வெள்ளி, 24 ஜனவரி, 2014

நான் யார்?


அகதிப் பதவியின் அருமை சுகத்தில் 
அறுபட்ட உறவுகளோடு நினைவுகளில் உறவாடும்
எனக்கென்ன வேண்டும்?

அதிகாலைத் தொலைபேசி ஒலிப்புக்களில் 
சொந்தங்களின் உயிர்களைத் தொங்கவிட்டுத் தவித்திருக்கும் 
எனக் கென்ன வேண்டும்?

அம்மாவின் "கவனம் மோனை "யும் 
"ஏலுமெண்டா வா பிள்ளை" யும் சுழன்று வர இயந்திரமான
எனக் கென்ன வேண்டும்?

பாரிஸ் தெருக்களின் அழகு இரசிக்க மறந்து
குசினிகளுள் வியர்த்துக் கொண்டிருக்கும்
எனக் கென்ன வேண்டும்?

குதியை உயர்த்தி நடக்கும் அழகியை இரசிக்க முடியாது
தூசுகளை தட்டி தரைகளை கழுவும்
எனக் கென்ன வேண்டும்?

அதிகாலைக் குளிரில் விறைத்து நடந்து பணிமுடிக்கும்
உழைப்பின் திறனறிந்த தமிழன்
எனக் கென்ன வேண்டும்?

வார இறுதியும் ஓய்ந்திருக்க மறந்து வருங்காலம் யாசிக்கும்
எனக் கென்ன வேண்டும்?

வாரி வழங்கிய கல்வியைக் கையிலெடுத்து வானேறிய
எனக் கென்ன வேண்டும்?

எம் ஆத்மாக்கள் குடியிருந்த இல்லங்களைப்
பிய்த்தெறிந்தவர்கள் கேட்கிறார்கள்
எனக் கென்ன வேண்டும்?

என் இயல்பையும் வாழ்வையும் இயற்கையையும்
பிடுங்கி எறிந்தவர்கள் கேட்கிறார்கள்
எனக் கென்ன வேண்டும்?

பூவையும் காயையும் அதன் காலத்துக்குள்
நசுக்கிப் போட்டவர்கள் கேட்கிறார்கள்
எனக்கென்ன வேண்டும்?

நானாயில்லாத என்னை
ஒரு வட்டத்துள் சுற்ற வைத்தவர்கள் கேட்கிறார்கள்
எனக் கென்ன வேண்டும்?

விசித்திரமான விளையாட்டில்
வெற்றி விமர்சகர்கள் காத்திருந்த ஆனந்தத்தில் கேட்கிறார்கள்
உனக் கென்ன வேண்டும்?

ஆத்மாக்களின் அந்தரிப்பை
அறிந்தும் அறியாதவர்கள் கேட்கிறார்கள்
எனக்கென்ன வேண்டும் என்று.
வி.அல்விற்.
07.01.2014.

கருத்துகள் இல்லை: