திங்கள், 23 நவம்பர், 2015

எங்ஙனம் இப்பூமி முடிவுறும் ?

இந்தப் பிரபஞ்சத்தின் இப்பகுதி முடிவடையுமோ?
எப்படியாகும்?

முழுவதுமே நீராலே மூழ்கிப்போய்?
காற்றலைவில் சிதறுண்டு போய் சிறு துகள்களாகி?
ஒரு சிறு தீக்குச்சியில் சாம்பல் மேடாகி
பூமியின் கண்படு நுனியும் வானின் எல்லையும் 
தூரத்தில் தொட்டுவிட்டபடி?
நிலம் பிளவுண்டு அனைத்தையும் விழுங்கி 
வெறும் பரப்பாகியபடி?

எங்ஙனம் இப்பூமி முடிவுறும்?

எத்துணை தைரியசாலிகள் நாங்கள்?

பதில் தெரியாத 
கேள்விகளோடு விரைந்து கொண்டிருக்கிறோம் 

இம்மண்ணின் ஒரு பகுதியையேனும்
சொந்தமாக்கும் அவசரத்துடன்.

வி. அல்விற்.

22.11.2015.

வரம்

என்ன உறவு இது?
கேட்டா பெற்றோமிதை?

கடலின் ஆழம்போலவும்
அதன்மேல் ஓயாது பயணிக்கும் அலைகள் போலவும் 
பிரிவற்றிருக்கப் பணிக்கப்பட்டிருக்கிறோம்
நீயும் நானும். 

மறைந்திருக்கும் மரவேர்களிலிருந்து
மண் பிளந்து வெடித்தெழும் சிறு கன்றுகள் போல
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

இதோ! உன்னோடிருக்கும் இக்கணங்கள் 
இப்பிறப்பிற்காக நான் பெற்ற வரங்களாகக் கருதுகிறேன் 

என் பிரிய சிசுவே!
இவை நாளை மீட்கப்படக்கூடும் உன்னால். 

அந்நேரம்,
நான் உன் சிசுவாய்ப் பிறந்திடும்
வரம் கேட்பேன்.

வி. அல்விற்.

21.11.2015.

என் பிரிய சிசுவே!

என்னைப் பணிவுறச் செய்கிறாய் 
ஒரு குழந்தையைப் போல.
என்னை நடத்திச் செல்லுகிறாய்
ஒரு ஆசானைப்போல.

வழியெங்கிலும் முத்துக்களைப்போட்டபடி
நடந்து கொண்டேயிருக்கிறேன் 
உனக்கான எனது கேள்விகளை
ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறாய்
வியத்தகு விளக்கங்களுடனான
எதிர்க் கேள்விகளுடன்.

என் பிரிய சிசுவே!

இதோ! என் நடை தளர்கிறது.
ஆகாயத்தை விமரிசிக்கும் துணிவு எனக்கில்லை

நீ திரும்பி நடக்கையில்
போட்டவற்றைப் பொறுக்கியெடுப்பாயெனவும்
சேர்த்து வைத்து மகிழ்வாயெனவும்
நம்பிக்கை கொண்டு சாய்ந்திருக்கிறேன்
இக்கணத்தில்.

வி. அல்விற்.

17.11.2015.

உனது வாழ்வு.

கனவூறிய வாழ்வு வெளியில் மிதப்புற்றிருந்தேன்
அசைவற்று நீந்தும் பறவைபோல
எது கொண்டு அதையளப்பேன்
உனக்கதை விளக்க?
மதிப்பிடற்கரிய உனது சொல்லோவியங்களில்
எனது விழிகள் இன்று நிறைந்திருக்கின்றன

இதோ!
உன் மொழிவழி எனதுயிர் துளிர்த்திருக்கிறது
மீண்டுமொருமுறை.

இனி அது தங்கியிருக்கும். 

ஓ! என் பிரிய சிசுவே!

என் கரம் கோர்த்துக் கொள்!
அது கூறும் வார்த்தைகளை உணர்ந்து கொள்!
என் பார்வைகளைப் பற்றிக் கொள்!

எனது விழிகளில் நிறைந்திருப்பது நீரல்ல; 
உனது வாழ்வே!

வி. அல்விற்.

13.11.2015.

இருப்பு

நான் இப்போது அழகாயில்லை என்கிறார்கள் 
தலைமுடிகள் உதிர்ந்தும் நிறம் மாறியும் 
விரல்களில் நரம்புகள் புடைத்துமுள்ள
வயோதிபனை ஒத்தவனாயிருக்கிறேன் என்கிறார்கள் 

மகா பிரபுக்களே!

நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் என்பது 
உங்களுக்குத் தெரியுமா?
உதிர்ந்தவையும்
பூச்சி அரித்தவையும்
பிடுங்கப்பட்டவையும் போக
என்னுடன் சேர்ந்திருப்பவையோடு
நான் இன்னும் 
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

அழகாக.

வி. அல்விற்.

09.11.2015.

என் பிரிய சிசுவே!

வழக்கமான நமது சிறு வழிப்பாதையில்
எனது விரல் தொட நானுன் முன் நடந்தேன் 
வழியெங்கும் பூத்திருந்த மலர்கள் 
தினமும் உனதும் எனதுமான
வார்த்தைப் பரிமாறல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்க
என் பின்னும் பக்கமும் 
அதன் பின்னர் முன்னுமாக நடந்து கொண்டிருந்தாய்
கற்பனைகள் விரியும் கண்களோடு.

பாதை புழுதி நிறைந்திருந்தும் பூக்களின் நறுமணம் 
அதனையும் மேவி இன்பம் அளித்தது
நம்மைக் கடந்து போனவர்களின் புன்முறுவல்கள் 
உன்னை மகிழ்வித்தன என்று நினைக்கிறேன் 
பெருஞ்சிறப்புடைய  நமது உரையாடல்கள் 
உனக்கு உவப்பானதாயிருந்திருக்கும்

ஓ! என் பிரிய சிசுவே!

வேகம் குறையாத இந்நடைப்பயணம் 
உன்னை மெருகூட்டியிருப்பதை உணர்கிறேன் 
உன்னைப் போலவே.

இப்போதெல்லாம் நடைப்பயணத்தைவிட
உரையாடல்கள் வேகம் கொண்டுள்ளன
என்பதும் புரிகிறது  
நான் எட்டிப் பிடிக்கப் பிரயத்தனப்படுகிறேன்
உன்னோடு சமமாக நடக்கவும்
அற்புதமான உரையாடல்களைத் தொடரவும்

இந்தப் பாதை வழியே.

வி. அல்விற்.

03.11.2015.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பிரிய சிசுவே!

கனத்திருக்கும் மௌனத்தினூடே
உனது மொழி வாய் திறக்கின்றது
கண்களினூடே அவை உள்ளிறங்குகின்றன
விட்டு விட முடியாத நினைவுகளான
நீண்டுயர்ந்த அடர் மரங்கள் கொண்ட
காட்டு வழியினூடே
நானும் பயணிக்கிறேன் உன்னோடு.

ஏனென்றால் நீ எனது உயிராயிருக்கிறாய்
எதற்கும் இணையற்ற மேனிலையுற்றிருக்கிறாய்
எனக்கென்றே இருக்கும் சொந்தமாயிருக்கிறாய்
வான் பொழியும் மழைத்தூறல்களும்
கம்பீரமாக இறங்கிவரும் கதிரவனும்
உனைவிட மேலானதாயில்லை எனக்கு.

ஓ! என் பிரிய சிசுவே!

உனைவிட்டு நான் நீங்குவதில்லை
என் ஆயுள் உன்னால் நீடிக்கட்டும்
எனதருகாமை உன்னை வளப்படுத்தட்டும்
உலகறிந்து உன் வெற்றிகள் குவிகையில்
தசை சுருங்கிய சிறு கால்களுடன்
உன் பின்னே அன்றும் நடப்பேன்.

வி. அல்விற்.
01.11.2015.

மீளல்

இதோ! இலைகளையுதிர்க்கின்றன
சிலநாட்களுக்கு முன்னர்
உனது காலடி ஓசைகளையும்
ஆரவாரங்களையும்
கேட்டபடி காய்த்துக் குலுங்கியிருந்த
பசுமை போர்த்திருந்த மரங்கள்.

நீ இப்போது இங்கே வருவதில்லையென
இவை முணுமுணுத்து
முறைப்பாடிடுகின்றன

ஓ! நீயும் முதிர்ந்து விட்டாயா
இவ்விலைகளைப் போல?

ஆனாலும் பார்!
இவை உதிர்க்கும்
ஆனாலும் இடம் மாறாது
மௌனித்திருக்கும்

என் பிரிய சிசுவே!

குருவிகளின் கூடு போன்ற
உனதிடம் இங்கேயுள்ளது
மீண்டு வந்துவிடு
காத்திருப்பன இம்மரங்கள் மட்டுமல்ல…

வி.அல்விற்.
30.10.2015.