வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அன்னையின் அருள்.

தமிழர் வாழ்வில் இன்றியமையாதவற்றுள் ஒன்று திருவிழாக்கள். இந்து மத விழாக்களாகட்டும் கிறிஸ்துவ மத விழாக்களாகட்டும் பலமாதங்களாகத் திட்டமிடப்பட்டு, கோலாகலமாகக் கூடிக் கொண்டாடப்பட்ட காலங்களை யாரும் மறக்க மாட்டார்கள். மாலைகள் என்ன தோரணங்களென்ன, பாட்டுக்கள் என்ன கூத்துக்கள் என்ன,மேள தாளங்கள் என்ன கச்சேரிகள் என்ன ,மிட்டாய்க் கடைகள் என்ன சிட்டுக்களாய் வண்ணப் பட்டாடைகளுடன் பறக்கும் சிறுவர்கள் என்ன......இப்படி ஊரே மகிழ்வில் மிதக்கும் நேரம் அயலூர்களும் அம்மகிழ்வில் கலந்து சிறந்த காலங்கள் பொன்னானவை.
ஊர் விட்டோடி, பின் நாட்டை விட்டு வந்தும், ஏதோ ஒரு காரணம் பற்றி  எம் மக்களின் இந்த சேர்ந்து மகிழும் பண்பு இன்னும் கூடவே வருகிறது. தனிப்பட்ட மங்கல நிகழ்வுகள் தவிர்ந்த நிகழ்வுகளாக எம்மக்கள் தேடிச் சென்று ஆறுதலடையும் ஓரிடம் ஆலயமாக அல்லது கோவிலாகவே அமைவதை எங்கும் காண முடிகின்றது.
அண்மையில் பரிசின் புறநகர்ப் பகுதியான Pontoise என்கின்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு ஆலயத் திருவிழாவுக்குச் செல்ல முடிந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி அவருடைய நிலப் பகுதியிலே மாதாவினுடைய உருவச் சிலையைக் கண்டு எடுத்து, அதிலிருந்து அந்த இடத்திலேயே உயரமான ஒரு கோபுரப் பகுதியும் அதனை அண்டி ஒரு சிறிய தேவாலயமும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மாதாவின் சிலையின் சிறப்பம்சம் என்னவென்றால் அவர் குழந்தை யேசுவைத் தூக்கி மேலே பிடித்திருப்பது. இதை வேறெங்கும் நான் கண்டதில்லை. கோபுரத்தின் உச்சியிலே மாதாவின் உருவச் சிலை வைக்கப்பட்டு, அதற்குச் சற்றுக் கீழ்ப் பகுதியில் சிறிதும் பெரிதுமாக மணிகள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.











மத்தியானம் பன்னிரண்டு மணிக்கே வழிபாடுகள் ஆரம்பமாகும் என்றிருந்தாலும் காலை பத்தரை மணிக்கே சென்றிருந்தோம். ஆலயத்துக்குள் வழிபாடுகளை  எதிர்பார்த்திருந்த எமக்கு, வயல் வெளிப் பரப்பில் வழிபாட்டுக்கான ஆயத்தத்தைச் செய்திருந்தது ஆச்சரியத்தையும், அதே நேரம் அந்த ஒழுங்கமைப்பு எமது தாய் நாட்டு நினைவுகளை அங்கேயே மீட்கவும் செய்தது.



தாய் மண்ணிலே எத்தனை சிறப்பாக ஒரு காலத்தில் எமது விழாக்களைக் கொண்டாடினோமோ அதனையே விழா ஏற்பாட்டாளர்கள் இங்கே உருவாக்க முனைந்திருப்பதை ஒவ்வொரு நிகழ்வுகளிலும் காணக் கூடியதாக இருந்தது. நடு மேடை வழிபாட்டுப் பகுதிக்கென்றும் அதற்கு இடது பகுதியில் அன்னையின் உருவச் சிலை வைத்த பகுதியாயும் இடது பகுதியில் பாடகர் குழாமுக்கென்று ஒரு மேடையும் என்று மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.



திறந்த வெளியைச் சுற்றிலும் கம்பங்கள் நடப்பட்டு அன்னை மரியின் நீலக் கொடிகளால் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. நற்கருணை விருந்தின்போது குருவானவர்கள் பல பகுதிகளாகப் பிரிந்து வழங்கியது முன்னொரு காலத்தில் எமது ஊர் விழாவைக் கண் முன் கொண்டு வந்தது.
விழா முடிவின் மிகச் சிறப்பான நிகழ்வு என்னவென்றால் திருச் சுருபப் பவனி வந்ததுதான். மக்கள் பாடல்களுடனும் தமது வேண்டுதல்களுடனும் தொடர்ந்தனர். எமது ஊர்களிலே திருச் சுருபத்தைக் கொண்டு ஊரையே வலம் வருவார்கள். இங்கே அந்த தன்னார்வத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட வயல் வெளியிலே வலம் வந்தனர்.
கொழுத்தும் வெய்யிலிலும் அன்னையின் அருள் வேண்டி ஆயிரக்கணக்கான மக்கள் வயல் வெளியிலே கூடியிருந்து மனமுருகி வேண்டி நிறைவுடன் திரும்பியதை காணக் கூடியதாக இருந்தது.





எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வாழ்வின் சோகங்களுள் மூழ்கி தங்களை  இழந்து போகாமலிருக்க எம்மக்கள் தேடி ஓடும் இடம் கோவில். அவன் மௌனமாய் இருப்பதால் மனிதன் தன் சுக துக்கங்களைக் கொட்டி, அவன் கேட்டு விட்ட மகிழ்வில் அமைதியாய் நிறைவுடன் வீடு திரும்புகின்றான்.











கருத்துகள் இல்லை: