சனி, 24 மே, 2014

பண்ணிழந்த பறவைகள்

பண்ணிழந்த பறவைகள்

இன்னும் ஒட்டியிருக்கும் 
ஈரலிப்பின் குளிர்மையில் 
கிளைகளில் இளைப்பாற 
வருவதும் போவதுமாய் 
மௌனக் குருவிகள்

வலசப் பறவைகளின் 
ஆச்சரியங்கள் 
தலை திருப்ப வைக்கவில்லை

மிச்சமிருக்கும் உயிருக்காய்
தாழப் பறந்து கொண்டிருக்கின்றன
உணவுதேடிக் கொண்டே

இடையிடையில் மூக்குரசும்
ஓசைகள் கூட
தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே

கல்லெறியும் குழந்தைகளும்
காலனாகத் தெரிவதில்
தெறித்துப் பறக்கின்றன
மிரண்டுபோய்

உரையாட எழுப்பும்
ஓசைகளின் அழைப்புக் கூட
பதிவுகளை மீளெழுப்புவதில்
அவலமாய் கலைந்தோடுகின்றன

செவிப்பறை கிழித்த வீச்சுக்களையும்
ஒப்பாரிகளின் சோகத்தையும்
மூளை நிரப்பிக் கொண்டதில்
தம் பண் மறந்து வெறுமனேயாகி
சுற்றிக் கொண்டேயிருக்கின்றன

வட்டமிடும் வான்பரப்பும்
கொத்திக் கிளறிய நிலப்பரப்பும்
கொலுவேற்றும் சிறு நம்பிக்கையுடன்.

வி.அல்விற்.
16.05.2014.

கருத்துகள் இல்லை: