சனி, 24 மே, 2014

கொடு நிலை

அடிமுதல் வேரென ஆழமாய்
பிடி கொண்டவோர் சேனை காண் 
கடிநிலை பேதமை விழிகளில்
கொடு வதை கரித்தங் காடுதே

மடி கனல் கொளும் செந்நீர்க்களம்
இடியென சிரங்களில் இறங்குதே 
முடியங் கிறக்கும் வரைதனில் 
முடிகலை விதைகள் வீழ்ந்ததோ

"படி"யென உடலங்கள் பாடமாய்
வெடி கொண்டு வீழ்த்த சாய்ந்ததோ
கொடி கொண்டாங்கு நிமிர்ந்தவர்
உடுக்கைக்குக் கைகளும் இழந்தனரோ

முடியாண்ட வரலாறு முடியுமோ
குடியாளும் நிலைமை மீழுமோ
கடிறு போல மீண்டும் நிமிருமோ
விடை யளி காலம் ஊருதே- நம்
கொடு நிலை மூடிக் கொல்லுதே!

வி.அல்விற்.
24.05.2014.

காதைகளின் காலங்கள்

இறந்தகால உயிர்ப்பித்தலின்றி 
நிகழ்கால புதுப்பித்தலின்றி 
வருங்கால ஒழுக்காறின்றி 
எதிர்கால சுகவாச சுயநலமிகளின்
சதிராடும் சகவாசச் சில்லறைகளில் 
இருண்டே கிடக்கிறன 
கருவழிந்த காதைகளின்
பெரு விருப்புக் காலங்கள்.

வி.அல்விற்.
23.05.2014.

Photo : இறந்தகால உயிர்ப்பித்தலின்றி   
நிகழ்கால புதுப்பித்தலின்றி 
வருங்கால ஒழுக்காறின்றி 
எதிர்கால சுகவாச சுயநலமிகளின்
சதிராடும் சகவாசச் சில்லறைகளில்  
இருண்டே கிடக்கிறன 
கருவழிந்த காதைகளின் 
பெரு விருப்புக் காலங்கள்.  

வி.அல்விற்.
23.05.2014.
பூக்களின் வருகை பார்த்திருந்து
ரீங்காரித்தபடியே
ருசித்துச் சேர்த்துக் கொண்டிருக்கிறன
அதியுச்ச பலத்துடன்
கூடுகள் கலைக்கப்படும்
சடுநிலை மறந்தபடியே. 

வி.அல்விற்.
23.05.2014.

வரம்

வானுக்கு ஏணி வைத்து நிலவுடைத்து 
முகிலிடையே ஆங்காங்கே 
ஒளி செருகிச் சிதறவிடும் 
சாகசம் கைகளில் தந்து விடு

சூரியனுக்கு வலை வீசி கட்டியிழுத்து 
பனிக்குவியலின்மேல் படுக்க வைத்து 
காலத்தைக் கலைத்து விடும் 
திறமையைக் கொடுத்துவிடு

வீணிற்கும் மானிடர் கொள்
மூச்சனைத்தும் நிறுத்திவிடும்
வரம் ஒன்று கொடுத்திடு
முடிவிலிப் பிரதாப வலிகளை
அடி கொண்டு தகர்த்து விட.

வி.அல்விற்.
21.05.2014.

பண்ணிழந்த பறவைகள்

பண்ணிழந்த பறவைகள்

இன்னும் ஒட்டியிருக்கும் 
ஈரலிப்பின் குளிர்மையில் 
கிளைகளில் இளைப்பாற 
வருவதும் போவதுமாய் 
மௌனக் குருவிகள்

வலசப் பறவைகளின் 
ஆச்சரியங்கள் 
தலை திருப்ப வைக்கவில்லை

மிச்சமிருக்கும் உயிருக்காய்
தாழப் பறந்து கொண்டிருக்கின்றன
உணவுதேடிக் கொண்டே

இடையிடையில் மூக்குரசும்
ஓசைகள் கூட
தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே

கல்லெறியும் குழந்தைகளும்
காலனாகத் தெரிவதில்
தெறித்துப் பறக்கின்றன
மிரண்டுபோய்

உரையாட எழுப்பும்
ஓசைகளின் அழைப்புக் கூட
பதிவுகளை மீளெழுப்புவதில்
அவலமாய் கலைந்தோடுகின்றன

செவிப்பறை கிழித்த வீச்சுக்களையும்
ஒப்பாரிகளின் சோகத்தையும்
மூளை நிரப்பிக் கொண்டதில்
தம் பண் மறந்து வெறுமனேயாகி
சுற்றிக் கொண்டேயிருக்கின்றன

வட்டமிடும் வான்பரப்பும்
கொத்திக் கிளறிய நிலப்பரப்பும்
கொலுவேற்றும் சிறு நம்பிக்கையுடன்.

வி.அல்விற்.
16.05.2014.

செவ்வாய், 13 மே, 2014

என் விருப்பம்!!

என் விருப்பம்!!

மறுத்த கணங்கள் அத்தனையும் 
என் இருப்புக்கான குழியை 
நானே வெட்டிக் கொண்டதாகிப் போயின

எனக்கு நானே 
விடுகதையைப் போட்டுக் கொண்டேன் 
விடுவிக்க முடியாதவைகளாய்

பெரும்புதிராகி விருட்சமாகையில்
கோபமும் வெறுப்புமே
கனிந்து குலுங்கின ருசிக்க முடியாதபடி

அறிந்திருந்தவை அனைத்துமே
வெளிச்சத்தில்
பொசுங்கிப் போயின தடயமின்றி

உள்ளதும் இல்லாததுமாய்
நானேயாகியதில்
நாளை வெட்டிய குழிக்குள்
என்னைக் கிடத்திக் கொள்கையில்
மூடப்படுவேன் கேட்க விரும்பாத
சைகைகளால்

நான் கேட்க விரும்பியவையோ
காற்றிலே அலைந்து கொண்டிருக்கும்
இன்னோர் இடம் தேடி
முற்றுப் பெறுவதற்காய்.

வி.அல்விற்.
12.05.2014.

திங்கள், 12 மே, 2014

கால விருப்பு.

கால விருப்பு.

விழுதுகள் இன்னும் 
தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன
தன்னிச்சையாய் 
ஆடுவதற்கும் ஆளின்றி

ஆலமரத்தின் அடியில்
பஞ்சாயத்துப் பேச எவருமில்லை
நிழல் தரும் குளிர்மையத் 
தேடுவாருமில்லை

மழை பொய்த்த அனலும்
தெருவிறைத்த புழுதியுமாய்
மூடக் கிடக்கின்றது மரம்

உதிர்ந்த இலைகளின் இழப்பில்
உரம் சேகரிக்க தூரவிருந்து பயணிகள்
வந்து போகின்றார்கள்

பண்ணிசைக்கும் பட்சிகளின்
தனிமை கலைக்கும் சுகத்தை
சுகிக்க மனமின்றி
தன்னோடு பேசுகின்றது
பொய்த்த மழை பொழியும்
காலவிருப்பில்.

வி.அல்விற்.
09.05.2014.

புதன், 7 மே, 2014

மௌனம்.

ஏதேனும் ஒரு வார்த்தை சொல் 
ஆறுதல் பரிசு போலாவது 
உன் வார்த்தைகளில் பதில் தேடுகின்றேன் 
விருப்புக்களின் மொழியாகத்தான் என்றில்லை 
வெறுப்புக்களின் வடிகாலாகவும் இருக்கக் கூடும் 
உன்னைப் புரிந்து கொள்ளவும் 
என்னை அறிந்து கொள்ளவும் 
நீயோ கடலுள் கிடக்கும் பாறைக்கல்லாய் 
இறுகிக் கிடக்கிறாய் 
ஆழப் புதைத்துக் கொண்டு 
கண்டுபிடி என்கின்றாய்
மூடப்பட்ட வழிகளைத் திறக்கும் வழி
எனக்குத் தெரியவில்லை
இழுத்துச் சாத்திவிடும்
ஒவ்வொரு கதவுகளுக்குப் பின்னாலும்
உன்னை மறைத்துக் கொள்ளுகின்றாய்
நிறமற்ற மௌனத்தால்
எதையோ உணர்த்துகின்றாய்
"முடியாது" என்பதே அதுவாயின்
நீயும் நானும் இங்கே தோற்று விடுவோம்
மௌனங்கள் சிலவேளை கருத்தொடுப்பதுண்டு
ஆனாலும்
நம்மை அது முழுமையாக
விழுங்காதிருக்க வேண்டும்.

வி.அல்விற்.
05.05.2014.

ஆத்மா இழந்தவர்கள்.

மூச்செடுக்க முடியாது 
இவர்கள் திணறுவது 
அவர்களுக்கு வலிக்கவேயில்லை
மாறாகப் புன்னகைக்கின்றனர் 
கருமத்திலே குறியாயிருந்து 
முடிந்தவரை சுருட்டிக் கொள்ளுகின்றனர் 
சட்டை கிழிந்து தொங்குபவனிடமும் 
வியர்வையின் மணமும் 
பனிக் குளிரின் ஊடுருவலும் 
கைமாறப்படுகின்றன 
மீண்டும் இவர்களுக்காக
ஊதிப் பெருத்துக் கொண்டே போகின்றன
அவர்களின் கையிருப்புக்கள்
அவர்களின் சிரிப்பொலி
ஆணவத்துடன் எதிரொலிக்கிறது
முன்னை விட அதிகமாக
நிறங்கள் மாறிப்போன
ஆத்மா இழந்த
இவர்களின் சடலங்கள்
புலம் பெயருகின்றன
தலைகளைக் கையிலேந்தி.

வி.அல்விற்.
02.05.2014.

என் சந்ததி

என் சந்ததி.

இலைதுளிர்காலத்து நம்பிக்கையில் 
இலையுதிர்காலத்தில் பழுத்துதிர்ந்து 
குளிர் போர்த்தி உறைந்து நிற்கும் 
மொட்டை மரத்தின் கீழுள்ள வேர்களைப் போல 
நினைவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறேன் 
என் சந்ததிக்காய் 
என் வாய் மொழியும் எழுத்துக்களும் 
மழுங்கியிருக்கலாகாது 
ஒவ்வொரு வார்த்தைகளும்
சாணை பிடிக்கப்பட்டிருத்தல்
கண்டிப்பான நியதிகளில் ஒன்று
என் குழந்தை என்னைப்போல
இருக்கவே மாட்டான்
அவனுக்கான சிந்தனைகளும் தனித்துவங்களும்
அவனுடைய ஆழுமையை அறிவிக்கும்
ஆனால் அதற்குள்
நான் கொடுத்தவைகள் மெருகேற்றப்பட்டிருக்கும்
இயல்பாகவே.

வி.அல்விற்.
01.05.2014.