வெள்ளி, 21 டிசம்பர், 2012

தொலைநோக்கு??

நேர எழுப்பி சிணுங்க நித்திரை கலைந்த பரிமளத்துக்கு காலையா, மாலையா,வேலைநாளா, அல்லது விடுமுறைநாளா என்று சில கணங்கள் குழப்பமாயிருந்தது. இயந்திர வாழ்க்கைக்குள் பழக்கப்பட்டு விட்ட மூளையின் செயல்பாடு அதனையே சுற்றி வருவது இயல்பாயிருக்கிறது. மெதுவாக கைகளால் தடவி மின்விளக்கைப் போட்டு திகதியையும் நாளையும் பார்த்து விட்டு,  இரவு படுக்குமுன் நேர எழுப்பியை நிறுத்தாமல் விட்டதற்காக தன்னைத்தானே நொந்து கொண்டாள். கட்டிலுக்கு நேரே இருந்த நாட்காட்டி சனிக்கிழமையை சுட்டியது. விளக்கை அணைத்து விட்டு போர்வையைத் தலை வரை இழுத்துப் போர்த்துவிட்டு, விட்ட தூக்கத்திலிருந்து தொடர முயற்சித்தாள். சரிந்தும், புரண்டும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு நித்திரையை வரவழைக்க முயற்சித்தும் பயனின்றிப் போனது. கோபத்தோடு போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தாள். அம்மா சமையலறையில் சத்தமின்றித் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். இவளைக் கண்டதும் ஏன் பிள்ளை நேரத்தோடை எழும்பிட்டாய் கொஞ்ச நேரம் படுத்திருந்திருக்கலாமே என்றாள். இல்லை அம்மா, அலார்ம் நிப்பாட்ட மறந்திட்டன்; அது வழமை போல எழுப்பிட்டிது என்றாள். சரி தேத்தண்ணீர் போடுறன் வா குடிப்பம்  பிள்ளை என்றாள் தாய் திலகம். காலைச்சாப்பாட்டுக்கு மற்றவர்கள் எழும்பும் வரை காத்திருக்க வேண்டும். விடுமுறை நாட்களில் எல்லோரும் சேர்ந்து உணவருந்துதல் அந்த வீட்டு எழுதாச் சட்டம்.பல் விளக்கி முகம் கழுவி விட்டு வந்து தாயும் மகளும் தேநீர்  சேர்ந்து குடிக்கத் தொடங்கினார்கள். திலகத்துக்கு மகளைப் பார்க்க யோசனையாக இருந்தது. பரிமளத்துக்கு இருபத்தேழு வயதாகிறது. ஆரம்பத்தில் படிப்பு, பிறகு வேலை  என்று அவளே தட்டிக் கழித்து வந்ததில் தகப்பனும் பிள்ளைகளின் விருப்பம் என்று திலகத்தைப் பேச விடாமல் தடுத்து விட்டார். ஆனால் இப்போது திருமணம் பேச முற்படும் போது ஏனோ சப்பைக் காரணங்களுடன் தடைபட்டுப் போகின்றது.
பரிமளம் ஒரு தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக இருக்கிறாள். மனதுக்குப் பிடித்த வேலை, கை நிறைய சம்பளம். இப்போது திருமணத்துக்கும்  பெற்றோருக்கும் தடை சொல்லவில்லை. கடந்த மாதம் ஒரு நல்ல இடம் இருக்கிறது என்று வந்தது.ஆனால் இடையில் ஏனோ எந்தவித பதிலுமின்றி கைவிட்டுப் போனது. ராசன் மும்முரமாக மகளுக்கு மாப்பிள்ளை தேடி கொண்டிருந்தான். அம்மா தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, என்னம்மா என்னையே பாத்துக் கொண்டிருக்கிறீங்கள்? தேத்தண்ணியைக் குடியுங்கோ ஆறிப் போகுது என்றாள் பரிமளம். பெற்றோருடைய கவலை நன்றாகவே புரிந்தது. அவளுக்குப் படிக்கும் போதோ அல்லது வேலை செய்யும்போதோ தனக்கொரு துணையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. மாற்றுக் கலாச்சாரத்துக்குள் கலப்பதையும்  விரும்பவில்லை.  பெற்றோர்  தனக்கோர் நல்ல வாழ்வு  அமைப்பார்கள் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது.அம்மா எல்லாம் நடக்கிற நேரம் தானாக நடக்கும் நீங்கள் தலையைப் போட்டுப் பிக்காதேயுங்கோ என்று சிரித்தாள் மகள். உனக்குப் பகிடியாக இருக்குது எங்களுக்கெல்லோ தெரியும் எங்கட பிரச்சனை. இப்ப எத்தினை கலியாணம் வந்து போயிட்டுது. உண்டை வடிவிலயும் குறையில்லை, படிப்பிலையும் குறைவில்லை, நாங்கள் குடுக்கிறதிலையும் குறை வைக்கயில்லை. ஆனாலும் ஏன் இப்பிடி தட்டுப்படுது எண்டு தெரியேல்லை.
திலகம் தனக்குள் முனகிக் கொண்டிருக்கும்போதே ராசன் சமையலறைக்குள் வந்து, என்ன எல்லாருக்கும் முதல் எழும்பி தாயும் மகளும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீங்கள் என்று கேட்கவும், தகப்பனைத் தொடர்ந்து குமுதினியும், இளையவள் வித்தியாவும் வந்தார்கள். கடைக்குட்டியான எல்லோருக்கும் பிரியமான அன்புத்தம்பி வர்ணனை எல்லோரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி எழுப்பினால்தான் உண்டு. அப்படி ஒரு செல்லப் பிள்ளை. ஆனால் வயதோ பதின்மூன்று. வித்தியா இருங்கோ வாறன் அவனை எழுப்பிக் கொண்டு என்று அவனுடைய அறைக்குள் எட்டிப் பார்த்தாள். ஆள் தெரியாமல் தலையிலிருந்து கால் வரை மூடிக் கொண்டு படுத்திருந்தான். உள்ளே வந்து ஒரு பக்கத்தால் போர்வையை  இழுக்க கால்கள் தட்டுப்பட்ட, மற்றப் பக்கத்தால் வந்து, நாங்கள் எல்லாரும் சாப்பிடப் போறம்  எழும்பி வா என்றாள். போர்வைக்குள்ளால் இருந்து  நீ போ நான் வாறன் என்று குரல் மட்டும் வந்தது. கெதியாய்  எழும்பு இல்லாட்டி அக்கா தண்ணியோட வருவா என்று சொல்லவும், பாய்ந்தடித்து எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
வீட்டிலே என்ன நடந்தாலும் அதை சாப்பிடும் நேரம் பகிர்ந்து கொள்ளுவது அங்கு வழக்கம். அன்றைக்கு குமுதினியே பேச்சை தொடங்கினாள். "போனமுறை அக்காவுக்குப் பேசி வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்னவாம்? ஒரு பதிலும் சொல்லாமல் இருந்தால் நாங்கள் என்னெண்டு விளங்கிறது?" "அதுதானே எங்களுக்கும் விளங்காமல் கிடக்கு, வாய் திறந்து என்ன சிக்கல் எண்டு சொன்னால்தானே நாங்களும் அதைப் பற்றி யோசிக்கலாம்" இது திலகம். ராசனுக்கு அவனுடைய தூரத்து உறவான வாணன் இது பற்றி கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கதைத்தது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. பிள்ளைகளுக்கு முன்னால் அதுபற்றிப் பேச விரும்பவில்லை. திலகத்தோடு கதைக்கவும் யோசனையாக இருந்தது. அவள் ஏற்கனவே  கலியாணம் சரிவருகுதில்லை எண்டு யோசித்துக் கொண்டிருந்தாள்.கணவனின் முகம் பாறிச் சிந்தனைக்குள் போனதைக் கண்டுகொண்ட திலகம், என்னப்பா யோசிச்சுக் கொண்டிருக்கிறியள் என்று உலுப்பினாள். அவன் தன்னிலைக்கு வந்து இப்ப என்ன இந்தக் கலியாணம் இல்லாட்டில் இன்னொண்டு சரி வரும்தானே! சும்மா இதுகளைத் திரும்பத் திரும்பக் கதைச்சுக் கொண்டிருக்காமல் உங்கடை அலுவல்களைப் பாருங்கோ! என்றான். திலகம் கணவனை உற்றுப் பார்த்தாள். அவன் ஏதோ மறைக்கிறான் என்று தோன்றியது. பிள்ளைகளுக்கு முன்னால்  காட்டிக் கொடுக்காமல் தனியே கதைக்கலாம் என்று அப்போதைக்குப் பேசாமல் இருந்தாள்.  அக்காவுக்கு இப்பவே இருபத்தேழு வயதாயிட்டுது. ரெண்டு வருசமா நீங்களும் மாப்பிள்ளை பாக்கிறியள் அக்காவுக்கு வயதுதான் கூடிக் கொண்டு போகுது மாப்பிள்ளை வாற   மாதிரித் தெரியேல்லை என்றாள் குமுதினி. வர்ணன் அவளைப் பார்த்து சிரித்து விட்டு மூத்த தமக்கை பரிமளத்தைப் பார்த்து, "ஏனக்கா உங்களுக்கு உங்களோடை வேலை செய்யிற ஒருவரையும் பிடிக்கேல்லையோ?" என்று சொல்ல அவள் கையை ஓங்கி அவனை அடிக்குமாப் போல் வந்தாள். அன்றைய  பகல் கலகலப்பாய்க் கழிந்தது.
எப்ப இரவு வரும் என்று பார்த்துக் கொண்டிருந்த திலகம், சாப்பாட்டை முடித்து பிள்ளைகள் எல்லாரும் நித்திரைக்குப் போன பின்னர் ராசனைப் பிடித்துக் கொண்டாள். என்னப்பா யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்? என்னெண்டு சொல்லுங்கோ என்று கேட்க, முதலில் ஒன்றுமில்லை என்று மறுத்துப் பார்த்தவன், பிறகு அவளுக்கும் தெரிந்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டு உண்மையைச் சொன்னான். இஞ்சை எங்கடை ஆக்களுக்கு கொழுப்பு நல்லா ஏறிப் போச்சு. நானும் முதல்ல சும்மா ஏதோ சில்லறை காரணங்களால  தான் கலியாணம் தட்டுப் படுகுது எண்டு நினைச்சுக் கொண்டிருந்தனான். ஆனால் விசாரிச்சுப் பாத்தாப் பிறகுதான் தெரியுது இதுக்குப் பின்னால வேற ஒரு தூர நோக்குப் பார்வை மாப்பிள்ளை பகுதிக் ஆக்களட்டை இருக்கு எண்டு; மூத்தவள் பரிமளத்தைக் கட்டினால் வாற மாப்பிள்ளயின்ர தலையில மற்ற இருக்கிற ரெண்டு பெம்பிளப் பிள்ளயளின்ர பொறுப்பும் விழுந்திடுமாம், எங்களுக்கும் வயசாச்செல்லோ! தற்செயலா எங்களுக்கு ஒண்டு நடந்திட்டால் எங்கடை குடும்பப் பொறுப்பெல்லாம் மூத்தவளைக் கட்டுகிற மாப்பிள்ளைக்கே வந்து சேந்திடுமாம். அதால இப்ப கலியாணத்துக்குப் பெம்பிளை தேடுகிற அநேகமான புத்திரனைப் பெத்தவையள் பெம்பிளைப் பிள்ளையள் இல்லாத பொறுப்புகள் வந்து சேராத இடமா பாத்து விவரமாத் தேடுகினம்.
ராசன் சொல்லச் சொல்ல கண்களை விரித்துக் கேட்டுக் கொண்டிருந்த திலகத்துக்கு சிரிப்புத்தான் வந்தது. நானும் என்னவோ ஏதோ எங்கட பிள்ளையில ஏதேனும்  குற்றம் பிடிச்சவையோ எண்டு பயந்திட்டனப்பா; இதுதானே இப்ப எங்கட சனத்தின்ர பிரச்சனை? பட்டும் பட்டும் திருந்தாதுகள்  எங்கட சனம். காசோட காசு சேக்கிறதுக்கு ஒரு பிள்ளையாயிருந்தால் முழுசா வறுகலாமெல்லோ! உப்பிடியான இடத்தில குடுத்துப் போட்டு வாழிற நிம்மதியில்லாத வாழ்க்கை அவளுக்கு வேண்டாம். சரி விடுங்கோ! எங்கட குடும்பமறிஞ்சு, பிள்ளையின்ர குணமறிஞ்சு கட்டாயம் நல்ல ஒரு இடம் வரும்.
அதுவரை பெற்றோரின் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த வித்தியா, அக்காவின் அறையை நோக்கி ஓடிப் போனாள். கொஞ்ச நேரத்தில் நாலு பேருமாகச் சேர்ந்து தமிழர் மனோநிலையைப் பற்றிப் பேசி  சிரிக்கப் போகிறார்கள்.

வரம் ஒன்று வேண்டி....

வரம் ஒன்று வேண்டி தவமிருக்கிறேன்
கோடி கொட்டிக் கொடுக்க வேண்டிலேன்
பொன்னை குவித்துத் தரவும் வேண்டிலேன்
சாமரம் வீசும் வாழ்க்கையும் வேண்டிலேன்
பதவிக்கால் வேண்டியும் வேண்டிலேன்
புகழ் முடி தலைமேல் என்றுமே வேண்டிலேன்
உள்ளபடி தலை சாய்த்தால் உறங்கிப்போகும்
மன அமைதி ஒன்று வேண்டி
தவமிருக்கிறேன்...

இனி ஏதுமில்லை!

மேனிதனில் ஏறி
பவனிவர களித்திருந்தாய்
ஏலேலோ பாட்டுவர
மலர்ந்து சிலிர்த்திருந்தாய்

கதிரவனின் இளஞ்சூட்டில்
தகதகத்தாய் குமரியாய்
திங்களது பட்டொளியில்
குளிர்ந்து மனமகிழ்ந்தாய்

பாய் விரித்து வந்து நிலம்
கவர்ந்தவரை சுமந்தாய்
மேவி நின்ற அவாவில் உன்
மேலேறி சென்றவர்
குற்றங்கள் சகித்தாய்

அடிமைகள் பயணிக்கையில்
அவர் கண்ணீரை ஏந்தினாய்
வீரத்துக்கும் இடம்கொடுத்து
வில்லங்கத்துக்கும் துணைபோய்
மௌனித்திருந்தாய்!

தாங்கும் வரை தாங்கி
தரை பார்த்து நின்றவளை
உலுப்பியது யாரங்கே
நளினச் சிரிப்பலை அன்று
பேயாய் வெறி கொண்டதேன்

கால் தொட்டுச் சிலுசிலுத்தவள்
பொங்கி உயர்ந்ததேன் 
கொட்டிக் கொடுத்து
குதூகலமாய் வாழ வைத்தவள்
கொடூரமாய் வாரி
விழுங்கிக் கொண்டதேன்

உன்மேனியில் மயங்கியோர் அன்றுன்
கோரமுகம் கண்டு ஒலமிட்டதை
கண்டும் கணக்கிடாமல்
அமிழ்த்தி அடக்கிட்டாய்
அடுக்குமா உனக்கிது
தாய் என்றுனை அழைக்க
இரக்கமில்லா இதயத்தவளாய்
முழுதாய் விழுங்கிட்டாய்

உன் வாசல் மண்ணில்
சாய்ந்திருந்து கதை பேசினோர்
பைத்தியமாய் தம் உறவுதேடி
அதே வாசலில் அலைகின்றனர்
தகவல் ஏதும் தருவாயோவென
ஏங்கித் திரிகின்றனர்

நடந்து களைத்து
ஓடித் துவண்டு
ஏதிலியாய்த்  திரிந்தவரில்
நீயும் உன் பங்கை
வாரிக் கொண்டாயோ 

ஏக்கமும் மாறா நினைவுச்சுழியும்
மீழவொண்ணா வாழ்க்கையும்
எமக்கென்றே விதிக்கப்பட்ட ஒன்றா
இன்னொருதரம் பொங்காதே!-நீ
தந்ததை சரிசெய்ய.....
இன்னுமே முடியவில்லை

புண்பட இனி இடமேயில்லை
வாரிக் கொள்ளவும் இனி
எதுவுமேயில்லை!!

பொங்கிச் சீறியதேன்?

அள்ளி அள்ளிக் கொடுத்தாய்
அண்டியோரை வாழ வைத்தாய் 
அரவணைத்துக் காத்தாய்
துள்ளி விளையாட இடமளித்தாய்

உன் மடியில்
மூச்சடைத்து மூழ்கி
மேலெழுந்து மகிழ
செல்லச் சிணுங்கலுடன்
தள்ளி விட்டுக் கலகலத்தாய்

மல்லாக்காய் மிதந்திருந்து
நிர்மலமாய் .....
நிலாப் போகும் வழியை
இரசிக்க விட்டாய்

கால் நனைத்து தரையிருக்க
சிற்றலையாய் நுரையுடன்
குமரியின் நளினத்தோடு
ஓடிவந்து தொட்டு விட்டு
கண்சிமிட்டித் திரும்புவாய்

தேர்களெல்லாம்- உன்
மேனியில் பவனி வர
வழி விட்டாய்
உலாவர உல்லாசமாய்
சிரித்திருந்தாய்
நல்லதையும் சுமந்தாய்
கெட்டதையும் தாங்கினாய்

தாயன்பு மட்டுமுனக்குண்டு
என்றெண்ணியிருக்க
பொங்கியதேன் நீ!
மடி கனக்க சுமந்து தாலாட்டிய நீ
வாரி விழுங்கி கொண்டதேன்

குமரிச் சிணுங்கல்  மறந்து
பேயாய் ஆடியதேன்
அன்னையாய் கட்டியனைத்தவள்- பல
அன்னையரை சுருட்டிக் கொண்டதேன்
தந்தையரைக் காவு கொண்டதேன்

கண் முன்னே குடும்பமாய்
வெறி கொண்டு அமுக்கியதேன்
உறவுகளைப் பிரித்து
மகிழ்ந்ததேன்

அகதியாய் அலையும் உன்
குழந்தைகள் நிலை கண்டும்
நீயுமா சேர்ந்து கொண்டாய்
எமை அழிக்க
என்ன செய்தோமுனக்கு

பார்  இன்றுன்  நிலையை......
உனைப் பார்த்து ......
இரசிக்க முடியவில்லை
கால் நனைக்க
நெஞ்சு தயங்குகிறது
அருகில் வர பயமாயிருக்கிறது

நீ சேர்த்துக் கொண்டவர் உறவுகள்
நிறை வலியுடன்
பிணமாய் வலம் வருகின்றனர்
உன் கரை மணல் வாரி
திட்டி  ஆறுகின்றனர்

வெறித்தபடி தூரத்தே நின்று
உறவு தேடி அலையும்
உனைக் காதல் கொண்ட மனிதர் பார்!
நீ வாரிக் கொண்டதை
திருப்பித் தருவாயோவென
மனம் கலங்கி தவிக்கின்றனர்

இனியொரு தரம் குமுறாதே
தாங்க முடியாது
நொந்தது போதும்
அன்னை யுனக்கிது அடுக்காது
அமைதியாய் இருந்து கொள்
வாழ விடு எம்மையும்!
இல்லையேல்  தனித்திருப்பாய்!

வியாழன், 13 டிசம்பர், 2012

தெரிவு.

மீண்டும் மீண்டும்..
எத்தனை தடவை...
விழ விழ எழுந்தோம்
வீறு கொண்டெழுந்தோம்
விழுப்புண் ஆறுமுன்
வீச்சமாய்  எழுந்தோம்
சுருக்கிட்டு அழுத்தியும்
திமிறியெழுந்தோம்
அடக்க இது காளையல்ல
உணர்வு!!
நீதி கேட்கும்  உணர்வு!
பரம்பரை தேடும் உணர்வு!
நிலம் காக்கும் உணர்வு!
இனம் காக்கும் உணர்வு!
மொழி காக்கும் உணர்வு!
இருப்பும் அடையாளமும்
தொலைய விடா உணர்வு!
குட்டியை மாடியிலிறுக்கும்
பாதுகாப்புணர்வு
விலங்குக்கே  இருக்குமென்றால்....
அறிவெனும் கோலால்
போர் நடத்தும் மனிதா!
தடுப்பதும் பெறுவதும்
உன் உரிமை
உன் கடமையும்...
எத்தனை தடவை
இன்னும் விழுவாய்....
நரிகள் ஊளையிடும்
நாய்கள் குரைக்கும்
ஓலங்கள் காதடைக்கும்
அவலங்கள் நெஞ்சடைக்கும்
விழுவாயா??
அது நடந்தால்...
நீ அடிமை
தாண்டினால் வரலாறுனக்கு

புதன், 12 டிசம்பர், 2012

பூனை!!

சின்னதும் பெரிதுமாய்
தொல்லைகள்.....
காலடிக்கிடையில் இடறுகின்றன
மேலே விழுந்து புரள்கின்றன 
கண்டதைக் கடித்து விஷமேற்றுகின்றன
தலைமேல் பாய்ந்து வெறுப்பேற்றுகின்றன
கிடைத்த சந்துக்குள் புகுந்து கொள்கின்றன
புகுந்த ஓட்டைகளைப் பெரிதாக்க முனைகின்றன
சிறிது சிறிதாக தெரிந்து சேமிக்கின்றன 
அசிங்கம் செய்து அசுத்தப் படுத்துகின்றன
பார்வையில் அருவெருப்பூட்டுகின்றன 
கிட்டே வந்தால் குதிக்க வைக்கின்றன
தாங்க முடியவில்லை....
என்ன ஒரு துணிச்சல்!!
மென்மைத் துரத்தல்கள்
"கீச் கீச்" ஒலியுடன்
எள்ளி நகையாடப்படுகின்றன
மீண்டு வந்து அலைக்கழிக்கின்றன
பாஷாணங்கள் பழக்கப்பட்டு விட்டன
என்ன செய்யலாம்
கை பிசைய முடியாது
எல்லாவற்றையும் அரித்து (ஆடையின்றி)
அம்மணமாகும் நிலை வரும் வரை
கை பிசைந்து நிற்க முடியாது

பூனைதான் வேண்டும் - இந்த
எலித் தொல்லை நீக்க

செவ்வாய், 11 டிசம்பர், 2012

வாய் வீச்சில் வீரரடி



வாய் வீச்சில் வீரரடி - இவர்
நெஞ்செங்கும் வஞ்சமடி

வான் திறந்து பால் பொழிகின்றது என்பர்
பூகம்பத்தில் பன்னீர் கொப்புளிக்கின்றதென்பர்
தேனூற்று தெருவில் பாயுதென்பர்
தெவிட்டாதது தம் சொல்லுரை  என்பர் ( வாய் வீச்சில் வீரரடி...)

பொய்யுரைத்து சிறு நெருப்பூட்டுவர்
தந்திரக் கதையால் தடுமாற்றம் வரவைப்பர்
தெள்ளமுதில் நஞ்சைக் கலந்தூற்றுவர்
தெரியாமல் சிறு நெருப்பூட்டுவர் (வாய் வீச்சில் வீரரடி...)

வீரம்செறி  பரம்பரைக்கோர் வினை வைப்போர்
சிறுபிள்ளை விளையாட்டாய்க்  குழி வைப்போர்
பிணக் குவியல் நடுவிலும் பேரம் பேசுவர்
மனக் கதவைக் கொஞ்சமும் திறப்பிலர்  ( வாய் வீச்சில் வீரரடி...)

வரலாறு மறந்தெமக்கு வதை செய்வர்
வழி மறித்தெமக்கு பகை செய்வர்
கோடிகள் வைக்காக் கோடிக்குள்
நாலடித் துண்டை சிந்திக்கார்! ( வாய் வீச்சில் வீரரடி...)

இரு கையைக் கண்ணுக்குள் குறிவைப்பர்
இனமானம் இழந்தொரு விதி முனைவர்
வளமான வாழ்வுக்கு தணல் வைப்பர்
இழிவாக வரலாற்றில் பதிபடுவர்  ( வாய் வீச்சில் வீரரடி...)

மிதிபட இனமொன்றும் புல்லல்ல கேட்பீர்
வழிகாட்டும் விடிவெள்ளி மறந்திடிலர் -எம்
மதி கண்டு ஏனோ பயந்திட்டார்
தலைகீழாய் தப்புகள் கீறுகின்றார் ( வாய் வீச்சில் வீரரடி...)