சனி, 20 செப்டம்பர், 2014

உளைச்சலுடன் ஒரு மடல்.

உளைச்சலுடன் ஒரு மடல்.

நண்ப,
நீ நலமா?

மனவுளைச்சலின் பால் 
முனைகிறேன் 
உனக்கோர் அஞ்சல் 

பதிவு செய்யப்பட்டு 
காத்திருந்த இடத்தை
நீ அடைந்திருப்பதில்
மகிழ்வடைந்திருப்பாய்
நானும் கூட.....

அண்டப் பெருவெளியின்
ஆர்ப்பரிப்புக்கள்
உன்னுள் அடங்கியிருக்க
ஆழ்சிந்தனைக்குள்
உன்னை
உட்படுத்திக் கொண்டிருப்பாய்
மகிழ்கிறேன் நண்ப,
மகிழ்கிறேன்

அறத்தின் பெயரால்
உன் பெயர்
இங்கே உச்சரிக்கப்படுகிறது
என்பது உனக்குத் தெரியுமா?
தெரிந்து சென்றவன்தானே நீ
உன் புன்னகை புரிகிறதெனக்கு

தகைமையற்றவர்களின்
தலைதூக்கல்களிலும்
தகையற்றோரின்
தகிடுதத்தங்களிலும்
நிறை நின்ற உன் பெயரால்
அபிடேகங்கள் செய்யப்படுகின்றன

நிலைக்களங்களைக் காக்க
நியாயவாதிகளாக
ஒளிவட்டம் பின்னொளிர
உன் பெயரால்
உறுதிப்படுத்திக் கொள்ளுகிறார்கள்
தாங்களாகவே

நண்ப,
நிறையெடுத்தவன் நீ
நிறைமொழி சொன்னவனும் நீ

என் ஆதங்கங்களுக்கான பதில்
உன் கண்களில் தெரிகிறது
உன் சிரிப்பில் தெரியும்
ஆழ்முதுமை
என்னை கலங்க வைக்கிறது

கூடிக் களித்து
குதறித் துப்பிவிடும்
கூட்டத்திலிருந்து தூரச் சென்றதே
உனக்கமைதி என
இப்பொழுது உணர்கின்றேன்

நண்ப,
ஆற்றாமையால் இவ்வண்ணம்
வரைய நேர்ந்தது என்பதை
நீ புரிந்து கொள்வாய்

மறுமுறை உன்னை
சந்திக்கும் வரை
இன்னும் உன்னுள் ஆழ்ந்திரு.

இவ்வண்ணம்,
ஆற்றாமையுடன்,
உன் நண்பன்.

வி.அல்விற்.
19.09.2014.

கருத்துகள் இல்லை: