புதன், 7 ஆகஸ்ட், 2013

அறுந்த கொடிகள்

அறுந்த கொடிகள்

29 juin 2013, 01:39
எப்போது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற சிந்தனை வேர் விட்டது என்று சொல்லத் தெரியவில்லை. சூரியனை இரசித்து, மேகங்களோடு நடந்து நட்சத்திரங்களில் வடிவங்கள் அமைத்து நிலவு முற்றத்தில் சாப்பிட்டுக் கதை பேசி, மலர்களைத் தடவிச் சிலிர்த்து மகிழ்ந்து , காலையும் மாலையும் குளிர்ந்த கிணற்று நீரில் ஆசைதீரக் குளித்து, கோவில் மணிகளில் நேரம் கணித்து, "என்ன சுகமாய் இருக்கிறியளே?" விசாரிப்புகளில் உறவுணர்ந்து, வீட்டுக்கு நேரம் பிந்தி வரும் போது கலக்கமாய் வாசலில் நிற்கும் அம்மாவின் அன்பில் திளைத்து..... இப்படி  இலகுவாயிருந்த வாழ்வு எப்படி இறுக்கமாய்ப் போயிற்று? சொந்த ஊர்களுக்குள்ளேயே ஏதிலிகளாய் அடுத்த ஊரில் மற்றோர் தயவில் வாழ்ந்த வாழ்வா துரத்தியது? அல்லது உண்மையிலேயே உயிர்ப்பயமா? செல்வனின் தாயைப் பொறுத்தவரை அவன் எங்கேயாவது போய் உயிர் வாழ்ந்தால் காணும் என்ற எண்ணம் பிடித்தாட்ட நித்திரை இழந்து தவித்தாள். ஆனால் அவனைப் பொறுத்தவரை கையிலே அரச உத்தியோகம். அது போதவில்லை அவனுடைய கனவுகளுக்கு. அந்தக் கனவுகள் துரத்தியனவா? அத்தோடு சொந்த ஊரில்லை, குளிக்கக் கூட அடுத்த வீட்டுக் கிணற்றடியிலே ஆளில்லாநேரம் பார்த்துக் கால் வைக்க வேண்டிய அவல நிலை. அது சரியில்லை இது சரியில்லை என்கின்ற சாடைப் பேச்சுக்கள். இந்த நிரந்தரமற்ற நிம்மதியற்ற வாழ்க்கையின் சலிப்புகள் துரத்தியனவா? இவைகளில் எதுவோ அது அவனைத் தூக்கி எறிந்தது. இப்போது யோசித்துப் பார்க்கும்போது பல காரணிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டி நின்றன.
அக்கா "இஞ்சை வா, விசாவும் வேலையும் சுகமாக எடுக்கலாம்" என்று கூப்பிட, அம்மா நிம்மதியாக மகனை வழியனுப்பி வைத்தாள்.
அக்காவிடம் வந்து சேரும்போது, அவனுக்கு மனம் நிறையக் கனவுகள் பூத்துக் கிடந்தன. எதிர்காலம் சூரியனாய்ப் பிரகாசித்துத் தெரிந்தது. தான் படித்திருக்கிறேன், வேலை செய்திருக்கிறேன் என்கின்ற வகையில் தன்னம்பிக்கை தூக்கலாய் இருந்தது. அக்கா தம்பியை நன்றாகத்தான் வரவேற்றாள். பாசமாய்ப் பொழிந்தாள். அவன் வந்தபோது அக்காவும் அத்தானும் ஒரு அறை கொண்ட இரண்டாவது மாடி வீடொன்றில் குடியிருந்தனர். ஒரு வரவேற்பறையும் அதை அடுத்து பொருட்கள் வைக்கும் ஒரு சிறிய இடமும் (அதுவே சாமி அறையாகவும்) வலது புறத்தில் ஒரு அறையும் இருந்தன. வரவேற்பறையைத் தொடர்ந்து கழிவறையும் குளியலறையும் சேர்ந்தாற்போல் இருந்தன. வாசற்கதவைத் திறந்தவுடன் இடது புறத்தில் இரண்டுபேர் மட்டுமே மட்டுமட்டாய் நிற்குமளவுக்கு சமையலறை மிகச் சிறிய யன்னலுடன் இருந்தது.  அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே நோட்டமிட்டு கொஞ்சம் அதிர்ந்து பின்னர் இயல்பானான். சாமியறையின் ஓரத்தில் தனது உடைமைகளை வைத்துக் கொண்டான். வரவேற்பறையில் இருக்கும் இருக்கை அவனது கட்டில் ஆகியது.

வந்த சில நாட்களுக்குள்ளே இருப்பிட அனுமதிக்கான விண்ணப்பங்கள் போன்ற ஆரம்ப கட்ட விடயங்களை அத்தானின் உதவியுடன் செய்து முடித்தான். அதன் பிறகு வேலை என்ற விடயம் பற்றிப் பேச முற்பட்டபோது தான் சிக்கல்கள் ஆரம்பமாகின. அவன் ஊரில் இருந்து வெளியேறும்போது தனது கல்விக்கேற்ற வேலை கிடைக்கும் என்றே முழுமையாக நம்பியிருந்தான். இங்குள்ளவர்களும் அதற்கான முழு விளக்கத்தை கொடுத்திருக்கவில்லை. வேலைக்கு முதலில் தடையாக இருந்தது மொழி. மொழியைக் கற்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது என்கின்ற நிலையில் அதைக் கற்கத் தொடங்கினான். பிரெஞ்ச் மொழி ஒன்றும் அவ்வளவு இலகுவான மொழியல்ல. அதன் இலக்கணம், அவற்றின் விதிவிலக்குகள் என்பவற்றைப் பார்த்த போது விரைவில் கற்றுக் கொள்ளும் மொழியாக அவனுக்குப் படவில்லை. அதே நேரம் அதனைக் கற்று முடிக்கும் வரையில் எதுவும் செய்யாமல் இருக்கவும் பிடிக்கவில்லை. அத்தான் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்து கடைசியில் ஒரு உணவகத்தில் உதவியாளனாகச் சேர்த்து விட்டார். மனதுக்குள் ஆத்திரமும் வேதனையும் எழுந்தன. "நான் இந்த வேலை செய்யிறதா?"..... வேறு வழி??... மனதுக்குள் அழுதுகொண்டே வேலையைத் தொடங்கினான். காலையில் தேநீரோடு எழுப்பும் அம்மாவின் முகமும் சாப்பிட்டபின் கோப்பையைத் தள்ளி விட்டு விட்டு எழும்பும் தனது திமிரும் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்தன.
அத்தானின் அப்பாவும் அம்மாவும் ஒரு தங்கையும் இங்கேயே வேறொரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அத்தானின் தங்கை பிறான்பிறியில் வேலை செய்து கொண்டிருந்தாள். லீவு கிடைக்கும் போது அண்ணனைப் பார்க்க வந்து விடுவாள் பெற்றோருடன். முன்பு எப்படியோ தெரியாது அவனுக்கு . ஆனால் இப்போது அவர்கள் வருவது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. அவனுடைய அறையே வரவேற்புக் கூடம் தான். அதையும் அவர்கள் வந்து ஆக்கிரமித்தால் என்ன செய்வது? மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்தார்கள் என்றால் இரவும் சாப்பிட்டு வெளிக்கிட பதினொரு மணியாகும். முள்ளிலே நிற்பது போல உணர்வான். வேலையால் வந்த களைப்பில் நேரத்தோடு நித்திரை கொள்ளலாம் என்று நினைத்தால் அது முடியாது.அவர்களுக்கு முன்னால் என்ன பேசுவது என்று தெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பதை விட வெளியே எங்கேயாவது கொஞ்ச நேரம் போய் விட்டு வரலாம் என்று வெளிக்கிட்டால் அக்கா விட மாட்டாள். தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்தபடி கதிரையின் விளிம்பில் இருப்பான்.
முதல் மாத சம்பளம் அம்மாவை நோக்கிப் பறந்தது. அம்மாவுடன் தொலைபேசியில் பேசினான். அம்மாவுக்கு மகிழ்ச்சி. உடம்பைப் பார்த்துக் கொள் என்றாள் எல்லா அம்மாமாரையும் போல. அக்காவுக்குக் கொஞ்சப் பணம் கொடுத்தான். அக்கா கத்தினாள் " நீ என்ன நினைச்சுக் கொண்டு காசு தாறாய்? உன்னட்டைக் காசு வாங்கிக் கொண்டு தான் நான் உனக்குச் சாப்பாடு போடுவேன் எண்டு நினைக்கிறாயோ?".... அழுதாள் அக்கா. அதற்குப் பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை.
கொஞ்ச நாள் கழித்து அக்கா "தம்பி நான் உன்னோடை ஒருக்கா கதைக்க வேணும்" என்றாள். "சொல்லுங்கோ" என்றான்.
"கவிதாவுக்கும் கலியாணம் கட்டுற வயது வந்திட்டிது, இஞ்ச நல்ல பெடியளை கண்டு பிடிக்கிறதெண்டால் சரியான கஷ்டம், அவளும் படிச்ச பிள்ளை, அமைதியான குணம்......ஒண்டுக்கை ஒண்டு செய்திட்டால் எல்லாரும் ஒருத்தருக் கொருத்தர் ஒத்தாசையாய் இருக்கலாம்தானே.... நீ என்ன சொல்லுறாய்?......இழுத்தாள் அக்கா.
அக்கா சுத்தி வளைத்து எங்கே வந்து நிற்கிறாள் என்று விளங்கியது செல்வனுக்கு. அவனுக்கு அக்காவுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. கலியாணம் என்றால் ஒவ்வொருவருக்கும் வரப் போகிற பெண்ணை அல்லது ஆணைப் பற்றின கனவு அல்லது எதிர்பார்ப்புக்கள் என்று இருக்கும். கவிதா வீட்டுக்கு வரும் போதெல்லாம் தன்னைப் பார்த்து தேவையில்லாமல் சிரித்துக் கொண்டிருந்ததன் கருத்து இப்போதுதான் அவனுக்கு விளங்கியது. ஆனால் அதுவே அவனை எரிச்சல் படுத்தியதை அவள் அறிந்திருக்கவில்லை. ஏன் என்று காரணம் சொல்ல முடியாமல் அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. இதைச் சொல்லுவதை அக்காவும் அத்தானின் குடும்பமும் எப்படியும் தவறாகத்தான் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்; அதற்காகச் சொல்லாமலும் இருக்க முடியாது.
"அக்கா! அந்தப் பிள்ளை சரியில்லை எண்டு நான் சொல்லேல்லை, ஆனால் எனக்கு அந்தப் பிள்ளையைக் கலியாணம் கட்டப் பிடிக்கேல்லை".
"ஏன் உனக்குப் பிடிக்கேல்லை?"
"இதுக்கெல்லாம் காரணம் சொல்ல ஏலாது. எனக்கு பிடிக்கேல்லை எண்டால் விடுங்கோவன்...அந்தப் பிள்ளைக்கு வேற இடத்தில பாருங்கோ..."
அக்கா அவனை முறைத்துப் பார்த்தாள். "உன்ரை அத்தான் உன்னை எவ்வளவு நம்பி இருந்தவர்? இப்ப நீ மாட்டன் எண்டு சொன்னனீ எண்டு கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்?"
அவனுக்கு  எல்லாம் விளங்கத் தொடங்கியது. அக்கா திட்டமிட்டே அவனை இங்கே கூப்பிட்டிருக்கிறா என்று.
"அப்ப நீங்கள் முதலிலேயே கதைச்சு முடிவெடுத்து இருக்கிறீங்கள் போலத் தெரியுது, ஆனால் சம்பந்தப்பட்ட என்னட்டைக் கேக்காமல் கதைச்சிருக்கிறீங்கள். இதுக்கு நான் ஒண்டும் செய்யேலாது. ஏனெண்டால் இது என்ரை வாழ்க்கைப் பிரச்சனை.  நான்தான் முடிவு எடுக்க வேணும். அந்தப் பிள்ளையை நான் செய்ய மாட்டேன் இது தான் என்ரை முடிவு" உறுதியாகச் சொல்லிவிட்டு, இருக்கையை நெம்பித் தள்ளிப் படுக்கையாக்கி விட்டு, தலையணையைப் போட்டுக் கொண்டு தலைவரை மூடிக் கொண்டு படுத்து விட்டான். நித்திரை வர மறுத்தது. இனி தன்னுடைய இருப்பு கேள்வியாகும் என்று தெரிந்தது.
அடுத்த நாள் காலை தேனீர் தரும் அக்கா கவனிக்கவில்லை. தானே போட்டுக் குடித்தான். குளிக்கும்போது அக்காவின் குரல் கேட்டது. "கெதியில குளிச்சிட்டு வா வெளியிலை, இப்பிடியே மணித்தியாலக் கணக்கில குளிச்சுக் கொண்டிருந்தால் தண்ணி பில் ஆர் கட்டிறது?"
அவன் குளித்து விட்டு வெளியில்  வந்தான். அக்கா தனக்குள் முணுமுணுத்தபடி சமைத்துக் கொண்டிருந்தாள். அவன் வேலைக்கு வெளிக்கிட்டு போகும்போது அக்காவைத் திரும்பிப் பார்த்தான். "என்னெண்டாலும் சாப்பிட்டிட்டுப் போ" என்று வழமையாகச் சொல்லும் அக்கா  அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
வேலையிடத்தில் அவனுடன் வேலை செய்யும் இருவரிடம் ஒரு தங்குமிடம் அவசரமாகப் பார்க்கச் சொல்லிச் சொல்லி வைத்தான். அன்று வேலையில் முழுதாகக் கவனம் செல்லவில்லை. வேலையை முடித்து வீட்டுக்கு வந்தால், அத்தான் இவனைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டு  எழுந்து உள்ளே போய் விட்டார்.  இவர்கள் தாங்களாக ஒன்றை நினைத்து விட்டு முறைத்துக் கொண்டு நிற்பது செல்வனுக்கு வருத்தமாக இருந்தது.
"இருக்கிற இடத்தை துப்பரவாக வைச்சிருக்க வேணும், ஆராவது வீட்டை ஆக்கள் வந்தால் என்ன நினைப்பினம்? எல்லாம் போட்டது போட்ட இடத்தில அப்பிடியே கிடக்குது குப்பையா"....அக்கா இரட்டைத் தொனிப்பட தனக்குள் பேசுவதுபோலப் பேசிக் கொண்டிருந்தாள். அவன் பதில் ஏதும் பேசவில்லை. சுற்றிப் பார்த்தான். அவனுடைய உடைமைகள் எதுவும் அங்கே சிதறிக் கிடைக்கவில்லை. நாட்கள் நரகமாக ஊர்ந்தன.
ஒரு  நாள் வேலையிடத்தில் அவனுக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு அறை வாடகைக்கு இருப்பதாகச் சொன்னார். வேலை முடிந்ததும் உடனடியாக அந்த இடத்தைப் போய்ப் பார்த்தான். அவனைப் போல நான்கு பேர் சேர்ந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். குடும்பகாரருடன் சேர்ந்து இருப்பதை விட இப்போதைக்கு இது நல்லதாகப் பட்டது அவனுக்கு.  வீட்டுக்குத் திரும்பியதும் அக்காவிடம், தான் வேறு இடம் தங்குவதற்குப் பார்த்திருப்பதாகச் சொன்னான். அக்கா அதை எதிர்பார்த்ததைப் போல ஒன்றும் பேசவில்லை. அவன் தனது உடமைகளை சேர்த்து  ஆயத்தப்படுத்தினான்.

திங்கட்கிழமை அந்த வீட்டுக்குப் போக முதல் நாள் அம்மாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். அம்மாவை வருத்தப்பட வைக்க விருப்பமில்லை அவனுக்கு. எனவே அக்காவுக்கும் தனக்குமிடையிலான மனக்கசப்பு பற்றிப் பேச விருப்பமில்லை. ஆனால் அக்கா எல்லாவற்றையும் சொல்லியிருப்பது அம்மாவின் பேச்சில் தெரிந்தது. "உனக்கு என்ன சரியெண்டு படுதோ அதை செய் தம்பி" என்றா அம்மா சுருக்கமாக. அவனுக்கு அது பெரிய ஆசீர்வாதமாகப் பட்டது அவனுக்கு. அம்மாவின் பேச்சிலிருந்து அம்மாவின்  கடிதங்கள் அவனுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிந்தது. அதை அக்கா கிழித்துப் போட்டிருப்பா. உடனடியாக அக்காவின் வீட்டிலிருந்து தன்னுடைய விலாசத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அடுத்த நாள் முதல் வேலையாக வேலையால் வந்ததும் நேரடியாகத் தபால் நிலையத்துக்குப் போய் தனது கடிதங்களை தனது புதிய விலாசத்துக்கு அனுப்பும்படி செய்து விட்டு, அக்காவின் வீட்டுக்குப் போய் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு புதிய இருப்பிடத்துக்கு வந்து விட்டான். அக்கா கடைசிவரை முகம் கொடுத்துப் பேசாதது மனவருத்தமாகவே இருந்தது.
அடுத்த நாள் அவன் வழமை போல வேலையிடத்துக்குச் சென்ற போது இன்னொரு இடி காத்திருந்தது. இந்த மாதத்திலிருந்து அவனை வேலையிலிருந்து நிறுத்தி விட்டதாக அவனை நேரே கூப்பிட்டு முதலாளி கடிதத்தைக் கையிலே கொடுத்தார். "ஏன் என்ன பிரச்சனை? நான் நல்லாத்தானே வேலை செய்தனான்?" என்றான். முதலாளி தோளைக் குலுக்கினார். வேறு பேச்செழாது உடுப்பை மாற்றி குசினிக்குள் நுழைந்தபோது, அவனோடு வேலை செய்பவர் " உங்கடை அத்தான் மூண்டு நாளைக்கு முதல் இஞ்ச வந்து முதலாளியைப் பாத்துக் கதைச்சிட்டுப் போனவர்" என்றார். இவனுக்குப் புரிந்தது.
"இந்தப் பெரிய பிரான்சில வேலை தேடுறது அவ்வளவு கஷ்டமோ" என்றான் சொன்னவரைப் பார்த்து. நாளையில இருந்து எங்கேல்லாம் போய் வேலை தேட வேணும் என்று மனதில் குறித்துக் கொண்டே அதே வேகத்தோடு அடுப்பை மூட்டினான் செல்வன். வாயு அடுப்பு பற்றிக் கொண்டு சீறிப் பிரகாசித்தது.

வி.அல்விற்.
20.06.2013.

கருத்துகள் இல்லை: