ஞாயிறு, 23 ஜூன், 2013

இல்லாத அப்பா!

அப்பா!
என் மௌனங்களுக்குள் உலா வருபவர் 
என் தயக்கங்களுக்கு காரணி 
என் இயலாமைகளின் மூலதாரி
இல்லாத அப்பாவுக்காய் 
எனக்கு மட்டும் ஏன் இல்லை யென  
கரைந்தழுத இரவுகள் 
கரையாமல் நினைவில் இன்றும் 
பள்ளிக்குக் கூட்டிச் செல்ல இல்லாத அப்பா 
பாடம் சொல்லித் தர இல்லாத அப்பா 
கைபிடித்து ஊர் காட்ட இல்லாத அப்பா 
கதை ஏதும் சொல்ல இல்லாத அப்பா 
தூக்கித் தோளில் வைக்க இல்லாத அப்பா 
முத்தமிட்டு மகிழ இல்லாத அப்பா 
என் கதை கேட்டுப் பதில்தர இல்லாத அப்பா 
என் தேவையறிய இல்லாத அப்பா 
கனவுகளில் கூட காண முடியா அப்பா 
நினைவுகளில் கலங்கலாய் 
அங்கொன்று  இங்கொன்றாய் 
அடையாளம் காண முடியாமல் 
அப்பாவின் இல்லாமையின் அதீதத் துணிச்சல்
காலத்துடன் கலந்து
என்னை வளர்த்து விட்டிருக்கிறது 
இல்லாத அப்பாவுக்காய் எழுத 
என்னிடம் ஏதுமில்லை பதிவுகளாய்....
ஏக்கத்தைத் தவிர 

வி. அல்விற்.
15.06.2013.

ஞாயிறு, 9 ஜூன், 2013

இறகு வாழ்வு

இறகாய்  வாழ்ந்திடு 
கழன்றதும் பறந்திட 

வானம் கேட்டுப் பொழியவில்லை 
பூமி கேட்டதில் நனையவில்லை 
சிலிர்த்ததில் திளைக்கிறதே
குளிர்ந்து தளிர்க்கிறதே 

பகலவன் பரவலில் பரவசம்  
பாதி நாளின் உயிர்த் துடிப்பு  
தண்மதி கிறங்கி உலா வரும் 
மீதி காதலர் கனவுகளில்  

இணையாய்க் குலவும் பட்சிகள் 
கெஞ்ச வைக்கும் தம்மியல்பை 
கொஞ்சிப் பறந் தோடுகையில் 
சுதந்திரம் தனைச் சொல்லிப் போகும் 

மலர் விரிதலில் மென்மை மெலிதாகும்
இலவசக் காற்றில் சுகந்தம் நாசி தொடும்  
வண்ணக் குவியல் கண்களை விரிக்கும் 
இயற்கை விசித்திரம் மூச்சை முட்டும் 

இனிதே வாழ்வென உணர்த்தும் 
எம்மையும் தாங்கிச் சுழலும் பூமியில் 
எனக்கென எதையும் இறுக்கி கொண்டு 
உனக்கே சுமையாய் வாழ்வதேனோ 

இறகாய் வாழ்ந்திடு 
கழன்றதும் பறந்திடலாம்

வி. அல்விற்.
07.06.2013.

மிச்சம்

எப்போதுமே கொண்டாட்டங்களுக்குப் போவதென்றால் பெண்கள் நேரத்தோடேயே ஆண்களுக்கு முன்னர் எழுந்து குளித்து அலங்காரம் செய்யத் தொடக்கி விடுவது வழக்கம். ஆனால் வாசுகிக்கு வெளிக்கிடுவதே ஒரு போராட்டம். எங்கேயாவது போக வேண்டும் என்றாலே மனதிலே சோர்வும் சலிப்பும் சேர்ந்து வந்து அலைக்கழிக்கும். அத்தோடு பிள்ளைகள் மூவர். மூத்தவளுக்கு எட்டு வயது, இரண்டாவது மகளுக்கு ஆறு வயது, கடைசி ஆண் குழந்தை இரண்டு வயது. எப்போதும் அப்பாவோடு தொங்கிக் கொண்டிருப்பான். கணவன் ஒரு வரமாய் அமைந்ததில் அவளுக்கு மிகப் பெரிய ஆறுதல். முடிந்தவரை அவளுக்கு ஆறுதலாயிருந்தான்.
கட்டிலில் இருந்து கீழே இறங்கி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சில நிமிடங்கள் எடுத்தன. குளியலறைக்குள் சென்று உள்ளே ஏறுவதற்கு கணவன் பாபுவின் உதவி தேவைப்பட்டது. அவர்கள் வீடு தேடிய காலத்தில் குளியல் தொட்டி இல்லாத குளியலறை வசதி கொண்ட வீடாகத் தேடிப் பெற வேண்டிய அவசியம் இருந்தது. வாசுகியின் அன்றாட சிக்கல்களில் ஒன்றாக அதுவும் இருந்தது. குளித்து முடித்து சுவரைப் பிடித்த படியே சமையலறைக்குள் வந்து தேநீர் தயாரிப்பதற்குள் களைப்பு வந்தது. என்ன ஒரு வாழ்க்கை என்று வெறுப்பு வந்தது. இளம் வயதிலே மாமரங்களிலே தாவியேறி கால்களைக் கிளைகளுக்குள் பொறுப்பாக மாட்டிக் கொண்டு தலைகீழாகத் தொங்கி விளையாடியதும், அதைக் கண்ட அம்மா " பெம்பிளைப் பிள்ளை இப்பிடியே தலைகீழாகத் தொங்குறது" என்று தடி எடுத்துக் கொண்டு அடிக்கத் துரத்த, தான் சிட்டாய்ப் பிடிபடாமல் பறந்ததும் வழமை போல் ஞாபகத்துக்கு வந்தது. மீட்க முடியாத காலங்களை நினைவுகள் கிளறி வலியேற்படுத்தின. தவிர்க்க நினைத்தாலும் கண்முன்னே படமாய் ஓடி கலங்க வைக்கின்ற பொல்லாத நினைவுகள். இனிமையாகவே இருந்திருக்கவேண்டிய நினைவுகள் தற்போது பெரு வேதனையை ஏற்படுத்துமளவுக்கு வாழ்க்கை மாறிப் போய் விட்டது. 
அப்படியே கதிரையில் இருந்து தேநீரை குடித்து முடிக்கவும், பிள்ளைகள் ஒவ்வொருவராய் வந்து சேர எல்லோருக்கும் காலை உணவை கொடுத்து தானும் இரண்டு துண்டுப் பாணோடு தனது சாப்பாட்டை முடித்துக் கொண்டாள். 
மேசையை அழுத்தி ஊன்றிப் பிடித்துக் கொண்டு எழுந்து மேசையை ஒதுக்கி பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு மெதுவாக அறைக்குள் வந்து கட்டிலில் இருந்து கொண்டு பிள்ளைகளைக் கூப்பிட்டாள். முதல் நாளே ஆயத்தப் படுத்தி வைத்திருந்த உடுப்புக்களை ஒவ்வொருவருக்கும் அணிவிக்க, மூத்தவள் தானே தனது ஆடைகளை அணிந்து தலையும் வாரிக் கொண்டாள். அவளுக்கு எட்டு வயதே ஆனாலும் தாயின் நிலைமையைப் புரிந்து கொள்ளக் கூடியவளாயிருந்ததால் மறுப்பின்றித் தன்னால் இயன்ற உதவிகளை செய்து கொடுப்பாள். வாசுகி பிள்ளைகளை வெளிக்கிடுத்தி முடித்து விட்டு தான் சேலையைக் கட்டத் தொடங்கினாள். 
பாவாடையைக் கட்டி கண்ணாடி பார்த்துச் சேலையைக் கட்டத் தொடங்க, சிந்தனைகள் பெருமூச்சாய் வெளியேறியது. படிக்கும் காலத்தில் இரட்டைப் பின்னல் போட்டு அதிலொன்றை முன்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்து பாடசாலையைக் கலக்கிய பேரழகி. படிப்பிலாகட்டும் விளையாட்டுக்களிலாகட்டும் முன்னின்றவள். வேகமாய் செயல்படக் கூடியவள். ஆனால் இன்றைக்கு எந்த விதமான உடற்பயிற்சியும் இல்லாததால் அந்த மெல்லிடை பெருத்து ஊதிப் போயிருந்தது. எல்லாச் செயல்களுமே ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. மனதின் வேகத்திற்கு உடல் இழுபட மறுத்து வேதனையூட்டின.
"என்னப்பா இன்னும் கட்டி முடியேல்லையா?" கேட்டபடி உள்ளே வந்த பாபுவுக்கு அவள் கண்களில் கடந்த காலத்துள் ஆழ்ந்திருந்தமை புரிந்தது. அவள் " முடிஞ்சுது, இந்த ஊசியைக் குத்தி விடுங்கோ" என்று சேலையின் தலைப்பை எடுத்துக் கொடுத்தாள். அவன் பேசாமல் ஊசியைக் குத்தி விட்டு, "முன்னாலை மடிப்பு கொஞ்சம் நீண்டிட்டுது போல இருக்குது" என்றான். அவள் குனிந்து பார்த்து விட்டு மடிப்புக்களை மீண்டும் வெளியே எடுத்து கொஞ்சம் கூடுதலாக உள்ளே செருகி விட்டு "இப்ப சரியோ" என்றாள். அவன் ஓம் என்னுமாப்போல் தலையசைத்தான்.
பாபு பிள்ளைகளை சிற்றுந்துள் ஏற்றி விட வாசுகியும் வந்து ஏறிக் கொண்டாள். அவர்கள் இன்று போக வேண்டிய கொண்டாட்டத்துக்குரிய இடம் வீட்டிலிருந்து நானூறு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. எனவே வழிப் பயணத்துக்கென்று மேலதிகமான பொருட்களையும் மாற்றுடுப்புக்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருந்தது.  குறைந்தது மூன்று மணி நேரப் பயணம்; குழந்தைகள் இடையில் நிறுத்தச் சொன்னால் இன்னும் பயணம் நீழும். நிகழ்வு நேரம் பதினொன்றரை மணியாயிருக்க, இவர்கள் காலை ஒன்பது  மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு  இடையில் இரண்டு முறை நிறுத்தி அங்கே போய்ச் சேர ஒன்றரை மணியாகியிருந்தது. இவர்கள் போன நேரம் ஆராத்தி எடுத்துக் கொண்டிருந்தனர் பெண்கள் பட்டுக்களுடன்.  இவர்கள் ஒரு இடம்தேடி அமர்ந்து கொள்ள, இவர்களைப் பார்த்து விட்டு உறவினர் ஒருவர்  குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தார். 

கொண்டாட்டக்காரர்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர். காரணத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒரு சின்ன நூலுக்காக நாலு பேர் தனியாக ஓடித் திரிவார்கள்; பத்திரமாக இருக்கும் ஒரு மாலையைத் தூக்கி வர ஐந்து பேர் ஓடுவார்கள்; அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பலகாரப் பெட்டியைத் தூக்கி வர இரண்டு பேர் மூன்று பேரை அனுப்புவார்கள். இப்படியே கொண்டாட்டம் முடியும் மட்டும் பயங்கர வேகத்தில் சுழலுவார்கள். வாசுகி சுற்றிலும் பார்த்து விட்டு, முகத்தில் சிரிப்பு மாறாமல் தெரிந்தவர்களோடு பேசினாள். சிலர் இவர்களைக் கண்டு விட்டுக் கிட்டே வந்து பேசி விட்டுப் போனார்கள். வாசுகிக்கு கொண்டாட்டம் முடிந்து இந்தச் சேலையை மாற்றி இலகுவான ஒரு சுடிதாருக்குள் எப்போது மாறுவோம் என்றிருந்தது. உணவு பரிமாறத் தொடங்கினார்கள். 
பூப்புனித நீராட்டு விழா நாயகி இப்போது ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள்.
உணவு முடிந்த கையோடு குலுக்கிச் சீறிய ஷம்பெயின் வழிதலோடு ( இந்த ஷம்பெயின் கலாச்சாரம் மட்டும் இன்னும் எனக்குப் பிடிபடவில்லை) கேக் வெட்டுதல் அட்டகாசமாக நடந்தது. பெற்றவர்கள் சகோதர சகோதரிகள் பிள்ளைக்கு மாறி மாறிக் கேக்கை ஊட்ட கொண்டாட்டத்துக்கு வந்தவர்கள் வரிசை கட்டத் தொடங்கினர். பாபுவும் வாசுகியும் வரிசையின் நீளம் குறையுமட்டும் காத்திருந்து பொறுமையாக சென்றனர். மேடை கொஞ்சம் உயரமாக இருந்தது. கைத்தாங்கலாய்ப் பிடித்து மேலேற்றி விட்டான். சுற்றியிருந்தவர்கள் உன்னிப்பாய்க் கவனிப்பது போலிருந்தது வாசுகிக்கு. பிள்ளையின் கையில் பணத்தை வைத்து விட்டு படமும் எடுத்து விட்டு கீழே இறங்குவதற்குள் ஒரு யுகம் முடிந்தது அவளுக்குள். 
இறுக்கிக் கட்டிய பாவாடையும் காலுக்குள் தடக்கும் சேலையும் ஏற்படுத்திய இடைஞ்சலும் வலியும் தீர உடனேயே உடை மாற்றும் பகுதிக்கு வந்து மாற்றத் தொடங்கினாள். இரண்டு பெண்பிள்ளைகளும் தாய்க்கு அருகில் வந்தனர். வாசுகி சேலையைக் கழற்றி விட்டு மேலே ஒரு கொஞ்சம் பெரிதான அங்கியைப் போட்டுக் கொண்டு சுவரை பிடித்துக் கொண்டு நிலத்திலே இருந்தாள். மேல் சுடிதாருக்கான காற்சட்டையை எடுத்து ஒரு காலை மடித்து உள் நுழைத்துக் கொண்டு, மடிக்க முடியாத மற்றக் காலுக்குள் இருந்தபடியே கைகளால் மறு பகுதியை இழுத்துக் கொள்ள கடினமாக இருந்தது. மகளைக் கூப்பிட்டாள்.  காற்சட்டையின் காற்பகுதி 
காலணிக்குள்ளால் வர மறுத்தது. அந்தச் சின்னக் கைகள் அம்மாவின் காலணிக்குள்ளிருந்து காற்சட்டையை விடுவிக்கப் போராடிக் களைத்தன. "வருதில்லையம்மா"... வாசுகி இருந்தபடியே கைகளால் காற்சட்டையை இழுத்தாள். வர மறுத்தது. மீண்டும் மகளிடம் "நல்லா இழுத்து விடம்மா" என்றாள். மகள் மீண்டும் முயற்சிக்க, காற்பகுதியில் இருந்த தெறி தெறிக்க, காற்சட்டைக்குள் வாசுகிக்கு மிச்சமாகக் கிடைத்த தொடைக்குக் கீழ் பொருத்தப் பட்டிருந்த பொய்க் கால் பொருந்திக் கொண்டது. மகள் அம்மாவைப் பார்த்து "அம்மா சரியாம்மா" என்றாள். வாசுகி சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்று ஆடைகளைச் சரிப் படுத்தினாள்.

வி.அல்விற்.
05.06.2013.