வேகமுடன் சீறியெழும் பாம்பின் நஞ்செனக்
கொல்லும் சீரற்ற வார்த்தைப் பிளம்புகளின் முன்
கருக் கொண்ட சிந்தனை முழுமையுற - உனை
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய்
மௌனங்களை பலவீனமாய் உருவகப்படுத்தி
உன் பார்வைகளின் வீரியத்தை அடக்கும்
விசித்திர மனிதர் கேலிச் சிரிப்பின் முன் - உனை
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய்
கொள்கைக்கு ஆண் பெண் வேறுபாடுண்டோ
பெற்ற கல்விக்கு அதிலொரு பிரிவுண்டோ
சிந்தனைக்கு இயைவாய் ஆய்ந்தொழுகும் - உனை
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய்
ஆணியாய் அறையும் உண்மை தாங்காது
ஆணவம் என்று பெயர் வைத்து நசுக்குவர்
ஆணாகவில்லையெனும் அடாத சொல்லறுக்கும் - உனை
ஏற்கும் சில மனிதருக்காகக் காத்திருக்கிறாய்
எத்தனை வார்த்தைகளும் உன்னைத் தீயாது
பத்திரமாய் வைத்திரு கனவுகளை உயிருக்குள்
எத்தனை பெரிய இவ்வையகப் பரப்பிலே - உனை
முட்டி மோதி நீயாகக் காட்டிவிடு.
வி.அல்விற்.
20.01.2014.
2 கருத்துகள்:
ஆணாகப் பிறந்து மட்டும் என்ன சாதிக்க முடியும் ஆணவக்காரரிடம்... ... ... பிரான்லிருந்து வினைகெட்டு வந்த ஆணவரிடம் எங்கள் ஞாயம் எடுபடவில்லை.
எல்லாவற்றிற்குமே தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
கருத்துரையிடுக