செவ்வாய், 26 மார்ச், 2013

அக்கினிக் குஞ்சொன்று......


எல்லாரும் ஊருக்குப் போகிறார்கள்; போய் வந்தவர்களெல்லாம் ஆஹா! ஓஹோ! அற்புதம்!கண்டிக்குப் போனோம், யானையில் ஏறினோம் , ரம்புட்டான் சாப்பிட்டோம்; ஒரு பிரச்சனையும் இல்லை,அந்த மாதிரி வீதிகளும் டெவலெப்மென்ரும் என்று சொல்லுவதைக் கேட்க ஆசையாக இருக்கிறது போய் வந்தால்தான் என்ன என்று. நேசனுக்கும் குடும்பத்தோடு ஊருக்குப் போக வேண்டும் என்று நீண்ட கால ஆசை. ஆனால் இப்போதுதான் காலம் இடம் கொடுத்திருக்கிறது.அதுக்கு ஒரு அருமையான காரணமும் கிடைத்திருந்தது. மகள் வனிதா நவம்பர் மாதத்தில் பெரிய பிள்ளையாகி விட்டிருந்தாள். மகளின் சாமத்தியச் சடங்கை கோலாகலமாக ஊர் கூடியிருக்க நாட்டிலே கொண்டாட வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை வந்து விட்டது. ஆசை வந்து விட்டால் அதை எப்படியாவது நிறைவேற்ற முயற்சிப்பதுதானே மனித மனம். கடைசியில் எடுக்க இருந்த சீட்டை இடையிலேயே எடுத்து, தை மாதமே பயணச் சீட்டுக்கள் வாங்கியாகி விட்டது. 
ஊருக்குப் பயணம் என்றால் சும்மாவா? அழைப்பிதழ்கள்  இந்தியாவில் இருந்து வந்தன. இணையத்தில் மகளுக்குத் தேவையான புதிய வரவு ஆடைகள் தேடித் தேடி வாங்கியும் கொண்டாயிற்று ( வேற ஒருத்தரும் போடாத உடுப்புக்கள் தங்களுடைய மகள் போட வேணுமாம்) மகள் வனிதா சிணுங்கினாள் " நான் சாரி கட்ட மாட்டன்" என்று. தாய் விளங்கப் படுத்தினாள். முதல் சாரி, பிறகு பாவாடை தாவணி, பிறகு சுடிதார் என்று. மகள் கத்தினாள் " எனக்கு இது ஒண்டும் பிடிக்கேல்லை".
"உனக்குப் பிடிக்காட்டிப் பரவாயில்லை, இது நாங்கள் எங்கடை ஊராக்களோடை சேந்து செய்யப் போற கொண்டாட்டம்; எவ்வளவு காலத்துக்குப் பிறகு போகப் போறம்; அவையளும் எவ்வளவு காலத்துக்குப் பிறகு எங்களைப் பாக்க ஆசையாக இருப்பினம். நாங்கள் உடுத்தி விடுறம் நீ சும்மா நிண்டால் காணும்" அம்மா தன்னுடைய ஆதங்கங்களைக் கொட்டினாள். 
அம்மா மகளுடைய வாக்குவாதத்தில் காற்பந்து விளையாடி விட்டுத் திரும்பிய மூத்தவன் சாரங்கன் இடையிலே புகுந்து கொண்டான்.
"அவளை ஏனம்மா கரைச்சல் படுத்திறீங்கள்? நீங்கள் நாட்டுக்குப் போறதெண்டால் போட்டு வாங்கோ, அதை விட்டிட்டு ஏன் இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம்?
"நீ போய் உன்ரை அலுவலைப் பார், எங்களுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியும்" அம்மாவுக்குக் கோபம் உச்சத்தில் இருந்தது. சாரங்கன் தோள்களைத் தூக்கிக் குலுக்கி விட்டு தங்கையைப் பார்த்து விட்டுப் போய் விட்டான்.
"பதினைஞ்சு வருசத்துக்குப் பிறகு ஊருக்குப் போகப் போறம், எங்களுடைய ஆக்கள் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு கொண்டாட்டம் வைச்சு, அவையளோட இருந்து கதைச்சு ஆறி  வரலாமெண்டால் இந்தப் பிள்ளையளின்ர கொடுமை தாங்கேலாமல் இருக்குது; இவைக்கு எங்க எங்கட கவலை விளங்கப் போகுது" புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா. 
"என்ன நடந்தாலும் போறது போறதுதான், கொண்டாட்டம் வைக்கிறது வைக்கிறதுதான் " அம்மா புலம்பிக் களைத்து கடைசியாக சூளுரைத்துவிட்டு கைப் பையை எடுத்துக் கொண்டு கடைக்குப் புறப்பட்டவள் வாசலில் நின்று கணவனைத் திரும்பிப் பார்த்து , அப்பா! நாளைக்கு நீங்கள் வேலையால வரேக்கை, ஒரு அளவான குளிக்கிற பிளாஸ்டிக் தொட்டி நீலத்தில டிசைன் போட்டது ஒண்டு வாங்கிக் கொண்டு வாங்கோ. பிள்ளைக்குத் தலைக்குத் தண்ணி வாக்கிறதுக்கு. வீடியோவுக்கு நல்ல வடிவா இருக்கும். அங்கை இருக்குமோ தெரியாது, இஞ்சயே எல்லாத்தையும் வாங்கிக் கொண்டு போட்டால் பிரச்சனையில்லை.

அம்மாவினுடைய நாட்கள் கனவுகளும் கடைகளுமாய் நகர்ந்து கொண்டிருந்தன. லைக்காமொபில் அட்டைகளும் அதனோடு சேர்ந்து முடிந்து கொண்டே இருந்தன. அப்பா சிவநேசனுக்கு அம்மா என்ன சொன்னாலும் சரிதான். திருப்பிக் கதைத்து சிக்கல்களை மேலும் ஏன் பெருப்பித்துக் கொள்ளுவான் என்று நினைத்தோ என்னவோ அவர் இரண்டொரு வார்த்தைகளோடு முடித்துக் கொள்ளுவார்.

சாரங்கனுக்கு நாட்டை நோக்கிய தன் குடும்பத்தினரின் பயணம் பிடிக்கவேயில்லை. இங்கேயிருந்து போய் இவ்வளவு பணத்தைக் கொட்டி, அங்கேயுள்ளவர்களின் ஏக்கப் பார்வைகளை சகிக்கும் தன்மை தனக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்டிருந்தான். அம்மாவின்  முரண்நிலை ஆச்சரியமூட்டியது.  

அம்மா பட்டியலில் பொருட்களை சேர்த்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் சாரங்கன், "ஜெனிவாவுக்குப் போறதுக்கு டிக்கெட் எடுக்க வேணும், எல்லாருமாப் போனால் நல்லது" என்றான். அம்மா நெருப்பை மிதித்த மாதிரி துடித்தெழுந்தாள். கோபத்தில் வார்த்தைகள் வராமல் ஒரு கணம் வாயடைத்து பிறகு "இஞ்ச வாங்கோப்பா! உங்கட மகன் என்ன சொல்லுறான் எண்டு கேழுங்கோ! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு பிரயாணத்துக்கு ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கிறன் இவன் ஜெனிவாவுக்குப் போகப் போறானாம். இதுகளால எப்பிடியெல்லாம் சிக்கல்கள் வரும் தெரியுமே? நீ தெரிஞ்சுதான்  கதைக்கிறியா? நாங்களே ஒருத்தருக்கும் சொல்லாமல் போயிட்டுச் சத்தம் போடாமல் திரும்பி வந்திடுவோம் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறம்; இதுக்குள்ளை நீ உந்த இடங்களுக்குப் போய் போட்டோக்களில ஏதாவது மாட்டுப் பட்டால் பிறகு என்ன நடக்கும் எண்டே தெரியாது. இப்ப உனக்கு என்னத்துக்கு இதுகளெல்லாம்? என்று கத்தினாள்.

"அப்ப அங்க பிரச்சனை இருக்கு எண்டு நீங்களே சொல்லுறீங்கள்; அப்ப ஏன் அவ்வளவு சிரமப்பட்டு அங்க போக நினைக்கிறீங்கள்? நீங்கள் கேக்கிற மாதிரி நாங்கள் நாட்டுக்கு வாறம், அதுக்கு முதல் இப்ப ஜெனிவாவுக்குப்  போவோம். நாட்டுக்குப் போய்  சந்தோஷமா ஒரு மாதத்தில இருபத்தையாயிரம் ஈரோ செலவழிச்சு கொண்டாட்டம் நடத்தி விட்டு வாறதுக்கு நீங்கள் சரி எண்டுறீங்கள் ஆனால் பக்கத்தில இருக்கிற ஜெனிவாவுக்குப் போய் எங்கடை பிரச்னையை விளங்கப் படுத்தி விட்டு வாறதுக்கு உங்களுக்குச்  சோம்பலாயிருக்குது. செத்துப் போன பிள்ளைகளில நாங்களும் இருந்திருந்தால் இப்பிடிக் கதைப்பீங்களே? 

காணாமல் போன ஆக்கள் ஆரோ, கற்பழிக்கப் பட்ட பெம்பிளைப் பிள்ளையள்  உங்கடை உறவுகள் இல்லை, செத்துப் போன ஆக்கள் உங்கட சொந்தங்கள் இல்லை. இதுகள் எல்லாத்தையும் மறந்த மாதிரி இப்ப நீங்கள் கொண்டாட்டம் அங்கை செய்யப் போறீங்கள், இதுக்கு நாங்கள் ஒத்து வர வேணும் எண்டு நினைக்கிறீங்கள்.

நீங்கள் எல்லாரும் வாறதெண்டால் வாங்கோ இல்லாட்டால் நான் தனிய மற்ற ஆக்களோடை சேந்து போறன். ஆனால் நீங்கள் நினைக்காதயுங்கோ நான் நாட்டுக்கு உங்களோடை சேந்து வருவன் எண்டு". 

எதுவுமே பேசாது இருந்த அப்பா உள்ளே போய்த் திரும்பி வந்து மகனுடைய கையைப் பிடித்து காசைக் கைக்குள் வைத்தார். அவனுடைய தோளைத் தட்டியபடி " நாலு டிக்கெட் பதிவு செய்திட்டு வா" என்றார்.



செவ்வாய், 12 மார்ச், 2013

இழப்பிலிருந்து....


கோடை இலைகள் நிறம்மாறி
மஞ்சளாய்  செந்நிறமாய்
தன் இருப்பிடம் கழன்று 
ஒவ்வொன்றாய் வீழ்வதிலிருந்து  
உடம்பை ஊடறுக்கும் காற்று 
மாற்றம் அறிவிக்கிறது 
வீழ்ந்தவைகள் மிதிபடுவதை
கவனிப்பார் அநேகரில்லை 
சில்லிடும் குளிர் நிலமும் 
வெண்பனி  மூடல்களும் 
அவற்றுக்குத் துன்பமில்லை 
தன்னிலை இழந்து 
மண்ணோடு மக்குவதில் 
சிரமமேதுமில்லை 
அதிலிருந்து ஒரு செடி முளைத்து 
மணம் வீசும் மலர் 
முகர்ந்து வியக்கையில் 
நிறைவடைந்து மகிழும்போது 
வசந்தத்தின் மரங்கள் 
துளிர்விடத் தொடங்குகின்றன 

வி.அல்விற்.
12.03.2013.

வெள்ளி, 8 மார்ச், 2013

படைப்பாளிகள் நாங்கள்



தாய்மை எங்கள் இயற்கை வரம் 
தேடாமல் வாங்கி வந்த வரம் 
இதுவொ ன்றுக்கே தலை சாய்த்து 
வணங்குகிற துலகம் 
அன்புக்கும் பாசத்துக்கும் 
அணையில்லா நேசத்துக்கும் 
பொறுப்பாளிகள் நாங்கள் 
அமைதிக்கு இலக்கணம் 
பொறுமைக்கு மாதிரிகள்
மென்மைக்கு மேன்மைகள் 
பொறிக்கப்பட்ட அடையாளங்கள்
எழுதப்படாத விதிகளின் கீழ்
பன்முகமாய் விசாலப்படுகிறது
உலக முதல் படைப்பாளிகள் நாங்கள்
எங்கள் வலிகளுக்கும் படைப்புக்கும்
விலை பேச முடியாத அகங்காரிகள்
ஆண் பெண் படைப்பினத்தின்
உலக முதற் போராளிகள்
சினந்தெழும் வீரர்களின்
சிதைவுகள் தடுக்கும் மந்திரிகள்
பொய்மைகளை அழிப்பதில்
பெருஞ்சூறாவளி
அமைதிக்காய் அடங்குவதில்
அடிமையாய் அடங்காமையில்
அச்சமூட்டும் எரிமலைகள்
இயலாமை இழிசெயல் உமிழ்வோரில்
கனன்று தீ மூட்டுபவர்கள்
எதுவந்து எமைச் சூழ்ந்திடினும்
எஃகுவாய் நிற்பவர்கள்
உடலத்தின் பலவீனம்
மலினப்படுத்தப் படும்போது
உங்கள் அவமான
முகமூடிகள் கிழித்தெறிந்து
சிரிக்கும் குறியீடுகள் நாங்கள்
உங்கள் மதிப்பீடுகளில் மதிப்பிழந்து
உணர்வுகள் மதிக்கப்படப் போராடும்
உலகத் தனி யினம் நாங்கள்
பெருமழையாய் பெய்து 

காட்டாறாய் ஓடி
கடலிடம் கலக்கையில்
எங்கள் பெயர்கள்
வரையப் பட்டுக் கொண்டேயிருக்கும் 

செவ்வாய், 5 மார்ச், 2013

பாட்டன் வழி நிலம் வேண்டும்

முற்றத்து வெளியில் விளையாடி முடித்து 
முல்லை நுகர்ந்தபடி மயங்கியிருக்கும் அந்தியிலே 
முப்பாட்டன் கதைகள் கண்ணகல 
முத்து முத்தாய்க் கேட்டிட வேண்டும் 

பட்டான மணற் பரப்பு அப்படியே வேண்டும்
படர்ந்தோடக் கால்கள் அதில் பதிய வேண்டும்
சுட்டெரிப்பில் நெற்றி துளிர்க்க வேண்டும்
தொட மறந்த தென்றலும் தொட்டுச் செல்ல வேண்டும்

தென்னையி ளஞ்ச்சாறு தேனாய்ப் பருகிட வேண்டும்
தொன்மைக் கற்பகம் தரணியில் பரப்பிட வேண்டும்
தொன்று தொட்ட வைத்தியம் பயிலல் வேண்டும்
தொலையாமல் இயற்கை காத்திடல் வேண்டும்

தெள்ளிய நீர் துலாவி லிறைக்க வேண்டும்
தெவிட்டாத சத்துணவு ஆக்க வேண்டும்
தெருவெல்லாம் விழாக் காண வேண்டுமதில்
தேன்தமிழ் துள்ளிக் குதிக்க வேண்டும்

கனவு விருட்சங்கள் புரிந்திட வேண்டும்
வன வாசம் சென்றவர் நினைவுகள் வேண்டும்
மனமுருகி கண்ணீர் சொரிந்திட வேண்டும்
மறத் தமிழர் வீரம் பேசி வாழ்த்திட வேண்டும்

போகாத தெரு வெங்கும் புகுந்துவர வேண்டும்
புதுமை ஏதும் புகுத்தும் வழி தேடல் வேண்டும்
பேசாப் பொருள் அலசிப் பார்க்க வேண்டும்
பண்டைத் தமிழ் செல்வம் பெருக்க வேண்டும்

கண்டறிந்த அறிவதனைப் புகுத்த வேண்டும்
கடுகதியில் கனவுகள் பெருக்க வேண்டும்
எங்கணுமே ஏற்றம் காணல் வேண்டும்
எதிலுமே வெற்றியே தோன்றல் வேண்டும்

கேள்விகள் வெளியிடை வைத்தல் வேண்டும்
நேர்பட நின்று பேசிடல் வேண்டும் எம் சந்ததி
செந்தமிழில் செங்கனலாய் முழங்க வேண்டும்
செயலிடை வைக்கவோ மூதாதையர் நிலம் வேண்டும்
சொந்தப் பாட்டன் வழி நிலம் வேண்டும்