வெள்ளி, 21 டிசம்பர், 2012

பொங்கிச் சீறியதேன்?

அள்ளி அள்ளிக் கொடுத்தாய்
அண்டியோரை வாழ வைத்தாய் 
அரவணைத்துக் காத்தாய்
துள்ளி விளையாட இடமளித்தாய்

உன் மடியில்
மூச்சடைத்து மூழ்கி
மேலெழுந்து மகிழ
செல்லச் சிணுங்கலுடன்
தள்ளி விட்டுக் கலகலத்தாய்

மல்லாக்காய் மிதந்திருந்து
நிர்மலமாய் .....
நிலாப் போகும் வழியை
இரசிக்க விட்டாய்

கால் நனைத்து தரையிருக்க
சிற்றலையாய் நுரையுடன்
குமரியின் நளினத்தோடு
ஓடிவந்து தொட்டு விட்டு
கண்சிமிட்டித் திரும்புவாய்

தேர்களெல்லாம்- உன்
மேனியில் பவனி வர
வழி விட்டாய்
உலாவர உல்லாசமாய்
சிரித்திருந்தாய்
நல்லதையும் சுமந்தாய்
கெட்டதையும் தாங்கினாய்

தாயன்பு மட்டுமுனக்குண்டு
என்றெண்ணியிருக்க
பொங்கியதேன் நீ!
மடி கனக்க சுமந்து தாலாட்டிய நீ
வாரி விழுங்கி கொண்டதேன்

குமரிச் சிணுங்கல்  மறந்து
பேயாய் ஆடியதேன்
அன்னையாய் கட்டியனைத்தவள்- பல
அன்னையரை சுருட்டிக் கொண்டதேன்
தந்தையரைக் காவு கொண்டதேன்

கண் முன்னே குடும்பமாய்
வெறி கொண்டு அமுக்கியதேன்
உறவுகளைப் பிரித்து
மகிழ்ந்ததேன்

அகதியாய் அலையும் உன்
குழந்தைகள் நிலை கண்டும்
நீயுமா சேர்ந்து கொண்டாய்
எமை அழிக்க
என்ன செய்தோமுனக்கு

பார்  இன்றுன்  நிலையை......
உனைப் பார்த்து ......
இரசிக்க முடியவில்லை
கால் நனைக்க
நெஞ்சு தயங்குகிறது
அருகில் வர பயமாயிருக்கிறது

நீ சேர்த்துக் கொண்டவர் உறவுகள்
நிறை வலியுடன்
பிணமாய் வலம் வருகின்றனர்
உன் கரை மணல் வாரி
திட்டி  ஆறுகின்றனர்

வெறித்தபடி தூரத்தே நின்று
உறவு தேடி அலையும்
உனைக் காதல் கொண்ட மனிதர் பார்!
நீ வாரிக் கொண்டதை
திருப்பித் தருவாயோவென
மனம் கலங்கி தவிக்கின்றனர்

இனியொரு தரம் குமுறாதே
தாங்க முடியாது
நொந்தது போதும்
அன்னை யுனக்கிது அடுக்காது
அமைதியாய் இருந்து கொள்
வாழ விடு எம்மையும்!
இல்லையேல்  தனித்திருப்பாய்!

கருத்துகள் இல்லை: