வியாழன், 25 செப்டம்பர், 2014

முகநூலில் எழுதிய கவிதை ஒன்றை Kalaisudar.com இல் தீபன் என்பவர் இணைத்திருக்கிறார் அன்போடு.
மிக்க நன்றி தீபன் உங்கள் ஆதரவுக்கு.

http://kalaisudar.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மாற்றுவழி


மற்றவன் முற்றத்தை வம்பளக்க 
மறைந்திருந்து நோக்கவிடுத்து 
மற்றையோர் நகை அறுக்க 
மாற்றும் வழி எண்ணல் தகுமே!

வி.அல்விற்.
21.09.2014.

இங்கேயும் கூட

இங்கேயும் கூட
தவித்துப் போகிறது மனம் 
நேரம் கடந்து 
மெல்ல நகர்கையில் 
தவிப்பு பிசைய 
தொண்டை வறண்டு போய் 
அச்சம் உள்ளே பரவத் தொடங்குகிறது

தொலைபேசித் துண்டிப்பில் 
கலங்குகிறது மூளை 
தெய்வங்களின் பெயர்கள் 
தன்னாலே நாவில் 
வரிசை கட்டுகின்றன

கற்பனை கட்டவிழ்கிறது 
கண்முன்னே 
செய்திகளும் படங்களுமாய்
அடிவயிற்றில் நோவெடுக்கிறது 
பெற்றெடுத்த பொழுதைவிட

பிள்ளைகள் தொலைவது 
யுத்த பூமியில் மட்டுமல்ல 
இங்கேயும் கூட.




                                                                                                                                         வி.அல்விற்.
                                                                                                                                     23.09.2014.

சனி, 20 செப்டம்பர், 2014

உளைச்சலுடன் ஒரு மடல்.

உளைச்சலுடன் ஒரு மடல்.

நண்ப,
நீ நலமா?

மனவுளைச்சலின் பால் 
முனைகிறேன் 
உனக்கோர் அஞ்சல் 

பதிவு செய்யப்பட்டு 
காத்திருந்த இடத்தை
நீ அடைந்திருப்பதில்
மகிழ்வடைந்திருப்பாய்
நானும் கூட.....

அண்டப் பெருவெளியின்
ஆர்ப்பரிப்புக்கள்
உன்னுள் அடங்கியிருக்க
ஆழ்சிந்தனைக்குள்
உன்னை
உட்படுத்திக் கொண்டிருப்பாய்
மகிழ்கிறேன் நண்ப,
மகிழ்கிறேன்

அறத்தின் பெயரால்
உன் பெயர்
இங்கே உச்சரிக்கப்படுகிறது
என்பது உனக்குத் தெரியுமா?
தெரிந்து சென்றவன்தானே நீ
உன் புன்னகை புரிகிறதெனக்கு

தகைமையற்றவர்களின்
தலைதூக்கல்களிலும்
தகையற்றோரின்
தகிடுதத்தங்களிலும்
நிறை நின்ற உன் பெயரால்
அபிடேகங்கள் செய்யப்படுகின்றன

நிலைக்களங்களைக் காக்க
நியாயவாதிகளாக
ஒளிவட்டம் பின்னொளிர
உன் பெயரால்
உறுதிப்படுத்திக் கொள்ளுகிறார்கள்
தாங்களாகவே

நண்ப,
நிறையெடுத்தவன் நீ
நிறைமொழி சொன்னவனும் நீ

என் ஆதங்கங்களுக்கான பதில்
உன் கண்களில் தெரிகிறது
உன் சிரிப்பில் தெரியும்
ஆழ்முதுமை
என்னை கலங்க வைக்கிறது

கூடிக் களித்து
குதறித் துப்பிவிடும்
கூட்டத்திலிருந்து தூரச் சென்றதே
உனக்கமைதி என
இப்பொழுது உணர்கின்றேன்

நண்ப,
ஆற்றாமையால் இவ்வண்ணம்
வரைய நேர்ந்தது என்பதை
நீ புரிந்து கொள்வாய்

மறுமுறை உன்னை
சந்திக்கும் வரை
இன்னும் உன்னுள் ஆழ்ந்திரு.

இவ்வண்ணம்,
ஆற்றாமையுடன்,
உன் நண்பன்.

வி.அல்விற்.
19.09.2014.

திங்கள், 15 செப்டம்பர், 2014

கடத்தல்

கடத்தல்



நினைக்கிறேன் 
எட்டிக் கால்களை வைத்து 
இடறுபடும் அனைத்தையும் 
கடக்க நினைக்கிறேன்

தனியே கடந்து விடுவேன் 
என்பதே பொய்மையாயிருக்கிறது 
என்னை நானே 
ஆற்றிக் கொள்ளுமாப்போல

என் தனிமைச் சுமையையும் 
கூடவே இறுக்கியிருக்கும் 
பந்தச் சுவரையும் 
கடந்து விடுதல்
அருவியென ஆழ்கடலில் 
கால் வைத்தாற் போன்ற 
பயத்தைத் தருகிறது

மூளையின் எங்கோ ஒரு பதிவில் 
சிவப்பு விளக்கு 
அடிக்கடி எரிந்து அணைகின்றது 
எச்சரிக்கையாயிருக்கும்படி 
என்னில் மட்டுமே

கடந்து விட்டேன் எனும்
மாய மயக்கத்தில் 
தலை நிமிர்த்தும் போது 
நூலிழைகளில் 
மீண்டும் சிக்கிக் கொள்ளுகையில் 
என் பலவீனம் 
பலமாய்ச் சிரிக்கிறது 
என்னைப் பார்த்து

கடத்தல் என்பது 
இறுதிப் பயணமாய் இருக்குமோ?

வி. அல்விற்.
15.09.2014.

சனி, 13 செப்டம்பர், 2014

என்ன பயன்?

என்ன பயன் கண்டு விட்டோம் 

கல்லும் மண்ணுமிடை 
கால்கள் புதைந்திருக்க 
கன்னல் மொழிபேசி 
களித்து மகிழ்ந்திருந்தோம் 
கல்லு இடறுமிடம் 
தூக்கி விட இருந்தாய் நீ 
மண்ணில் புரண்டவிடம் 
தட்டி விட நீயிருந்தாய் 

பசித்திருந்த பொழுதுகளில்
படுத்திருந்து பாடினோம்
புசித்த பொழுதுகளில்
புன்னகைத்துப் பகிர்ந்திருந்தோம்
பற்றி எரியாத
பற்றோடு வாழ்ந்திருந்தோம்

பசி மறந்து போனதின்று
பாற்கடலே வந்தாற்போல்
பாசம் ஓடி ஒழிந்ததிங்கு
உடல் விட்ட உயிர்போல
பற்றறுந்து போனதின்று
பழி சூழ்ந்த நிலையிங்கு

பணமே பெரும் எடையென்று
தலையினை அடகு வைத்தோம்
பொய்மையே மதிப்பென்று
பெருங்குழியில் வீழ்ந்திட்டோம்
மூர்க்கமே சிறப்பென்று
மூக்குடைந்து கிடக்கின்றோம்

என்ன பயன் கண்டு விட்டோம்
என்ன பயன் கண்டு விட்டோம்

பாதகமே அறுவடையாய்
பயனின்றி வீழ்ந்து விட்டோம்
தனித்தனித் தீவுகளில்.

வி.அல்விற்.
13.09.2014.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சமூகத்தின் பெயரால்


ஒரு கோடு கீறப்பட்டுள்ளது 
ஆழமாகவே 
என் தனிமையும் 
சிந்தனைகளும் 
உன் எதிர்வினைகளும் 
இறுமாப்புக்களும் 
கடந்து வந்து 
அழித்திடாதபடி

சாட்சிகளில்லா இரவுகள்
பகல்களை விழுங்கியபடி 
காலம் நீண்டதோர் 
பாதையை 
முடிச்சவிழ்க்க விரும்பாமல் 
முனகிக் கரைகின்றது 

மௌனங்களில் ஆழ்ந்துள்ள 
மீதியுள்ள கொள்ளளவில் 
சமூகத்தின் பெயரால்
சுய அழிப்புச் 
செய்து கொண்டிருக்கிறேன்
விரும்பாமலேயே.



வி.அல்விற்.
04.09.2014.