செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

அவர்களையும் தீண்டும் தென்றல்..

வானம் தெளியாயிருந்தும் 
கருமுகில்கள் கூடிக் கூடி 
கவிந்திருந்து பேசிக் கொண்டிருந்தன 
வெளிச்சம் புக முடியாதபடி 
சோவென்று கொட்டி விடும் பயத்தை 
உள்ளேயே உருவாக்கியிருந்தன 
தெப்பமாக நனைந்து விடுவோமோ 
என்ற பயம் தடுத்திருந்தது 
ஒரு கணம் சூரியனும் 
மறுகணம் இருள் மேகங்களுமான 
கண்ணாமூச்சி விளையாட்டில்
இன்று சூரியனின் பிரகாசத்தில்
இலைகளின் மீதான பனித்துளிகள்
சிலிர்த்து வீழ்கின்றன
வெளிவந்து அண்ணார்ந்து பார்த்து
மூச்சை உள்ளே இழுத்து ஆழமாக சுவாசிக்கையில்
காற்று எல்லோரையும் போல
அவர்களையும் தடவிச் செல்லுகிறது
ஆதரவாக......

வி.அல்விற்.
18.02.2014.

உள்ளே...

காரிருள் கவிந்திருக்கும் காட்டிலே 
வெவ்வேறு உருவங்களுடன் 
முக்காடிட்டிருக்கும் மரங்கள் 
காற்றிலே அலையுறுவது போல 
உள்ளே குந்தியிருக்கின்றன 
வெளியே சொல்லத் தெரியாத 
சேர்ந்திருக்கும் பயக்குவியல்கள் 
நேற்றைய தோல்விகளின் பயங்கள்
இன்றும் தோற்று விடுவோமோவென்ற 
நிம்மதியற்ற இரவுகளின் பயங்கள் 
மனிதரை எதிர்கொள்வதில் பயங்கள்
சிக்கல்களை நோக்குவதில் பயங்கள்
நாளைய நாளை முடிப்பதற்குள்
மரணம் அண்டிவிடக் கூடாதென்ற பயம்
இன்னும் இன்னும்....
பிய்த்துக் கொண்டு வெளியே வர முடியாதபடி
வெளிச்சத்துக்குள் கால் வைக்க முடியாதபடி
இயல்பாய் நடமாட முடியாதபடி
மன இருட்டுள் தடக்குப்படுகின்றன
சின்னதும் பெரிதுமாய் பய மூட்டைகள்

வி. அல்விற்.
17.02.2014.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

உயிர்க்காதல்

காதலாகிக் கசிந்துருகி
கனவிலே புரண்டு
நனவிலே இணைந்து
காலையிலே காதல்
தேநீருடன் கலந்து
மதியத்திலே காதல்
அலைபேசியில் குழைந்து
மாலையிலே காதல் 
சிறு ஊடலாகி முறுகி
கண்களில் மேகங்கள்
சூழ்ந்துவரக் காண்கையில்
தலைப்பையே மாற்றி
நகைக்க வைக்கும்
வித்தையைச் செய்கிறது
அதே காதல்
துன்பங்கள் இறுக்குகையில்
ஓடிவிடாது இன்னும் இறுக்கமாய்
அருகமர்ந்து இருக்கிறது
தளராது பாதையை மறிக்கும்
இடர்களை யெல்லாம்
தூக்கிப்போட்டு நடக்கிறது
ஒரு முறையல்ல இருமுறையல்ல
எத்தனை தடவை மன்னிக்கிறது
எத்தனை தடவை தட்டிக் கொடுக்கிறது
எத்தனை தடவை ஏற்றுக் கொள்ளுகிறது
நம் பலங்களையும் பலவீனங்களையும்
சமாந்தரப்படுத்தி விடுகிறது
நம் காதல்
இறுதிவரை கொண்டு சென்று
இருக்குமட்டும் பேசி நிற்கும்
நம் காதலை
இன்று மட்டும் சொல்லிப் போக
இது என்ன
தவணை முறைக் காதலா?
வி.அல்விற்.
14.02.2014.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

நேசிக்கக் கற்றுக் கொள்ளல்


யார் உன் சிரிப்பை விரும்புபவர் 
யார் உன் குறைகளை ஏற்றுக் கொள்பவர்
யார் உன் குற்றங்களைத் திருத்துபவர்
யார் உன் திறமைகளைப் பாராட்டுபவர்
யார் உன் கண்ணீரைப் புரிந்து கொள்ளுபவர்
யார் உன் துன்பங்களில் பங்கெடுப்பவர் 
யார் உன்னை எதிர்ப்பவர்
யார் உன்னைத் தடம் போட்டு வீழ்த்துபவர்
யார் உன் வெற்றியில் புழுங்குபவர்
யார் உன் தோல்வியில் மகிழ்பவர்
எதையும் எதிர்பாராது கடந்து போ
உன்னால் முடிந்ததைச் செய்
அதையும் இதய சுத்தியாகச் செய்
பாரபட்சம் பார்க்காமல் செய்
காலம் பலவற்றை ஆற்றிப் போகும்
சிலவற்றை கடைசிவரை சுமக்கும்
வடுக்கள் சில நெருடி நிற்பினும்
மனம் நேசிக்கக் கற்றுக் கொண்ட
நிம்மதியில் ஆறும்.
வி.அல்விற்.
06.02.2014.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மாய மனிதன்.

என்ன மாயமிது மனிதா 
உன்னை மறந்து 
உனக்குள்ளேயே உறங்கும்
நிலைதான் என்னே! 
தானும் தனதுமாய் 
தன்னிலை முன்னிறுத்தும் 
மானிட மனமிது 
கைகுலுக்கி நட்புடன் 
நன்மைகளைப் பகிர்ந்தவன் 
தள்ளாடித் தவிக்கையில் 
தூரத்து விமர்சனங்களுடன்
துண்டித்துப் போகும்
மானிட மனமிது
அன்புக்கு வன்புடன்
இலாப நட்டத்துடன் அருகிருப்பவனை
இரக்கமின்றி விழுத்தாட்டிப் போகும்
மானிட மனமிது
மானிட தர்மங்களை
மிக இலகுவாய் மறந்து விட்டு
அரக்கத்தனமாய்
ஆனால் மிகச் சுத்தமாக
சத்தமின்றிப் பேசி சாதிக்கும்
கள்ளத்தனம் குடியிருக்கும்
மானிட மனமிது
என்ன சொல்லி என்ன பயன்
மாற்றமில்லா ஊருக்குள்
ஒருசில ஆடுகளே இங்கே
நனைந்து கொண்டிருக்கின்றன

வி.அல்விற்.
02.02.2014.

கனவுகளும் காலமும்.

இமைக்கும் பொழுதில் 
ஆயிரம் கனவுகள் உள்ளே வந்து 
சப்பணமிட்டு அமர்ந்து கொள்ளுகின்றன 
ஒவ்வொன்றும் வெறித்தனமாக 
திட்டமிட்டுக் கொள்ளுகின்றன 
காற்றிலே பறக்கவிடப்பட்ட 
மேல் துண்டு போலில்லாது 
செதுக்கி வைக்கப்பட்ட கற்சிலைகளாய் 
ஒவ்வொன்றும் அழகழகாய் 
உருப்பெற்று முழுமையான 
வெற்றிக்காய்க் காத்திருக்கின்றன
கனவுகளின் நீட்சிக்கு என்
பொழுதுகளின் போதாமை தள்ளாடுகின்றது
ஈடுகொடுக்க முடியாத வேகத்துடன்
ஆனாலும் கூட
இமைகளும் அசைவை நிறுத்துவதில்லை
கனவுகளும் என்றும் முடிவதில்லை
கூடவே எதிர் நீச்சல் போடுகின்றன
உயிரோடு கரையேறிவிடும் நம்பிக்கையுடன்.

வி.அல்விற்.
01.02.2014.