திங்கள், 23 நவம்பர், 2015

எங்ஙனம் இப்பூமி முடிவுறும் ?

இந்தப் பிரபஞ்சத்தின் இப்பகுதி முடிவடையுமோ?
எப்படியாகும்?

முழுவதுமே நீராலே மூழ்கிப்போய்?
காற்றலைவில் சிதறுண்டு போய் சிறு துகள்களாகி?
ஒரு சிறு தீக்குச்சியில் சாம்பல் மேடாகி
பூமியின் கண்படு நுனியும் வானின் எல்லையும் 
தூரத்தில் தொட்டுவிட்டபடி?
நிலம் பிளவுண்டு அனைத்தையும் விழுங்கி 
வெறும் பரப்பாகியபடி?

எங்ஙனம் இப்பூமி முடிவுறும்?

எத்துணை தைரியசாலிகள் நாங்கள்?

பதில் தெரியாத 
கேள்விகளோடு விரைந்து கொண்டிருக்கிறோம் 

இம்மண்ணின் ஒரு பகுதியையேனும்
சொந்தமாக்கும் அவசரத்துடன்.

வி. அல்விற்.

22.11.2015.

வரம்

என்ன உறவு இது?
கேட்டா பெற்றோமிதை?

கடலின் ஆழம்போலவும்
அதன்மேல் ஓயாது பயணிக்கும் அலைகள் போலவும் 
பிரிவற்றிருக்கப் பணிக்கப்பட்டிருக்கிறோம்
நீயும் நானும். 

மறைந்திருக்கும் மரவேர்களிலிருந்து
மண் பிளந்து வெடித்தெழும் சிறு கன்றுகள் போல
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

இதோ! உன்னோடிருக்கும் இக்கணங்கள் 
இப்பிறப்பிற்காக நான் பெற்ற வரங்களாகக் கருதுகிறேன் 

என் பிரிய சிசுவே!
இவை நாளை மீட்கப்படக்கூடும் உன்னால். 

அந்நேரம்,
நான் உன் சிசுவாய்ப் பிறந்திடும்
வரம் கேட்பேன்.

வி. அல்விற்.

21.11.2015.

என் பிரிய சிசுவே!

என்னைப் பணிவுறச் செய்கிறாய் 
ஒரு குழந்தையைப் போல.
என்னை நடத்திச் செல்லுகிறாய்
ஒரு ஆசானைப்போல.

வழியெங்கிலும் முத்துக்களைப்போட்டபடி
நடந்து கொண்டேயிருக்கிறேன் 
உனக்கான எனது கேள்விகளை
ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறாய்
வியத்தகு விளக்கங்களுடனான
எதிர்க் கேள்விகளுடன்.

என் பிரிய சிசுவே!

இதோ! என் நடை தளர்கிறது.
ஆகாயத்தை விமரிசிக்கும் துணிவு எனக்கில்லை

நீ திரும்பி நடக்கையில்
போட்டவற்றைப் பொறுக்கியெடுப்பாயெனவும்
சேர்த்து வைத்து மகிழ்வாயெனவும்
நம்பிக்கை கொண்டு சாய்ந்திருக்கிறேன்
இக்கணத்தில்.

வி. அல்விற்.

17.11.2015.

உனது வாழ்வு.

கனவூறிய வாழ்வு வெளியில் மிதப்புற்றிருந்தேன்
அசைவற்று நீந்தும் பறவைபோல
எது கொண்டு அதையளப்பேன்
உனக்கதை விளக்க?
மதிப்பிடற்கரிய உனது சொல்லோவியங்களில்
எனது விழிகள் இன்று நிறைந்திருக்கின்றன

இதோ!
உன் மொழிவழி எனதுயிர் துளிர்த்திருக்கிறது
மீண்டுமொருமுறை.

இனி அது தங்கியிருக்கும். 

ஓ! என் பிரிய சிசுவே!

என் கரம் கோர்த்துக் கொள்!
அது கூறும் வார்த்தைகளை உணர்ந்து கொள்!
என் பார்வைகளைப் பற்றிக் கொள்!

எனது விழிகளில் நிறைந்திருப்பது நீரல்ல; 
உனது வாழ்வே!

வி. அல்விற்.

13.11.2015.

இருப்பு

நான் இப்போது அழகாயில்லை என்கிறார்கள் 
தலைமுடிகள் உதிர்ந்தும் நிறம் மாறியும் 
விரல்களில் நரம்புகள் புடைத்துமுள்ள
வயோதிபனை ஒத்தவனாயிருக்கிறேன் என்கிறார்கள் 

மகா பிரபுக்களே!

நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் என்பது 
உங்களுக்குத் தெரியுமா?
உதிர்ந்தவையும்
பூச்சி அரித்தவையும்
பிடுங்கப்பட்டவையும் போக
என்னுடன் சேர்ந்திருப்பவையோடு
நான் இன்னும் 
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

அழகாக.

வி. அல்விற்.

09.11.2015.

என் பிரிய சிசுவே!

வழக்கமான நமது சிறு வழிப்பாதையில்
எனது விரல் தொட நானுன் முன் நடந்தேன் 
வழியெங்கும் பூத்திருந்த மலர்கள் 
தினமும் உனதும் எனதுமான
வார்த்தைப் பரிமாறல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்க
என் பின்னும் பக்கமும் 
அதன் பின்னர் முன்னுமாக நடந்து கொண்டிருந்தாய்
கற்பனைகள் விரியும் கண்களோடு.

பாதை புழுதி நிறைந்திருந்தும் பூக்களின் நறுமணம் 
அதனையும் மேவி இன்பம் அளித்தது
நம்மைக் கடந்து போனவர்களின் புன்முறுவல்கள் 
உன்னை மகிழ்வித்தன என்று நினைக்கிறேன் 
பெருஞ்சிறப்புடைய  நமது உரையாடல்கள் 
உனக்கு உவப்பானதாயிருந்திருக்கும்

ஓ! என் பிரிய சிசுவே!

வேகம் குறையாத இந்நடைப்பயணம் 
உன்னை மெருகூட்டியிருப்பதை உணர்கிறேன் 
உன்னைப் போலவே.

இப்போதெல்லாம் நடைப்பயணத்தைவிட
உரையாடல்கள் வேகம் கொண்டுள்ளன
என்பதும் புரிகிறது  
நான் எட்டிப் பிடிக்கப் பிரயத்தனப்படுகிறேன்
உன்னோடு சமமாக நடக்கவும்
அற்புதமான உரையாடல்களைத் தொடரவும்

இந்தப் பாதை வழியே.

வி. அல்விற்.

03.11.2015.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பிரிய சிசுவே!

கனத்திருக்கும் மௌனத்தினூடே
உனது மொழி வாய் திறக்கின்றது
கண்களினூடே அவை உள்ளிறங்குகின்றன
விட்டு விட முடியாத நினைவுகளான
நீண்டுயர்ந்த அடர் மரங்கள் கொண்ட
காட்டு வழியினூடே
நானும் பயணிக்கிறேன் உன்னோடு.

ஏனென்றால் நீ எனது உயிராயிருக்கிறாய்
எதற்கும் இணையற்ற மேனிலையுற்றிருக்கிறாய்
எனக்கென்றே இருக்கும் சொந்தமாயிருக்கிறாய்
வான் பொழியும் மழைத்தூறல்களும்
கம்பீரமாக இறங்கிவரும் கதிரவனும்
உனைவிட மேலானதாயில்லை எனக்கு.

ஓ! என் பிரிய சிசுவே!

உனைவிட்டு நான் நீங்குவதில்லை
என் ஆயுள் உன்னால் நீடிக்கட்டும்
எனதருகாமை உன்னை வளப்படுத்தட்டும்
உலகறிந்து உன் வெற்றிகள் குவிகையில்
தசை சுருங்கிய சிறு கால்களுடன்
உன் பின்னே அன்றும் நடப்பேன்.

வி. அல்விற்.
01.11.2015.

மீளல்

இதோ! இலைகளையுதிர்க்கின்றன
சிலநாட்களுக்கு முன்னர்
உனது காலடி ஓசைகளையும்
ஆரவாரங்களையும்
கேட்டபடி காய்த்துக் குலுங்கியிருந்த
பசுமை போர்த்திருந்த மரங்கள்.

நீ இப்போது இங்கே வருவதில்லையென
இவை முணுமுணுத்து
முறைப்பாடிடுகின்றன

ஓ! நீயும் முதிர்ந்து விட்டாயா
இவ்விலைகளைப் போல?

ஆனாலும் பார்!
இவை உதிர்க்கும்
ஆனாலும் இடம் மாறாது
மௌனித்திருக்கும்

என் பிரிய சிசுவே!

குருவிகளின் கூடு போன்ற
உனதிடம் இங்கேயுள்ளது
மீண்டு வந்துவிடு
காத்திருப்பன இம்மரங்கள் மட்டுமல்ல…

வி.அல்விற்.
30.10.2015.








திங்கள், 26 அக்டோபர், 2015

ஓ! என் பிரிய சிசுவே!

பாரதியின் வரிகள் என்நாவில் புரள
அன்று ஆழுறக்கம் உன்னை 
அமைதியில் நிறைத்திருக்க
பெருமிதம் மிக்க அன்னையாயிருந்தேன்.

முறைகள் தவறிப் போயின
இடைச் செருகல்களின் நெருடல்களில்.
தூக்கமிழந்த உன் இரவுகள்
என்னையும் உன்னையும் உடைத்துப் போட்டன.

தறிக்கப்பட்ட மரங்களின் 
வேதனையை ஒத்திருந்தது 
வீழ்ந்திருந்த என் மனதும்
சோர்ந்திருந்த எனதுடலும்.

ஓ! என் பிரிய சிசுவே!

நானறிந்த விழிப்புற்ற இரவுகளும்
ஒட்டவெண்ணா மனதுமான
இப்பெருங்காலங்கள் கடந்து போகட்டும் 
எழுந்தடங்கும் புயல்போல.

நின்னைச் சரணடையும் 
பாரதியின் வரிகளோடு இன்னும் 
அருகே காத்திருக்கிறேன் 
உனது ஆழ் தூக்கத்திற்காய்.

வி. அல்விற்.

25.10.2015.
என்மேல் வந்தமரும்
நீர்த்துளிகளை சுமந்தபடி
நிறைந்திருக்கிறேன்.
யாரிடம் கேட்டிவை
எனை நனைத்தன?

இருக்கட்டுமே!

என்னுயிர்த்துளிகளே!

நானுங்களை 
உதறிவிடப் போவதில்லை
மனிதரைப்போல.

வி. அல்விற்.

24.10.2015.

தீரா வழக்குகள்.

ஆயிரம் கதைகளை 
அன்றைய மதி 
இரகசியமாகப் புன்னகைத்தபடியும்
அவள் தூங்கும் வேளை
ஆதவன் வியர்த்தபடியும்
முறைதவறாமல் கேட்டிருக்கின்றன
பின்னாட்களில் 
சாட்சியம் கூறும்படி.

ஆழிரவின் அனர்த்தங்களையும்
இருள் குடித்த விழிகளையும்
குறுக்கறுத்த பாதைகளில் 
புதையுண்ட சொற்களையும் 
சுமந்தலைகிறாள் இன்றைக்கும் 
நிம்மதியற்ற நிலாக்கன்னி.

ஒளிக்கற்றையால் மூடிக் கொண்டு
விழி சிவந்து 
இன்றைக்கும்
இறங்கிக்கொண்டேயிருக்கின்றான் பகலவன்
விஞ்சும் அதிகாரத்தோடு
வியர்வை குடித்த குருதியையும்
நிலமதிர்ந்த கொடுமைகளையும்
கூட்டி விழுங்கியபடி.

இன்னும் எத்தனை நாட்கள் 
இக்கொடு நிலத்தில் 
தீர்க்கப்படாத வழக்குகளுடன்

மௌனமாக ஊர்ந்தபடி....

வி. அல்விற்.

24.10.2015.

கனவுகளுடனான யுத்தம்.

தென்றலும் இதமும்
மலரும் அழகும் 
மழையும் சிலிர்ப்பும்
மங்கையும் மலர்வுமாக
பக்கங்களெல்லாம்

யாராலோ
நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இன்றைய பொழுதில்.

நான் மட்டும்....

கனவுகளுடன் 
யுத்தம் செய்து கொண்டிருக்கிறேன் நான் 
யாருமறியாத தனிமையில்.

அதுவேதான்!

தோற்கக் கூடாத யுத்தமிது

அழிச்சாட்டியம் பண்ணியபடி
உள்ளமர்ந்து எகத்தாளமிடுபவற்றை
அழித்துவிட வேண்டும் 

நானும்
எனக்குண்டானவையும்
அழியாதிருக்க.

வி. அல்விற்.
20.10.2015.


காலம் நழுவிஉள்ளது.

பெரு மரமாயிருக்கிறேன் இக்கணம் 
வேர்களைப் பற்றியிருக்கும் எனதடியில்
நிழல்தரும் குளிர்மையில்
நீ இளைப்பாறும்படி
களைப்புறும் வேளைகளில்.

உற்றுப் பார்த்துக் கொள்!

என்னில் துளிர்க்கும்
உனக்கான சிந்தனைகளையும் 
பின்னொரு பொழுதில்
பசுமையாய் அசைந்தாடும் 
உனக்கான முதிர் கனவுகளையும்.

ஓ! என் பிரிய சிசுவே!

இங்கே
எனக்கானது என்று ஏதுமில்லை
பழுப்பேறி உன் காலடியில் வீழும் 
ஒட்டுவிட்ட இலைகளாய்
ஏதுமுனக்குத் தென்படுகின்றனவா?

ஓ!

காலம் நழுவிக் கிடக்கிறது
என் நிழல் போல.

வி. அல்விற்.

15.10.2015.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

என் பிரிய சிசுவே!

எனது தாலாட்டில் நிரம்பியுள்ளது 
உனக்கான எனதன்பு 

பெருவிருப்புற்று நிலமேவி
நடனமிடும் மழைபோல
எல்லையற்ற மகிழ்வில் 
அது திளைத்திருக்கிறது

அதையேந்தி செழிக்கும்
பெருவெளிகளின் பெருமிதம் போல
தலைநிமிர்த்துகிறது
உனக்கான என் பேரன்பு.

ஓ! என் பிரிய சிசுவே!

இந்தக் குளிர்மை குறையாதிருக்கட்டும்
பசுமை போர்த்த காலங்கள் 
விடைபெறாதிருக்கட்டும்

சாளரத்தின் வழியே உட்புகும் மென்காற்று 
உன்காதில் காதிலூதி
மறவாதிருக்கும்படி
என் தாலாட்டை 
மீட்டுக் கொண்டிருக்கட்டும்.

வி.அல்விற்.

08.10.2015.

திங்கள், 5 அக்டோபர், 2015

என் பிரிய சிசுவே!

காற்றலைகளற்ற இரவுப் பொழுதில்  
முழுநிலவின் ஒளி தெறிக்க 
அமைதியாய் அலையும் 
ஆழியாயிருக்கிறேன்.

உன்மீதான எனது பேரன்பை 
அங்கே அரவமற்ற கற்பாறைகளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன் 
யாரும் கண்டுகொள்ளாதபடி.

என் பிரிய சிசுவே!

இதோ! வானம் நிறம் மாறுகிறது
மானிடனின் அலைச்சல் போல
காற்றும் அசைக்கின்றது
ஒளிப்பிடத்தை உடைக்கும்படி.

காலம் முகிழ்த்துள்ளது
உன்னை நீ கண்டடையும்படி.
எனதுலகனைத்தையும் 
உன்வசமாக்கியுள்ளேன்

உன் கற்பனைக்குள் அடங்காத
எனது ஆசைகளை 
உனது கரங்களுக்குள் பொத்திக்கொள்
நீ மட்டுமே அறியும்படி.

வி. அல்விற்.

03.10.2015.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

என் பிரிய சிசுவே!

ஓ! என் பிரிய சிசுவே!

சேமித்து வைக்கப்பட்ட
நினைவுக் களஞ்சியம் 
இதோ
தன் வாயகலத்
திறந்து கொள்ளுகிறது.

கீழே குதிக்கின்றன
புயல்காற்றின்
பயங்கர ஓசையுடன்,

பாம்பாய் நெளிந்தும்
பூச்சிகளாய் ஊர்ந்தும்
பூதங்களாய் நெருங்கியும்
பாதாளக் கிணற்றுள் வீழ்த்தியும்
ஓடமுயன்ற கால்களைக் 
கட்டிப் போட்டும் 
கனவுகளாய் வந்தென்னை
ஆட்டி வைக்கின்றன.

ஓ! என் பிரிய சிசுவே!

என் கனவுகளை
உன்னால் பிரித்தறிய முடியுமா?
அல்லது மொழிபெயர்க்கத்தான்
முடியுமா?

பேய்களாய்க் காதிலிரையும்
இந்தச் சத்தங்களை
உன் அணைப்பால்
நிறுத்திவிட முடியுமா?

ஓ! என் பிரிய சிசுவே!

உனது நிமித்தம் 
எனது ஆயுளை நீட்டுவிக்க முயல்கின்றேன்.

என்னை நெருக்கியிரு!

உண்மையாகவே என்னை
ஆட்கொண்டிருக்கிறது
இந்தப் பயம் என்பதை 
எனது மௌனத்திலிருந்து
மொழிபெயர்த்துக்கொள்!

ஆனால் இவையேதும்
உன்னை அண்ட விடாமல் 
எனதுயிர் உன்னோடிருக்கும்.

வி. அல்விற்.

02.10.2015.

என் பிரிய சிசுவே!

வழிந்தோடுகிறன ஞாபகப் பிளம்புகள்
எப்போதுமே செந்நிறமாய்

பிரித்தெடுக்க முனைகிறேன்
எனக்கானவற்றைத்
தனியே அசைபோட
இயலாதெனினும்.

பெருவெள்ளத்தில்
அள்ளுண்டு போகும் 
மரத்தைப்போல
என் வேரறுத்துப் போட
நினைக்கின்றன
எழுதி வைக்கப்பட்டவை.

என் பிரிய சிசுவே!

இந்தப் பாத்திரம் 
என்னைவிட்டு அகல விரும்புகின்றேன் 
உனது நிமித்தம் 

எனது பார்வைகளை 
மொழிபெயர்த்துக் கொள்
உனக்கொருநாள்
அது உதவக்கூடும்.

எனது வார்த்தைகளைப் 
பத்திரப்படுத்திக் கொள்
அவையுனக்கு நூல்களாகக் கூடும்
என்றோ ஒருநாள்.

எனது வாழ்க்கையின் 
ஒவ்வொரு பக்கங்களும் 
உனக்கு அன்பை நிறைக்கட்டும்
என்னுடையதைப் போலன்றி.

வி. அல்விற்.

01.09.2015.

குழந்தைகளே!

நாங்கள் நினைக்கின்றோம்
உங்களது சிரிப்புக்களை
சிதறடிக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம் 
உங்கள் கனவுகளை
கலைக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்கள் சுதந்திரத்தைப் 
பறிக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்கள் சிந்தனைகளை 
மறுக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்களது குரல்களை 
நசிக்கவில்லை என்று

ஆனாலும் 

தெரிந்தும் தெரியாமலுமாக
நாங்கள் இவற்றைச்
செய்ய மறப்பதில்லை

உரத்துப் பேசுங்கள் 
குழந்தைகளே!

முன்னால் பிறந்த எங்களுக்கு
உங்கள் வார்த்தைகளின் 
கனம் புரிய
காலமெடுக்கிறது.

வி. அல்விற்.

01.09.2015.

பேசட்டும்.

பேச வேண்டுமா?
பேசட்டும்!

விரல்கள் முறிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
கால்கள் துண்டிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
மூளைக் கலக்கம் ஏற்றபடாதவர்கள் பேசட்டும் 
வாய் வீச்சுள்ளவர்கள் பேசட்டும் 
முடிந்தவர்கள் பேசட்டும் 
தகைமையுடையவர்கள் பேசட்டும்

மௌனமாயிருத்தல் போதுமாயிருக்கிறது
இப்போது

பேசிய பொழுதுகளில் 
கிடைத்த பொற்காசுகளில்
இன்னும் மிச்சமாகவுள்ளவை
சிரித்துக்கொண்டே இருக்கின்றன

நகைப்புக்களுக்கிடையில் என்ன பேசுவது?
எப்படிப் பேசுவது?

கருத்தோடு பேசியவர்களைக்
காலம் கலைத்துப் போட்டுள்ளது 
கருணையின்றி.

எனக்காக மட்டுமே பேசி
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்

மீந்திருக்கும் பொற்காசுகள்
என் அமைதியைக் குலைப்பதில் 
வெற்றி கண்டுள்ளன

இனிப் பேசியென்ன?

வி. அல்விற்.

26.09.2015.

விருப்பு.

விரும்புகின்றேன்.

நான் சத்தமிட்டுச் சொல்ல விரும்புகிறேன் 
இந்த மழையில் ஊறி 
தன் பிடி தளர்த்தி 
காற்றிலே அலையுண்டு
நிலத்திலே வீழும் 
இந்தப் பசுமையிழந்த இலைகளுக்கு 

நான் அவற்றை விரும்புவதாக

குளிர் வந்தேறி 
கால்களுள் உறைந்து கொள்ளும் 
இப்பனிப் பிரதேசம்
இன்னும் என்னை மூடிக் கொள்ளவில்லை
என் மூச்சுக் காற்றின் வேகத்தோடு
இரைந்து சொல்லுகின்றேன் 
நான் இவ்வாழ்க்கையை 

மிகவும் விரும்புவதாக

பேச அமராத இருக்கைகள் 
ஏமாற்றத்துடன் வீற்றிருக்கின்றன
உடைபடாத வார்த்தைகள் 
கற்பனை உருக்கொண்டு நடமாடுகின்றன

இன்னும் அதிகமாக விரும்புகின்றேன் 
காற்று சுமந்து கொண்டுவந்து 
உதறிவிட்டுப் போன 
இந்த வாழ்க்கையை.

வி. அல்விற்.

23.09.2015.

கனம்.

கனம்.

நான் திடமாயிருக்கிறேன்
என்கின்ற அறிவு
எனக்கு உதவுவதாயில்லை

எனது தேடல்களும்
முடிவதாயில்லை

இரவுகள் கொன்று தின்கின்றன 
எனது தூக்கங்களை

பகல்களும் அமைதியைக் 
கிழித்துக் கொல்லுகின்றன

எனதிருப்பே என் நிழலாய்
எனக்கச்சமூட்டுகிறது

பயமொன்றை அறியாதிருந்தேன்
முன்னொரு பொழுதில் 

அதுவே எனக்குள் இப்போது 
பெரும் பூதமாய் எழுந்தாடுகின்றது

இப்போது நான் தனிமையிலில்லை

விரட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

ஏதோவொன்றால்.

வி. அல்விற்.

19.09.2015.

செல்லமே!

செல்லமே!

அன்னையென்றெனை நினைந்து
அழுது கொண்டழைத்தாயோ
ஆராரோ பாடவோ கண்ணே
ஆவிதன்னைத் தரவோ மணியே

அள்ளியெடுக்கவோ உன்னை
அமுதமெடுத்து ஊட்டிடவோ
சிற்பமென நின்றென்னை
சிந்தை நிறைய வைத்தாயே

முத்தமிடக் குனிகையில் உன் 
மெத்துக் கன்னம் தந்தாய்
பிஞ்சுவிரலால் கால்கோர்த்து
விஞ்சுமழகு காட்டியும் நீ

பொங்கிச் சிரிக்கையில்
பூமியே நின்று போச்சு
மொத்தமாய் மறந்தேனே 
இன்னொன்றைப் பெற்றதாய்.

வி. அல்விற்.
18.09.2015.


( ஒஸ்லோவிலுள்ள Frognerparken எனப்படும் பூங்காவிலுள்ள சிற்பங்களுள் ஒன்று இது).

விட்டு விடு!

இது உனது சிம்மாசனமாகவிருப்பதில்
எனக்கேதும் இடையூறில்லை

நீ அரசனாகவே இருந்து கொள் 

உனது கண்ணசைவுக்கு
சேவகர்கள் காலடியில் இருக்கட்டும் 

உனது புன்னகைக்காக
புனையட்டும் புலவர்கள் புகழ்ப்பா

உனது பட்டாடையோடு
அணைந்து கொள்ள
தேவதைகள் தவமிருக்கட்டும்

என்னை விட்டுவிடு!

உன் தங்க மாளிகையில் 
சிறையிருக்க எனக்கிசைவில்லை

உனது அகங்கார உபசரிப்பில்
உவப்பில்லை எனக்கு

உலகம்
எனது கண்களுக்குள் நிறைய
நான் உலாவர வேண்டும் 
கட்டப்படாமல்

விட்டுவிடு என்னை! 

கண்டு கொள்ளவும் 
கற்றுக்கொள்ளவும்
இங்கே குவிந்து கிடக்கிறன
ஏராளமாய்.

வி. அல்விற்.

14.09.2015.

பேசிப் பயனென்ன?

பேச வேண்டுமா?
பேசட்டும்!

விரல்கள் முறிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
கால்கள் துண்டிக்கப்படாதவர்கள் பேசட்டும் 
மூளைக் கலக்கம் ஏற்றபடாதவர்கள் பேசட்டும் 
வாய் வீச்சுள்ளவர்கள் பேசட்டும் 
முடிந்தவர்கள் பேசட்டும் 
தகைமையுடையவர்கள் பேசட்டும்

மௌனமாயிருத்தல் போதுமாயிருக்கிறது
இப்போது

பேசிய பொழுதுகளில் 
கிடைத்த பொற்காசுகளில்
இன்னும் மிச்சமாகவுள்ளவை
சிரித்துக்கொண்டே இருக்கின்றன

நகைப்புக்களுக்கிடையில் என்ன பேசுவது?
எப்படிப் பேசுவது?

கருத்தோடு பேசியவர்களைக்
காலம் கலைத்துப் போட்டுள்ளது 
கருணையின்றி.

எனக்காக மட்டுமே பேசி
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்

மீந்திருக்கும் பொற்காசுகள்
என் அமைதியைக் குலைப்பதில் 
வெற்றி கண்டுள்ளன

இனிப் பேசியென்ன?

வி. அல்விற்.

26.09.2015.

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

சுற்றம் சூழவந்து வாழ்த்தி.........

இப்பதிவானது "யாரையோ தனிப்பட மனமிருத்தி வரையப்படுகிறது" என்ற எண்ணத்தை (அப்படி வந்தால்) தூக்கியெறிந்து விட்டுப் படித்து முடித்துக் கருத்திடும்படி பணிவாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சுற்றம் சூழ வந்து வாழ்த்தி..........

முன்பெல்லாம்  எங்களூர்களில் "திருமண விழா" என்றாலே சில மாதங்களுக்கு முன்னாலிருந்தே திருமண வீடும், சுற்றங்களும் கலகலக்கத் தொடங்கி விடும். மறந்து போன உறவுகளும், நேரிலே சென்று அழைப்பு விடுக்காத உறவுகளும் உரிமையாகச் சண்டை போட்டுக் கொண்ட காலம் அது. ஊரே கூடி நின்று பலகாரங்கள் சமையல்கள் செய்தும், களைக்காமல் விடிய விடியக் கதை பேசி மகிழ்ந்திருந்த காலம் அது.
அவற்றையெல்லாம் இப்போது எதிர்பார்க்க முடியாது இயந்திரமயமாகிப் போன இந்தக் காலத்தில். மிக இலகுவாக "இப்படியெல்லாம் நடந்தது" என்று மட்டுமே நமது குழந்தைகளுக்குச் சொன்னால்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. 
இது இன்றைய இளைஞர்களின் கனவுகளுடனான காலம். பெற்றோர் கலந்து நடாத்தும்  திருமணமாயினும் சரி, காதல் திருமணமாயினும் சரி, அங்கே திருமணப் பெண்ணும் ஆணுமே திருமண நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களாக ஆகி விடுகிறார்கள். அவர்களுடைய  இந்தியச் சினிமாக்களின் பாதிப்புக்களுடனான கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும், அதன் வழியான வெளிப்பாடுகளின்  மகிழ்ச்சிக்கும் பெரியவர்கள் தடையாக இருத்தல் இயலாததாகி விடுகிறது. ஏனென்றால் அன்றைய தினமானது அவர்களது வாழ்வின் மிகமுக்கிய தினமாகும். அத்தினத்தை முடிந்தளவு உச்ச திறனுடன்  மகிழ்வான விழாவாக ஆக்க முயற்சி செய்கிறார்கள் இக்கால இளைஞர்கள் என்பதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பல திருமண நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. 
மணமக்களை "ஆடம்பர மகழுந்தில் ஏற்றி வருதல்",  "குழு நடனங்களுடன் வரவேற்றல்",   "பல்லக்கில் ஏற்றிவருதல்", மணமக்களே "ஆடியபடி மண்டபத்தினுள் நுழைதல்" என்று இப்படி இன்னும் பலவற்றைத் திட்டமிட்டு தங்களைத் தாங்களே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள காலமெடுத்துக் கொள்ளுகின்றார்கள். இவற்றை விட இப்பொழுது அதிகமாக இரவு நேரக் கொண்டாட்டத்துக்காக மண்டபங்களை எடுத்து விழா நேரத்தை விடியும்வரை நீடிப்பது என்பது புதிதாகத் தொடங்கியிருக்கிற ஒரு விடயம்.
இவை எவற்றிலுமே திருமண விழாவுக்குச் செல்பவர்கள் குறை கூற முடியாது. ஏனென்றால் இது அவர்களுக்கான சிறப்பான நாள்.

ஆனால் சில விடயங்களைக் கவனத்தில் கொள்ளுவது பயன்தரும் என்று நினைக்கிறேன். 

ஒரு திருமணத்துக்கு செல்வது என்பது தனியே போய் சாப்பிட்டு விட்டு 'மொய்' எழுதி விட்டு வருவதற்காக மட்டுமல்ல. அங்கே செல்வதன் முக்கிய நோக்கம் "மணமக்களை வாழ்த்தி" வருதலே. இந்த வாழ்த்துதல் என்பது தற்போது மணவீட்டார் செய்யும் மேற்படி கூறிய 'மீச்சிறப்புக்களால்' செய்ய முடியாமலேயே போய் விடுகிறது. சில திருமணங்களில் மணமகனுக்கும் மணமகளுக்கும் தமது திருமணத்துக்கு யார் வந்தார்கள் என்று கூடத் தெரியாமல் போய் விடுகிறது. ஏனென்றால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நிற்க முடியாதவர்கள் மணமக்களின் பெற்றோரின் கைகளிலேயே பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டுத் திரும்புகின்றனர். 
ஒரு சில இடங்களில் 'உண்டியல்' போன்ற ஒன்றை வைத்து பணத்தை அதனுள் போட்டுச் செல்லுமாறும் கேட்கப்பட்டிருப்பதை அறிகிறோம். 
இதை விட, உணவுகளை உறவுகளே நின்று கவனித்துப் பரிமாறிய இடத்தில், இப்போது எங்கு பார்த்தாலும் உணவுப் பரிமாறல்களையும் பணத்தைக் கொடுத்துச் செய்விப்பதால் ஏதோ ஒரு கடைக்குள் இருந்து சாப்பிடும் உணர்வையும் தவிர்க்க முடியாது போகிறது.
ஆக, " குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்தி ஏகுமாறு அழைக்கிறோம்" என்ற திருமண அழைப்பிதழுக்கும், அதை நினைத்து வாழ்த்த வந்தவர்களுக்கும் தொடர்பில்லாத தூரத்தில் நின்று விட்டே பலர் பல விமரிசனங்களுடன் வீடு திரும்புவதை அவதானிக்க முடிகிறது. 
திருமணம் என்பது சுற்றம் கூடி மனமார நல்வாழ்த்துக்கள் கூற, வார்த்தைகளால் அன்பையும் உறவுகளையும் உறுதிப்படுத்தும் நிகழ்வாக இருந்து வந்தது ஒரு காலத்தில்.
இன்றைக்கு, கால மாற்றத்தால் இது வெறும் இளைஞர்களின் கொண்டாட்ட நிகழ்வாக மட்டுமே மாறி விடுமோ என்ற ஐயம் தோன்றுகிறது.

வி. அல்விற்.

11.09.2015.

புதன், 9 செப்டம்பர், 2015

என் பிரிய சிசுவே!

கழுவித் துடைத்த வானம் போல
தெளிவாயிருந்தது உன் வரவு
வானவில்லின் வண்ணக் கோலத்தையும்
வாண வேடிக்கையின் அட்டகாசத்தையும்
சுமந்திருந்ததாக எண்ணியிருந்தேன் 
எதுவோ வந்து 
குலைத்துப் போட்டிருக்கிறது
உன் அழகனைத்தையும்

வெடிச்சரங்களை கொழுத்திப் போட்டுள்ளாய்
என் தலைக்குள் 
அவற்றின் ஒவ்வொரு சிதறல்களிலும்
தினமும் கருகிக் கொண்டிருக்கிறேன் 

சரியானவை என்றெண்ணியவை
கேள்விகளாகி உருக் கொண்டாடுகின்றன
சரிகளை வரையறுப்பதும்
பிழைகளை முறைப்படுத்துவதும் எது?

காலம் சரிவதற்குள் 
முறைப்படுத்திவிட நினைக்கிறேன் 

பிரியமான என் சிசுவே!

உன்னை கைகளில் மீண்டும் தாங்கி
உன் பேரழகை மீட்டுவிட வேண்டும் 

சுயநலமுள்ள ஓர் அன்னையாக
சுயநலமுள்ள ஒரு குழந்தையாக
நீயும் நானும் மீளப் பிறந்திட வேண்டும்.


வி. அல்விற்.

விடுவதாயில்லை.

நனைத்துச் சுமக்க வேண்டாமென
நினைத்து மனம் வேண்டியும்
பாரமழுத்தி பாதம் வைக்க
காலைச்சுற்றியே 
பாம்பு படமெடுக்க முனைகிறது
விடுவதாயில்லை நானும் 
வாழ்வின் 
விடம் முறித்து வாழாமல்.


11.08.2015.
இரவுத்தூக்கத்தை விற்று
பகற்பொழுதைக் கையில் 
வாங்கியாயிற்று

ஒளியெறியும் மகிழ்வு 
பெருக்க
தனிமையில் காத்திருப்பதான
உணர்வு 

ஆனாலும்,

பகலும் இரவாகிறது

இப்போதெல்லாம்.

வி. அல்விற்.

மனம்.

மனம்.

தொலைந்து போயுள்ளது மனம் 
நெடுங்காட்டு உள்வழியில்
அலைகிறது விழிகள் சுழன்று
ஆதரவொன்று தேடுவதாய்

எங்கே தொலைந்தது?
எப்படித் தொலைந்தது?

தெரியவில்லை

பிரளயங்களின் சுழற்சியில்
தனிமையின் பயமூட்டலில்
கனவுகளின் கொடுமையில்
எனக்கே தெரியாமல் 
நழுவியிருக்கிறது மனம்

ஆறாயின் ஓடிக் கலந்து விடும் 
இங்கே
குளமாகி நிற்கிறது.

வி. அல்விற்.

04.09.2015.