சனி, 13 செப்டம்பர், 2014

என்ன பயன்?

என்ன பயன் கண்டு விட்டோம் 

கல்லும் மண்ணுமிடை 
கால்கள் புதைந்திருக்க 
கன்னல் மொழிபேசி 
களித்து மகிழ்ந்திருந்தோம் 
கல்லு இடறுமிடம் 
தூக்கி விட இருந்தாய் நீ 
மண்ணில் புரண்டவிடம் 
தட்டி விட நீயிருந்தாய் 

பசித்திருந்த பொழுதுகளில்
படுத்திருந்து பாடினோம்
புசித்த பொழுதுகளில்
புன்னகைத்துப் பகிர்ந்திருந்தோம்
பற்றி எரியாத
பற்றோடு வாழ்ந்திருந்தோம்

பசி மறந்து போனதின்று
பாற்கடலே வந்தாற்போல்
பாசம் ஓடி ஒழிந்ததிங்கு
உடல் விட்ட உயிர்போல
பற்றறுந்து போனதின்று
பழி சூழ்ந்த நிலையிங்கு

பணமே பெரும் எடையென்று
தலையினை அடகு வைத்தோம்
பொய்மையே மதிப்பென்று
பெருங்குழியில் வீழ்ந்திட்டோம்
மூர்க்கமே சிறப்பென்று
மூக்குடைந்து கிடக்கின்றோம்

என்ன பயன் கண்டு விட்டோம்
என்ன பயன் கண்டு விட்டோம்

பாதகமே அறுவடையாய்
பயனின்றி வீழ்ந்து விட்டோம்
தனித்தனித் தீவுகளில்.

வி.அல்விற்.
13.09.2014.

கருத்துகள் இல்லை: