திங்கள், 15 செப்டம்பர், 2014

கடத்தல்

கடத்தல்



நினைக்கிறேன் 
எட்டிக் கால்களை வைத்து 
இடறுபடும் அனைத்தையும் 
கடக்க நினைக்கிறேன்

தனியே கடந்து விடுவேன் 
என்பதே பொய்மையாயிருக்கிறது 
என்னை நானே 
ஆற்றிக் கொள்ளுமாப்போல

என் தனிமைச் சுமையையும் 
கூடவே இறுக்கியிருக்கும் 
பந்தச் சுவரையும் 
கடந்து விடுதல்
அருவியென ஆழ்கடலில் 
கால் வைத்தாற் போன்ற 
பயத்தைத் தருகிறது

மூளையின் எங்கோ ஒரு பதிவில் 
சிவப்பு விளக்கு 
அடிக்கடி எரிந்து அணைகின்றது 
எச்சரிக்கையாயிருக்கும்படி 
என்னில் மட்டுமே

கடந்து விட்டேன் எனும்
மாய மயக்கத்தில் 
தலை நிமிர்த்தும் போது 
நூலிழைகளில் 
மீண்டும் சிக்கிக் கொள்ளுகையில் 
என் பலவீனம் 
பலமாய்ச் சிரிக்கிறது 
என்னைப் பார்த்து

கடத்தல் என்பது 
இறுதிப் பயணமாய் இருக்குமோ?

வி. அல்விற்.
15.09.2014.

கருத்துகள் இல்லை: