வியாழன், 27 மார்ச், 2014

முன்பெல்லாம்...

முன்பெல்லாம் 
ஒரு வார்த்தை போதும் 
ஆறு கண்வழி பெருக்கெடுத்தோட 
முன்பெல்லாம் 
சுண்டு விரல் நோவு போதும் 
அதைத் தூக்கிக் கொண்டு 
செல்லம் கொஞ்ச 
முன்பெல்லாம் 
சிறு குழப்பம் போதும் 
நாட்கணக்காய் குமுறியழ 
முன்பெல்லாம்
சின்னச் சிக்கல் போதும்
மணித்தியாலக் கணக்காய்
மண்டையை உடைக்க
முன்பெல்லாம்
மிகப் பெரிதாய்த் தோன்றிய
அத்தனையும்
பாறாங் கற்களாய்
பாரமாய் அழுத்தி
என்னைக் கடந்து போயின
இப்போதோ
பாறைகளூடாகப் பயணிக்கும் ஆறாய்
கடந்து செல்லுகின்றேன்
எதையும் யாரிடமும் எதிர்பாராது.

வி.அல்விற்.
25.03.2014.

அத்தனை முறையும்.

அத்தனை முறையும்.
கால் பார்த்து நடந்தேனென்
காலடி அதிர்வு உனைத் தாக்கிடாது
காற்றிலே பேசினேன் கதைபல நீ 
காயமின்றி பூமியைத் தொடுவதற்கு
தொட்டுத் தடவி இன்புற்றேன் நீ
துள்ளி விளையாடுகையில் மகிழ்வுற்றேன்
தொட்டதெல்லாம் துலங்க விருப்புற்றேன் நீ
எட்டுவதற்கு ஏணியாய் சாய்ந்திருப்பேன்
முத்தமழை பெய்து என் மேனியிலே
மொத்தமாய்க் கொட்டுகிறாய் அன்பினை
மெய்ப்படவே நின் கனவனைத்தும்
மேதினியில் என்றும் நானிருப்பேன்
நித்தமும் செப்பனிடுமுன் பாதையை
நித்திரையும் மறந்து கூர்ந்திடும் மனம்
நித்திலமே செல்வக் களஞ்சியமே உலகு
நிந்தியா வாழ்வாய் உனக்கருகிருப்பேன்
எத்தனை முறை வீழ்ந்தென்ன
அத்தனை முறையும் உன்னைத்
தென்றலும் தீண்டிக் கீறிடாது
தொட்டுத் தூக்கிட நானிருப்பேன்
என்றுமே உன் அன்னையாய்.
வி.அல்விற்.
27.03.2014.

சனி, 15 மார்ச், 2014

இல்லாத ஒன்று.

இல்லாத ஒன்று.

நிச்சயமற்ற இரவுகளும் பகல்களும் 
நீண்டு பயணிக்கின்றன
ஓடியும் பயனில்லை 
ஒளித்தும் பயனில்லை 
மூர்க்கமாய் எதிர்த்தும் 
வலுவிழந்த உயிரிகளாய் 
தொண்டையில் சிக்கிய 
கனலும் தீக் கட்டிகளை 
அவ்வப்போது கக்கி
அபயம் கோரி அந்தரித்து
அவிந்து கொண்டிருக்கும்
மனங்களை ஆற்றுவாரின்றி
இருக்கைகளைப் பற்றிக் கொண்டு
அவசரமாக விரைகின்ற
சுயநலப் பயணிகளிடம்
எப்படிக் கேட்பது
நீதியும் நியாயமும்?

வி.அல்விற்.
15.03.2014.

வழித்துணை.

வழித்துணை! 

தனித்திருக்கும் இவ்வேளை 
கடினமாயில்லை
மரங்களில் தெரியும் 
அம்மாவின் பலகோண 
முக பாவங்களும்
கிளைகளிலே தெறித்துத் தெரியும்
அக்காக்களின் கோபங்களும்
வடிவம் சேர்த்துக் கொடுக்கின்றன
வழிப்பாதைக்கு
இதே போன்றதொரு
தெருக்கிடங்கிலே துள்ளி விழுந்த
மிதி வண்டியிலிருந்து
தூக்கியெறியப்பட்ட காயங்கள்
இன்னும் கூடவே வருகின்றன
மறந்து விடாதிருக்கும்படி
கொடுத்து வைத்தவள் நான்
தனிமை என்றும் என்னோடு
போராடியதில்லை
வழித்துணையாய்
என் ஞாபகங்கள் சேர்ந்திருக்கும்வரை.

வி.அல்விற்.
14.03.2014.

வெறும் வெளி.

வெறும் வெளி.

வார்த்தைகளில் சறுக்கி
விழுந்து கொண்டிருக்கிறோம்
இருந்தவை அனைத்துமே
இல்லாதவையாகின வெறுப்பில் 
வெறும் வெளியில்
நினைவுகளின் இருப்பிடத்தில்
கரைந்து கொண்டிருக்கிறோம்
வெள்ளந்திகளாக
மீண்டு வர முடியாமல்.
வி.அல்விற்.
14.03.2014.

காடு பெருத்திருக்கிறது

காடு பெருத்திருக்கிறது

காடு பெருத்திருக்கிறது அங்கே
நெருக்கி வைத்தாற்போல அமைந்திருக்கும் 
மூங்கில்களின் உரசல்கள் காற்றலையில்
காதுகளைக் கிழிக்கின்றன 
கானங்களாய் செவியேறுவதற்குப் பதில்
எங்கோ தூரத்தில் ஊளையிடும் நரிகள்
கும்மிருட்டுப் பயங்கரத்துக்கு வலுச் சேர்க்கின்றன
பாதையைத் தொலைத்த பயணத்தின் நீட்சி
களைப்போடு கண்களை வெளிச்சத்தைத்
தேடித் திகைத்து நிற்க வைக்கின்றது
நான்கு மூங்கில் தடிகளை
தோட்டத்திலே நட்டு வைத்திருந்தால்
இசை கேட்டிருக்குமோ?

வி.அல்விற்.
12.03.2014.

தூது.

இருட்டுள் தெரியும் 
மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தில் 
வாழப் பழகி விட்டவர்கள் நாங்கள் 
அவ்வப்போது 
கொஞ்சம் முகில் விலத்தி 
எட்டிப் பார்க்கின்றது நிலவொளி 
மனம் பிசையும் நேரங்களில் 
பணத் தாள்களில் எழுதப்படும் 
நம் பாசத்துக்கான தூதில்.

வி.அல்விற்.
09.03.2014.

உருகும் வண்ணங்கள்.

உருகும் வண்ணங்கள்.

நாங்கள் எங்களையே சுமந்து செல்பவர்கள்
முரணியங்கள் அழுத்தும் போதும் சுமப்பவர்கள்
எங்களைச் சார்ந்தவர்களையும்
பனிக்குளிர் விரட்டும் கதிரவன் போல 
வெதுவெதுப்பை மட்டுமே கொடுக்கத் தெரிந்தவர்கள்
அனைத்துமே நம் வழியூடாக இலகுவாகப் பயணிக்கையில்
நாம் மட்டும் இன்னும் உயிரோடு உள்ளே
உருகிக் கொண்டிருக்கிறோம் பல வண்ணங்களில்.

வி.அல்விற்.
08.03.2014.

இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?

இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?

தாயாய்த் தாரமாய் 
மாமியாய் மருமகளாய் 
மைத்துனியாய் சித்தியாய் 
அத்தனை பாத்திரங்களையும் உள்ளே 
சொல்லிக் கொடுக்காமலேயே 
கச்சிதமாய் செய்து முடிக்கிறோம்
ஆனால் வெளியே மட்டும் இன்னும் 
பெண்ணுடல்கள் வீசப்பட்டுக் கிடக்கின்றன 
உடல் பலவீனத்தின் இயலாமையில்
உள்ளத்தின் பலங்களும் சிந்தனைகளும்
சிதைபட்டுப் பழிவாங்கப்படுகின்றன
உலக இயக்கத்தின் முதற் காரணிகள்
மிக இலகுவாக சீண்டப்படுகிறார்கள்
உணர்வுகளை மதியுங்கள்
சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்
வேறுபாட்டைக் களைந்து விடுங்கள்
பழிவாங்கலைத் தவிர்த்து விடுங்கள்
உங்களைப் போலவே அவர்களையும்
ஏற்றுக் கொள்ளுவீர்களாயின்
இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு
வாழ்த்துச் சொல்ல?

வி.அல்விற்.
07.03.2014.

இன்னும்.

பெருமை கொண்டோம் 
பழமை பேசி 
இனிமை கண்டோம் 
புளித்ததை மீட்டு 
காற்றில் கேட்டோம் 
பழைய கானமொன்றை 
கரகரக்கும் குரலில் 
நெருப்பில் எழுந்தோம் 
முகிலில் குளிர்ந்தோம் 
தெளிந்தோடும் நீரூற்றினின்று 
கொஞ்சம் தூரத்தில்
சேற்றைப் பூசியபடி
இன்னும் தேங்கித்தான் நிற்கின்றோம்
குட்டையாய்.

வி.அல்விற்.
06.03.2014.

எழுதல்

விழுவது இழிவல்ல 
விழுந்தால் எழுந்திட வேண்டும் 
இல்லையேல் 
மிதித்துக் கடந்திட ஒரு கூட்டம் 
எப்போதும் தயார் நிலையில்.

வி.அல்விற்.
05.03.2014.

தோன்றாதவை

வெற்றிடங்கள் என்று ஏதுமில்லை 
காற்று சூழ்ந்திருப்பதுபோல் 
கண்களில் தோன்றாத கருக்கள் 
எங்கும் பரவியிருக்கும் உண்மைகளாய்.

வி.அல்விற்.
02.03.2014.

நம்மோடு நாமாடும் வாழ்க்கை

நம்மோடு நாமாடும் வாழ்க்கை  
அதில் நம் தேடல் என்றும் பொருளானது 


வேண்டும் வேண்டும் என நினைக்கும் 
மனம் தாண்டும் எல்லை சுட்டிருக்கும் 
மீண்டும் மீண்டும் எனத் துடிக்கும் 
பல ஆசை  வந்து அலைக்கழிக்கும் 


மெய் சொல்வதாலே நாம் பொய்யாவதா 
பொய் போர்த்ததெல்லாம் மெய்யாவதா
உறவென்று பகையே நமைச் சேர்ந்ததா 
நம்மோடு நாமே முரண் கொள்வதா 


நிலவோடு இருளும் சினம் கொள்வதா 
கனவோடு காட்சி தவறாவதா 
உணர்வோடு அறிவும் குறை சொல்வதா 
வாழ்வோடு வினையும் இணைந்தாடுதா 


விடியாத இரவென்று ஒன்றில்லையே
மலராத பூவென்று ஒன்றில்லையே  
கணமொன்றில் வந்து கவர்ந்திடும் மரணம் 
எமை வந்து வென்று சிந்தனை கொண்டு 
புரியாத புதிர் போட்டு கலைந்தோடுதே 

v.alvit.
01.03.2014.

சனி, 1 மார்ச், 2014

விட்டு விடுங்கள்!

விட்டு விடுங்கள்! 

புழுதியாய் வாரி எறியும் சொற்களை 
காலம் ஒரு பதில் சொல்லியிருக்கிறது
இயலாமையின் சோர்வுகளையும் 
முடிவிலிக் கேள்விகளின் கோர்வைகளையும் 
கொஞ்சம் ஆற்றிப் போட்டிருக்கிறது 
காற்றிலே வந்த கானமொன்று 
கடல் கொண்டு போனவனை 
நீண்ட நாட்களின் பின்
உப்பு நீரில் உப்பிப் போகாது 
அலைகள் கரை சேர்த்தது போன்று
காலம் வெளித் தள்ளியிருக்கிறது
மகிழ்ச்சியாய் நீங்கள் வாழ்ந்த நேரங்களை
ரணமாய் கழித்தவர்கள் அவர்கள்
குடும்பமாய் நீங்கள் களித்திருந்த நேரங்களில்
தனிமை அவர்களைத் தின்று தீர்த்திருக்கிறது
தன் ஆசை தீரும் வரை
உங்களைப் போன்றே அவர்களும்
உங்கள் உறவுகள் போலவே அவர்களினதும்
மீள முடியாத வலிகளுடன் என்றாலும்
தாயின் கையால் ஒரு பிடி சோறுண்டு
மனைவியின் அன்பால் அணைக்கப்பட்டு
குழந்தையுடன் ஆசையாய் பேசி மகிழ்ந்திட
விட்டு விடுங்கள்!
இதிலாவது உங்கள் விமரிசனங்களை
தூர நிறுத்தி வையுங்கள்!

வி.அல்விற்.
19.02.2014.

பயம்.

பயம்.

இயற்கையின் நியதிகள் உள்ளூர 
அறிவார்ந்து வாதித்துக் கிடப்பினும் 
அனுபவங்கள் நேரிலே அறைகையில் 
தடுமாறிப் போகிறது உணர்வுகள்
ஒரு கணத்துள் நிகழ்ந்து விடும் 
எதிர்பாரா விபத்துப் போல 
தெரிகின்ற மரணத்துடன் 
தெரியாத நாள் வரை 
யாருக்கும் விடை தெரியாத
மரணம் எப்படி உலுப்பாட்டிப் போகிறது
அக்கணம் வரை
நாங்கள் இப்படியே........

வி.அல்விற்.
22.02.2014.

வாழ்வின் கோடுகள்

வாழ்வின் கோடுகள் 

இயற்கை வானிலும் கடலிலும் தரையிலும் 
கொட்டி வைத்துள்ள அற்புதங்கள் போல 
இல்லை இல்லை......
தூரிகை கொண்டு அதி நுட்பமாக 
வரையப்பட்ட அழகோவியம் போல 
இல்லை இல்லை.....
சிலந்தி தன்நூலிழைகளை தானே 
கோர்த்து வைத்துப் பார்த்திருப்பதுபோல
மிக நுண்மையாக இழைக்கப்பட்டுள்ளது
மனித வாழ்வின் கோடுகள்
புத்தியுள்ளவன் தப்பித்துக் கொள்ளுகின்றான்
சிக்கிக் கொள்பவன் தொலைந்து போகிறான்

வி.அல்விற்.
25.02.2014.

கல்வி

கல்வி

காற்றுக் கூட சுதந்திரமாக 
தன்பாட்டில் அலைகிறது 
உறைந்திருக்கும் குளிரில் 
உயிர் காத்திருக்கும் வேர்கள் 
மரங்களுக்குச் செய்தியைப் 
பரிமாறிக் கொள்கின்றன 
தன்காலத்திலே இதழ்விரித்து 
மலர்களும் மணம் பரப்புகின்றன
மழைத்துளிகள் மேகங்களிடம்
அனுமதி வாங்கிக் கொண்டு
தரை தொட்டுப் பரவசப்படுத்துகின்றன
இயற்கை கற்றுக் கொடுக்கும்
இலவசப் பாடங்களை இரசிக்க மறந்து
இறுக்கிக் கட்டப்பட்ட
பெருச்சாளிகளின் திட்டத்தின் கீழ்
வெல்லும்படி இறக்கி விடப்பட்ட
மூச்சிரைக்க ஓடும் குதிரைகள் போல
சிரிக்க மறந்த இறுகிய முகங்களுடன்
கனவுகள் சுமக்கும் காலங்களில்
புத்தக மூட்டைகளை
சுமந்து செல்லுகின்றனர்
எம் குழந்தைகள்.

வி.அல்விற்.
26.02.2014.

????

குழப்பச் சக்கரத்தில் ஏறி நின்று 
சமநிலை இழந்து தடுமாறி 
காலக் கேள்விகளை கையில் வைத்து 
விளையாடி நிற்கின்றோம் 
வி.அல்விற்.
27.02.2014.

நம்மோடு நாமாடும் வாழ்க்கை

நம்மோடு நாமாடும் வாழ்க்கை  அதில்
நம் தேடல் என்றும் பொருளானது

வேண்டும் வேண்டும் என நினைக்கும்
மனம் தாண்டும் எல்லை சுட்டிருக்கும்
மீண்டும் மீண்டும் எனத் துடிக்கும்
பல ஆசை  வந்து அலைக்கழிக்கும்

மெய் சொல்வதாலே நாம் பொய்யாவதா
பொய் போர்த்ததெல்லாம் மெய்யாவதா
உறவென்று பகையே நமைச் சேர்ந்ததா
நம்மோடு நாமே முரண் கொள்வதா

நிலவோடு இருளும் சினம் கொள்வதா
கனவோடு காட்சி தவறாவதா
உணர்வோடு அறிவும் குறை சொல்வதா
வாழ்வோடு வினையும் இணைந்தாடுதா

விடியாத இரவென்று ஒன்றில்லையே
மலராத பூவென்று ஒன்றில்லையே
கணமொன்றில் வந்து கவர்ந்திடும் மரணம்
எமை வந்து வென்று சிந்தனை கொண்டு
புரியாத புதிர் போட்டு கலைந்தோடுதே