திங்கள், 25 நவம்பர், 2013

விட்டு விடுதலை

முழுமையாய் விழுங்கியிருக்கும் 
வாழ்நாள் பெரும் துன்பத்தை 
விலத்துவதிலேயே காலம் கரைகிறது 
இடிபாடுள்ள தெருக்களும் 
தட்டி வீழ்த்தும் மாந்தர்களும் 
மூச்சு முட்டும் செயற்கைகளும் 
நொருங்கியுள்ள உறவுகளும் 
இறுக்கியுள்ள நெருக்கடிகளும் 
நசுக்கிக் கொண்டிருக்கும் அழுத்தங்களும் 
இப்பெரும் துன்பத்தை விட 
பெரிதாயில்லை வேறொன்றும் 
ஒரு கணப் புன்னகையின் விலை 
பல நாள் ஈரச் சுமையாயுள்ளது 
தொலைதூரப் பயணத்துக்கு 
தயாராகவேயுள்ள வண்டி 
வெகு விரைவில் வந்தால் 
விட்டு விடுதலையாகலாம் 

வெள்ளி, 22 நவம்பர், 2013

உ.பா.வ.

'உ. பா. வ.' என்பதன் சரியான உள்ளடக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அனுபவத்துக்கு உட்பட்டவரை அது மக்களுக்கான 'பாதுகாப்பு' அல்ல என்பதே நான் விளங்கிக் கொண்டது.
"பிள்ளை அவங்கள் வெளிக்கிட்டிட்டாங்களாம், சாப்பாட்டை நான் எடுக்கிறன் நீ தம்பியோடை உடுப்பு பாக்கைத் தூக்கிக் கொண்டு கெதியா வெளிக்கிடு"...அம்மா பயத்தில் பரபரக்கத் தொடங்கினாள். தம்பி யோசனையின்றி தன்னுடைய நண்பர்களுடன் வெட்டையில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். தெருவிலே சயிக்கில் முன் பாரிலே ஒரு சின்ன மூட்டையும் பின் கரியரிலே ஒரு மூட்டையுமாக   மிதிக்கத் தொடங்கியிருந்த பக்கத்து வீட்டு ராசன் மாமா விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, "டேய் அவங்கள் வெளிக்கிட்டிட்டாங்களாம், நீங்கள் இஞ்சை நிண்டு என்ன செய்யிறியள்? ஓடுங்கோ வீட்டை; அங்க  வீடுகளில உங்களத் தேடிக் கொண்டிருக்கப் போகினம்" என்று பிள்ளைகளைத் துரத்தி விட்டு வேகமாக மிதிக்கத் தொடங்கினார்.
நிலா தம்பியையும் தன்னுடையதும் தம்பியுடையதுமான புத்தகப் பொதியையும் சயிக்கிளில் ஏற்றிக் கொண்டு புறப்பட, அப்பா அம்மாவை ஏற்றிக் கொண்டு " பிள்ளை கெதியாக பின்னால வா" என்று சொல்லிக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பத் தொடங்கினர். அம்மா சயிக்கிலில் இருந்த படியே வீட்டைத் திரும்பிப் பார்த்தா. அம்மாவுக்கு எப்போதுமே வீட்டை விட்டு விட்டு வெளிக்கிட விருப்பமே இருப்பதில்லை. ஆனாலும் இருந்து வரக் கூடிய அசம்பாவிதங்களை ஏற்றுக் கொள்ளும் துணிவும் இல்லை. அவர்களுக்குமுன்னாலும் பின்னாலும் ஊர் ஓடிக் கொண்டிருந்தது. இடைக்கிடையில் "ஐந்நூறு மீற்றர் தூரத்தில வந்திட்டாங்கள், நானூறு மீற்றர் தூரத்தில வந்திட்டாங்கள்" என்று யார் யாரோவெல்லாம் தகவலும் சொல்லிக் கடந்து கொண்டிருந்தார்கள்.

இது இண்டைக்கு நேற்றைக்கு நடந்து கொண்டிருக்கிற நிகழ்வு இல்லை. ஆனால் இப்ப கொஞ்ச நாட்களாக உக்கிரமடைந்து வருகிறது.  பலாலி இராணுவ முகாமிலிருந்து காங்கேசன்துறை வரை வந்து உலாப் போகும் பரப்பளவுக்குள் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வு இதுவாகிப் போனது. ஒவ்வொரு தடவையும் பொருட்களைத் தூக்கிக் கொண்டு ஓடும்போது, அன்று இரவோ அல்லது அடுத்த நாளோ திரும்பி விடுவதுண்டு. அதுவரை தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள் வீடுகளில் ஒண்டிக் கொண்டு மனம் வெதும்பிக் கொண்டிருப்பார்கள்.  
அன்றைய புறப்பாடும் அவ்வாறே  'அவர்கள்' வந்து மீண்டும் சிக்கலின்றித் திரும்பியதும், ஊர் தமதூர் திரும்பியது. இப்படி புறப்பாடு அடிக்கடி நடந்து கொண்டிருந்த வேளை, நிரந்தரமாகவே வெளியேறும் நாள் வந்தது. "கோவிலில்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்" என்பதற்கு அறிவியல் ரீதியாக தற்போது விளக்கம் கண்டிருக்கிறார்கள். அதாவது கோவில் கோபுரங்களும் கலசங்களும் அதன் உயரத்தின் அளவுக்கேற்ற பரப்பளவுடைய நிலப்பகுதியை இடி, மின்னல் போன்ற அனர்த்தங்களில் இருந்து காக்குமாம். ஆனால் எமது மக்களுக்கோ கோவில் அகதிகளாய்த் தஞ்சமடையும் இடமாயிற்று .  நான்கு ஊர் தள்ளியிருந்த ஓர் ஊரின் கோவில் அடைக்கலம் கொடுத்தது. மணித்தியாலங்கள் நாட்களாகி நாட்கள் வாரங்களாக இருக்குமிடம் சுகாதாரமற்றதாகியது. சொந்தத் தொழில்களை விட்டு விட்டு 'சும்மா' இருப்பதும் சாத்தியமற்ற ஒன்றாகியது. இடையில் வீடுகளுக்குள் விட்டு வந்த பொருட்களை யார் கொண்டு போனார்களோ என்கின்ற ஏக்கம் வேறு.
அம்மாவுக்கு வீட்டுக்குப் போக வேணும் என்கின்ற பேராசை. அதை விட எங்களுடைய வீட்டைக் கட்ட எத்தனை கடின உழைப்பைக் கொடுத்திருந்தார்கள் எமது பெற்றோர் என்பதை ஒவ்வொரு பேச்சின் போதும் உணர்ந்திருக்கிறோம். ஒரு தடவை எங்களுடைய வீட்டுக்கு மின்னிணைப்பு வேலை ஒன்றுக்காக ஒரு சுவர்ப் பகுதியைத் துளையிட வந்திருந்தனர். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடல்லவா? சுவர் அசைய மறுக்க, வந்தவர்கள் சுவரில் சுத்தியலால் தொடர்ந்து அறைந்து கொண்டிருந்தனர்.  அம்மாவின் கண்கள் கலங்கி விட்டன. ஏனம்மா என்று கேட்டதற்கு, "சுத்தியலின்ர ஒவ்வொரு அடியும் எனக்கு நெஞ்சில விழுகுது பிள்ளை" என்று அம்மா பதில் சொன்னபோது , எனக்கு அங்கே சுவர்களாலான வீடு தெரியவில்லை; பெற்றவர்களின்  உழைப்பும் வியர்வையும் அவர்களது உணர்வுகளும் சேர்ந்த ஓர் உயிர் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே தெரிந்தது.
கடலோடு சேர்ந்திருந்தது எமது வீடு. வீட்டிலிருந்து இறங்கினால் கடற்கரைதான். கடலோடு சேர்ந்திருந்ததால் தினமும் கப்பல் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருந்தது எமக்கு. அடிக்கடி பெரிய கப்பல்களின் உட்பகுதியையும் ஏறிப் பார்க்கும் வாய்ப்பும் அமைந்திருந்தது இளம் வயதில். எங்களுடைய வீடு மூன்று அறைகளையும், ஒரு திறந்த வரவற்பறை, சமையலறை (உணவுண்ணும் பகுதியோடு சேர்ந்து) என்று அமைந்திருந்தது. பெரியறை , சின்ன அறை, சைட் அறை என்று தனித் தனிப் பெயர்கள் வேறு கொடுத்திருந்தோம் அறைகளுக்கு. சைட் அறை  மாலை நேரத்தில் படிக்கும் அறையாகவும் அமையும். பெரிதாக சுவரில் ஒரு கரும்பலகையும் அமைத்திருந்தோம். சமையலறையுடன் சேர்ந்து அமைந்திருந்த உணவுண்ணும் அறைக் கதவத் திறந்தால் நேரே தெரிவது பரந்த கடலும் அதிலிருந்து எமக்காகவே எழுவது போன்று தெரியும் காலைச் சூரியன். ஒரு தேநீரைப் போட்டுக் கையில் வைத்துக் குடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, சூரியன் முழுமையாக மெல்ல மெல்ல கடலிலிருந்து விடுபட்டு மேலே வந்து விடுவான். என்னால் அடித்துச் சொல்ல முடியும் இப்படியொரு காட்சியைக் காணாத கண்கள் கண்களே அல்ல என்று. முற்றம் பின்பகுதியை விட கூடிய பகுதியாக அமைந்திருக்கும். எங்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் இரவில் கழிவறைக்குப் போவது. தனியாகப் போக பயமாக இருக்கும். (நாட்டிலே நித்திரையில் நடப்பவர்களைப்  பற்றிக் கேள்விப்பட்டதால் வந்த பயம்) ஏனென்றால் எமது கழிவறை வீட்டின் ஒரு அறையோடு  சேர்ந்துதான் இருந்தது. ஆனால் வீட்டின் பின் பகுதியைப் பார்த்தால் போல் அமைத்திருந்தார்கள். எனவே அங்கு போவதென்றால் வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்னால் போக வேண்டும். அதற்காக அம்மாவை அடிக்கடி எழுப்புவோம். ஆனால் பகலிலோ அதே வழியாக யன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு வீட்டின் ஓட்டுக் கூரை மேல் ஏறி அங்கே காய்த்து மறைந்து தொங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக்காய்கள் பிடுங்கி ஓட்டிலிருந்து முற்றத்தில் குதிப்போம். (இப்போது நினைக்கப் பயமாக இருக்கிறது) இது தவிர வீட்டின் சிம்னி மேற்பகுதிமீது பாய்விரித்து பனாட்டுக் காய வைப்போம். இப்படிப் பல வேலைகளை வீட்டின் கூரை மீது சாகசமாக நடத்துவோம். ஆனால் ஏறிய வழியே இறங்க மாட்டோம் நேராக கூரையிலிருந்து முற்றத்துக்கு குதிப்பதுதான் எமது ஸ்டைல்.

இப்படியெல்லாம் உயிருடன் சேர்ந்து விட்ட உணர்வுகளின் திரட்சிகளை யாரால் பிரிக்க முடியும்? காலத்துக்கும் நாமும், வீடும், ஊரும், ஒழுங்கைகளும், இளமைக் காலங்களும் உறைந்து போயுள்ளன உள்ளே.
அம்மாவின் ஆசை நிறைவேறியது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் போய்ப் பார்ப்போம் என்று ஊருக்கு கொஞ்சம் துணிவாகத் திரும்பினோம்.  கலைந்திருந்த வீட்டை ஒழுங்கு படுத்தி  வழமைக்குத் திரும்ப முயற்சித்தோம்.
இந்தக் களைப்புத் தீருவதற்குள்  "வடமராட்சி விடுவிப்பில்" விழுந்த ஷெல்கள் திரும்பவும் ஓட வைத்தன. ஆளாளுக்குத் தலை தெறிக்க ஓடினோம் பாதுகாப்புத் தேடி. இப்போதைக்கு உயிருடன் இருந்தால் மீண்டும் ஊர் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இன்னொரு ஊருக்கு இடம் பெயர்ந்தோம்.

அந்த ஊரிலே 'சின்னம்மா' என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிள்ளைகள் எல்லோரும் குடும்பமாகித் தூரப் போய் விட தனியே ஒரு பெண்ணின் உதவியுடன் வாழ்ந்து வந்தார். அவரது மகனின் அனுமதியுடன் எமது உறவினர் ஒருவரின் அறிமுகத்தினூடாக  சின்னம்மாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். தனது தனிமையைப் போக்க ஆட்களுடன் பழகுவதும் பேசுவதும் பிடித்திருந்ததால் எங்களது வருகை சின்னம்மாவை உற்சாகப் படுத்தி இருந்தது. அதே நேரம் சின்னம்மாவுக்கு நல்ல மனது இருந்திருக்க வேண்டும் எங்களை அனுமதிக்க என்று பின்னர் நான் யோசித்ததுண்டு. ஏனென்றால் எங்களுக்கு முதலில் ஒரு அறையைத் தான் தந்தார். ஆனால் பிறகு ஓட வழி தெரியாது மிகுதி ஊரவர்களும் அங்கேயே வந்து சேர,சின்னம்மாவின் வீடு திருவிழாக் கோவிலாகியது. சின்னம்மாவுக்கு கதைக்க வேணும், கனக்கக் கதைக்க வேணும். அதுவும் தனது பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் எல்லோரைப் பற்றியும் பெருமையாய்க் கதைக்க வேணும். சின்னம்மாவுடைய பேத்தி ஒருவர் இந்தியாவிலே மருத்துவக் கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்தார். எங்களுடைய பல்கலைக் கழகங்களில் இடம் கிடைக்காது போன பல வசதியுடையவர்கள் அப்படி இந்தியாவிலே படித்துக் கொண்டிருந்தார்கள். சின்னம்மாவின் பேர்த்தி அங்கே உள்ள சில சினிமா உலகைச் சேர்ந்தவர்களுடன் படம் எடுத்து அனுப்பியிருந்திருக்கிறார். அவற்றை எடுத்துக் காட்டி பெருமை பேசிக் கொண்டிருப்பார் சின்னம்மா உயிரைத் தூக்கிக் கொண்டு அண்டி வந்த உள்ளூர் அகதிகளுடன். ஆனால் சின்னம்மா நல்லவர். இதை விட அம்மக்களுக்கு வேறெந்த தொல்லையும் கொடுக்கவில்லை. சின்னம்மாவின் மகன்  இடைக்கிடையில் வந்து பார்த்துக் கொண்டு போவார். வந்திருப்பவர்களால் தனது தாய்க்கு தொல்லை வந்து விடக் கூடாது என்ற நியாயமான கவலை அவருக்கு.
மாமரங்கள் சூழ்ந்த மிகப் பெரிய வளவின் நடுவே அமைந்திருந்த பெரிய வீடு அது. அந்த வீட்டைச் சுற்றிவர குடும்பம் குடும்பமாக தனித் தனியே அடுப்பெரித்துக் கொண்டிருப்பார்கள். உதவி நிறுவனங்களின் தயவால் சாப்பாட்டுக்குச் சிக்கல் அதிகமிருக்கவில்லை. மாலையில் சேர்ந்து செய்தி கேட்பார்கள். பின்னர் அதை அலசுவார்கள். கிணற்றடி ஏறக்குறைய பதினெட்டு மணி நேரம் விடுப்பின்றி இயங்கிக் கொண்டே இருந்தது. கிணறு  வாரிக் கொடுத்தது.
ஒருநாள் ஊரே பாவித்த கழிவறைக் குழி நிரம்பிக் கொண்டது. என்ன செய்வது என்று எல்லோரும் யோசித்தார்கள். சின்னம்மாவின் மகன் செய்தி கேள்விப்பட்டு வந்தார். எமது ஊரவர்கள் சேர்ந்து தாங்களே அருகிலே ஒரு குழி வெட்டுவதாகச் சொல்லி வெட்டத் தொடங்கினார்கள். அது ஒரு ஒழுங்குக்கு வருமட்டும் பெண்கள் இருட்டும் வரை காத்திருந்து  தலை மறைத்து, அம்மாமாரின் துணையுடன் தூர மறைவிடம் சென்று வந்தார்கள். குழி வெட்டிப் பிரித்த ஆண்கள் அழுக்குத் தீர நீண்ட நேரம் அள்ளிக் குளித்துக் கொண்டிருந்தனர்.
எங்களுக்கு இது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்கின்ற யோசனை உலுப்பத் தொடங்கியது.அம்மாவின் நெற்றியில் வீட்டுக்குப் போக வேணும் என்ற சிந்தனை எழுதி ஒட்டப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த முறையும் அம்மாவுக்கே வெற்றி. அம்மாவின் வெற்றி வானத்தில் இருந்து வந்தது. பொதிகளாக வந்து விழ, சீர் தூக்கிப் பார்க்க முடியாத மக்கள், "ஆஹா! இவனல்லவோ மகன் "என்றார்கள். "தாய் போல மகா கெட்டிக்காரன்" என்றார்கள். "இனி எல்லாம் சரி வரும்" என்றார்கள். ஊருக்குப் போக முடிவெடுத்து, சின்னம்மாவைக் கட்டிப் பிடித்து நன்றி கூறி விடை பெற்றோம். சரியாக எதுவும் வராமலேயே மீண்டும் ஊருக்குத் திரும்பியிருந்தோம்.
வந்தவர்கள் எமது பெண்களின் பாவாடை சட்டைகளையும், ரீ ஷேர்ட்டுகளையும் விடுப்புப் பார்த்தனர். கோவில் குருவானவர் பூசையின் பிரசங்கத்தில் பெண்களை அவதானமாக ஆடைகளை அணியும் படி அறிவுறுத்தல் விடுத்தார். வந்தவர்கள் மக்களுடன் தாராளமாக பழக முற்பட்டனர். காங்கேசன்துறை குவாட்டர்ஸ் கிணறுகளில் ஆசைதீர அள்ளிக் குளித்தனர். பிறகு "உங்களுக்குத் தண்ணீர்ப் பிரச்சனை இல்லை,  அழகழகான பெரிய பெரிய கல் வீடுகளில் எல்லோரும் வாழுகிறீர்கள் , பிறகேன் சண்டை?" என்றார்கள். பெரியவர்கள் முறைத்தனர்.
முந்தையவர்கள் போலவே இவர்களும் அடிக்கடி வலம் வந்தார்கள். கிழக்கெல்லையிலிருந்து மேற்கெல்லை வரை வீடுகளின் வேலிகளைப் பிரித்து தாமே பாதை போட்டு நடந்தனர்.  மக்களுக்குப் பாதுகாப்பாம். பெண்கள் சுருங்கிக் கொண்டனர் அநேகமாக வீடுகளுக்குள்.
சரிவரும் என்று அப்பாவித்தனமாக எண்ணிய மக்களின் எண்ணம், பன்னிரண்டு உயிர்ப் புறாக்கள் காங்கேசன்துறை பலாலி வீதியால் அழைத்துச் செல்லப்பட்டபோது தவிடு பொடியாகியது. இம்முறை காட்சிகளின் கோரம் பெரிதாகியது. அடுத்த ஓட்டத்துக்கு ஊர் தயாராகியது. ஆனால் இம்முறை திரும்பி மீண்டும் ஊருக்குள் கால் வைப்போம் என்கின்ற எண்ணம் அநேகரிடம் காணாமல் போயிருந்தது. சிலர் "செத்தாலும் இஞ்சயே கிடந்தது சாவோம்" என்று முரண்டு பிடித்தார்கள். ஊர் கிளம்பியது. ஷெல்கள் விசிலடித்தபடி அருகருகே உராசிச் சென்றன. எங்கள் வீட்டு முற்றத்திலே காய்த்திருந்த மாதுளைகள் பழுக்க இன்னும் காலமிருந்தது. தென்னைகள் நிறைய காய்கள் பழுத்தும் பழுக்காமலும் தொங்கிக் கொண்டிருந்தன. அம்மா இம்முறையும் வீட்டைத் திரும்பிப் பார்த்தா. கண்கள் கலங்கியிருந்தது. நம்பிக்கையின்மை கண்களில் தெரிந்தது. அப்பா கோபமாகி "வந்து சயிக்கிளில ஏறு, எங்களுக்கு மட்டுமே இது?" என்றார். அம்மா ஏற, சயிக்கிள் உருளத் தொடங்கியது.
கடலும், தெருக்களும், வெட்டைகளும், காங்கேசன்துறைப் பூங்காவும், சீமெந்துப் புகையும், கீரிமலைக் கேணியும் தூரவாகிப் போயின.
இந்தத் தடவை மீண்டும் சின்னம்மாவைத் தொந்தரவு செய்யும் துணிவு எம்மிடம் இல்லை. வேறிடம் நோக்கி...

(* நியாயமாற்ற  மனிதர் முன் இன்னும், இத்தனை வருடங்கள் கழித்தும் எங்கள் மக்கள் தெருவிலே நிற்கிறார்கள்).

















ஞாயிறு, 17 நவம்பர், 2013

இலையுதிர் காலம்

இது இலையுதிர் காலம் 
காம்புகள் பற்றிப் பிடிக்கும் வலுவிழந்து 
முற்றிய இலைகள் கரணியத்தோடு 
பழுத்து நிறம்மாறி உதிர்கின்றன
மிதிபட்டு உருக்குலைந்து 
இயற்கை உரமாயெழும் கட்டளைப்படி 
கவனிப்பாரற்ற இலைகளிழந்த மரங்களோ 
சுய பச்சாத்தாபத்துக்கு ஆளாகுவதில்லை 
காத்திருக்கும் வசந்தம் வரை 
பசுமையேந்தி தன் கடன் செய்ய....

வி.அல்விற்.
13.11.2013.

கவிதையின் பிரிவு.

எழுதும் விரல்களை ஒரு கவிதை 
அழுத்தியுள்ளது பிரியவிடாது... 
எழுத்துக்கள் தமக்குள் தொலைந்து
தேடுகின்றன தம் உருவத்தை. 

வி.அல்விற்.
11.11.2013.

காட்சிகள்.

நிரந்தரமில்லா வாழ்வுக்குள் ஒரு நிறைவிருந்தது 
நீண்ட கனவை நிறைவேற்றும் நிறை வது - உன்
பசியும் தாகமும் அதுவேயாக இருந்தது 
மௌனமும் புன்னகையும் பிரியாதிருந்தது
என்றென்றைக்கும்.......
நினைவழியாக் காலங்கள் 
நிழலாய்த் தொடர்கின்றன உள்ளகத்தே
நீதி கண் மூடி வாய் பொத்தி இருக்கின்றது
சட்டங்களுக்குள் மாறிக் கொண்டிருக்கின்றன காட்சிகள்.

தீபாவளி

வாங்கி வந்த பட்டாசு கொழுத்த வேண்டும் 
வண்ணப் பட்டாடை உடுத்த வேண்டும் 
கோவிலுக்கு லஞ்சம் செலுத்த வேண்டும் 
பலகார இனிப்பில் திளைக்க வேண்டும் 
ஆட்டு இறைச்சியில் வயிறு ஆற வேண்டும் 
எல்லாம் முடிந்தொரு ஏவறை விட்டபின் 
ஆறுதலாகப் பேசலாம் 
ஆரிய ஊடுருவல் பற்றி.......

வி. அல்விற்.
31.10.2013.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

வாழ்வின் வழி...

இருப்பென்பது உன் வாழ்வின் வழியிலிருந்தது 
வழியெங்கும் பெருகியோடியது  உன் 
ஒழுக்க முறைமையின் நீரூற்று 
கட்டுக்கடங்காது பாய்ந்து வரும் நதிப் பெருக்குன்   
எண்ணப் பெருக்கின் முன் தடங்கலுற்று நின்றது
கட்டிட வியலாக் காற்றுப் போல் 
ஆவியுள் புகுந்த இலக்கு 
சுற்றிச் சுழன்று செயல் வடிவெடுத்தாடியது 
கண்ணொளி வீச்சு ஆளணிகளை 
கணக்கின்றி வசப்படுத்தி அருகமர்த்தியது 
புன்னகைப் பொதிக்குள் 
புதைந்திருந்த நட்புப் பூ  இயல்பாய் 
இலக்கு நோக்கி நகர்த்தியிருந்தது  
வார்த்தைகள் வாழ்வின் தொடர்பாய் 
வெளி விழுந்து உள்நோக்கி இழுக்கத் 
தொடங்கியிருந்த காலமதில் 
அசைவு நிறுத்தி உலுப்பி விட்டு 
அமைதியாகப் போயிருந்தாய் 
நினைவுகளும் கணங்களுமே 
மிச்சமாய்த் தொடருவதை அறிந்தபடி...



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அன்னையின் அருள்.

தமிழர் வாழ்வில் இன்றியமையாதவற்றுள் ஒன்று திருவிழாக்கள். இந்து மத விழாக்களாகட்டும் கிறிஸ்துவ மத விழாக்களாகட்டும் பலமாதங்களாகத் திட்டமிடப்பட்டு, கோலாகலமாகக் கூடிக் கொண்டாடப்பட்ட காலங்களை யாரும் மறக்க மாட்டார்கள். மாலைகள் என்ன தோரணங்களென்ன, பாட்டுக்கள் என்ன கூத்துக்கள் என்ன,மேள தாளங்கள் என்ன கச்சேரிகள் என்ன ,மிட்டாய்க் கடைகள் என்ன சிட்டுக்களாய் வண்ணப் பட்டாடைகளுடன் பறக்கும் சிறுவர்கள் என்ன......இப்படி ஊரே மகிழ்வில் மிதக்கும் நேரம் அயலூர்களும் அம்மகிழ்வில் கலந்து சிறந்த காலங்கள் பொன்னானவை.
ஊர் விட்டோடி, பின் நாட்டை விட்டு வந்தும், ஏதோ ஒரு காரணம் பற்றி  எம் மக்களின் இந்த சேர்ந்து மகிழும் பண்பு இன்னும் கூடவே வருகிறது. தனிப்பட்ட மங்கல நிகழ்வுகள் தவிர்ந்த நிகழ்வுகளாக எம்மக்கள் தேடிச் சென்று ஆறுதலடையும் ஓரிடம் ஆலயமாக அல்லது கோவிலாகவே அமைவதை எங்கும் காண முடிகின்றது.
அண்மையில் பரிசின் புறநகர்ப் பகுதியான Pontoise என்கின்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு ஆலயத் திருவிழாவுக்குச் செல்ல முடிந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி அவருடைய நிலப் பகுதியிலே மாதாவினுடைய உருவச் சிலையைக் கண்டு எடுத்து, அதிலிருந்து அந்த இடத்திலேயே உயரமான ஒரு கோபுரப் பகுதியும் அதனை அண்டி ஒரு சிறிய தேவாலயமும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மாதாவின் சிலையின் சிறப்பம்சம் என்னவென்றால் அவர் குழந்தை யேசுவைத் தூக்கி மேலே பிடித்திருப்பது. இதை வேறெங்கும் நான் கண்டதில்லை. கோபுரத்தின் உச்சியிலே மாதாவின் உருவச் சிலை வைக்கப்பட்டு, அதற்குச் சற்றுக் கீழ்ப் பகுதியில் சிறிதும் பெரிதுமாக மணிகள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.











மத்தியானம் பன்னிரண்டு மணிக்கே வழிபாடுகள் ஆரம்பமாகும் என்றிருந்தாலும் காலை பத்தரை மணிக்கே சென்றிருந்தோம். ஆலயத்துக்குள் வழிபாடுகளை  எதிர்பார்த்திருந்த எமக்கு, வயல் வெளிப் பரப்பில் வழிபாட்டுக்கான ஆயத்தத்தைச் செய்திருந்தது ஆச்சரியத்தையும், அதே நேரம் அந்த ஒழுங்கமைப்பு எமது தாய் நாட்டு நினைவுகளை அங்கேயே மீட்கவும் செய்தது.



தாய் மண்ணிலே எத்தனை சிறப்பாக ஒரு காலத்தில் எமது விழாக்களைக் கொண்டாடினோமோ அதனையே விழா ஏற்பாட்டாளர்கள் இங்கே உருவாக்க முனைந்திருப்பதை ஒவ்வொரு நிகழ்வுகளிலும் காணக் கூடியதாக இருந்தது. நடு மேடை வழிபாட்டுப் பகுதிக்கென்றும் அதற்கு இடது பகுதியில் அன்னையின் உருவச் சிலை வைத்த பகுதியாயும் இடது பகுதியில் பாடகர் குழாமுக்கென்று ஒரு மேடையும் என்று மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.



திறந்த வெளியைச் சுற்றிலும் கம்பங்கள் நடப்பட்டு அன்னை மரியின் நீலக் கொடிகளால் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. நற்கருணை விருந்தின்போது குருவானவர்கள் பல பகுதிகளாகப் பிரிந்து வழங்கியது முன்னொரு காலத்தில் எமது ஊர் விழாவைக் கண் முன் கொண்டு வந்தது.
விழா முடிவின் மிகச் சிறப்பான நிகழ்வு என்னவென்றால் திருச் சுருபப் பவனி வந்ததுதான். மக்கள் பாடல்களுடனும் தமது வேண்டுதல்களுடனும் தொடர்ந்தனர். எமது ஊர்களிலே திருச் சுருபத்தைக் கொண்டு ஊரையே வலம் வருவார்கள். இங்கே அந்த தன்னார்வத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட வயல் வெளியிலே வலம் வந்தனர்.
கொழுத்தும் வெய்யிலிலும் அன்னையின் அருள் வேண்டி ஆயிரக்கணக்கான மக்கள் வயல் வெளியிலே கூடியிருந்து மனமுருகி வேண்டி நிறைவுடன் திரும்பியதை காணக் கூடியதாக இருந்தது.





எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வாழ்வின் சோகங்களுள் மூழ்கி தங்களை  இழந்து போகாமலிருக்க எம்மக்கள் தேடி ஓடும் இடம் கோவில். அவன் மௌனமாய் இருப்பதால் மனிதன் தன் சுக துக்கங்களைக் கொட்டி, அவன் கேட்டு விட்ட மகிழ்வில் அமைதியாய் நிறைவுடன் வீடு திரும்புகின்றான்.











வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தாழ்ச்சியின் இடம்.











ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான மக்கள் பயணப்பட்டு, ஒன்று கூடி தங்கள் நிறைவேறிய வேண்டுதல்களுக்காக நன்றி கூறுவதிலும், வேண்டுதல்களை முன் வைப்பதிலும் முன்னிடம் வைக்கும் இடம் பிரான்சின் தென் பகுதியில் உள்ள லூர்து திருத்தலமே ஆகும். மத வேறுபாடின்றி அன்னையைத் தரிசிக்காமல் மன நிறைவடையாதோர்  பலர். லூர்தின் வரலாறு எல்லோரும் அறிந்த ஒன்று. லூர்து திருத்தலத்தின் தொடர்ச்சியான  அறிய வேண்டிய ஓர் இடத்தின் அறிமுக நோக்காகவே இக் கட்டுரையை வரைய முனைகின்றேன்.
பதினான்கே வயதான ஒரு சிறுமிக்கு அன்னை மேரி தன்னை  வெளிப்படுத்தியதிலிருந்து, இன்று நாம் நோக்கும் திருத்தல லூர்தின் வரலாறு ஆரம்பித்தது எனலாம். வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி, கடவுள் தன்னை வெளிப்படுத்தியது  தாழ்த்தப் பட்ட நிலையில் உள்ளவர்களிடமிருந்தே. யேசுவின் பிறப்புக் கூட இவ்வாறே  அமைந்தது. 
தைத் திங்கள் ஏழாம் நாள் ஆயிரத்தெண்ணூற்றி நாற்பத்து நான்காம் ஆண்டில், ஏறத்தாழ நான்காயிரம் மக்கள் தொகையாக இருந்த  லூர்து நகரில், François Soubirous Louise தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறக்கிறாள் பெர்னதெத் (Bernadette). இக்குழந்தையை அடுத்து  Toinnette என்கின்ற பெண் குழந்தையும் Jean-Marie,Justin, Bernard-Pierre என்ற ஆண்குழந்தைகளும் பிறந்தனர். இவர்களை விட மேலும் நான்கு குழந்தைகள் பிறந்து மிகச் சிறிய வயதிலேயே இறந்து விட்டனர் என்று சொல்லப்படுகின்றது. 
துன்பங்களையும் பிரிவுகளையும் தாங்கும் பக்குவத்தைக் கடவுள் அக் குழந்தைக்குத் தாராளமாகவே அள்ளிக் கொடுக்கின்றார். பிறந்த ஒன்றரை வருடத்திற்குள் தாயைப் பிரிகின்றாள். பெற்றோரின் தொழில் கை விட்டுப் போகிறது. வறுமை பிடித்தாட்ட இருப்பிடமின்றி தவிக்கும் குடும்பத்தில் நோயும் தனது  பங்கைச் சரியாகச் செய்கின்றது. பெர்னதெத் ஆஸ்துமா நோயாளியாகிறாள். ஒரு கட்டத்தில் அக் குடும்பம் கை விடப்பட்ட சிறைக் கூடம் என்று அழைக்கப்படும் 'Le Cachot ' வில் குடியேறுகின்றது. இந்தச் சிறைக் கூடம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், 1830 களில் கைதிகள் வேறிடம் மாற்றப்பட்டு வெறுமையாகக் கிடந்த இடம். நான்கு சதுர மீட்டர் கொண்ட இவ்விடத்தில் பெர்னதெத்தின் குடும்பம் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் வாழ்கின்றது.
பெர்னதெத்தின் பெற்றோர் கூலி வேலை செய்து வர, அவர்களின் வறுமைப் போராட்டத்தில் தனது பங்கைச் செலுத்த, மூன்று மாதக் கைக் குழந்தையாக இருந்த போது அவளை வளர்த்த வளர்ப்புத் தாயிடம்  வேலைக்குச் செல்லுகின்றாள் சிறுமி பெர்னதேத். ஆனாலும் முதல் நன்மை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற அவளுடைய நோக்கம் நிறைவேறாததால் அங்கிருந்து திரும்பி வந்து தனது பெற்றோருடன் இணைந்து கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்து கொள்ளுகின்றாள். தங்கை தம்பிகளைக் கவனிப்பதும் சிறு வேலைகளைச் செய்வதுமாய் நாட்கள் நகருகின்றன. 
மாசித்திங்கள் பதினோராம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில் வழமை போல விறகு தேடுவதற்காக  'Gave de Pau' என்று சொல்லப்படும் அருவிக்கு அருகில் உள்ள  Massabielle என்று சொல்லப்பட்டு பழைய பாறைக்கு அருகிலே தனது சகோதரி Toinette உடனும் நண்பியான Jeanne Abadie யுடனும் வந்து சேர்கிறாள் பெர்னதெத். மற்ற இருவரும் ஆற்றைக்  கடந்து விட சிறுமி பெர்னதெத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், காற்றில் இரைச்சலுடன் ஓர்  அழகான பெண் ஒளி வெள்ளத்துள் புன்முறுவலுடன் நிற்பதை முதல் முறையாகக் காண்கின்றாள். இம் முதற் காட்சியானது பயத்துடனும், 'அப்பெண்' என்று அவளால் விபரிக்கப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து செபிப்பதுடனும் மறைகின்றது. 
மாசித்திங்கள் பதினான்காம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில் நடைபெற்ற இரண்டாவது காட்சியிலே, பெர்னதெத் தன்னுடன் எடுத்து வந்த ஆசி நீரை 'அப்பெண்'ணின் மீது தெளிக்க, அவளின் சிரிப்புடன் செபம் தொடர்ந்து அது முடிவடைந்ததும் மறந்து போகின்றாள். பெர்னதெத் மயங்கிப் போய் விடுகிறாள் என்று சொல்லப்படுகின்றது. மூன்றாவது காட்சியில் பெர்னதேத் என்னும் குழந்தை சொல்லுவதை உறுதிப் படுத்த முயற்சிக்கும்  படலம் அருகிலுள்ளவர்களால் செய்யப்படுகிறது. ஆனால் மரியன்னை அவளூடாக ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறாள் என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை.  பெர்னதெத் மரியன்னை யார் என்று புரிந்திருக்க முடியாத நிலையில் "ஓர் அழகிய பெண்" என்றுதான் எப்போதும் சொல்லியிருக்கிறாள். அவள் தான் கண்ட அன்னை மரியிடம், அவளுடைய பெயரை எழுதித் தரும்படி கேட்கும்படி பணிக்கப் படுகின்றாள். இம்முறை மரியாள் குழந்தையுடன் உரையாடுகின்றாள். ஆனால் "உங்களுக்கு இவ்வுலக மகிழ்வான வாழ்க்கையை அருளமாட்டேன்" என்று கூறுகின்றாள். 
தொடர்ந்து நடை பெற்று வரும் காட்சிகளுக்கிடையில் திருச்சபையைச் சேர்ந்தவர்களாலும் ஊரில் இரண்டுபட்டவர்களாலும் விமரிசனங்களுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படுகிறாள் பெர்னதெத்.        
ஒன்பதாவது காட்சியிலே கெபியின் அடிப்பாகத்தில் உள்ள இடத்தில் பெர்னதேத்தைக் கழுவிக் கொண்டு அதில் வரும் நீரைப் பருகும் படி பணிக்கப்படுகின்றாள். அதுவே சிலதினங்களில் அவளுடைய தோழியின் கை மூட்டு நோயைக் குணமாக்கியத்தில் நோய் தீர்க்கும் மருந்தாகியது கெபியின் நீரூற்று.
பங்குனித் திங்கள் இரண்டாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில் தோன்றிய பதின்மூன்றாவது காட்சியிலே "இங்கே ஆலயம் ஒன்று எழுப்பி, மக்கள் பவனியாக வரும்படி செய்யும்படி  குருவானவரிடம் போய்ச்  சொல்" என்று  மரியன்னையால் பணிக்கப் படுகிறாள். இதனை ஒன்று கூடல் என்னும்  மக்கள் ஆலயத்தில் செபமாலைப் பவனி என்னும் கருத்திலும் கொள்ளலாம். இந்தச் செய்தியைக் குருவானவரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது சிறுமி பெர்னதெத்துக்கு இலகுவாய் இருக்கவில்லை. அவமானப்படுத்தப் படுகின்றாள். இருப்பினும் நீண்ட முயற்சியின் பின்னர் தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை தெரிவித்து விடுகின்றாள். அத்துடன் தனது  பணி  முடிவடைந்த திருப்தி அவளுக்குள் எழுகின்றது.
மாசித்திங்கள் இருபத்தைந்தாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில் 
நடைபெற்ற பதினாறாவது காட்சியிலே அழகிய ஒளி சூழ்ந்த பெண்ணிடம் இறைஞ்சிக் கேட்கிறாள் அவள் யாரென்று கூறும்படி. அழகான பதில் கிடைக்கிறது 'நானே அமல உற்பவம்' என்று. அதன் கருத்து அதிகம் புரியாத ஆனால் தனது கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது என்கின்ற மகிழ்வில், விசாரணைக்காரர்களில் ஒருவரான பங்குக் குருவிடம் சொல்கையில் அவர் அதிர்ந்து போய் விடுகின்றார். ஆனாலும் நம்புவதில் இன்னும் தயக்கம் காட்டுகின்றார். ஆனாலும் பெர்னத்தெத்துடன் மக்கள் படையெடுத்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். இன்னொரு பக்கத்தினால் மருத்துவ ரீதியாக அவளைப் பரிசோதிக்கவும் பதவியிலுள்ளவர்கள் தவறவில்லை.
ஆடித் திங்கள் பதினாறாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில், இறுதிக் காட்சியான பதினெட்டாவது காட்சியில் 'கெபி' இருக்கும் இடம் சுற்றிவர அடைக்கப்பட்டிருக்க, பெர்னதேத் கொஞ்சம் தொலைவில் இருந்து செபிக்கத் தொடங்குகையில் அன்னை தன்னருகே இருப்பதை உணர்ந்து கொள்ளுகின்றாள். இக்காட்சி அன்னையின் அரவணைப்பு எங்கும் இருக்கும் என்பதை உணர்த்துகின்றது.
"குருவானவரிடம் போய்ச் சொல்" என்ற பதின்மூன்றாவது காட்சியின் செய்தி மறுதலிக்க முடியாத ஒன்றாகிப் போய் விடுகின்றது. 
ஆடித் திங்கள் இருபத்தெட்டாம்  நாள் ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தெட்டில், விசாரணைக் குழு அமைக்கப் படுகின்றது. மூன்றாண்டுகள் இதற்குத் தேவைப்படுகிறது. இதனிடையில் மூன்றாவது நெப்போலியனின் மகனின் நோய் லூர்து ஊற்று நீரைக் குடித்ததினால் குணமாகியதால் கெபியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த தடைகளை நீக்கிவிடுகிறான் நெப்போலியன்.
விசாரணைக் குழுக்களின் ஆய்வின் முடிவில் ஆயிரத்தெண்ணூற்று அறுபத்து இரண்டில் ஆயர் லோரன்ஸ் மரியாளின் காட்சி உண்மை என்று பகிரங்க அறிக்கை விடுகிறார்.
இந்த நிலையில் Nevers என்கின்ற இடத்தைச் சேர்ந்த அருட் சகோதரிகள் லூர்தில் நோயாளர்களையும் போரில் காயம் அடைந்தவர்களையும் பராமரிக்கும் பணியில் தானும் இணைய விரும்புகின்றாள். அத்துடன் தான் அருட் சகோதரியாக விரும்புவதையும் உணர்கிறாள்.
இதன்படி ஆயிரத்தெண்ணூற்று அறுபத்தாறில் Nevers St.Gildard  மடத்திற்கு வந்து சேர்கின்றாள்.
பதின்மூன்று ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாள். இதனிடையே தனது சகோதரன் Justin ஐயும்பெற்றோரையும் இழந்து விடுகிறாள். 
புரட்டாதித் திங்கள் முப்பதாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று அறுபத்தேழில் துறவியாகிறாள் பெர்னதேத்.
அங்கே தாதியாகத் தனது  பணியை தொடர்ந்தவர்,  சிறுவயதிலிருந்தே ஒட்டியிருந்த  நோய்கள்  அடிக்கடி வாட்டி வதைக்க,  ஆயிரத்தெண்ணூற்று எழுபத்தெட்டு இறுதியில் படுக்கையாகி, சித்திரைத் திங்கள் பதினாறாம் நாள் ஆயிரத்தெண்ணூற்று எழுபத்தொன்பதில் இவ்வுலக வாழ்வை நிறைவெய்துகிறார் பெர்னதெத்.
இவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட முப்பது ஆண்டுகளின் பின் இவரது கல்லறை திறக்கப்பட்டபோது உடல் அழியாமல் இருந்திருக்கிறது.
ஆனித் திங்கள் பதினான்காம் நாள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து மூன்றில் திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்களால் புனிதையாக உயர்த்தப்படுகிறார்.

பல ஆலயங்களால் சூழப்பட்டு இருக்கும் இடம் Nevers. பரிசிலிருந்து தெற்கு நோக்கி ஏறக்குறைய இருநூற்றைம்பது கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அமைதி நிறைந்த ஆடம்பரமற்ற பகுதி. இங்கே ST. BERNADETTE. தனது வாழ்வின் இரண்டாம் பகுதியை அமைதியாய் சேவையுடன் தனித்து இருக்க விரும்பியுள்ளார் என்பதை அவர் பாதம் பட்ட இடங்கள் சாட்சி பகர்கின்றன. ஒரு சிறிய குகை போன்ற பகுதியில் நீண்ட நேரங்களை தனியே செபித்திருந்து  செலவிட்டிருப்பது  அதிசயிக்க வைக்கின்றது. அவர் தங்கியிருந்து இறந்த  அறையில் அவருடன் வேறு இரண்டு  அருட் சகோதரிகள் தங்கி இருந்திருக்கின்றனர். அந்த அறையை அப்படியே பாதுகாத்து வருகின்றனர் ஒரு செபக்கூடமாக.  யாரும் பார்த்து வரும்படி அமைந்துள்ளது. ஆலயத்தினுள்ளே அவரது உடலம் பேழையுள் வைக்கப் பட்டுள்ளது. ஆலயத்துக்கு வெளியே லூர்து கெபி போன்ற ஓர் இடத்தை இங்கே அமைத்துள்ளார்கள்.  ஒரு சிறிய அவர் பாவித்த பொருட்கள் அடங்கிய காட்சி சாலை ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. தூர இருந்து வருபவர்கள் தங்குவதற்கேற்ப ஒரு விடுதி ஆலயத்துடன் சேர்ந்த கட்டிடத்தினுள் அருட்சகோதரிகளினால் நடாத்தப்படுகின்றது. பணியாளர்கள் எப்போதும் வெளியே அன்போடு வரவேற்று விளக்கமளித்து வருகின்றனர். இவ்விடம் ஒரு முறை சென்றால் மீண்டும் சென்று வரத் தூண்டும் அமைதிப் பூங்கா.

வி.அல்விற்.
09.08.2013.

துணை நூல்: "லூர்து நம்பிக்கை தரும் நகரம்" (அருட்திரு. செபமாலை அன்புராசா).
துணைத் தளம் : http://fr.wikipedia.org/wiki/Bernadette_Soubirous#Les_trois_premi.C3.A8res_apparitions














புதன், 7 ஆகஸ்ட், 2013

செல்வம்

ஆயிரம் கோடி விண்மீன்களின் ஒளி 
பகலைச் சொந்தமாக்கும் கதிரவன் இளநகை 
தண்ணொளி பரப்பும் மதி முக நளினம் 
நானே யென்று ஓங்கி ஒலிக்கும் கடல் 
வாவென்று மயக்கும் வருடல் காற்று 
பட்டதும் சிலிர்க்கும் ஆகாயத் தூவல்கள் 
எல்லாமே அடுத்தடுத்த நிலையில் தான் 
எல்லாம் மறந்து சிரிக்கும் 
என் குழந்தையின் முன்னால்.

வி. அல்விற்.
07.08.2013.

கடவுளின் பிரதிநிதிகள்

வெள்ளையாய் மலர்ந்து சிரித்து 
அதையே திருப்பித் தேடுவதில் 
காணாத கடவுளின் பிரதிநிதி நீங்கள் 

துக்கத்தின் விம்மல்களையும் 
மகிழ்வின் எல்லைகளையும் மறைக்கவியலா 
பளிங்கு முக ஓவியங்கள் நீங்கள் 

பொய்மைகளைப் புரிய வியலாது 
மெய்யாகவே திணறும் 
உண்மைகளின் சாட்சிகள் நீங்கள்

வார்த்தைகளின் சுழற்சிகளில்
சிக்கிச் சுழன்று கேள்விகளோடு
பறக்கும் பட்டாம் பூச்சிகள் நீங்கள்

'பெரியவர்கள்' ஆகும் அவதாரத்துள்
மாறா வடுக்களுடன் நுழைந்து
முகமிழந்து போகும் குழந்தைகள் நீங்கள்.

வி.அல்விற்.
07.08.2013.

ஏக்கம்

நேற்று முன்தினம் தபால்காரன் 
கடந்து போனான் 
வராத அஞ்சலால் முகம் மாறி 
இவன் உள்ளே போனான் 
இன்று தபால்காரன் கடந்து போனபின் 
இவர்கள் வீடு வந்து சேர்ந்தனர் 
பெட்டி திறந்து கண்களில் நீர் கோர்த்தான் 
வராத அஞ்சலுக்காய் மௌனமாய் 
பிஞ்சு மனம் உடைவதில் 
அக்கறையற்ற பொருளுலகம் 
அனுப்ப விரும்பா அஞ்சலுக்காய்
நாளைக்கும் இவன் காத்திருப்பான்...

வி.அல்விற்.
05.08.2013.

உயர் நட்பு

பேச முடிந்த பொழுதுகளில் இனிமையாய் 
நாவெழாத் தருணங்களில் வார்த்தைகளாய் 
சிந்தை கலங்குகையில் தெளிவுரையாய் 
துக்கம் தூக்கம் தொலைக்கையில் தலையணையாய் 
சொல்லவியலா சமயங்களில் நிரப்புகையாய் 
கண் வழி தேவைகளை அறிபவராய் 
நல்லாலோசனைக்கு ஒரு மந்திரியாய் 
தவறு இடித்துரைக்கும் நல்லாசானாய் 
ஓர் உயர் நட்பு யார்க்கும் கிடைத்திடல் வேண்டும் 

வி.அல்விற்.
05.08.2013.

மறுதலிப்பு

பிஞ்சுகளின் உழைப்பை ஆழ உறிஞ்சி 
நம்பிக்கை வேரை அடியோடறுத்து 
வார்த்தைகள் மௌனித்து தொக்க 
வலி பிறக்கும் நெஞ்சை மறைக்க முடியாது 
குழந்தைகளின் கண்களில் ஓடும் ஏக்கத்தை 
மறுதலித்துப் போகும் பெரிய மனிதர்கள் 
பிறவாதிருத்தல் பூமிக்கு நலம் 

வி.அல்விற்.
05.08.2013.

ஈழத் தாய்

நாட்கள் எண்ணும் வாழ்க்கை 
கண்ணில் நோயென்று 
நாள் முழுக்க ஒரு வைத்தியரிடம்
நெஞ்சில் வலியென்று
இன்னொரு நாள் வேறு வைத்தியரிடம் 
கால்கள் வீங்குதென்று
அடுத்தநாள் வரிசையில்  
பெரியாஸ்பத்திரியில்
தனியாளாய் நிற்கையில் 
கலங்கும் கண்களைத் 
துடைக்கிறாள் தன் கைகளால்
ஓர் ஈழத் தாய் 
புயலின் பின்னான
ஊமை அமைதியில் 
வரிசையாய் எல்லோரும்
வந்து இறங்கிக் கொண்டிருக்க 
இவள் மகன் மட்டும் 
மறுத்தே நிற்கிறான் 
கொழும்பு தாண்டும் பயத்தில்
ஆசையாய் உணவாக்கிப் போட
காத்திருந்த கைகள்
நடுங்கத் தொடங்கியுள்ளன 
நம்பிக்கைகள் வழுகிக் கொண்டிருக்க 
தன்னை தூக்கி நிறுத்துகிறாள் 
உட் தோன்றிய சமாதான வார்த்தைகளால்
இனி வரும் நாட்களும் 
தானும் நிழலும் தனி என்று தெரிந்தும் 

வி.அல்விற்.
12.07.2013. 

சில்லறைகள்

சில்லறைகளாய் உருளும்  
தான் பெற்ற செல்வங்களை
உற்றுக் கண்ணீர் உகுக்கிறாள் 
தமிழ்த்தாய் 
தன்பெயரால் இணையும் 
நம்பிக்கையும் தகர்வதால் 
முறுக்கெடுத்த இனத்தின் 
விவாதங்கள் தொடர்கின்றன 

வி.அல்விற்.
08.07.2012.

மூடிக் கிடப்பதே மேல்

என் இருப்பிடமும் அதன் வாசலும்
பேயுறையும் மாளிகையாய் 
மூடிக் கிடப்பதே மேல் 
தோப்புக்கள் அடர்ந்து 
காடுகளாவது சாலச் சிறந்தது 
எம் வளம் உறிஞ்சி 
அவன் வளம் பெறுவதை விட 
வயல்வெளி யெங்கும்
பற்றைகளாகி வானம் பார்த்து
அழுவதே சிறப்பு 
எம் செம்மண் அலசி 
அவன் தன் ஏலம் கூட்டுவதை விட  

என் இருப்பிடமும் அதன் வாசலும்
பேயுறையும் மாளிகையாய் 
மூடிக் கிடப்பதே மேல் 
எவனோ ஒருவன் உறுதி எழுதி 
அதன்மேல் நடந்து 
என்னெஞ்சை மிதிப்பதை விட.....

வி.அல்விற்.
10.07.2013.

சாத்தியமில்லாத அமைதி

மூடிய கண்களுக்குள் நிறங்கள் வடிவமைக்க
பிடித்திருக்கும் ஒவ்வொன்றிலுமிருந்து
விடுபட்டு சுகமாய் ஆனந்தமாய் 
மிக உயரத்தில் தனியே  பறந்து 
மெதுவாக அமைதிக்குள் ஆழ்ந்து போகையில்
தடாலென்று இழுத்துப் போட்டு 
சுற்றி வளைக்கிறது பாச பந்தங்கள்  
சாத்தியமில்லாத அமைதி 

வி.அல்விற்.
08.07.2013.

அறுந்த கொடிகள்

அறுந்த கொடிகள்

29 juin 2013, 01:39
எப்போது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற சிந்தனை வேர் விட்டது என்று சொல்லத் தெரியவில்லை. சூரியனை இரசித்து, மேகங்களோடு நடந்து நட்சத்திரங்களில் வடிவங்கள் அமைத்து நிலவு முற்றத்தில் சாப்பிட்டுக் கதை பேசி, மலர்களைத் தடவிச் சிலிர்த்து மகிழ்ந்து , காலையும் மாலையும் குளிர்ந்த கிணற்று நீரில் ஆசைதீரக் குளித்து, கோவில் மணிகளில் நேரம் கணித்து, "என்ன சுகமாய் இருக்கிறியளே?" விசாரிப்புகளில் உறவுணர்ந்து, வீட்டுக்கு நேரம் பிந்தி வரும் போது கலக்கமாய் வாசலில் நிற்கும் அம்மாவின் அன்பில் திளைத்து..... இப்படி  இலகுவாயிருந்த வாழ்வு எப்படி இறுக்கமாய்ப் போயிற்று? சொந்த ஊர்களுக்குள்ளேயே ஏதிலிகளாய் அடுத்த ஊரில் மற்றோர் தயவில் வாழ்ந்த வாழ்வா துரத்தியது? அல்லது உண்மையிலேயே உயிர்ப்பயமா? செல்வனின் தாயைப் பொறுத்தவரை அவன் எங்கேயாவது போய் உயிர் வாழ்ந்தால் காணும் என்ற எண்ணம் பிடித்தாட்ட நித்திரை இழந்து தவித்தாள். ஆனால் அவனைப் பொறுத்தவரை கையிலே அரச உத்தியோகம். அது போதவில்லை அவனுடைய கனவுகளுக்கு. அந்தக் கனவுகள் துரத்தியனவா? அத்தோடு சொந்த ஊரில்லை, குளிக்கக் கூட அடுத்த வீட்டுக் கிணற்றடியிலே ஆளில்லாநேரம் பார்த்துக் கால் வைக்க வேண்டிய அவல நிலை. அது சரியில்லை இது சரியில்லை என்கின்ற சாடைப் பேச்சுக்கள். இந்த நிரந்தரமற்ற நிம்மதியற்ற வாழ்க்கையின் சலிப்புகள் துரத்தியனவா? இவைகளில் எதுவோ அது அவனைத் தூக்கி எறிந்தது. இப்போது யோசித்துப் பார்க்கும்போது பல காரணிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டி நின்றன.
அக்கா "இஞ்சை வா, விசாவும் வேலையும் சுகமாக எடுக்கலாம்" என்று கூப்பிட, அம்மா நிம்மதியாக மகனை வழியனுப்பி வைத்தாள்.
அக்காவிடம் வந்து சேரும்போது, அவனுக்கு மனம் நிறையக் கனவுகள் பூத்துக் கிடந்தன. எதிர்காலம் சூரியனாய்ப் பிரகாசித்துத் தெரிந்தது. தான் படித்திருக்கிறேன், வேலை செய்திருக்கிறேன் என்கின்ற வகையில் தன்னம்பிக்கை தூக்கலாய் இருந்தது. அக்கா தம்பியை நன்றாகத்தான் வரவேற்றாள். பாசமாய்ப் பொழிந்தாள். அவன் வந்தபோது அக்காவும் அத்தானும் ஒரு அறை கொண்ட இரண்டாவது மாடி வீடொன்றில் குடியிருந்தனர். ஒரு வரவேற்பறையும் அதை அடுத்து பொருட்கள் வைக்கும் ஒரு சிறிய இடமும் (அதுவே சாமி அறையாகவும்) வலது புறத்தில் ஒரு அறையும் இருந்தன. வரவேற்பறையைத் தொடர்ந்து கழிவறையும் குளியலறையும் சேர்ந்தாற்போல் இருந்தன. வாசற்கதவைத் திறந்தவுடன் இடது புறத்தில் இரண்டுபேர் மட்டுமே மட்டுமட்டாய் நிற்குமளவுக்கு சமையலறை மிகச் சிறிய யன்னலுடன் இருந்தது.  அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே நோட்டமிட்டு கொஞ்சம் அதிர்ந்து பின்னர் இயல்பானான். சாமியறையின் ஓரத்தில் தனது உடைமைகளை வைத்துக் கொண்டான். வரவேற்பறையில் இருக்கும் இருக்கை அவனது கட்டில் ஆகியது.

வந்த சில நாட்களுக்குள்ளே இருப்பிட அனுமதிக்கான விண்ணப்பங்கள் போன்ற ஆரம்ப கட்ட விடயங்களை அத்தானின் உதவியுடன் செய்து முடித்தான். அதன் பிறகு வேலை என்ற விடயம் பற்றிப் பேச முற்பட்டபோது தான் சிக்கல்கள் ஆரம்பமாகின. அவன் ஊரில் இருந்து வெளியேறும்போது தனது கல்விக்கேற்ற வேலை கிடைக்கும் என்றே முழுமையாக நம்பியிருந்தான். இங்குள்ளவர்களும் அதற்கான முழு விளக்கத்தை கொடுத்திருக்கவில்லை. வேலைக்கு முதலில் தடையாக இருந்தது மொழி. மொழியைக் கற்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது என்கின்ற நிலையில் அதைக் கற்கத் தொடங்கினான். பிரெஞ்ச் மொழி ஒன்றும் அவ்வளவு இலகுவான மொழியல்ல. அதன் இலக்கணம், அவற்றின் விதிவிலக்குகள் என்பவற்றைப் பார்த்த போது விரைவில் கற்றுக் கொள்ளும் மொழியாக அவனுக்குப் படவில்லை. அதே நேரம் அதனைக் கற்று முடிக்கும் வரையில் எதுவும் செய்யாமல் இருக்கவும் பிடிக்கவில்லை. அத்தான் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்து கடைசியில் ஒரு உணவகத்தில் உதவியாளனாகச் சேர்த்து விட்டார். மனதுக்குள் ஆத்திரமும் வேதனையும் எழுந்தன. "நான் இந்த வேலை செய்யிறதா?"..... வேறு வழி??... மனதுக்குள் அழுதுகொண்டே வேலையைத் தொடங்கினான். காலையில் தேநீரோடு எழுப்பும் அம்மாவின் முகமும் சாப்பிட்டபின் கோப்பையைத் தள்ளி விட்டு விட்டு எழும்பும் தனது திமிரும் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்தன.
அத்தானின் அப்பாவும் அம்மாவும் ஒரு தங்கையும் இங்கேயே வேறொரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அத்தானின் தங்கை பிறான்பிறியில் வேலை செய்து கொண்டிருந்தாள். லீவு கிடைக்கும் போது அண்ணனைப் பார்க்க வந்து விடுவாள் பெற்றோருடன். முன்பு எப்படியோ தெரியாது அவனுக்கு . ஆனால் இப்போது அவர்கள் வருவது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. அவனுடைய அறையே வரவேற்புக் கூடம் தான். அதையும் அவர்கள் வந்து ஆக்கிரமித்தால் என்ன செய்வது? மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்தார்கள் என்றால் இரவும் சாப்பிட்டு வெளிக்கிட பதினொரு மணியாகும். முள்ளிலே நிற்பது போல உணர்வான். வேலையால் வந்த களைப்பில் நேரத்தோடு நித்திரை கொள்ளலாம் என்று நினைத்தால் அது முடியாது.அவர்களுக்கு முன்னால் என்ன பேசுவது என்று தெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பதை விட வெளியே எங்கேயாவது கொஞ்ச நேரம் போய் விட்டு வரலாம் என்று வெளிக்கிட்டால் அக்கா விட மாட்டாள். தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்தபடி கதிரையின் விளிம்பில் இருப்பான்.
முதல் மாத சம்பளம் அம்மாவை நோக்கிப் பறந்தது. அம்மாவுடன் தொலைபேசியில் பேசினான். அம்மாவுக்கு மகிழ்ச்சி. உடம்பைப் பார்த்துக் கொள் என்றாள் எல்லா அம்மாமாரையும் போல. அக்காவுக்குக் கொஞ்சப் பணம் கொடுத்தான். அக்கா கத்தினாள் " நீ என்ன நினைச்சுக் கொண்டு காசு தாறாய்? உன்னட்டைக் காசு வாங்கிக் கொண்டு தான் நான் உனக்குச் சாப்பாடு போடுவேன் எண்டு நினைக்கிறாயோ?".... அழுதாள் அக்கா. அதற்குப் பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை.
கொஞ்ச நாள் கழித்து அக்கா "தம்பி நான் உன்னோடை ஒருக்கா கதைக்க வேணும்" என்றாள். "சொல்லுங்கோ" என்றான்.
"கவிதாவுக்கும் கலியாணம் கட்டுற வயது வந்திட்டிது, இஞ்ச நல்ல பெடியளை கண்டு பிடிக்கிறதெண்டால் சரியான கஷ்டம், அவளும் படிச்ச பிள்ளை, அமைதியான குணம்......ஒண்டுக்கை ஒண்டு செய்திட்டால் எல்லாரும் ஒருத்தருக் கொருத்தர் ஒத்தாசையாய் இருக்கலாம்தானே.... நீ என்ன சொல்லுறாய்?......இழுத்தாள் அக்கா.
அக்கா சுத்தி வளைத்து எங்கே வந்து நிற்கிறாள் என்று விளங்கியது செல்வனுக்கு. அவனுக்கு அக்காவுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. கலியாணம் என்றால் ஒவ்வொருவருக்கும் வரப் போகிற பெண்ணை அல்லது ஆணைப் பற்றின கனவு அல்லது எதிர்பார்ப்புக்கள் என்று இருக்கும். கவிதா வீட்டுக்கு வரும் போதெல்லாம் தன்னைப் பார்த்து தேவையில்லாமல் சிரித்துக் கொண்டிருந்ததன் கருத்து இப்போதுதான் அவனுக்கு விளங்கியது. ஆனால் அதுவே அவனை எரிச்சல் படுத்தியதை அவள் அறிந்திருக்கவில்லை. ஏன் என்று காரணம் சொல்ல முடியாமல் அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. இதைச் சொல்லுவதை அக்காவும் அத்தானின் குடும்பமும் எப்படியும் தவறாகத்தான் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்; அதற்காகச் சொல்லாமலும் இருக்க முடியாது.
"அக்கா! அந்தப் பிள்ளை சரியில்லை எண்டு நான் சொல்லேல்லை, ஆனால் எனக்கு அந்தப் பிள்ளையைக் கலியாணம் கட்டப் பிடிக்கேல்லை".
"ஏன் உனக்குப் பிடிக்கேல்லை?"
"இதுக்கெல்லாம் காரணம் சொல்ல ஏலாது. எனக்கு பிடிக்கேல்லை எண்டால் விடுங்கோவன்...அந்தப் பிள்ளைக்கு வேற இடத்தில பாருங்கோ..."
அக்கா அவனை முறைத்துப் பார்த்தாள். "உன்ரை அத்தான் உன்னை எவ்வளவு நம்பி இருந்தவர்? இப்ப நீ மாட்டன் எண்டு சொன்னனீ எண்டு கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்?"
அவனுக்கு  எல்லாம் விளங்கத் தொடங்கியது. அக்கா திட்டமிட்டே அவனை இங்கே கூப்பிட்டிருக்கிறா என்று.
"அப்ப நீங்கள் முதலிலேயே கதைச்சு முடிவெடுத்து இருக்கிறீங்கள் போலத் தெரியுது, ஆனால் சம்பந்தப்பட்ட என்னட்டைக் கேக்காமல் கதைச்சிருக்கிறீங்கள். இதுக்கு நான் ஒண்டும் செய்யேலாது. ஏனெண்டால் இது என்ரை வாழ்க்கைப் பிரச்சனை.  நான்தான் முடிவு எடுக்க வேணும். அந்தப் பிள்ளையை நான் செய்ய மாட்டேன் இது தான் என்ரை முடிவு" உறுதியாகச் சொல்லிவிட்டு, இருக்கையை நெம்பித் தள்ளிப் படுக்கையாக்கி விட்டு, தலையணையைப் போட்டுக் கொண்டு தலைவரை மூடிக் கொண்டு படுத்து விட்டான். நித்திரை வர மறுத்தது. இனி தன்னுடைய இருப்பு கேள்வியாகும் என்று தெரிந்தது.
அடுத்த நாள் காலை தேனீர் தரும் அக்கா கவனிக்கவில்லை. தானே போட்டுக் குடித்தான். குளிக்கும்போது அக்காவின் குரல் கேட்டது. "கெதியில குளிச்சிட்டு வா வெளியிலை, இப்பிடியே மணித்தியாலக் கணக்கில குளிச்சுக் கொண்டிருந்தால் தண்ணி பில் ஆர் கட்டிறது?"
அவன் குளித்து விட்டு வெளியில்  வந்தான். அக்கா தனக்குள் முணுமுணுத்தபடி சமைத்துக் கொண்டிருந்தாள். அவன் வேலைக்கு வெளிக்கிட்டு போகும்போது அக்காவைத் திரும்பிப் பார்த்தான். "என்னெண்டாலும் சாப்பிட்டிட்டுப் போ" என்று வழமையாகச் சொல்லும் அக்கா  அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
வேலையிடத்தில் அவனுடன் வேலை செய்யும் இருவரிடம் ஒரு தங்குமிடம் அவசரமாகப் பார்க்கச் சொல்லிச் சொல்லி வைத்தான். அன்று வேலையில் முழுதாகக் கவனம் செல்லவில்லை. வேலையை முடித்து வீட்டுக்கு வந்தால், அத்தான் இவனைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டு  எழுந்து உள்ளே போய் விட்டார்.  இவர்கள் தாங்களாக ஒன்றை நினைத்து விட்டு முறைத்துக் கொண்டு நிற்பது செல்வனுக்கு வருத்தமாக இருந்தது.
"இருக்கிற இடத்தை துப்பரவாக வைச்சிருக்க வேணும், ஆராவது வீட்டை ஆக்கள் வந்தால் என்ன நினைப்பினம்? எல்லாம் போட்டது போட்ட இடத்தில அப்பிடியே கிடக்குது குப்பையா"....அக்கா இரட்டைத் தொனிப்பட தனக்குள் பேசுவதுபோலப் பேசிக் கொண்டிருந்தாள். அவன் பதில் ஏதும் பேசவில்லை. சுற்றிப் பார்த்தான். அவனுடைய உடைமைகள் எதுவும் அங்கே சிதறிக் கிடைக்கவில்லை. நாட்கள் நரகமாக ஊர்ந்தன.
ஒரு  நாள் வேலையிடத்தில் அவனுக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு அறை வாடகைக்கு இருப்பதாகச் சொன்னார். வேலை முடிந்ததும் உடனடியாக அந்த இடத்தைப் போய்ப் பார்த்தான். அவனைப் போல நான்கு பேர் சேர்ந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். குடும்பகாரருடன் சேர்ந்து இருப்பதை விட இப்போதைக்கு இது நல்லதாகப் பட்டது அவனுக்கு.  வீட்டுக்குத் திரும்பியதும் அக்காவிடம், தான் வேறு இடம் தங்குவதற்குப் பார்த்திருப்பதாகச் சொன்னான். அக்கா அதை எதிர்பார்த்ததைப் போல ஒன்றும் பேசவில்லை. அவன் தனது உடமைகளை சேர்த்து  ஆயத்தப்படுத்தினான்.

திங்கட்கிழமை அந்த வீட்டுக்குப் போக முதல் நாள் அம்மாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். அம்மாவை வருத்தப்பட வைக்க விருப்பமில்லை அவனுக்கு. எனவே அக்காவுக்கும் தனக்குமிடையிலான மனக்கசப்பு பற்றிப் பேச விருப்பமில்லை. ஆனால் அக்கா எல்லாவற்றையும் சொல்லியிருப்பது அம்மாவின் பேச்சில் தெரிந்தது. "உனக்கு என்ன சரியெண்டு படுதோ அதை செய் தம்பி" என்றா அம்மா சுருக்கமாக. அவனுக்கு அது பெரிய ஆசீர்வாதமாகப் பட்டது அவனுக்கு. அம்மாவின் பேச்சிலிருந்து அம்மாவின்  கடிதங்கள் அவனுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிந்தது. அதை அக்கா கிழித்துப் போட்டிருப்பா. உடனடியாக அக்காவின் வீட்டிலிருந்து தன்னுடைய விலாசத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அடுத்த நாள் முதல் வேலையாக வேலையால் வந்ததும் நேரடியாகத் தபால் நிலையத்துக்குப் போய் தனது கடிதங்களை தனது புதிய விலாசத்துக்கு அனுப்பும்படி செய்து விட்டு, அக்காவின் வீட்டுக்குப் போய் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு புதிய இருப்பிடத்துக்கு வந்து விட்டான். அக்கா கடைசிவரை முகம் கொடுத்துப் பேசாதது மனவருத்தமாகவே இருந்தது.
அடுத்த நாள் அவன் வழமை போல வேலையிடத்துக்குச் சென்ற போது இன்னொரு இடி காத்திருந்தது. இந்த மாதத்திலிருந்து அவனை வேலையிலிருந்து நிறுத்தி விட்டதாக அவனை நேரே கூப்பிட்டு முதலாளி கடிதத்தைக் கையிலே கொடுத்தார். "ஏன் என்ன பிரச்சனை? நான் நல்லாத்தானே வேலை செய்தனான்?" என்றான். முதலாளி தோளைக் குலுக்கினார். வேறு பேச்செழாது உடுப்பை மாற்றி குசினிக்குள் நுழைந்தபோது, அவனோடு வேலை செய்பவர் " உங்கடை அத்தான் மூண்டு நாளைக்கு முதல் இஞ்ச வந்து முதலாளியைப் பாத்துக் கதைச்சிட்டுப் போனவர்" என்றார். இவனுக்குப் புரிந்தது.
"இந்தப் பெரிய பிரான்சில வேலை தேடுறது அவ்வளவு கஷ்டமோ" என்றான் சொன்னவரைப் பார்த்து. நாளையில இருந்து எங்கேல்லாம் போய் வேலை தேட வேணும் என்று மனதில் குறித்துக் கொண்டே அதே வேகத்தோடு அடுப்பை மூட்டினான் செல்வன். வாயு அடுப்பு பற்றிக் கொண்டு சீறிப் பிரகாசித்தது.

வி.அல்விற்.
20.06.2013.