வியாழன், 18 அக்டோபர், 2012

ஊருக்குப் போக வேணும்!

தனராஜா! பெயருக்கேற்றாற்போல் ஊரிலேயே செல்வமும் செல்வாக்காயும் வாழ்ந்தது அவரது  குடும்பம். ஊரிலேயும் அருகிலேயும் பல நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம். நேரம் காலம் பார்க்காமல் சுழன்று உழைப்பவர்; உழைப்பின் பலன் தனமாய்க் கொட்டிக்  கொடுத்தது. அவர் கொஞ்சம் நியாயமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்.உதவி தேவைப்பட்டவர்களுக்குப் பார்த்துப் பாராமல் வழங்கினார்; காணிகள் இல்லாமல் தன்னுடைய காணிகளிலேயே வாழ்விடம் அமைக்க இடம் கொடுத்தார். இப்படி நல்ல விடையங்களை செய்தபடியால் தனராஜா ஊரிலே ஒரு மரியாதைக்குரிய ஆளாகிப் போனார். வெள்ளை வேட்டியும் அரைக்கைச் சட்டையுமே அவரது வழைமையான ஆடை. மெலிந்த உயரமான தோற்றம் கையில் ஒரு சுருட்டோடு காலை ஒன்பது மணியளவில் ஊரை ஒரு வலம் வருமாப்போல் கண்களால் அளந்தபடி தெருவில் நடக்கத் தொடங்கும்போது  முன்னால் வருபவர்கள் மரியாதையாக வழி விடுமாப்போல் சற்று விலகுவார்கள். ஆனால் அவரோ நின்று குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரித்துவிட்டே திரும்பவும் நடக்கத் தொடங்குவார்.  எப்போதுமே ஊர் நன்மை, முன்னேற்றம் இவற்றில் உண்மையான அக்கறையோடு செயல்படுபவர் தனராஜா.
 காலச் சுழற்சியில் இடப் பெயர்வுகள் தொடங்கியபோது கண் கலங்கிப் போனார். ஒவ்வொரு குடும்பமாக கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடியபோதும் அவர் சுருட்டுடன் ஊரை வலம் வந்தார். பெற்ற ஆறு பிள்ளைகளில் இரண்டு பேரே அவரோடு இருந்தனர். கடைசியில் அவரை கட்டாயப் படுத்தியே ஊரை விட்டுக் கூட்டிச் சென்றனர். மகள் வேணி வாழ்க்கைப் பட்ட ஊருக்கு வந்து சேர்ந்து,  ஒரு வெளிநாட்டில் வாழும் தமிழரின் வாடகை வீட்டில், ஒட்டாத நாட்களை எண்ணத் தொடங்கினர். அவருக்கு மருமகனுடைய வீட்டில் இருக்க விருப்பமில்லை. மகளாயிருந்தாலும் தள்ளி இருந்தால் சிக்கல்களையும் தூரவே வைத்துக் கொள்ளலாம் என்று அனுபவ ரீதியாகக் கண்டு கொண்டவர் அவர். வேணிக்கு  கவலையாக இருந்தது; ஆனாலும் அப்பாவின் பிடிவாதத்தை மாற்ற முடியாது என்று தெரிந்த படியால் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாட்டை செய்து எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டு வருவாள்.
வேணியின்  ஊரும் ஒரு நாள் பெயர்ந்தது. அப்பா அம்மாவுடன் வேணியின்  குடும்பமும் இன்னொரு இரவல் வீட்டில் குடி அமர்ந்தனர். இப்போது அப்பாவால் மகளைத் தனியே இருக்கச் சொல்ல முடியாத நிலைமை. நாட்கள் வெறுமனே கரையக் கரைய அப்பாவின் நிமிர்ந்த நேர் நடையில் மாற்றம் தெரிந்தது. நடையில் தள்ளாட்டமும் பேச்சில் தடுமாற்றமும் தெரிந்தது. அம்மாவுக்குப் பயமாக இருந்தது. மகளுக்கும் பயம் தொற்றிக் கொள்ள அப்பாவோடு பேச முயற்சி செய்தாள். ஆனால் அப்பா வார்த்தைகளை மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தார். நிலைமையின் தீவிரத்தன்மையை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
ஒரு நாள் இரவு அம்மா "ஐயோ பிள்ளை" என்று கத்திய சத்தத்தில் வேணியும்  மருமகனும் பாய்ந்தோடிப் போய்ப் பார்த்தபோது, அப்பா நிலத்தில் வாய் ஒரு பக்கம் கோணி இழுத்தபடி கிடந்தார். வேணி அம்மாவோடு சேர்ந்து கத்தினாள். மருமகன் வெளியே ஓடிப் போய் ஏதாவது வாகனம் கிடைக்குமா என்று தேடியலைந்து ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு வானோடு வந்து சேர்ந்த போது, அப்பாவுக்கு  முழுமையாக ஒரு பக்கம் செயலிழந்து விட்டிருந்தது தெரிந்தது. இருந்தாலும் தூக்கிக் கொண்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேர்த்தார்கள். எல்லாரும் வந்து பரிசோதித்து, ஒரு கிழமை வெறும் வைத்தியத்துக்குப் பிறகு  "நீங்கள் வீட்டில கொண்டுபோய் வைச்சுப் பாக்கிறது நல்லது" என்று சொல்லி விட்டுப் போய் விட, அப்பாவை வீட்டிலே கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அப்பா இப்போதெல்லாம் ஏதோ பேச முயற்சி செய்வது தெரிந்தது; ஆனால் விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது. அம்மா சில வேளைகளில் காதைக் கிட்ட வைத்து கேட்க முயற்சி செய்வா; ஆனால் அப்பாவின் உதடுகள் மட்டும்தான் அசையும். சத்தம் அனுங்கலாகக் கேட்கும். எதுவுமே விளங்காது. களைத்துப் போய் அம்மாவின் கையை கோபத்தில் தட்டி விட்டுக் கண்களை மூடிக் கொள்ளுவார். அம்மா சோர்ந்து போய் அழத் தொடங்குவா. யாழ்ப்பாணம் அமுக்கப்பட, அடுத்த புறப்பாடு தொடங்கியது. எல்லாரும் வெளிக்கிட, அப்பா ஏதோ சொல்ல கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மகள் அப்பாவுக்குக் கிட்டப் போனாள். "என்ன அப்பா?" அப்பா ஒரு கையைத் தூக்கி  தூரக்  காட்டினார். "போ...போ ஏ.... என்று வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் திணறினார். "நாங்கள் எங்கயாவது போக வேணும் இஞ்ச இருக்கேலாது" என்றாள் வேணி . அப்பா தான் வரவில்லை என்பது போல சைகை காட்டினார். "அப்பா நாங்கள் போற இடத்தில தம்பியையும் பாக்கலாம்" என்றாள் வேணி . அப்பா மகளை உற்றுப் பார்த்தார். "ஓமப்பா தம்பியை வந்து ஏலுமெண்டால் பாக்கச் சொல்லி சொல்லி அனுப்பியிருக்கிறன்". அப்பாவுக்குக் கண்களில் நீர் துளிர்த்ததை மகள் முதல் தடவையாகப் பார்த்தாள். அப்பா திரும்பவும் பேச வாயெடுத்து முடியாமல் கண்களை மூடிக் கொண்டார்.
  அடங்காப் பற்றை அடைந்தபோது தான் அங்கேயுள்ள கஷ்டம் தெரியத் தொடங்கியது. சூழலும், தொடர் காய்ச்சலும் வாட்டிஎடுக்க அப்பாவுக்கு உகந்த இடம் இதுவல்ல என்று முடிவெடுத்து மீட்டும் யாழ்ப்பாணம் திரும்ப முடிவெடுத்திருந்த ஒரு  நாளில் செந்தூரன் திடீரென்று வந்தான். அம்மா ஓவென்று அழுதா. அவன் அப்பாவுக்குக் கிட்டப் போய் இருந்து அவருடைய கையைப் பிடித்தான்.  அப்பா அந்தரப் பட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தார். அவன் இன்னும் நெருங்கிப் போய் அப்பா சொல்ல வருவதை விளங்க முயற்சித்தான். அப்பா கஷ்டப்பட்டு "ஒ...ஊ...ரூ....கக்கு......போ....வெ...னும்." என்றார். அவனுக்கு இப்போது அப்பா சொல்வது விளங்கியது. அப்பாவின் கைகளை இறுகப் பிடித்தபடி  "ஓமப்பா நாங்கள் கட்டாயம் ஊருக்குப் போவம், நான் வந்து கூட்டிக் கொண்டு போறன்" என்றான். அப்பாவின் கண்களில் ஒரு நிம்மதி வந்தது.

கருத்துகள் இல்லை: