சனி, 26 ஜூலை, 2014

உயிர்ப்பூ தாங்கி......

இழப்பின் வேகம் 
வலியெழுப்பும் இராகம் 
வெறுமனே நிற்பதில்லை 
கற்றுக் கொள்ள 
ஒரு இடைவெளி 
நிதானமாய்க் கிடைக்கிறது 

பற்றிக் கொண்டு 
நிமிர்ந்தெழுந்து 
இல்லாமையில் 
இருப்பைத் தேடும் 
பலம் வருகிறது 

இறந்தும் உயிர்ப்பூ 
தாங்கி நிற்கும் 
இம்மரம்போல. 




Photo : இறந்தும் உயிர்ப்பூ 
தாங்கி நிற்கும்.

வி.அல்விற்.
15.07.2014.

மழைப்போர்வை.


நீ 

சிணுங்கினால் அழகு 



மெல்ல 
முகிழ்நகை பூத்தால் 
கொள்ளை அழகு 

வாய்விட்டு நகைப்பின் 
அதனிலும் அழகு 

மனம் நனைத்து 
நிலம் குளிர்த்தி 
நீர்த்துளிகளை 
சற்றே ஒளியில் கண்சிமிட்ட 
வைக்கும் தேவதையே 

கொஞ்சம் 
நிறுத்திக் கொள்ள மாட்டாயா 

உன் சிணுங்கல் 
கொஞ்சம் அதிகமாகி 
போர்வைக்குள் 
புகை மூட்டத்தை நிரப்பி விடுகிறதே!

Photo : நீ 
சிணுங்கினால் அழகு 

மெல்ல 
முகிழ்நகை பூத்தால் 
கொள்ளை அழகு 

வாய்விட்டு நகைப்பின் 
அதனிலும் அழகு 

மனம் நனைத்து 
நிலம் குளிர்த்தி 
நீர்த்துளிகளை 
சற்றே ஒளியில் கண்சிமிட்ட 
வைக்கும் தேவதையே 

கொஞ்சம் 
நிறுத்திக் கொள்ள மாட்டாயா 

உன் சிணுங்கல் 
கொஞ்சம் அதிகமாகி 
போர்வைக்குள் 
புகை மூட்டத்தை நிரப்பி விடுகிறதே!

வி.அல்விற்.
12.07.2014.
வி.அல்விற்.
12.07.2014.

பொழுதுகள்


பொழுதுகள் 

முன்னர் 
எப்போதும் ஒரு பதில் இருந்தது

மழைக்காலங்களும் 
பனிமூட்டங்களும் 
அடர்ந்திருந்த நேரத்தில் 
நெருங்கியிருந்த பொழுதுகள் 
வார்த்தைகளற்ற பதில்களை 
பசியறிந்தூட்டும் தாயாய் 
அள்ளி வழங்கியிருந்தது 

இப்போதோ 
பதில்களற்ற பொழுதுகள்
அச்சமூட்டுகிறன 

வானம் 
அழுத்தித் துடைக்கப்பட்டிருந்தும் 
முன்னெப்போதும் இருந்ததை விட 
நட்சத்திரங்களை எண்ணுவது 
கடினமாகவேயுள்ளது 
நீயற்ற நேரத்தில்.

வி.அல்விற்.
07.07.2014.

நெஞ்சு நிறைய..


நெஞ்சில் நிறைந்தோர்.

இருட்டிலும் வாழும் 
வரம் தந்து சென்றவர்கள் 
அவர்கள் 

இலக்கு ஒன்றையே 
இதயங்களில் தாங்கி
இறவாப் புகழோடு 
உதிர்ந்து போனவர்கள் 

இடித்துரைக்கும் நாக்களையும் 
இறுக வைத்தொரு கணம் 
தலை சாய்த்தும் 
இறுதிக் கணம் 
சிந்திக்க வைப்பவர்கள் 

இன்றைக்கும் என்றைக்கும் 
ஒளியாகி வழியாகி 
இருட்டிலும் வாழும் 
வரம் தந்து சென்றவர்கள் 
அவர்கள்.

வி. அல்விற்.
05.07.2014.

மீண்டு வருவமோ


இன்னும் 
ஒரு யுகம் கடக்குமோ

எழுந்து வர 
புல்லாய் 
அதிலூரும்
புழுவாய் 
மிதியுண்டு 
அழுந்தும் நிலை...
மீண்டு வருவமோ 



வி.அல்விற்.
03.07.2014.

வார்த்தை

வார்த்தை 

உன் உள்ளிருந்து 
பிறப்பெடுக்கும் 
உன் எண்ணக்குவியல் 

கோர்த்துக் கொள் 
ஒவ்வொன்றாக 
பெறுமதியான முத்துக்களை 
மாலையாய்க் கோர்ப்பதை விட 
அதீத கவனத்தோடு 

வாய்ச் சிலம்பொன்று 
முன்னிருப்பின் 
அது தப்பித்துக் கொள்ளும் 

நினைத்துப் பார் 
ஒட்டமுடியாமல் சிதறும் 
கண்ணாடி ஒன்றில் 
உன் கல்லெறி படின்?

உன் மறுமுகம் கிழிவதும் 
துக்கங்கள் தொடர்வதும் 
வருத்தங்கள் 
குட்டையில் தேங்கிய நீராவதும் 
உன் கையிலேதான்.




வி. அல்விற்.
12.07.2014.

வித்தியாசம்


ஆழ்ந்த சிந்தனைக்குள் 
மூழ்கிப் பார்க்கிறேன் 

எனது சிந்தனைக்கும் 
உனது சிந்தனைக்கும் 
வித்தியாசம் 
ஏதுமில்லை 

நான் உன்னை நினைக்க 
நீயும் உன்னையே 
நினைத்துக் கொண்டிருக்கிறாய்.




Photo : ஆழ்ந்த சிந்தனைக்குள் 
மூழ்கிப் பார்க்கிறேன் 

எனது சிந்தனைக்கும் 
உனது சிந்தனைக்கும் 
வித்தியாசம் 
ஏதுமில்லை 

நான் உன்னை நினைக்க 
நீயும் உன்னையே 
நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

வி.அல்விற்.
15.07.2014.


வி.அல்விற்.

15.07.2014.




வியாழன், 3 ஜூலை, 2014

அன்றறுத்தல்.

அகதி வாழ்வின் சிக்கல்களும் அதனால் எழும் மனவுளைச்சல்களும் சொல்லி மாளாது. நன்றாய் வாழ்ந்த இனமல்லவா தமிழினம்? இக்கதையானது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. "காற்றுவெளி" ஆடி மாத இதழில் வெளியானது.
திரு. முல்லை அமுதன் அவர்களுக்கு நன்றி.

******

"கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல" என்று சொல்லுவார்களே, அப்படி இருந்தது செல்விக்கு வெளிநாட்டு மண்ணை மிதித்தபோது. செல்வியின் அண்ணா பிரான்சுக்கு காசை மூட்டையாகக் கட்டிக் கொடுத்து அவளை இங்கே வரவழைத்திருந்தார்.
அவளுக்கு இங்கே வருவதில் கொஞ்சம் கூட ஆர்வமில்லை ஆரம்பத்தில்.ஆனால் இடப் பெயர்வுகள் சலிக்க வைத்திருந்தன. உள்ளூரிலேயே இடம்பெயர்ந்து, பட்டிக்குள் அடைபட்ட ஆடுகள் போல சுற்றிச் சுற்றி வருவது வெறுப்பைத் தந்து "எப்போது ஊருக்குப் போவோம்?" என்ற கேள்வி மண்டையைக் குடைய அந்தக் கேள்வி நாளாகி, வாரங்களாகி, மாதங்களாய் நீள அதன் சாத்தியமற்ற தன்மை புரிந்து போக, அண்ணாவின் அழைப்பை ஏற்பதே மேலென்று எண்ணி வெளிநாட்டு மண்ணை மிதிக்க சம்மதத்தைத் தெரிவித்தாள்.
அநேகருக்கு நடப்பதுபோல, அதிக நாள் கடத்தாமல் பணத்தை வாங்கினவன் எல்லையில் அவளை இறக்கி விட்டுப் பறந்து விட்டான். அண்ணா காத்திருந்தார். இறங்கி நின்ற இடத்தில் நின்று கொண்டு . சுற்றிலும் பார்த்தாள். ஒரே கட்டிட மயமாயிருந்தது; அதுவும் பூச்சுப் பூசப்படாத நூற்றாண்டுகள் கடந்தவையாய், கல்லறைகளை ஞாபகப்படுத்தும் விதத்தில் எழுந்து நின்ற சோகம் கவ்விய கட்டிடங்களைப் பார்த்த போது இதுதானா பிரான்ஸ் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது.
அண்ணா "என்ன?" என்றார்.
"ஒண்டுமில்லை, பிரான்ஸ் எண்டால் நாகரீகத்தின் உச்சம் எண்டு நினைச்சனான், ஆனால் பாத்தால் அப்பிடித் தெரியேல்லை"
அண்ணா சிரித்துக் கொண்டு " அதுக்கு நீ பரிசுக்குப் போக வேணும், அங்க தானே போகப் போறம், வா!" என்று சொல்லிக் கொண்டே மகிழுந்துக்குள் ஏறினார்.
பரிசுக்கு வந்து பார்த்ததும் புரிந்தது செல்விக்கு தனக்கும் வந்தடைந்த நாட்டுக்கும் இடையில் உள்ள தூரம். அண்ணா மெத்ரோ (நிலக்கீழ் தொடருந்து)பாவிப்பது எப்படி என்று கையில் வரைபடத்தை வைத்துக் கொண்டு விளங்கப் படுத்தினார். முக்கால்வாசி நேரத்தை வேலைக்குள் செலவிடும் அவரால் அவளோடு எல்லாவற்றுக்கும் வர முடியாதில்லையா? அத்தோடு அவளும் தான் தனியே யாருடைய தயவையும் எதிர்பாராமல் வாழுவதையே விரும்பினாள்.
எனவே நிலைமையை விளங்கிக் கொண்டு, எல்லாவிதத்திலும் முன்னேற முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினாள். மொழி நாக்கில் புரள அடம் பிடித்தது. செல்வியோ அதை விடுவதாயில்லை என்று அதற்கும் மேல் அடம் பிடித்துப் போராடிக் கொண்டிருந்தாள். விசாவுக்கு நீண்ட நாட்கள் எடுக்குமாப்போலத் தெரிந்தது. வேலையும் செய்ய முடியாதிருந்தது. ஆரம்ப இலக்கணத்தை எழுதி எழுதிப் பாடமாக்கிக் கொண்டிருக்கும் போதே வேலையும் செய்யத் தொடங்கினால் விரைவில் மொழியைப் பேச முடியும் என்று நம்பியதால் வேலை ஒன்று தேடத் தொடங்கினாள். ஆனால் அது அவ்வளவு இலகுவாயிருக்கவில்லை.
அவளுடைய நண்பி ஒருத்தி நீண்ட காலமாக பிரான்சிலே வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய உதவியுடன் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக இரண்டு குழந்தைகளைக் கவனிப்பதற்கான வேலை ஒன்றுக்கான விளம்பரம் கண்களில் பட்டது.உடனேயே தொலைபேசியில் பேசி நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்தார்கள்.
பரிசின் முக்கிய பிரபலமான பகுதி ஒன்றில் அவர்களது வீடு அமைந்திருந்தது.அழைப்பு மணியை அழுத்தியதும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் முகம் பாதி திறந்த கதவினூடே தெரிந்தது. செல்வியை யார் என்று உறுதிப்படுத்திக் கொண்டு கதவை முழுமையாகத் திறந்தாள் அப்பெண். கைக் குழந்தை ஒன்றை நெஞ்சோடு இறுகப் பற்றியிருந்தாள் அப்பெண். உள்ளே அமர வைத்து விளக்கமாகப் பேசினாள். அவள் பேசத் தொடங்கவே செல்வி தன்னுடைய விசாச் சிக்கலை சொன்னாள். பின்னால் அதனால் சிக்கல் வருவதைவிட முன்னரே சொல்லி விடுவது நல்லதாகத் தோன்றியது அவளுக்கு. ஆனால் அந்தப் பெண்ணோ அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவளும் இந்த வேலையை சட்டப்படி பதிவு செய்ய விரும்பவில்லை. எனவே அவளுக்கும் இது வசதியாக இருந்தது. இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு.ஆறு வயதுப் பெண் குழந்தை ஒன்றும், அவளின் நெஞ்சோடு ஒட்டியிருக்கும் நான்கு மாதக் குழந்தை ஒன்றும். அவளுடைய கணவன் வங்கி ஒன்றிலே முகாமையாளராக இருந்தான். செல்வியின் வேலை குழந்தைகளைக் கவனிப்பதும் அவர்களுடைய சாப்பாட்டை தயார்ப்படுத்துவதும்.சம்பளத்தையும் அப்பெண்ணே முடிவெடுத்துச் சொன்னாள். அப்போதைக்கு அதை ஒப்புக் கொள்ளுவதே சரியாகப் பட்டது செல்விக்கு. பேசிக் கொண்டே இருக்க செல்வி சுற்றிலும் நோட்டமிட்டாள். மிகத் தாராள வசதிகள் கொண்டதாக அமைந்திருந்தது அவ்வீடு.
வேலையை அந்த வாரத் தொடக்கத்திலேயே தொடங்குவதாக முடிவெடுத்து விட்டுத் திரும்புகையில் செல்விக்கு மனம் கொஞ்சம் லேசாக இருந்தது.
அண்ணாவுக்கு அவள் விசா இல்லாத நிலையில் வேலை செய்வது சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் அவளுடைய விருப்பத்துக்குத் தடை போடவில்லை.
" கவனம்" என்றார்.
"அந்த வெள்ளைக்காரப் பெம்பிளையே என்னிட்ட விசா இருந்தாலும் தான் பதிவு செய்ய மாட்டாவாம், பிறகு நான் ஏன் அலட்டிக் கொள்ள வேணும்? விசா கிடைக்குமட்டும் இதைச் செய்வம் கிடைச்சாப் பிறகு வேற ஏதாவது வேலை தேட வேணும்" என்றாள் செல்வி.
அண்ணா கைத் தொலைபேசி ஒன்று வாங்கிக் கொடுத்து "என்ன சிக்கலெண்டாலும் எனக்கு எடு" என்றார்.
வேலை ஒன்றும் அவளுக்குக் கடினமாக இருக்கவில்லை. சாப்பாடு செய்வது பெரிய வேலையாக இருக்கவில்லை. மரக்கறிகளை ஒன்றாக வெட்டிப் போட்டு அரைத்து விட்டால் குழந்தைகளுக்கான சாப்பாடு சரி. குழந்தைகள் இரண்டும் அவளுடன் விரைவில் ஒட்டிக் கொண்டனர். பெண் குழந்தை ஆரம்பத்தில் கொஞ்சம் இவளுடைய கலப்பு மொழி புரியாமல் மருள மருள விழித்தது.பிறகு பழகிப் போனது. தனியார் ஆரம்பப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு ஆங்கிலத்தில் பேச ஆசை. எனவே இவள் அந்தக் குழந்தைக்கு பிரெஞ்சில் சொல்லுவது விளங்க முடியாமல் போகும்போது ஆங்கிலத்திலே சொல்ல முயற்சிப்பாள். அவளும் இஸ், புஷ் என்று இல்லாத ஆங்கில வார்த்தைகளை எல்லாம் சேர்த்துச் சொல்ல முயற்சிப்பாள். இதுவே இவர்கள் இருவருக்கும் ஒருவித ஈடுபாட்டை ஏற்படுத்தியது.கைக்குழந்தை கொழுக் மொழுக்கென்று கைகளுக்குள் அடங்காமல் இருந்தான். பார்க்க ஆசையாக இருந்தது இவளுக்கு. அந்த ஆசையிலேயே முடிந்தவரை அவனைத் தூக்கிக் கைகளிலேயே வைத்திருந்தாள் செல்வி.
ஒரு நாள் இவள் வீடு திரும்ப ஆயத்தம் செய்யும்போது, "நாளைக்கு நாங்கள் மருத்துவரிடம் போக வேண்டும்" என்றாள் அந்தப் பெண்.
இவளுக்கு பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை.
"ஏன்?" என்றாள்.
"நீங்கள் உங்கட நாடுகளில இருந்து இங்கே உழைக்க என்று வருகிறீர்கள்,அதோடு பல நோய்களையும் காவி வருவீர்கள். அதையெல்லாம் நாங்கள் வாங்க முடியாது" என்றாள் குரூரமாக.
செல்விக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது. என்ன மாதிரியான கொழுப்பேறிய திமிர்த்தனம் என்று மனதுக்குள் திட்டினாள். பிறகு தனக்குள்ளே "கன நாளாச்சு மருத்துவரைப் போய்ப் பார்த்து, எனவே இவளுடைய செலவில் இதை இப்போதைக்கு முடிப்போம் என்று நினைத்துக் கொண்டாள். அதே சமயம் விசா கிடைக்கும்போது, இவளுக்கு இன்னொரு ஆள் தேடும் அவகாசம் கூடக் கொடுக்காமல் இவளைக் கை விட்டு விட்டுப் போவது என்றும் முடிவெடுத்துக் கொண்டாள். தவிக்கட்டும் இவளுடைய இந்த அகங்காரத்துக்குக் கிடந்து தவிக்கட்டும்.
அண்ணாவிடம் செல்வி எதுவும் சொல்லவில்லை. இதைச் சொன்னால் அண்ணா எப்படிக் கொதித்தெழும்புவார் என்று தெரியும். வேலையை விட்டு விட்டு வா! என்று சொல்லுவார். அது அவளுக்கு அவ்வளவு உசிதமாகப் படவில்லை.
அடுத்த நாள் மருத்துவரிடம் அவள் செல்வியைக் கூட்டிக் கொண்டு சென்றாள்.அவளுடைய குடும்ப வைத்தியர் என்று புரிந்து கொண்டாள் செல்வி.ஏற்கனவே செல்வியைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள். நாடு பற்றிக் கேட்டாள் குடும்ப வைத்தியர். பின்னர் நோயெதிர்ப்பு ஊசிகள் போட்டதற்கான அட்டையைக் கேட்டார். ஊரை விட்டு நாட்டை விட்டுக் கிளம்பி அலையும்போது யார் இதை எல்லாம் கவனித்தார்கள் என்று இவர்களுக்குச் சொன்னால், இவர்களால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா?. இவள் "இல்லை"என்று சொல்ல, விநோதமாகப் பார்த்தார்கள் கூட்டி வந்தவளும் வைத்தியரும்.
இரத்தம் எடுத்தார்கள் பரிசோதித்து ஏதாவது நோயால் தாங்கள் தாக்கப்படுவோமா என்று பார்க்க. இவளுக்கு உள்ளூரக் கொதித்தது. சொந்த ஊரும் சொந்த வீடும் சொந்த நாடும் விந்தையாகப் பிரித்து வெதும்ப வைக்கும் நிலையை எண்ணி தனக்குள்ளே நொந்து கொண்டாள். இரண்டு நாட்களில் பரிசோதனை முடிவு வரும் என்று சொல்லி அனுப்பினாள் மருத்துவர்.
நான்கு நாட்கள் கழித்து, "செல்வி! உன்னுடைய பரிசோதனை முடிவு வந்து விட்டது. ஒரு சிக்கலும் இல்லை, சாதாரணமாகத்தான் இருக்கிறது என்றாள்.
செல்வி அவளது முகத்தைப் பார்க்காமலேயே "ம்ம்ம்.." என்றாள். பிறகு ஏதோ நினைத்தவளாய் " எனக்கு ஒரு பிரதி தர முடியுமா?" என்று கேட்டாள்.அவள்தான் குறுக்கால் யோசிப்பவளாச்சே! உடனேயே "இல்லை இது நான் எடுப்பிச்சது தர முடியாது" என்றாள்.
செல்வி சிரித்து விட்டுப் "பரவாயில்லை" என்றாள். இந்தப் பேச்சை அத்தோடு முடித்துவிட விரும்பினாள் அவள். மற்றவளும் அதையே நினைத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்தப் பேச்சு முடிந்து போனது; ஆனால் செல்விக்குள்ளே தணல் தணியாதிருந்தது. நாள் பார்த்துக் காத்திருந்தாள்.
செல்வியின் வேலை நேரம் காலை ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை. அந்த வீட்டுக்காரப் பெண் வீட்டிலிருந்தபடியே வேலை செய்தாள்.ஆனால் அவள் வீட்டில் இருப்பது குறைவு. அவளுடைய கணவனைக் காண்பது அதைவிடக் குறைவு. அப்படி அவள் வேலை முடிப்பதற்குள் அவன் வீடு திரும்புவதாயின் அதன் கருத்து அன்று அவர்கள் வெளியே போகிறார்கள் என்பது. இது வாரத்தில் மூன்று நாட்களாவது நடக்கும். அப்படி அவர்கள் வெளியே போய்விட்டு வீடு திரும்பும்போது பின்னிரவு ஆகி விடும். அந்த நேரம் இவள் ரக்சி பிடித்து வீடு திரும்ப வேண்டும், அதற்கான பணத்தை அவர்கள் கொடுப்பார்கள்.
இப்படி இருந்தும் இல்லாத பெற்றோரிடம் குழந்தைகள் எதைத்தான் எதிர்பார்ப்பது? இலகுவாகவே செல்வி ஒரு தாயாகவே மாறி விட்டிருந்தாள் நான்கு மாதத்துக்குள். பெண் குழந்தை இவளுக்கு தனது பாடசாலைக் கதைகள் அனைத்தையும் சொல்லித் தீர்க்கும். சின்னவன் தத்துக்க பித்துக்க என்று தத்தத் தொடங்கியிருந்தான். அத்தோடு இவளைக் காணாத சமயத்தில் தேடவும் தொடங்கியிருந்தான். கண்டவுடன் இவளது பாவாடையப் பிடித்துக் கொண்டு எழுந்திருக்க முயற்சிப்பான். இவள் வேலை முடிந்து வீடு திரும்பும்போது கத்தி அழத் தொடங்குவான். அந்தத் தாய் சமாதானப்படுத்த முயற்சிப்பதும் அவன் கூக்குரலும் இவள் படிகளில் இறங்கி வரும்போது இவளைச் சங்கடப்படுத்தும்.
அந்த வெள்ளைக்காரப் பெண்ணை நினைக்கும்போதெல்லாம் செல்விக்கு ஒருபக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் பரிதாபமாகவும் இருக்கும். தனக்குத் தானே முரணான பெண்ணாயிருந்தாள் அப்பெண். செல்வி குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட விதம் மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு. அவளுடைய கணவனுக்கும் பிடித்திருக்கிறது என்று அவளே செல்வியிடம் சொல்லியிருக்கிறாள். அதே சமயம் குழந்தைகள் தன்னை விட்டு விட்டு செல்வியிடம் ஒட்டிக் கொள்வது அவளைக் கலவரப்படுத்தியிருக்க வேண்டும்.
ஒரு நாள் செல்வி சின்னவனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, "நீ அதிகம் பிள்ளைகளைத் தூக்கி வைத்திருக்காதே! முத்தம் கொடுக்காதே!பிள்ளைகள் இப்போது என்னிடம் வருகிறார்கள் இல்லை" என்றாள். செல்வி திகைத்துப் போய் குழந்தையை நிலத்திலே விட்டாள். இறக்கி விட்டதும் அவன் அவளது பாவாடையைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினான்.அந்தப் பெண் குழந்தையைத் தூக்க, அவன் செல்வியை எட்டிப் பிடிக்கக் கைகளை நீட்டினான். அவள் செல்விக்கு முன்னால் நிற்க விரும்பாதவள் போல அந்த இடத்தை விட்டு விலகி அறைக்குள் சென்று விட்டாள்.குழந்தையின் அழுகை தொடர்ந்து கொண்டிருந்தது.
அவர்களின் மூத்த பெண் குழந்தை அவளுக்குக் கதை சொல்லத் தொடங்கியது நிலைமை புரியாது. இவள் அவளுக்குப் பக்கத்தில் இருந்து ஆர்வமாக அவளுடைய கதையைக் கேட்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். உள்ளே குழந்தையின் அழுகை மெது மெதுவாக அடங்கிக் கொண்டிருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருப்பது புரிந்தது. பாவம் குழந்தை என்று மனதுக்குள் கவலையாக இருந்தது செல்விக்கு.
அன்று வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் பலவிதமான சிந்தனைகளும் முட்டி மோதின. கெதியில இந்த விசா கிடைத்தால் நல்லது போலத் தோன்றியது இந்தச் சிக்கலில் இருந்து விடுபட.
அந்தப் பெண்ணின் மேல் ஆத்திரம் இருந்தாலும் இந்தக் கால இடை வெளிக்குள் அந்தக் குழந்தைகளின் மேல் பாசம் உருவாகியிருந்தது. ஆனால் அந்தப் பெண் அதை யோசிப்பவளாகத் தெரியவில்லை. குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள சரியான ஆளும் தேவை. அதே சமயம் குழந்தைகள் அவர்களைப் பார்த்துக் கொள்பவரிடம் ஒட்டி விடவும் கூடாது என்றால் எப்படி?
எப்படியானாலும் அந்தப் பெண்ணால் செல்வியை விட முடியாது என்பது புரிந்தது.
சின்னவன் இப்போது பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தான்.செல்வி அவனுக்குப் பின்னாலேயே எப்போதும் திரிந்தாள். அவன் எங்கேயாவது விழுந்து அடிபட்டால் என்னவாகும் என்கின்ற பயம் அவளுக்கு.இவள் அவனுக்குப் பின்னால் ஓடும்போது கைகளைத் தட்டிச் சிரிப்பான். அந்தச் சிரிப்பைப் பார்த்து விட்டு முத்தம் கொடுக்காவிட்டால் எப்படி? இந்தக் குழந்தையின்பத்தை இரசிக்காத மனிதர் தான் உண்டா? காலையில் இவளைக் கண்டதும் கதவருகில் ஓடி வருவதும், பின்னேரத்தில் இவளது பாவாடையைப் பிடித்துக் கொண்டு போக விடாமல் குரலெழுப்புவதுமாய் அவனது பொழுது கழிந்து கொண்டிருந்தது.
தாய் இப்போது கொஞ்சம் அதிகமாகவே செல்வியின் பொறுப்பில் அநேக வீட்டு விடயங்களை விட்டு விட்டு வேலை செய்யத் தொடங்கியிருந்தாள். அதாவது அவள் முழுநேர வேலைக்கு தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள்.
ஒரு வசந்த கால விடுமுறைக் காலப் பகுதி நாளொன்றில் செல்விக்கு "அகதி அந்தஸ்து" வழங்கப்பட்ட உறுதிப்படுத்தல் கைக்கு வந்து சேர்ந்தது. அது ஏறக்குறைய மாதக் கடைசியும் கூட. அந்த மாதச் சம்பளத்தை வாங்கி விட்டு வேலையை விடுவது என்று தீர்மானித்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். முப்பதாம் திகதி அந்தப் பெண் சம்பளப் பணத்தைக் கையில் கொடுத்து வழமைபோலவே, "நிறையப் பணத்தை நாங்கள் இழக்கிறோம்"என்றாள். இவள் பேசாமல் சிரித்துக் கொண்டே பணத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகும் நேரத்துக்கு எழுந்து தொலைபேசியில் அந்த வீட்டு எண்களை அழுத்தினாள். மறுபக்கம் அந்த வெள்ளைக்காரப் பெண்ணின் கரகரத்த குரல் கேட்டதும் செல்வி, "நான் செல்வி பேசுகிறேன், நான் இனி வேலைக்கு வர மாட்டேன், மன்னிக்கவும்" என்றாள்.
மறுபக்கம் திகைப்பில் ஒரு நிமிடம் பதிலேதும் இல்லை.
பிறகு, "ஏன் என்ன நடந்தது?" என்றாள்.
"நான் வேற வேலை தேடி விட்டேன்" என்றாள் செல்வி.
"முதலே சொல்லியிருக்க வேணும்" என்றாள் கோபத்தோடு.
"இல்லை இது திடீரென்று கிடைத்தது, நீங்கள் செய்த எல்லாவற்றுக்கும் நன்றி"என்று சொல்லி விட்டுத் தொடர்பைத் துண்டித்து விட்டாள். மன அழுத்தம் முற்றாக விலகி ஒருவித சுதந்திர உணர்வு பரவுமாப்போல் இருந்தது.
தேடு! நன்றாகத் தேடு! எங்களைப் போல யாருடைய குழந்தைகளையும் சொந்தக் குழந்தைகளாய் அணைத்துக் கொள்ளும் யாராவது கிடைத்தால் சல்லடை போட்டுத் தேடு!
நாங்கள் செல்வம் அற்று வந்தவர்கள் அல்ல, செல்வம் இழந்து வந்தவர்கள் என்பதை எண்ணிக் கொள்!
அகதியாய் வந்ததால் ஏறி மிதிக்கிறாயா? என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.
செல்விக்குத் தெரியும் சின்னவன் அழுவான், தேடுவான், பெரியவள் கதை சொல்ல இவளைத் தேடுவாள் என்று.
அவர்களுக்கு இன்னொரு நல்ல செவிலித்தாய் கிடைக்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.



வி.அல்விற்.



திசைகாட்டிகள்.

திசைகாட்டிகள்.

மரங்களும் மலர்களும் 
மழையும் அருவிகளும் 
மழையும் நனைவும் 
மதியும் வானும் 
இவர்களையும் 
மகிழ்வித்து மலர்ந்தவைதான் 

இயற்கை வாரிக் கொண்டு 
இவர்களைக் காவிச் செல்கையில்
இடம்மாறா நினைவுகளை
இருத்தி விட்டுச் சென்றவர்கள்
எப்போதைக்கும்

தீக்குழம்பின் பிரவாகத்தில்
தீய்ந்தும் தீயாதவர்கள்
தீண்ட முடியாத் தூரத்தில்
தீச்சுடர்களே அவர்கள்
எப்போதைக்கும்

திசைகள் இப்போதைக்குத்
திகைத்துக் கிடப்பினும்
திரும்பும் பாதைகள்
தூர்ந்து கிடப்பினும்
தெறிகெடு நிலையழிக்கும்
திசைகாட்டிகள் அவர்கள்
எப்போதைக்கும்.

வி.அல்விற்.
02.07.2014.