வெள்ளி, 31 ஜனவரி, 2014

என்னுடன் நீ

எப்படித் தொடருகிறாய்?
காதலில் மையலான போது
இளமையிருந்தது இரசித்திருக்க
கோபங்கள் அப்போது
கொஞ்சல்களாயிருந்தன
ஊடல்கள் எல்லாமே
விடியலுக்குள் முடிந்திருந்தன
குற்றங்களின் பார்வைகள் 
ஓருணவு நேரத்துள் களையப்பட்டிருந்தன
என்வீட்டுச் சிக்கல்கள்
உன் வீட்டினதாய்த் தீர்க்கப்பட்டன
உன் வீட்டுச் சிக்கல்கள்
என்வீட்டினதாய்த் தீர்க்கப்பட்டன
காலம் அடித்துப் போடுமோவென்ற கலக்கம்
உள்ளேயே பதுங்கியிருந்தது அப்போது
அனலாய்க் கொதிக்கும் போது
தென்றலாய் தடவுகிறாய் இன்றும்
மனமழுந்தித் தவிக்கும்போது
விடுதலையை வார்க்கிறாய் இன்றும்
உடைந்தழும் வேளைகளில் உலக
உண்மைகளை உணர்த்துகிறாய் இன்றும்
சுமைகளில் கூனும் நேரங்களில்
சுகமாய் சேர்ந்து சுமக்கின்றாய் இன்றும்
சவாலாய்த் தொடங்கிய பயணம்
சமதரையில் பயணிக்கிறது இன்றும்
காலம் புரட்டிப் போடவில்லை
கற்றுத் தந்திருக்கிறது என்றும்
காதலில் வாழும் வாழ்வை.

வி.அல்விற்.
31.01.2014.

முன்னுணர்வு

பார்த்து நடக்கையில் பாதம் நோகாது 
கேட்டு நடக்கையில் குறைகள் வாராது 
சேர்ந்து தூக்குகையில் சுமைகள் தெரியாது  
கூர்ந்து தெளிகையில் குற்றம் தோன்றாது  

வாழ்க்கை

வானவில் வண்ணங்களை 
எண்ணி முடிப்பதற்குள் 
கலைந்து மறைகிறது 
தூங்க விடாத கனவுகள் போல.

கனவுகளை அடுக்கி 
சேர்த்து முடிப்பதற்குள் 
தகர்ந்து போகிறது 
ஷெல் பாய்ந்த வீடுபோல.

வீடு முரணுகளுக்குள் இடிபட்டு  
குறையன்பில் தள்ளாடுகையில் 
வீழ்ந்து போகிறது வாழ்க்கை 
ஆழ் கிணற்றுள் பார்த்து விழுந்தவன் போல

வெள்ளி, 24 ஜனவரி, 2014

தொலைப்பு.


கருவேந்த உனை நாம் தவமிருந்தோம் 
கருவறையில் கவனமாய் சுமந்திருந்தொம் 
கதைகள் பல உள்ளேயே சொல்லி வந்தோம் 
கனவுகளை உன்னோடு சேர்த்தே சுமந்தோம் 
கதறி உயிர் வலித் துடிப்பில் பெற்றெடுத்தோம் 
கையேந்திய பொழுதில் எமை மறந்தோம் 
கண்ணசைவில் உலக அசைவழித்தோம் 
கையசைவில் புவியாளும் உவகை கொண்டோம் 
கைபிடித் தெழுத நீ பெருமை கொண்டோம்
களங்கமின்றிப் பேச நீ பெருமை கொண்டோம்
கண் விழித்து நோயிலே அருகிருந்தோம்
மீண்டுமுனை மடியிலே தாலாட்டினோம்
வளர்ந்து வர தோளோடு தோள் கொடுத்தோம்
வயதறிந்து வாடாது நீ காத்து நின்றோம்
தேவையறிந் தனைத்தும் செய்து வந்தோம்
தேம்பாது அருகிருக்கும் குழந்தை பார்த்து
அறிவிலே சிறந்தோங்க அனைத்தும் செய்தோம்
நூல்கள் பல இரசனைக்கேற்ப குவித்து வைத்தோம்
தினமும் படித்துனக்கு மகிழ வைத்தோம்
உலகத்தைப் படிக்க நீ வகை செய்தோம்
வீரனாய் நீ திகழ வழி செய்தோம் உன்
விளையாட்டை தேர்ந்தெடுக்க விட்டு விட்டோம்
பண்பிலே தேர்ந்தொழுக உடன் நின்றோம்
நற் சான்றோரின் தொடர்புகளை தந்து நின்றோம்
அன்பிலே தோய்ந்தொழுக கூட நின்றோம்
அன்பான குடும்பத்தை உனக்களித்தோம்
சுற்றிலும் உற்று நோக்க சொல்லித் தந்தோம்
சுதந்திரச் சிந்தனைக்கு வித்திட்டோம்
மீழாத துயரத்தில் ஆழ்ந்து நீ போகாது
எக்கணமும் தொடர்ந்தே வந்திருந்தோம்
எக்கணம் எங்கே தவறியது தெரியவில்லை
நிர்க்கதியாய்த் தேடுகின்றோம்
நீ தொலைந்து போனதை.

வி.அல்விற்.
24.01.2014.

கூடும் பறவைகளும்.

இளமை உருகி கரைந்து முடிந்து 
உள்ளம் உடைந்து சிதறல்களாகி
கைகள் இருந்தும் முடமாக்கப்பட்டு 
கண்களால் மட்டும் கவிதை வரைந்து 
கால்கள் இருந்தும் நடை மறந்து 
நாவிருந்தும் அறுக்கப்பட்டு 
மௌன மொழியே அமுலாக்கப்பட்ட 
சுதந்திர தேச வானிலிருந்து உங்கள் 
உண்மைச் சிறகடிப்பைப் பார்க்க முடியுமா 
அல்லது 
ஊனப் பறவைகளாய்த் தத்தி வருவீர்களா
வி.அல்விற்.
22.01.2014.

உதிர்வு.

பூவிதழ்கள் இறந்துதான் உதிர வேண்டும் என்றில்லை 
பிடுங்கிப் போட்டாலும் உதிர்ந்து போகும் 
இரசனை அற்றவர்களால்.

வி.அல்விற்.
22.01.2014.

நீயாயிரு...தீயாயிரு....

வேகமுடன் சீறியெழும் பாம்பின் நஞ்செனக் 
கொல்லும் சீரற்ற வார்த்தைப் பிளம்புகளின் முன்
கருக் கொண்ட சிந்தனை முழுமையுற - உனை   
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய் 

மௌனங்களை பலவீனமாய் உருவகப்படுத்தி 
உன் பார்வைகளின் வீரியத்தை அடக்கும் 
விசித்திர மனிதர் கேலிச் சிரிப்பின் முன் - உனை 
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய் 

கொள்கைக்கு ஆண் பெண் வேறுபாடுண்டோ 
பெற்ற கல்விக்கு அதிலொரு பிரிவுண்டோ
சிந்தனைக்கு இயைவாய் ஆய்ந்தொழுகும் - உனை   
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய் 

ஆணியாய்  அறையும் உண்மை தாங்காது 
ஆணவம் என்று பெயர் வைத்து நசுக்குவர் 
ஆணாகவில்லையெனும் அடாத சொல்லறுக்கும் - உனை 
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய் 

எத்தனை வார்த்தைகளும் உன்னைத் தீயாது
பத்திரமாய் வைத்திரு கனவுகளை உயிருக்குள் 
எத்தனை பெரிய இவ்வையகப் பரப்பிலே -  உனை 
முட்டி மோதி நீயாகக் காட்டிவிடு.

வி.அல்விற்.
20.01.2014.

நிர்வாண ஆடைகள்.

தினமும் உரியப்படும் 
பொய்மை ஆடைகளினால்
அவர்களது நிர்வாணம் மட்டுமே 
என் கண்களுக்குத் தெரிகிறது 

வி.அல்விற்.
20.01.2014.

எழுந்து நில்!

எழுந்து நில்!

சும்மா இருப்பது சுகம் என்றால் 
சும்மா வராது எதுவும் கையில் 
சும்மா இருப்பவனை சுமப்பதற்கு 
சும்மா இருப்பவர்கள் குறைவிங்கே 
சும்மா கிடக்கும் உடலம் கடைசியில் 
சுமப்பதற்கும் நான்கு ஆளில்லாது
சுமந்து பார் வாழ்வை சவாலாக
சுற்றிப் பார் தேடல்களின் முடிவுகளை 
சும்மா இல்லை எதுவும்
சுழன்று கொண்டிருக்கிறது வையகம்
சுயத்தோடு பலதும் தேடி ஓடு
சுற்றி வரும் அனுபவம் பொதிகளாய்
சுருண்டு மட்டும் நின்றிடாதே
சுக்குநூறாக்கும் எதிர்ச்சொல் கண்டு
சுவராய் உன்னை எழுப்பிக் கொள்
சுகமான வாழ்வு நனவாகி விடும்.

வி.அல்விற்.
09.01.2014.

நான் யார்?


அகதிப் பதவியின் அருமை சுகத்தில் 
அறுபட்ட உறவுகளோடு நினைவுகளில் உறவாடும்
எனக்கென்ன வேண்டும்?

அதிகாலைத் தொலைபேசி ஒலிப்புக்களில் 
சொந்தங்களின் உயிர்களைத் தொங்கவிட்டுத் தவித்திருக்கும் 
எனக் கென்ன வேண்டும்?

அம்மாவின் "கவனம் மோனை "யும் 
"ஏலுமெண்டா வா பிள்ளை" யும் சுழன்று வர இயந்திரமான
எனக் கென்ன வேண்டும்?

பாரிஸ் தெருக்களின் அழகு இரசிக்க மறந்து
குசினிகளுள் வியர்த்துக் கொண்டிருக்கும்
எனக் கென்ன வேண்டும்?

குதியை உயர்த்தி நடக்கும் அழகியை இரசிக்க முடியாது
தூசுகளை தட்டி தரைகளை கழுவும்
எனக் கென்ன வேண்டும்?

அதிகாலைக் குளிரில் விறைத்து நடந்து பணிமுடிக்கும்
உழைப்பின் திறனறிந்த தமிழன்
எனக் கென்ன வேண்டும்?

வார இறுதியும் ஓய்ந்திருக்க மறந்து வருங்காலம் யாசிக்கும்
எனக் கென்ன வேண்டும்?

வாரி வழங்கிய கல்வியைக் கையிலெடுத்து வானேறிய
எனக் கென்ன வேண்டும்?

எம் ஆத்மாக்கள் குடியிருந்த இல்லங்களைப்
பிய்த்தெறிந்தவர்கள் கேட்கிறார்கள்
எனக் கென்ன வேண்டும்?

என் இயல்பையும் வாழ்வையும் இயற்கையையும்
பிடுங்கி எறிந்தவர்கள் கேட்கிறார்கள்
எனக் கென்ன வேண்டும்?

பூவையும் காயையும் அதன் காலத்துக்குள்
நசுக்கிப் போட்டவர்கள் கேட்கிறார்கள்
எனக்கென்ன வேண்டும்?

நானாயில்லாத என்னை
ஒரு வட்டத்துள் சுற்ற வைத்தவர்கள் கேட்கிறார்கள்
எனக் கென்ன வேண்டும்?

விசித்திரமான விளையாட்டில்
வெற்றி விமர்சகர்கள் காத்திருந்த ஆனந்தத்தில் கேட்கிறார்கள்
உனக் கென்ன வேண்டும்?

ஆத்மாக்களின் அந்தரிப்பை
அறிந்தும் அறியாதவர்கள் கேட்கிறார்கள்
எனக்கென்ன வேண்டும் என்று.
வி.அல்விற்.
07.01.2014.

தேவை..

சரியான திட்டங்கள் 
சரியானவர்கள் மூலம் 
சரியான முறையில் 
சரி செய்யப்படாவிடின் 
சர்வ வல்லப பராக்கிரமங்கள் 
சந்து பொந்துகளில் புகுந்து 
சாக்கடை நாற்றம் எடுத்து 
சமுதாயம் சகதியாகி விடும் 

வி.அல்விற்.
19.12.2013.

வாழ்க்கை

தூக்கம் துரத்தும் இரவுகள் 
நீண்டு கொண்டே போகின்றன 
மூளையும் மனமும் வேகம் கொண்டும் 
ஏனோ முரண்டு பிடிக்கின்றது மிகுதி 
வேடன் துரத்தும் மானாய் ஒன்றுக்கொன்று 
வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது 
பிடிபடாமலேயே..................

வி. அல்விற்.
19.12.2013.

வணங்குகிறோம்.

கடலாகி கரு முகிலாகி 
இடியாகி கடும் மின்னலோடு 
மழையாகி நிலம் வடிந்தோடும் 
பொருளாகி தமை ஈந்து 
கொடையாகி அறம் நின்று 
தடை நீக்கி குலம் வாழ 
உமை ஆண்ட கோலுக்கு 
அவதார வழிக் கொண்ட 
முத்தமிழ் பெற்றெடுத்த
முடி கொண்ட வீரர்களே 
பெரு மன வெளிப் பரப்பில்
மலையாக்கி உளி கொண்டு
வடித்துள்ளோம் உம் வதனங்களை
வரலாறு நமை ஆளும்
வீழாத நீள் பயணத்தில்
வணங்குகிறோம் மறவாமல் உம்
கனவுகளை நெஞ்சிருத்தி.

வி.அல்விற்.
27.11.2017.

வரம் தா!

முப்பொழுதும் எரிக்கும் இத் தீயிலிருந்து 
எப்பொழுது விடுதலை கிடைக்கும் 
தப்பியும் ஒருகணம் சிரிக்க முயன்றால் 
தப்பென்று மூடி விடும் சோகங்கள் 
இப்பொழுதே எனக்கொரு வரம்தா 
இப்பிறவி வாராதென்று என்றும்....

30.01.2013.

நம்பிக்கை.

கனவுகளின் நீட்சி துண்டுபடாது 
படர்ந்து கொண்டே போகின்றது கொடியாய் 
துளிர்களின் ஒவ்வொரு பிறப்பிலும் 
நம்பிக்கை மூச்சுப் பிடித்து நிற்கின்றது 
கொடி பட்டு விடாதிருக்கும் வேண்டுதலுடன். 

வி.அல்விற்.
02.12.2013.