செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

அழிதல் நலம்.

இறுகியிருக்கும் இந்த வாழ்க்கை
எனக்கும் உவப்பானதாயில்லை.
செம்மஞ்சள் பூசிவரும்
அதிகாலை வானம் போல
அள்ளித் தெளிக்கவே
மனங்கொள்ளுகிறேன்
மகிழ்ச்சியை.
பிரகாசம் தெறிக்கும்
உனது கண்களின் சிரிப்பையும்
சொற்களில் பொங்கும்
நம்பிக்கை நுரைகளையும்
நெஞ்சில் பதிந்துவிட
முன்னாலே அமர்ந்திருக்கிறேன்.
புதைத்தவற்றை வெளியெடு!
எரிக்க வேண்டும்,
அல்லது அழிக்க வேண்டும்.
இல்லையேல் கரைத்துவிட வேண்டும்
அவை
மீண்டும் புதைபடாமலிருக்க.

வி. அல்விற்.
22.08.2016.

சனி, 20 ஆகஸ்ட், 2016

எரிதல்.

இவ்விரவும்
மறுபடியும் முரணுறுகிறது
சாட்சியங்களற்ற வழக்குகளும்
பேசப்பட்ட சத்தியங்களும்
ஆவணங்களற்ற ஒப்பந்தங்களும்
முறிநிலையலுள்ள உறவுகளும்
முடிவுறாத பிணக்குகளும்
நானெனும் எதிர்வுகூறல்களும்
நீளுமிவ்விரவில்
நெருப்பிட்டுக் கொள்ளுகின்றன.
நிலவு முகிலுக்குள் ஒளிந்து கொள்ளுகின்றது
சாட்சியளிக்க விரும்பாதது போல.

மனிதர்கள்
எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வி. அல்விற்.
18.08.2016.

கைத்தடிகளின் பயணம்.

தலைமுறை இழந்த
கைத்தடிகளை
மரணம் கொண்டு போகும்
அடர் இருட்டில்
கொள்ளி வைக்க வேண்டியவர்கள்
வரிசையாக  மின்னுகிறார்கள்
வானத்தில் விண்மீன்களாக.

வி. அல்விற்.
16.08.2017.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நம்பிக்கை.

வெட்டி விடப்பட்டதாயும்
பட்டு விட்டதாயும்
துளிர்க்க முடியாததாயும்
தோற்றம் கொண்டு
மயக்குகின்றது
நமக்கிடையிலான
இந்த உறவு.
மிகைப்படுத்தப்பட்ட சொற்களும்
குறுகிய வினைகளுமென
கலங்கிக் கிடக்கின்றது
தெளிவற்றது போன்ற தோற்றத்துடன்.
வீசப்பட்ட விதையின் மேல்
விழும் ஒரு மழைத் துளியில்
துளிர்க்கும் மெல்லரும்பு போல
காத்திருக்கிறது
காலம்
நம்பிக்கை மழையின்
பொழிவுக்காக.

வாழ்க்கை.

எது வாழ்க்கை?
புரிந்திருக்கிறாயா அவளை?
அங்கிருந்து ஆரம்பிக்கின்றது
படரும் கொடி போன்ற அன்பு.
அது,
இன்பத்தில் சேர்ந்து களிக்கவும்
துன்பத்தில் தாங்கி நிற்பதற்குமான
ஒரு தெரிவு.
நீ மரமாயிருப்பாய் எனும்
நம்பிக்கையின் உறவு.
மரங்கள் தறிபடாது என்னும் நம்பிக்கை.
வேர்கள் பரப்பி,
கிளைகள் பெருக்கி
காலத்துக்கும் இளைப்பாறலாம் இருவரும்
என்கின்ற துணிவு கொண்ட உறவிது.
உனது செயல்களை
தனது விட்டுக் கொடுப்புக்களால்
நிரப்பிக் கொள்ளும்
அவளது அன்பைப் புரிந்தாயா?
உன்னையவள் முழுமையாக்க எண்ணுவதை
உணர்ந்தாயா?
உனது உதாசீனங்கள் வேர்களை அறுத்து விடும்.
உனது நேர்மையீனங்கள் கிளைகளை முறித்து விடும்.
உனது பொய்கள் தூரத் துரத்தி விடும்.
வாழ்க்கை அவ்வளவே!
முழுமையிலல்ல;
புரிந்து வினையாற்றுவதிலுள்ளது.

வி. அல்விற்.
05.08.2016.

இலக்கியச் சிதிலங்கள்.

வெட்கமற்றவர்களே!
பேசிவிட்டுப் போங்கள்.
உங்கள் நிர்வாணம் மறந்த
போதைக்குள் தலைவைத்துறங்கும் உங்களுக்கு
நமது தேசத்துக் கூக்குரல்களின் அவலங்கள்
புரியப் போவதில்லை.

வெட்கமற்றவர்களே!
பேசிவிட்டுப் போங்கள்
உங்கள் தேசத்தின் சார்பில்
சத்தியம் செய்து,
உங்கள் அன்னையரின்
மார்பு கிழித்து
இரத்தத் திலகமிடுங்கள்.
நமது குழந்தைகள்
சீரழிக்கப்படவில்லையென.

எதுவுமற்றவர்களே!
பேசிவிட்டுப் போங்கள்.
நமது புதைகுழிகளில் இருப்பவை
கனவுகள் நிறைந்த
இருப்பிடங்களென
அறிய மறுக்கும் பிண்டங்களே!
எடுத்துச் செல்லுங்கள்
உங்களது உழுத்துப் போன
இலக்கியச் சிதிலங்களை.

(இது பேசத் தெரியாத இலக்கியக் கொம்புகளுக்கு)

வி. அல்விற்.
01.07.2016.

பிரதிபலிப்பு.

மனமூட்டங்களைப் போலவே
கனத்திருக்கும் வானத்திலிருந்து
அள்ளித் தெளிக்கப்படுகின்றன மழைத்துளிகள்.
தூறலின் நனைவில்
இறுக்கம் விலக்கி
குளிர்ந்து போகின்றது மனமும்.
காற்றுக் கலந்து இசையும் முழங்க
நடனமாடிக் களிக்கிறாள் மழைக்கன்னி
இரவுபகலாக ஓய்வின்றி.
மாமழையே!
ஒருசமயம்
சோர்வின்றிப் பொழிந்து நெகிழ்த்துகிறாய்.
மறுசமயம்
ஓவென்றழும் குழந்தையை ஒத்திருக்கிறாய்.
இதோ!
இந்தச் சாளரத்தின் ஒருபக்கம் நான்
மறுபக்கம் நீ!
நீ என்னைப் பிரதிபலிக்கிறாயா?
அல்லது நான் உன்னைப் பிரதிபலிக்கிறேனா?

வி. அல்விற்.
23.06.2016.

நீண்ட இரவுகள்.

தூக்கம் துக்கித்தபடி
விழிகளுள் விழுந்து கனக்க மறுக்கின்றது.
ஆழ்மனம் விழித்தபடியேயிருக்கின்றது
எதையோ முடிவு செய்து காத்திருப்பதுபோல.
பாம்புகள் ஊர்ந்து பயமுறுத்துகின்றன.
நிழல்கள் நிற்காமல் துரத்தியும்
மரங்கள் நடனமாடியபடியும் நெருங்க
முடிவடையாத தெருக்களில்
ஓடிக்கொண்டேயிருக்க
தப்பிக்கவியலா தடுப்புக்கள் திகைப்பூட்டி
கத்தவும் ஒலி பிறக்காததுமான
இந்தக் கொடும் இரவுகள்
மிக நீளமானவை.
செக்குமாட்டின் நிலையையொத்து
நினைவுகள் ஒரே வட்டத்தில்…..
இவை எங்கிருந்து பிறப்பெடுத்திருக்கும்?

நம் முதுசங்களை
காலம் அள்ளிக் கொண்டு போனவேளையிலோ?

வி. அல்விற்.
13.06.2016.

சொற்கள்.

மிதக்கும் நீரில்
கலங்கி வீழ்ந்த
முழுநிலவு போல
வீசப்பட்ட வார்த்தை
உருவமிழந்து அலைகிறது.

வி. அல்விற்.
09.06.2016.

பிம்பம்

பொய் சொல்லியுள்ளாய்
அதுவும்
மனமறிந்து.
உனது பிம்பம்
இப்போது மிகத் தெளிவாகத் தெரிகிறது
.................
.................
முழு நிர்வாணமாக.

வி. அல்விற்.
08.06.2016.

பிரிய சிசுவே!

காற்றில் அலையுண்டும் 
நீரில் மூழ்கித் திணறியும்
அழிவுறும் இப்பூமியில்
நேற்றைய துக்கங்களும்
நாளையின் கலக்கங்களும் 
நிரந்தரமென ஏதுமில்லை.
பிரகாசிக்கும் சுடரெனவோர் அமைதி
இக்கணம் பிறந்திருக்கிறது.
உயிர்த்திருக்கிறேன் நான்!
கொடுவாள்களும்
கடுங்கனவுகளும்
எரிநட்சத்திரங்களாய் வீழ்ந்து போகட்டும்
என் பிரிய சிசுவே!
என்னோடு உயிர்த்திரு
பகிர்ந்தெடு மகிழ்ச்சியை.

வி. அல்விற்.
04.06.2016.

புதன், 3 ஆகஸ்ட், 2016

பசுமையின் மணத்தை ஒத்திருக்கின்றது
உனதருகாமையின் பிடிப்பு.
இடறிக் கொண்ட காலங்கள்
நேர்வழிப்பட்டுக் கொண்டிருப்பதான உணர்வு.
நமது துக்கங்களின் கருமை
சற்றேவிலகி தெளிவடைகின்றன
எதுவாயிருக்கும் நமதெதிர் காலம்?
நம்பிக்கையின் நூலான
மீள்பிறப்பொன்று போலவா?
அல்லது,
இக்கண மகிழ்வில் திளைத்தலில் மட்டுமே
நிறைவாகிப் போவமா?
எதுவாயினும்
எத்தனங்களுக்குட்பட்டவுன் மறத்தல்களில்
நான் ஆறுதலுற்றிருக்கிறேன்.
அவை மீளாதிருக்கட்டும்!
உனதருகாமையின் இனிமையில்
பசுமை கொண்டிருக்கின்றதெனது மனம்.

வி. அல்விற்.
03.06.2016.
வார்த்தைகளால் போர்த்தினாள்
பயத்தை விலக்கினாள்

கண்களால் கட்டளையிட்டாள்
பணிவைக் கற்றுத்தந்தாள்

அன்பை உணர்த்தினாள்
பகிரச் சொன்னாள்

உலகத்தைக் காட்டினாள்
வாழப் பணித்தாள்

தனித்தே நின்றவள்
போராடச் சொல்லித் தந்தாள்

ஓ! என் தாயே!
எனைச் சுமந்த உன்னை
சுமந்தபடியே செல்லுவேன்
இன்னும் இன்னும்
தொலைதூரம்வரை….

வி. அல்விற்.
29.05.2016.
வெற்றோசைகள்.

வெளியேறி விடுங்கள்!
உங்களது கூக்குரல்கள்
பெயரற்றுப் போயிருக்கின்றன.

ஒருபோதும் அறிந்திராததொரு மொழிபோல
வெற்றோசைகளே காற்றில் வந்து
மோதி அலைகின்றன.

நீங்களாகவே மூடிக் கொண்டுள்ள கதவுகளை
உள்ளிருந்து திறக்காவிடின்
எங்ஙனம் சாத்தியமாகும் உங்களது விடுதலை?

மூச்சு நிறைக்கும் நச்சு வாயு
நிறைந்திருக்கும் உள்ளே
மரணத்துள் ஆழ்ந்து விடாதிருக்க
அகலத்திறந்து கொள்ளுங்கள் சாளரங்களையும்

அதனுடன் சேர்த்து மனங்களையும்.

உங்களது மொழிகளைப் புரிந்து கொள்ளவும்
நம்பிக்கை கொடுக்கவும் வளர்க்கவும்
அநேகருண்டு இந்தப்பூமியில்.

உங்களை விடுவிப்பதற்காகவேனும்
தாழ்ப்பாள்களைத் திறந்து விட்டு
வெளியேறி விடுங்கள்!

வி. அல்விற்.
25.05.2016.
எவையென்றறியாத
அல்லது
பகுத்தறியவியலாத
இருட் குகைக்குள்
தேடிக் கொண்டேயிருக்கிறோம்
இருக்கும்
என்றெண்ணிய பதில்களுக்காக.

எங்கே தொலைந்து போனோம்?

வழியானவர்கள் வாழ்விழக்க நாமே
வழியாகப் போனோமா?

அன்றேல்
(நா)மொழி புரள
நமக்கே யெதிராகிப் போனோமா?

என்று கடக்குமிந்தக் கொதிகாலம்?
எத்தனை விலை கேட்கும்
இன்னும் இன்னுமென...

வி. அல்விற்.
13.05.1016.
விக்கித்து நின்றோம்.

தொண்டைக்குள் நீரிறங்க
மறுத்தடம் பிடித்தது.
அடுப்படிகள் எரியாமல்
மூடியே கிடந்தன.

கனவினில் காட்சிகள்
பேயாட்டம் போட்டன.

இறுதிக் குரல்களை
இறுகியபடியே கேட்டிருந்தோம்.

ஆம்,
எமதுடல்கள் மட்டுமே பெயர்ந்திருந்தன.

வி. அல்விற்.
14.05.1015.


போதை.

உனது வார்த்தைகள்
பழரசத்தில் தோய்ந்து
தேனில் மூழ்கியெழுந்து
நழுவி வீழ்கின்றன.

நாவென்னும் சுழற்கருவியால்
வல்லமை மிகு செய்திகள்
சுடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

அமோக விற்பனையில் உனது மனம்
வெகுவாகத் திளைத்திருப்பதைப்
பெருமை சாற்றுகிறது
அறிந்தும் அறியா இவ்வுலகம்.

உனது விரல்கள் உயிர்ப்பூட்டுகின்றன
மறந்துவிட்ட இசைகளை.
கால்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன
கொஞ்சம் கலைகளுக்குமாக
மிச்சமதன் விலைகளுக்குமாக.

இதோ!
இந்த வசந்தத்தின் மரத்தை நிறைத்திருக்கும்
‘லிலா’ மொட்டுக்களைப் போல
நிறைந்திருக்கின்றன
உனது சாகசங்கள்
மிகுந்த அழகுடன்.

இப்போதே வருந்துகின்றேன்
அவற்றின் மலர்வுக்கும்
வீழ்ச்சிக்குமாக.

வசந்தங்கள் மகிழ்ச்சிதான்
மறுகாலம் வரும் வரை.

வி. அல்விற்.
03.05.2016.

நடிகர்

முந்தியும் பிந்தியுமான
மலட்டு விதைகளின்
விதைப்புக்களிலிருந்து
சிதைவடையும் நிலங்கள் போல
மாறிக் கொண்டேயிருக்கின்றன
அவர்களது முகங்கள்.

சிதைவடைகின்றன தொடர்ந்தும்...
அவர்களது விதைச்சல்களுக்கும்
அறுவடைகளுக்குமான
இடைக்காலங்களில் பொழியும்
வெள்ளத்தில் சிக்குண்ட பயிர்கள் போல.

பொய்யாகச் சிரித்தும்
மெய்யாக நடித்தும்
மெய்யாகிலுமே
ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளுகிறார்கள்
பொய்யிலும் பொய்யாக.

கூத்துக்கள் ஆடப்படுகின்றன
உச்சக் கட்ட ஆட்டமோ?
பாய் போட்டுத் தூர இருப்பவர்கள்
முகங்களின் பிரகாசிப்பில்
இலயித்துப் பிரமித்திருக்கின்றார்கள்

பூச்சுக்கள் கழன்று
சிதைவடையும் முகங்களை
நினைத்தும் பார்க்க விரும்பாமல்.

இருந்தாலும்....
கூத்துக்களும் முடியும்
ஒருநாள் நாயகர்களின்
பூச்சுக்களும் கழன்று போகும்.

மிஞ்சுவதோ....

விதைத்ததில் எஞ்சுபவை.

வி. அல்விற்.
28.04.2016.

திமிர்

அவர்கள் ஆண்களாயிருக்கிறார்கள்.

நீ
கொடியெனவும் செடியெனவும்
முல்லையிலும் சிறந்த மலரெனவும்
கருநாகம் போலவுன்னை
வருணிக்கின்றார்கள்.

உனது தனிமையும்
கண்ணீரும்
ஆறுதல் தேடும் கரங்களும்
இன்னும் இன்னும்…..
உனது பலவீனங்கள்
அவர்களது பலங்களாகவிருக்கின்றன.

காமப் பற்களை அழுத்தி
உன்னைச் சீரழிக்கப்
பேயாக அலைகிறார்கள்.

பெண்ணே!

உனக்கேன் புரியவில்லை
உனது பலங்கள்?

வேர் கொண்டுள்ள அன்பும்
காத்து நிற்கும் உறவுகளும்
வாள் போலறுக்கும் உனது விழிகளும்
நாவென்னும் கணையும் கொண்டு
உன் பலம் பெருக்கும் துணிவை
எங்கே ஒழித்து வைத்தாய்?

எடு பயமறுத்து! வெட்டி விடு!
கழுத்தைச் சுற்ற வருவதை.

நீ
பெண்ணாக நிமிருவாய்!

அன்றேல்,

மிதித்து நகர்ந்து போவார்கள்

ஆண் திமிருடன்.

வி. அல்விற்.
24.04.2015.

நடிகன்

அவர்கள் நடிகைகளாயிருக்கிறார்கள்
உன்னைப் போலவே.

நளினமாகச் சிரிக்கவும்
தலைசரித்துச் சிரித்து மயக்கவுமான
திறமைகளை அதிகமாகவே
கொண்டுள்ளார்கள்
தேர்ந்த நடிப்பாளிகளைப்போல.

நீ
ஆரசனாகும் போது
மகாராணிகளாகவும்
நீ
குலுங்கி அழும்போது
கண் கலங்கவும்
நீ
அகங்காரமாகச் சிரிக்கும்போது
துணைவிபோலெண்ணிப் பெருமிதமடையவும்
அறிவிழந்தவர்களாக ஆக்கியிருக்கிறது
உனது மதிப்பேயற்ற
வெறும் பிம்பம்.

நீ
தினமும்
ஊதிக்கொண்டிருப்பது
வெறும் நீர்க்குமிழிகளே

அவை உடைபடுகையில்
அந்தப் பேதைகள் புதைந்து போவார்கள்.

வி. அல்விற்.
24.04.2016.

அனைத்துமாகி.

நீ
மலரல்ல
தென்றலுமல்ல
நிலவாயும்
நிலமாயும்
நீராயும்
நீண்டவளுமல்ல,

புதிராய்,
தினமும் புதிதாய்ப் பிறந்து
நமக்கெதுவோ
அதுவாகும்
அனைத்துமான
அன்னையாக ஆகிறாய்.

வி. அல்விற்.
16.04.2016.

உயிர்

பேசிக்கொண்டேயிருக்கிறோம்
வாழ்க்கை முழுக்க
நிலையாமை பற்றி.

ஆனாலும்,

திடுக்குற்று நிற்கிறோம்

உயிர் உடல்விட்டகலும் வேளை ...

வி. அல்விற்.

அங்கீகாரம்

எனது தூக்கத்தை மட்டுமே கலைக்கிறாய்
துக்கங்களைக் களைந்துவிட முயலாமல்
இருளுக்குள் நான் தொலைந்து கொண்டிருப்பதை
மழைக்குமுன்னரான மேகமென
உணர்த்திக் கொண்டிருப்பதை
மறுதலித்துக் கொண்டேயிருக்கிறாய்
கள்ளத்தனமாக.

வானுடைந்து நிலம் பெருக்கெடுக்கும் போது
நானதில் கரைந்து போவேன்.

ஓ!
அதன் பின்னரும் நீ வாழ்ந்திருப்பாயோ?

சமூகம் உனக்கு அங்கீகாரமளித்திருக்கிறது
எனதின்மை பற்றிய விளக்கமளிப்பதற்கு.

வி. அல்விற்.
02.03.2016.

வெளி.

இதுவோரேகாந்த உணர்வு
காற்றிலே கலப்பது போலவும்
பறவைகளுடன் பேசிக் கொண்டே
பறப்பது போலவும்
மேகங்களின் மேலே படுக்கையமைத்து
மெய்மறந்து தூங்குவது போலவும்
வான் வெளியின் கீழே
தனித்தமர்ந்திருப்பதும் போன்றதுமானதிது.

மிக நன்றாக இருக்குமோ!

இடைஞ்சல்களுள்ள
மனிதரற்ற வெளி நன்றாக இருக்குமோ!

சாத்தியங்களை நோக்கிய
நம்பிக்கைகளை கொண்டபடி
இன்னும் இப்பூமிப் பந்தின்மேலே
நாங்கள்....

வி. அல்விற்.
28.03.2016.
பொய்களைப் புதைத்து விட்டு
உண்மைகளை உயிர்ப்பித்தால்
மானிடம் எத்தனை மேன்மையுறும்!

ஓ! சாத்தான்களே!
வண்ணமயமான
மாயபூமியைக் காட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்
தப்பிக்க முடியாதவர்கள்
வீழ்ந்து கொண்டேயிருக்க,

உயிர்த்தெழுதலுக்கான காலம்
நீண்டு கொண்டேயிருக்கிறது.

வி. அல்விற்.
27.03.2016.
அழகான கனவுகளை
ஊடறுத்துக் கலைக்கின்றன
அழிந்த வீடுகளும்
திரிபடைந்த ஊரும்.

இனியென்ன?

இதுதான் எமதென்பதா?
அதையே சரியென்பதா?

காலப்பதிவில்
ஆங்காங்கே அறுந்து தொங்குகின்றன
நினைவுகள்
துண்டிக்கப்பட்ட கனவுகள் போல.

வி. அல்விற்.
22.03.2016.

எதிர்.

மிகைப்படுத்தப்படாத
கவிதை போல
இதமூட்டுகிறது
விழிவழி வரும் செய்தி.

ஒப்பனைக்குள் மாறிவிடாத
முகம் போல
தெளிவாக அமர்ந்திருக்கிறது
உனதன்பு.

அன்று
ஒற்றை வார்த்தைகளில்
தத்திய கெஞ்சல்கள்
இன்று
எதிர்ப்பாட்டுக்களால்
இறுக்கிக் கோர்க்கப்பட்டுள்ளன.

வி. அல்விற்.
21.03.2016.

கரம் தா.

வானம் உனக்குப் பிரமிப்பாயிருக்கிறதா?
அதன் எல்லையற்ற பரப்பளவும்
தொட்டுவிட முடியாத நிறக் கலவைகளும்
அலையலையாக மிதந்து கொண்டிருக்கும்
மேகத் திரள்களும்
அதனூடே பிரகாசிக்கும் முழு நிலவும்
உன்னை மெய்மறக்கச் செய்கின்றனவா?

லயித்திரு!
உன்னை மகிழ்விக்கும்
சிந்தனைக்குள் மிதக்கவைக்கும்
தெரிவொன்றில் கலந்திரு!

என் பிரிய சிசுவே!

உனது கற்பனைகளை
மொழி பெயர்க்க முயல்கிறேன்
உனது கனவுகளை மெய்ப்படுத்த விழைகிறேன்

எனக்கொரு கரம் தா!
என்னையும் தாங்கி
நீ பற்றி எழுந்துவிட.

வி. அல்விற்.
30.01.2016.

இலக்கணம்

அன்பு நிலைத்திருக்குமா?
எப்படி?
நகமும் சதையும் போல?
கடலும் ஆழமும் போல?
மரமும் வேரும் போல?

எங்கேயோ அறுபட்டுப் போகிறதே
சுயநலத் தாக்குதலில்.

நான் மட்டுமே இங்கே
தனித்துக் குந்தியிருக்கிறது
இறுமாப்பாக.

வி. அல்விற்.
28.01.2016.
மறந்திருக்கிறேன் பல கீறல்களை
நினைவுபடுத்திக் கொண்டே.
இந்தக் காலம் போதாதிருக்கிறது
மீள்திருத்தம் செய்வதற்கு.
மீண்டும் மீண்டும்
நமக்குள் நாமே முரணாகியபடி...

என்ன செய்வது?

நிமிர்ந்து நிற்கும் மரத்தையொத்த
உறவுகளிலிருந்து
வேர்களாகிப் பிரிந்து
படர்ந்தோடுகின்றன
வேற்றுமைகள்.

நமது சந்திப்புக்கள்
நான் என்னையும்
நீ உன்னையுமான
‘எங்களை’ மட்டுமே மௌனமாக விட்டிருக்கின்றன

அந்த மரத்தைப் போல.

வி. அல்விற்.
23.01.2016.

வாழ்தல்.

விடலைப் பருவத்தினர் போல
முடிவெடுக்க முடியாது திணறும்
இந்தப் பனித் துகள்கள்
விழுந்தும் விழாதவையுமாக
அந்தரிக்கின்றன.

இறுக்கமாக மூடியிருக்கும்
பனியாடையை ஏமாற்றிக் கொண்டு
உட்புகுந்து உறைய வைக்கும்
இந்தக் குளிர்
இருக்கும் என்னை உலுப்பிவிடப் பார்க்கிறது

எழுகிறேன் வாழ்தலுக்காக.
அனைத்தும் உதிர்ந்து போய் விடுகின்றதான உணர்வு!

வி. அல்விற்.
22.01.2016.