சனி, 28 மார்ச், 2015

பூங்கா.



பூங்கா.

மூடப்பட்டுள்ளது
கோபக்கதவுகளால்
கனதிப் பூட்டுக்கொண்டு 
ஒரு சிக்கற் பூங்கா.

முன்பெல்லாம் 
சிவப்பும் மஞ்சளும் 
பச்சையுமாய்
நிறைந்திருந்த
தோட்டமது.

நீரூற்ற மறந்த
மரங்களின்
மறுத்து நிற்கும் 
துளிர்கள் போல
காலம் சிதைத்த வாழ்வு
மொட்டையாகி விடக் 
காத்திருக்கிறது.

மெல்லிதான 
ஒரு புன்னகையில்
அல்லது வார்த்தையில் 
ஒரு பூப் பூக்குமாயின்
அதை மறுப்பானேன்?

முட்களைத் தாண்டிய
மலர்களும் 
கனிகளும் 
காத்திருக்கின்றன
பறிப்புக்களுக்காய்.

காலடியில் 
வெறும் சருகுகளாய்
குவிந்திருப்பவை
உரமாகட்டும் 

அமைதிப் பூங்காவின் 
கவின் மலர்களுக்காய்.

வி. அல்விற்.
18.03.2015.

திங்கள், 9 மார்ச், 2015

காதலர் தினம்.

கசிந்துருகாமல்
கண்ணேயெனக்
கட்டி அணைக்காமல்
காணாத இடமெல்லாம் 
கால் வலிக்கத் தேடியலையாமல்
கையில் காசொடு
கனதியான பரிசு தேடாமல்

கண் முன்னே நான் 
படுக்கையில் 
முடங்கி விடின்
கசப்பின்றி என் படுக்கை
மாற்றி விடு

அன்று 
என் புன்னகையில்
கொண்டாடலாம் 
காதலர் தினம்.

வி. அல்விற்.

14. 02. 2015.ஆஅ

இடையில்.

உலகம் அழகாகத்தான் இருக்கிறது
நீ புன்னகைக்கும் போது 
கண்களில் ஓர் ஏகாந்த ஒளி
புதைந்திருக்குமோ துன்பம்? 
இருக்கலாம் 
இருக்கக்கூடாது என்றே நம்புகிறேன் 
தனித்திருத்தலின் பேரானந்தம் 
உன் அசைவுகளில் தெரிகிறதே!
பசுமைக்கும் கருமைக்குமிடையில்
நீ பயணிப்பதாக உணர்கிறேன் 
ஒரு கனவுலகவாசி போல.

உன் அடைவுகளுக்காக
ஏமாற்றத்துடன் தவமிருப்பதை
ஒத்தி வைத்திருக்கிறேன்.

ஆனாலும்,
யதார்த்தம் மறுக்கும் உன்னை
இன்னும்கூட
உயிரறுக்கும் வலியுடன் 
பின் தொடர்கின்றேன்
அந்திமகால 
இறந்துபோன நம்பிக்கைகளுடன்
கொஞ்சம் கொஞ்சமாய் 
என்னைத் தொலைத்தபடி.

வி. அல்விற்.

27.02.2015.

கவி பாடியபடி...

போராடும் பெண்ணினத்தை
பொல்லாத வார்த்தைகளால் 
பொசுக்கி விடுவதிலேயே
குறியாக இருக்கிறது 
தாய்மையைப் போற்றி
கவி பாடும் 
ஒரு பகுதி ஆணினம்.

வி. அல்விற்.

04.03.2015.

உருளும் தாயக்கட்டைகள்.

எங்கெல்லாமோ 
தேடிக் களைக்கிறார்கள்

தாகம் தீர்க்க 
அமரும் திண்ணைகளில்
ஓசியுணவு 
வலுவூட்டுகிறது.

திண்ணைகளில் 
உருளுகின்றன தாயக்கட்டைகள்
உச்சுக்கொட்டல்களோடு.

வி. அல்விற்.

06.03.2015.

பெண்கள் தின வாழ்த்து.

பெண்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

அன்புள்ள மனைவியாயிரு
குடும்பம் சிறக்கும்

மதியுரைக்கும் பெண்ணாயிரு
நன்மைகள் பிறக்கும் 

பாசமுள்ள அன்னையாயிரு
சந்ததி செழிக்கும் 

பொறுமையுள்ள மருமகளாயிரு
உறவுகள் பெருகும் 

அறிவுள்ள பெண்ணாயிரு 
உலகம் மதிக்கும்

ஆனால் 

சுயமிழந்த
அடிமையான பெண்ணாக
மாறிவிடாதே.

வி. அல்விற்.

08.03.2015.