திங்கள், 28 ஏப்ரல், 2014

கழுவும் மழை.

கழுவும் மழை.

வெப்பம் பரவியுள்ள நிலப்பரப்பில் 
ஒரு துளி நீருக்கான காத்திருப்பில் 
பரிதாபப்பட்ட ஜீவன்கள்போல 
முகில் கூட்டங்கள் கருமைக்கு மாற
சில்லென்று காற்று தொட்டு விலகுகிறது 
மௌனமாகப் பேசிக் கொள்ள 
மழை மட்டுமே போதுமாயிருக்கிறது 
அவளுக்கு இப்போதைக்கு 
வான் பார்த்து நிமிர்ந்த முகத்தில்
முத்தங்களாய் விழுந்த சிதறல்கள் போல
அவளின் நீண்டு செல்லும் கனவுகளில்
அவ்வப்போது துளிகளாய் வந்து விழுந்து
விலகிச் செல்லும் உயர் வரன்கள்
விலைபேசி கொதிப்பேற்றுகின்றன
வேகமெடுக்கும் மழைப்பொழிவில்
குளிர்மை ஏற்கும் வெம்மைப் பரப்பில்
புழுதி கிளம்பும் வாசனையோடு
சிலிர்த்தெழத் தயாராகின்றன விதைவெளிகள்
மழை இப்போது அவளை வென்று நிற்கின்றது
அவளோ இன்னும் வெம்மைப் பொழுதுகளைக்
கடந்துவிட முடியாத நிலையில்.........
ஆனாலும்
மழையை அவளுக்குப் பிடித்திருக்கிறது
யாரும் பார்க்காத வேளைகளில்
அதனோடு பேசும்போது
அது தரையை மட்டுமல்ல
அவள் கண்களையும் கழுவிச் செல்வதால்.

வி.அல்விற்.
26.04.2014.

பாலமமைப்போம்.

பாலமமைப்போம்.

25 avril 2014, 17:19
அது ஒரு மிகப் பெரிய விடுதி. ஆயிரத்து நூறு அறைகளையும் நீச்சற்றடாகம்,உடற்பயிற்சிப் பகுதி, விளையாட்டுக்களுக்கான தனிப் பகுதி போன்ற அனைத்து வசதிகளையும் விடுமுறையைக் கழிக்க வருபவர்களுக்கு வளங்கும் வகையில் தன்னகத்தே கொண்டு பிரான்சின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. விடுதி வெளி வாசலில் நின்று பார்த்தால், வாசலிலிருந்து விடுதி வரையிலான ஏறக்குறைய முன்னூறு மீற்றர் இடைவெளிக்குள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புல் வெளியும் , அதன் ஓரங்களில் நடப்பட்டிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களுமாய், சுவர்கள் வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு, கம்பீரமாக"உள்ளே வா" என்பது போலக் காட்சி அளிக்கும்.
வீணா அந்த விடுதியில் வரவேற்பாளராக வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில் அவ்விடுதியின் உள், புறத் தோற்றத்தைப் பார்த்து வியந்து போய் நின்றாள் மணிக்கணக்காக. வேலை பெரிய கடினமாக இருக்கவில்லை. வரவேற்புப் பகுதி பத்துப் பேர் ஒரே நேரத்தில் வேலை செய்யும்படி அமைக்கப்பட்டிருந்தது.எனவே தனியே நின்று சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் குறைந்தது ஏழு மொழிகளைச் சமாளிக்க வேண்டிய நிலையில், பல மொழி தெரிந்தவர்களையும் பலவேறு நாட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள் வேலையை இலகுபடுத்தவும் விடுதிக்கு வருபவர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்குமாக.
வீணாவுடன் வேற்று நாட்டவர்களைத் தவிர்த்து, மூன்று தமிழ்ப் பெண்களும் ஒரு சிங்களப் பெண்ணும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் நன்றாகவே பழகிக் கொண்டிருந்தார்கள். வீணா வேலை விடயம் தவிர்த்து வேறு எதுவும் அதற்கப்பால் பேச முற்படுவதில்லை. அப்படிப் பேச்செழுந்தாலும் தவிர்த்து அவ்விடத்தை விட்டு அகன்று விடுவாள்.வேலையிடத்தில் அரசியல் பேசி ஒருவரையொருவர் தாக்குவதில் அவளுக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தச் சிங்களப் பெண்ணின் முகத்தில் நிரந்தரமாக ஒரு பதட்டம் ஒட்டியிருந்தது போல வீணாவுக்குத் தெரிந்தது. பின்னர் அது தன்னிடைய நினைப்போ என்று எண்ணி விட்டு இருந்து விடுவாள்.இன்னொரு சமயம் குற்றமுடைய மனங்கள் குறு குறுத்து எங்களை நேர் கொள்ளத் தவிக்கின்றனவோ என்றும் நினைப்பாள். ஏனென்றால் அவள் வேலைக்குச் சேர்ந்த காலப் பகுதி அப்படி. இரண்டாயிரத்தேழாம் ஆண்டில் அப்பகுதியில் வீணா இணைந்திருந்தாள். இயல்பாகவே பேச்சுக்கள் ஒன்றைச் சுற்றியே ஓடிக் கொண்டிருந்ததன. நிமிடங்கள் யுகங்களாகி பாரங்களை ஏற்றிக் கொண்டிருந்த நேரம் அது.
சில சமயம் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும்.ஓநாய்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட ஒற்றை ஆட்டுக் குட்டியைப் போலத் தோற்றம் தருவாள். தன்னுடன் வேலை செய்யும் பெண் என்ற ரீதியில் அவளுக்குரிய மதிப்பைக் கொடுக்க என்றுமே வீணா தவறியதில்லை. ஒருநாள் வீணா மதிய உணவாக வீட்டிலிருந்து கொத்து ரொட்டியை எடுத்துச் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், இயல்பாகவே அந்தப் பெண், "இது நீங்கள் கடையில் வாங்கியதா? அல்லது நீங்களே செய்ததா?" என்றாள். வீணா உடனே "இல்லை, இது நாங்கள் வீட்டிலேயே செய்தது" என்றதும், " எனக்கு கொத்து ரொட்டி நல்ல விருப்பம்; நீங்கள் எனக்கு ரொட்டி மட்டும் செய்து தர முடியுமா? என்றாள். ஒரு நிமிடம் திகைத்துப் போன வீணா, " அதுக்கென்ன,செய்து தந்தால் போச்சு" என்று பதில் சொல்லி விட்டு, கண்டபடி கடிவாளமின்றிச் சிந்திக்கத் தொடங்கிய மனதை, திருப்ப பேச்சை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். வீட்டிற்குத் திரும்பி "ஓ... சிங்களத்திக்கு ரொட்டி சுடுறீங்களோ?" என்ற கணவனின் நக்கலையும் காதில் வாங்காமல், ரொட்டி சுட்டு எடுத்துக் கொண்டுபோய் அப்பெண்ணிடம் கொடுத்தபோது, நன்றி கூறி மகிழ்ந்தாள். "நான் இண்டைக்கு இரவே கொத்து ரொட்டி செய்வேன்" என்று சொல்லிச் சிரித்தாள். பக்கத்தில் இருந்த மற்றத் தமிழ்ப் பெண்கள் வீணாவை எரித்தார்கள் கண்களால்.
தமிழ்ப் பெண்கள் அந்தச் சிங்களப் பெண்ணை குரோதத்துடன் நோக்கிக் கொண்டிருப்பது ஒரு தவிர்க்க முடியாத மன உளைச்சல்களின் வெளிப்பாடாயிருந்தது மனவருத்தமாகவிருந்தது வீணாவுக்கு. இதைத் தவிர்க்கலாமே. ஒரு தனிப்பட்டவருடன் எமது சிக்கல்களை கொட்டி இறுக்கமான நிலையை உருவாக்குவது அவசியமா? இதனால் அடையப் போவது என்ன? போன்ற பல சிந்தனைகள் அடிக்கடி தோன்றும்படியான சூழல் உருவாகியிருந்தது.
நாட்கள் நகர நகர எல்லாமே மாறிக் கொண்டிருந்தது. வேலையில் அக்கறையோடும், அவதானிப்போடும் செயற்பட்ட வீணாவுக்கு, வரவேற்பாளர் பிரிவுக்கான பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. பதவி என்று வந்தாலே வரிசை கட்டிப் பின்னாலே வரும் அத்தனை சிக்கல்களும் வீணாவையும் துரத்தத் தொடங்கியது. இத்தனை காலமும் அன்பாய்ப் பழகியவர்கள்,பின்னாலே பேசத் தொடங்கினார்கள். குறிப்பாக அந்தச் சிங்களப் பெண் அவளுடன் பேசுவதையே நிறுத்தி விட்டாள். வணக்கம் இவளாகத் தேடிப் போய்ச் சொன்னால் கூட வாய்க்குள் வேண்டா வெறுப்பாக முணுமுணுத்தாள்.ஏதாவது வேலை சம்பந்தமாக சொன்னால் " நீ என்னை மதிக்கவில்லை, நீ கடுமையாகக் கதைக்கிறாய்" என்று குரலை உயர்த்தினாள். வீணாவுக்கு விளங்கிப் போனது தான் மேலாளராக இருப்பது அப்பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்று.
ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் வீணாவை அடித்து வீழ்த்த தன்னோடு வேலை செய்யும் சிலரைச் சேர்த்துக் கொண்டு தாக்கத் தொடங்கினாள். வீணா எவ்வளவு அவதானமாக செயற்பட்டபோதும், அவ்வளவற்றையும் மீறி அப்பெண் பேயாட்டம் ஆடினாள். சில சமயம் மனநிலை பாதிக்கப்பட்டவள் போலக் கூட நடந்து கொண்டாள். இத்தனைக்கும் வீணா இது பற்றி தனது பொறுப்பாளருடன் எதுவுமே பேசவில்லை அவர்கள் தன்னைப் பற்றிப் பொறுப்பாளருடன் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தும். முடிந்தவரைக்கும் தன்னுடைய நிலையில் நின்று சமாளிப்பது என்று முடிவெடுத்திருந்தாள்.
கொஞ்சம் எல்லை மீறிப் போன நாள் ஒன்றில், இவர்களின் பகுதி பொறுப்பாளர் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார். கூட்டத்தில் பொறுப்பாளர் எல்லோரையும் பேசவிட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். சிங்களப் பெண் எழுந்தாள். "வீணாவுக்குப் பேசத் தெரியவில்லை, யாரையும் மதிப்பதில்லை,கண்டபடி வேலை சொல்லுகிறாள்......என்று ஒரு இருபது நிமிடம் நஞ்சைக் கக்கினாள் தன்னை மறந்து பைத்தியக்காரிபோல் உரத்த குரலில். அந்தப் பெண் பேசி முடித்தபோது தான் வீணாவுக்கு விளங்கியது எப்படியெல்லாம் வன்மமான சிந்தனைகளையும், குரோதத்தையும் இப்பெண் மனதுக்குள்ளே வைத்துக் கொண்டு நடமாடியிருக்கிறாள் என்று. வீணா தான் கோபப்படக் கூடாது எந்த நேரத்திலும் என்று முடிவெடுத்திருந்தாள். எல்லோரும் பேசிய பின்னர், பொறுப்பாளர் வீணாவை அவளுடைய கருத்தைத் தெரிவிக்கும் படி கேட்டபோது, வீணா அந்தச் சிங்களப் பெண்ணைப் பார்த்து, "முடிந்தால் நீ எனது கண்களைப் பார்த்துப் பேசு" என்றாள். அவளோ சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் . உடனே இவள், ஒருவருடன் தொடர்பாடுவதற்கு குறைந்த பட்சம் "வணக்கம்" என்றாலும் சொல்ல வேணும்; வணக்கம் சொல்லக் கூட மறுக்கும் இந்தப் பெண்ணுடன் நான் எப்படி உரையாடுவது?நான் என்னுடைய வேலையை சரியாகத்தான் செய்கின்றேன். இவர்களால் என்னை ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் நான் அதற்குப் பதில் சொல்வதற்கில்லை என்றாள் . பொறுப்பாளருக்குப் புரிந்து போனது. அவர் பொதுவாக, குழுவாக செயற்படுவது எப்படி என்று ஆலோசனை கூறி விட்டுக் கூட்டத்தை முடித்துக் கொண்டார். மேலதிகமாக இவளிடம் எதுவுமே கேட்கவுமில்லை, கேட்பதற்கு எதுவுமே இருக்கவுமில்லை. பொறுப்பாளர் தங்கள் சார்பாகப் பேசுவார் என்று எண்ணியிருந்த அவர்களுக்கு ஏமாற்றமாயிருந்தது. கண்களில் வன்மம் தெறித்தது.
அன்றைக்கு இரவு வீடு திரும்பியபோது கணவன் இரவுச் சாப்பாட்டுக்காக கொத்து ரொட்டி செய்திருந்தான். இவளுடைய சாப்பாட்டுக் கோப்பையில் அந்தச் சிங்களப் பெண்ணின் முகம் இரத்தக் காட்டேரியாகத் தெரிந்ததில் சாப்பாடு இறங்கவில்லை. ஒரு சக மனுஷியாக வேறுபாடின்றிப் பழக முற்பட்ட தன்னுடைய முட்டாள்தனத்தைதையும், அதற்குத் தனக்குக் கிடைத்த பரிசையும் எண்ணி நொந்து கொண்டாள். திருந்திக் கொள்ள முடியாதவர்களின் முன் மனிதம் பற்றிப் பேசுவதும் எதிர்பார்ப்பதும் வீண் கனவே என்னும் உண்மை உறைக்க மௌனமாகிப் போனாள்.
அதன் பின்னர் வந்த நாட்களில் இவள் ஏதாவது சொன்னால், தாள்களைத் தூக்கி எறிவாள் அந்தப் பெண். தூரப் போய் நின்று கோபத்தோடு இவளைத் திட்டு திட்டென்று திட்டித் தீர்ப்பாள்; அல்லது ஓவென்று அழுவாள். அந்தப் பெண்ணுடைய நடவடிக்கைகளால் அவளோடு கூட நின்றவர்களே அவளை விமரிசித்து விலத்தத் தொடங்கினர். பொறுப்பாளர் தனியே கூப்பிட்டுஅவளைக் கண்டித்து அனுப்பியது இவளது காதுகளில் விழுந்தது.முன்பெல்லாம் வீணா அந்தப் பெண்ணோடு எப்படி இலகுவாக உரையாடலாம் என்று சிந்திப்பதில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் இப்பொழுதெல்லாம் அந்தப் பெண்ணை ஒரு பொருட்டாகக் கருதுவதேயில்லை. அவள் அருகில் நடந்து போனால் யாரோ சம்பந்தமில்லாதவர்கள் நடந்து போவது போல இருக்கும் இவளுக்கு. கடற்கரை மணலில் வரையப்பட்ட ஓவியம் போல கண்முன்னாலேயே அப்பெண் அழிபட்டுப் போனாள்.
ஒரு நாள் வீணா வரவேற்புப் பகுதியில் ஒரு வரவேற்பாளரின் கணக்குகளை சேர்ந்து சரி பார்த்துக் கொண்டிருந்த போது, பின் பகுதியிலிருந்து அமளிப்படும் சத்தம் முன்பகுதியை எட்டியது. இவர்களுக்கு முன்னால் விடுதிக்குப் பதிவுக்காகக் காத்திருந்தவர்கள் இவர்களைப் பார்த்து ஒரு மாதிரிச் சிரித்தார்கள் பின்னால் பார்த்தபடி. இவள் நிதானமாக தனது வேலைகளை முடித்து விட்டு அங்கிருந்தவர்களிடம் சொல்லி விட்டுப் பின்னால் போனாள்.அங்கே அந்தச் சிங்களப் பெண் பேயாய்க் கத்திக் கொண்டிருந்தாள் இன்னொரு பொறுப்பாளருடன்.
அந்தப் பொறுப்பாளர் அவளைச் சமாதானப் படுத்த முயற்சித்தபோது"தொடாதே என்னை" என்று கத்தியபடி கைகளைத் தட்டி விட்டாள். அவர் பயந்து போய் பின்னால் தள்ளிப் போக, பிரதி எடுக்க வைத்திருந்த தாள்களை கைகளால் வாரி பொறுப்பாளரின் முகத்திலே வீசியடித்தாள். அருகிலிருந்த கதிரைகளைக் காலாலே உதைத்துத் தள்ளினாள். இதுவரை பார்த்திருந்த இன்னொரு பொறுப்பாளர் உடனே தனது கைத் தொலைபேசியை எடுத்து அந்த அலங்கோலங்களைப் பதிவு செய்யத் தொடங்கினார் ஆதாரத்துக்காக.அவளோ சுய கட்டுப்பாட்டை இழந்து வெகு நேரமாயிருந்தது. நிலைமை கட்டுக் கடங்காது போனதால் மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் வரவழைக்கப்பட்டனர். வந்தவர்கள் எதுவுமே பேசாமல் அவளை அப்படியே தூக்கி வாகனத்துள் போட்டு மருத்துவ நிலையத்துக்கு விரைந்தனர். கண்முன்னாலே நடந்து கொண்டிருந்த இந்த அவலத்தை ஒதுங்கியிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா வெறும் சாட்சியாய் மட்டுமே. நாட்டிலே நடந்து முடிந்த அத்தனை வாதைகளையும் கொடூரங்களையும் அறிந்தும் கூட , இப்பெண்ணின் மேல் அனுதாபப்படுவதைத் தவிர்க்க முடியாதிருந்தது.
இந்தத் தடவை வீணாவின் பெயர் கூறும் படி ஏதும் நடக்கவில்லை என்பதில் மட்டுமே இவளுக்கொரு நிம்மதி இருந்தது.
அவர்கள் அவர்களாகவே என்றும் மாறாதிருப்பார்கள்.



வி.அல்விற்.
ஏப்ரல் மாத "காற்றுவெளி" சஞ்சிகையில் வெளியாகியது.
நன்றி.

பந்தம்.

பந்தம்.

ஒட்டி உறவாடவும் விடாது 
விட்டு விலகவும் முடியாது 
அந்தரிக்கும் ஆத்மா போல 
என்ன பந்தம் இது?
சுமையாய்க் கழிந்த இரவுகளும் 
அதில் அலையுண்டு 
இறவாது மிச்சமிருக்கும் கனவுகளுமாக
நெடுந்தூரப் பகல்களும் யுகங்களாக 
நடக்கின்றோம்
தொலைத்து விட்ட பெறுமானம் தேடி
ஏனென்று கேட்காத பரிதவிப்பும்
கேட்டால் புகைந்தெழும் எரிச்சலும்
கூடவே இருப்பதால் வரும் சலிப்பும்
எட்டவிருந்தால் உலுப்பும் பாசமுமாய்
மனது மிதக்கிறது கலங்கியபடி
அறிவு அமைதியாய் இருந்துபார் என்கின்றது
அன்பு ஆழ்ந்திருக்கச் சொல்லுகின்றது
அவலங்களின் சாத்தானான ஆசைப் பேராழியில்
அமிழ்ந்து போகப் பார்க்கின்றன உறவுக் கப்பல்கள்
கயிறை விடவும் முடியவில்லை
அறுபட்ட பட்டமாய் ஆக மனமும் இல்லை
சமரசம் ஒன்றே சிறந்த தெரிவாயுள்ளது
சமூகத்திலிருந்து விலகி விடாதிருக்க.

வி. அல்விற்.
24.04.2014.

எத்தனிப்பு.

எத்தனிப்பு.

ஆர்ப்பரித்து ஓயாதிருக்கும் 
அலைகடல் போல 
நினைவுகளுள் மூழ்கி எழுகையில் 
பரிதவிப்பு மட்டுமே 
கைகளில் நிறைகின்றதாய்த் தெரிகிறது 
மீள் புகவியலாக் கோட்டையில் 
களித்திருந்த பெரும்பகுதியை
மீட்டுவிட எத்தனிக்கிறேன் 
அதன் வாசலிரும்புக் கதவின்
கம்பிகளை கைகளால் இறுக்கி
கால்களால் உதைத்துத் தள்ளி
உள்ளே ஓடி விடும் அவசரம்
கண்களில் விசும்புகின்றது
தனிமையுள் ஆழும் இரவுகளும்
வெறுமையில் வாழும் பகல்களும்
எனக்கான இயல்புகளைத்
துரத்தி விட்டுள்ளதில்
சிரிப்பை ஒழித்து விட்டு
சிந்தனைகளே கோடுகளைக்
கீறி விட்டுள்ளன நிரந்தரமாக.

வி.அல்விற்.
11.04.2014.

அதிர்வுகள்.

அதிர்வுகள்.

நம்மிடமிருந்து பிறந்து
வேண்டியதெல்லாம் பெற்று 
தேடியதெல்லாம் கற்று 
எனக்கின்று கற்றுத் தரும் 
உன்னுடைய சுதந்திரத்தைப் 
பறிக்காதிருப்பதும் 
உன்னுடைய பொறுப்புக்களை 
ஏற்றுக் கொள்வதும் 
இயல்பாய் நடக்கும்
வழிப் போக்குக்கு
நம்மை இலகுவாக்குவது
கடினமாய்த்தான் இருக்கிறது
நம் நிலையிலிருந்து
நம் ஈகோவைத் தாண்டி.

வி.அல்விற்.
10.04.2014.

வண்ணங்கள்.



வண்ணங்கள்.

எப்போதும் சீரானதான 
மனவலைப் பாய்தலில் 
எப்போதாவது பொங்கி
நுரை எழுப்பிப் போகும் 
சுழற்சி முறை அதிர்வுகளில்
தெரியாமலே
வானவில் வண்ணங்களாய்
படிந்து கலைகின்றது
அற்புதமாக வாழ்ந்திருந்த
கணங்களின் அழகு.



வி.அல்விற்.
06.04.2014.

விட்ட குறைகள்.

விட்டு வந்தவைகள்.

வலித்து வலித்துக் கைகள் 
சோர்ந்து போகின்றன 
படகுகள் கரை சேரும் 
அறிகுறி ஏதும் தென்படவில்லை 
கத்தி எழும் அலைகளும் 
சூழ்ந்திருக்கும் கும்மிருட்டும் 
அமிழ்த்தியிருக்க 
விழிகள் பிதுங்கும்படி 
பார்வையைக் கூர்மையாக்குகிறோம்
அன்றொருநாள்
கரையில் விட்டு வந்த
பாசி விளையாட்டுக்களையும்
மட்டித் தேடல்களையும்
தக்கணையான்* பொறுக்குதல்களையும்
சூள் கொளுத்துதல்*களையும்
மணலில் எழுதி விட்டு வந்த
பெயர்களையும் கண்டு பிடிப்பதற்காய்
மீண்டும் ஒருமுறை.

வி.அல்விற்.
05.04.2014.

காட்சிப்பிழை

மல்லிகை மணம் அவிழ்க்கும் 
பந்தலின் கீழிருந்து கொண்டு 
மகிழ்ச்சிகளை சுவாசமாக்கி
கதை பேசிய காலத்தில் 
நிலவும் முகிலுக்குள் நீச்சலடித்து
நிறைந்திருந்தது எங்களோடு 
தண்ணொளியாய் சிலிர்த்தபடி
இப்போதோ..................
மின்மினிகளின் துணையுமின்றி
வெறுமே காய்ந்து கொண்டிருக்கிறது
காட்சிப்பிழை போல
என்னுடன் வந்த அகதியாய்.

வி.அல்விற்.
31.03.2014.