நிமிர்ந்த நேர் நடையில் மாற்றம் தெரிந்தது. நடையில் தள்ளாட்டமும் பேச்சில் தடுமாற்றமும் தெரிந்தது. அம்மாவுக்குப் பயமாக இருந்தது. மகளுக்கும் பயம் தொற்றிக் கொள்ள அப்பாவோடு பேச முயற்சி செய்தாள். ஆனால் அப்பா வார்த்தைகளை மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தார். நிலைமையின் தீவிரத்தன்மையை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
ஒரு நாள் இரவு அம்மா "ஐயோ பிள்ளை" என்று கத்திய சத்தத்தில் வேணியும்  மருமகனும் பாய்ந்தோடிப் போய்ப் பார்த்தபோது, அப்பா நிலத்தில் வாய் ஒரு பக்கம் கோணி இழுத்தபடி கிடந்தார். வேணி அம்மாவோடு சேர்ந்து கத்தினாள். மருமகன் வெளியே ஓடிப் போய் ஏதாவது வாகனம் கிடைக்குமா என்று தேடியலைந்து ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு வானோடு வந்து சேர்ந்த போது, அப்பாவுக்கு  முழுமையாக ஒரு பக்கம் செயலிழந்து விட்டிருந்தது தெரிந்தது. இருந்தாலும் தூக்கிக் கொண்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேர்த்தார்கள். எல்லாரும் வந்து பரிசோதித்து, ஒரு கிழமை வெறும் வைத்தியத்துக்குப் பிறகு  "நீங்கள் வீட்டில கொண்டுபோய் வைச்சுப் பாக்கிறது நல்லது" என்று சொல்லி விட்டுப் போய் விட, அப்பாவை வீட்டிலே கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அப்பா இப்போதெல்லாம் ஏதோ பேச முயற்சி செய்வது தெரிந்தது; ஆனால் விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது. அம்மா சில வேளைகளில் காதைக் கிட்ட வைத்து கேட்க முயற்சி செய்வா; ஆனால் அப்பாவின் உதடுகள் மட்டும்தான் அசையும். சத்தம் அனுங்கலாகக் கேட்கும். எதுவுமே விளங்காது. களைத்துப் போய் அம்மாவின் கையை கோபத்தில் தட்டி விட்டுக் கண்களை மூடிக் கொள்ளுவார். அம்மா சோர்ந்து போய் அழத் தொடங்குவா. யாழ்ப்பாணம் அமுக்கப்பட, அடுத்த புறப்பாடு தொடங்கியது. எல்லாரும் வெளிக்கிட, அப்பா ஏதோ சொல்ல கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மகள் அப்பாவுக்குக் கிட்டப் போனாள். "என்ன அப்பா?" அப்பா ஒரு கையைத் தூக்கி  தூரக்  காட்டினார். "போ...போ ஏ.... என்று வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் திணறினார். "நாங்கள் எங்கயாவது போக வேணும் இஞ்ச இருக்கேலாது" என்றாள் வேணி . அப்பா தான் வரவில்லை என்பது போல சைகை காட்டினார். "அப்பா நாங்கள் போற இடத்தில தம்பியையும் பாக்கலாம்" என்றாள் வேணி . அப்பா மகளை உற்றுப் பார்த்தார். "ஓமப்பா தம்பியை வந்து ஏலுமெண்டால் பாக்கச் சொல்லி சொல்லி அனுப்பியிருக்கிறன்". அப்பாவுக்குக் கண்களில் நீர் துளிர்த்ததை மகள் முதல் தடவையாகப் பார்த்தாள். அப்பா திரும்பவும் பேச வாயெடுத்து முடியாமல் கண்களை மூடிக் கொண்டார்.
  அடங்காப் பற்றை அடைந்தபோது தான் அங்கேயுள்ள கஷ்டம் தெரியத் தொடங்கியது. சூழலும், தொடர் காய்ச்சலும் வாட்டிஎடுக்க அப்பாவுக்கு உகந்த இடம் இதுவல்ல என்று முடிவெடுத்து மீட்டும் யாழ்ப்பாணம் திரும்ப முடிவெடுத்திருந்த ஒரு  நாளில் செந்தூரன் திடீரென்று வந்தான். அம்மா ஓவென்று அழுதா. அவன் அப்பாவுக்குக் கிட்டப் போய் இருந்து அவருடைய கையைப் பிடித்தான்.  அப்பா அந்தரப் பட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தார். அவன் இன்னும் நெருங்கிப் போய் அப்பா சொல்ல வருவதை விளங்க முயற்சித்தான். அப்பா கஷ்டப்பட்டு "ஒ...ஊ...ரூ....கக்கு......போ....வெ...னும்." என்றார். அவனுக்கு இப்போது அப்பா சொல்வது விளங்கியது. அப்பாவின் கைகளை இறுகப் பிடித்தபடி  "ஓமப்பா நாங்கள் கட்டாயம் ஊருக்குப் போவம், நான் வந்து கூட்டிக் கொண்டு போறன்" என்றான். அப்பாவின் கண்களில் ஒரு நிம்மதி வந்தது.

திங்கள், 8 அக்டோபர், 2012

நளாயினி

நளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு துணைக்கு இருந்து அம்மாவை ஒரு வேலையும் செய்ய விடாமல் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அத்தோடு சில சிறிய வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டின் ஒரு பகுதியிலே பின்னேரங்களில் படிப்பித்தும்  கொண்டிருந்தாள். அவளை ஒரு தடவை பார்த்தால் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் போல ஒரு ஆவலைத் தூண்டும் கொள்ளை அழகு அவளுடையது. எத்தனையோ பேர் கண்ணடித்துப் பார்த்தார்கள்; கடிதம் கொடுத்துப் பார்த்தார்கள். நளாயினியின் கவனத்துக்கு எதுவுமே வரவில்லை.வலிகாமம் வடக்கு அகதியானபோது மிகச் சிறுமியாயிருந்தவள், பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, வன்னி, மீண்டும் யாழ்ப்பாணம் என்று திரும்பியபோது திருமண வயதை எட்டியிருந்தாள். திருமணம் என்றால் சும்மாவா? எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார்கள் பெற்றோர். சில இடங்கள்  மாப்பிள்ளை "படிக்கவில்லை", சில இடங்கள் "பெருத்த குடும்பம்", சில இடங்கள் "அவை எங்களை விடக் கொஞ்சம் குறைவு", என்று நிறைய இடங்கள் தட்டுப் பட்டுக் கொண்டே போனதில் நளாயினிக்கு இன்னும் இரண்டு வயது ஏறிப் போனது.  
இந்தக் கால கட்டத்தில் லண்டனில் இருக்கும் சித்தப்பா "என்ன எவ்வளவு காலமா  மாப்பிள்ளை தேடுறியள்? விடுங்கோ நான் இஞ்சை அவளுக்கு மாப்பிள்ளை  பாக்கிறன்" என்று வீராப்பாக தான் ஒரு பக்கத்தால் தேடத் தொடங்கினார். இவரால மட்டும்தான் மாப்பிள்ளை தேட முடியுமோ நான் மாப்பிள்ளை எடுத்துக் காட்டுறன்  என்று  பிரான்சில இருக்கிற மாமா, மாமியின்ர தங்கச்சி குடும்பம் என்று எல்லாரும் ஒவ்வொரு பக்கத்தால மும்முரமாகத்  தேடத் தொடங்கினர். ஆனால் எல்லாரும் நினைத்தது போல அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை மாப்பிள்ளை தேடுவது. சரியாய் வரும் என்ற நோக்கத்தில் அணுகினவர்கள் நாட்டிலே இருந்து பெண் எடுப்பதை விரும்பவில்லை. தாங்கள் படித்த படிப்புக்கு அங்கேயிருந்து பெண் வந்து மொழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. இங்கேயே படித்த பிடித்த பெண்ணைத் திருமணம் செய்வதை விரும்பினார்கள்.
ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து லண்டன் சித்தப்பாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தது. சித்தப்பாவுக்கு ஒரே புழுகம் தான் முதலில் மாப்பிள்ளை தேடியதையிட்டு. அதுக்கும் சும்மா இல்லை இஞ்சினியர் மாப்பிள்ளை. மாப்பிள்ளையைப் பற்றி சரியாக விசாரிக்கும் படி நளாயினியின் அம்மா திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டாள். வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் பழக்க வழக்கங்களில் அவளுக்கு ஒரே சந்தேகம்.ஒரே ஒரு மகளை சிக்கலில்லாத இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டாத கடவுளில்லை. சித்தப்பா விசாரித்ததில் குடும்பத்தைப் பற்றி எல்லோருமே நன்றாகச் சொன்னார்கள். மகனைப் பற்றி சில தவறான தகவல்களும் வந்தன. சித்தப்பா விடாமல் எட்டத்தால் விசாரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இந்தச் சம்பந்தத்தை விட விருப்பமேயில்லை. இஞ்சினியர் மாப்பிள்ளை எல்லோ!
பிரான்சில இருக்கிற மாமாவுக்கு தனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்ற கவலையோடு, சித்தப்பா பார்த்த மாப்பிள்ளை அவ்வளவு சரியில்லை என்ற பேச்சும் வந்து சேர, அவர் உடனேயே சித்தப்பாவுடன் தொடர்பு கொண்டார். "நீ பாத்திருக்கிற மாப்பிள்ளை ஆரோ ஒரு பெட்டையோட சுத்துறானாம்; தெரிஞ்சு கொண்டு என்னெண்டு எங்கடை பிள்ளையைக் குடுக்கிறது?" என்று குதித்தார். "இஞ்ச பெடியள் எண்டா ஒரு வயசில அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்கள்; பிறகு கலியாணம் கட்டினாப் பிறகு ஒரு ஒழுங்குக்கு வந்திடுவாங்கள். அந்த தாய் தகப்பன் நல்ல ஆக்கள்; அதுகள் சீதனம் கூட ஒண்டுமே வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டுதுகள். இத விட நல்ல சம்பந்தம் எங்களுக்குக் கிடைக்காது" என்று சொல்லி முடித்தார் சித்தப்பா. "அப்பா அந்தப் பெட்டை என்னெண்டாலும் பிரச்சனை செய்தால்?.... " "அந்தத் தாய் தகப்பனுக்கு அந்தப் பெட்டையைப் பிடிச்சிருந்தால் ஏன் கட்டி வைக்காமல் இருக்கினம்? அதுகள் அவனை அதுக்குளால வெளியாலை எடுக்கிறதுக்குத்தான் இப்ப கலியாணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கினம்; இப்பிடி ஒரு இஞ்சினியர் மாப்பிள்ளை எங்கடை பிள்ளைக்கு  ஊரில கிடைக்குமோ?" என்று தனது வாதத்தை சளைக்காமல் முன் வைத்தார் சித்தப்பா. மாமாவுக்கு பிடிக்கவில்லை "இதுகளாலை பிறகு பிரச்சனை வந்தா எங்கடை பிள்ளைக்குத்தான்  கஷ்டம்" என்று சொல்லி விட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.
சித்தப்பா அசரவில்லை. காலத்தைக் கடத்தாமல் நளாயினியை முகவர் மூலமாக  விரைவிலேயே லண்டனுக்கு அழைப்பித்துக் கொண்டார். பலர் எச்சரித்திருந்தும் தட்டி விட்டு விட்டு சித்தப்பா திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தார். நளாயினிக்குக் கூடப் பெருமையாக இருந்தது. இவ்வளவு ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அதை விட அழகான படித்த கணவன்! "நான் அதிர்ஷ்டசாலி" என்று எண்ணிக் கொண்டாள்.
திருமண நாளன்று எல்லாமே மகிழ்ச்சியாக இருந்தன. எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தனர். கொண்டாட்டக் களைப்பு போகவே கொஞ்ச நாள் எடுக்கும் போல இருந்தது. இந்த அமளிகளுக்குள் நளாயினி எதையுமே கவனிக்கவில்லை. கணவன் பிரேம் விரைவிலேயே வேலையைத் தொடங்கியிருந்தான். ஆனால் வீட்டுக்குத் தாமதமாக வந்து கொண்டிருந்தான். முதல் சில நாட்கள் அவளுக்கு அதைப் பற்றிக் கேட்கவே பயமாக இருந்தது. ஆனால் தொடர்ந்தும் அவன் வீட்டில் இருக்கும் நேரம் அருகிப் போகவே அது பற்றி கேட்க முற்பட்டபோதுதான் தான் எப்படிப்பட்ட பயங்கரத்துக்குள் வந்து மாட்டிக் கொண்டுள்ளேன் என்பது புரிந்தது.
 "நீ நினச்சனியா நான் உன்ர வடிவில மயங்கிக் கலியாணம் செய்தனான் எண்டு?" என்று அவன் கேட்டபோது அவளுடைய பேரழகு அவளைப் பார்த்துச் சிரித்தது.
 "இந்த வயது போனதுகளின்ர ஆக்கினைக்காகத்தான் நான் ஓம் எண்டனான்" என்றபோது எங்களுடைய குடும்ப உறவுகள் என்னவென்றாகிப் போனது.
 "நான் என்ர  கேர்ல் பிரெண்ட் ஓட இருக்கிறனான் எண்டு தெரிஞ்சுதானே என்னைக் கட்ட ஓமெண்டு சொன்னனீ " என்று அவன் வார்த்தைகளால் விளாசியபோது திருமணத்தில் எதிர்பார்க்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யாருமற்ற பூமியில் தன்னந்தனியே தான் மட்டும் நின்று கொண்டிருக்கும் உணர்வு தோன்ற பயத்தில் உடம்பு சோர்ந்து நடுங்குமாப்போல் இருந்தது.   இனி என்ன செய்வது என்ற கேள்வி முன்னாலே பெரிதாக எழுந்தது. உண்மையிலேயே அவளுக்கு இந்த விடையம் மறைக்கப் பட்டிருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து தன்னைப் பாழுங்கிணற்றில்  தள்ளி விட்டார்களே என்று கோபம் வந்தது.
மாமா, மாமியார் தனக்காகப் பரிந்துரைப்பார்கள் என்று அவர்களைப் பார்த்தாள்; அவர்களால் எதுவுமே செய்ய முடியாதிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்து யோசித்துப் பார்த்தாள். பிறகு எழுந்து சித்தப்பாவுக்கு தொலைபேசி எண்களை அழுத்தினாள். சித்தப்பா தொடர்பில் வர "என்னை இப்ப வந்து கூட்டிக் கொண்டு போங்கோ, இஞ்சை என்னால இருக்கேலாது" என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டுத் திரும்ப மாமி முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போனார். நளாயினி போட்டிருந்த நகைகள் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு ஊரிலேயிருந்து வந்தபோது போட்டிருந்த சின்னக் கல்லுத்  தோட்டையும்,  சங்கிலியையும், இரண்டு சோடிக் காப்புக்களையும் போட்டுக் கொண்டு தன்னுடைய உடுப்புக்களை மாத்திரமே அடுக்கி எடுத்தாள்.

சனி, 6 அக்டோபர், 2012

நிகழ்காலம்


பயணம் நீண்டதாயிருக்கிறது; மிக மிக நீண்டதாயிருக்கிறது. சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலிருக்கிறது . உண்மையிலேயே வெகு தூரத்திலிருக்கிறது என்று தெரிந்தே தொடங்கப் பட்டது இந்தப் பயணம். நம் பார்த்திராத இடர்க் காலங்கள் அடங்கலாக இந்தப் பயணத்தின் துன்பச் சுமை நீண்டு செல்வது வரலாற்று துரதிர்ஷ்டம். ஆனால் சேரிடம் பற்றிய கருத்தில் மாற்றுக் கருத்துக்கள்  இல்லை. பயணம் பற்றிய தெளிவு இல்லாதிருந்திருந்தால் அதிர்ச்சியாய் இருந்திருக்கக் கூடும்; ஆனால் எவ்வழியிலும் எதையும் எதிர்பார்த்ததே!
வழிகள் பலவிருந்தும் சரியானதென்று தென்பட்டதை தேர்ந்து கொண்டு அதில் பயணிப்பது உலக வழமை. ஒன்று தோன்றுவதும் அதன் வீரியம் குறைந்து இன்னொன்று அதை விடச் சிறந்ததாகத் தோன்றி பின் அதில் பயணிப்பதும், அல்லது ஒன்று இன்னொன்றை  வீழ்த்திப்பலம் கொண்டெழ அதனுடன்  தொடர்ந்து பயணிப்பதும் வரலாற்று நிகழ்வுகள்.
ஆனால் மிகப் பலமாய், முன்பை விடப் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய ஒரு காலப் பகுதியில் ஒருவர் நெஞ்சிலும் முதுகிலும்  ஒருவர் குத்திக் கொள்வதிலேயே காலத்தைக் கழிப்பது சரியா?  சுயநலன்களைப் பேணுவதிலேயும், பொறாமைப் போட்டியில் வெந்து சாவதிலேயும், பெரியவன் யார்? என்று முன் பின் தள்ளுவதிலேயும் கண்டு கொண்டிருக்கும் பயன் என்ன?
"மனித நாகரிகம்" பற்றிப் பேசுகின்றோம். "மனித நேயம்" பற்றிப் பேசுகிறோம். இவற்றிலே மேம்பாட்டு  நிற்கின்ற இனம் என்றும் பேசிக் கொள்ளுகின்றோம். ஆனால் செயலளவில் இவையனைத்தும் எங்கே போயிற்று? ஒருவர் இல்லாத இடத்திலே அவரைப் பற்றிப் பேசக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏனென்றால் அதே அவர்கள் சேர்ந்து சிறிது நேரத்தில் எம்மைப் பற்றி பேசத் தொடங்கக் கூடும். பிழையான புரிந்துணர்வுடன் இருப்பதை விட நேரிலே பேசிப் புரிந்து கொள்ளுதல் ஆரோக்கியமான விடையம் என்பதுடன் கருத்துப் பகிர்வு என்பதற்கும் அங்கே இடமிருக்கும்.
அதை விடுத்து மாறி மாறிச் சேறள்ளிப் பூசுவதால் எதிர் விளைவுகள் அனைவரையும் பாதிப்பதாகவே அமைந்து விடுகின்றது. கடந்த காலம் என்பது நிகழ்ந்து முடிந்த ஒன்று. கசப்பான ஒன்றைக் கடந்து இப்போது நின்று கொண்டிருப்பது நிகழ்காலம். நின்று கொண்டிருக்கும் காலத்திலிருந்து  நேற்று இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், இது இவர்  பிழை, அது அவர் பிழை என்று விவாதிப்பதினால் மாண்டவர் மீண்டு விளக்கம் கொடுக்கப் போவதுமில்லை; வரலாறு மீழப் போவதுமில்லை. இப்போதைய தேவை என்ன என்ற கேள்வியே இங்கே முக்கியப்படுத்தப் பட வேண்டிய ஒன்று. அதன் செயற்பாடுகளே தேவைக்குரியவையாகி  நிற்கின்றன. இது ஒரு மிகப் பெரிய பழு; எல்லோரும் சேர்ந்து தூக்க வேண்டிய பழு. தூக்கியே ஆக வேண்டிய கடமைப் பழு. இதை அலட்சியப் படுத்தினால் வரலாறு மன்னிக்காது எம்மை. சாகும்வரை குற்றவுணர்வு சூழ்ந்து மெது மெதுவாகக் கொல்லும்.
இதில் "சேர்ந்து" என்கின்ற பதம்தான் இப்போதைய சிக்கல். இந்த விடையத்தை சிறுவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய உதாரணம் இதற்குச் சொல்லலாம். ஒரு தடவை நான் கற்பித்த மாணவ, மாணவியரிடம் "இந்தத் தடவை நான் எதுவுமே எழுதித் தர மாட்டேன், நீங்களாகவே ஒரு கருவை உருவாக்கி அதை நாடகமாக்கி ஒரு நிகழ்வில் செய்ய வேண்டும் " என்றேன். தாங்களாகவே உருவாக்கி, பாத்திரப் படைப்புக்களையும் தங்களுக்குள்ளேயே பிரித்து சிறப்பாக நடித்திருந்தார்கள். எந்தவிதமான முணுமுணுப்புக்களோ, குற்றச்சாட்டுக்களோ எதுவுமே எழாமல் இணைந்திருந்தனர். பெற்றோர் வாயடைத்துப் பார்த்திருந்தனர். இதனை பெரியவர்களிடம் எதிர்பார்ப்பது கடினமாயிருக்கிறது. சேர்ந்திருந்தோம் ஒரு காலத்தில்; ஆனால் இப்போது எப்படி இப்படி ஆயிற்று?எமக்கு ஆதாயம் வரும்போது மட்டும் சேர்வோம்; இல்லையென்றால் ஆயிரம் காரணங்களை கூடவே வைத்திருப்போம் கேட்டால் எடுத்துவிட. மாறி மாறி அம்பாய்ப் பாய்ச்சக் கூடிய  குற்றச்சாட்டுக்களை  கைவசம் வைத்திருக்கிறோம். விளைவு?  மனக் கசப்புக்கள், சோர்வு, விரக்தி இவற்றுடன் சிறிய விரிசல்கள் மிகப் பெரிதாகி இன்று பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கின்றன பயனின்றி. சிதறிக் கிடப்பதால் பயனில்லை என்று தெரிந்தும் ஓட்ட வைக்க முயற்சிப்பாரின்றி இருப்பது வேதனையான விடையம்.
நிற்பதுவோ நிகழ்காலம்; தேவையோ பணிக்காலம்.

தனியாய் நின்றால் மரம், அதுவே சேர்ந்து நின்றால் தோப்பு. பயன்களும் அதற்கேற்றபடியே கிடைக்கும்.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"

திங்கள், 1 அக்டோபர், 2012

ஆச்சி

ஆச்சி (அப்பம்மா) என்றால் சீலனுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மெலிந்த தோற்றமுடையவர் ஆச்சி. ஆனால் குரல் கம்பீரமாயிருக்கும். ஊரிலேயே அதிக காலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆச்சி மட்டும் தான். அந்தக் காலத்திலே ஆறாம் வகுப்புப் படித்தவர். தமிழ் இலக்கணச் சூத்திரங்களும், திருக்குறள்களும் மற்றும் பல நூல்கள் பற்றியும் அந்த வயதிலேயும் ஒரு பிழையும் இல்லாமல் ஞாபகமாகச் சொல்லிக் காட்டுவார். பழைய கதைகள் நிறையச் சொல்லுவார். சீலனுக்கும் மற்றும் அவனது நண்பர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். தன்னுடைய ஆச்சியைப் பற்றிப் பெருமையாக எண்ணிக் கொள்ளுவான். தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ளுவார். தனக்குப் பிடிக்காத விடையங்கள் ஏதாவது வீட்டிலே நடந்தால் புறுபுறுத்துக் கொண்டு அங்கேயும் இங்கேயுமாகத் திரிவார். பிறகு வாசல் படியிலே வந்து குந்தியிருந்து விடுவார். வீட்டிலே அண்ணா அக்காமார் இருந்தும் இவன் கடைக்குட்டி என்பதாலேயோ என்னவோ ஆச்சிக்கும் இவனைப் பிடிக்கும். சாப்பாடுகளை இவனுக்கு மட்டுமே ஒழித்து வைத்துக் கொடுப்பார் ஆச்சி. சீலன் இரவிலே ஆச்சியைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் படுப்பான்; அம்மாவைத் தேட மாட்டான். ஐயாவுக்கும் (அப்பாவை இப்படித்தான் கூப்பிடுவான்) அம்மாவுக்கும் கூட ஆச்சியிலே நல்ல விருப்பம். ஆனால் ஆச்சி தொணதொணக்கும் சமயங்களில் "சும்மா பேசாமல் இரணை" என்ற ஐயாவின் உறுக்கலில் ஆச்சி பெட்டிப் பாம்பாக அடங்கிப் போவார். அப்போது பார்க்க பாவமாக இருக்கும் அவனுக்கு.
 அம்மா எப்போதாவது தான் மிகவும் அவசரமாக வெளியே செல்லும் தருணங்களில் ஆச்சியைச் சமைக்கச் சொல்லும்போது மிகச் சந்தோஷமாகச் சமையல் செய்வா. எங்களுக்கும் ஆச்சியின் சமையல் நல்ல விருப்பம். எல்லாக் கறி வகைகளையும் நல்ல பிரட்டல் கறிகளாக வைப்பா ஆச்சி. ஆறு பேர் உள்ள சீலனின் குடும்பத்தில் மூன்று பேருக்கான கறிதான் ஆச்சி சமைத்த கறிச் சட்டிக்குள் இருக்கும். பிறகென்ன அதற்கும் வந்து அம்மா "ஆம்பிளையள் இருக்கிற வீட்டில கொஞ்சம்  உண்டனக்  கறி வைக்கப் படாதோ" என்று தொடங்குவா.
காலங்கள் உருண்டோடிக் கொண்டிருக்க சீலன் இளைஞனாகி ஐரோப்பிய நாடொன்றுக்குள் தஞ்சமடைந்து கொண்டான். இடப் பெயர்வுகள் தொடங்கின. அண்ணா, சீலன், அக்கா என்று எல்லோருமே நாட்டை விட்டு வெளியேறி விட, அங்கே இருந்த ஒரு அண்ணாவுடன் ஐயா, அம்மா, ஆச்சி சேர்ந்து இருந்தார்கள். ஆச்சிக்கு இப்போது கண்கள் மங்கி தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அம்மாவுடைய உதவியுடனேயே எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தா என்று அறிந்த போது சீலனுடைய மனம் ஆச்சிக்காக அழுதது. ஆச்சியின் தொண தொணப்பு குறைந்து போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
 எங்களுடைய இடப்பெயர்வு ஒன்றா இரண்டா? ஓரிடத்தில் போய் இருப்பதும், பிறகு தூக்கிக் கொண்டு மற்ற இடத்துக்கு ஓடுவதும், பிறகு அங்கேயிருந்து கிளம்புவதுமாக ஓட்டமே வாழ்க்கையாகி எல்லோரையுமே நலிய வைத்து விட்டது. ஓடும் போது அண்ணன் தன்னுடைய பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் மட்டுமே கவனிக்கக் கூடியதாக இருந்தது. ஐயாவும், அம்மாவும், ஆச்சியும் அவர்களுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர். ஆச்சியால் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டபோது ஐயா தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார். இதைக் கேள்விப் பட்ட சீலனுக்கு துக்கம் தாள முடியவில்லை. ஏனென்றால் ஐயாவுக்கே 72  வயதைத் தாண்டியிருந்தது. அம்மாவுக்கு நீரிழிவு நோய் என்று சிக்கல்கள் புதிது புதிதாகத் தோன்றியிருந்தன.
சீலன் தன்னால் முடிந்த அளவுக்கு பணத்தை மட்டுமே அனுப்ப முடிந்தது. இடையில் ஒரு தடவை அம்மாவுடன் தொலை பேசியில் பேசும் போது, "அம்மா உங்களுக்கு உதவிக்கு யாரையாவது ஒழுங்கு செய்யட்டுமா?" என்று கேட்டான். ஒரு சில வினாடி மவுனத்திற்குப் பிறகு "உனக்கு மட்டும்தான் ஆச்சியோ? அவ எங்களுக்கும் ஆச்சிதான், கடைசி மட்டும் நாங்கள் தூக்கிக் கொண்டு ஓடுவம்" என்று பதில் சொன்ன போது, எல்லோரும் ஆச்சி மேல் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து கண்ணீரே வந்தது. ஆச்சியோடு தொலை பேசியில் கதைக்கவும் முடியவில்லை. அவவுக்கு இவன் கதைப்பதை கேட்கவே முடியாத நிலைமை ஏற்பட்டு இருந்தது. சில நாட்களில் ஆச்சி படுத்த படுக்கையாகி அதிகம் அழுந்தாமல் போய் சேர்ந்து விட்டார். சீலன் கண்ணீர் விட்டு அழுதான். மூப்பும், இறப்பும் இயற்கைதான்; ஆனால் உறவுகளைப் பிரிந்து  நாடோடிகளாக அலைந்து சோர்வுண்டு, அதனாலேயே நோய்வாய்ப் பட்டு இறப்பது  இயற்கைக்கு முரணாகப் பட்டது சீலனுக்கு. எல்லோரையும் விட்டுப் பிரிந்து வந்தது பிழையோ என்ற குற்றவுணர்வு குத்தியது. ஆச்சி இறந்த கொஞ்சக் காலத்திற்குள் ஐயாவும் நோய் தாக்கி இறந்து போனார். இப்போது இருப்பது சீலனுக்கு அம்மா மட்டுமே!